- அ.முத்துலிங்கம் -
[கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு மையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்க சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும், ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினி பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும், கணிதமிழ் படும் இன்னல்களையும், கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது.
தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித தாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும் தொலைத்து தம் நேரத்தையும் செலவழித்து, மனைவி மக்களுடைய வெறுப்பையும் சம்பாதித்து, தமிழை கணினியில் ஏற்ற பாடுபட்ட அத்தனை தமிழ் உள்ளங்களையும் இந்தக் கட்டுரை மூலம் நான் நினைத்துக்கொள்கிறேன்.
பிரதானமாக, தம் பிறந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்த நாட்டை பறிகொடுத்து உலகம் எங்கும் சிதறிப்போயிருந்தாலும், கம்புயூட்டர் வலைகளில் தனி வேசத்தோடு தமிழை தவழவிடுவதன் மூலம் தாம் இழந்த ஒரு நாட்டை மீண்டும் கண்டுபிடித்து அதில் மகிழ்ச்சி காணும் ஈழத்து தமிழர்களை மறக்கமுடியாது.]
1993 ஆம் ஆண்டு பொஸ்டனில் ஓர் இலங்கையரைச் சந்தித்தேன். அவர் தமிழ் செயலி ஒன்று தயாரித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தேடிப் போனேன். தமிழை எப்படியும் கணினியில் பார்க்கவேண்டும் என்ற அவா எனக்கு. அவர் வீட்டுக்குப் போய் காசு கொடுத்து அந்த செயலியை வாங்கினேன். அவர் பணம் வாங்க மறுத்தாலும், ஒருத்தருடைய உழைப்புக்கு கொடுக்கவேண்டிய மரியாதை என்று சொல்லி வற்புறுத்தி கொடுத்தேன். அவர் என்னை தன் அறைக்குள் அழைத்துச் சென்று தன்னுடைய கம்புயூட்டரில் ஒரு விசயம் காட்டினார். அவர் ஒரு தமிழ் அகராதி தயாரித்துக் கொண்டிருந்தார். வார்த்தை, அதற்கு பொருள், மேற்கோள் வசனங்கள், அந்த வார்த்தையுடன் தொடர்பான வேறு வார்த்தைகள், அதற்கு நிகரான ங்கில வார்த்தை, இப்படி பெரும் வேலை அங்கே நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு விசேஷமும் இருந்தது. ஒரு பட்டனை அமுக்கினால் அந்த வார்த்தையின் தமிழ் உச்சரிப்பு ஒலித்தது. எனக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்.
அமெரிக்காவில் நல்ல சம்பளம் பெறும் அதிகாரி அவர். எதற்காக தன் நேரத்தை விரயம்செய்து, தனியாக இந்த பிரம்மாண்டமான வேலையில் இறங்கியிருக்கிறார். ஒரு நாளைக்கு தான் எப்படியும் இருபது வார்த்தைகள் செய்வதாகச் சொன்னார். அகராதியின் உபயோகம் முற்றிலும் கணினியிலேயே இருக்கும்; சொல் திருத்தியாகவும் பயன்படுத்தலாம் என்றார் அடக்கமாக. சிலமாதங்கள் கழித்து அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அவுஸ்திரேலியா போய்விட்டதாகச் சொன்னார்கள். அத்துடன்அவருடைய தொடர்பும் எனக்கு துண்டித்துப்போனது. அப்போது ஆங்கில அகராதியை முதன்முதல் படைத்த சாமுவேல் ஜோன்ஸனின் ஞாபகம்தான் எனக்கு வந்தது. சேக்ஸ்பியருக்கு அடுத்தபடி ங்கில இலக்கியத்தில் அடிபடும் பெயர் இவருடையதுதான். தனி ஆளாக எட்டு வருடங்கள் பாடுபட்டு, பண உதவி எல்லாம் வற்றிவிட்ட தரித்திர நிலையில், அவர் அகராதியை உருவாக்கினார். 40,000 வார்த்தைகள், 140,000 மேற்கோள்கள் என்று பிரம்மாண்டமான தயாரிப்பு. அதன்பின் 173 வருடங்கள் கழித்துதான் ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதி பெரும் கல்விமான்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வெளியானது.
எனக்கு தோன்றிய சிந்தனை இதுதான். எந்த ஒரு துறையின் வளர்ச்சியும் பல்கலைக்கழகங்களிலோ, பெரும் அறிஞர் குழுவிலோ தங்கியிருப்பதில்லை. ஒரு சில அர்ப்பணிப்பு சுபாவமுள்ள தனி நபர்கள்தான் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளார்கள். விஞ்ஞானம், இலக்கியம் என்று இன்னும் பல துறைகளிலும் தாரம் காட்டலாம்.
