அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர்
விழா!
கே.எஸ்.சுதாகர்
]கலையும் இலக்கியமும் ஒரு இனத்தின் கண்கள் -
அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயலுதல் - என்பவற்றை
மையக் கருத்தாகக் கொண்டு இயங்கும் அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கத்தின்
'எட்டாவது எழுத்தாளர் விழா' இம்முறை சிட்னி
பெருநகரில் நடந்தது. சித்திரை 26, 2008 அன்று ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப்
பாடசாலையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி
வரை நடந்த இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான எழுத்தாளர்கள், கவிஞர்கள்,
கலைஞர்கள், பத்திரிகை வானொலி
ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கு கொண்டனர். 2001ஆம்
ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த விழா
தமிழர்கள் அதிகமாக வாழும் - மெல்பர்ண், கன்பரா, சிட்னி போன்ற அவுஸ்திரேலியாவின்
பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வின் வரவேற்புரையை செளந்தரி அவர்களும்,
தொடக்கவுரையை அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கத்தின் தலைவர்
திரு.லெ.முருகபூபதியும், வாழ்த்துரையை இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த - கல்வி
அமைச்சின் மேலதிக செயலாளரும் சிறுகதை நாடக எழுத்தாளருமான திரு. உடுவை. தில்லை
நடராஜாவும் செய்தார்கள். திரு. லெ. முருகபூபதி அவர்கள் தனது தொடக்கவுரையில் '
உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் பூமிப்பந்தின் எத்திசைக்குச் சென்று
வாழ நேர்ந்தாலும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இவர்களை
ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக பல பணிகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த எழுத்தாளர்
இயக்கம் தொடர்ந்து செயற்படுகின்றது' என்றார். மேலும் அவர் தனதுரையில் 'நூறு
ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத்தமிழர்கள், இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும்
பிஜித் தீவிற்கும் புலம்பெயர்ந்திருந்த போதிலும் - புதுமைப்பித்தன், பாரதி
போன்றோர்கள் இவர்களைப் பற்றி படைப்புகள் இயற்றியிருந்த போதிலும் -
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதம் பேசு பொருளாகியது ஈழத்தமிழர்களின் அந்நியப்
புலப்பெயர்வுக்குப் பின்புதான்' என்றார். இதுவரை நடந்த எழுத்தாளர்விழாக்களிலே
என்னென்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகள் செய்யப்பட்டன என்பவை பற்றியும் சுருக்கமாகச்
சொன்னார்.
பகல் கருத்தரங்குகள் மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.
திரு ம. தனபாலசிங்கம் தலைமையில் "தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்
செல்லல்: சவால்களும் உத்திகளும்" என்னும் பொருள் பற்றி திரு தெ. நித்தியகீர்த்தி,
செல்வி. நிசேவிதா பாலசுப்பிரமணியன், செல்வன். வருணன் பாலராஜ் அவர்களும்
ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். திரு. ம. தனபாலசிங்கம் தனது உரையில்
அறிஞர்கள் பலர் ( செக்கோசிலாவாக்கிய அறிஞர்
டாக்டர். கமில் வி.சுவலபில், அயர்லாந்து ஜனாதிபதி ஏமொன். டி. வலறா, கலிபோர்ணிய
பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர்
பேராசிரியர் ஜோர்ஸ். எல். ஹாட்) கூறிய கருத்துக்களை முன்வைத்து, இவற்றில் இருந்து
நாம் படிக்க வேண்டியவை என்ன என்பது
பற்றி விளக்கினார். எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி அவர்கள் அறிதல், உணர்தல் என்ற
வகைப்படுத்தலில் தனது கருத்தை விளக்கினார்.
