| பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் 
'பூந்துணர்'!
 - முல்லை அமுதன் - 
 
 நல்ல 
கலைஇலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதுதான் 
பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் 
இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம்பெறப்பட்ட இலக்கியவடிவங்களை புடம்போட்டு 
கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக்கொணந்துள்ளனர். பலரைச் சொன்னாலும் 
பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் 
தொடர்கிறது. ஈழத்து மட்டுவிலில் 1934 ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா 
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கிய பயணத்தைத் தொடர்கிறார்;. 
இவர் ஏற்கனவே ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பன்முகஆற்றல் உள்ளவர். நேரம் 
தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.
 
 
    யுகசாரதி 
என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ் .கருணானந்தராஜா இவரது பாரதியின் 
குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வுநூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் 
‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் 
ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் 
பேசப்படுகிறது. திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ்ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் 
பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். 
பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை 
இலாவகப்படுத்துவதில் வல்லவர். 
   தமிழ் 
ஈழத்து தென்மராச்சியில் உள்;ள நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கா. 
விசயரத்தினம் அவர்கள் ‘கணினியை விஞ்சும் மனிதமூளை’ எனும் அறிவியல் நூலை 2005ல் 
வெளியிட்டுள்ளார். 2007ல் ‘‘Essentials of English 
Grammar’’ எனும் ஆங்கில இலக்கண நூலை 
வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். தமிழ் நாட்டில் பிறந்த 
மீ. இராஜகோபால் 18 வருடங்களாக லண்டனில் வாழ்கிறார். வார்த்தைகளை உணர்ச்சி ததும்பும் 
விதத்தில் கவிதைகளை எழுதிவதில் சிறந்து விளங்குகிறார். மனிதநேயம் மிக்கவர். எமது 
ஈழத்து கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டவர்;. ஈழ விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் 
தமிழின் ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். கணினி, விண்கோள் விஞ்ஞானம், மேலாண்மைத் 
துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 
 
   ஓய்வு 
பெற்ற ஆங்கில வைத்தியரான திருமதி. சீத்தாதேவி மகாதேவா தன் கணவரின் தமிழ் இலக்கிய 
செயற்பாட்டிற்கும் ஆதார சுருதியே இவர்தான். தமிழ்ப்பற்று மிக்கவர். இவரின் வருகை 
தமிழுக்கு வளம் சேர்ப்பது போல் ஆக்கங்களை எழுதிவருகிறார். திருமதி தயா 
கருணானந்தராஜா தன் தாயாரிடத்தில் பெற்ற தமிழ் இலக்கிய புலமையை கவிஞர் 
யுகசாரதியினுடனான திருமண பந்தத்தின் பின்னரும் இலக்கிய முயற்சிகளில் பாவிப்பதன் 
மூலம் கணவருக்குப் பக்க பலமாக இருக்கிறார். பிரித்தானிய இலக்கிய சங்கத்தின் 
தூண்களில் ஒருவரும் கூட. 
 நூலிற்குள்…
 
 நுழையுமுன் அழகு சேர்ப்பது அட்டைப்படம்தான். தேசியத்தின் சின்னத்தை 
பளிச்சிடச்செய்ததில் தாயகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொள்கிறார்கள். நம்மவர்கள் 
பெரும்பாலும் தோற்றுப்போவது பதிப்பித்தலில் தான். அதில் அதிக கவனம் செலுத்தாது 
போனால் நல்ல நூல்கள் தரம், எடை குறைந்து போவது கண்கூடு. இங்கு அதிக கவனம் எடுத்து 
வார்த்தைகளைச் செதுக்கி எழுத்துப் பிழைகள் இன்றி வடிவமைத்துள்ளார்கள். இதற்கு 
அவர்களின் மாதாந்த ஒன்று கூடலின் வளர்ச்சிப்படிவமே எனலாம்.
 