பொஸ்டன் நண்பரிடம் செயலியை வாங்கியவுடன் என் தமிழ் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை; அப்போதுதான் ரம்பமாகியது. சில வருடங்கள் செயலி நன்றாகவே வேலை செய்தது. ஒரு முழுப் புத்தகம் அதில் அடித்து முடித்தேன். கம்புயூட்டரின் தரம் மாறும்போது அல்லது உலாவிகள் மாறும்போது பிரச்சினைகள் கிளம்பின. பிறகு கனடாவில் ஒரு செயலியை வாங்கி கொஞ்சக் காலம் ஓட்டினேன். மறுபடியும் பிரச்சினை.
ஒருத்தர் முரசு அஞ்சல் பற்றி சிறப்பாகச் சொன்னார். ஒரு செயலியை வாங்கினேன். இதை வேலை செய்ய வைப்பதற்கு அரைமணி நேரமும், ஓர் எட்டு வயதுப் பையனின் உதவியும் போதுமானதாயிருந்தது. தமிழ் எழுத்துக்கள் அழகாக உருண்டு உருண்டு வந்து இறங்கின. அதுவும் சில வருடங்களே. ஒரு பழைய நெட்ஸ்கேப் 4.04 ல் நல்லாக வேலைசெய்தது. உலாவியை மேம்படுத்தினால் தகராறு. ஒரு முறை நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 'இ' எழுத்தை காணவில்லை. அப்பொழுது 'இனாவைக் காணவில்லை' என்று ஒரு கட்டுரைகூட எழுதினேன். அந்தக் காலங்களில் 'இ' வரும் இடங்களில் எல்லாம் இனாவை வெட்டி ஒட்டி, வெட்டி ஒட்டி கட்டுரையை முடிப்பேன்.
இன்னொருமுறை கணினி தரம் மாற்றம் அடைந்தபோது '' வரவில்லை. கதையிலே வரும் ஆலமரத்தை அரசமரமாக்கினேன். வென்று அழுதான் என்று எழுதாமல் ஓவென்று அழுதான் என்று எழுதினேன். ஆனால் 'னால்' என்ற வார்த்தையை தவிர்த்து எவ்வளவு தூரத்துக்கு ஓடமுடியும். இப்படி நான் பட்ட அல்லல்கள் நீண்டுகொண்டே போயின.
ஒரு பிரச்சினையை தீர்க்கும்போது இன்னொன்று வந்து புகுந்துகொள்ளும். கம்புயூட்டர் கம்பனிகளும் சும்மா இருப்பதில்லை. 'அட எல்லாமே தமிழில் வேலைசெய்கிறது' என்று சுவாசமாக மூச்சு விடுவது அவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது. உடனேயே கம்புயூட்டரை மேம்படுத்திவிடுவார்கள். 'பொ' அடித்தால் ஒற்றைக் கொம்பு ஒரு வரியிலும் பா அடுத்த வரியிலும் வரும். 'ணீ' வரவே வராது. கண்ணிலே கண்ணீர் விழுந்தாலும் வார்த்தையிலே கண்ணீர் விழாது.
உலகத்து தமிழ் கணினி ஆர்வலர்கள் எல்லாம் முதன்முறையாக ஒன்று சேர்ந்து தரப்படுத்தப்பட்ட தமிழ் திஸ்கி எழுத்துருவை கொண்டுவந்தார்கள். இதற்காக உழைத்தவர்களில் பலர் ஈழத்து தமிழர்கள். எப்படியும் உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒரு தமிழ் எழுத்துரு கிடைக்கவேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம். அப்பொழுது பார்த்து தமிழ்நாடு தாப், தாம் என்ற இரண்டு எழுத்துருக்களை அங்கீகரித்தது. பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. மின்னஞ்சல்கள் அனுப்பும்போது அதைப் பெறுபவர்கள் வாசிக்கமுடியாது சிரமப்பட்டார்கள். எப்பொழுதுதான் எல்லோரும் ஒரே குறியீடுகள் கொண்ட செயலிகளில் எழுதுவார்கள்; கட்டுரை, கதைகள் என்று ஒருவருக்கொருவர் தடையின்றி அனுப்பலாம்; மின்னஞ்சல்கள் பரிமாறலாம் என்று நான் ஏங்குவேன்.
