| பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு! - ரவி (சுவிஸ்) -
 
   இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் 
  முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு... 
  அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், 
  எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்... முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் 
  நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் 
  கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு 
  ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் 
  காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம்.
 
 நேரம் 11.50. தேவதாஸ் தலைமைதாங்குகிறார். இலங்கையின் சாதிய ஒடுக்குமுறைத் 
  தடங்கள்... அதற்கெதிரான போராட்டம்... ஏன் இந்த மாநாடு? இந்தக் குரல்களின் 
  கூடுகைக்குள் நுழையமுன்னர் சாதியப் போராட்டங்களில் மரணித்துப்போனவர்களுக்கான 
  அஞ்சலி செலுத்தப்பட்டது. சாதிய ஒடுக்குமுறையின் 700, 1000 ஆயிரம் வருட வரலாறு, 
  அதன் தொடர்வு, அதற்கெதிரான சிறுபான்மைத் தமிழர் மகாசபையின், இடதுசாரிகளின் 
  போராட்டங்கள்... பற்றிய அறிமுக உரையுடன் 70 களுக்குள் புகுந்தார் தேவதாஸ். 
  தேசியவிடுதலைப் போராட்டத்தின் முன்னெடுப்புகள் சாதியப் போராட்டங்களை பின்னுக்குத் 
  தள்ளின. பின் கண்டுகொள்ளாமல் விட்டன. இயக்கங்கள் தோன்றின. சாதியப் போராட்டங்கள் 
  ஓய்ந்தன. யுத்தசூழல்
 அவிழ்ந்து அம்மணமாகும்போது அல்லது அமைதியான சூழலில் சாதிப்பாகுபாடு தன் கதவுகளைத் 
  திறந்து வெளியே வரும் அதன் கருத்தியல் அப்படியே பேணப்பட்டு வருவதால். இதுபற்றிய 
  அச்சம்தான் இப்போதிலிருந்தே இதுபற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இலங்கை தலித் சமூக 
  மேம்பாட்டு முன்னணியின் தோற்றத்துக்கு இதுவே காரணம். வடு சஞ்சிகையின் தேவையும் 
  இவ்வழியிலேயே உணரப்பட்டது. இதை இயக்க எதிர்ப்புக்காக என்று
 வியாக்கியானப்படுத்துவதும் அதற்கேற்ப பிரச்சாரத் தகவல்களை அவிழ்த்துவிடுவதற்கும் 
  மறுப்புத் தெரிவித்துத் தொலைக்கவேண்டிய நிலை இந்த தலித் முன்னணிக்கு வருவது 
  ஒன்றும் விசேசமானதல்ல. அப்பிடியொரு ஆய்வுத்தன்மையும் தேடல் உழைப்பும் 
  பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு சமூகத்தவனா நீங்கள்?. அப்படியானால் 
  கவலைப்பட்டுக்கொள்ளுங்கள். கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற 
  கோட்பாடுகள் இப்போ
 குடியில்லாத ஊரிலும் கோயில் இருக்கவேண்டும் என்று வர்ணம் பூசப்பட்டுள்ளன. 
  திருவிழாவுக்கு மட்டும் -விமானயாத்திரை செய்து- கோயிலைத் தூசுதட்டி பக்திச் 
  சான்றிதழோடு திரும்பும் புகலிடத் தமிழர்களையும் ஞாபகப்படுத்தியது தேவதாஸின் உரை.
 
 
  இதையடுத்து தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் 
  போராட்டங்களும் என்ற தலைப்பில் பரா அவர்களும் யோகரட்ணம் அவர்களும் உரையாற்றினர். 
  "யாழ்மேட்டுக்குடியினர் எனக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்ததில் எனக்கு 
  வியப்பில்லை. ஆனாலும் இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைத்ததை கௌரவமாகக் 
  கருதுகிறேன்" என ஒருமுறை இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள இங்கு வந்த டொமினிக் 
  ஜீவா அவர்கள் கூறிய கூற்றோடு தனது உரையைத் தொடங்கினார் பரா. சாதியத்தின் 
  தோற்றத்தை இவர் 2500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச்சென்று தொடங்கினார். 
  புத்தர் இதை ஒழிக்கப் பாடுபட்டார் என்ற தகவல்களிலிருந்து இதை ஊகிக்கலாம். 
  ஆரியர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்த சாதியமைப்புமுறையை 
  உருவாக்கியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையைக் 
  கட்டிக் காக்கவும் இந்தச் சாதியமைப்புமுறை தேவைப்பட்டது. அடிமைகளை வைத்து 
  வேலைவாங்கவும் இது பயன்பட்டது. 
 ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கு சமயம், கலாச்சாரம் என்பவற்றைப் 
  பாவிக்கிறது. சாதியமைப்புமுறையும் இதே வகைப்பட்டதே. எமது யாழ்மையவாதத்துக்கு 
  அடிப்படையாக இருப்பதே சாதியமைப்புமுறைதான். யாழ்மையவாத அரசியல்தான் இலங்கை 
  முழுவதும் வியாபித்து இருக்கிறது என்று சொன்னதன்மூலம் யாழ்மையவாதத்தை ஒரு 
  இலங்கைச் சுனாமியாகக் காட்டினார் பரா அவர்கள். தலையைப் பிய்த்துக்கொண்டது அது. 
  19ம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் மீளக் கட்டியமைத்த இந்த யாழ்மையவாத சிந்தனை முறை 
  ஆதிக்க சிந்தனைமுறையாக இருந்தது. ஐரோப்பியர்கள் எங்கள் நாட்டுக்குள் வரும்போது 
  ஆட்சிசெய்வதற்கு இந்த ஆதிக்க சிந்தனை முறை பயன்பட்டது என்றும் சொன்னார். நல்ல 
  பதவிகளை
 மேட்டுக்குடியினர் பெற்றுக்கொண்டனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது கல்விதான். 
  இதனால் கல்விவாய்ப்பு மற்றைய சமூகங்களுக்குப் போகக்கூடாது என்பதில் 
  மேட்டுக்குடியினர் கவனமாக இருந்தனர் என்றார். ஆறுமுக நாவலரின் சைவமறுமலர்ச்சியின் 
  சூழ்ச்சியைச் சாடிய பரா அவரின்
 பைபிள் தமிழ்மொழிபெயர்ப்புக்கான நோக்கத்திலும் அதைக் கண்டார்.
 
 இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இலங்கையில் வாலிபர் காங்கிரஸ் 
  தோற்றம் பெற்றது. இதன் உந்துசக்தி யோவே போல் அவர்கள் இருந்தார். இவர்தான் ஆரம்பப் 
  போராட்டங்களைத் தொடங்கினார். இதற்கு மேட்டுக்குடியினரின் எதிர்ப்பு வந்தது. 
  முக்கியமாக சேர்.பொன்.இராமநாதன் இதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 
  யாழ்ப்பாணத்துக்கு முதன்முதல் புகையிரதம் விடப்பட்டபோது தலித்துகளுக்கு தனியான 
  பெட்டிகள்
 போடப்படவேண்டும் என மேட்டுக்குடியினர் சொன்னார்கள். டொனமூர் கமிசனின் அரசியல் 
  சீர்திருத்தத்துக்கு அபிப்பிராயம் கேட்கப்பட்டபோது, இந்த மக்களுக்கு வாக்குரிமை 
  அளிக்கக்கூடாது என சொன்னவரும் அவர்தான். யோவே போல் இந்த மக்களின் 
  வாக்குரிமைக்காகக் குரல்கொடுத்தார். மிசனரிகளில் சமஆசனம் 
  நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
   சைவப் பள்ளிகளில் இந்த சமஆசனம் 
  ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்னமும் மோசமாக தரையில் உட்காரவைக்கும் நிலையும்கூட 
  இருந்தது. இதனால் சில பெற்றோர்கள் இருக்கைகள் (வாங்குகள்) செய்துகொடுத்தார்கள். 
  அவைகளும் பின்னுக்குக் கொண்டுபோய்ப் போடப்பட்டு உட்காரவைக்கப்பட்டார்கள். 
  மேட்டுக்குடியினர் சலுகைகளுக்காக கிறிஸ்தவத்தக்கு மாறி அதற்குள்ளும் சாதிமுறைகளை 
  நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். தலித்துகளுக்கான தனிப் பாடசாலைகள் 
  உருவாக்கப்பட்டன. அங்கு ஆசிரியர்கள் நீட்டிநிமிர்ந்து படுத்திருக்க மாணவர்கள் 
  கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் நிலைதான் தொடர்ந்தன. ஆசிரியர் பயிற்சிக் 
  கலாசாலையிலும் தலித்துகள் சேர்க்கப்படவேண்டும் என்று யோவே போல் கோரி வந்தார். 
  1930 இல் இக் கோரிக்கையை அரசு ஏற்றது. 
 இப்படியே நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரை பல தகவல்களையும் தந்தது. நாவலர் ஆகமக் 
  கோவில்களை உருவாக்கி உள்வீதி வெளிவீதி பிரிப்புமுறையை உருவாக்கி தீண்டாமைக்கு 
  சேவகம் செய்ததையும், முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட 
  வாலிபர் காங்கிரஸ் பற்றியும், தீண்டாமை ஒழிப்பினை 60 களில் இடதுசாரிகள் 
  முன்னெடுத்தமை பற்றியும் தொட்டுச் சென்ற பரா சாதியத்தின் வேர்களை
 சுட்டிக்காட்டி தனது உரையை முடித்துக் கொண்டார்.
 
 அடுத்து சிறுவயதிலிருந்தே இந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதில் தன்னை 
  ஈடுபடுத்தியிருந்த யோகரட்ணம் அவர்கள் பேசினார். அறியாப் பருவத்தில் சாதியத்தின் 
  முதல்பொறி தன்னைத் தாக்கியதிலிருந்து தனது அனுபவங்களைச் சொன்னார். அவரது சொல் 
  ஆளுமையும் தொடர்ந்தேச்சியான கோர்வைப்படுத்தலும் ஒரு நாவலை ஓசிப்பதுபோல் இருந்தது. 
  50 களுக்கு முற்பட்ட காலங்களையும் 50க்கும் 70 க்கும் இடைப்பட்ட காலங்களையும் 
  70க்குப் பின்னரான காலப் பகுதிகளையும் வகைப்படுத்தி இந்த உரையை தகவல்களோடு 
  எடுத்துச்சென்றார்.
 
