| கருமையத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்வுகள்! ஒரு 
பார்வை! - பாலா -
 
  நாடகம் பார்க்கப் போவதற்கு முன்பாக அந்த 
மண்டபத்தில் எத்தனை வழிகள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமானது. 
இலகுவாகவும், சாதுரியமாகவும் தப்பிச் செல்வதற்கு இது வசதியாக இருக்கும். 
டொறன்டோவில் நாடகங்கள் பார்த்த அனுபத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இது. 
இந்த நுட்பம் எனக்கு கைவந்த கலையாகிவிட்ட பின்னர், நாடகம் பார்க்கப் போவதற்கு நான் 
பயந்தது கிடையாது. 
 கடந்தவாரம் கருமையத்தின் மூன்றாவது ஆண்டு கலை நிகழ்வுகளை பார்ப்பதற்குச் 
சென்றிருந்தேன். தனா பாபுவின் "இன்னும் எங்கள் காதில்", அதீதாவின் "தாலாட்டு" , 
மற்றும் பெண்கள் பட்டறையின் தயாரிப்பில் " சுயம்", செழியனின் " மொழிப்பாடு", 
சுதர்சன் துரையப்பாவின் "மெய் இழந்த போது!" தர்சன் சிவகுருநாதனின் " பனியில் ஒரு 
நடை" என்று அனைத்து நிகழ்வுகளும் பார்க்கக் கூடியதாக இருந்தன.
 
 தனா பாபுவும், தர்சன் சிவகுருநாதனும் முதன் முதலாக பிரதியாக்கம் செய்து 
நெறியாள்கையையும் செய்துள்ளனர். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று 
தோன்றுகின்றது. குறிப்பாக தர்சன் வித்தியாசமான படைப்புகளைத் தரக்கூடியவராக 
தெரிகின்றார். மாற்றத்திற்கு மாறும் வல்லமையை மனிதர் கொண்டிருந்ததாலேயே மனித 
இருப்பு இன்னும் இவ்வுலகில் நீடிக்கின்றது. ஆனால் மனிதர்களால் உருவாக்கப்படும் 
மாற்றங்களுக்கு ஏற்ப மனிதர்களால் மாறமுடியுமா? இல்லை மனித இனம் அழிந்து போகுமா? 
என்ற கேள்வியை அவரது நாடகம் எழுப்பிச் செல்கின்றது. இந்த நாடகத்தில் பவானியின் 
நடிப்பை குறிப்பிட்டுச் சொல்லலாம். சிறந்த நடிகைக்கான பக்குவம் அவருக்கு வந்து 
கொண்டிருக்கின்றது. தனியாக தானும் நாடக அரங்கேற்றங்கள் செய்கின்ற அவசர ஆசை இவருக்கு 
வராத வரை அவரது நடிப்பில் வளர்ச்சி இருக்கும் என்று நம்பலாம். அவருக்கு 
பாராட்டுக்கள். அவருக்கு சளைக்காமல் பாபு, மற்றும் ஜீவன் இருவரும் நடித்துள்ளனர்.
 
 செழியன் ஏற்கனவே சில நாடகங்களை தந்தவர். தமிழ் மொழி- அது ஆண்களின் மொழி � தமிழ் 
கற்கும் போதே அத்தோடு சேர்ந்து ஆணாதிக்க மொழியையும் கற்கின்றோம் என அழகாக 
சொல்லியிருக்கின்றார். இருப்பினும் தனிநபர் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து 
மேடைஏறிய "மொழிப்பாடு" சற்று நீண்டுவிட்டது என்ற எண்ணத்தையே பார்வையாளருக்கு 
ஏற்படுத்தியது. பிரதியை சற்று சுருக்கியிருந்தால் சலிப்பில்லாமல் நாடகத்தை 
பார்க்கக் கூடியதாக இருந்திருக்கும். அத்தோடு இந்த நாடகத்தில் சபேசன் இன்னமும் 
சிறப்பாக நடிப்பதற்கு இடம் இருக்கின்றது. அவர் இன்னமும் நடித்திருக்கலாம்.
 
 சுதர்சன் துரையப்பா மரபுகளைக் கடந்தவர். அவரோடு 
மாலினியும் இணைந்திருக்கின்றார் என்றால் சொல்லவா வேண்டும்? மெய் இழக்கும் போது 
ஆன்மாவை உலுக்குகின்ற அதிர்ச்சி, மறுப்பு, ஆத்திரம், ஆற்றாமை, அவநம்பிக்கை என்று 
அனைத்து உணர்வுகளையும் மேடையில் கொணர்ந்து நிறுத்திவிட்டார் இவர். 
 சுதர்சன் துரையப்பாவின் " மெய் இழந்த போது" மண்டபம் நிறைந்த கரகோசத்தை 
பெற்றுக்கொண்டது. சபையினர் எழுந்து நின்று இந்த நிகழ்வின் கலைஞர்களை பாராட்டியதை 
குறிப்பிடாமல் விட்டு விட முடியாது.
 
 மண்டபம் நிறைந்த கூட்டம், நல்ல நிகழ்வுகள்� கருமையத்தின் மூன்றாவது ஆண்டு 
நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்ததை விட சிறப்பாகவே இருந்தன. அந்தப் 
பெருமிதமும், மகிழ்சியும் அடுத்த ஆண்டு நிகழ்சியை கோட்டை விடப்போகின்றது. அடுத்த 
ஆண்டில் இன்னமும் கவனமும், சிந்தனையும், உழைப்பும் தேவை.
 
 பாலா
 bala.chanth@gmail.com
 |