 ஆழுமை மிக்கவர்கள் ஒன்றுசேர்கையில் புதிய பரிமாணத்தில் இலக்கியம் பாய்ச்சல் பெறும் 
என்பதைப் பூந்துணர் உணர்த்துகிறது. வளமான சொற்கட்டுகள். வார்த்தை ஜாலங்கள் அதிகம் 
இல்லை. விரிந்த இலக்கியச் செழுமை. சொல்லாடல்களின் தேர்ச்சி. நாமும் கற்க நிறைய 
இருக்கிறது இவர்களிடமிருந்து. கவிதைகளில், கட்டுரைகளில் யாவரும் வாசிக்கக் கூடியதான 
சுவாரஷியம் இலகு தன்மை விரிந்திருக்க வேண்டும். பண்டைய கவிதை இலக்கண மரபில் இருந்து 
பாமரனும் தொட்டுப்பார்க்க வைத்ததினால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் 
போன்றோர் நம்
 மனதுகளில் இடம்பிடித்துக்கொண்டனர். இங்கு- நூலின் வெற்றிக்கு ஒத்துழைப்புடன் கூடிய 
வளர்ச்சி உலகமயமாக்கலின் புதிய தரிசனங்கள் மொழிவளம் நிறையக் கற்றலின் விழைவு நூலில் 
நன்றாகத் தெரிகிறது
 
 சென்னை ஏ.ஆர் அச்சகத்தில் அச்சிட்டாலும் எழுத்து கைநழுவிப் போய்விடக் கூடாது 
என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அச்சிடலில் தூரமாகப்போவதில் வார்த்தைகளின் 
சொற்கட்டு தொலைந்து விடும் அபாயமும் உள்ளது. இதில் வெற்றியே பூந்துணர் மூலம் 
கிட்டியிருக்கிறது.
 
 ‘எனக்குப்பிடித்த தமிழ் மடையன்’ எனும் கவிதையின் சொல்லாடல் மனதுள் 
ஹாஷ்யத்தையும் சிந்தனையையும் கிளறிவிட்டிருக்கிறது.
 
 ஏனெனறென் விடைசொன்னால், எள்ளி நீர் நகையாமல்…
 காண்பீர், சிறிதேனும், என் சிந்தனையின் போதனையை:
 நான் விரும்பும் நானே, அவன்!
 
 என்று முடியும் போது என்னுள் சிரிப்பு வந்துவிடும். என்னை நானே 
பொருத்திப்பார்த்ததில் வியப்பென்ன? ஈரடிக் குறட்பாக்கள் மூலம் தமிழை 
நிறுத்துப்பார்க்கிறார் பேராசிரியர்…
 
 பெண்மையும் ஆண்மை இடத்தில் பேணும்
 உண்மை இணக்கம் பெறின் (007)
 
 ஆண்மையும் பெண்மையும் ஆதிமுதல் ஒன்றான
 ஆண்பாதி பெண்பாதி காண்க (010)
 
 ஏற்கனவே நூல்களை வெளியிட்டிருந்தாலும் இன்னமும் தலைக்கனம் பற்றிவிடாத கவிஞர் 
யுகசாரதி. ஒரு நூல் வெளியிட்ட உடனேயே தம்
 மேதாவிலாசத்தினைக் காட்டி நிற்கும் கவிஞர்களைக் கண்டிருக்கிறோம். கவிதை மீதான 
பற்றும் காதலும் தமிழின் புலமைத்துவத்தை வெளிப்படுத்தும் களத்தினை நன்றாகவே 
பயன்படுத்தி இருக்கின்றார்.
 
 ‘உள்ளத்துள் ஒடி உணர்வொடுக்கி மெய்ஞான
 வெள்ளத்துள் தோய்ந்து விளக்கம் பல தந்து
 தத்துவத்து முத்துக்களை தரணிக்கு வீசுகிற
 வித்துவத்தைக் காட்டி விரிவுரைகள் செய்திடவா?
 எஃதை எழுதி இங்கே பதிவது நான்?’
 
 கவிதை சமைக்க நன்றாக தெரிந்த கவிஞன்… வித்தகன் தான். ‘ஈழத்தாயின் சபதம்’ கவிதைகளுள் 
ஊறித்திளைத்தவன் ஆதலால் இவர் பற்றி அதிகம் சொல்லவும் வேண்டுமோ?
 
