| ஆனந்தவல்லியின் Earth and Fire நாட்டிய நாடகம்: 
இராமாயணச் சீதையும் மகாபாரதத் திரௌபதியும்! 
 - பராசக்தி சுந்தரலிங்கம் -
 
 
  காலம் 
காலமாக நாம் கேட்டுவரும் கதைதான் இராமாயணமும், மகாபாரதமும். அன்றும் பெண் ஆணுக்குக் 
கட்டுப்பட்டவள், இன்றும் மாறவில்லை நிலமை. இராமாயணப் பெண்ணை, பொறுமையின் சின்னம், 
பூமாதேவி என்று இலக்கியம் புகழ்ந்தது. மகாபாரதப் பெண்ணை எரிமலை என்று வர்ணித்தது. 
சீதை, திரௌபதி இருவருமே வஞ்சிக்கப்பட்டவர்கள். குணத்தால் இரு துருவங்கள். ஆனால், 
சோகம் இவர்கள் வழ்வில் பொது. வாழும் பொழுது துன்பத்தையே அநுபவித்தவர்கள். மறைந்த 
பின்னரோ பத்தினியாகவும் தெய்வமாகவும் கொண்டாடப் படுபவர்கள்.  இந்த இருவரின் 
கதையை லிங்காலயம் ஆனந்தவல்லி Earth and Fire (நிலமும் நெருப்பும்) என்னும் நாட்டிய 
நாடகமாக் ஜூன் 29, 30, சிடனியிலும், ஜூலை 21 கன்பராவிலும் மேடையேற்றினார். 
இடைவேளைக்குமுன் சீதையின் கதை, பின் தொடர்ந்தது திரௌபதியின் வரலாறு. பன்னிரெண்டு 
நடனக் கலைஞருடனும், ஆறு பக்கவாத்தியக் கலைஞருடனும் நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக 
அரங்கேறியது. 
 வால்மீகி, கம்பர், அருணாசலக் கவிராயர் மற்றும் வாய்மொழி புராணங்களிலே வழங்கிய 
இராமர் கதையையும், வியாசர் பாரதம், பாரதி பாடல்களையும்; ஆதாரமாகக் கொண்டு 
இந்நிகழ்ச்சியை ஆனந்தவல்லி தயாரித்திருந்தார். ராஜ்குமார் பாரதி சில பாடல்களை 
இயற்றி இரண்டு வரலாறுகளையும் இணைத்திருந்தார். அருணாசலக் கவிராயரின் இராமநாடகப் 
பாடலும் பாரதியாரின் பாஞ்சாலி சபதமும் இணைந்து வந்தன. பூமியையும் (பிருத்வி - 
Earth) நெருப்பையும் (அக்னி - Fire) துதிக்கும் இருக்குவேத சுலோகங்களை ஓதும் 
ஒலியுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.
 
 ஏர்முனையில் தோன்றும் சீதை, சிவனின் சக்திவாய்ந்த வில்லை அநாயாசமாக நகர்த்தும் ஜனக 
மகாராஜனின் மகளாக, அழகோடும்
 அசாதாரண சக்தியோடும வளர்கிறாள். ஆனால், தசரதகுமாரன் இராமனை மணம் முடித்தபின் அவள் 
வாழ்வில் சோதனை
 ஆரம்பிக்கிறது. இவ்விடத்தில் கதையிலே ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்கிறோம். 
காட்டிலே வாழும் காலத்தில் சீதைக்கு அக்கினியால் சோதனை ஏற்பட இருப்பதை அறிந்த 
அக்கினிதேவன் சீதையை ஏற்றுக்கொண்டுவிட்டான் என்றும், அவனின் வேண்டுகோளின்படி இராமன் 
ஒரு சீதையை மாயையால் உருவாக்கினான் என்றும் கதை மாற்றமடைகிறது. இந்த மாயைசீதையே 
பின்னர் அக்கினிப் பிரவேசம் செய்தாள் என்றும், உண்மையான சீதையை அக்கினிதேவன் 
இரமனிடம் ஒப்படைக்க, மாயைசீதை தவஞ்செய்து திரௌபதியாகப்
 பிறந்தாள் என்றும் கதை வளர்கிறது.
 
