எஸ்.பொ.வின் 'யுகமாயினி'!
- சித்தன் --
இலக்கியச்
சொற்பொழிவு, புனைவிலக்கியம், இலக்கிய ஆய்வு, நாடகம், நூல் வெளியீடு என்பவற்றில்
ஏலவே சாதனை படைத்துள்ள பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) தமிழ் இலக்கிய
ஊழியத்தில் புதியதொரு பரிமாணமாக இலக்கிய சஞ்சிகை வெளியிடுவதில் அக்கறை
பதித்துள்ளார். அந்த அக்கறையின் ஜனிப்புத்தான் ""யுகமாயினி'' இம்மாசிகை அக்டோபர்
2007 முதல் தமிழுலகில் தன் பணியைப் பரத்தியுள்ளது. இதன் நிறுவக ஆசிரியர் எஸ்.பொ.
பொறுப்பாசிரியர் சித்தன். பத்துப் பேர் கொண்ட ஆசிரியக் குழுவில் செங்கை ஆழியானும்
ஒருவர். ஆலோசனைக் குழுவில் இந்திரா பார்த்தசாரதி, தர்மகுலசிங்கம், இன்குலாப்,
சிற்பி, வி.கே.டி.பாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
""உலகளாவியதாக விரிந்துள்ள தமிழ்ப் படைப்புகளுக்கு ஒரு பிரசுர களமாக,
புத்தாயிரத்தின் பொற்பங்களை உள்வாங்கி கலை, இலக்கியம் சம்மந்தமாகக் குழு சாராத
ஆரோக்கியமான. நேர்மையான சிந்தனைகளையும், விமர்சனங்களையும், விவாதங்களையும்,
முன்னெடுக்கும் ஒரு நடுத்தர பத்திரிகையாக உலகளாவிய தமிழ்க் கலை இலக்கிய
நிகழ்வுகளின் வரலாறு ஆவணமாக ஒரு பத்திரிகை வெளிவருதல் அவசியமென உணரப்படுகிறது.
கருத்துத் திணிப்பு அல்ல. கருத்துப் பகிர்தல், இலக்கியப் படைப்பின் பரப்பையும்,
சுவைப்பையும் அகலித்தல், அவற்றைத் தமிழ் செய்ய, கற்பனையை வாய்மையாகச் சம்பாவனை
செய்யுமாயின், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
இச்சஞ்சிகையின் இலக்கியத் தடத்தை மேற்கண்டவாறு எஸ்.பொ.விளக்குகிறார்.
பொறுப்பாசிரியர் சித்தன்சிற்றிதழ்கள் எனப் பெயர் தாங்கி வருபவை இலக்கிய
அக்கறைகளைத் துறந்து, இலக்கியம் தொடர்பான அரசியல் நடத்துகின்றனவோ எனத்
தோன்றுகின்றது. தன் நலம், குழு நலமாக வியாபித்ததற்கு அப்பால் என்ன
நடந்திருக்கின்றது என்கிறார். "முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில்
மலரும் சுதந்திரம்' என்ற பதாகையோடு ""யுகமாயினி'' தமிழ் இலக்கிய சேவைக்கு முன்
வந்திருக்கின்றது. காத்திரமான இலக்கியப் பிரக்ஞையோடு தமிழ்ப் பணிக்கு வந்துள்ள
""யுகமாயினியை வரவேற்போமாக. எழுத்து, சரஸ்வதி, சுபமங்களா, கணையாழி, யாத்ரா, அலை
ஆகிய இலக்கியச் சிற்றேடுகள் தமிழ் நவீன இலக்கியத்திற்குப் புதியதோர் முகத்தையும்
ஆத்மாவையும் சித்திக்க உழைத்ததை இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிவர். அத்தடத்தை மேலும்
செழுமைப்படுத்தி விரித்து இன்றைய உலக இலக்கியத்துக்குச் சமமான தளத்துக்குத் தமிழ்
இலக்கியத்தை எடுத்துச் செல்ல ""யுக மாயினி'' சகாயிக்குமென்பதை முதல் இதழ்
(அக்டோபர் 2007) நம்ப வைக்கின்றது.