 கம்பனிடம் இருந்து விடுபட்ட தமிழ் விரிந்து எங்கள் உறவுகளிடம் வீரியம் மிக்கதாய் 
வளர்ந்துள்ளதில் வியப்பென்ன?
 
 பாரதியின் கவிதைகள் தமிழ் நாட்டில் வித்துகளானதோ இல்லையோ எம் ஈழத்துப்போராட்ட 
வரலாற்றில் பாரதியின் கவிதைகளும் தான் வித்துடல்கள் ஆயின. கவிதைப்பாரம்பரியத்தை 
வளர்த்து பல கவிஞர்களையும் காலம் பிறக்க வைத்துள்ளது யுகசாரதியைப் போல…..
 
 வாழ்வியலுக்குள் இடறுப்பட்டு வாழுகின்ற புலம் பெயர் மனிதருள் மானிட நேயம் பற்றி 
அதிகமாகப் பேசுகிற யுகசாரதியின் கவிதைகள் வாழ்வாங்கு வாழும்.
 
 ‘ஈழத்திலுள்ள இடுக்கண்கள் வேதனைகள்
 போனால் வருவாளா பொய்யுலகில் தென்படுமக்
 காட்சி மறைந்தால் கடிதில் வருவாளா?’
 
 துப்பாக்கி முனையின் அந்தரத்தில் தொங்கும் ஈழத்து வாழ்வும் வேரோடு பிடுங்கி எறிந்த 
புலம்பெயர் சூழலும் கவிஞனாகவே வைத்திருக்கின்ற வித்துவ விருத்தி யுகசாரதிக்கே 
உரித்தானது. அவரின் கிராமம் சார்ந்த் சூழலின் மணமும் காரணமெனலாம்.
 
 கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் தான். பண்டிதர்கள் வழித்தோன்றலில் தமிழ் 
வரும் எனில் இங்கு சிவானந்தனின் கவிவளம் பற்றி சொல்லி மாளாது. அவரின் கல்வித் 
தேர்ச்சி, மானுடத்தின் மேலான பற்றுதல் அவரை கவிஞராக்கி இருப்பதில் வியப்பில்லை. 
ஆங்கில இலக்கியத்தின் இவரின் பயிலுகை தமிழில் நல்ல வரவுகளை பதிவு செய்ய உதவும்.
 
 இலகு தமிழில் இவரின் கவிதைகள்; உடுமலை நாராயணகவி, கம்பதாசன் இவர்களைப்படித்த 
அருட்டுணர்வு என்னுள் எழுகிறது. பேராசிரியர் க.கைலாசபதியின் மாணவன் என்றாலே அதில் 
விஸ்தாரம் தெரியும். பல்சுவை உணர்வு தோன்றும். திசைகள் எங்கும் சிறகுகளை 
விரிக்கின்ற பக்குவம் தோன்றும். எம் ஈழத்து பார்வதிநாதசிவம், புலவர்மணி 
பெரியதம்பிப்பிள்ளை, சுவாமி விபுலானந்தர், கவிஞர் ஐயாத்துரை, கவிஞர் முருகையன், 
கவிஞர்
 காரை சுந்தரம்பிள்ளை இவர்களின் கவிதைகள் போலவே வாசிக்கும் போது திரும்பத் திரும்ப 
அசைபோடுகின்றதான பலம் தருகிறது. பொங்கு தமிழின் காலத்தில் வாழ்கின்ற நாம் பொங்கும் 
தமிழமுதின் சுவையை கவிதைகளில் ஆங்காங்கே தடவிச் செல்கிறார். கவிதைகளை 
வகைப்படுத்துவதில் திறமையாகச் செயற்பட்டிருக்கிறார்.
 
 ‘சொல்லில் இனிய தமிழ்ச் சொல்லை
 சுவையாய்க் கோத்தோர் பாமாலை
 கல்லும் கரையும் கவிவண்ணம்
 காட்டிப் பாடலிலே கூட்டி
 புல்லும் ஒலிக்கும் புதுமை நிகழ்
 புலோலிப் பதிவாழ் புலவீர்காள்
 வல்லிபுரத்தான் வரலாற்றை நான்
 வழுத்த பாடல் தாரீரோ!’
 
