| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அறிவித்தல்! |  
| 
              
                
                  
                  நிகழ்வு: 2011 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் 
                  ஒன்றுகூடல் 
 முருகபூபதி - அவுஸ்திரேலியா
 
 
  இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை 2011 ஆம் ஆண்டு 
                  ஜனவரி மாதம் முற்பகுதியில் நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக 
                  கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இலங்கைக்கு 
                  சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் 
                  எழுத்தாளர் விழாவை முன்னின்று நடத்திய அனுபவத்தின் தொடர்ச்சியாக 
                  இந்தப்பணியிலும் ஈடுபடுவதும் எனது விருப்பமாக இருந்தது. 
                  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எழுத்தாளர்கள் 
                  கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி 
                  ஆரோக்கியமாக 
                  கருத்துப்பரிவர்த்தனை செய்வதற்கு களம் அமைப்பதே இந்த சர்வதேச 
                  ஒன்று கூடல். இலங்கையில் நீடித்த யுத்த அழிவுகளினால் இத்தகைய ஒரு 
                  சர்வதேச இயக்கத்தை தமிழ் சார்ந்து நடத்துவது என்பதே 
                  நினைத்தும்கூட பார்க்க முடியாத செயல். எனினும் இந்த நோக்கம் 
                  நீண்டகாலமாக கனவாகவே மனக்குகையில் அமைதிகாத்தது. இலங்கையில் 
                  யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் 
                  அபிலாஷைகள் இன்னமும் பூர்த்தியுறவில்லை. கட்டுண்டோம் 
                  பொறுத்திருப்போம், காலம் வரும் காத்திருப்போம் 
                  எனச்சொல்வார்களே... அந்தக்காலத்திற்காகக்
                  காத்திருக்க நேர்ந்தது. 
 இது இப்படியிருக்க மல்லிகை இதழில் ஒரு ஆசிரியத்தலையங்கம் சர்வதேச 
                  தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலை நினைவுபடுத்தியிருந்தது. 
                  குறிப்பிட்ட இதழ் கையில் கிடைத்ததும் தாமதமின்றி கடிதம் 
                  எழுதினேன். இலங்கையில் இறுதியாக நடந்த யுத்தத்தைத் தொடர்ந்து 
                  அகதிகளாக்கப்பட்டு வவுனியா செட்டிகுளத்தில் அகதிகளாக இடைத்தங்கல் 
                  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் 
                  முழுமையாக நடைபெறும் வரையில் எமது சர்வதேச ஒன்றுகூடலை சற்று 
                  தாமதப்படுத்துவோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். 
                  நிலைமை படிப்படியாக சீரடையும் அறிகுறி தென்பட்டமையால் மனக்குகை 
                  ஓவியத்தை வெளிப்படுத்துவதற்காக 10 யோசனைகள் அடங்கிய 
                  அறிக்கையொன்றை அவுஸ்திரேலியா,
                  கனடா, தமிழ்நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வதியும் 
                  இலக்கியவாதிகளுக்கு மின்னஞ்சல் மார்க்கமாக அனுப்பினேன். சிலர் 
                  மேலும் இரண்டு யோசனைகளை இணைத்துக்கொள்ளுமாறு மின்னஞ்சலில் 
                  குறிப்பிட்டிருந்தனர். இந்த ஆக்கத்தின் இறுதியில் 12 
                  யோசனைகளையும் பார்க்கலாம். பலரும் சாதகமான பதில்களையே 
                  அனுப்பினர். சிலர், இலங்கையின் அரசியல் சூழ்நிலையை பரிசீலித்து 
                  நடத்துங்கள். வெளிநாடுகளிலிருந்து வரவிரும்பும் படைப்பாளிகளின் 
                  பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் என்றெல்லாம் ஆலோசனை 
                  தெரிவித்திருந்தார்கள். இலங்கையில் சுமார் 60 எழுத்தாளர்களுடன் 
                  இதுசம்பந்தமாக தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தேன்.
 