மேலும் அவர் "அமெரிக்க ஆபிரிக்கர்களுக்கு கறுப்பு நிறம் அடையாளம்; பிரான்ஸ்
மக்களுக்கு அவர்கள் மொழி அடையாளம்; ஐரிஸ் மக்களுக்கு பச்சை நிறம் அடையாளம்; ஈழத்
தமிழ் மக்களுக்கு ஈழமே அடையாளம். ஈழத்தையே அடுத்த சந்ததியினரும் தங்கள்
அடையாளமாகக் கொள்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். நிசேவிதா
பாலசுப்பிரமணியம் தமிழை உயர்தர வகுப்பில் பாடமாகப்
பயிலும் மாணவி ஆவார். இவர் தனது நண்பர்கள் மத்தியில் ஒரு மதிப்பீட்டைச் செய்து
அதனடிப்படையில் தனது கருத்துகளை
சொன்னார். பெரியவர்கள் பெற்றோர்கள் தமிழ் உணர்வை வெளிக்காட்டுபவர்களாகவும் இளைய
தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும் இருத்தல்; தமிழ் உணர்வை ஊட்ட பிள்ளைகள்
அனைவரையுமே தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பி உயர்தர வகுப்பு வரை தமிழ் கற்பித்தல்
என்ற இரண்டு விடயங்களை அவர் முன் வைத்தார். வருணன் பாலராஜ் "Why I wanted to
learn Tamil?" என்ற தனது கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி வாசித்தார். இந்தக்
கருத்தரங்கு நிகழ்வில் சபையோரும் பேச அனுமதிக்கப்பட்டமை விழாவின்
சிறப்பம்சமாகும்.
மதிய உணவின் பின்னர் "மாணவர் அரங்கிற்கு" திரு.
பைரஜன் யோகராஜா அவர்கள் தலைமை தாங்கினார். இதில் கார்த்திகா.
மனோகரன், நிசாந்தினி. அருளானந்தன், அபிராமி புருசோத்தமர், சுவர்ணா. இராஜலிங்கம்,
பாரதி. ஜெயபாண்டியன், வாசன். சிவானந்தா,
அபிராமி. திருநந்தகுமார் என்போர் கருத்துரைகளும் - குபேனி. இராஜ்குமார், சுபஹரி.
இரவீந்திரன், திருமகள். ஜெயமனோகர், சிவாயன்.
சரவணபவானந்தன் என்போர் கவிதைகளும் சமர்ப்பித்தனர். இந்த அமர்வு சிட்னியில்
வதியும் இளைஞர்களின் பங்களிப்பு நிகழ்ச்சியாக
நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி அடுத்து வரும் சந்ததியினருக்கு பயனைக் கொடுக்கும்
என்பதில் ஐயமில்லை.
மூன்றாவது அமர்விற்கு - எழுத்தாளர்,
புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக பல நிறுவனங்களை நிறுவியவர், பெண் அமைப்புகளின்
செயற்பாட்டாளர், திரைப்படங்களை இயக்கியவர் என்ற பன்முகத் தகமைகள் கொண்ட திருமதி.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தலைமை தாங்கினார். இதில் திரு. சிசு. நாகேந்திரன் அவர்கள் "தலைமுறை இடைவெளி"
பற்றியும், திருமதி தர்மா தியாகேசன் "தமிழ் உணர்வு" பற்றியும் தமது கட்டுரைகளை
சமர்ப்பித்தனர். "புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தலைமுறை இடைவெளியை நிரப்புவது
எப்படி" என்ற கட்டுரையை திரு. சிசு. நாகேந்திரன் அவர்கள் வாசித்தார்.
பேரப்பிள்ளைகள் - பெற்றோர் - முதியோர் - என்ற மூன்று படி நிலைகளில் நின்று கொண்டு
அவர் இந்தக் கட்டுரையை வடித்திருந்தார். புலம்பெயர்ந்திருக்கும் - ஒரு
தலைமுறையினருக்கும்
அவர்களுடன் வாழும் முதியோருக்குமிடையில் ஏற்படும் இடைவெளியிலும் பார்க்க,
அம்முதியோருக்கும் அவர்களின்
பேரப்பிள்ளைகளுக்குமிடையில் காணும் இடைவெளிதான் முக்கியமானதும் பாரதூரமான
விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் இவ்விடைவெளியை அவசியம் நிரப்பியே ஆகவேண்டும்
என்றார் அவர். ஆழ்ந்து நோக்கப்படவேண்டிய பயனுள்ள கட்டுரை அது.
