‘இரண்டு கார்த்திகைப்பறவைகள்’ -எஸ்.
புஸ்பானந்தன்-
- முல்லை
அமுதன்’ -
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்த கிழக்கிலங்கை மண்டூர்
என்னும் கிராமத்தில் இருந்து எஸ். புஸ்பானந்தன் அவர்களிடம் இருந்து கவிதைநூலாக
எமக்குக் கிடைத்துள்ளது. அரசாங்க நிலஅளவையாளராக பணிபுரியும் நிலஅளவை விஞ்ஞானமானி
பட்டதாரியான இவர் எண்பதுகளிலேயே தன் இலக்கியம் படைத்து வரும் இவரது கவிதைகளின்
தொகுப்பே இந்நூலாகும். ஏற்கெனவே கவிஞர் மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளை, பொன்.
சிவானந்தன், மண்டூர் அசோகா, மாணிக்கசபாபதி, மண்டூர் தேசிகன், சுதந்திரோதையன்,
மண்டூரான் ராசதுரை வரிசையில் புஸ்பானந்தனும் நினைவுக்கு வருகிறார். இவரின்
கவிதைகளை சுடர். தாரகை, மேகம், வீரகேசரி, தினக்குரல் என தொடர்ந்து அச்சு
ஊடகங்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
காத்திரமான கவிதைகளை சுடர், தாரகை, மேகம் ஆகியன தங்கள் தேர்வில்
இணைத்துக்கொண்டிந்ததனால் இவரின் கவிதைகளும் சிறப்பிடம் பெற்றிருதமையை
மறுக்கமுடியாது. 67 பக்கங்களில் மண்டூர் கலைஇலக்கியஅவை 2007 ல் வெளியிட்டுள்ள
நூலில் நல்ல கவிதைகளில் எம்மை லயிக்க வைத்துள்ளது.
நீயும் நானும்
குண்டுகள் பாய்ந்து
ஒரு நாள் சாகலாம்!
அதற்காய் சாவை நினைத்தே
சாவது சரியா!
இல்லை
நீ உடைவதில
எனக்கு
உடன்பாடில்லை!
பிறிதொரு கவிதையில்-
வாவியின் மடியில் வலை வீசி
வாழ்கைக குளிர் காயும்
வாயில்லாப் பூச்சிகளின் தலைதானா
வழமை போல
உனக்குப் பயங்கரமாய்த் தெரிந்தது.
என் இதய ஊரை
தீ மூட்டிய பறவையே …
சேறெடுத்து வரப்பப்பி
தேசப்பசியின் குரல்வளையை நெரிக்கும்
கலப்பை மனிதரின்
இரைப்பையில் அல்லவா
நீ
நெருப்பு முட்டை இட்டாய்…
இது – 1985 கார்த்திகையில்
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாநிதி. செ. யோகராசா அவர்களும் இவரின் கவிதைகளை
உள்வாங்கி சிறப்பாகக் கூறுகிறார். நூலின் கவிதைகளின் வார்த்தைகள் அழகாக
காலச்சூழலுக்கேற்ற பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அராஜக்க காற்று வீசும்
வாழ்க்கை வெளி….
பாதுகாக்க வேண்டிய பலவற்றை
பறக்கவிட்ட படிதான்
எத்தனை அஃறிணை மனிதர்கள்!
….
இரவு வரும்
மனித மனசுகளை
அச்ச இருட்டுக்கு
இட்டுச் செல்லும்!
அராஜக முற்றவெளிக்கு
அழைத்துச் செல்லும்
கறுத்த யூலை
நெருப்புப் போன்ற
கவலைத் தீயில் வாழ்க்கை வேக…
இன்னும் மேலே செல்ல முடியா
இறுக்கக் கருமை நிகழ்வுகளுடனே
இரவு வரும்!
இரும்புப் புழுக்கை பீச்சும் இயந்திரம்
இதயத்துடிப்பை
கூட்டும்… நிறுத்தும்.
இன்றைய யதார்த்தத்தை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார். அவருக்குள்ளேயான பயம்
கவிதைகளில் தெரிகிறது. அந்தப்பயமே ஒரு தீர்வைச்சொல்ல மறுக்கிறது. கள யதார்த்தம்
வார்த்தைகளில் பூடகமாக நமக்குப் புரியவைக்கிறது. சொல்லாத பல செய்திகளை சொல்லி
நிற்கிற கவிதைகள் நமக்குள்ளும் வலியைத் தருகிறது. இன்னும் சிறப்பாக சொல்ல
நினைத்தும் சொல்லப்படவில்லையே என்கிற ஆதங்கமும் உண்டு. பாரதியின் கவிதைத்
துணிச்சல் நம்மில் பலருக்கு இருந்தாலும் ஒரு சிலராலேயே அத்தகைய வீச்சை
தந்திருக்கிறது உண்மையெனினும் புஸ்பானந்தன் போன்றவர்கள் இன்னும் துணிச்சலாக எழுதி
இலக்கிய வீச்சை நமக்குத் தந்து திசைகள் காட்ட வேண்டும்.
mullaiamuthan_03@hotmail.co.uk |