 2009 டிசம்பர் 27 ஆம் திகதி இலங்கையின் பிரபல தினசரியான 
                  தினக்குரலின் ஞாயிறு பதிப்பு எனது மின்னஞ்சல் நேர்காணலை விரிவாக 
                  முழுப்பக்கத்தில் பிரசுரித்திருந்தது. அத்துடன் அதேநாளன்று 
                  வீரகேசரி வாரவெளியீடும் தினகரன் வாரமஞ்சரியும் சர்வதேச 
                  எழுத்தாளர் விழாவைப்பற்றி நான் எழுதியிருந்த விரிவான கட்டுரைகளை 
                  பிரசுரித்திருந்தன. அன்றையதினம் நடுஇரவில்தான் நான் கொழும்பு 
                  விமான நிலையத்தில் இறங்கினேன். 
                  எனது தங்கை குறிப்பிட்ட பத்திரிகைகளை எனக்காக வாங்கி 
                  வைத்திருந்தாள். ஞானம் ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன் கொழும்பு 
                  தமிழ்ச்சங்க மண்டபத்தை ஆலோசனைக்கூட்டத்திற்காக 
                  ஒழுங்குசெய்திருந்தார். அத்துடன் ஜனவரி ஞானம் இதழில் இந்த 
                  சர்வதேச ஒன்றுகூடலின் அவசியத்தை வலியுறுத்தி ஆசிரியத்தலையங்கம் 
                  எழுதியிருந்தார். மல்லிகை 45 ஆவது ஆண்டு மலரில் ஆசிரியர் 
                  டொமினிக்ஜீவாவும் விழாவை வரவேற்று குறிப்பு எழுதியிருந்தார். 
                  இப்படியொரு விழா இலங்கையில் நடத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக 
                  உற்சாகமூட்டியவாறு இருந்தவர் டொமினிக்ஜீவா என்பதையும் 
                  இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தினக்குரல் 
                  பிரதம ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் கொழும்பில் ஆலோசனைக்கூட்டம் 
                  நடந்த ஜனவரி 3 ஆம் திகதி தினக்குரல் ஞாயிறு இதழில் விரிவான 
                  ஆசிரியத்தலையங்கம் எழுதியிருந்தார்.
 
 இந்தத்தகவல்களை இங்கு பதிவுசெய்வதற்கு முக்கிய காரணம் 
                  இருக்கிறது. ஈழத்து இலக்கிpய வளர்ச்சிக்கு கனதியான பங்களிப்பினை 
                  இலங்கையின்
                  தமிழ்த்தேசிய நாளேடுகள், வாரப்பதிப்புகள் வழங்கியிருக்கின்றன 
                  என்ற உண்மையை தமிழக வாசகர்களும் எழுத்தாளர்களும் தெரிந்துகொள்ள 
                  வேண்டும். ஈழத்து இலக்கியம் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டது. 
                  தேசிய இலக்கியம் மண்வாசனை இலக்கியம் பிரதேச மொழி வழக்கு 
                  இலக்கியம் போர்க்கால இலக்கியம் புலம்பெயர்ந்தோர் புகலிட 
                  இலக்கியம் உள்நாட்டு இடப்பெயர்வு இலக்கியம் என பல 
                  பரிமாணங்களைக்கண்டது ஈழத்து இலக்கியம். புலம்பெயர்ந்தோர் 
                  இலக்கியத்தை புலம்பல் இலக்கியம் என்றும் எள்ளி நகையாடியவர்கள் 
                  இருக்கிறார்கள். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த 'சர்வதேச 
                  எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கான' ஆலோசனைக்கூட்டத்தில் சுமார் 120 
                  பேர் கலந்துகொண்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 
                  எவருக்குமே அழைப்பிதழ் அச்சிட்டு அனுப்பி அவர்கள் வரவில்லை. 
                  தொலைபேசி அழைப்பையும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் 
                  பார்த்துவிட்டு வந்தவர்கள்தான் அவர்கள். கூட்டத்திற்கு 
                  புறப்படும் தருவாயில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன 
                  தமிழ்ச்சேவை எனது நேர்காணலை தொலைபேசி ஊடாக நேரடியாக 
                  ஒலிபரப்பியது. பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது 
                  உடல்நலக்குறைபாட்டையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதுடன் அரிய 
                  சில ஆலோசனைகளையும் தெரிவித்தார். தினக்குரல் நிறுவன அதிபர் திரு. 
                  சாமி அவர்கள் 2010 ஆம் ஆண்டிற்கான 
                  பெறுமதிமிக்க டயறிகளை வருகைதந்திருந்த எழுத்தாளர்களுக்கு 
                  இலவசமாகவே வழங்கினார். பூபாலசிங்கம் புத்தக நிலைய அதிபர் 
                  அனைவருக்கும் மதியபோசன விருந்து வழங்கி உபசரித்தார். இவர்களுக்கு 
                  எமது எழுத்தாளர் சமூகம் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்தது.
 
