- குரு அரவிந்தன் -
இருபத்தி ஆறாம் திகதி, ஆகஸ்ட் மாதம்
ஞாயிற்றுக்கிழமை (26-08-2006) மாலை ஆறுமணியளவில், பிராம்டன், 7575
கென்னடி வீதியில் உள்ள் பவரேட் சென்ரரில் மங்கள விளக்கேற்றலுடன்
மங்களகரமாக நட்சத்திர இரவு ஆரம்பமானது. சமூகத் தொண்டரும்,
பிரபல நடிகருமான கதிர் துரைசிங்கமும், வானொலி அறிவிப்பாளர்
ராம்பிரசாந்தும் இணைந்து விழாவை ஒருங்கிணைத்து மிகவும் சிறப்பாக
நடத்தினார்கள். சுமார் நாற்பத்தி ஐந்து இளம் இசைக் கலைஞர்களும்,
பதினைந்திற்கும் மேற்பட்ட மேடைப் பாடகர்களும் இணைந்து விழாவைச்
சிறப்பித்தனர். பாரதி ஆட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு. எஸ்.
மதிவாசன் ஆரம்ப உரை நிகழ்த்தினார்.
முதலில் தமிழ் வாழ்த்தும் அதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதமும்
நிரோஷினி சிவலிங்கம், அனுஷா சிவலிங்கம் சகோதரிகளால் பாடப்பட்டது. நடன
ஆசிரியை மாலினி பரராஜசிங்கத்தின் நெறிப்படுத்தலுடன் பாரதி ஆட்ஸ்
மாணவிகளின் வரவேற்பு நடனம் சிறப்பாக இடம் பெற்றது. நடன அமைப்பு
மிகவும் சிறப்பாக இருந்ததால் முதல் நடனமே பார்வையாளர்கள் மத்தியில்
ஒருவித உச்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
கனடிய கலைஞர்களை கௌரவிகும் முகமாக இசைக் குழுவில் பங்கு பற்றிய,
சிறிய பெரிய கலைஞர்கள் மேளதாளத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேடையில் நாதஸ்வரக் கலைஞர்கள் ‘நலந்தானா’ என்று நாதஸ்வர இசையால்
பார்வையாளர்களை நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து பாரதி ஆட்ஸ் இளம் கலைஞர்களின் பின்னனி இசையுடன் பாடல்கள்
இடம் பெற்றன. முதலில் ஒன்றே குலம் என்ற பாடலை பாடகர்களான தர்மா,
பிரபா, திரு ஆகியோர் இணைந்து பாடினார்கள். அடுத்து பாரதி படத்தில்
இடம் பெற்ற நிற்பதுவோ நடப்பதுவோ என்ற பாடலை திருவும், அன்பே ஆருயிரே
படத்தில் இடம் பெற்ற மயிலிறகே பாடலை அனுஷாவும் பிரபாவும் சேர்ந்து
பாடினார். ‘மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன்’ மகாஜனா தந்த பாடகர்
தெய்வேந்திரனும், சங்கீதாவும் ரசிகர்களுக்கு காரணம் சொல்லி விளங்க
வைத்தனர். அத்தி அத்திக்காய் புதியபாடலை ராகவனும் அவரது மனைவியார்
டொன் அவர்களும் பாடினர். தொடர்ந்து சரவணா படத்திலிருந்து ஒரு பாடலை
பார்த்தி ராதா பிரபா இணைந்து பாடினர். நாதமென்னும் கோயிலிலே லாசாந்தி
ராஜ்குமாரும், தாஜ்மகால் ஓவியக் காதலை திருவும், நிர்யானியும்
இணைந்து பாடினர். திருப்பதி வந்தால் பாடலை துசியும், ‘பார்த்த முதல்
நாளே’ பாடலை தர்மா, அனுஷாவும் பாடினர்.
இன்றும் பல ரசிகர்களால் வாய்க்குள் முணுமுணுக்கப்படும் ‘செந்தமிழ்
தேன்மொழியாள்’ பாடலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்ரீ முருகன்
இனிமையாகப்பாடி சபையோரின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார். சுந்தரி
கண்ணால் ஒரு சேதியை ராகவனும் டொன் ராகவனும் கண்ணாலே சேதிசொல்லிப்
பாடினார்கள். திடீரென ஒரு மழலைக்குரல்! பூப்பூவாய் பறந்துபோகும்
பட்டாம் பூச்சியை தனது இனிமையான மழலைக்குரலில் அழைத்தார் பாரதி
மதிவாசன்.
தொடர்ந்து இசைக்கலைஞர்களுக்கான பாராட்டுப் பத்திரத்தை, திரு
இலகுப்பிள்ளை இளம் கலைஞர்களைப் பாராட்டி திருமதி பவதாரணி மதிவாசனிடம்
கையளித்தார்.
