கலை இலக்கிய ஒன்றுகூடலும்
-ரவி-

              நேரம் 3 மணியை 
              அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் 
              வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் 
              தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் 
              இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து 
              பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த 
              போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக 
              இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற 
              இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. 
              பெரும்திரளாய்க் கூடுவர்... போவர்...வருவர் மலிவுவிற்பனைக்கு. 
              
              இன்று நாம் சுமார் 40 பேர்வரை நின்றோம். இலக்கியத்தில் 
              ஆர்வமுள்ளவர்கள் வழமையாக வந்து கருத்துப் பரிமாறுவதில் 
              இப்படியாய்த்தான் கூட்டம் சேரும். இந்தளவுக்கு சனம் சேருவது ஒரு 
              பெரிய விடயம்தான் எம்மைப் பொறுத்தளவில். வரவிரும்பிய இன்னும் சில 
              நண்பர்கள் தமது வரமுடியாமையை முதலிலேயே தொலைபேசியில் தெரிவித்துக் 
              கொள்வதுகூட எமக்கு உற்சாகம் தரத் தவறுவதில்லை. 
              
              கதிரைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. 
              குறும்படத்துக்கான திரையை கண்ணெதிரில் நிற்பாட்டினோம். கவிஞர் 
              நளாயினி சற்று ஆசுவாசமாக இருந்ததாக எனக்குப் பட்டது. தனது படைப்பின் 
              மீதான உழைப்பை தொகுப்புகளாக்குவதில் பலதரப்பட்ட எண்ணங்கள் தெரிவுகள் 
              இடர்ப்பாடுகள் எல்லாம் நிலைநீங்கிய திருப்தி அவரது இடைவிடாத 
              சிரிப்பில் தெரிந்தது. றஞ்சி தலைமையேற்று உசாராக தனது கருத்துகளை 
              முன்வைத்தார். 
              
              "இன்று நாங்கள் மீண்டும் ஒரு கலை இலக்கிய ஒன்றுகூடலில் 
              பங்குகொள்கிறோம். கவிஞர் நளாயினி அவரது கவிதை வெளிப்பாட்டுக்கூடாக 
              அனேகமாக எல்லோருக்கும் தெரிந்தவர். புலம்பெயர் இலக்கிய கவிஞர்களில் 
              அவருக்கும் ஒரு தொடர்ச்சியான பங்கு இருக்கிறது. முக்கியமாக 
              புலம்பெயர் வானொலிகளில் அவர் ஈடுபாட்டுடன் பங்குபற்றி கவிதைபாடிய 
              காலங்கள் ஒன்று இருந்தது. இதன் மூலம் பலருக்கு வெளித்தெரிந்தார் 
              நளாயினி. அத்தோடு பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்று நீண்டு இப்போ 
              இணையத்தளங்களில் என தொடர்கிறது அவரது கவிதை முயற்சிகள். இன்று அவரது 
              உழைப்பு தொகுப்புகளாக ஒன்றுதிரட்டப்பட்டிருக்கிறது. நங்கூரம் 
              உயிர்த்தீ என இரு கவிதைத் தொகுப்புகள் அவரிடமிருந்து 
              வந்திருக்கின்றன|" என்ற சிறு அறிமுகத்துடன் தொடர்ந்த றஞ்சியின் 
              பேச்சு...
              
              
"கவிதை என்பது உணர்வு வெளிப்பாட்டுத் 
              தளத்தில் நிகழ்த்தப்படும் ஒரு இலக்கிய வடிவம். பெண்களின் 
              பிரச்சினைகளை ஆண் கவிஞர்கள் வெளிப்படுத்த முயன்ற நிலையிலிருந்து அதை 
              பெண்களே வெளிப்படுத்தும் ஒரு காத்திரமான நிலை எண்பதுகளின் 
              ஆரம்பத்திலிருந்து அதிகம் வெளிப்பட்டதாகக் கொள்ள முடியும். ஈழத்தின் 
              தேசியவிடுதலைப் போராட்டக் களம் இதை ஈழத்தில் தீவிரப்படுத்தியது 
              எனலாம். அரசியலில், பெண்விடுதலை நாட்டத்தில்... என அவை பயணிக்கவும் 
              தொடங்கின.
              