 
  காலை 10.30 மணிக்கு ஆரம்பமான கூட்டம் மாலை 4 மணிவரையில் 
                  தொடர்ந்தது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலின் 
                  அவசியத்தையும் அதன் 
                  நோக்கங்;களையும் 12 அம்ச யோசனைகளை முன்வைத்து எனது தொடக்கவுரையை 
                  நிகழ்த்தினேன். இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தும் பணியை 
                  மேற்கொள்ளவேண்டியதன் தேவை, மொழிபெயர்ப்பு தொடர்பாக எழுத்தாளர்கள் 
                  கவனிக்கவேண்டியிருக்கும் அம்சங்கள், வலைப்பதிவுகள்- 
                  இணையத்தளங்கள், ஓவியம், குறும்படம், நாட்டுக்கூத்து, நாடகம் 
                  சிறுவர் இலக்கியம், சிறுவர் நாடகம், இலக்கியப்படைப்புகளை 
                  ஆவணப்படுத்தல் முதலான துறைகளைப்பற்றி பலரும் கருத்துக்களையும் 
                  ஆலோசனைகளையும் தெரிவித்தனர். பேராசிரியர் சிவத்தம்பி, 
                  செம்மைப்படுத்தல் (Copy Editing) என்ற சொற்பதத்துக்கு பொருத்தமான 
                  சொல் செவ்விதாக்கம் என்று திருத்தினார். பேராசிரியர் மௌனகுரு, 
                  இனிமேல் 'நாட்டுக்கூத்து' எனச்சொல்லாதீர்கள். 'கூத்து' 
                  எனச்சொல்லுங்கள் என்று திருத்தினார். கொழும்பிலிருந்து 
                  வெளியாகும் தமிழ் தினசரிகளின் ஆசிரியர்கள் சிலரும் 
                  இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையால் எடிட்டிங் குறித்து 
                  பயனுள்ள கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நீண்டகாலமாக 
                  இலங்கையிலும் தமிழகத்திலும் குமரன் பதிப்பகத்தை நடத்திவரும் 
                  திரு.குமரன் கணேசலிங்கன் எழுத்தாளர்கள்- பதிப்பகம் - இவை 
                  இரண்டுக்கும் நடுவில் ஒரு கொப்பி எடிட்டரின் அவசியம் குறித்து 
                  விரிவாகப்பேசினார். 
 அறிவியலுக்கும் முக்கியத்துவம் தருமாறும் கருத்தாடல்கள் 
                  நிகழ்ந்தன. வடக்கு,கிழக்கு,தென்பகுதி மற்றும் மலையக 
                  எழுத்தாளர்களும் இக்கூட்டத்தில்
                  தமது ஆலோசனைகளைத்தெரிவித்தனர். நேரஅவகாசம் இன்மையால் சிலர் தமது 
                  ஆலோசனைகளை எழுதித்தந்தனர். இந்த சர்வதேச ஒன்றுகூடல் கூடிப்பேசி 
                  விடைபெறுவதாக அமையாமல் பயனுள்ளதாகவும் அத்துடன் புலம்பெயர் 
                  எழுத்தாளர்களின் வாழ்வனுபவங்களை பதிவுசெய்வதுடன் 
                  கலை-இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினரையும் 
                  உள்வாங்கும்வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவேண்டும் 
                  என்றும்
                  ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.
 