 1926 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஒறேற்றர், யோவே போல் ஆகியோர் 
  இலங்கையில் சுதந்திரத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் போராடினார்கள். காந்தி 
  இலங்கைக்கு வந்தபோது அவர் குதிரை வண்டியை மறுத்து கிராமம் கிராமமாக நடந்து 
  சென்றார். தலித்துகளைச் சந்தித்து உரையாடினார். தெல்லிப்பளையில் வாலிபர் 
  காங்கிரசால் காந்திக்குக் கொடுக்கப்பட இருந்த வரவேற்பு ஏற்பாடுகளெல்லாம் 
  மேட்டுக்குடியினரால் பிய்த்து
 எறியப்பட்டன. இருந்தும் அந்த இழிபாடுகளுக்குள் நின்று காந்தி பேசினார். எம்சி, 
  ஜேக்கப் போன்றோர் காந்தியின்பால் ஈர்க்கப்பட்டனர். ஜேக்கப் பின்னர் ஜேக்கப் 
  காந்தி என அழைக்கப்பட்டார். ஜேக்கப் இன் ஆங்கிலப் புலமை அபாராமானது. வில்லூன்றி 
  மயானத்தில் முதலி சின்னத்தம்பியைச் சுட்டுக்கொன்றபோது ஜேக்கப் அவர்கள் 
  மகாராணிக்கு தந்தி கொடுத்தார். விளைவு அவரைநோக்கி வந்தது. பொலிசாரால் அவர் 
  கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவரது நியாயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 
  விடுவிக்கப்பட்டதோடு பாராட்டவும்பட்டார்.
 
  பண்டாரநாயக்காவின் ஆட்சியின்போது தலித்துகளுக்கு கல்வி தேவை, நிலம் தேவை என்பதை 
  ஏற்றுக்கொண்டார். 19 பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் 
  கலாசாலையிலும் தலித்துகள் சேர வாய்ப்புக் கிடைத்தது. போக்குவரத்து 
  தேசியமயமாக்கப்பட்டது. பாடசாலை தேசிய
 மயமாக்கப்பட்டது. கட்டணமின்றி பாடசாலையில் கற்கலாம் என்ற நிலை வரும்போது அது 
  வறுமைக்கோட்டில் இருந்தவர்களுக்கு வரப்பிரசாதமானது. தலித்துகளுக்கும் சாதகமானது. 
  கல்வியில் மட்டுமல்ல வாகனங்களில் வக்குகளில் இருந்து மட்டும் பயணம் செய்ய 
  அனுமதிக்கப்பட்ட நிலையும் மாறியது. அத்தோடு திருத்துனர், சாரதி என வேலைகளும் 
  படிப்படியாக தலித்துகளையும் வந்தடைந்தன.
 
 லங்கா சமசமாஜக் கட்சி தலித்துகளுக்கான போராட்டத்தை எடுத்தது. தர்மகுலசிங்கம் 
  (ஜெயம்) இதை முன்னெடுத்தார். இவர்தான் வில்லூன்றி மயானத்தில் கொல்லப்பட்ட முதலி 
  சின்னத்தம்பியின் வழக்கில் ஆஜராகியவர். அதற்காகவே இவர் மேட்டுக்குடியினர் சிலரால் 
  உணவில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டவர். 1945 இல் கார்த்திகேசன் தலைமையில் 
  கம்யூனிஸ்ட் கட்சி முளைவிடுகிறது. அவர் மலேசியாவிலிருந்து வந்திருந்தார். அவர் 
  ஒரு
 மார்க்சியவாதி. எம்.சி, நடேசையர், டானியல், ஜீவா போன்றோரும் இணைகின்றனர். யாழ் 
  மாநகர சபையின் முதல்வராக காதர் என்பவரை கார்த்திகேசன் நியமித்தார். சிறுபான்மைத் 
  தழிழர் மகாசபை கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னணியிலே தீண்டாமைக்கு எதிராகப் 
  போராடியது. 1956 இல் சமபோசனப் போராட்டங்கள் பயனளிக்கத் தொடங்கின. 1960 
  காலப்பகுதியில் இந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் பிளவு ஏற்படுகிறது. 
  இதேநேரம்
 கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோட்பாட்டுப் பிளவு (சீனசார்பு, மொஸ்கோசார்பு) 
  ஏற்படுகிறது. சீனசார்புக் கட்சியில் சண், செந்திவேல், கே.ஏ.சுப்பிரமணியம், 
  டானியல்... போன்றோர் இணைகின்றனர்.
 
 1961 ஒக்ரோபர் 21ம் நாள். தலித்துகளின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். 
  'சாதியமைப்புத் தகரட்டும் சமத்துவம் ஓங்கட்டும்' என்ற கோசத்தோடு 2000 போராளிகள் 
  சங்கானையில் ஒன்றுகூடினார்கள். பொலிசாரின் அனுமதி மறுப்பையும் மீறி ஊர்வலம் 
  தொடங்கியது. உரிமை கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்ற ஆதிக்கசக்திகளின் 
  கோலுடன் பொலிசார் அடிதடிகளை நடத்தினர். இரத்தம் தோய்ந்த நிலையிலும் அந்த ஊர்வலம்
 திட்டமிட்டபடி யாழ் முற்றவெளியை வந்தடைந்தது. டானியல் போன்றொர் உரைநிகழ்த்தினர். 
  இதுதான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் விழுந்த முதல் பொலிஸடி. பின்னர் 
  1966 இல் தேநீர்க்கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் என்பவற்றுக்கான போராட்டங்கள் 
  நடந்தன. சின்னக் கார்த்திகேசு என்பவர் தேநீர்க்கடைப் பிரவேசத்தின்போது 
  முதன்முதலில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இப் போராட்டங்களின் போது 
  செல்லக்கிளி என்ற பெண் குண்டுவீசிய துணிச்சலான பெண்ணாவாள். அதேபோல் பொலிசார் 
  துப்பாக்கிச்சூட்டை நடத்தியபோது பொலிஸ் ஒருவனை சுடவிடாதபடி
 கட்டிப்பிடித்து மல்லுக்கட்டிய மகேஸ்வரியை மறக்கமுடியுமா. கிராமம் கிராமமாகப் 
  போராட்டங்கள் தொடர்ந்தபோது பல ஆலயங்கள் விடாப்பிடியான போராட்டத்தினூடு 
  திறக்கப்பட்டன. சில அதிர்ச்சியில் திறந்துகொண்டன. பின்னர் பாராளுமன்றத்தில் இது 
  சம்பந்தமான விவாதங்கள் நடந்தபோது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 
  குரல்கொடுக்காது தமது மேட்டுக்குடிச் சார்பினை வெளிப்படுத்தினர். சிங்களப் 
  பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குகள் சம்பவ இடத்துக்கு வந்து இந்த மக்களுடன் 
  உரையாடினர். நூறு வாலிபர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 5 பௌத்த பாடசாலைகள் 
  உருவாகின. இங்கு சிங்களமும் தமிழும் கற்பிக்கப்பட்டன. தலித்துகள் 
  ஆசிரியர்களானார்கள். செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் சங்கானையை எட்டிப் 
  பார்க்கவேயில்லை. அது ஒரு சின்ன வியட்நாம் யுத்தம் என்றும், சங்கானை ஷங்காயாக 
  மாறியது என்றெல்லாம் கிண்டலடித்தனர். தமிழ் மிதவாத சக்திகள் சுதந்திரக் கட்சியை 
  நிராகரித்து ஐக்கிய தேசியக் கட்சியோடு உறவாடினார்கள்
 
 70 களிலே ஒரு புதிய புரட்சி ஏற்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றில் 
  இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகள் சீவல் தொழிலாளிகளின் 
  வாழ்க்கைத் தரம் வாழ்நிலை மேம்படுகிறது என்று விளக்கிய யோகரட்னத்தின் பேச்சு இந்த 
  இடத்தில் ஒரு ஆய்வுத்தன்மையை எடுத்தது. வெளிநாட்டுப் பொருட்களை நிறுத்தியதால் 
  விவசாயிகள் உற்பத்தியில் ஊக்கம் செலுத்தினர். மதிக்கப்படாமலிருந்த இத் தொழில் 
  மதிக்கப்படும்
 நிலைக்கு வந்தது. படித்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். கொண்டுவரப்பட்ட 
  தவறணை முறையால் சீவல் தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய நேரம் கிடைத்தது. காலை 
  6இலிருந்து 9 மணிக்குள்ளும் மாலை 5இலிருந்து 6 மணிக்குள்ளும் தமது கள்ளை 
  தவறணையில் சேர்ப்பித்துவிட்டு மிகுதி நேரங்களில் விவசாயத் தொழிலில் 
  ஈடுபட்டார்கள். இது அவர்களின் வாழ்நிலையை உயர்த்த சாதகமாக இருந்தது. அதேபோல் 
  சீவல்தொழிலாளிகளின் வீடுகளுக்கு கள் குடிக்கச் செல்லும்  
  மேட்டுக்குடியினரின் தொல்லைகளிலிருந்து அவர்கள் ஓரளவு விடுபடக் கூடியதாகவும் 
  இருந்தது என்றவாறெல்லாம் யோகரட்ணத்தின் பேச்சு கதைகளாகவும் ஆய்வுத்தன்மையுடனும் 
  பிணைந்து நின்றது. ஆதிக்கசாதிகளில் இருந்த பல நல்லெண்ணம் கொண்டவர்களின் 
  தீண்டாமைக்கு எதிரான ஆதரவுகளையும் நினைவுகூர்ந்த அவர் இன்று யாழ் மாநகர
 சபையின் முதல்வராக செல்லன் கந்தையா அவர்கள் வருவதை தடுத்து நிறுத்திய சாதிய 
  மனோபாவத்தினை அதன் வாழும் கருத்தியலினை சாதியப் போராட்டத்தின் தேவைக்குள் 
  நிறுத்திக் காட்டி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
 
 வெள்ளையர்களின் செல்லப்பிள்ளையாக தமிழர்கள் கையாளப்பட்டதும் அதன்மூலம் வளர்ந்த 
  சிங்கள தமிழ் இன வெறுப்புகளும் பெற்றெடுத்த குழந்தையான தனிச் சிங்களச் சட்டம் 
  தேசியஇன ஒடுக்குமுறையின் வடிவம்தான். பின்னர் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் 
  முறையானது
 பிரதேசவாரியாக நடைமுறைப் படுத்தப்பட்டதால் யாழ் மாவட்டத்துள் இருந்த 
  தலித்துகளும்தான் பாதிக்கப்பட்டார்கள். கல்விகற்பதில் அவர்கள் சாதியத் தடைகளைத் 
  தாண்டிக் கொண்டிருந்த காலம் அது என்பதுதான் முக்கியம். இதை மேட்டுக்குடியினரோடு 
  புள்ளிவிபர அடிப்படையில் ஒப்பிடுவது சமூக ஆய்வாக இருக்க முடியாது. ஒருபுறம் 
  அன்றைய அரசு தலித்துகளுக்கு பள்ளிக்கூடம் கட்டினார்கள் ஆசிரியர் பயிற்சிக் 
  கலாசாலையில் இடம்தந்தார்கள்
 என்பதெல்லாம் தலித்துகளின் கல்வி மேம்பாட்டுத் திட்டமாக அவர்களிடம் 
  இருந்திருந்தால் இந்தத் தரப்படுத்தலில் கல்விவசதி மறுக்கப்பட்ட- தலித்துகள் ஏன் 
  கண்டுகொள்ளப்படாமல் விட்டார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அதனால்தான் தலித்தியப் 
  பார்வையில் தரப்படுத்தலை ஒரு இட ஒதுக்கீடு போன்று எடுத்துக்கொள்ள முடியாது. 
  தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு தரப்படுத்தலை ஆயுதமாக்கியது வேறு கதை. அதற்கு 
  தமிழ்த்தேசியவாதிகள் இங்கு நியாயம் தேட முடியாது. தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே 
  தனக்குள் இந்த சாதிய சமூக அமைப்புமுறையை பேணி கல்விரீதியிலும்கூட ஒடுக்கினார்கள் 
  என்ற வகையில் தரப்படுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்க எந்தத் தார்மீக நியாயமும் 
  அவர்களுக்குக் கிடையாது.
 இந்த விடயங்கள் யோகரட்ணத்தின் பார்வைக்குள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 
  தலித்துகளை உள்ளடக்கியிருக்காத தமிழ்த் தேசியத்தின்மீது தலித்தியம் வெறுப்புக் 
  கொள்வது புரிந்துகொள்ளப்பட வேண்டியதுதான். இந்த விருப்புவெறுப்புகள் ஒரு 
  முழுமையான அரசியல் பார்வையை நிராகரித்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
 
 தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற தலைப்புக்குள் விடப்பட்டிருந்த அருந்ததி 
  "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொல்ல வெட்கப்படுகிறேன் என்ற 
  உரைமுகப்புடன் தொடங்கிளார். தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய பொய் என்னவென்றால் 
  சாதி ஒழிந்துவிட்டது என்பதுதான்.
 உலகவரலாறு சமூக கலாச்சார ரீதியல் பாய்ச்சல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 
  தமிழினம் அதே சாதியமைப்பு முறையையும்
 பெண்ணடிமைத்தனத்தையும் தொடர்ந்து பேணுகிற இனமாக இருக்கிறது. அணுகுமுறையில்தான் 
  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சாதியம் வேறுபடுகிறதேயொழிய மற்றபடி 
  ஒரேமாதிரியானதுதான். புகலிடத்தில் சாதி பிள்ளைகள் வளர்ந்து திருமண வயதை 
  அடையும்போது மேல்வருகிறது.
 தலித் என்ற சொற் பாவனை பற்றிய விவாதம் பழசாகிப் போய்விட்டது. உலகத் தொழிலாளர்களே 
  ஒன்றுபடுங்கள் என்பதுபோல் தலித் என்ற சொல்லும் அடையாளச் சொல்லாக பொதுச்சொல்லாக 
  இருக்கிறது.
 
 யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னார் 'புத்தூரில் ஒரு தலித் சமூகத்தைச் 
  சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' 
  என்று என்ற கூற்றை ஒப்புவித்தார் அருந்ததி. இது ஒரு எதிர்மறுப்பு மட்டுமே. ஒரு 
  ஆதிக்க சக்தி ஒடுக்கப்படும் சக்திகளின் கலாச்சார அடையாளங்களை கீழ்நிலைப் 
  படுத்துகிறது அல்லது அந்தக் கலாச்சார அடையாளம் மேல்நிலைக்கு வர உந்துசக்தியாக 
  இருந்துவிடும் என்று கண்டறிந்தால் அந்த அடையாளங்களை அழிக்க முற்படுகிறது. ஒவ்வொரு 
  யுத்தங்களின்போதும்கூட இவ்வாறான கலாச்சார அடையாள அழிப்பு முதன்மை பெற்றே 
  இருக்கிறது. டானியலின் கூற்று இந்த மனோபாவம் இரண்டு சம்பவத்துக்கும் ஒன்றேதான் 
  என்பதை உணர்த்துகிறது. இந்த நூல்நிலையமும் எல்லா சமூகத்தவருக்குமான 
  பொதுப்பயன்பாடு பொதுக் கலாச்சார அடையாளமாக மாற்றப்பட வேண்டும் என்பதே 
  போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்பதை செல்லன் கந்தையாவின் நூலகத் 
  திறப்பிற்கான மறுப்பு காட்டிநிற்கிறது. மற்றபடி நூலகத்தின் அழிவைக்
 கோருவதல்ல இது. அதனால்தான் ஒரு தலித் இந்த நூலகத்தைத் திறக்க மறுத்ததை நாம் 
  வரலாற்றுக் கறையாகப் பதிகிறோம். அதற்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்... என்ற 
  விடயங்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்ற எதிர்மறுப்பின் பின்னால் அருந்ததியால் 
  பின்னுக்குத் தள்ளப்பட்டன. இங்கும் தலித்துகளை உள்வாங்காத குறைபாடுடைய தமிழ்த் 
  தேசியத்தின் மீதான வெறுப்பு தமிழ்த்தேசியத்தின் மீதான வெறுப்பாகப் போய்விடுவதோடு
 மட்டுமல்லாமல் பெருந்தேசிய இனத்தின் இனஅழிப்புக்கொள்கையை பார்க்கவும் மறுக்கிறது.
 
 தொடர்ந்து அருந்ததி கூறும்போது தலித் மக்கள் கொல்லப்படுவதும் முஸ்லிம் மக்கள் 
  வெளியேற்றப்பட்டதும் நீங்காத கறைகள். இதைத் தவிர்ப்பதற்கு தலித் எழுச்சி முஸ்லிம் 
  எழுச்சி தவிர்க்கப்பட முடியாது என்றார். தமிழ்ப் பேரினவாதம் யாழ் மையவாதத்தை 
  அடிப்படையாகக் கொண்டது என்றளவில் அதன் மனோபாவம் தலித்துகளையும் முஸ்லிம்களையும் 
  வெறுத்தொதுக்கும் கருத்தியலினூடாகச் செயற்படுகிறது. இந்தப் புள்ளியில் 
  ஒடுக்கப்படும்
 சக்தி என்ற வகையில் தலித்துகளும் முஸ்லிம்களும் இணைகிறார்கள். இந்த இரு 
  சமூகங்களுக்கும் மேல் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளால் யாழ் லோதிக்க மனோபாவம் 
  செயற்படுகிறது.
 
 தமிழ்க் கலாச்சாரம் என்றால் இந்துக் கலாச்சாரமா? புகலிடத்தில் கோவில் கட்டுதல் 
  பரதநாட்டியம் என்பவையே தமிழ்க் கலாச்சாரமாக வெளிப்படுகிறது என்று சொன்ன அருந்ததி 
  கோவில் கட்டி தெருத்தெருவாக இழுத்துவந்துகொண்டு சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது 
  என்கிறார்கள். கூத்து நாடகம் எல்லாம் அழிக்கப்பட்டு யார்யாரோ எல்லாம் தேசியக் 
  கலைஞர்களாக சிறப்பிக்கப்படுகிறார்கள். உண்மையில் எமது தேசியக் கலைஞன் 
  வி.வி.வைரமுத்துத்தான்
 என்று கூறி முடித்தார் அருந்ததி. தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற 
  தலைப்புக்குள் பேச்சுக்கள் போய் வந்தாலும்கூட சமகால நடைமுறைகள் உதாரணங்கள் அதன் 
  அணுகுமுறைகள் என்பவற்றினூடு போய்வர முடியாத ஆய்வுத்தன்மை காணப்பட்டது. .
 
 அடுத்து பல்வேறு சாதிப் பிரிவுகளைக் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என அழைக்கத் 
  தகுதியற்றவர்கள் என்ற அம்பேத்காரின் கூற்றுடன் ராகவன் தனது உரையைத் தொடர்ந்தார். 
  இது எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டதால் அது எனது குறிப்புள் அடங்கவில்லை. இதை 
  தூ, சத்தியக்கடதாசி
 இணையத் தளங்களுக்குள் பார்க்கலாம். இந்தவித தேடலும் உழைப்புமுறையும் தயாரித்து 
  சமர்ப்பிக்கும் முறையும் அவசியமான ஒன்று. சொல்விரயங்களைத் தவிர்த்தல், விடயங்கள் 
  விடுபடாதிருத்தல், பதிவாக இருத்தல் என்ற அம்சங்கள் இந்த முறையில் 
  கிடைத்துவிடுகிறது. மேடைப்பேச்சுப் போன்ற வடிவங்கள் அல்லது தயாரிப்பில்லாமலே 
  அங்கு குந்தியிருந்து அறிந்ததையெல்லாம் தலைப்பை மறந்து போய்வந்து
 தொல்லைப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். கூட்டத்துக்கு வருபவர்களின் 
  நேரங்களையும் பணங்களையும் சிரமங்களையும் மதித்ததாகவும்கூட அது இருக்கும்.
 
 உழைப்பைச் செலுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரையிலும் நான் மேற்சொன்ன 
  குறைபாடுகள் இருந்ததோடு அவர் தனது ஆய்வு
 முடிவுகளுக்கேற்ப தகவல்களை மின்கம்பத்திலிருந்து பரவும் வெளிச்ச எல்லைக்குள் 
  மட்டும் கண்டுகொண்டாரா என எண்ணத் தோன்றிற்று. தான் அறிய ஆரம்ப காலங்களில் 
  இயக்கங்களுக்குள் தலித் போராளிகள் முக்கிய இடங்களில் இருந்ததில்லை என்ற 
  சொல்லவரும்போது பாரிசில் வசித்து அண்மையில் மரணித்துப்போன புஸ்பராசாவைக்கூட 
  நினைவுக்குக் கொண்டுவர முடியாதவராகினார். இதை மறுதலித்து மேலும் சில உதாரணங்களை
 கோவை நந்தன் போன்றோர் எடுத்துக்காட்டினார். புஸ்பராசாவின் "ஈழப்போராட்டத்தில் 
  எனது சாட்சியம்" என்ற நூலை அவர்கள்தான் பொய்ச் சாட்சியம் என 
  அலட்சியப்படுத்துகிறார்களே என்ற அவரது பதில் இந்த மறுப்புக்கு சரியான பதிலல்ல 
  என்பதை ராகவன் உணராதிருந்தார். மாறாக ராகவனின் இந்த தகவல் பற்றாக்குறை அல்லது 
  தவிர்ப்பு பொய்ச்சாட்சியம் என எழுதியோருக்கு துணைபோகக்கூடியது என்றும்கூடச் 
  சொல்லலாம். மற்றபடி
 அவரது உரை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
 
 இன்று எந்த ஊடகங்களைப் பார்த்தாலும் தமது முடிவுகளுக்கேற்ப தகவல்களைத் 
  திரட்டுவதிலும் அதை ஒப்புவிப்பதிலும் பலரின் ஆய்வுமுறை முடங்கிக் கிடக்கிறதேயொழிய 
  முழுத் தகவல்களைத் திரட்டி அதிலிருந்து முடிவுகளுக்கு வரமுடியாதவர்களாக 
  அவதிப்படுவதை நாம் கேட்கிறோம் காண்கிறோம்.
 