              புலம்பெயர்வாழ்வியலிலும் பெண்களின் எழுத்துக்கள் வெளிப்பட்டன. பெண் 
              கவிஞர்களும் வெளித்தெரிந்தனர். அவர்களில் பெண்ணியம், அரசியல், 
              கூட்டுவாழ்வின் பிரிவு, கலாச்சார முரண்கள்... என பல தளங்களில் கவிதை 
              முயற்சிகள் வெளிவருகின்றன. நளாயினி இத் தளங்களில் வெளிவந்த ஒரு 
              கவிஞர்தான். முக்கியமாக மனித உணர்வு உணர்ச்சிகளில் இழையோடும் காதல் 
              பற்றியும் நட்புப் பற்றியும் இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. 
              நங்கூரம், உயிர்த்தீ கவிதைத் தொகுப்புகளில் இதை நாம் காணலாம்."
              
              றஞ்சியின் இந்த அறிமுக உரையைத் தொடர்ந்து கண்ணன், சுதா இருவரும் இரு 
              முனைகளில் உட்கார்ந்து இருந்தது போன்றே கவிதைகள் பற்றிய பார்வைகளும் 
              அமைந்திருந்தன என்று பருமட்டாகக் கூறலாம். மேலும் சில ஆர்வலர்கள் 
              வந்து இணைந்துகொண்டிருந்தனர். இரு கவிதைத் தொகுப்புகளும் பலரின் 
              கைகளில் இருந்தன. அவர்கள் இதை ஏற்கனவே வாசித்திருக்கவில்லை. கண்ணன் 
              சுதா இருவரினதும் பார்வைகளில் அவர்கள் அதைத் தேடிக்கொள்ளும் 
              ஆர்வத்தில் இருந்ததாக எனக்குப் பட்டது. 
              
              "நளாயினிக்கு என்ன துணிவப்பா. உண்மையிலை துணிஞ்ச ஆள்தான். ஒரே 
              நேரத்திலை இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறா" 
              என்ற நயமான உரையாடலுடன் உயர்த்திய உயிர்த்தீ தொகுப்பை மேசையில் 
              வைத்துவிட்டு தொடர்ந்தார் கண்ணன். சுவிஸ் கவிஞர் ஒருவரின் கவிதையை 
              தமிழில் தந்து கவிதை உத்தி பற்றி சிலாகித்துவிட்டு நளாயினியின் 
              கவிதைக்குள் சென்றார். நட்பு, காதல், பெண்ணியம் என நளாயினியின் 
              கவிதைகள் பேசுவதை கவிதை வாசிப்பினூடாகவும் எடுத்துக் காட்டினார். 
              அவர் ஒரு துணிந்த பெண்ணாக தன்னை நிலைநிறுத்தும் இடங்களைச் சுட்டிக் 
              காட்டினார்.
              
              "சராசரி மனிதருள்ளிருந்து மாறுபட்டு வாழவே ஆசைப்படுகிறேன்" என்ற 
              கவிதை வரிகளை காட்டி நளாயினியின் நிலையை சுட்டிக்காட்டினார்.
              
              மலர் என்று பெண்களை வர்ணிக்கும் நிலையை தலைகீழாக்கி காதலனை மலர் 
              என்று மாற்றுகிறார். அதேபோன்றே காதலுக்கு ஏற்படும் தடையால் காதலன் 
              "அரளிவிதை உண்டு சாகலாம் வா" என்று தற்கொலை செய்யும் மனோநிலைக்கு 
              போவதுபோலவும், காதலி "இல்லை அந்த அரளிப் பூவை மாலையாகச் சூட்டி 
              மணமுடிப்போம் வா" என்று துணிச்சலிடுவதுபோலவும் அமைந்த கவிதையையையும் 
              வாசித்துக் காட்டினார் கண்ணன். பெண்ணியக் கவிதைகள் பற்றிய, பெண் 
              கவிஞர்கள் பற்றிய தனது தெரிதல்களுக்குள் போய் தனது அறிமுக உரையை 
              முடித்துக் கொண்டார்.
              
              தமிழகப் பெண் கவிஞர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் கவிதையில் ஒரு 
              பாய்ச்சலை ஏற்படுத்தியதென்றும் இதைச் சகித்துக் கொள்ளாத 
              ஆண்மனத்திற்கு உதாரணமாக "சண்டைக்கோழி" பட வசனகர்த்தாவுக்கும் 
              குட்டிரேவதிக்கும் இடையிலான சர்ச்சையை குறிப்பாக்கினார் கண்ணன்.
              
