| 
  ‘மண்ணில் துலாவும் மனது’ வஸீம் அக்ரம்
 முல்லை அமுதன்
 
 
  அநுராதபுர 
  மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக 
  மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! 
  எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல், இராணுவ 
  அடக்குமுறை, வாழ்வுக்கான போராட்டம் …. இப்படித் தொடர்கிறது. நெருக்கடிகளுக்குள் 
  வாழும் ஒவ்வொரு மனிதர்களும் ஞானசம்பந்தர்கள் தான். மொழி முரட்டுத்தனமாக வாழவே 
  செய்யும்.  ‘படிகள்’ இதழாசிரியர் என்கிற போது இரட்டிப்பு மகிழ்வு தருகிறது. 
  இன்றைய புதிய கிராமத்து தமிழ் மணங்கள் வசீம் அக்ரம் போன்ற கவிஞர்களால் தான் 
  உணரப்படுகிறது. அன்புஜவகர்~h, அநு. வை. நாகராஜன், தம்பு சிவா, மு.கனகராஜன், பேனா. 
  மனோகரன் எனப்பலர் இலக்கியம் வளர்த்த ஊர். மல்லிகை கூட ‘அநுராதபுரம் சிறப்பிதழை’ 
  வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது. 
 ஒரு கிராமத்தின் அடையாளம் அந்தக்கவிஞனே.
 பண்புகளை நேர்த்திப்படுத்துபவனும் அவனே.
 ஒரு எழுத்தை லாவகப்படுத்தும் முறைமை கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 
  வார்த்தைகள் வந்து விழும் போது சொற்களாகி எம்மைக் கூட நெறிப்படுத்த, நெகிழவைக்கக் 
  கூடியது.
 
 உண்மையில் ஒரு காலத்தின் பதிவு கவிஞன் தான். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 
  தமிழ்ச்சங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளது. எமது கிழக்கிலங்கைக் கவிஞன் 
  பஸீல் காரியப்பரின் ‘ஆத்ம அலைகள்’ நூலைவெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 
 வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் 
  வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார் என்பதும் மொழிகளின் 
  சொல்லாடலில் தெரிகிறது.
 
 நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திரும்பவும் ஏமாற்றப்படவே செய்கிறோம். 
  ஒரு வகையில் கையாலாகாத்தனம் போலும். இப்படித்தான் வாழவேண்டும் என்று சமூகம் 
  கற்றுத்தந்திருக்கிறபாடம். சகமனிதனுக்கு, துப்பாக்கிகளுக்கு, அரச 
  இயந்திரங்களுக்கு அல்லது அரசின் ஏவல்களுக்கு அடங்கிப்போகிற ஒரு சமூக்க கூட்டம். 
  மாற்றம் எங்கும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று தெரிந்தும் வாழப்பழகிக் கொண்ட 
  மௌனங்கள்.
 
 தன் கண் முன்னாலேயே மகள் வல்லுறவுக்குட்படுத்துகையில், மணைவியின் முன் கணவன் 
  வெட்டிக்கொல்லப்படுகையில், வீடு சூறையாடப்படுகையில்- மதங்களின் பெயரால், 
  இனங்களின் பெயரால் இழந்து போயினும் வாழ்கிறோமே. எது கொடுமை?
 
 கவிஞன் அமைதியானவன். அவனுள்ளும் எரிமலை. ஆனாலும் தன்னைப்பண்படுத்திக்கொள்கிற 
  பக்குவம். சந்திரனைத் தொட்ட நாட்டில் கூட மாறாத சோகம் தான் மக்கள் 
  பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணின் மைந்தர்களே ஆக்கிரமிக்கின்ற அவலம்.
 
 யார் கற்றுத்தந்தார்கள்? யார் அனுமதித்தார்கள்? ஈராக்முதல் நமது மண்வரை 
  தொடர்கிறது. கவிஞரின் வரிகள் பலஇடங்களில் சோகம் சொல்கிறது.
 
 சில கவிதைகள் மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்துள்ளது எனில் அங்கு கவிதை 
  செப்பனிடப்படுகிறது என்றே அர்த்தம்.
 
 அட்டைப்படம், அச்சிடல், எழுத்துப்பிழையின்மை என அதிக கவனம் எடுத்து இந்த நூல் 
  வெளிவந்துள்ளது.
 
 
 ‘மாமிசப்பாடலுக்கான
 குருதிப்புனைவுகளில்
 கல்லறை தூரத்தைக்
 கணக்கிட்க் கொண்டு
 உயிரின் இருத்தல் தொடர்கிறது’
 
 ‘எங்கள் தேசம் 2006’ என்னும் கவிதையில் இப்படிச் சொல்லும் இவர் பிறிதொரு 
  கவிதையில்
 
 ‘ அமாவாசை அடகு வைத்துக்கொண்டிருந்த
 இரவில்
 என் கடைசி துளி உயிரின் கதறலை
 கடலலைகள் காற்றின் துனைகொண்டு
 உன் முகத்தில் துப்பிவிடும்’
 
 என எழுதுகிறார். இன்னொரு கவிதையில்
 
 ‘ மீண்டும் நான் என்
 இருட்டறை நோக்கி
 உட்காயங்களுடன்
 உருகி உறைகிறேன்’
 
 ஒவ்வொரு கவிதைக்குமான தலைப்பே கவிதைகள் தான்.
 
 மண்ணில் துலாவும் மனது.
 மரணவெளி விவரணைகள்.
 வாழ்வு வரைந்த விதி.
 மரணப்பொழுது.
 காதல் அல்லது கவிதை சொல்லும் காலம்.
 யதார்த்தின் தோல்வி குறித்து….
 ஆயுதத்தின் ஓலம்.
 
 இங்கு இன்னொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய வீச்சுடன் ஒரு இனத்தின் 
  பரிணாம வளர்ச்சியின் எழுச்சியுடன் எழுத்துக்கள் அச்சில் வருகின்றன. மஜீத், ஆத்மா, 
  பௌ~ர், சோலைக்கிளி, பொத்துவில் ~hஜகான், சுல்பிகா, நாச்சியாதீவு பர்வீன், பஹிமா 
  ஜெகான் இவர்களுடன் வசீம் அக்ரம்.
 
 பலவகையில் காயப்பட்ட நகரம் அநுராதபுரம் எனினும் அங்கும் தமிழ் வளர்கிறதே எனும் 
  போது அதிக மகிழ்ச்சி தருகிறது. அநுராதபுரம் சார்ந்த குக்கிராமங்களில் இருந்தும் 
  தமிழ் தன் அடையாளத்தைக் காட்டி நிற்கிறது. பதிப்புத்துறையிலும் முன்னணியில் 
  நிற்கும் நம்மவர்கள் எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை வசீம் அக்ரம் போன்றோர்கள் 
  ஊடாக எதிர்பார்க்கிறது.
 
 நூலைப் பெற……
 வசீம் அக்ரம்
 தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
 ஒலுவில் 32360
 இலங்கை.
 
mullaiamuthan_03@hotmail.co.uk
 |