- அகிலா (சிங்கப்பூர்) -
இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது "கடற்கரைச்சாலைக் கவிமாலை" என்ற அமைப்பு. அதன் சார்பாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து "கவிமாலை இலக்கியக் கணையாழி விருது" சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, வானொலியின் முன்னாள் மூத்த தயாரிப்பாளரும் இலக்கியப் படைப்பாளருமான திரு பி.கிருஷ்ணன், வெண்பாச்சிற்பி இக்குவனம், தொலைக்காட்சி முன்னாள் செய்தி ஆசிரியர்;ஆனந்தவிகடனின் முன்னாள் துணை ஆசிரியர், எழுத்தாளர் ஜே.எம்.சாலி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டு ஜாலான் புசார் சமூகமன்றதின் இந்திய நற்பணிச்செயற்குழுவுடன் இணைந்து, சமூகமன்ற மேலாண்மைக்குழு உறுப்பினரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர்சங்கத்தின் தலைவருமான புதியநிலா சிறப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் தலைமையில் கணையாழி விருதுவிழா நடைபெற்றது. நவம்பர் 26,2006 நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சித்தார்த்தன் எனும் புனைபெயரில் இலகுதமிழில் இனிக்கும் இலக்கணம் எழுதி தமிழக அரசின் விருதைப்பெற்ற தமிழாசிரியர் பா. கேசவன் அவர்களுக்கு "கவிமாலை இலக்கியக் கணையாழி விருது 2006" வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி மாலை சரியாக 7 மணிக்கு கவிஞர் க. முத்துக்குமரன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட தொடங்கியது. நிகழ்ச்சியில் முதல் அங்கமாக சிங்கப்பூர் கவிஞர்,மாதவி இலக்கியமன்றத்தின் தலைவர் மறைந்த மலர்மாணிக்கம் அவர்களுக்கும் தமிழகத்தில் மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் தலைவர் திரு M.ராஜாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தியாவின் சாகித்ய அகாடமியின் தமிழ்மாநிலக்குழுத்தலைவர் ,விமர்சகர், கவிஞர், பேராசிரியர் முனைவர் பாலா கலந்துகொண்டு சிறப்புரையில் "பழமையைத்தொலைத்து தொன்மையை, பண்பாட்டைக் காத்து இலக்கியம் படைக்கவேண்டும்.இலக்கயம் அவரவருடைய அனுபவ மொழியில் அமையட்டும்.யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என வழிகாட்டினார்".அருவிபோல் அமைந்த அவருடைய பேச்சு சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் புதிய அனுபவமாக கவிஞர்களுக்கு அமைந்தது. சுமந்து வந்து நகைச்சுவையை கொட்டாமல் இயல்பாக பேசுகிறபோக்கில் எள்ளல்தன்மையோடு கருத்தை எடுத்துவைப்பதைக்கேட்டு கவிஞர்கள் மகிழ்ந்தார்கள்.எது கவிதை என்பதற்கும் எளியமுறையில் விளக்கம் அளித்தது பயனுடையதாக இருந்தது. கவிஞர்களின் பல கேள்விகளுக்கு நல்ல பதில்களை எளிமையாகக்கூறினார் அடுத்தநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கூட்டத்தில்.
தலித்தியம்,பெண்ணியம் போன்ற கேள்விகளுக்கு பதில்கூறுகையில்" அங்கே அரசியல் இருக்கிறதே ஒழிய இலக்கியம் இல்லை. இலக்கியம் என்றால் அது இலக்கியம் அவ்வளவுதான்.அது இலக்கியமாக விளங்கி கருத்தை விளக்காமல் அரசியல் பேசக்கூடாது.அரசியலைப்பேசி அதை இலக்கியம் என்கிறார்கள். அதுதான் குறை. இலக்கியத்திற்கு அழகியல் அவசியம்.குறிப்பாக கவிதைக்கு அது மிக அவசியம்.அழகியலைத்தொலைத்திவிட்டு கவிதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" வானம்பாடி கவிஞர்களுள் அவரும் ஒருவர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது.
அன்றைய நிகழ்ச்சி புதுமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. கவிஞர் சேவகன் தலைமையில் ஐம்பூதங்கள் பற்றிய கவிமாலை நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக பெண்களே கலந்துகொள்ளும் கவியரங்கம் கவிநிலா மலர்விழி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது." ஏழிசையாய் இனிக்கும் இல்லறம்" என்ற தலைப்பில் கவிஞர்கள் மாதங்கி, இன்பா, கலையரசிகுமார், இராஜேஷ்வரி ராமச்சந்திரன்,சரண்யா சரவணன், ரேணுகா விசுவலிங்கம் ஆகியோர் கவிதைபாடினார்கள். தொடர்ந்து வெண்பாக்கவிஞர் இளங்கோவன் வடிவமைத்து வழங்கிய இசை நாட்டியத்தில் இலக்கியம் இடம்பெற்றது. கவிஞர் இக்பால் எழுதிய மரபுக்கவிதை, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, பாலு மணிமாறன் எழுதிய புதுக்கவிதைகள் ஆகிவவற்றிற்கு நடனம் வடிவமைத்து வழங்கியது நவீனமாக இருந்தது.
கவிஞர்களே நடத்தும் இக்கவிமாலை நிகழ்ச்சி இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் கடைசிச் சனிக்ககிழமை மாலை ஆறுமணிக்கு தொடங்குகிறது.. கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி இதுவரை தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இவர்கள் அருகிலிருக்கும் தீவுகளுக்குக் கவிதைப்பயணம் மூன்றுமுறை சென்று கவிமாலை நடத்தியிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச்சாலையில் கவிராத்திரி நடத்தியிருக்கிறார்கள்.மாதந்தோறும் கவிதைப்போட்டி நடத்தி மூன்று பரிசும் வழங்கிவருகிறார்கள். கவிஞர்களே முன்வந்து பரிசும் வழங்குகிறார்கள்.கவிதைக்காக கவிஞர்களே ஒன்றுகூடி சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சிதான் கவிமாலை நிகழ்ச்சி. உடன்படுசொல்லாக செயல்படுவது கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ.அங்கே கவிதை வளர்கிறது, கவிஞர்களும் வளர்கிறார்கள், தமிழ் வாழ்கிறது.
அனுப்பியவர்: pichinikkaduelango@yahoo.com