 அடுத்து சர்வதேசப் பார்வையில் சாதியம் என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து 
  வந்திருந்த புதியமாதவி பேசினார். நம்முடைய சரித்திரங்கள் என்றோ யாராலோ 
  மாற்றப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தில் 
  ஊடகங்கள் தருகின்ற தகவல் இலங்கையில் சாதி ஒழிந்துவிட்டது என்பதுதான். ஆனால் 
  உண்மைச் செய்தி வேறாக இருக்கிறதை இங்கு நாம் பார்க்கிறோம். தலித்முரசில் 
  ஜெயசங்கர் அவர்களின்
 செவ்வியை நான் பார்த்தேன். "ஈழத்தில் சாதி ஒழியவில்லை. அது 
  ஒளிந்துகொண்டிருக்கிறது. அகதிகளாக ஓடிஒளியும் இடம் கோவில்களாக இருக்கும்போது 
  மேட்டுக்குடியினர் கர்ப்பக்கிரகத்துள்ளும் அடுத்த ஆதிக்கசாதியினர் 
  கோவிலுக்குள்ளும் இருக்க தலித்துகள் கொட்டடியில்தான் இருப்பார்கள்" என்று 
  சொன்னார்.
 
 1907 இல் பகவத்சிங் பிறந்தார். 2007 இல் அவரது நூற்றாண்டுவிழா. இதுபற்றிய 3 
  படங்கள் வெளிவந்தன. அவர் கடைசியில் தூக்குக் கயிற்றின்முன் நின்று சொன்ன கடைசி 
  ஆசையை எந்தத் திரைப்படமும் சொல்லவில்லை. கொண்டாடியவர்களும் சொல்லவில்லை. 
  பத்திரிகைகளும் சொல்லவில்லை.
 "நான் மேரியின் கையால் உணவருந்த விரும்புகிறேன்". என்கிறார். மேரி மறுக்கிறாள். 
  "மலம் அள்ளியள்ளி சீழ்படிந்த எனது கைகளால் நான் உணவூட்ட மாட்டேன்" என்கிறாள். 
  "உன்போன்றவர்கள் சமூகவிடுதலை அடைய வேண்டும்" என்று சொன்ன அவரது கடைசி வார்த்தைகள் 
  மறைக்கப்பட்டுவிடுகின்றன. வாஞ்சிநாதன் வெள்ளைக்காரத் துரையைச் சுட்டுக்கொன்றான் 
  என்று சொல்கிறார்கள். ஜாதி இந்துக்களின் வீதியால் ஒரு
 தலித் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்துக்காக அழைத்துச்செல்ல அனுமதி கொடுத்ததால்தான் 
  துரை சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி மறைக்கப்படுகிறது. இப்படியே வரலாற்றை 
  நாம் புரட்டிக்கொண்டே போகலாம்.
 
 இந்துமதம் சாதியைக் காப்பாற்றும் மதம் என்பதைக் குறிப்பிட்ட அவர் மற்றைய மதத்தைச் 
  சேர்ந்த மக்களுக்குள் நிலவும் சாதியமைப்புப் பற்றியும் குறிப்பிட்டார். சீக்கிய 
  மத்தில் சாதி இல்லை என்கிறார்கள். அங்கும் இருக்கிறது. அங்கு எல்லாப் 
  பிரிவினருக்கும் மதத்தலைவர் பதவி கொடுக்கப்படுவதில்லை. புத்தமதத்தில் சாதி 
  இருக்கிறது. முஸ்லிம் மதத்தில் சாதி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்திலும் சாதி 
  இருக்கிறது. மதம்மாறி கல்யாணம் செய்தாலும் செய்வார்களேயோழிய சாதி மாறி கல்யாணம் 
  செய்யும் நிலை அங்கும் இல்லை. முஸ்லிம் மக்களுக்குள் சாதி அமைப்புமுறை
 பற்றி வெளிவந்துள்ள ஆய்வொன்றை உதாரணம் காட்டிப் பேசினார் புதியமாதவி. சாதியம் 
  ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம்வரை எப்படி
 செயற்படுகிறது என்பதற்கான சில உதாரணங்களையும் அவர் காட்டினார். சுவாரசியமான 
  அவரின் பேச்சு எல்லோரையும் இழுத்துவைத்திருந்தது. தலித்துகளுக்குள்ளும் 
  சாதிப்பிரிவுகள் இருக்கும்வரை தலித் விடுதலை முழுமையாகச் சாத்தியப்படாது என்ற 
  புதியமாதவியின் கருத்துக்குள் தலித் மாநாட்டின் இருநாள் நகர்வுகளும் 
  உட்புகவேயில்லை என்றே நினைக்கிறேன்.
 
 அடுத்து அசுரா இதே தலைப்புக்குள் அழைக்கப்பட்டார். அவரது கடினமான மொழியாளுகை 
  பற்றிய தலைவரின் அறிமுகத்துடன் உட்புகுந்த அசுரா அதை 
  மெய்ப்பித்துக்கொண்டிருந்தார். சிந்தனைமுறையிலேயே மாற்றத்தைக் கோரி நின்றது அவரது 
  பேச்சு. மக்கட்பிரிவை 3 பிரிவுகளாக அவர் வகுத்தார். முதலாவது வெகுஜன மக்கள். 
  படித்தவர்கள் பாமரர்கள் பட்டதாரிகள் பேராசிரியர்கள்... என ஒரு பிரிவினர். இவர்கள் 
  எல்லா மதத்திலும் சாதி இருக்கிறது என்பார்கள். இவர்களோடு தர்க்க ரீதியில் வாதிட 
  முடியாது. இரண்டாவது பிரிவினர் ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள். மனித வரலாறு, 
  பிரிவினைகள் என்பன பற்றிய ஆய்வுகளை தர்க்கப+ர்வமாகப் பார்க்கிறார்கள். இது 
  செயற்கையானது, இதை மாற்றலாம் என்கிறார்கள். இவர்கள் பார்ப்பனியம் இந்துத்துவம் 
  பற்றியெல்லாம் நன்கு புரிந்து வைத்தே பார்க்கிறார்கள். ஆனால் இதை இரண்டாம் 
  பட்சமாகவே பார்க்கிறார்கள். மூன்றாவது
 பிரிவினர் இந்துத்துவம்தான் இந்த சாதியத்தின் அடிப்படை வேர். இது இயற்கையானது. 
  செயற்கையானது அல்ல என்கிறார்கள்... என்றவாறு அவர் தொடக்கிய இந்தப் பிரிப்பு 
  என்னளவில் முறையாக அணிவகுத்த நிற்பதில் மாறிமாறி இடம் பிடித்ததுபோல் இருந்தது. 
  சாதிகள் தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்தான் என்று அவர் சாதியின் வேர்களை அந்த 
  வேர்களிற்கு முற்பட்ட நிலையிலிருந்தே தொடங்கியது அவரது ஆய்வுத் தன்மையின் கடின 
  உழைப்பை நிரூபித்தது.
 
 பண்பாடு ஒழுக்கம் எல்லாம் இந்துமதப் பண்பாடுதான் என்பதை நாம் காணலாம். ஒரு நாடு 
  வளர்ச்சி பெற்றது என்றால் என்ன? பொருளாதாரம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மட்டும் 
  வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி பெற்ற நாடா? கமூகவளர்ச்சி அடையாதவரை அதை 
  வளர்ச்சிபெற்ற நாடாக
 நாம் கொள்ள முடியாது. பல இன மக்கள் வாழும் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் 
  ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஆனாலும் சமூக மாற்றம் நிகழ்வதற்கான வழிவகைகள் அங்கு 
  பேணப்படுகின்றன. இலங்கை இந்தியாவில் அது இல்லை. சாதியமைப்பு முறையை தொடர்ச்சியாக 
  3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கின்ற சமூகம் ஒரு மனநோய் 
  பிடித்த சமூகம்.
 
 சமூகம் சார்ந்த விடங்களை விமர்சிப்பவர்கள் முதலில் அதே சமூகத்தால்தான் 
  நிராகரிக்கப்படுகிறார்கள். சாதியம் பற்றிய ஆய்வுகள் எம் மத்தியில் ஒரு 
  திறனாய்வுடன் இல்லை. வரலாற்றின் நம்பகத் தன்மை என்ன? புதைபொருள் ஆராய்ச்சியாளர் 
  மொழியியலாளர்கள் ஆகியோரின் ஆதாரங்கள்தான் அதிகபட்ச நம்பிக்கை கொள்ளக்கூடியது 
  என்பார்கள். சிந்துவெளி நாகரிக ஆய்வுகள் அகழ்வாராய்ச்சியினூடாக வெளியாகியது. அந்த 
  மக்களின்
 மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை மொழியியல் ஆய்வால்தான் சாத்தியமாக்க 
  முடியும். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் பிற நாட்டவரின் வருகை அந்தச் 
  சமவெளியினூடு நடைபெறுகிறது. அவர்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு. 
  சிந்துவெளி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் நாடோடிகளாகவே இருந்தார்கள். 
  பிறதேசத்தவர்கள் ஆரியர்கள் பார்ப்பனியர்கள். அப்போதும் சாதியம் இல்லை.
 
 சிந்துவெளி நாகரிகம் மறைந்து 1500 வருடங்களின் பின் இலக்கியங்கள் தோன்றிற்று. 
  நான்கு வேதங்களும் தோன்றிற்று. இயற்கைதான் பிரதான
 தெய்வங்கள். பிரதானமான இனக்குழுத் தலைவன் இந்திரன் கடவுளாக வருகிறான். இலக்கியம் 
  படைத்தவர்கள் சமூகத்தில் முதன்மை இடம்
 பெறுகிறார்கள். இவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். வசிட்டர், 
  விசுவாமித்திரர்... போன்றோரைக் குறிப்பிடலாம். யுத்தத்துக்கான இனம்
 வியாபாரத்துக்கான இனம்... என இனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. யுத்தம் 
  செய்பவர்களுக்கும் சமூகத்தின் ஆதிக்கசக்திகளுக்கும் இடையில் யுத்தங்கள் 
  நடைபெற்றன. கிறிஸ்துவுக்குமுன் 1000 ஆண்டுகளிற்கு முன்தான் சாதியத்திற்கான 
  அடித்தளம் இடப்படுகிறது. வருணாச்சிரம தர்மங்கள் தோன்றுகின்றன. இருக்குவேதத்தில் 
  முதன்முதல் சாதியத்துக்கான அடித்தளம் இடப்படுகிறது... என்று சாதியத்திற்கு 
  முற்பட்ட பிற்பட்ட காலங்களின் எல்லையில் எம்மை கொணர்ந்து நிறுத்தினார்.
 
 சாதியம் என்பது இடையில் வந்தது. அது இயற்கையானதல்ல. செயற்கையானது. எனவே அது 
  மாற்றப்படலாம் என்ற புரிதலைக் கொடுப்பதற்கும் தலித்துகளின் மீது சாதியம் 
  இயல்பானதென கூறும் இந்துமதக் கோட்பாடுகளை, அதன் தத்துவாசிரியர்கள் புத்திஜீவிகள் 
  தடவிவைத்திருக்கும் வஞ்சகத்தனம் மிக்க கருத்தியலை தலித்துகள் முதலில் 
  புரிந்துகொள்வதற்கும் இவ்வாறான ஆய்வுகள் அவசியமானது. அதாவது தலித் இந்த 
  அறியாமையிலிருந்து விடுபட வேண்டியது முக்கியமானது. இந்தவகை முயற்சிகளை கறுப்பின 
  இனப் போராட்டங்களின்போது கறுப்பின புத்திஜீவிகள் மேற்கொண்டனர். இந்தவகையில் 
  அசுராவின் பேச்சு முக்கியத்துவம் உடையது.
 