 சமகால இடப்பெயர்வில் 1995ன் பெயர்வு யாவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதனை இங்கு 
பதிவு செய்துள்ள கவிஞர் பாராட்டுக்குரியவர்.
 
 ‘தட்டுத் தடுமாறித் தள்ளாடி வழிநடந்தோம்
 கெட்டகுடியே கேட்டிற்கோர் உதாரணமோ?
 பட்ட காலிலேயே மீண்டும் படும் என்ற பழமொழியோ?
 நட்ட மரங்களென நானிலத்தோர் பார்த்திருக்க
 தொட்டகுறை தொடர்ந்தெம்மைத் துயர்கடலில் ஆழ்த்த
 விட்டகுறை மீண்டு வந்து விலங்காக்கி விளையாட
 திட்டம் எதுவுமின்றித் தெய்வமும் கைவிட்டதென்று
 இட்டமின்றி நாங்கள் ஏங்கி வழிநடந்தோம்.’
 
 கவிதை படிக்க உள்ளம் பதறுகிறது. பட்ட அனுபவம் என்பதா? வார்த்தைகளின் கோர்ப்பு 
கவிதையை சீராக வழிநடத்துகின்றது. இங்கே தான் கவிஞன் வாசகனை தன் வட்டத்துக்குள் 
இழுத்து வருவதான வெற்றிக் களிப்பு ஏற்படுகின்றது. தமிழர் பண்பாடுகளையும் விபரமாக 
எழுதியுள்ளார்.
 
 ‘மூட்டுபகை சுற்றி மூதூரைச் சூழ்ந்ததாய்
 முரசம் அறை செய்தி காற்றில்வரக்
 கேட்டவள் புலியாகிக் கொதித்துக் குழந்தையைக்
 கூவியழைத்துக் குடுமிசீவி உன்
 பாட்டன் களத்திலே பட்டனன் இன்றென்
 பதியும் புரண்டனன் என்று சொல்லி
 நீட்டுவாள் வேலை நீஇன்று செல்கென
 நெஞ்சில் நிறைந்த தமிழ்மறப் பண்பாடு.
 
 இப்படி பண்பாடுபற்றி பாடுகையில் எதுகை மோனைத் தத்துவங்கள் புரளாமல் எமது மறவர் 
பண்பாட்டுடன் சங்ககாலப் பண்பாடுகளையும் இணைத்து எழுதுவதன் ஊடாக நாம் கம்பனையும் 
வள்ளுவரையும் மறந்துவிடாது பார்த்துக்கொள்கிறார். எமது வரலாறுகளை மெல்லியதாக 
சோகங்கள் ஊடுருவ சலசலப்பில்லாத வாய்க்கால் நீர்போல எம்மையும் இணைத்து நடை பயில 
வைக்கிறார். எப்படி நாம் சோர்வுற்ற நேரத்தில் கூட எமது நினைவுகளை
 மீட்டிப்பார்க்கிறோமோ இங்கே கவிஞரும் தன் கவிவரி மூலம் நினைவுகளை 
மீட்டிப்பார்க்கிறார்.
 
 திசை எட்டும் சென்று கவிதை சமைப்போம் அதில் தமிழர் என வாழ்வும் சமைப்போம் என்றவாறே 
தன் தமிழால் நம்இனத்தின் விடிவிற்கான பாடுபொருளைத் தந்த கவியரசன் இராஜகோபாலனின் 
கவிதைகள் அனைத்தும் சிறப்பு. என் நேசிப்புக்குரிய மீரா அன்று, இங்கு மீரா எனும் 
இராஜகோபாலன்.
 
 தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் பார்தனை எரித்திடுவோம். இங்கு பாருக்கே உணவில்லை 
என்றாகிறது. ஆனாலும் தானம் பற்றி நிறையவே பேசுகிறார்.
 