 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு வாரகாலத்திற்கு 
                  முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம் கருத்தரங்குகள், 
                  கண்காட்சிகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படவிருப்பதாக எனது 
                  தொகுப்புரையில் விளக்கினேன். இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் 
                  என்ற கேள்விக்கு, 
                  வெளிநாடுகளில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் 
                  தமது நன்கொடையாக 100 டொலர்களை வழங்கும் பட்சத்தில் ஒன்றுகூடலை 
                  சிறப்பாக நடத்தலாம் என்றும் அத்துடன் இலங்கையிலும் இதற்கான 
                  நிதியுதவி திரட்டப்படும் என்றும் இந்தப்பணிகளுக்கெல்லாம் 
                  இங்குள்ள தமிழ்
                  பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அனுசரணையாக இருக்கவேண்டும் எனவும் 
                  தெரிவித்தேன்.
 
 ஒன்று கூடலின் நிருவாகத்திற்காக ஒரு செயற்குழு தெரிவாகும் எனவும் 
                  ஏழுநாட்களும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளை வழிநடத்தவும் 
                  கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தங்குமிடம் மற்றும் 
                  போக்குவரத்து உணவு போன்ற விடயங்களை கவனிக்க தனித்தனி குழுக்களும் 
                  அமைக்கப்படும். வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் எழுத்தாளர்கள் 
                  கலை, இலக்கிய ஆர்வலர்களை இலங்கையில் வடக்கு,கிழக்கு மற்றும் 
                  மலையகப்பிரதேசங்களுக்கும் அழைத்துச்செல்லும் இலக்கிய 
                  சுற்றுலாவும் ஒழுங்குசெய்யப்படும். இச்சுற்றுலாக்களின்போது 
                  இலக்கிய சந்திப்புகள் கூத்து உட்பட பல கலை நிகழ்ச்சிகள் 
                  இடம்பெறும்.
 
 இறுதி நாளன்று இலங்கை சிங்கள படைப்பாளிகள் கலைஞர்களுடன் சர்வதேச 
                  தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் படைப்பாளிகள் 
                  மற்றும் ஈழ்த்து தமிழ் எழுத்தாளர் சந்திப்பும் கலந்துரையாடலும் 
                  நடத்தப்படும். இதனை ஒருங்கிணைக்கும் பணி திக்குவல்லை கமாலிடம் 
                  ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆலோசனைக்கூட்டத்தைத் தொடர்ந்து 
                  மேல்மாகாணம் (கம்பஹா மாவட்டம்) மற்றும் வடகிழக்கில் வவுனியா, 
                  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் 
                  சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பான சந்திப்புக்கூட்டங்களையும் 
                  நடத்தினேன். யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் 
                  நடந்தது. தகவல் அமர்வாக இச்சந்திப்புகள் நடைபெற்றன. வெளியூர் 
                  பயணங்களை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியதும் ஜனவரி 20 ஆம் 
                  திகதி பூபாலசிங்கம் புத்தக நிலைய பணிமனையில் ஒன்றுகூடலை நடத்தும் 
                  நிருவாகக்குழுவை அமைத்தேன். இக்குழு கொழும்பிலிருந்து இயங்கும்.
 
 இக்குழுவின் தொடர்பாளராக ஞானம் ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன் 
                  நியமிக்கப்பட்டார். அவரது முகவரியே ஒன்றுகூடலுக்கான 
                  அலுவலகமாகவும் 
                  இயங்கும். குறிப்பிட்ட நிருவாகக்குழு விரைவில் கொழும்பில் 
                  வங்கிக்கணக்கை திறந்தபின்னர் விரிவான செய்திக்குறிப்புகளை 
                  அவ்வப்போது வெளியிடும். இதுதொடர்பாக மேலதிக விபரங்களை 
                  அறியவிரும்பும் எழுத்தாளர்கள் பின்வரும் மின்னஞ்சலுடன் 
                  தொடர்புகொள்ளலாம்.
 
 International.tw...@yahoo.com.au
 கொழும்பு முகவரி: 3 B., 46th Lane, Colombo -06. Srilanka
 