 அடுத்த நிகழ்ச்சியாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் என்ற தலைப்பு. இத் 
  தலைப்பை ஏற்றுக்கொண்டிருந்த புதுமைலோலன் தான் வரமுடியாததை கடைசி நேரத்தில் 
  அறிவித்திருந்ததால் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் இதை தற்காலிகமாகச் செய்ய 
  ஏற்பாடாகியது. அதனால் அவரிடம் போதிய தயாரிப்புகள் இருக்கவில்லை. இலங்கை இந்தியா 
  புகலிட நாடுகள் என சுழன்று திரியும் அவர் இலக்கியத் துறையில் இருந்த 
  பரிச்சயத்தில் தனது ஞாபத்துள் இருந்தவற்றைத் தொகுத்துத் தந்தார். இலங்கையில் 
  டானியல், டொமினிக் ஜீவா, செ.யோகநாதன், நீர்வை பொன்னையன், செ.கணேசலிங்கள்... 
  போன்றோரின் கதைகள் எல்லாம் 60 களிலேயே இலங்கையில் பேசப்பட்ட கதைகள். சுபத்திரனின் 
  கவிதைகளும்
 அப்போது அவ்வாறான பாதிப்புகளைச் செலுத்தியவை என்றார்.
 
 இத் தலைப்புக்குள் பின்னர் தேவாவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். 
  தலித்திலக்கியம் ஒரு கலகக் குரலாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனியச் 
  சிந்தனையை மறுதலித்து எழுந்தவை அவை. டானியலின் எழுத்துக்கள் இந்தியாவில்; 
  தலித்திலக்கியம் வர முன்னரே வந்தவை. குஜராத், மகாராஷ்ரம் போன்ற இடங்களிலேயே 10 
  ஆண்டுகளுக்கு முன்னர்தான் தலித்திலக்கியம் உருவாகியது. இந்த இலக்கியங்கள் 
  அடக்கியொடுக்கலுக்கு இழிவுபடுத்தலுக்கு கொடுமைப்படுத்தலுக்கு எதிரான 
  கோபங்களாகவும் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதாகவும்கூட இருக்கின்றன. ஊரும் 
  சேரியும்,
 கவர்மென்ட் பிராமணன்... போன்ற இலக்கிய நூல்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் பாமாவின் 
  கருக்கு, சங்கதி, வன்மம்... சிவகாமியின் குறுக்குவெட்டு, பழையன கழிதலும் ... 
  மற்றும் ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், ரவிக்கமாரின் எழுத்துக்கள்... 
  பாப்லோ அறிவுக்குயிலின் கவிதைகள்... என்பவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார் தேவா. 
  பறை போன்ற இசைக் கருவிகளை வைத்து குணசேகரன் நடத்தும் கலைவடிவங்கள் பற்றியும் 
  குறிப்பிட்டார். மற்றும் தலித் முரசு, புதிய கோடங்கி... போன்ற தலித் இதழ்கள், 
  மராத்தியில் வெளிவந்த அந்நியன், தந்தையற்றவன், குலாத்தி,
 பழிக்கப்பட்டவன்... போன்ற நூல்களையும் அவை தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது 
  பற்றியும் ஒரு பட்டியலை அடுக்கிக் கொண்டே போனார்
 தேவா.
 
 தலித் இலக்கியத்தில் தலித்தியம் என்ற தலைப்புக்குள் பரிமாறப்பட்ட தகவல்களாகவே 
  இருவரினது பேச்சும் இருந்தது. முதல்நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது இருந்ததால் 
  ஏற்பட்ட நேரநெருக்குவாரம் காரணமோ தெரியாது. இத் தகவல்களோடு தலித் இலக்கியத்தின் 
  போக்கு அதன் தனித்தன்மைகள் என்றவாறான ஒரு ஆய்வுப் போக்கு -ஓரளவுக்கு 
  பொதுமைப்படுத்தலாக சொல்லப்பட்டதே தவிர- ஆழ்ந்து நோக்கப்படவில்லை அல்லது 
  முன்வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
 
 பிரான்சில் போக்குவரத்து வேலைநிறுத்தம் நகரத்தை தேக்கநிலையில் வைத்திருந்தது. 
  அப+ர்வமாகக் கிடைக்கும் பஸ் ரயில் வசதிகள் அசையமுடியாமல் தவித்த கார் நெரிசல்கள் 
  என்பவற்றினூடு இந்த மாநாட்டுக்கு சுமார் 100 பேர்வரை வந்திருந்தது 
  திருப்திதந்தது. ஐரோப்பிய நாடுகள், இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளிலிருந்தும் 
  வந்து இதில் பங்குகொண்டார்கள். இதை ஒழுங்குசெய்வதில் கடுமையான உழைப்பு
 செலுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சுவர்களில் சாதியக் கறையின் குறும்கதைகள் 
  போஸ்ரர் வடிவில் ஒட்டப்பட்டிருந்தன. புத்தகங்களை வாசிக்கப் பொறுமையற்றோரை 
  இதையாவது... என்றபடி அந்த பத்திகள் அழைத்துக்கொண்டிருந்தன. முதல்நாள் கலைகிறது.
 
 இரண்டாம் நாள் முற்பகல் நிகழ்ச்சியாக கலந்துரையாடல் நிகழ்ச்சி. சில மணி நேரங்களை 
  மெற்றோ நிலையத்தில் வைத்து வேலைநிறுத்தம் எம்மையும் இழுத்துப்பிடித்ததால் நாம் 
  மூவர் தாமதமாக மண்டபத்தை வந்தடைந்தோம். எல்லோர் கருத்துக்கும் சந்தர்ப்பம் 
  அளிக்கவும் அதை ஒழுங்கபடுத்தவும் எக்சில் விஜியிடம் பொறுப்புக் 
  கொடுக்கப்பட்டிருந்தது.
 
 மாநாட்டில் எனது கருத்தாகச் சொல்லியவை இவை... 1960 கள் உலகெங்கும் தேசிய 
  விடுதலைப் போராட்டம், ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டம், நிறவெறிக்கு எதிரான 
  போராட்டம், சாதியப் போராட்டம்... என்பவை நடந்த முக்கியமான காலகட்டம். இதிலிருந்து 
  பல படிப்பினைகள் கிடைத்தன. நிறவெறிக்கெதிரான போராட்டமும் சாதியத்துக்கு எதிரான 
  போராட்டமும் பல புள்ளிகளில் பொருந்திப் போகின்றன. நிறவெறி சமன் சாதியம் என்று 
  கொள்வதல்ல இது. நீக்ரோ, தலித் என்ற சொற்கள் உருவாக்கம், இருவருமே 
  தீண்டத்தகாதவர்களாக அணுகப்பட்டமை, ஆதிக்கசக்திகளின் கருத்தியலை உளவியல் 
  அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருந்தமை போன்றவற்றைக் குறிப்பிட்டேன். கறுப்பின மக்கள் 
  இன்று வந்தடைந்துள்ள நிலை அவர்கள் மிகக் கடுமையாகப் போராடிப் பெற்றவை. இளவயதிலேயே 
  கொலைசெய்யப்படுமளவுக்கு மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் 
  உக்கிரமாப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். இந்த நிலை சாதிப் போராட்டத்தில் 
  எட்டப்படவில்லை.
 
 அடுத்து சாதி மறுப்புத் திருமணம் சாதியை ஒழிப்பதற்கான தீர்வல்ல, ஆனால் சாதியத்தை 
  சிதைக்கும் நடவடிக்கைதான் அது. அதனால் அதை வரவேற்க வேண்டும். 
  தலித்துகளுக்குள்ளும் சாதிப் படிநிலை காணப்படுவதால் பல தலித்திய அமைப்புகளின் 
  உருவாக்கத்திற்கான தேவையும் இருக்கும். இதை யாரும் ஒரே அமைப்பாக குத்தகைக்கு 
  எடுத்துக்கொள்ளும் மனோநிலை இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு, இறுதியாக ஒரு 
  கேள்வியை முன்வைத்தேன். தலித்துகளை உள்ளடக்காத முஸ்லிம்களை உள்ளடக்காத 
  குறைபாடுகளுடன் கூடிய (நிலவிய, நிலவும்) தேசியத்தை தலித்தியம் நிராகரிக்கிறதா 
  அல்லது தேசியத்தையே நிராகரிக்கிறதா என்ற கேள்வியே அது.
 
 ரயாகரன்: சகல சமூக விடுதலையையும் உள்ளடக்கிய விடுதலைதான் தேசியம். 
  சாதிப்பிரச்சினை, பெண்விடுதலை எல்லாவற்றையும் வேலைத்திட்டமாக வைத்துத்தான் 
  இயக்கங்கள் அமைப்புக் கட்டியது. இடதுசாரிக் கருத்துகளை அழித்ததன் விளைவுதான் 
  இன்றைய நிலை. ஜனநாயகத்தைக் கோரியவர்கள் அதை கோட்பாட்டு ரீதியாக ஏற்று இயங்காததன் 
  விளைவுதான் இந்த தலித்திய அமைப்பின் தேவை உருவாகக் காரணம். சாதிப்பிரச்சினை, 
  பெண்விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை விரும்பியவர்கள்தான் 
  இயக்கங்களுக்குள் முதலில் கொல்லப்பட்டார்கள். சமூகவிடுதலைக்கான
 விடுதலையாக நாம் கோரினோம். அந்த மரபை நாம் மறுத்திருக்கிறோம். அதை 
  நினைவுபடுத்தாமல் இந்தப் போராட்டத்தை நடத்தமுடியாது.
 
 பாலகிருஷ்ணன்: சாதியம் இந்துமதத்தோடு பின்னிப் பிணைந்தது. எந்தச் சூத்திரத்தில் 
  இது ஆயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கிறது. மதம் மாறினாலும் அந்தந்த மதங்களுக்குள் 
  இது நீடிக்கிறது. இதனை சுலபமாக நீக்கமுடியாது. ஒவ்வொரு தலித்தும் தன்னை தலித் 
  என்று அறிவிக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
 
 சோமசுந்தரம்: தலித் என்றால் broken person. தலித் மனதில் உள்ள வருத்தம். அதற்கு 
  சிகிச்சை கொடுத்தே ஆகவேண்டும்.
 