 கிடைக்காது என்று தெரிந்தும் சமாதானம் பற்றிக் கதைப்பதே நிஜமாகிவிட்ட சூழலில் 
சமாதானம் பற்றிக் கவிதைகள் எழுதி இன்னும் ஈரமாகியிருக்கிறது நிலம் என்றுதான் 
சிலாகிக்கறாரோ? நாங்கள் சேற்றில் கால்வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க 
முடியாது இப்படி கவிஞன் ஒருவன் முழங்கினான். இங்கு முழங்குதல் இன்றி ஆன்மீகத்தால் 
நல்ல மானுடநேயத்தைப் பெறலாம் என்றே கவிஞரின் கவிதைகள் மூலம் உள்வாங்க முடிகிறது. 
நாம் தோற்றுப்போனவர்கள் மறவர் இனம் என்று சொல்லிக் கொண்டே தோற்றுப்போனவர்கள். 
வாழப்பழகிக் கொள்ளத்தெரியாத பலருள் நாமுமாகி இங்கு ஆடிப்போய் வாழ்கிறோம். இங்கு 
இவரின் கவிதைகள் ஒத்தடம் கொடுக்க முனைகிறது. சமாதானத்தின் சமநிலை அறுபட்ட நிலையில் 
தொங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழ்ஈழம் போல் நம் வாழ்வும்.
 
 புதுக்கவிதையா, மரபுக்கவிதையா, இரண்டும் சார்ந்த உரைவீச்சுகளா?
 திகைப்பாய் இருக்கிறது இவர்கவிதை வரி கண்டு. கவிதைகள் அ;ழ, சிரிக்க, ஆரவாரிக்க, 
கோவப்பட, சாந்தப்படுத்த வைத்திருக்கிறது. ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வாசிக்கும் 
போது வளர்ச்சியின் படிநிலை தெரிகிறது. கங்கையையும் காவிரியையும் இனைக்கின்ற முயற்சி
 
 ‘கயல்விளையாடும்
 வயல்நிலைத்த நாட்டில் - இனப்
 புயலடித்த தெல்லாம் போதும்
 புத்துயிரைப் பெற்றிடுவோம்!’
 
 பணிவு, சேவை, தர்மம் என விரிகின்ற கவிதைகளில் கவிஞர் எப்படி பணிவுடன் பண்புடன் 
பெரியவர்களை மதிக்கின்ற பக்குவம் உடையவர் எனத் தெரிகிறது. இப்படித் தன்னடக்கத்துடன் 
எழுதும் கவிஞர்கள் குறைவு.
 
 ‘பணிவு என்பது –
 பலசாலிக்கே உரிய துணிவு!
 
 செய்யுள் வடிவில் இருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களை புதியவடிவில் எழுதுவதானால் 
அனைவரும் வாசிக்கும் பழக்கம் ஏற்படவே செய்யும். தொல்காப்பியம் பற்றியும் அகஸ்தியம் 
பற்றியும் விரிவாக எழுதியுள்ள திரு. கா.விசயரத்தினத்தின் புலமையினை நன்கு புலப்பட 
வைத்துள்ளார். கட்டுரைகள் எழுதும் போது பலவற்றை வாசிக்கவேண்டும். இங்கு தேடி 
வாசித்து பலவற்றை தன் ஆய்வுக்கு பயன்படுத்தியே உள்ளார் என்பது அவர் எழுதிய 
அனைத்துக் கட்டுரைகளிலும் தெரிகிறது.
 
 ‘எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
 கண் எனப வாழும் உயிர்க்கு’
 
 குறள் மூலம் பலதை எமக்குப் புரியவைத்துள்ளார். ஆண்மை என்ற பதத்தினை வீரம், துணிவு, 
உரம், ஆழுமை, ஆற்றல், தைரியம், மனிதத்
 தன்மை,ஆடவரின் நற்குணங்கள் வீறுமிக்க கபடில்லாத ஆண்மாரியான ஆண்இயல்பு வாய்ந்த் 
ஊக்கமுடைய என விரித்து விலாசுகிறார். பெண்ணின் பெருமை பற்றி சிந்தித்து 
எழுதியுள்ளார். பெண்களின் நாற்குணங்களையும் தொல்காப்பியம் ஊடாக ஆ;ராய்ந்து அழகுற 
நிறுவியுள்ளார். பாரதியாரின் புதுமைப்பெண் பற்றி இன்றைய நடைமுறையில் பிழையான 
அர்த்தப்பாடுகளோடு தடம் பதிக்கின்ற இன்றைய நவீன பெண்களுக்கு இது போன்ற கட்டுரைகள் 
நிறையவே வருமானால் பலவற்றை நின்று நிதானிக்கச் செய்யும். பழம் தமிழரின் கற்பொழுக்க 
நிலையை நன்றாகவே ஆராய்ந்துள்ளார். பெண்ணுக்கு நாணும் கற்பும் உயிரினும் சிறந்தது 
என்பதை அழகுற எழுதியுள்ளார்.
 
