| கணபதி கணேசன்!
 - முல்லை அமுதன் -
 
 
  ஒரு 
  ஆளுமைமிக்க கலைஞனாக கவிஞனாக, வீரிய வார்த்தைகளை வீசியெறிந்து எழுத்தாக்கும் 
  வல்லமையும் கொண்டவர்தான் திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் 03.03.1955 ல் பிறந்த 
  கணபதி கணேசன் ஆவார். எனது ‘நித்யகல்யாணி’ நூல் பதித்தலுக்காக சிரித்திரனின் கவின் 
  அச்சகத்தில் அச்சாகிக் கொண்டிருந்தபோது தான் ராதையன் மூலம் கணபதி கணேசனின் 
  தொடர்புகிட்டியது. அன்புநெஞ்சன், சுதாராஜ், காவலூர் ஜெகநாதன், வடகோவை வரதராஜன், 
  சௌமினி போன்றோர் எழுதத்தொடங்கிய காலங்கள்… நெருங்கிவந்தோம். 1970 ல் தன் 
  எழுத்துப் பணியை ஆரம்பித்த கணபதி கணேசன் ‘மதுரா’ என்ற புனைபெயாரிலும் 
  எழுதியுள்ளார்.  ஈழநாடு, தினகரன், சிரித்திரன்,செவ்வந்தி, வீரகேசரி 
  ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தமிழகத்தில் மக்கள் பாதை மலர்கிறது, பொங்கும் 
  தமிழமுது, ஆகியவற்றிலும் எழுதியுள்ள இவர் மலேசிய நண்பன், மக்களோசை, இதயம் 
  ஆகியவற்றிலும் தொடர்புகளை பேணிவந்துள்ளார் என்றும் அறியமுடிகிறது. 
 மேகம் எனும் சிறுசஞ்சிகையினை ஓட்டுமடத்திலுள்ள தனது கௌரி அச்சகத்தில் அச்சிட்டு 
  வந்ததைக் காண்பித்தான். அதில்
 சிறுசஞ்சிகைக்கே உரிய இறுக்கமும் ஆழமும் தெரிந்தது. அப்போது தமிழகத்தில் வெளிவந்த 
  புதியகலாச்சாரம் சஞ்சிகையை
 ஞாபகப்படுத்தியது. கொக்குவில் இராமகிருஷ்ணமிஷனில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் 
  கொண்டிருந்த ‘கவிதாயினி’ கௌரி
 திருநாவுக்கரசு அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
 
 பின்பொருநாளின் மாலைப்பொழுதில் மேகம் அனுசரனையுடன் எனது ‘ஷோபா கிரியேஷன்ஸ்’ 
  சார்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
 ‘மை பெயா லேடி’ நிகழ்ச்சியினை நடாத்தினோம். அவரின் அச்சகத்தில் 
  நிறையப்பேசினோம்….விவாதித்தோம் …. அவரின் மூலமாகத்தான்
 திரு பத்மநாபஐயர் அவர்களை அவர் தங்கியிருந்த சங்கிலியன் வீதியில் சந்தித்ததும் 
  அவரிடம் இருந்து புதிய ஜனநாயகம்,
 புதியகலாச்சாரம் போன்ற தீவிர இலக்கிய சஞ்சிகைகளைப் பார்க்கக் கிடைத்தது.
 
 அப்போதே கணபதி கணேசனின் தீவிர இலக்கிய சிந்தனைபற்றி அறியமுடிந்தது. நாமிருவரும் 
  சேர்ந்து ‘புதிய அடிமைகள்’ எனும் கவிதை நூலை மேகம் வெளியீடாக 1983; ல் 
  வெளியிட்டோம். மகேந்திரன் எனும் அப்போதைய மாணவர் ஒருவரால் அட்டைப்படம்
 கீறப்பட்டிருந்தது. அப்போதுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதனால் நாம் 
  திட்டமிட்டபடி நூலை வெளியிடமுடியாது
 போயிற்று. மானுட விடுதலை வேண்டும் என நினைத்தே அட்டைப்படத்தை ஓவியர் 
  வரைந்திருந்தார். மாறாக சிறையுடைப்பு எமக்கு இராணுவ அச்சுறுத்தல் தரும் என்பதால் 
  800 பிரதிகளை கௌரி அச்சகத்தின் முன்பு எரித்தோம்.
 
 
  1984ல் 
  நானும் நாட்டை விட்டு வெளியேறும்படியாயிற்று. அவனும் நிறைய எழுத்தில் சாதிக்க 
  உழைத்தான். பண்டைய தமிழ்ப்புதையல்களில் இருந்து தேர்ந்தெடுத்த படைப்புகளை தொகுத்து ‘தமிழ் அமுதம்’ 
  எனும் நூலையும் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
 மலையகம், தமிழகம் என அவனும் புலம்பெயர்ந்தான். தமிழீழ மாணவர்பேரவை சென்னை-5 
  வெளியிட்ட ‘பொங்கும் தமிழ் அமுது’  சஞ்சிகையில் தன்னையும் இணைத்து நிறைய 
  எழுதினான். 1985 ல் ‘சூரியனைத் தொலைத்தவர்கள்’ கவிதை நூலை வெளியிட்டார்.
 பின்னர் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தார். இவருக்கு யதுந்தன் எனும் மகனும், 
  மதுரா எனும் மகளும் உள்ளனர். மலேசியாவிலும்
 நண்பர்களுடன் இணைந்து செம்பருத்தி மாத இதழை வெளிகொணர்ந்தார். அவரின் நல்ல 
  சிந்தனைகளுக்கு களம் செம்பருத்தி இதழின் மூலம் கிடைத்தது. தமிழர் நலன்களில் அதிக 
  அக்கறை கொண்டிருந்தார். தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்று உழைத்தார். 2002 
  ல் உலகத்தமிழர் நிவாரண நிதிக்காக ‘குருதி பூர்த்த வெள்ளரசு’ என்ற கவிதை நூலை 
  வெளியிட்டார். இடைக் காலத்தில் ‘மூன்றாம் பிறையும் பௌர்ணமி நிலவும்’ என்ற கவிதை 
  நூலை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல சிந்தனையாளர்களை காலன் 
  விட்டுவிடுவதில்லை.
 
 ‘எதுவும் வேண்டாம்
 ‘ஒன்று’
 அதுமட்டும்தான்
 வேண்டும்! அது….
 விடுதலை!
 
 கனவுகள் வசப்படாத ஒரு பொழுதில் நோய் வந்தது. தமிழகத்தில் சிகிச்சைக்காக அழைத்து 
  வரப்பட்டு 13.11.2002ல் மரணம் அவனைத்
 தழுவியது. நிறையப் பேசுபவன். நிறையவே சிந்திப்பவன். அவன் இறக்கும் போது மகன் 
  யதுந்தனுக்கு 16 வயது. மகள் மதுராவிற்கு 18
 வயது. இவரின் விருப்பத்திற்கேற்ப இவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் 
  செய்யப்பட்டது. அறிவுமதி, வல்லிக்கண்ணன், சுபவீரபாண்டியன், தாசீசியஸ், ஆகியோருடன் 
  நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தவரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
 
 mullaiamuthan_03@hotmail.co.uk
 |