கணினியில் தமிழ் வேலை செய்வதில் ஏன் இவ்வளவு பிரச்சினை என்பதை அறிவதற்காக நான் சில கணினித்துறை நிபுணர்களிடமும், ஆர்வலர்களிடமும் பேசினேன். இவர்கள் எல்லாம் உலகத்தின் பல பாகங்களிலும் நல்ல தொழில்நிலையில், வசதியான சூழ்நிலையில் வாழ்பவர்கள். இவர்களுடைய தமிழ் பற்று என்னை பிரமிக்க வைத்தது. தமிழ் கணினித் தொழில்நுட்பத்தை எப்படியும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று ஒரே இலட்சியத்தில் இவர்கள் கடுமையாக உழைத்தார்கள்.
அப்படியான ஒருவர்தான் முத்து நெடுமாறன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். இருபது வருடங்களுக்கு மேலாக தகவல் தொழில் நுட்பதுறையில் அனுபவம் கொண்ட இவர்தான் பிரபலமான முரசு அஞ்சல் மென்பொருளை சந்தைப் படுத்தியவர். இன்றைய முன்னணி இதழ்கள், வலைப்பக்கங்கள், பயனாளகள் எல்லாம் உபயோகப்படுத்துவது இவருடைய எழுத்துருக்களைத்தான்.
இவர் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் (உத்தமம்) தலைவராக இருக்கிறார். இந்த மன்றத்தின் நோக்கம் தமிழ் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு உழைப்பது. 1997ல் தொடங்கி இன்றுவரை நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் பெரும் பங்காற்றி வருவதுடன், முதன் முதலாக தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவையையும் நடைமுறைப் படுத்தியுள்ளார். இவருடைய மிகப் பெரும் சாதனை மென்பொருள். அதன் தரமும் சேவையும் உலகளாவியது.
இவரைத் தொடர்ந்து பலர் தமிழ் எழுத்துருக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். சில நிலைத்து நின்றன, இன்னும் சில மறைந்துபோயின. தமிழ் எழுத்துருவைக் கண்டுபிடித்ததன் நோக்கமே ஒருவருடன் ஒருவர் தமிழில் தொடர்பு கொள்வது. அந்த நோக்கத்துக்கு எதிர்திசையில் காரியங்கள் நடந்தன. நூற்றுக் கணக்கான எழுத்துருக்கள் உண்டானதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பிடித்துக்கொண்டார்கள். ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வது சாத்தியமில்லாமல் போனது..
அப்பொழுது ஒருவர் இந்த பிரச்சினைகளை தீர்க்கவென்று புறப்பட்டார். சுரதா யாழ்வாணன் என்ற ஈழத்து தமிழர். சொந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதியாக ஜேர்மனியில் தஞ்சம் புகுந்து, இருபத்திரண்டு வருடங்களாக அங்கே வாழும் கம்புயூட்டர் நிபுணர். தமிழில் அவருக்கு உள்ள பற்றை அளவிடமுடியாது. வேலையில் இருந்து திரும்பியதும் தமிழ் நிரலி எழுதுவதற்காக கம்புயூட்டரின் முன் உட்காருவார். உடனேயே மனைவி, பிள்ளைகளின் ஞாபகம் மறந்துபோகும். நாலு மணிக்கு விடியும்போது இன்னொரு நாள் பிறந்துவிட்டதை உணர்ந்து மறுபடி வேலைக்கு செல்வார். இவருடைய செயலிகள் இருபதுக்கு மேலாக இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த செயலிகள் மூலம் எந்த ஓர் எழுத்துருவையும் இன்னொரு எழுத்துருவுக்கு சில நிமிடங்களிலேயே மாற்றிவிடலாம். புதுப்புது எழுத்துருக்கள் உண்டாகும்போதெல்லாம் அலுக்காமல் அவற்றை மாற்றும் செயலிகளை தயாரித்து விடுகிறார். எனக்கு எங்கேயிருந்து, என்ன எழுத்துருவில் மின்னஞ்சல் வந்தாலும் இவருடைய மாற்றி மூலம் படித்துவிடுவேன்.
எதற்காக இந்த செயலிகளை இலவசமாக வழங்குகிறீர்கள் என்று கேட்டேன். 'எத்தனையோ எங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. கூகிளில் இலவசமாகத்தானே தேடுகிறோம். என் நண்பர்களும், பிறரும் பல செயலிகளையும், நிரல்களையும் இலவசமாக தந்து உதவியிருக்கிறார்கள். உங்கள் கதைகளை நான் இலவசமாகத்தானே இணையத்தளங்களில் படித்தேன். நானும் இந்த உலகத்துக்கு திருப்பி ஏதாவது இலவசமாக விட்டுப்போக வேண்டும் அல்லவா?' என்றார். அவருடைய தயாள குணம் என்னை நெகிழவைத்தது.