 அசோக்: கிழக்கு மாகாணத்திலும் சாதி உள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் 
  இருக்கும் இடங்களில் சாதியம் இருக்கிறது. நிலப்பிரபுத்துவம் வடபகுதியில் 
  இறுக்கமாகக் காணப்பட்டதால் அங்கு சாதியமும் இறுக்கமாகக் காணப்படுகிறது. இதை 
  வைத்துக் கொண்டு கிழக்கின் சாதியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. களுதாவளை 
  என்ற கிராமத்தில் யாழ்ப்பாணத்தைவிட மோசமான சாதியொடுக்குமுறை உள்ளது. களுதாவளையில் 
  1983
 வரை தனிப் பாடசாலை அமைக்கப்பட்டிருந்தது. தொழில்வாய்ப்பு இல்லை. எங்கள் 
  கிராமத்தில் சைக்கிள் ஓடமுடியாது. கோவிலுக்குப் போகமுடியாது. சாதியத்துக்கு 
  எதிராகப் போராடிய அமைப்புகள் எல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. 
  அதிகாரத்தோடு சமரசம் பேசும் சக்திகளாக சிலர் செயற்பட்டதால் இவை தோல்வியில் 
  முடிந்தன.
 
 தலித்தியத்தின் எல்லைக்குள் கிழக்கின் சாதியம் பற்றி புதிய தகவல்களைத் தந்த அவரது 
  பேச்சு திசைமாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிந்தது. தமிழச்சி தொலைபேசியில் 
  மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தலித் முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். 
  பலர் முழித்தனர். இதை அவர் சாதிக்க அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாக 
  நாம் இருக்க வேண்டும் என்ற முடிச்சைப் பாவித்தார் என்றே கொள்ள முடிகிறது.
 
 பொருத்தம் கருதி இங்கு ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. உயிர்நிழல் 
  ஆசிரியர் வீட்டில் ஆவணங்கள் களவாடப்பட்டு -ஒரு வாரமாக
 வெளியில் வராமல் வைத்திருந்ததே ஒருவகையில் ஜனநாயக மறுப்புப் போராட்டத்தினை 
  பலவீனப்படுத்தவல்லது என்ற விடயம் ஒருபுறம் இருக்க- களவுபோனது இலக்கியச் 
  சந்திப்பின் ஆவணங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதும் இதுபற்றி இலக்கியச் சந்திப்பு 
  மௌனமாக இருந்தது. அதன்பிறகும் கூடிக்கலைந்தாயிற்று. ஜனநாயக மறுப்புகளுக்கு 
  எதிராகக் குரல்கொடுக்கும் பிரான்ஸ் நண்பர்கள் வட்டம் மௌனமாக இருந்தது. ஆனால் 
  பெண்கள்சந்திப்பு நோட்டீஸ்விட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த 
  நிலைதான் தலித் முன்னணியிடமும் தமிழச்சியின் விவகாரத்தில்
 எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவகைப் பயன்படுத்தல் எனபதற்கு அப்பால் இதை 
  விளங்கிக்கொள்ள முடியவில்லை.
 
 வெளியே போவதும் வருவதுமாக இருந்த அருந்ததிகூட திடீரென உடனடியாக கண்டனத் தீர்மானம் 
  நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்துள் நுழைந்தபோதும் பலர் முழித்து நின்றனர்.
 
 கீரன்: சிங்கம் வந்து தனது வரலாற்றைச் சொல்லாதவரை வேடனின் வரலாறுதான் வரலாறாக 
  இருக்கும். 2000 ஆண்டுகால வரலாற்றைப் பேசாத நாங்கள் 20 வருட வராற்றைப் 
  பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். கன்பொல்லையில் சாதியப் போராட்டத்தின்போது 
  குண்டுவைத்த போராளியின் சிலை அன்று உடைக்கப்பட்டது. நாம் என்ன செய்தோம்? மற்றது 
  இந்த "தான்" என்ற சொல் இருக்கே... அதுதான் பிரச்சினை. என்று சிரிப்பொலிகளின் 
  நடுவே சிந்திக்கச் செய்தார் கீரன்.
 
 சிவகுருநாதன்: சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள்தான். 
  பேராசிரியர்கள் எவரும் சமூகத்தோடு சேர்ந்து போராட்டங்களில் பங்குபற்றியது 
  கிடையாது . அந்த அடிப்படையில் அமைந்தது அசுரா, ராகவன் அகியோரின் பேச்சு. 
  கற்பனையில் எழுதி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேசியப் பிரச்சினையில் 
  தமிழீழத்துக்காகப் போராடியவர்கள் இராசலிங்கத்துக்கு வீடுவீடாகச் சென்று 
  சாதிக்கெதிராகப் பேசி செயற்பட்டார்கள். அந்த முற்போக்குச் சக்திகள் 
  பின்தள்ளப்பட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி, இனம் என்ற இரு அடிப்படையிலும் 
  ஒடுக்கப்பட்டார்கள். முற்போக்கு
 எண்ணங் கொண்டவர்களோடு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது பங்குபோடுவது அவசியம். 
  தரப்படுத்தலால் யாழ்ப்பாணத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டார்கள். 
  சிறீமா பண்டாரநாயக்காவின் திட்டத்திலல்ல, என்.எம்.பெரேராவின் திட்டத்தினால்தான் 
  பொருளாதாரம் உயர்ந்தது. அதனால்தான் முற்போக்குச் சக்திகளோடு அதிகாரத்தைப் 
  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறேன்.
 
 லக்சுமி: இந்த தலித் மாநாடு தேவையா என்று கேட்பதே நாம் அதற்குள் இல்லை என்ற 
  மனோபாவத்தில்தான். இங்குள்ள இளம் சந்ததியினரிடம் சாதி அழிந்துபோகும் என்று 
  சொல்வது சம்பந்தமாக ஒன்றைச் சொல்கிறேன். நாம் சாதி பற்றிய அறிதலை பிள்ளைகளுக்கு 
  சொல்லவேண்டும். இதன் அநீதியை அவர்கள் கண்டுபிடித்து அதிலிருந்து வெளியே 
  வருவார்கள். மற்றது புஸ்பராசா ஒரு தலித் என்பதற்காக அவரது நூல் ஒதுக்கப்படவில்லை. 
  சாதி ஒடுக்குமுறையை இதற்கெல்லாம் ஒரு "cover" ஆகப் பயன்படுத்த முடியாது என்று 
  -ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்து ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகக்- கூறினார்.
 
 சேனன்: தலித் அமைப்பு ஒரு சமூக நடவடிக்கைதான். ஒருசிலர் மட்டும் கதைச்சுச் 
  செய்வதல்ல. சாதியம் வெவ்வேறு தளங்களில் செயற்படுகிறது... நிறவெறி இன்னும் 
  தீர்ந்துவிடவில்லை. அது வெவ்வேறு வடிவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது... 
  இடதுசாரிகள் தலித் ஒடுக்குமுறைக்காகப் போராடிய வரலாறு பற்றிச் சொல்கிறோம். 
  இடதுசாரிகள் வரட்டுத்தனமான மார்க்சியம் பேசியதால் இதைச் சரியாக எடுத்துச் 
  செல்லவில்லை. மக்கள்
 போராட்டத்தில்தான் இருந்தார்கள். வடக்கில் இடதுசாரிகள் அதை சரியாக முன்னெடுத்துச் 
  செல்வில்லை. இதை வர்க்க வேறுபாடு என்று கதைத்துக் கொண்டு இருந்தார்கள். 
  இடதுசாரியம் சார்ந்ததாக தலித்தியம் இருக்கிறது. இதை எப்படி முன்னெடுத்துச் 
  செல்வது என்பதுதான் முக்கியமான விடயம்.
 
 புதியமாதவி: அரசியல் பொருளாதார விடுதலை சமூகவிடுதலையைக் கொண்டுவர முடியாது. 
  சமூகவிடுதலைதான் அரசியல் பொருளாதார
 விடுதலையைக் கொண்டுவரும். முஸ்லிம்களிடம் சாதி இல்லை என்று சொல்லமுடியாது. 
  இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விகளை எவரும் தவிர்த்துவிட முடியாது. 
  முஸ்லிம்களுக்குள் சாதி பற்றிய ஆய்வின் மீதான எதிரொலிப்பின்போது, இன்குலாப் 
  சொன்னார் "இவனின் தலையை எடுத்துவிடலாம். இவன் எழுப்பியுள்ள கேள்வியை என்ன 
  செய்யப்போகிறீர்கள்" என்று..! சாதிவெறி நிறவெறிக்கு உட்பட்டதுதான் என்று 
  ஐக்கியநாடுகள் சபையின்முன்
 வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
 முஸ்லிம்களிடை சாதி பற்றிய தனது கருத்தைச் சொல்லும்போது பசீர் முஸ்லிம்களிடம் 
  சாதி இல்லை, சீதனம் போன்ற சமூக
 ஒடுக்குமுறையாகத்தான் இதைப் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார். அவர் அந்த 
  வேறுபாடுகளை சாதியென எடுத்துக்கொள்ள முடியாது என்றார். முஸ்லிம் மக்களுக்குள் 
  சாதி பற்றிய ஆய்வை அவர் படித்திருந்ததாகக் குறிப்பிட்டு அதற்குள் போய்வரவில்லை. 
  அப்படியிருக்க அதை மறுதலிக்கும்
 நிலையை அவர் எடுத்தது ஒரு நியாயப்படுத்தலாகவே இருந்தது. இந்துமதம் போன்று 
  முஸ்லிம் மதம் சாதியத்தை ஏற்றுக்கொண்ட மதமல்ல. ஆனால் சமூகம் மத அடிப்படையில் 
  மட்டும் இயங்கும் ஒன்றல்ல. இந்திய இந்து சமூகத்தில் நிலவும் அதன் தாக்கம் 
  முஸ்லிம்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கலாம் என்ற சமூகப் புரிதலாவது அவரின் 
  நியாயப்படுத்தலைத் தடுத்திருக்க வேண்டும். அத்தோடு இன்குலாப் புலிகளை ஆதரிப்பவர். 
  அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லையே என்று ஒரு பொதுப்புத்தி 
  தர்க்கத்தை வைத்தது மலினமான விவாதமாக இருந்தது.
 
 இதன்போது ரயாகரன் குறுக்கிட்டு -முஸ்லிம்களிடை சாதியில்லை என்ற- பசீரின் கருத்தை 
  மறுத்தார். இதுபற்றிய ஆய்வுகளை தன்னால் முன்வைக்க முடியும், அதற்கான தயாரிப்போடு 
  தான் வரவில்லை என்று கூறி, முஸ்லிம் அடிப்படைவாதியாக நீங்கள் பேசுகிறீர்கள் என்ற 
  தனது கருத்தை முன்வைத்தார்.
 
 சோபாசக்தி: யாழில் 109 கோவில்கள் தலித்துகளுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை 
  என்று தொடங்கி இன்னும் சில புள்ளிவிபரங்களைத் தந்தார். கம்யூனிஸ்ட் கட்சி 
  சிறுபான்மைத் தமிழர் மகாசபை ஆகியவற்றின் சாதியப் போராட்டங்களை நினைவுபடுத்திப் 
  பேசிய சோபாசக்தி பெரியார் கூறிய "எமது இனம் சாதி காப்பாற்றும் இனம், எமது மொழி 
  சாதி காப்பாற்றும் மொழி" என்ற மேற்கோளை சொல்ல மறக்கவில்லை.
 