               இத்துடன் 
              இணைப்பாக கருத்துக் கூறினார் றஞ்சி. "கலா 1997 இல் எழுதிய கோணேஸ்வரி 
              கவிதையிலேயே பெண்களின் உறுப்புகளை வார்த்தைகளாக்கி எழுதிய சர்ச்சை 
              ஆரம்பமானது. (குறிப்பு: மட்டக்களப்பில் கோணேஸ்வரியின் மீதான 
              இராணுவத்தின் பாலியல் வன்முறையின் பின்னர் கொடுரமான செய்கைக்கு 
              உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர் கோணேஸ்வரி) பின்னர் மற்றைய பெண் 
              கவிஞர்களின் எழுத்துகளில் அவை தாக்கம் புரிய ஆரம்பித்தன. 
              போர்ச்சூழலில் வாழும் இலங்கைப் பெண் கவிஞர்களின் தாக்கம் இந்தியப்; 
              பெண் கவிஞர்களின் கவிதைகளிலும் மாறுதலை ஏற்படுத்தியது என்ற கருத்தை 
              புதியமாதவி போன்ற கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர்." என்றார். 
              இலங்கையில் தாக்கமான கவிதைகளை எழுதிவரும் கலா, அனார், பஹீமா ஜகான், 
              பெண்ணியா, சுல்பிகா, ஒளவை போன்றவர்களின் கவிதைகளை குட்டிரேவதி, 
              புதியமாதவி போன்றோர் பெரிதும் சிலாகித்துப் பேசுவதையும் இடையீடாக 
              வெளிப்படுத்தினார் றஞ்சி.
இத்துடன் 
              இணைப்பாக கருத்துக் கூறினார் றஞ்சி. "கலா 1997 இல் எழுதிய கோணேஸ்வரி 
              கவிதையிலேயே பெண்களின் உறுப்புகளை வார்த்தைகளாக்கி எழுதிய சர்ச்சை 
              ஆரம்பமானது. (குறிப்பு: மட்டக்களப்பில் கோணேஸ்வரியின் மீதான 
              இராணுவத்தின் பாலியல் வன்முறையின் பின்னர் கொடுரமான செய்கைக்கு 
              உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர் கோணேஸ்வரி) பின்னர் மற்றைய பெண் 
              கவிஞர்களின் எழுத்துகளில் அவை தாக்கம் புரிய ஆரம்பித்தன. 
              போர்ச்சூழலில் வாழும் இலங்கைப் பெண் கவிஞர்களின் தாக்கம் இந்தியப்; 
              பெண் கவிஞர்களின் கவிதைகளிலும் மாறுதலை ஏற்படுத்தியது என்ற கருத்தை 
              புதியமாதவி போன்ற கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர்." என்றார். 
              இலங்கையில் தாக்கமான கவிதைகளை எழுதிவரும் கலா, அனார், பஹீமா ஜகான், 
              பெண்ணியா, சுல்பிகா, ஒளவை போன்றவர்களின் கவிதைகளை குட்டிரேவதி, 
              புதியமாதவி போன்றோர் பெரிதும் சிலாகித்துப் பேசுவதையும் இடையீடாக 
              வெளிப்படுத்தினார் றஞ்சி. 
              
              புகலிட பெண் கவிஞர்கள் என்று பார்க்கையில் சுவிசில் வெளிவரும் முதல் 
              கவிதைத் தொகுப்புகளாக நளாயினியின் நங்கூரம், உயிர்த்தீ என்பன 
              வெளிவந்திருப்பதாக நினைக்கிறேன் என்றார் றஞ்சி. 
              
              அடுத்து சுதா நங்கூரம் கவிதைத் தொகுப்பின் அட்டைப்பட ஓவியத்தை எமது 
              கண்களில் ஒத்துவதுபோன்று அதில் தெரியும் பல முகங்களை உற்றுப்பார்க்க 
              வைத்தார். (இந்த இரு கவிதைத் தொகுப்புகளினதும் ஓவியங்களை கனடாவில் 
              வசிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி படைத்திருந்தார்). 
              
              நங்கூரம் பெரும்பாலும் காதல் பற்றிய கவிதைகளை கொண்ட தொகுப்பு. 
              கவிஞரின் துணிச்சலான வரிகளையும் காதலுணர்வு பற்றிய தாக்கமான 
              வரிகளையும் வாசித்துக் காட்டினார் சுதா. அதேநேரம் இவற்றுக்கு முரணான 
              விதத்தில் சினிமாப் பாணியிலான வர்ணிப்புகளும் தென்படும் வரிகளை 
              சுட்டிக் காட்டினார். கவிதைகளின் காலம் குறிக்கப்படாததால் இது 
              சிலவேளை அவரது ஆரம்பகாலக் கவிதையோ தெரியவில்லை என்று அதை விரித்துப் 
              பார்த்தார். சுதாவின் அறிமுக உரை ஒரு விமர்சன உரைபோல் இருந்தது.
              