 ‘உயிரினும் சிறந்தன்று நாணே நாணிலும்
 செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறத் தன்றெனத்
 தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
 காமக் கிழவன் உள்வழிப் படினும்
 தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
 ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே’
 
 ஒரு தாயின் மனநிலையில் இருந்து தன் கணவனின் இலக்கிய ஆழுமைக்குட்பட்டு தன் 
சிந்தனையை; விரிவுபடுத்துகின்ற ஆற்றல் திருமதி. சீத்தாதேவி. கோபன்மகாதேவாவுக்கு 
அமையப்பெற்றது இவரின் கட்டுரைகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. கடமை, 
உண்மையைப்பற்றி நான் அறிந்த சில உண்மைகள், என்னால் மறக்க முடியாத பேராசிரியர், 
பண்பாடு, ஆண்மையும் பெண்மையும், ஒரு காக்கையின் சிறகடிப்பு, போன்ற கட்டுரைகளில்
 சிறப்பாகவே தன் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். மனக்கட்டுப்பாடு, விடாமுயற்சி, 
பகுத்தறிவு, கடமையுணர்ச்சி என்பன அமையப்பெற்றால் கடமையை சரியாகச் செய்யமுடியும் 
என்பதை தன் அனுபவவாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
 
 பேராசிரியர் அப்பாக்குட்டி சின்னத்தம்பி அவர்களைப்பற்றி தன் மறக்கமுடியாத 
பேராசிரியராக நினைவுபடுத்தி எழுதியுள்ளார். தான் பிறந்த மண்ணுக்கு சேவைசெய்யவென தன் 
பேராசிரியர் பதவியிலிருந்து இளைப்பாறி பலரும் பயன்பெற பல நூல்களைப்பதிப்பித்தும் 
யாழ்பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஊதியம் இல்லாமலே கடமைபுரிந்த ஒரு மகான் 1911ல் 
பிறந்தவர். 1986ல் தனது 75வது வயதில் யாழ்ப்பாணத்தில் மறைந்தது வரை தமிழ் 
தேசியத்திற்கான கனவுடன் வாழ்ந்த ஒரு பெரியார். இவரின் வரலாறின் ஒருபகுதியையாவது 
திருமதி. சீத்தாதேவி எழுதியதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
 
 பண்பாடுகளைப் பேணிக்காப்பதில் நம் ஈழத்துப்பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள் 
பண்பாடு என்பதின் இவரின் விளக்கம் பண்படுதல், சீர்மைபெறுதல், முதிர்ச்சியடைதல் 
என்கிறார். நமது பண்பாடுகளை சீர்செய்து நடந்தால் வீடு, சமூகம், நாடு முன்னேறும். 
ஆணின் கடமையையும் பெண்ணின்கடமையையும் தார்மீகமாக உள்வாங்கி கரிசனையுடன் கருமங்களை 
வெளிக்காட்டி முன்னின்று உழைத்தல் குடும்பம் சிறக்க வழிவகுக்கும். பெண்களின் 
சுதந்திரம் பற்றி சுப்பிரமணிய பாரதியார் வழி பலரும் சொல்லியும் நவீன பெண்ணிய 
வாதிகள் பிழையான கற்பிதங்களால் பாரதியார் கண்ட
 கனவு பொய்த்துவிடுமோ என்கிற அச்சம் எழாமல் இல்லை.
 