ஒரு பக்கத்திலே தமிழ் செயலிகளை மேம்படுத்தும் வேலை நடந்தது. இன்னொரு பக்கத்தில் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றும் வேலை நடந்தது. அப்பொழுது புதுவிதமாக ஒருத்தர் சிந்தித்தார். அச்சுயந்திரங்கள் வந்தபொழுது எப்படி அச்சுப் பிரதிகளும், வாசிப்பும் பெருகியதோ அதேபோல தமிழ் கணினி வந்தபிறகு புத்தகங்கள் வெளியிடுவதிலும், வாசிப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதிலும் புலம் பொயர்ந்த தமிழர்கள் பெரும் பசியோடு புத்தகங்களை விலைகொடுத்து வாங்கினார்கள். இந்த வளர்ச்சிக்கு எப்படி ஈடு கொடுப்பது? புத்தகங்களை எப்படி பாதுகாப்பது, அதிலும் எங்கள் பழம்பெரும் இலக்கியங்களை எப்படி கணினியில் ஏற்றுவது, வாசிப்பை பரவாலாக்குவது என்று அவர் யோசித்தார்.
அறுநூறு வருடங்களுக்கு முன்பு குட்டன்பேர்க் என்ற ஜேர்மன்காரர்தான் முதன்முதலில் அச்சுப்பிரதிகள் செய்தார். யிரக் கணக்கான பைபிள்களை அடித்து வினியோகித்தார். பெரும் வாசிப்பு புரட்சி அப்போது ஏற்பட்டது. குட்டன்பேர்க்கை கெªரவிக்கும் முகமாக 1971ல் 'குட்டன்பேர்க் திட்டம்' என்று ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை எல்லாம் மின்புத்தகங்களாக இந்த திட்டத்தின்கீழ் ஏற்றினார்கள். இந்த ஏற்பாட்டினால் இப்பொழுது விலை மதிப்பிடமுடியாத 15,000 ஆங்கில புத்தகங்களை வாசகர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணினி வழியாக இலவசமாக படிக்க முடிகிறது.
முனைவர் க. கல்யாணசுந்தரம் சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஒரு வேதியியல் அறிஞர். இதேபோல ஒரு திட்டத்தை அவர் 'மதுரை திட்டம்' என்ற பெயரில் 1998ம் ண்டு தைப்பொங்கல் அன்று தொடங்கினார். திருக்குறள் முழுவதையும் அவர் தன்னந்தனியாக தமிழில் தட்டச்சு செய்து இந்த திட்டத்தில் ஏற்றினார். உலகெங்குமிருந்து 350 தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இதுவரை 200 புத்தகங்கள் ஏறிவிட்டன. இவற்றில் பழந்தமிழ் இலக்கியங்களும், நவீன இலக்கியங்களும் இன்னும் சில அரிய புத்தகங்களும் அடங்கும். திருமூலர், திருக்குறள், கம்பராமாயணம், சக்க இலக்கியங்கள், நாலாயிரம் திவ்யபிரபந்தம், பாரதியார், கல்கி என்று படிப்பதற்கு இவை கிடைக்கின்றன. கனடாவில், ஒரு குளிர்கால இரவில் நான் வீட்டைவிட்டு ஓர் அடிகூட நகராமல், எட்டுத்தொகைகளில் ஏழாவதான நெடுநல்வாடையை என் கணினியில் இறக்கி இலவசமாகப் படித்தேன். இது எப்படி சாத்தியமானது. இந்த தொண்டர்களின் உழைப்புக்கு விலைபோட முடியுமா? என்னுடைய கணக்குப்பிரகாரம் ஒரு மில்லியன் டொலருக்கு அதிகமாகவே வந்தது.
திரு சி.வை. தாமோதரம்பிள்ளையும், திரு உ.வே. சாமிநாதையரும் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரிய பழந்தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடிகளில் கண்டுபிடித்து திருத்தமாக்கிப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாயிருந்தனர். பெரும் பல்கலைக்கழகங்கள் செய்யவேண்டிய காரியத்தை இவர்கள் தனியாகவும், செவ்வையாகவும் செய்துமுடித்தனர். இந்த முயற்சி இல்லையெனில் விலைமதிப்பற்ற பழந்தமிழ் நூல்கள் பலவற்றை நாம் இழந்திருப்போம். கம்புயூட்டரில் சேமிக்கப்படாத தமிழ் நூல்களும் எதிர்காலத்தில் அழிந்துபோகும் என்பது உண்மை. உலகளாவிய மதுரைத்திட்ட தன்னார்வலர்கள் கணினித் தமிழுக்கு அர்ப்பணித்த உழைப்பு எவ்விதத்திலும் இந்த முன்னோடிகளின் சேவைகளுக்கு குறைந்ததல்ல என்றுதான் எனக்குப் படுகிறது.
இன்னும் சிலர் தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறார்கள். தமிழ் கணினி உலகில் நன்றாக அறியப்பட்ட ஆவரங்கால் சிறீவஸ் ஓர் ஈழத்துக்காரர். முப்பது வருடங்களாக லண்டனில் வசிக்கும் இலத்திரனியல் பொறியியலாளர். யூனிகோட் அடிப்படைக் கோட்பாடும், தொல்காப்பியக் கோட்பாடும் தர்க்கரீதியில் ஒன்று என்று சொல்லும் இவர் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேலெடுத்துப்போக யூனிகோட்தான் சிறந்த வழி என்கிறார். இவர் உருவாக்கிய பல எழுத்துருக்கள் இன்று உலகம் முழுக்க பாவனையில் இருக்கின்றன. திஸ்கி குழுவில் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர். இவருடைய வரங்கால் எழுத்துரு திஸ்கியிலும் யூனிகோட்டிலும் செயல்படும். இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமான எகலப்பை யூனிகோட் எழுத்துருவில் ஆவரங்கால் உள்ளடங்கி இருக்கிறது என்று சொல்லும் இவருடைய எழுத்துருக்கள் எல்லாமே இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த வேலைகள் இப்படி போய்க் கொண்டிருக்கும்போது
இன்னொரு குழு ஒரு பிரதானமான பிரச்சினையை தீர்ப்பதற்கு அணுகியது. வெங்கட்ரமணனும் அவருடைய குழுவினரும்
பலவருடங்களாக லினக்ஸ் இயங்குதளத்தின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறார்கள். இது ஒரு திறமூல இயங்குதளம்.
இதன் குறியீடுகள் மறைக்கப்படாதவை; யாரும் உபயோகிக்கலாம். வெங்கட்ரமணன் அவர் வீட்டில் கம்புயூட்டருக்கு
முன் உட்கார்ந்து அடிக்கும்போது நான் பார்த்திருக்கிறேன். தேனீக்கள் சுழல்வதுபோல அவருடைய விரல்கள்
சுழலும். எந்தவிரல் எங்கே இருக்கிறது என்று சொல்லமுடியாது. முழுக்க முழுக்க தமிழிலேயே அவருடைய கம்புயூட்டர்
இயங்கும். மைக்ரோசொ•ப்ட் பக்கம் அவர் போவதே இல்லை.
இந்த லினக்ஸ் இயங்குதளம் இலவசமாகவே
கிடைக்கிறது. இது விண்டோஸிலும் பார்க்க சிறப்பாக வேலை செய்கிறது என்பது பல நிபுணர்களின் கருத்து.
இதில் தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் திறமாக செயல்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் அதை தீர்ப்பதற்கு உத்திரவாதம் இல்லை; வைரஸ் வந்து தாக்கினால்
யார் பொறுப்பு என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்கள்.
மைக்ரோசொ•ப்ட் என்பது பெரும் விருட்சம். தமிழ் என்பது இப்போது தழைக்கும் கொடி. பலம் பெறும்வரை மைக்ரோசொ•ப்டை சார்ந்து தமிழ் நிற்பதே நல்லது. அதே சமயம் லினக்ஸ்ஸை விட்டும் வெகுதூரம் போய்விடக்கூடாது என்ற பொதுவான கருத்தே நிலவுகிறது.
ஒரு பக்கத்தில் தமிழ் கணினி அமோகமான வளர்ச்சியடைய இன்னொரு பக்கத்தில் சில பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. தமிழில் சொற்கூட்டலையோ, இலக்கணத்தையோ கவனிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. றுமுகநாவலர் காலத்தில் அச்சான புத்தகங்களைப் பார்த்தால் ஒரு விஷயம் தெரியவரும். கடைசிப் பக்கத்தில் பிழைதிருத்தம் என்று போட்டிருக்கும். பிழையான வார்த்தை - சரியான வார்த்தை - பக்க எண் என்று கொடுத்திருப்பார்கள். இப்பொழுது வரும் புத்தகங்களில் அப்படியான ஒரு பக்கத்தைக் காணமுடியாது. சொற்பிழை இல்லை என்ற அர்த்தமல்ல; அவற்றைச் சேர்த்தால் அதுவே அரைப் புத்தக சைசுக்கு வந்துவிடும். அப்படி பிழை மலிந்திருக்கும்.
ஆனால் ஆங்கிலத்தை எடுங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை விசேஷ பதிப்பு பத்திரிகை என்றால் குறைந்தது 200 பக்கங்கள் இருக்கும். அதாவது 400,000 வார்த்தைகள், ஆனால் ஒரு சொற்பிழையைக் கூட காணமுடியாது. ஆங்கிலத்தில் கம்புயூட்டரின் சொல்திருத்தி இந்த வேலையை செவ்வனே செய்துவிடும். தமிழுக்கு மட்டும்தான் இந்தக் கதி. ஒரு சொல்திருத்தி தமிழில் வந்துவிட்டால் இந்த பிரச்சினையை தீர்த்துவிடலாம்.
சொற்கள்தான் பிரச்சினை என்றால் இலக்கணத்தின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. Editor என்ற வார்த்தைக்கு ஒரு தமிழ்ப்பதம் உண்டு என்று சொல்கிறார்கள். பிரதிமேம்படுத்துநர். இதனிலும் நீளமான வேறு வார்த்தை அகப்படாததால் இதையே நாமும் பயன்படுத்துவோம். தமிழிலே இலக்கணத்தை யார் சரி பார்க்கிறார்கள். மலையாளத்தில் எழுதுவதுபோல 'நாய் போனான்' என்று எழுதினால்கூட பதிப்பித்து விடுகிறார்கள். இந்த நீண்ட பெயரைச் சுமந்துகொண்டிருக்கும் பிரதிமேம்படுத்துநர் என்ன செய்கிறார் என்பதே தெரிவதில்லை.
சமீபத்தில் நியூ யோர்க்கர் பத்திரிகையில் ஒரு செய்தி வாசித்தேன். அவர்கள் பத்திரிகையில் இலக்கணத்துக்கு என்று ஒரு தனியான எடிட்டர் இருப்பார். எந்தப் பெரிய கொம்பன் எழுத்தாளரும் அவருடன் சமரசமாகிப் போவாராம். மூன்று வார்த்தை வசனத்தில் நாலு பிழை கண்டுபிடிப்பாராம் இந்த எடிட்டர். தமிழில் அப்படி வேண்டாம், ஆனால் பேருக்காவது ஒருவர் இலக்கணத்தை சரிபார்க்கலாம். ஆங்கிலக் கணினிகளில் இலக்கணத்திருத்தி வந்துவிட்டது. இன்னும் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் இது மிகவும் அவசியம். இன்றும் தொல்காப்பியருடைய இலக்கணம்தான் முடிவு தேதி இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிப்பிக்கப்பட்ட இலக்கணத் திருத்தி வரவேண்டும். அல்லாவிட்டால் இப்பொழுது எழுதும் தமிழ் இன்னும் பத்து வருட காலத்திலேயே படிக்கமுடியாமல் போய்விடும்.
இன்னொரு முக்கியமான அம்சம் தமிழில் தேடுபொறி உண்டாக்குவது. நண்பர் ஜெயமோகன் எழுதிய 'காடு' நாவல் வெளிவந்தபோது அதை வாங்கிய முதல் வாசகர்களில் நானும் ஒருவன். நாவலை திறந்து படித்தால் முதல் வசனத்திலேயே 'மிளா' என்று ஒரு வார்த்தை வந்து என்னை மிரள வைத்தது. ஒரு மிருகம் என்று தெரிந்தது ஆனல் என்ன மிருகம் என்று தெரியவில்லை. இலங்கை நண்பர்களிடமும், இந்திய எழுத்தாளர்களிடமும் விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. என்னிடம் ஐந்து தமிழகராதிகள் இருந்தன. அவற்றிலும் பலனில்லை. நானும் விடுவதாயில்லை. ஆங்கில கூகிளில் போய் kerala animal population என்று எழுதி துளைத்து துளைத்து தேடியபோது திடீரென்று விடை கிடைத்தது. 1993 கணக்கெடுப்பு - mlavu (sambha deer) - 10,665 என்று வந்தது. சம்பா மான்தான் மிளா என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன் அப்பொழுது யோசித்தேன் தமிழில் ஒரு தேடு யந்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என்று. வெகு விரைவிலேயே தமிழில் தேடு யந்திரம் வந்துவிடும் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
யூனிகோட்டின் வருகையினால் தமிழில் தேடு பொறி கிடைத்திருக்கிறது. முடக்கு தெருக்கள், குச்சு ஒழுங்கைகள் என்று தாண்டி யூனிகோட் என்ற நெடுஞ்சாலைக்கு தமிழ் வந்துவிட்டது. இன்றுவரை இருந்த வேறுபாடுகளை எல்லாம் தவிர்த்து ஒருங்கிணைந்த குறியீட்டுமுறை தமிழுக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதம். உலக மொழிகள், இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு குறியீட்டுமுறைதான். 'இந்த முறையில் தமிழுக்கு என்று தனி இடம் இருக்கிறது. அது சரியாகவும், சிறப்பாகவும் இயங்குகிறது. யூனிகோட்டில் எழுதி இணையத்தில் பதிவான கட்டுரைகளை கூகிள் தேடுதளங்களில் தேடலாம். இது முதன்முறையாக தமிழில் சாத்தியமாகியிருக்கிறது. தமிழுக்கு ஒரு சொந்தவீடு கிடைத்துவிட்டது. வாடகை வீடு இனிமேல் இல்லை. தமிழிலே அனுப்பும் செய்தி தமிழிலேயே கிடைக்கும். நல்ல பாதுகாப்புக்கும் உறுதி இருக்கிறது. தமிழின் எதிர்காலம் யூனிகோட்தான்.' இப்படி சொல்கிறார் முத்து நெடுமாறன்.
கூகிள் தமிழ் தேடுபொறியில் முதன்முதல் சோதிப்பதற்காக நான் அடித்துப் பார்த்த வார்த்தை 'நல்லூர்'; 36 பதிவுகள் கிடைத்தன. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் கடைசியாக இவ்வளவு சந்தோசப்பட்டது என் மனைவி விசா அட்டையை தொலைத்தபோதுதான். யூனிகோட்டின் பெருமையை தீர்க்கதரிசனமாக உணர்ந்து 'திசைகள்' இணையத்தளத்தை இரண்டு வருடம் முன்பாகவே துணிந்து தொடங்கியவர் மாலன். கனடாவில் மகேன் நடத்தும் 'எழில்நிலா' பக்கமும் மிகவும் பிரபலமானது. 'அப்பால் தமிழ்', 'மரத்தடி' என்று புதிய யூனிகோட் இணைய தளங்கள் பல இன்று வந்துள்ளன.
யூனிகோட் கூட்டுமையம் (Unicode Consortium) உலக மொழிகள் அனைத்துக்கும் ஒதுக்கிய இடங்கள் 65,500. அதில் தமிழுக்கு மாத்திரம் கிடைத்த இடங்கள் 128. சில நிபுணர்கள் இது போதாது தமிழுக்கு 512 இடங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொருவர், சிங்களம் சில சலுகைகள் கிடைத்து யூனிகோட் குறியீட்டு முறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் பின்னுக்கு நிற்கிறது. காரணம் சிங்களத்துக்கு ஒரு நாடு உண்டு; தமிழுக்கு நாடு கிடையாது. யூனிகோட் முறையில் தமிழை மேலே நகர்த்துவதற்கு ஒரு நாடு தேவை என்கிறார்.
சமீபத்தில் இந்திய அரசின் கீழ் இயங்கும் 'சிடாக்' (Centre for Development of Advanced Computing) நிறுவனமும், மத்திய அரசின் தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சும் சேர்ந்து புதுவருடம் அன்று சென்னையில் குறுந்தகடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை கேட்டதும் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன், இதிலே பலதரப்பட்ட பயனுள்ள செயலிகளை இணைத்திருந்தார்கள். 92 யூனிகோட் எழுத்துருக்கள், 46 தாப் எழுத்துருக்கள், 65 தாம் எழுத்துருக்கள், ஒளிவழி எழுத்துணரி, சொல்திருத்தி, தமிழகராதி என்று பல உபயோகமான அம்சங்கள். தமிழகராதி சிறப்பாக உள்ளது ஆனால் அது தாப்பில் தொழில்படுகிறது என்றார் ஒருவர். இது தவிர இந்த குறுந்தகட்டில் கொடுத்த சில பொதிகள் தனி ர்வலர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அவர்களுக்கு அங்கீகாரமோ, மரியாதையோ கொடுக்கப்படவில்லை என்றும் சொன்னார்கள். என்னுடைய ரம்ப மகிழ்ச்சியை இது வெகுவாகக் குறைத்தது.
ஆனால் இந்த வெளியீட்டு விழா எங்களுக்கு சொல்லும் சேதி இன்னும் குழப்பத்தைக் கொடுக்கிறது. 92 வகையான புது யூனிகோட் எழுத்துரு உபயோகத்துக்கு தமிழ் பயனர்கள் யத்தம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது. அதே சமயம் சொல்திருத்தியும், அகராதியும் இன்னும் பல எழுதுருக்கள் தாப்பிலும் தாமிலும் வெளியானது அந்த நம்பிக்கையை பெரிதும் குலைக்கிறது. தமிழ் கணினித்துறை எங்கே செல்கிறது, யூனிகோட் இருக்கும் பக்கமா அல்லது அதற்கு எதிர் திசையிலா என்பது தெரியவில்லை.
ஓரு நல்ல பகல் வெளிச்சத்தில் கம்புயூட்டரின் முன்பக்கம் எது, பின்பக்கம் எது என்று கண்டுபிடிக்கும் திறமைக்கு மேலாக என்னிடம் ஒன்றும் இல்லை. இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக உலகத்தின் பல பாகங்களில் வதியும் கணினி நிபுணர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சிலரை நேரில் சந்தித்தேன். இன்னும் சிலருடன் மின்னஞ்சலில் கருத்துகள் பரிமாறிக்கொண்டேன். இவர்கள் எல்லோருமே ஒருமுகமாக தமிழின் எதிர்காலம் யூனிகோட் குறியீட்டில்தான் தங்கியிருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஒருவராவது யூனிகோட் தமிழுக்கு சரிவராது என்று சொல்லவில்லை. கணிப்படம் போன்ற சில துறைகளில் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது என்றார்கள். பழைய கம்புயூட்டரில் இருப்பவர்களை திடீரென்று புதிய கணினிகளுக்கு மாற்றமுடியாது என்றார்கள். உடனேயே அரசு யூனிகோட்டுக்கு மாறவேண்டும் என்றும் ஒருவரும் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் இன்ன தேதியில் இருந்து அரசு மாறும் என்று அறிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்பொழுது ஒரு நம்பிக்கை பிறக்கும். தமிழ் எங்கே போகிறது என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இராது. அதற்கான முயற்சிகளில் பலரும், முக்கியமாக உலகம் எங்கும் பரந்திருக்கும் தமிழ் கணினி ஆர்வலர்கள், ஊக்கமாக இறங்குவார்கள். சொந்த வீடு கிடைத்துவிட்ட பிறகு எவ்வளவு நாளைக்கு வாடகை வீட்டில் தமிழ் தங்கியிருக்கப் போகிறது.
என்னுடைய பொஸ்டன் நண்பர் ஒரு நாளைக்கு 20 சொற்கள் என்ற ரீதியில் இன்றைக்கும் எங்கோ அவுஸ்திரேலியாவின் ஒரு நகரத்தில் நடுநிசி தாண்டி வேலை செய்துகொண்டிருக்கலாம். அவருடைய கணினி அகராதி 2020ம் ஆண்டு வெளிவரலாம்; வராமலும் போகலாம். வந்தாலும் வராவிட்டாலும் அவருடைய பெயர் ஒரு ஜனாதிபதி விருதுக்கோ, சாகித்திய விருதுக்கோ, தமிழ்நாடு விருதுக்கோ இன்னும் வேறு வெளிநாட்டு விருதுக்கோ தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியவர் என்ற வகையில் பரிந்துரை செய்யப் படப்போவதில்லை. நாவல், கவிதைகள், சிறுகதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் இன்னும் வெளிநாடுகளிலும் பல விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. தமிழை கணினித்துறையில் மேல் நகர்த்தியவர்களுக்கு ஏதாவது பரிசு உண்டா என்று பார்த்தால், கிடையாது.
தமிழின் எதிர்காலம் தன்னலம் பாராமல், தம் சொந்த நேரத்தை செலவுசெய்து, தமிழை கணினியில் ஏற்ற பாடுபடும் நிபுணர்களின் கையில்தான் இன்றுள்ளது. ஆனால் எவ்வளவுதான் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பாடுபட்டாலும் ஏழுகோடி தமிழ் மக்களைக் கொண்ட மாநில அரசு தரவு இல்லாமல் தமிழை கணினித்துறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வார்த்தைகளை கடன் வாங்கி 'தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்' என்று சொல்லும்போதுதான் அந்த உண்மை தெரியவருகிறது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூனிகோட் என்னும் கம்புயூட்டர் ரயிலில் தமிழ் ஏறி உட்கார்ந்து விடவேண்டும். அல்லாவிடில் ஸ்டேசனில் தவறவிட்ட குழந்தைபோல தமிழ் நிற்கும்; ரயில் போய்க்கொண்டே இருக்கும்.
- அ.முத்துலிங்கம் -
Appadurai Muttulingam
amuttu@gmail.com