              நேரம் எல்லோருக்கும் தெரியாமல் சத்தமின்றி காலடிவைத்துச் சென்றது. 
              சுதாவின் அறிமுக உரையில் சிலருக்கு எழுந்த முரண்பாடு அறிமுகக் 
              கூட்டமா விமர்சனக் கூட்டமா என்ற கேள்வியை எழுப்பியது. இதையொட்டி 
              கருத்துகள்...
              
              "விமர்சனம் என்பது நோயாளியைக் குணப்படுத்தம் மருந்தாக இருக்க 
              வேண்டுமேயன்றி கொலைசெய்யும் மருந்தாக இருக்கக்கூடாது என்ற மாவோவின் 
              கருத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது."
              
              "தேவைப்படின் நோயாளியைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட 
              வேண்டும் என்று மாவோ அதே புத்தகத்திலேயே குறிப்பிட்டுமிருக்கிறார். 
              அதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்"
              
              "விமர்சனத் துறை தமிழ்ச் சூழலில் வளர்ச்சியடையாத நிலையிலேயே 
              இருப்பதாக கைலாசபதி அன்று சொன்ன கருத்து இன்றைய காலத்துக்கும் 
              பொருந்துவதாக உள்ளது"
              
              "உண்மைதான். அதேநேரம் இதை சொல்லும் நாமும் இந்தக் குறைபாடுகளுக்கு 
              உட்பட்டவர்தான் என்பதையும் மனதில் வைத்திருப்பது நல்லது. 
              குறைபாடுகளுடனேயோ என்னவோ இதை நாம் செய்துதான் வளர்ச்சியடைய வேண்டும்"
              
              "தலித்தியம் மற்றது பெண்ணியம் சம்பந்தமான விமர்சனங்கள் கறாராக 
              இருப்பதை தவிர்த்து அவதானத்துடன் வைக்கப்பட வேண்டும்"
              
              "விமர்சனங்களை முகம்கொடுக்கும் பக்குவம் படைப்பாளிக்கு இருக்கத்தானே 
              வேண்டும்"
              
              இப்படியாய் குழப்பமேதுமற்று தொடர்ந்த உரையாடல் குறுகிய 
              நேரத்துக்குள்ளேயே நளாயினியின் கவிதைத் தொகுப்புக்கள் மீது மீண்டும் 
              திருப்பப்பட்டது. இதற்கு நளாயினி தனக்கு விமர்சனங்களை 
              முகம்கொடுக்கும் பக்குவம் இருப்பதால் தான் விமர்சனங்களை வரவேற்பதாகக் 
              கூறி தன்நிலையை தெளிவாக்கினார்.
              
              கவிதைகளின் காலம் தனித்தனி குறிப்பிடப் பட்டிருந்தால் கவிஞரின் 
              படைப்பியல் மாற்றத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். என்ற 
              கருத்து முன்வைக்கப்பட்டது. 
              நங்கூரம் கவிதைகள் தான் ஆரம்ப காலங்களில் எழுதிய கவிதைகள் என்பதை 
              நளாயினி குறிப்பிட்டார்.
              
              "அதுதான் நளாயினி. உணர்ந்து அனுபவித்து எழுதிய கவிதைகள் என்பதால் அவை 
              நல்லாக இருக்கின்றன. சிலவேளை சமூகநோக்கு பெண்ணியம் என்றெல்லாம் 
              ஆணியடித்து மறிப்பிட்டிருந்தால் இவ்வாறான கவிதைகள் நன்றாக வர 
              வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம்"
              
              "நளாயினி சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் படைக்க 
              வேண்டும்"
              
              "நளாயினி இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தியபடி 
              போகிறார். முகம்கொடுக்கிறார். பின்வாங்கவில்லை. அந்தளவில் 
              பாராட்டுகள். அதேநேரம் இந்த ஒடுக்குமுறைகளின்மீது (கவிதையினூடு) 
              முஸ்டியை உயர்த்த வேண்டும். அதன்போது எழக்கூடிய பிரச்சார வாடை 
              கோசங்களிலிருந்து கவிதையைத் தப்பவைக்கவும் வேண்டும். இன்றைய 
              பெண்ணியக் கவிதைகளின் உடல்மொழிச் சர்ச்சை -பிரச்சாரம் கோசம் அற்ற- 
              ஒரு உடைப்பின் அதிர்ச்சிதான். ஒரு முஸ்டி உயர்த்தல்தான்"
              
              நளாயினி பதிலளிக்கிறார். தான் பிற்காலங்களில் எழுதிய பெண்ணியக் 
              கவிதைகள் இனிவரப்போகும் தொகுப்பில் இடம்பெறும் என்றார்.
              
