சென்னையில் மீண்டும் நாடோடி மன்னன்!
சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை
மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர்
எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார்.
எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம்
1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம்
கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது.
தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம்
திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில்
நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து
கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல
சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி
மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்'
என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில்
சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக
முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம்.
எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு
ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார்.
எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும்,
வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி
மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக
மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன்
நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ
ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.
சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார்.
நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை
பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம்
வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும்
நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு
சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம்
வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில்
சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது
"நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று
சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில்
சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம்.
உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார்.
நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள்.
அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது
அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும்
என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம்.
எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின்
படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான்
எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய
படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது
பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,''
என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில்
அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க
முடியாது,'' என்றார்.
திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது,
""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல
உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர்
ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான்
சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக
ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன
நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,''
என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது,
""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை
பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும்
வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு
உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி
மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.
நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/
நன்றி: தினமணி.காம்
"காலத்தை வென்றவன்"
-பா.ஜெகதீசன்-
"இந்தப்
படம் வெற்றிப் பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி'-
"நாடோடி மன்னன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள்
இவை!
தமிழக திரையரங்குகளில் படம் வெளியாகி, முதல் காட்சி பார்த்துவிட்டு
வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன
வார்த்தைகள்: "நீங்கள் நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. மன்னாதி
மன்னன்!'. ரசிகர்களின் வாக்கு பொய்க்கவில்லை. "நாடோடி மன்னன்' படம்,
வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று,
"வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை
எல்லாம் உன்னைச் சேரும்' என்று, ரசிகனை நோக்கி எம்.ஜி.ஆரைப் பாட
வைத்தது.
நாடோடி மன்னன் படம் வெளியாகி 50
ஆண்டுகளாகிற இன்றைய நிலையிலும் அந்தப் பாட்டின் வெற்றிச் சப்தம்
மட்டும் இன்னும் ஓயவே இல்லை. இப்போதும் நாடோடி மன்னன் தமிழகம்
முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி சூப்பர்
டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே ஹவுஸ்புஃல்லாகி
பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர்.
வசூலிலும் இப்போது வெளிவந்துள்ள புதிய படங்களைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போது போலவே 50
ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த
படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான்.
ஒரு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம்!
"தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக' எனச் சொல்கிற
சிறப்பு நாடோடி மன்னன் படத்துக்கு வசூலில் மட்டும் அல்ல. பலவற்றிலும்
உண்டு.
எம்.ஜி.ஆர். தயாரித்த முதல் சொந்த படம். எம்.ஜி.ஆர். இரட்டை
வேடங்களில் நடித்த முதல் படம். எம்.ஜி.ஆர். இயக்கிய முதல் படம்.
தமிழில் வெளியான முதல் "பகுதி வண்ணப் படம் (பார்ட்லி கலர்)'. சரோஜா
தேவி கதாநாயகியாக அறிமுகம்... என பல "முதல்... முதல்'களின்
சிறப்புகள் வெளிப்பட்ட படம் இது. பிரம்மாண்டமான செட்டுகள்,
கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக்
காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள்,
"தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல
சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புகளுடைய
நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசாகி ஓடும் வண்ணாரப்பேட்டை பாரத்
திரையரங்கிற்குப் போனோம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படம் வெளியாகி இருப்பதுபோல திரையரங்கே
விழாக்கோலமாய் இருந்தது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுவது போன்ற
போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களுக்கும்
குறைவில்லை. சேரில் கூட்டம் நிறைந்து பலர் தரையில்
உட்கார்ந்திருக்கின்றனர். புதுப் படத்தைப் பார்க்கப் போவதைபோல
பரபரப்பாய் இருக்கிறது கூட்டம். "படத்தைப் போடு படத்தை போடு' என
உக்கிரக் கோஷம். படம் போடப்படுகிறது!
திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள
சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள்
கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக்
கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின்
முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட
அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:
"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான்
மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'
"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான்
உண்டு'
ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு
எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.
தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக்
காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.
கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை
சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த
வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும்,
பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு
இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று
பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு
எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள்.
அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு
உயிர்போய் உயிர் வருகிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை
உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல்
வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான
நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:
""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன்.
படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான
அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால்,
அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை
பார்த்திருக்கிறேன்.
உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று
படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த
பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க
முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு
வந்தேன்.
தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு
டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி
பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.
நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர்
பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற
"தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல
"தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப்
பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.
எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் பற்றி பேசுறப்ப எனக்கொரு ஆதங்கம் எப்போதும்
உண்டு. தலைவர் என்னை கூப்பிட்டு எம்.ஜி.ஆர். பிச்சர்ஸ் எடுக்கிற
அடுத்த படத்துல நடிக்கிறியான்னு கேட்டார். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு
யாரும் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸில நடித்ததில்லை. எனக்கு அந்த வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் அது கைகூடாமலே போய்விட்டது. அதுக்குள்ள தலைவர்
நம்மைவிட்டுப் போய்விட்டார். அதுக்குப் பிறகு படம் எடுக்கப்படவில்லை.
நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால்
ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.''
என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல
எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர்
பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'
நன்றி: தினமணி.காம்
http://www.dinamani.com/