 வால்மீகி ராமாயணத்தில் இராவணன் சீதையைத் தொட்டணைத்துத் தூக்கினான், கம்ப 
ராமாயணத்தில் தொடாமல் நிலத்தோடு தூக்கினான் என, இடம், காலம், பண்பாடுகளுக் கேற்ப 
மாற்றங்கள் ஏற்படுகின்றன. இராமாயணமும், மகாபாரதமும் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ 
வேறுபாடுகளுடன் இந்தியாவிலும், இந்தியப்பண்பாடு பரவிய இடங்களிலும் வழங்கி வருவதை 
அறிவோம். தன் கணவன் அல்லாத பிறரால் தீண்டப்படாதவளாக சீதையைக் காட்டுவதற்காக இராவணன் 
மாயைசீதையையே கவர்ந்தான் என இங்கு கதை
 மாறுகிறது. பார்வையாளர் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்க பழக்கத்தில் உள்ள 
கதைப்பாங்கைக் கூறுவதே பொருந்தும்.
 
 யாகத் தீயிலே தோன்றியவள் திரௌபதி. அர்ச்சுனனுக்கு மணமாலை சூடியவள், ஆனால், அவளின் 
சம்மதத்தைப் பெறாமலே ஐவருக்கும் மiனைவியாக்கப்படுகிறாள். பின்னர், சூதாட்டத்திலே 
தோற்று அடிமையாக்கப்படுகிறாள். கதை அத்துடன் முடியவில்லை. சபையிலே இழுத்துவரப்பட்டு 
“சான்றோரும்” “ஆன்றோரும்” பார்த்திருக்க மானபங்கம் செய்யப்படுகிறாள். நெருப்பிலே 
தோன்றியவள் தீப்பிழம்பாகின்றாள். “அந்தப் பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப் பாழ் 
துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டும் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் 
குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்”, என்று சபதம் பூண்டு, அதை நிறைவேற்றியும் 
காட்டுகிறாள்.
 
 ஒரு கதையில் விதியே என்று பணிந்துபோகும் பெண்ணையும், மற்றையதில் கட்டுண்டோம் 
பொறுத்திருந்தோம், இனியும்
 பொறுக்கமாட்டோம் என்று பொங்கி எழுந்து நீதி கேட்கும் பெண்ணையும் பார்க்கிறோம். 
சீதை, மாயைசீதை, திரௌபதி எல்லோரும் ஒருவரே, “மாயை - அன்று சீதை, இன்று திரௌபதி” 
என்று கதை முடிகிறது.
 