              "நங்கூரம் கவிதைகள் காதல் கவிதைகளாக வகைப்படுத்தக்கூடியது. அதேநேரம் 
              உயிர்த்தீ நட்புப் பற்றி சொல்ல வருகிறது. அதேநேரம் சில இடங்களில் 
              நட்பாகப் புரிந்துகொண்டு செல்கையில் பிறகு காதலித்துப் பார் 
              என்றமாதிரியான உணர்வைத் தந்துவிடுகிறது. சிலவேளை இது எங்களது ஆண்மனக் 
              குறைபாடோ தெரியவில்லை."
              
              நளாயினியை அதிகம் அலைக்கழிக்கும் கவிதைகள் உயிர்த்தீ தொகுப்பில் 
              இருப்பதாக நான் கணிக்கிறேன். உயிர்த்தீயை அவரது நோக்கில் 
              விமர்சனங்கள் எட்டியிருக்கவில்லை என்று அவர் கருதுவதுபோலவும் 
              தெரிகிறது. இவை எனது அவதானிப்புகள் மட்டுமே. உயிர்த்தீ கவிதைகள் ஒரு 
              செஸ் விளையாட்டுப் பொன்ற நகர்வுகளை ஏற்படுத்தக் கூடியது என்ற அவரது 
              விரல்நுனி சுட்டிக்காட்டுதல் எனது அவதானிப்பை ஆழமாக்கியது.
              
              பலரும் உரையாடலில் பங்குபற்றியிருந்தது சிறப்பான அம்சம். கவிதைத் 
              தொகுப்புகளின் முதல் பிரதிகளை அவரது உறவினருக்கு வழங்கி கௌரவித்தார் 
              நளாயினி.
              
              மண்டபத்தில் ஒரு முலையில் மேசையில் வடை கட்லற் கேக் என வாசம் வீசியதை 
              இப்போ பலர் முகர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஒரு இடைவேளை விடலாமே 
              என்றவாறான குரல் மறுப்பின்றி நடைமுறையானது. இன்னொரு மூலையில் 
              நங்கூரம், உயிர்த்தீ, வகுப்பு குறும்படம், உயிர்மெய், உயிர்நிழல் 
              சஞ்சிகைகள் என்பவற்றுடன் மெக்சிக்க விடுதலைப்போராட்ட அமைப்பின் 
              துணைத்தளபதி மார்க்கோஸ் இன் "எதிர்ப்பும் எழுத்தும்", 
              சேகுவேரா-வாழ்வும் மரணமும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 
              என்பவையும் மேலும் சில புத்தகங்களும் பரவியிருந்தன. சுவிசிலிருந்து 
              மாதமொருமுறை வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் அல்ப்கோர்ண் 
              தமிழ்க்குரல் இலவசம் என எழுதப்பட்டுக் கிடந்தது.
              
