| 
  அவுஸ்திரேலியாவில் எட்டாவது எழுத்தாளர்விழா.- கே.எஸ்.சுதாகர் -
 
 
  அவுஸ்திரேலியாவில் 
  2001 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்த எழுத்தாளர்விழா - புலம்பெயர்ந்து 
  வாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் 
  ஒன்றிணைத்து அறிந்ததைப் பகிரவும், அறியாததை அறிந்து கொள்ளவும் தக்க வகையில் 
  ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது. மெல்பர்ண், சிட்னி, கன்பரா என்று வெவ்வேறு 
  பகுதிகளில் நடந்து வரும் இந்த எழுத்தாளர் விழா - இந்தத் தடவை சிட்னியில் - 
  எட்டாவது தடவையாக இந்த மாதம் ( 26 -04 - 2008) இருபத்தாறாம் திகதி சனிக்கிழமை 
  நடக்க இருக்கின்றது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) ஒழுங்கு 
  செய்துள்ள இந்த விழா, சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக் கல்லூரி மண்டபத்தில் காலை 
  10 மணியிலிருந்து ஆரம்பித்து முழுநாளாக நடைபெறுகிறது. அவுஸ்திரேலியாவின் 
  நியூசவுத்வேல்ஸ், விக்ரோரியா, கன்பரா போன்ற இடங்களிலிருந்தும் - அமெரிக்கா, 
  இலண்டன், இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் பல படைப்பாளிகள், கவிஞர்கள், 
  பத்திரிகையாளர்கள் பங்குபற்ற இருக்கின்றார்கள். 
 
     
  கலை இலக்கியம், மாணவர் அரங்கு காலை அமர்விலும், மாலை 
  நூல் வெளியீட்டு விமர்சன அரங்கு - மற்றும் கல்வி, எழுத்து சமூகப் பணிகளைப் 
  பாராட்டி கெளரவித்து விருது வழங்குதல், குறுந்திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகள் 
  இடம்பெறும். நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான 
  திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் 
  சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. 
  கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் 
  நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் 
  ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" 
  என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும். 
 kssutha@optusnet.com.au
 |