தொடர்ந்து ஏதோ நினைக்கிறேன் பாடலை பிரபா சங்கீதா பாடினார்கள்;.
மீண்டும் பழைய பாடலான சிங்காரவேலனை அழைத்து சபையோரின் பாராட்டைப்
பெற்றார் அனுஷா சிவலிங்கம் அந்தப் பாடலுக்கு நாதஸ்வரம் இல்லாமல்
கீபோட்டில் வாசித்து பவதாரணிக்கு பெருமை சேர்த்த மாவர்களுடன் தவில்
வாசித்த ரமேசையும் இணையாக தபேலா வாசித்த பிரசாந், யான்சன்
இவர்களையும் பாரட்டாமல் இருக்க முடியாது. நெஞ்சாங்கூட்டில் பிரபா
ராதாவும், சந்தனக் காற்றே திரு, ராதாவும், என்னாச்சு பாடலை துசி
நிர்ஜானியும் பாடினர். சிறந்த சினிமா படப்பிடிபாளரும். நடிகருமான ரவி
அச்சுதன் சொர்க்கமே என்றாலும் பாடல் மூலம் தான் ஒரு சிறந்த பாடகர்
என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.
நந்தலாலா பாடலை பார்த்தீபனும், சமீபத்தில் பிரபலமான வாளைமீன் பாடலை
ராகவனும் பாடி சபையோரை உச்சாகப்படுத்தினர். உன்னை வாழ்த்தி அழகாகப்
பாடினார் இளம் பாடகி வினுஷா ராஜ்குமார்.
மூத்த கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனும், ஈழத்தில் இருந்து வருகைதந்த
அப்சரஸ் ரகுநாதனும் முன்னாள் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு பொ.
கனகசபாபதி அவர்களால் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சில இளம்
கலைஞர்களும், விழா சிறப்பாக நடக்க நிதி உதவியவர்களில் சிலரும்
அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சுட்டும் விழிச் சுடரே
பாடலுக்கு மூன்று மாணவிகள் நடனமாடினர். ஓடும் மேகங்களை அப்சரஸ்
ரகுநாதன் அழைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். விரும்புகிறேன்,
உன்னை விரும்புகிறேன் பாடல் மூலம் அறிமுகமானார் நாடக நடிகரும்,
சட்டத்தரணியுமான திரு. ஜேசுதாசன் அவர்கள். மெல்லிசை பாடல் துறையில்
நல்லதொரு எதிர் காலம் இவருக்காகக் காத்திருக்கிறது. சிறந்த இசை
அமைப்பாளரான கபிலேஸ்வர் சாந்தினி வர்மனுடன் இணைந்து நெஞ்சத்தை
அள்ளிக் கொண்ட தேவதை நீயா பாடல் மூலம் ரசிகர்களின் பாராட்டைப்
பெற்றார். அடுத்து மொன்றியல்பாபு சின்ன மாமியே உன் சின்ன மகள்
எங்கே..? பாடலை மிகவும் அருமையாகப் பாடினார். இறுதியாக ‘அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே…!’ பாடலை எல்லா இசைக் கலைஞர்களும்
இணைந்து பாடினார்கள்.
சுமார் ஐந்து மணி நேரம் எப்படி இந்த இளம் கலைஞர்களின் இசையில்
கரைந்தது என்றே தெரியவில்லை. நல்லதொரு இசை நிகழ்ச்சியை, பல பிரபல இசை
அமைப்பாளர்கள் உருவாக்கிய இசையை ஒன்றாகத் தொகுத்து, ஒரே மேடையில்
தந்ததற்காக திரு. எஸ். மதிவாசன், திருமதி பவதாரணி மதிவாசன்
ஆகியோரையும், இந்த நிகழ்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த
நிகழ்ச்சியில் பங்குபற்றிய இளம் கலைஞர்களின் பெற்றோரையும் கட்டாயம்
மனம்திறந்து பாராட்டவேண்டும். எதிர் வரும் காலங்களில் கனடிய, புலம்
பெயர்ந்த தமிழர்களின் பாடல்களையும், ஈழத்துப் பாடல்களையும் இன்னும்
கொஞ்சம் நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்தால் விழா மேலும் சிறப்புறும்
என்று நம்புகின்றேன். ஈழத் தமிழரின் ஆக்கங்களை நாங்களே முன்
எடுத்துச் சென்று, உலகறியச் செய்யாவிட்டால், எமக்காக வேறுயாரும் முன்
எடுக்கப் போவதில்லை! நட்சத்திர இரவு - 2007 இன்னும் சிறப்பாக அமைய
வேண்டும் என்று நாங்களும் வாழ்த்துவோமாக!
kuruaravinthan@hotmail.com