               அடுத்து 
              சுவிசில் எல்லோரும் அறிந்த நாடக, குறும்பட நடிகர் வா.வி.பாஸ்கர் 
              குசினிப் பாத்திரங்கள் குசினிவேலையாள் சீருடை என தோன்றுகிறார். 
              பின்னணி இசையின் அழைப்போடு தகிடுதத்தமாக நடனமாடியபடி பார்வையாளர்கள் 
              பக்கமிருந்து முன்னாடி வருகிறார். இசையோடு அவரது தனிநடிப்பு பிணைந்து 
              எமது புகலிட வாழ்வின் வேலைத்தலங்களுக்குள் எம்மை இழுத்துச் 
              சென்றுவிடுகிறது. வாழ்வனுபவத்தின்மீது பாஸ்கரின் அதிர்வுக்குரல் 
              உடலசைவு முகபாவம் எல்லோரையும் கட்டிப் போட்டது. யாரும் வேறுவேலைகள் 
              பார்த்ததாய் எனது வலிந்த பார்வைக்கும் அகப்படவில்லை. முதலாளி 
              தொழிலாளி இடையிலான உறவை ஒரு நாயை வரவழைத்து பின்னணி இசை 
              காதுக்குள்ளால் ஓடவிட்டது. அற்பதமான படைப்பு உத்தி. தொழிலாளி 
              நாயைப்போல் குழைந்து முனகும் சத்தத்துடன் இணைகிறான். முதலாளி 
              கடிநாயின் விறைப்பான குரைப்புடன் இணைகிறான். சுமார் அரைமணி 
              நேரத்துக்கு மேலாக பாஸ்கர் எமது நேரத்தை களவெடுத்துவிட்டு கனமாக 
              எம்மிடம் திருப்பித் தந்தார். இதுபற்றிய உரையாடல் அவரை உற்சாகமடையச் 
              செய்ததை அவரது முகம் இப்போ நடிப்பின்றி வெளிப்படுத்தியது.
அடுத்து 
              சுவிசில் எல்லோரும் அறிந்த நாடக, குறும்பட நடிகர் வா.வி.பாஸ்கர் 
              குசினிப் பாத்திரங்கள் குசினிவேலையாள் சீருடை என தோன்றுகிறார். 
              பின்னணி இசையின் அழைப்போடு தகிடுதத்தமாக நடனமாடியபடி பார்வையாளர்கள் 
              பக்கமிருந்து முன்னாடி வருகிறார். இசையோடு அவரது தனிநடிப்பு பிணைந்து 
              எமது புகலிட வாழ்வின் வேலைத்தலங்களுக்குள் எம்மை இழுத்துச் 
              சென்றுவிடுகிறது. வாழ்வனுபவத்தின்மீது பாஸ்கரின் அதிர்வுக்குரல் 
              உடலசைவு முகபாவம் எல்லோரையும் கட்டிப் போட்டது. யாரும் வேறுவேலைகள் 
              பார்த்ததாய் எனது வலிந்த பார்வைக்கும் அகப்படவில்லை. முதலாளி 
              தொழிலாளி இடையிலான உறவை ஒரு நாயை வரவழைத்து பின்னணி இசை 
              காதுக்குள்ளால் ஓடவிட்டது. அற்பதமான படைப்பு உத்தி. தொழிலாளி 
              நாயைப்போல் குழைந்து முனகும் சத்தத்துடன் இணைகிறான். முதலாளி 
              கடிநாயின் விறைப்பான குரைப்புடன் இணைகிறான். சுமார் அரைமணி 
              நேரத்துக்கு மேலாக பாஸ்கர் எமது நேரத்தை களவெடுத்துவிட்டு கனமாக 
              எம்மிடம் திருப்பித் தந்தார். இதுபற்றிய உரையாடல் அவரை உற்சாகமடையச் 
              செய்ததை அவரது முகம் இப்போ நடிப்பின்றி வெளிப்படுத்தியது.
              
              அடுத்து வகுப்பு குறும்படத்துக்கான திரையொளிர்வுடன் மண்டபம் 
              இருளடைந்தது. புகலிட வாழ்வில் இன்னொரு சிக்கலை பேசியது வகுப்பு 
              குறும்படம். எமது பிள்ளைகளின் மீதான பாடசாலை படிப்பு குடும்பம் என்ற 
              பிணைச்சலுள் ஒரு குழந்தையின் வாழ்வுச்சிக்கலை முன்னிறுத்திப் 
              பேசுகிறது வகுப்பு. 
              
              தகப்பன் வேலைக்குப் போகிறார். தாய் வேலைக்குப் போகிறார். குழந்தையை 
              காலையில் நேரத்துடனேயே எழுப்பி வெளிக்கிடுத்தி பாடசாலைக்குப் 
              போகவேண்டிய நேரத்துக்கு அலார்ம் வைத்துவிட்டு போகின்றாள் தாய். 
              திரும்பவும் கோழித்தூக்கம் போடும் குழந்தை அலார்ம் ஒலியில் 
              விழுந்தெழும்பி பாடசாலைக்குப் போகிறது. மதியம் வீட்டுக்கு வருகிறது. 
              இருப்பதை சாப்பிடுகிறது. மீண்டும் பாடசாலைக்குப் போகிறது. பாடசாலை 
              முடிந்து வீட்டுக்கு வருகிறது. தனிமையில் விளையாடுகிறது. வெளியில் பல 
              குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கிறது. கையசைக்கிறது. தாய் வேலையால் 
              வருகிறார். பிறகு சமையல். குழந்தை விளையாட அழைக்கிறது தாயை. தாய்க்கு 
              நேரமில்லை. எழுந்தமானமாக அவர் சொல்கிறார். "விளையாடுறதை விட்டிட்டுப் 
              படி. கொப்பியை எடுத்துக் கொண்டு வா. அம்மா அப்பா எழுது." குழந்தை 
              இந்த காய்ந்த குழந்தைமையை அனுபவிக்கிறது. 
              
