ஒரு முனை முறிந்த ஓசை
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
காலத்தின் சுழற்சியை
கலைப் புரிதலை
ஆளுமையாக்கியவரே!...
அஞ்சா நெஞ்சினனாய்
அஞ்ஞானத்தை விழுங்கி
கரங்கள் நீண்டு
நட்புகளை அரவணைத்த
ஆசானே!
மூளைத் திசுக்களுக்கு
புத்துணர்வூட்டிய
உயிர்க்காற்றே!... ஏ.ஜே.
கனகரட்னாவே! எம்
இதயக் கிணற்றில்
இன்பமாய் ஊறுகின்றாய்…
வர்ணிக்கவும்
வழிகாட்டவும்
வெம்மையிலும்
குளிர் தரும் நிழலாகி
எம்மிதயங்களில்
குடிகொண்டவரே!
குடியோடும் குலாவியது
எப்படியோ?...
உன் எளிமை…
மாடியையும்
மறைந்த வெளிகளையும்
மாக்ஸியத்தால்
மயக்கியவரே…
புகழ் வெளியை
விலத்தி
புதுப் புது விடயங்களை
புலமைப்படுத்தியவரே…
இன்று
இலக்கியத்திலிருந்து
முனை முறிந்த ஓசை ஒன்று
தமிழ்
உலகமெங்கும் கேட்கிறதே…!
மௌன மோதல்!
- நவஜோதி ஜோகரட்னம் - .
பிரபஞ்ச நிகழ்வுகள்
எல்லாமே
எஞ்சிய
சந்தேகங்களை சுமந்தபடி…
பயனற்ற உணர்வுகள்
பிசகாமல்
படிவங்களாகி
ஊடுருவியபடி…
மௌன இடைவெளிகள்
இயல்பாக நகருகையில்
ஞாபகங்கள்
மர்ம வழிகளில்
மோதுவதும் மறைவதுமாய்
மனிதவாழ்க்கை…
அவசியமற்ற
ஆயிரம்
அற்ப நினைவுகள்
அலுத்து அகலும்போது
அன்று நீ சொன்னதெல்லாம்
உண்மையென நம்பியவை
மின்சாரக் கம்பத்துடன்
மோதி மறைகிறது…
துன்பங்களை வர்ணிக்கும்
ஆத்மாவில்
சிறு துகளொன்றை
இந்த நிமிஷமே
நீ உணரத் தருவேன்
முழு உண்மையை
முற்று முரணாக
அடிக்கடி நீ
மாற்றாமல் இருந்தால்…
நிஜமான ஒரு
நம்பக மனிதனாய்
இதயத் துளிர்களில்
நீ பூத்தால்.........
3.11.2006.