சிறுகதை, கவிதை, கட்டுரை. நாடகம், குறுநாவல், செவ்வி ஆகிய தமிழ்ச் சஞ்சிகைகளின்
கோலங்களோடு வானொலி நாடகமொன்றும் இவ்விதழில் பதிவாக இருக்கின்றது. மூத்த
எழுத்தாளர்களோடு இளைய தலைமுறையும் ஆக்கப் பங்களிப்புச் செய்துள்ளது.
எழுத்துருக்களில் யதார்த்தம், மண்வாசனை, நலசிந்தனைப் பகிர்வு என்பனவற்றைச்
சுவைக்க முடிகின்றது. குறுகத் தறித்தவைகளான எழுத்துருக்கள் வாழ்வின்
தரிசனத்தையும், புதினங்களையும் வாசகனுக்குத் தருகின்றன ""யுகமாயினி'' இன் 5 வது
(பெப்2008) இதழில் இ.பா. கோவி, லெனின், எட்வின், வி.என்.மதியழகன், ஆகிய பத்து
எழுத்தாளர்களது எழுத்துக்கள் அக்கால, இக்கால இலக்கிய உலகைக் காண வைக்கின்றன.
விருதுகளின் மறுபக்கங்களைக் காட்டுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின்
நிர்வாகத்தின் சூட்சுமத்தை உணர்த்துகின்றன.
திருப்பூர் கிருஷ்ணன் இலக்கிய விசாரத்தில் அணிந்துரைகளும் முன்னுரைகளும் குறித்த
அனுபவப் பார்வையை செலுத்தி இருக்கிறார். விக்னேஸ்வரனின் நீண்ட கட்டுரையை வாசித்த
பொழுது கேள்விகள் பல கிளைத்தன. விவாதிக்க வேண்டியது கம்பனைப் படிக்க வேண்டுமென
நாகூர் ரூமி முன்மொழிந்துள்ளார். அமரர்கள் லா.ச.ரா வல்லிக்கண்ணன் ஆகியோர்
சம்பந்தமான கட்டுரைகள் சிறந்த இலக்கிய ஆவணங்கள், ""எம்மண்ணில்'' எஸ்.எஸ்.துரையின்
வானொலி நாடகம் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்துத் தமிழில் படைக்கப்பட்டிருக்கின்றது.
நல்லதொரு சிறுகதையைப் படித்தது போன்ற சுவையைப் பெற முடிந்தது.
போலந்து குறுநாவலான ""உச்சிவிளக்கு'' கலங்கரை விளக்கு காவலனொருவனின் வாழ்வுக்குள்
வாசகனைப் பயணிக்க வைக்கின்றது. தமிழ் வாசகனுக்கு இது புதியது. கருத்துச்
செறிவுள்ள கவிதைகள், வசன கவிதைகளின் வடிவில் வடிக்கப்பட்டுள்ளன.
""கணையாழி பக்கங்கள் '' பயனுள்ளவை. ஏனைய அம்சங்களும் கொள்ளத்தக்கவையே. ஆக,
ஏறத்தாழ ஆறு தசாப்தங்கள் இலக்கிய வேள்வியிட்டுக் கொண்டிருக்கும், அநுபவசாலி
எஸ்.பொ.வின் சிந்தனையில் மலர்ந்து கொண்டிருக்கும் ""யுக மாயினி'' இதுவரை
வாசிப்பின் இரையாக வணிக சஞ்சிகைகளை நச்சி வரும் இன்றைய தமிழ் வாசகனது சுவையை
மறுமதிப்பீடு செய்ய வைக்குமென்பதில் இரு வேறு பேச்சுக்கு இடமில்லை.
chithankalai@yahoo.co.in |