              "குழந்தைய வகுப்பில்" இருந்து (கிண்டர்கார்ற்றன்) நியமமான முதலாம் 
              வகுப்புக்குப் போகமுடியாமல் தடைப்படுகிறது. தகப்பன் வைக்கும் தீர்வு 
              தாயின் மீதான வற்புறுத்தலாகிறது. பிள்ளையை நாட்டுக்குக் கூட்டிப்போய் 
              படிப்பி என்ற அவரது குருட்டுத் தீர்வு தாயின் விருப்பு 
              வெறுப்புகளோடும் தாய்நாட்டின் வாழ்வியல் சூழலோடும் பொருந்த 
              மறுக்கிறது. தகப்பன் ஆணதிகாரத்தின் பிசகாத பிரதிநிதியாய் வன்முறையை 
              வெளிப்படுத்துகிறார். கோபம் எரிச்சல் விரக்திக்குள் குறுகிப் 
              போகின்றனர் பெற்றோர். குழந்தைக்கான வெளி இந்தக் கூட்டிலிருந்து 
              பிரிந்து பச்சைப் பசேலென விரியும் புல்வெளியும் பூமியைக் கரம்பற்றி 
              அணைக்கும் மலைகள், உச்சியில் வெளிர்ந்துகொண்டிருக்கும் பனித்திரள், 
              முகில்களின் ஓட்டத்தில் வானத்தின் நீலிச் சிரிப்புமாய்... விரிந்து 
              விரிந்து செல்கிறது. நந்தகுமாரின் கமரா அள்ளுகொள்ளையாய் இந்தக் 
              காட்சியை குழந்தைக்கான வெளியாய் ஓவியப்படுத்துகிறது.
              
              மண்டபம் வெளிச்சம்கொள்கிறது. நெறியாளர் பாலகுமார் நடிகர் பாஸ்கர், 
              இசைஞர் சுரேஸ்குமார் எல்லோரும் அபிப்பிராயங்களின் மீதான வேட்கையில் 
              இருந்தனர். 
              
              எடுத்துக்கொள்ளப்பட்ட கரு வரவேற்கப்பட்டது. பிரச்சினைகளை அதன் 
              தொடர்ச்சியை பின்னிய விதம் - குறிப்பாக தகப்பனின் நிலை- அவை 
              வார்த்தைகளோடு வெடித்துக் கிளம்பும் உளவியல் நிலை கதையமைப்பில் 
              சிறப்பம்சமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 
              
              குழந்தையின் நடிப்பு எல்லோராலுமே வியப்பாக பார்க்கப்பட்டது. 
              குழந்தையின் நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்ததில் நெறியாள்கை 
              பாராட்டப்பட்டது. இசையமைப்புப் பற்றியும் அது இசைந்து செல்லும் 
              தன்மையும் சில காட்சி உதாரணங்களோடு சிலாகிக்கப்பட்டது. பாலகுமாரின் 
              முந்தைய படைப்பிலிருந்து மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதை இப் 
              படம் காட்டிநிற்பதாகவும் சொல்லப்பட்டது. 
              
              அதேநேரம் எமது பிள்ளைகள் பள்ளிவாழ்வில் பாதிக்கப்படுவது எமது 
              தரப்பால்தால் என்ற வாதத்தை இப் படம் முன்வைப்பதுபோல் 
              அமைந்துவிடுவதாகவும், இது எமது பிள்ளைகளின் மீதான அவர்கள் (பாடசாலை) 
              தரப்பான பாகுபாடுகளை பொறுப்பின்மையை சொல்லாமல் விட்டுவிடுகிறது 
              என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் இன்று 
              வெளிநாட்டவருக்கெதிரான சட்டங்களை இறுக்கமடையச் செய்யும் தற்போதைய 
              அரசியல் சூழலுக்கு ஆதாரம் தந்துவிடும் அபாயத்தைக் கொண்டிருப்பதாகவும் 
              இதுபற்றிய படைப்புகளைத் தருவதில் மிகவும் அவதானம் தேவை எனவும் 
              காத்திரமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 
              
              இதேபோல் "சுவிஸ் நாசனாலிற்றி எடுத்து, கொஞ்ச காசும் சேர்த்துக் 
              கொண்டுதான் நாட்டுக்குப் போவன்" என்ற தாயாரின் வசனம் மேலே 
              சொல்லப்பட்ட சுவிஸ் அரசியல் சூழலுக்கு ஆதாரம் தரக்கூடிய இன்னொரு 
              அம்சம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சமூகத்தின் இருப்பு 
              சம்பந்தமான அக்கறை ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டும் அதனால் இதைத் 
              தவிர்த்திருக்க வேண்டும் என்ற வாதம் ஒருபுறமும் கலைஞனுக்கு தனது 
              பார்வையை அப்படியே வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது என்ற வாதம் 
              இன்னொரு புறமும் சந்தித்து அமைதியுற்றன. 
              
