முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலி
- எம்.கே.முருகானந்தன் -
"வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!"
என்ற முருகையனின் கவிதை வரிகளுடன்
முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலிக் கூட்டத்தை ஆரம்பித்தார் தேவகெளரி.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கூட்டம்
58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடை
பெற்றது. ஆகஸ்ட் 2 ம் திகதி 4.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது.
திருமதி முருகையன், அவரது மகன், மகள், மருமக்கள் மற்றும் பேரக் குழந்தைகள் இக்
கூட்டத்தில் கலந்து கொண்டது மனத்தைத் தொடும் சம்பவமாக இருந்தது. அவர்களுடன்
பேசவும், முருகையன் இழப்பினால் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் கிடைத்தது
மனதிற்கு ஆறுதல் அளித்தது.
தலைமை வகித்துப் பேசிய தேவகெளரி அவரின் ஆடம்பரமற்ற மிக எளிமையான போக்கை
சிலாகித்துக் கூறினார். யாழ் பல்கலைக் கழகத்தில் உயர்நிர்வாகப் பதவியை வகித்த
காலத்தில் கூட தனது வழமையான குடையுடன் நடந்து செல்லும் தன்மையை நினைவு
படுத்தினார்.
சமூகத்தை நையாண்டி செய்து இயல்பான பேச்சு
மொழியில் அவரைப் போல கவிதை ஆக்கியவர்கள் வேறெவரும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டு
பாரம்பரியம் எமக்குத் தந்துள்ள சுமையை அவர் கவிதையில் கொண்டு வந்தது நல்ல
உதாரணம்.
மரபுக் கவிதைகளையே ஆரம்பத்தில் எழுதிய முருகையன் பின்னர் புதுக் கவிதையிலும் தனது
வீச்சை அற்புதமாக வெளிப்படுத்தினார். கவிதை, பாநாடகம் போன்ற படைப்புலகி்ற்கு
அப்பால் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும் தேவகெளரி விதந்து
பேசினார்.
அடுத்துப் பேசிய ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் மூத்த ஒருவரான நீர்வை
பொன்னையன் முருகையனை பல்துறை ஆளுமை கொண்டவர் எனக் குறிப்பிட்டார். கவிதை,
நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் முருகையன் ஆற்றிய பங்களிப்பைப்
பற்றி பேசும் போது மொழிபெயர்ப்பு நுட்பங்கள் என்றதொரு அருமையான நூல்
எழுதியதையும் குறிப்பட்டார்.
முருகையன் படைப்புகளில் மனிதநேயம், மனித முன்னேற்றம், போர்க்குணம் ஆகியன
எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர் தனிமனிதர் அல்ல கூட்டு இயக்கத்தில்
நம்பிக்கை கொண்ட ஒருவர். அவ்வாறே முற்போக்கு அணியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்
தீவிரமாக இயங்கியதையும் குறிப்பட்டார். அவரது கவிதைகள் வாள்வெட்டுப் போல
கூர்மையானவை என்றார். சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தீவிர குரல் அவரது கவிதைகளில்
ஒலித்ததாகவும் சொன்னார்.
மும்மொழி ஆற்றல் பெற்றவராகவும் குறிப்பட்டார். விஞ்ஞானப்பட்டதாரியான அதே நேரம்
கலைப்பட்டதாரியும் கூட என வியந்து பேற்றினார். அதனால் அவரது கவிதைகளில்
விஞ்ஞானத்தின் கூர்மையும், கலையழகும் சேர்ந்திருந்தது என்றார்.
முன்னொரு தடவை முருகையனின் கவிதைகளை
பேராசிரியர் நுஃமான் இதே மேடையில் ஆய்வு செய்ததும் பின்னர் அக்கட்டுரை
'முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்' என்ற நூலில் இடம் பெற்றதையும்
குறிப்பிட்டார்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொடர்
கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இது குமரன் புத்தக
இல்லத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் முருகையன், சில்லையூர்
செல்வராசன், பசுபதி, இக்பால், சுபத்திரன் மற்றும் நுஃமானின் கவிதைகள் பற்றிய
ஆய்வுக் கட்டுரைகள் அடங்குகின்றன.
முருகையனின் கவிதைகளை ஆய்வு செய்தது போதுமானது அல்ல. அவரது படைப்புகள்
அனைத்ததையும் தொகுப்பதும், அவரது படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்வதும் எமக்கு
முன் உள்ள பணி என்றார் நீர்வை பொன்னையன்.
விரிவுரையாளரும் முக்கிய விமர்சகர் மற்றும் ஆய்வறிஞரான த.இரவீந்திரன் நீண்டதொரு
சிறந்த உரையை ஆற்றினார்.
நினைவஞ்சலிக் கூட்டமான இதில் தனது உரை முருகையனின் பங்களிப்பின் ஆளுமை பற்றியதே
அன்றி படைப்புகள் பற்றிய ஆய்வு அல்ல என ஆரம்பித்தார். எழுபதுகளில் 'கவிஞர்களின்
கவிஞர்'என அறியப்பட்வர்.அக்கால மாணவனான தனக்கு கவிதை அறிமுகமாகிய போது
பேசுவதுபோலும் கவிதை எழுத முடியும் என்பதை அவரது கவிதைகளில் கண்டு ஆச்சரியத்தில்
மூழ்கினேன் என்று குறிப்பிட்டார்.
முருகையன் பேச்சோசையை கவிதையில் பயன்படுத்திய போது இலக்கியத்தில் பயன்படு்தாத
சொற்களை இப்பொழுது கவிதையில் பயன்படுத்துகிறார்களே என்ற சர்ச்சை எழுந்தது.
அப்பொழுது ஒருவர் முருகையனிடம் சில பேச்சுவழக்குச் சொற்களைக் கூறி இவை "முன்பு
இலக்கியத்தில் பயன்படுத்தாச் சொற்கள் இப்பொழுது பயன்படுத்துகிறார்களே?" எனக்
கேள்வி எழுப்பினார்.
"இல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார் முருகையன்
"யார் பயன்படுத்தியது" என அவர் கேட்டார்.
"நான்" எனப் பெருமையோடு கூறினார்.
இது தற்புகழ்ச்சி அல்ல.
எந்த ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பு பற்றிய உயர் மதிப்பு இருக்க வேண்டும்.
அது அவரிடம் இருந்தது. தனது படைப்பை தானே ரசிப்பது கூட ஒருவிதத்தில் ஆளுமைதான்
என்றார் ரவீந்திரன்.
"முருகையன் தனது இறுதிக்காலத்தில் பல விடயங்களை மறந்திருந்தார், ஆயினும் தனது
இலக்கியப் பங்களிப்பை மறக்கவில்லை. அவை பற்றிப் பேசும்போது அவர் முகம்
மலர்ந்தது. பலவற்றை ஞாபகப்படுத்திச் சொன்னார். அத்துடன் சமத்துவ சமூகம், சமூக
ஒற்றுமை, மேம்பாடு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை அவர் இறுதிவரை மறக்கவில்லை.
சுயமதிப்பீட்டையும் இழக்கவில்லை" என்று கூறிய ரவீந்திரன் தான் அவர் நோயுற்ற
காலத்தில் சென்று சந்தித்தபோது நடந்த சம்பவங்கள் கூடாக அவற்றைத்
தெளிவுபபடுத்தினார்.
சுமார் 6 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு புது வீச்சும் புதுப் பார்வையும் கொடுத்த ஒரு
அற்புதமான கவிஞனின் நினைவுகள் மனத்தை அழுத்த மண்டபத்திலிருந்து வெளியேறினோம்.
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@hotmail.com
|