மாலையில் நூல் வெளியீட்டு அரங்கும், அதனைத்
தொடர்ந்து இறுதி நிகழ்வாக பாராட்டு விழாவும் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு அரங்கிற்கு திரு. லெ. முருகபூபதியவர்கள் தலைமை தாங்கினார்.
அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கத்தின்
வெளியீடுகளான - திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" என்ற சிறுகதைத்தொகுப்பை
திரு. குலம் சண்முகம் அவர்களும், திரு.
சிசு நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" என்ற கட்டுரைத்தொகுப்பை திரு.
அண்ணாமலை சுந்தரம் அவர்களும், திரு.
ஆவூரானின் "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" என்ற சிறுகதைத்தொகுப்பை திரு. செ. பாஸ்கரன்
அவர்களும் அறிமுகம் செய்து வைத்தார்கள். இதற்கு முன்பும் நடந்த எழுத்தாளர்
விழாக்களில் - 2006 இல் "உயிர்ப்பு" என்ற சிறுகதைத் தொகுப்பையும், 2007 இல்
"வானவில்" என்ற கவிதைத் தொகுப்பையும் அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கம்
வெளியிட்டிருந்தது. திரு. என். எஸ். நடேசன்
எழுதிய "உனையே மயல் கொண்டு" என்ற நாவலை பேராசிரியர். ஆ.சி. கந்தராஜா அவர்கள்
அறிமுகம் செய்து வைத்தார்.
அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. வே. பேரம்பலம் எழுதிய "A PATH TO
PURPOSEFUL LIVING" என்ற திருக்குறள் ஆய்வு நூலை
திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
பாராட்டுவிழா நிகழ்விற்கு திரு. உடுவை. தில்லை
நடராஜா அவர்கள் தலைமை தாங்கினார். கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி
பேராசிரியர், கலாகீர்த்தி, டாக்டர் பொன். பூலோகசிங்கம் அவர்களும் - சமூக மற்றும்
கலைப்பணிகளை பாராட்டி திரு. வி.எஸ். துரைராஜா
( சமூகப்பணியாளர் / கட்டிடக்கலைஞர் ) அவர்களும் விருது வழங்கி
கெளரவிக்கப்பட்டார்கள். இவர்களை முறையே பேராசிரியர் ஆ. சி.
கந்தராஜா அவர்களும் திரு. திருநந்தகுமார் அவர்களும் பாராட்டிப் பேசினரார்கள்.
திருமதி உஷா ஜவாகர் அவர்களின் நன்றியுரையுடன்
எட்டாவது எழுத்தாளர்விழா நிறைவு பெற்றது. விக்ரோரியா, நியூசவுத்வேல்ஸ்,
கன்பரா ஆகிய இடங்களிலிருந்து பலரும் இவ்விழாவில் வந்து உற்சாகமாகப்
பங்குபற்றினார்கள். இளம் தலைமுறையினரின் பங்களிப்பையும் இந்த விழாவில்
காணக்கூடியவாறு இருந்தது. மற்றும் அமெரிக்காவிலிருந்து திரு. வேலுப்பிள்ளை
பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,
இலங்கையிலிருந்து திரு உடுவை. தில்லை நடராஜாவும் விழாவில் பங்குபற்றியமை விழாவின்
சிறப்பம்சமாகும். விழாவில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன்,
விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் தொகுப்பாகவும்
வெளியிடப்பட்டிருந்தது.
மொத்தத்தில் இந்த 'எட்டாவது எழுத்தாளர் விழா' மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டவர்கள்
ஓரிடத்தில் சங்கமித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வாக இருந்தது.
படங்கள் : பரிமளநாதன்
kssutha@optusnet.com.au |