              சுவிஸ் பிரசாவுரிமை பற்றிய வசனம் இப் படத்தைப் பார்த்த 
              சுவிஸ்காரரிடம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற தனது 
              அவதானத்தை பாலகுமார் சொன்னார். இருந்தாலும் இந்த விடயத்தில் 
              வெளிப்பாட்டுத்தனத்தில் தான் இன்னமும் பொறுப்பாக இருக்கத்தான் 
              வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். உண்மையில் ஒரு ஆவணப் 
              படத்துக்குள்தான் இப் பிரச்சினையின் உள்ளடக்கம் உட்படுத்தப்படக் 
              கூடியது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. படம் தமிழில் 
              உரையாடுகிறபோது டொச் மொழியில் அடிக்குறிப்பில் மொழியாக்கம் 
              செய்யப்படுவதும் டொச் இல் உரையாடுகிறபோது தமிழில் அடிக்குறிப்புமாக 
              சுவிஸ் வாழ்வியலுக்குள் எல்லோருக்குமான படமாக 
              முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
              
              படத்தில் தகப்பன் வேலைத்தலத்தில் குசினிப் பாத்திரங்களுடன் மல்லுக் 
              கட்டுவது, உணவு தயாரிப்பில் உதவிசெய்தல் என இயந்திரமாக சுழல்கிறான். 
              வியர்வையால் நனைகிறான். மூடுண்ட வேலை உலகத்துள் அவனின் அவதி நன்றாகவே 
              படமாக்கப்பட்டிருக்கிறது. வீதியில் அவன் விரைந்து வீடு வருவதுவரை 
              அவனது உழைப்பைக் காட்டிய அளவுக்கு தாயாரின் வேலைத்தல உழைப்போ அல்லது 
              வேலையின் பின்னான இடைவெளியற்ற அவளது சமையல், வீட்டை ஒழுங்குபடுத்தல் 
              போன்ற வேலையையோ தன்னும் காட்சிப் படிமமாக பார்வையாளன் பெறவில்லை. 
              இதன்மூலம் ஆண்நிலையில் நின்றே இப்படமும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் 
              ஒரு பெண்நிலை விமர்சனம் முன்வைக்கப் பட்டது.
              
              இந்த உரையாடலில் பாலகுமார் மிகவும் திருப்திப்பட்டவராகவே சிரித்தபடி 
              இருந்தார். இந்த விமர்சனங்களை முந்தியடித்து தன்னை நியாயப்படுத்தும் 
              நிலையை அவர் எடுக்கவேயில்லை. 
              
              
நேரம் இரவு 8.30 மணியைத் 
              தாண்டிக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை இன்று. மறுநாள் பாடசாலை 
              நாள் என்பதால் இதுவே பிந்தியநேரமாகப் பட்டது பெற்றோருக்கு. வீடு 
              செல்லும் அவசரம் பலரிடமும் தொனித்தது. ஒன்றுகூடலின் இறுதி 
              காட்சிப்படுத்தலாக மட்டும் (அறிமுகம் என்றில்லாமல்) திட்டமிட்டபடி 
              கிச்சான், பிரளயம், மழைநீர் குறும் படங்கள் திரையிடப்பட முடியாது 
              போய்விட்டது. இறுதியாக இரண்டரை நிமிடம் மட்டுமேயான "பிஞ்சுமனம்" 
              திரையிடப்பட்டது. (அஜீவனின் அமெரிக்க உலாவலின்போது அவர் நிகழ்த்திய 
              பயிற்சி வகுப்பில் தீபா ராஜகோபாலினால் எடுக்கப்பட்ட படம் இது). 
              மீண்டும் மண்டபத்துள் வெளிச்சம். மூட்டைகட்டும் மும்முரம். மண்டபம் 
              முன்புபோல் வெறுமையானது. வாங்கிய புத்தகங்கள் டிவிடிக்களுடன் 
              ஆயத்தமானார்கள் எல்லோரும். அங்குமிங்கும் கூடிக் கதைத்து நட்பின் 
              சந்திப்புகளை நிகழ்த்தியபடி கலை இலக்கிய ஒன்றுகூடல் முடிவுற்றது.
              
              ranr@bluewin.ch



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