 
  நீண்ட 
இரண்டு வரலாறுகளையும் ஒரு சில மணி நேரத்தில் மேடையில் காட்டுவதற்கு ஆனந்தவல்லி 
நல்லதொரு உத்தியைக் கையாளுகிறார். நடந்தவற்றை நேரிலே பார்த்தது போல, ஒருவர் 
“சாட்சியாக” நின்று கதை சொல்லுகிறார். இது கதையை அழகாகவும் இலகுவாகவும் தொடர்பு 
படுத்தி நகர்த்திச் செல்கிறது. பொறுமையே உருவான சீதையாக இருவர், சுவேதா 
ராமமுர்த்தி, அபிராமி ஸ்ரீகாந்தர் நெருப்பை உமிழும் திரௌபதியாக சாய்பிரியா 
பாலசுப்ரமணியம் ஆகியோர் தமது தனித்தன்மையான நடிப்பு, ஆடல் மூலம், அந்தப் 
பாத்திரங்களைக் கண்முன்னே கொண்டுவந்துவிடுகிறார்கள். திரௌபதியாக நடித்தவரின் 
ஆடலும், பாவமும் மேலும் சிறப்புற வேண்டும். வளர்ந்துவரும் நடனக் கலைஞன் சேரன் 
சிறிபாலன் பற்றி விசேடமாகக் கூறவேண்டும். ஜனக மகாராஜனாகவும், இராமனாகவும், 
ஹனுமனாகவும், துச்சாதனனாகவும், துரியோதனனாகவும் தோன்றி நவரஸங்களையும் காட்டி தனது 
திறமையை நிரூபித்துவிடுகிறார். சேரன் தனது ஒவ்வொரு நடன நிகழ்விலும் சிறப்பாக 
முன்னேறிக் கொண்டுவருவதை அவதானிக்கமுடிகிறது. தந்தையும், மகளும் பந்தாடி மகிழ்வது 
இரசிக்கவேண்டிய காட்சி. சௌமியா ஸ்ரீதரன் சிறுமி சீதையாக ஆடி மனதைக் 
கொள்ளைகொண்டுவிடுகிறார். 
 நடன அமைப்பாண்மை குறிப்பிடப்படும் வண்ணம் உள்ளது. எட்டுப் பெண்கள் ஒரு குழுவாக 
இயங்கி, சீதையைப் பல்லக்கில் சுமந்து வருவதும்,  யாகத்திற்காக நிலத்தை 
உழுவதற்குச் செடிகொடிகளைக் களைவதும், பின்னர் யாகத்தீயின் சுவாலைகளாக மாறுவதும், 
துகில் உரியும் காட்சியில் நீண்ட சேலையைப் பிடித்துக்கொண்டு ஆடியவண்ணம் திரௌபதியைச் 
சுற்றிவருவதும்,  பஞ்சபாண்டவராகத் தோன்றி அவமானம், இயலாமை, கோபம், சோகம் ஆகிய 
பாவங்களைக் காட்டியதும்m, யுத்தத்தில் வீரர்களாக மாறியதும்; சிறப்பாக இருந்தன.
 கிருஷ்ணரை நேரிலே காண்பியாது, ஒரு குறியீடாக, புல்லாங்குழல் இசையுடன் பின்திரையில் 
ஒளி அமைப்பின்முலம் கரங்களிலே 
புல்லாங்குழலைக் காட்டியதிலும்;; போர்க்களக் காட்சியில் போர்ப்பறை ஒலிக்கும் 
ஜதிக்கும் அமைந்த ஆடலிலும்;; இரண்டு; சீதையரும் திரௌபதியும் ஒருவரே என்பதைக் 
காட்டுவதற்குச் சீதையும், மாயைசீதையும், திரௌபதியும் ஒருவர் பின் ஒருவர் நின்றபடி 
இசைக்கேற்பச் சுழன்றாடியதிலும்; அசைவும் இசையும் ஒருங்கிணைந்து அழகு சேர்த்தன. 
நீண்ட சேலைக்குப் பின்னிருந்து திரௌபதி கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி 
அபயக்குரலெழுப்பிய காட்சி, எமது பண்டைய இலக்கியங்களிலே வரும் “ஊடுகாண் திரையை” 
ஞாபகமுட்டியது என்பதையும் குறிப்பிடவேண்டும்.
 
 ஆகார்ய அபினயமும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. சீதையின் இயல்புக்கு அமைய வெளிர் 
நிறமும், திரௌபதியின் 
கடுமையைக் காட்ட கறுப்பும் சிவப்பும், ஏனைய நடன மங்கையர் வட இந்தியக் கிராமப்புற 
மகளிர் அணிவது போன்று பொருத்தமான வர்ணங்களிலும், ஆடை அணிந்திருந்தனர். சிறந்த 
வர்ணங்களின் சேர்க்கையும், சிறந்த ஒளி அமைப்பும் ஒன்றுக்கொன்று மெருகூட்டின.
 
எடுப்பான ஜதிக்கோர்வைகள், பாடல், பக்கவாத்தியங்கள் 
(மிருதங்கம், தப்லா, வீணை, புல்லாங்குழல்) எல்லாமே ஒத்திசைவாக ஒலித்தன. சில 
இடங்களில் பாடலில் பாவம் போதாது. ஆனாலும், நிழ்ச்சியின் தரம் குறையவில்லை. பாடலில் 
மெருகேற்றப்பட்டால் சோகம், வீரம், ரௌத்திரம் போன்ற இரசங்கள் இன்னும் பிரகாசம் 
பெறும்.
 கண்ணுக்கும் காதுக்கும்; விருந்தாக அமைந்த இந்நிகழ்ச்சி கருத்திலும் தாக்கத்தை 
ஏற்படுத்தியது. பெண்விடுதலை பற்றிப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், உண்மையில் 
பெண்ணுக்கு எப்பொழுது விடுதலை என்ற கேள்வி எழுவது இயல்பு. அன்று அக்கினி தேவனும் 
கிருஷ்ண பரமாத்மாவும் அபலைப் பெண்களைக் “காப்பாற்றினார்கள்”;. பெண்ணின் அவல 
வாழ்க்கையை இலக்கியத்திலும் அரங்கிலும் மட்டுமே காட்டுவதோடு நின்றுவிடாது, யதார்த்த 
வாழ்விலும் அவளுக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என்னும் வேட்கையுடன்
 அரங்கிலிருந்து வந்தோம்.
 
 - பராசக்தி சுந்தரலிங்கம் -
 ssss@bigpond.net.au
 |