 இலங்கையில் வடமாகாணத்திற்கு செங்கை ஆழியானும் கிழக்கு 
                  மாகாணத்துக்கு பேராசிரியர் மௌனகுருவும் மலையகத்திற்கு தெளிவத்தை 
                  ஜோஸப்பும் தென்னிலங்கைக்கு திக்குவல்லை கமாலும் பிரதிநிதிகளாக 
                  தற்போதைக்குத் தெரிவாகியுள்ளனர். தமிழ்நாடு;, சிங்கப்பூர், 
                  மலேசியா, டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே, 
                  சுவிட்சர்லாந்து, சீசெல்ஸ், நியுசிலாந்து, கனடா, அமெரிக்கா உட்பட 
                  மேலும் சில நாடுகளில் இந்த சர்வதேச ஒன்றுகூடலுக்காக 
                  கலந்துகொள்ளவரவிரும்பும், பங்களிப்புச்செய்யவிரும்பும் 
                  எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்புகளை 
                  பேணும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் விரைவில் 
                  தெரிவுசெய்யப்படுவார்கள். இதன் பிரகாரம் இலங்கை படைப்புகளுக்கும் 
                  புலம்பெயர்ந்த பல படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கும் சிறந்த களம் 
                  அமைத்துக்கொடுக்கும் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்களை 
                  தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இயங்குமாறு 
                  கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஏனையநாடுகளிலிருக்கும் 
                  இலக்கியவாதிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்துகின்றேன்.
 
 இலங்கை நண்பர் கொழுந்து ஆசிரியர் திரு. அந்தனிஜீவா தமிழகத்தில் 
                  சென்னை, பாண்டிச்சேரியில் சில இலக்கிய சந்திப்புகளில் 
                  கலந்துகொண்டு சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பாக இலக்கியவாதிகளுக்கு 
                  விபரித்திருப்பதாகவும் பலரும் கலந்துகொள்ள ஆர்வம் 
                  தெரிவித்திருப்பதாகவும் எனக்கு விரிவான கடிதம் 
                  எழுதியிருக்கிறார்.
 
 சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்காக முன்வைக்கப்பட்ட 12 
                  அம்ச திட்டங்கள் வருமாறு:
 
 1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக 
                  கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப்படைப்புகளில் 
                  செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம்) கலையை வளர்த்தெடுப்பது.
 
 2. தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் 
                  பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் 
                  தொடர்புகளை பேணிவளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை 
                  சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.
 
 3. தமிழ் இலக்கிய படைப்புகளை (நூல்கள் - இதழ்கள்) 
                  ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் 
                  இணைந்து இயங்குவது.
 
 4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் 
                  பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு 
                  உதவுவதற்காக ஒரு 
                  நம்பிக்கை நிதியத்தை ((Trust Fund) உருவாக்குவது.
 
 5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய 
                  சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக 
                  ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.
 
 6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை 
                  முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல்.
 
 7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை. 
                  இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்தல்.
 
 8. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், 
                  பத்திரிகை, இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் 
                  மத்தியில் 
                  கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக 
                  உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.
 
 9. நாடகம், நடனம், கூத்து, இசைநாடகம், வீதிநாடகம், மற்றும் 
                  பாரம்பரிய கிராமியக்கலைகளைப் பற்றிய கருத்தரங்குகள், 
                  பயிற்சிப்பட்டறைகள் 
                  ஒழுங்குசெய்தல்.
 
 10. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் 
                  ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு 
                  முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.
 
 11. குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் 
                  வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல்.
 
 12. ஓவியக்கலை,ஒளிப்படக்கலை, கணனிக்கலை. புசயிhiஉள முதலான 
                  துறைகளில் ஈடுபடும் இளம்தலைமுறையினருக்கும் இலக்கியப் 
                  படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்வகையில் 
                  காட்சிப்படுத்தும் னுநஅழளெவசயவழைn கருத்தரங்கு அமர்வுகளை நடத்தல்
 
 பிற்குறிப்பு: படைப்பிலக்கியவாதிகள் கலைஞர்களிடம் நீடிக்கும் 
                  இறுக்கத்தை தளர்த்தி நெருக்கத்தை பேணுவதற்காகவும் ஆரோக்கியமான 
                  கலந்துரையாடல்களின் ஊடாக அறிந்ததை பகிர்ந்து அறியாததை 
                  அறிந்துகொள்வதற்குமான ஒன்றுகூடலே இந்த சர்வதேச அரங்கு. எனவே 
                  பயனுள்ள கருத்துக்களை வாசகர்களும் தெரிவிக்கலாம்.
 
 தகவல்: ஜீவகுமாரன்
                  jeevakumaran5@gmail.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  ©>© 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |