மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்!
கவிஞர் தா. இராமலிங்கம் மறைவு! - முல்லை அமுதன் -
சாவகச்சேரியிலுள்ள
கல்வயல் எனும் கிராமத்தில் 16.08.1933இல் அமரர் தாமோதரம்பிள்ளை, அமரர்
சின்னப்பிள்ளை ஆகியோருக்கு
மகனாகப் பிறந்த கவிஞர் தா. இராமலிங்கம் அவர்களின் கவி ஆளுமை எம்மை எல்லாம்
விழிப்புற செய்தது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்த கவிஞர் தன் பட்டப்
படிப்பை கல்கத்தா, சென்னைப் பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். இலங்கையில்
இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியிலும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும்
தன் ஆசிரியத் தொழிலைத் தொடர்ந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில்
அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் மீசாலையைச் சேர்ந்த மகேஸ்வரியைத் தன்
வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு அமரர் கலைச்செல்வன், வைத்தியகலாநிதி
அருட்செல்வன், பொறியியலாளர் தமிழ்ச்செல்வன், திருமதி இசைச்செல்வி குகரூபன் (டீ.யு),
வைத்தியகலாநிதி கதிர்ச்செல்வன் ஆகியோர் மக்கட் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டனர்
இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவைச் சிறப்புற நமது வாசிப்புக்கு
புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) நூல்கள்மூலம் கிடைக்கிறது. 1960இல்
இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை, சுவர், புதுசு, சமர் போன்ற
சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில அ. யேசுராசா, இ. பத்மநாப ஐயர், உ. சேரன்,
மயிலங்கூடலூர் பி. நடராசன் ஆகியோர் தொகுத்த மரணத்துள் வாழ்வோம் (1985ஃ 1996)
தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா ஆகியோர் தொகுத்த பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984ஃ
2003) தொகுதியில் இறுக்கமான, சிறப்பான 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது. பத்மநாப ஜயரும் யேசுராசாவும் இனைந்து 1981இல் தா. இராமலிங்கம்
கவிதைகளை, கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வெளியிட முனைந்தும் முடியாதுபோனமை
துரதிர்ஷ்டமே. மீண்டும் இரண்டு மூன்று ஆண்டுகள்
முன்னர் முயற்சிசெய்தபோதும் காலச்சூ+ழல் காரணமாக முடியாதுபோயிற்று. கவிஞரும்
ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.
நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர்பற்றி நண்பர் யேசுராசாவிடமும் ராதேயனிடமும்
கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு
அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.
பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூக நோக்கு, ஆழ்ந்த புலமை, மனித நேயம் இவற்றிக்கும்
மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதித அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய
இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை
உருவாக்கியிருக்கலாம்தான்.
‘ஞாபகமறதி’ நோயினால் தன்னைமறந்தநிலையில் வாழ்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம்
அறிந்தபோது வேதனையாக இருந்தது. இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை
தேடிப் படித்தல் வேண்டும்.
25.08.2008இல் அமரத்துவமடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழ் ஈழம்) மண்ணில்
26.08.2008 தகுந்த மரியாதையுடன் தகனம்
செய்யப்பட்டுள்ளது. மரணம் நிஜம் எனினும் வாழ்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில்
அவரின் மரணம் பல செய்திகளைச் சொல்லிச்செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும்
தொகுத்து வெளியிடுவதுதான் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் சமர்ப்பணமாகும்.
mullaiamuthan_03@hotmail.co.uk |