 இந்த சாதியக் கலாச்சாரம் ஒழியும்வரை தமிழருக்கு எந்த விடுதலையும் கிடைக்காது. 
  தலித்துகளின் பிரச்சினையை தலித் அல்லாதவர்கள் புரிந்து கொள்வது மிகக் கடினமானது. 
  கடுமையாக உழைக்க வேண்டும். எங்களால் மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளையே 
  செய்யக்கூடியதாக இருக்கும். கருத்தினை உருவாக்கும் பணியில்தான் இந்த மாநாடு 
  நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் சந்திப்பு தனியாகக் கூடுகிறது. அவர்கள் 
  கூட்டத்துக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை. அது மிகச் சரியானது. அதேபோல் தலித்துகள் 
  மட்டும் கூடும் கூட்டம் பிறிதாக நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட 
  வேண்டும் என்ற வேண்டுகோளையும் விட்டுச் சென்றார் சோபாசக்தி.
 
 இக் கலந்துரையாடலின் தொகுப்பாக தேவதாஸ் சில விடயங்களைச் சொன்னார். தலித் மாநாடு 
  நடத்தவேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு இவ் உரையாடல் தெளிவாக 
  விடையளித்துவிட்டது. தலித்துகள் மட்டும் பிறிதாகக் கூடவேண்டும் என்ற 
  சோபாசக்தியின் கருத்துக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாது. மற்றவர்கள் விட்ட 
  தவறுதான் இங்கு கூடவேண்டியதற்கான காரணம் என்று -ரயாகரனின் கூற்றை- சொன்னார் 
  தேவதாஸ். ஒரு
 போராட்டத்துக்கு அரசியல் அவசியம். அதை நாம் ஆரம்பித்து வைக்கிறோம். அவ்வளவுதான் 
  என்றார். தலித் மக்களுக்காக எடுக்கப்பட்ட போராட்டங்களில் வெற்றிகளும் 
  கிட்டியிருக்கின்றன என்று கூறிய தேவதாஸ் தமிழ்த் தேசியம் எடுக்கப்பட வேண்டிய 
  அவசியம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்பியது இந்தப் புள்ளியில் தெளிவற்ற நிலையை 
  தொடர்ந்து பேணியது.
 
 கலாச்சார ரீதியான போராட்டங்களை எந்த இயக்கமும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் இதை 
  இரண்டாம் பட்சமாகத்தான் பார்த்தார்கள் என்றார். தலித்துகள் சமூகவிடுதலைப் 
  போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதி அல்லது வலிமை உடையவர்களாக இருப்பார்கள்... இந்த 
  சாதியமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பினால் நிச்சயம் இதை 
  அவர்கள் ஆதரிப்பார்கள். கிழக்கில் சாதிப் பிரச்சினை இல்லை என்று நான்
 சொல்லவில்லை. தலித்துகள் இன்னும் முஸ்லிமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். 
  வன்முறையாளர்களுக்கு உதவியாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம் என அசோக்கின் 
  கேள்விக்குப் பதிலளித்தார் தேவதாஸ்.
 
 எனது கேள்விக்கு நேரடியான பதிலை பரா அவர்கள் தவிர யாரும் முன்வைத்ததாகத் 
  தெரியவில்லை. அவர் தலித்துகளை உள்ளடக்காத
 குறைபாடுகளுடன் கூடிய தேசியத்தைத்தான் தான் நிராகரிப்பதாக தனது கருத்தைச் 
  சொல்லியிருந்தார். புதியமாதவி தான் இந்தக் கேள்வியோடு இந்தியா திரும்புகிறேன்... 
  என்று சொல்லிய பின்னரும்கூட இதற்கான பதில் தலித் மேம்பாட்டு முன்னணி சார்பில் 
  வரவேயில்லை.
 
 விவாதங்கள் பல கருத்துகளை கொணர்ந்தது உண்மை. கீறல்விழுந்த றெக்கோர்ட் போல் தேசிய 
  இனப் பிரச்சினைகளில் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் ஒரே ரெக்ஸ்ற் உடன் கேட்டுப் 
  புளித்த விவாதங்கள் போலன்றி புதிய கருத்துக்களாக அவை வெளிவந்ததை அதன் சிறப்பாகச் 
  சொல்ல முடியும். அதை அவ்வாறு அமைத்துக் கொள்வதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் 
  கரிசனையை அவ்வப்போது வெளிப்படுத்தியதையும் நாம் பார்த்தோம்.
 தேவதாஸ் தனது ஆரம்ப தலைமை உரையில் இதை மறுத்ததோடு எந்த இயக்கத்துக்கு சார்பாகவோ 
  எதிராகவோ நாம் இங்கு கூடவில்லை என்றார். தலித்தியத்துக்கு குறுக்காக எந்த 
  சக்திகளாவது வரும்போது அதை எதிர்ப்பது என்பதும், சில சக்திகளை எதிர்ப்பதற்காக 
  தலித்தியத்தைக் கையிலெடுப்பது என்பதும் ஒன்றாகாது. இந்த அடிப்படையில் எளிமையாக 
  கொடுக்கப்பட்ட அவரின் விளக்கத்தை அருந்ததியும் அசுராவும் தத்தமது
 உரையின்போது மறுத்தவிதம் ஒன்றும் புதிய புரிதலைத் தந்துவிடவில்லை.
 
 அடுத்து தலித்துகளின் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் பகத்சிங், பேசினார். 
  தொழில் ரீதியில் சாதிப்பிரிவுகளை உருவாக்கியது தமிழர் தமக்குச் செய்த மிகப்பெரிய 
  துரோகம் என்றார். சாதியை தமிழின எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்கிறாரா என்ற 
  சந்தேகத்தை இது எழுப்பியது. எமது மக்கட் பிரிவினரிலே ஒரு பிரிவினரை சாதிரீதியில் 
  ஒடுக்கிக்கொண்டு எமது நிலம் பறிபோகிறது என்று போராட்டத்தை எடுத்தது தவறெனக் 
  கருதுகிறேன்.
 மொழி அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுப்பது தவறானதெனக் கருதுகிறேன். தமிழர் 
  தமிழரையே தாக்கிக் கொண்டு எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கலாம்... போன்ற 
  தர்க்கங்களை அவர் முன்வைத்தார். பொதுப்புத்தியின் எல்லைக்குள்தான் அவரின் 
  ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் ரீதியில் இதை நியாயப்படுத்தவேயில்லை 
  அவரின் பேச்சு. (அது அவரின் தலைப்புக்கு வெளியே செல்வதும்தான்) தமிழ் என்ற 
  அடிப்படையில் போராட்டத்தை எடுத்தது பிழை என்று சொல்லிவிட்டு தமிழர் தமிழரையே 
  தாக்கினால் எவ்வாறு விடுதலையடையலாம் எனும்போது முதலில் அடையாளத்தை மறுப்பதும் 
  பின்னர் அடையாளத்தை முன்வைப்பதுமாக முரண்நிலையில் அமைந்தது அவரது பேச்சு.
 
 தொழில் ரீதியில் சாதியை வகுத்துவிட்டு இங்கு (புகலிடத்தில்) நாம் அதே தொழிலை 
  செய்ய பின்நிற்பதில்லை. இலங்கைத் தமிழருக்கு பணம் முக்கியம். பொருளாதாரம் 
  முக்கியம். எனவே பொருளாதார ரீதியில் தலித்துகள் மேம்பாடடைய வேண்டும் என்றார். 
  அடுத்து சோமசுந்தரம் அவர்கள் இதே தலைப்புக்குள் பேசினார். திரும்பத் திரும்ப ஒரு 
  பகுதியினரை (யாழ்ப்பாணத்தை) மட்டும் சிந்தித்துக் கதைப்பது தவறானது. ஒதுக்கப்பட்ட 
  இத் தொழில்களுக்குக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். அதிக கூலி கொடுக்கப்பட 
  வேண்டும் என்றார். மிகச் சுருக்கமாக அமைந்த அவரது பேச்சு
 தான் சொல்ல மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்பது என்றில்லாமல் இதை கேள்வி பதில் 
  முறையில் எடுத்துச் செல்லலாம் என்ற தனது
 அபிப்பிராயத்துடன் சுருங்கிப்போய்விட்டது. இந்த முறை செயற்படாமல் போயிற்று.
 
 இவர்கள் இருவரினதும் பேச்சு இத் தலைப்புக்கு போதிய பலம் சேர்க்கவில்லை என்று 
  சொல்லலாம். முக்கியமாக பகத்சிங்கின் பேச்சு தலைப்புக்கு வெளியே போயிருந்தாகச் 
  சொல்லமுடியும். தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டை எவ்வாறு செய்யலாம் அதற்கு 
  குறைந்தபட்சமாக இந்த இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி எந்தெந்த வேலைமுறைகளை 
  முயற்சிக்கலாம் என்ற விடயங்களை அவர்கள் முன்வைப்பார்கள் என்று 
  எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமளித்தது.
 
 தலைமை வகித்த தேவதாஸ் இத் தொழிலை பல்கலைக்கழக மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கு 
  மௌனகுரு போன்றோர் முயன்று வருவதை இங்கு குறிப்பிட்டார். அத்தோடு எதிர்மறுப்புக் 
  குரலாக தலித்துகள் பறையடிக்கக் கூடாது, பனையேறக்கூடாது என்று முன்வைத்த அவர் இத் 
  தொழில்களை அழிக்க வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்தில் 10,000 பனையை 
  நடச்சொல்கிறார்கள். யார் இந்த மரங்களில் ஏறுவது என்று கேள்வியெழுப்பினார்.
 
 அடுத்து இலங்கைத் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் என்ற தலைப்புக்குக் கீழ் 
  ஸ்ராலின் பேசவந்தார். நன்கு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது போன்று அமைந்தது 
  அவரது பேச்சு. தமிழ்த் தேசியத்தின் இனரீதியிலான அணிதிரட்டல் தீண்டாமை ஒழிப்புப் 
  போராட்டங்களை மழுங்கடித்துவிட்டது. இது டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் 
  கொடுக்க மறுத்தது. செல்லன் கந்தையாவை நூல்நிலையத்தைத் திறக்கவிடாமல் தடுத்தது. 
  இந்த நிலையில்
 இலங்கை இனப்பிரச்சினை தீர்வுத் திட்டங்கள் தலித்துகளையும் உள்ளடக்குமா 
  தலித்துகளைச் சென்றடையுமா? கடந்தகால வரலாறே தலித்துகளை தனித்துப் போராட 
  வைக்கிறது. தமிழ்மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் சமூக அதிகாரம் குறிப்பிட்ட 
  சக்திகளிடமே போய்ச் சேரும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழர் என்று சொல்வது 
  கேலிக்கூத்தானது. யாழ்மையவாத அரசியல் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பாதகமான 
  அம்சங்கள்
 (நிலச்சீர்திருத்தம் வாக்குரிமை... போன்றன) பற்றியும் உயர்கல்வியை மறுத்தது 
  என்பதற்காகப் போராடப் புறப்பட்டவர்கள் தமது சமூகத்துள் ஒரு பிரிவினருக்கு ஆரம்பக் 
  கல்வியையே மறுத்தனர் என்ற விடயத்தையும் ஸ்ராலின் கூறிச்சென்றார்.
 
