இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006 இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
நான் நேரில் காணாத ஏ.ஜே.கனகரட்னா!

-
நடராஜா முரளிதரன்-

அண்மையில் மறைந்த ஏ.ஜே.கனகரட்னாசென்னையிலிருந்து இணைய மடல் மூலம் வ.கீதா “ஏ.ஜே.கனகரட்ணா கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்” என்ற சேதியை அறிவித்தபோதுதான் அந்தத் துயரச் செய்தி எனது காதைக் கவ்விக் கொண்டது. இது வரைக்கும் நான் அந்த “ஆபூர்வ மனிதரை” நேரில் சந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் கண் காணாத அந்த மனிதரின் இழப்பு ஏன் என்னுள் இவ்வளவு துடிப்பை, சலனத்தை நிகழ்த்தி நிற்கிறது என்பதற்கான விடையை நான் எழுதும் இந்த வரிகளுக்கூடாகப் பெற்றுவிட முடியுமா? ஏன்பதையும் என்னால் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அந்த எல்லைகளையும் தாண்டி அவர் மீதான எனது நேசிப்பு விரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாக அமையும்.

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது 1972 இல் முதல் தடவையாக அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரையொன்றினை “மல்லிகை” சிற்றிதழில் வாசித்த ஞாபகம். 1987 களில் நான் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த வேளைகளில் அவர் குறித்து தமி;ழ் நாட்டின் மிகப்பெரும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி;.ராஜதுரை அவர்களும், பத்திரிகையாளரான ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் நிறையவே என்னிடம் பேசியிருந்தார்கள். அப்படியொரு சமயத்தில்தான் பன்னீர்செல்வம் அவரது “மார்க்சீயமும் இலக்கியமும் - சில நோக்குகள்” (அலை வெளியீடு) என்ற தொகுப்பு நூலை எனக்கு வாசிக்கத் தந்திருந்தார். அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்வதாகவே நான் எண்ணுகின்றேன். இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன் அப் புத்தகத்தையும், “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழையும் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருந்தேன். “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழில் எஸ்.வி;.ராஜதுரை அவர்கள் “கலாச்சாரக் கமிசார்களின் ரசனைகளுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதே வேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக்களத்தில் பண்பாட்டுச் செயற்பாடுகளை ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதர்” என ஏ.ஜேயை விதந்துரைத்துள்ளார்.

அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் சக்திகள், அதிகாரத்தை ஏற்கனவே கைப்பற்றியவர்கள் என எல்லோருமே கலை, இலக்கிய வடிவங்களைத் தாங்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு அமைய உற்பத்தி செய்யுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தோ, கோசங்களை எழுப்பியோ வரும் வேளைகளில் அது குறித்த விசாரணைகளைத் விரிந்த தேடற் பரப்பில் ஆழ்ந்து நோக்கிய புலமை கொண்ட மனிதராகவே நான் ஏ.ஜே அவர்களைக் காணவிழைகின்றேன். ஏ.ஜே அவர்கள் தனது “மார்க்சீயமும் இலக்கியமும்” என்ற கட்டுரையொன்றிலே பின்வருமாறு கூறுகின்றார். “ஏனைய கலைஞர்களைப் போன்று, எழுத்தாளர்களும் தமது கற்பனையென்னும் ஆழியில் முத்துக் குளித்து வெளிக் கொணர்பவைதான் உன்னத படைப்புக்கள் என ஒரு சாரார் கருதி வருகின்றனர். இவர்களுடைய கொள்கைப்படி கலைஞர் புற உலகத்தை மறந்து அக உலகத்தில் இரண்டறக் கலந்து நிற்பவர்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் கலைஞர்கள் சூனியத்தில் வாழ்பவர்கள். இவ் வாதத்தினை மார்க்சீயம் ஏற்றுக் கொள்ளாது. சமுதாய ஒழுங்கு முறைகளுக்கிடையே ஏற்படும் தொடர்புகளின் விளைவாகவே அரசியல், சட்டம், சமயம், தத்துவம், கலை, இலக்கியம் போன்றவை தோன்றுகின்றன. உற்பத்தி முறைகள் அடித்தளம் என்றால் மேலே குறிப்பிட்ட கலை, இலக்கியம் போன்றவை மேற் கட்டுமானம். அடித்தளத்திற்கும், மேற் கட்டுமானத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை வரையறுப்பது அவ்வளவு எளிதன்று. அடித்தளம் எவ்வாறு மேற்கட்டுமானத்தைப் பாதிக்கின்றதோ அதே போன்று மேற்கட்டுமானமும் அடித்தளத்தைப் பாதிக்கின்றது. ஆதலால் பொருளாதார அடிப்படைகளும், கலை - இலக்கியம் போன்றவற்றிற்கும் இடையில் உள்ள தொடர்புகள் மிகச் சிக்கலானவை.” இவற்றின் வழியே நெடுங்காலமாக அரசியல், இலக்கியத் துறைகளுள் இடது சாரிச் சித்தாந்தங்கள் கொச்சைப்படுத்தப்பட்டும், வழிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான அவலங்களைத் தமிழ்ச் சூழலுக்குப் புரிய வைப்பதில் ஏ.ஜே.கனகரட்ணா 1966களிலிருந்தே பெரிதும் முயன்று வந்துள்ளார்.