 ஒரு மருத்துவதுறைசார்ந்தவரால் இத்தனை அழகாக கட்டுரைகளை எழுத முடியுமா என்றால் 
முடியும் என்றே சொல்லத்தோன்றுகிறது. இதற்கு இவர் சார்ந்த சங்கம் தருகின்ற 
பயிற்சியும் காரணமாக இருக்கலாம்.
 
 ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்
 நடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே
 பெண் இளைப்பில்லை’ எனக்கண்டோம் அல்லவா?
 
 தன் தாயாரின் இலக்கியப்புலமையும் யுகசாரதியின் கற்பனை வளமும் திருமதி. தயாபரிக்கே 
உரிய தமிழ் ஆசிரியைக்கான கனவும் கலந்த உணர்வின் வெளிப்பாடே இவர் வரைந்த 
கட்டுரைகளின் தார்ப்பரியம் எனலாம்.
 
 எமது உடலுக்கு எப்படி அமைதி முக்கியமோ அப்படியே நாட்டுக்கும் அமைதி, சமாதானம் 
முக்கியமானதாகும். ஒரு நாட்டின் அரசபயங்கரவாதம் முறியடிக்கப்பட்டால் பயங்கரவாதம் 
என்பதே இல்லாமல் போய்விடும். எப்படித்தான் சர்வதேச நாடுகள் தனித்தும் ஐ.நா சபை 
ஊடாகவும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பாடுபட்டாலும் அங்கும் சுயநலமே 
மேலோங்கி நிற்பதால் எமது நாட்டின் அமைதி சீர்குலைந்து போய்
 உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம், குர்திஸ்தான், கொசோவோ, ஈழம் எங்கும் 
வாழும் மக்கள் சமாதானத்தை கடைகளிலா வாங்க முடியும் என அங்கலாய்கிறார்கள். பசுமைச் 
சமாதான இயக்கம் எச்சரித்தாலும் சமாதானம் வருவதில் எங்கும் பாரசட்சமே நிலவுகிறது. 
இதனை கணவன் மனைவி உறவு நிலையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை சிறப்பாக உள்ளது. 
மேலும் உண்மையை உள்ளபடி காட்சிப்படுத்தும் போது கசக்கும்.
 அதற்காகவே பொய்முலாம் பூசிப்பழகிக்கொண்ட எம் சமூகம் பற்றியதான அதிக அக்கறை இவருக்கு 
இருப்பதாகவே படுகிறது.
 
 ‘தன்னை அறிந்தவன் மண்ணை அறிந்தவன்,
 அவனே உண்மை தெரிந்தவன்.’
 
 உண்மை சிலசமயம் உறுத்தவே செய்யும். நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் 
திரைப்படப் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. எப்படித்தான் கிராமத்தில் இருந்து 
வந்தாலும் புலம்பெயர்நாடுகளில் பண்பாட்டுப்பிறழ்வுடன் மோதவேண்டி ஏற்படுகிறது. புடவை 
ஜீன்ஸ்சாக மாறுவது போல தொலைக்காட்சித்தொடர்களில் நாம் ஒன்றித்துப்போவது போல, 
கனணியூடான தொடர்பாடலில் தன்னையே தொலைத்து நிற்கும் மனித சமூகம் போல ……… பண்பாட்டு 
மோதல் தொடர்கிறது.
 
 முடிவாக
 
 மாதாந்த இலக்கியக் கூட்டங்களின் மூலம் தொகுத்த ஒரு தொகுதியின் முழுவடிவமே பூந்துணர் 
தொகுதியாகும். பதிப்பின் தரம் உயர்ந்து நிற்கையில் உள்ளடக்கமும் சிறந்தே நிற்கிறது. 
இது போன்ற தொகுதிகள் நிறைய வரும்போது ஈழத்து இலக்கியம் உச்சத்தைத் தொடும் ஆயிரம் 
பூக்கள் மலர வேண்டும்.
 
 நூலை வாசிப்பதற்கு…..
 Ealavar Literature Academy of Britain, 1A Rookery close, 
Colindale, London, NW9 6QJ
 mullaiamuthan_03@hotmail.co.uk.uk |