 சில ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். கடந்தகாலத்தில் ஒடுக்குமுறைக்கு 
  உள்ளானவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரச உத்தியோகம், பதவி 
  உயர்வு என்பவற்றில் சிறப்பு ஒதுக்கீடுகள், சாதிமறுப்புத் திருமணங்களை 
  ஊக்குவித்தல்,தொழில்சார்ந்த இழிவுபடுத்தலை அல்லது
 சாதிய மனோபாவத்தை வளர்ப்பதற்கு எதிரான நடைமுறைகள் சட்டங்கள், கல்விசார் துறைகளில் 
  இத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்தல், இத் தொழில்களை பல்கலைக் கழக மட்டம்வரை 
  தொழிற்கல்வியாக கொண்டுசெல்லல், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பறை உடுக்கு போன்ற 
  கருவிகளை பல்கலைக் கழக மட்டம்வரை கொண்டுசெல்லல்... போன்ற ஆலோசனைகளை முன்வைத்தார். 
  அத்தோடு சட்டவாக்க நிதி நிர்வாகத் துறைகளில்
 இடமளிக்கப்பட வேண்டும். தலித்துகளுக்கான தனிப்பிரதிநிதித்துவம், தேர்தல் தொகுதி 
  மீளுருவாக்கம், தலித்துகள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தலித்துகள் மட்டுமே 
  போட்டியிட அனுமதித்தல்... போன்ற ஆலோசனைகளையும் முன்வைத்தார் ஸ்ராலின்.
 
 அடுத்து சிவகுருநாதன் அவர்கள் பேசினார். இவர் கனடாவில் வாழும் சட்டத்தரணி 
  என்பதால் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்குள்
 போய்வரக்கூடியவராகவும் அதேபோல் கனடா அரசியலமைப்புச் சட்டத்துக்குள் 
  போய்வரக்கூடியவராகவும் இருந்தார். உள்ளுராட்சி பாராளுமன்றம் அரசாங்கம் பொலிஸ் 
  இராணுவம் நீதிமன்றம் போன்ற நிர்வாக அலகுகளுக்குள் தலித்துகளுக்கான இடம் பற்றிய 
  அவரது ஆலோசனைகளை முன்வைத்தார். சாதிப்பெயர்களைச் சொல்பவர்களுக்கு தண்டனை அல்லது 
  அபராதம் விதிக்கும் சட்டங்களை -கனடாவில் உள்ள நிறவெறிக்கெதிரான
 சட்டங்களை உதாரணம் காட்டி- அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதேபோல் 
  ஏற்கனவே இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இதுசம்பந்தமாக உள்ள சரத்துகளையும் 
  சுட்டிக்காட்டிய அவர் அவையின் செயற்பாடின்மையையும் குறிப்பிட்டார்.
 
 இங்கு குறுக்கிட்ட புதியமாதவி இங்தியாவில் இதுபோன்ற ஏராளமான சரத்துகள் 
  அரசியலைம்புச் சட்டத்தில் இருக்கின்றன ஆனால் அவை
 தொழிற்படுவதில்லை என்றார்.
 
 தனது உரையின் ஆரம்பத்தில் சிவகுருநாதன் வடக்கு கிழக்கில் பேசப்படும் தமிழ் சேரத் 
  தமிழ் என்றும் உலகில் மற்றைய எல்லா இடமும் பேசப்படும் தமிழ் இந்தியத் தமிழ்தான் 
  என்றும் சொன்னார். யாழ்ப்பாணப் பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரம் என்று எற்கனவே 
  சொல்லப்பட்ட கருத்தை அவர் மறுத்தார். தலித்துகளும் தலித் அல்லாதவர்களுமாக 
  கட்டியெழுப்பப்பட்ட சுயபொருளாதாரமே யாழ்ப்பாணப் பொருளாதாரம் என்றும் சொன்னார்.
 
 - தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படுமானால் மாநில மாகாண அதிகாரங்களைப் 
  பகிர்ந்தளித்தல் என்பது எல்லா சமூகப்
 பெறுமானங்களையும் கொண்டு செயற்படுத்துதல் முக்கியமானது.
 - சகல பொதுவழங்கல்களையும் அனுபவிக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் இருக்க 
  வேண்டும்.
 - அரசாங்க நிர்வாகத் துறைகளில் நியாயமான 
  வேலைவாய்ப்பு பதவியுயர்வு என்பன வழங்கப்பட வேண்டும். - நீதி நிர்வாகத் துறைகளில் மூன்றிலொரு பங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட 
  வேண்டும்.
 - உள்ளுராட்சி பாராளுமன்றங்களில் விகிதாசார அடிப்படை வேண்டும்
 - அவமானப்படுத்திப் பேசுவது ஒதுக்கிவைப்பது என்பன சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். 
  இதற்கான தண்டனைகள் வரைவுசெய்யப்பட வேண்டும். இச்
 சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான கண்காணிப்பு அலகுகள் உருவாக்கப்பட 
  வேண்டும்.
 - பாடசாலைகளில் சாதிப்பாகுபாட்டை அகற்றும் விதத்திலான பாடத்திட்டங்கள் நடைமுறைகள் 
  உருவாக்கப்பட வேண்டும்.
 - அரசியல் சட்டம் பகுதி 2 இல் உரிமைகளும் சுதங்திரங்களும் சேர்க்கப்பட வேண்டும். 
  இதை இந்தியாவில் அம்பேத்கார் நிறைவேற்றினார். தவறு நேர்ந்தது 
  நிர்வாகத்துறையில்தான். இச் சட்டங்களை மேற்பார்வை செய்ய, மீறுபவர்களைத் தண்டிக்க 
  சட்டங்கள் இடப்படவில்லை என்றார் சிவகுருநாதன்.
 
 இவைகள் எல்லாம் சரிவரும்வரை காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியுடன் உடனடியாகச் 
  செய்யப்படக்கூடியவற்றைச் செய்யவும் வேண்டும் என்றார். கனடாவில் இனவெறிக்கு எதிரான 
  சட்டங்களை தமிழர்களும் அனுபவிக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர் பாடசாலையில் 
  சாதிப்பிரச்சினை பற்றி கதைப்பதினை பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளாத மனநிலை வரும்போது 
  அவர்கள் வெளியிலும் இதை மறுதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
 
 அடுத்து சட்டத்தரணியான பசீர் இத் தலைப்புக்குள் உரையாற்றினார். இலங்கை 
  அரசியலமைப்புச் சட்டத்தில் இனம் மொழி சமய சாதி பால் அடிப்படையில் வேறுபாடு 
  காட்டக்கூடாது என இருக்கிறது. எந்த நபருக்கும் கேளிக்கை இடங்கள், பிரார்த்தனை 
  இடங்கள் பொதுவானவை என்றும், அரசியல் அபிப்பிராயங்கள்கூட மதிக்கப்பட வேண்டும் 
  என்றும் இருக்கிறது என சுட்டிக் காட்டினார். இலங்கையில் சமூகங்கள் முழுவதும் 
  வரையறுக்கப்பட வேண்டும். உதாரணமாக வேடர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது 
  அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே வேட்டையாடல் என்றிருக்கும்போது 
  அவர்களின் ஆயுதங்களைத் தடைசெய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார். 
  ~ஜீவனோபாயத்துக்காகத் தொழில்
 செய்பவர்கள்| என்ற மறைமுகச் சொல்லால் வரைவுசெய்யக் கூடாது என்ற கருத்தை 
  முன்வைத்தார். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படக்கூடிய விடயங்கள் 
  பற்றிய அவரின் குறிப்புகள் கவனிக்கற்பாலனவாக இருந்தது. முஸ்லிம்களுக்குள் சாதி 
  அமைப்புமுறை இருக்கிறது என்ற புதியமாதவியின் கருத்தை மீண்டும் மறுத்து தனது உரையை 
  முடித்தார்.
 
 மதமாற்றம் பற்றி ஒன்றை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. இந்து சமயத்தின் 
  சாதியத்துக்கெராக (இஸ்லாம், புத்த சமயத்துக்கு) மதம் மாறுவது என்பது ஒரு 
  எதிர்மறுப்பு நடவடிக்கை. இந்த மதமாற்றம் அவர்களுக்கு உளவியல் ரீதியிலும் 
  பயனளிக்கத்தான் செய்கிறது. அதனால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் இது 
  தலித்துகளின் ஒடுக்குமுறைக்கு கிடைக்கும் தீர்வல்ல. அமெரிக்காவில் கறுப்பின 
  மக்களின் எழுச்சியின்போது கணிசமானளவு கறுப்பினத்தவர் இஸ்லாம் மதத்துக்கு 
  மாறினார்கள். சகோதரத்துவத்தைக் கோரும்; இஸ்லாம் மதம் அவர்களை தூக்கி நிறுத்தியது 
  என்பது உண்மைதான். ஆனாலும் இந்த நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் 
  தீர்வை அவர்கள் எட்டுவதற்கு மல்கம் எக்ஸ் போன்றோர் (முஸ்லிம்) மதத்தையும் தாண்டி 
  சிந்திக்க வேண்டியிருந்தபோது முஸ்லிம் மதவாதிகளே அவருக்கு எதிராகத் திரும்பும் 
  நிலை ஏற்பட்டது. அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோதுகூட "அவருடைய முட்டாள்தனமான போதனையே 
  அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பிவைத்த நல்ல 
  விசயங்களை பைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை." என்று 
  எலிஜா முகமது சொல்லுளவுக்கு இருந்தது. இன்றுவரை இனவாதக் கருத்தியல் அங்கு 
  தொடரத்தான் செய்கிறது என்பதனை அண்மையில் நடந்த ஜேனா-6
 விவகாரம் நிரூபித்திருக்கிறது.
 
 எதிர்பார்த்ததைவிடவும் இத் தலித் மாநாடு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது என்பதை 
  சொல்லித்தான் ஆகவேண்டும். கருத்தினை உருவாக்கும் பணியில் இது ஒரு நல்ல அறிகுறி 
  என்று துணிந்து சொல்லமுடியும்.
 
 குறிப்பு : இயன்றவரை எழுத்துரீதியாக எடுத்துக்கொண்ட குறிப்பின் அடிப்படையில் இத் 
  தொகுப்பு எழுதப்படுகிறது. இங்கு எல்லோருடைய
 கருத்துகளையும் தொகுக்கமுடியவில்லை என்பதால் அந்தக் கருத்துக்கள் வலுவற்றவை என்று 
  அர்த்தமாகிவிடவில்லை. எவருடைய கருத்துகளாவது திரிபடைந்திருந்தால் தயவுசெய்து 
  சுட்டிக்காட்டுங்கள். - ரவி
 
 ranr@bluewin.ch
 |