உலகின் உன்னதங்கள் என்று கருதப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளை ஏ.ஜே தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான் மார்க்சீயக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடுதல் வேண்டுமென ரொட்ஸ்கி “இலக்கியமும் புரட்சியும்” என்ற நூலில் குறிப்பிட்டதையும் ஏ.ஜே.கனகரட்ணா தனது கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இலக்கியத்தினை உரிய முறையில் புரியாத எவரும் கோட்பாட்டு அளவுகோல்களை ஏந்துவது விபரீதத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். கட்சி, கலை, இலக்கியம் என எந்த வட்டங்களுக்குள்ளும் அகப்படாதவர். அவருள் அடங்க மறுத்த அறிவுப் பசியை மற்றவர்கள் ஒப்புதல் பெறாமலே அவரிடமிருந்து அள்ளிச் செல்ல அனுமதி அளித்தவர். கற்றுத் தெளிதலும், கற்றுக் கொடுத்தலும், உரையாடல்களுக்கூடாக ஊட்டம் அளித்தலும் அதற்கும் அப்பால் எண்ணிறைந்த இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் பின்னணி முன்னாணாகத் திகழந்தவர் ஏ.ஜே அவர்கள்.

ஏ.ஜே அவர்களை பிரபலமான சிங்களப் புத்திஜீவியும், எழுத்தாளருமான ரெஜி சிறிவர்த்தனா முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொழும்புக்கு குடிபெயர்ந்து வருமாறு அழைப்பு விடுத்தபோது தான் “சேற்றில் அழுந்திய தடி” மாதிரி இருப்பதாகவும், தன்னைக் கொழும்பில் “மறுநடவு” செய்யத் தனக்கு விருப்பம் இல்லையெனவும் பதிலளித்திருந்தார். மேலும் ரெஜி கூறுகிறார். “உலகக் குடிமகனுக்குரிய கலாச்சாரமும், சர்வதேசப் பிரக்ஞையும் உடைய புத்திஜீவியான ஏ.ஜே யாழ்ப்பாண மண்ணிலும், அதன் வாழ்விலும் அனுபவத்திலும், மொழியிலும் வேரூன்றி உள்ளார் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தை அதன் சோதனைக் காலத்தில் விட்டு வருவதை ஒரு துரோகச் செயல் என்று அவர் கருதி இருக்கலாம்.” இலக்கியத்தைக் காதலித்தவர் என்று கருதப்படும் ஏ.ஜே தனி மனித வாழ்வில் கட்டைப் பிரமச்சாரி. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்ற அவரின் தனிப் பெருந்துறையாக ஆங்கில இலக்கியம் விளங்கியது. “டெய்லி நியுஸ்”, “கோப்பிறேற்றர்”, “சற்றடே றிவ்வியு”, திசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர், துணை ஆசிரியர் பொறுப்புக்களில் பணியாற்றிய சிறந்த பத்திரிகையாளரும் கூட. பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் பார்வையில் “ஏ.ஜேதான் யாழ்ப்பாண வாழ்வின் சிக்கல்களை எனக்குப் புரிய உதவியவர். யாழ்ப்பாணத்தை ஆண்ட துப்பாக்கி ஏந்திய பலர் வைத்த அடிப்படைச் சட்டங்களை, முடிச்சவிழ்த்தற்குரிய இன்றியமையாத தடயங்களைத் தந்தவர்.யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் துயரங்கள் கூட மற்றவர்கள் தொலைவிலிருந்து காட்டிய மாதிரியிலிருந்து ஏ.ஜேயின் மாதிரி மிக வித்தியாசமானது. மண்ணை விட்டுப் பிரிய மறுத்த அந்த மகத்தான “மண்ணின் மைந்தன்” தான் துறை போகக் கற்றறிந்த உலக இலக்கியங்களுக்கூடாகவும், தனது வாழ்வின் ஊடாகவும் எமக்கு விட்டுச் சென்ற சேதிகளை எப்போது நாம் மறு வாசிப்புக்கு உள்ளாக்குவோம்.

nmuralitharan@hotmail.com
http://nmuralitharan.blogspot.com/
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner