கனடா: செல்வி சந்தியா குணசேகரனின் பரதநாட்டிய
அரங்கேற்றம்!
- மாலினி அரவிந்தன் -
ஸ்ரீமதி
லலிதாஞ்சனா கதிர்காமனின் மாணவியான செல்வி சந்தியா குணசேகரத்தின் பரத நாட்டிய
அரங்கேற்றம் சென்ற சனிக்கிழமை மாலை 07 யூன் 2008 மிசசாக்காவில் உள்ள
கிளான்போறெஸ்ட் பாடசாலை உள்ளரங்கில், அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு திருமதி ஸ்ரீதாஸ்
அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு திருமதி குரு அரவிந்தனும், கௌரவ
விருந்தினராக திரு திருமதி நிரஞ்சனா சந்துரு அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி தொடங்குமுன், சந்தியாவின் பெற்றோர்கள் மண்டப வாசலில் நின்று
விருந்தினரை வரவேற்றார்கள். அதன்பின் சம்பிரதாய முறைப்படி உறவினர்கள்
குற்றுவிளக்கு ஏற்றிவைத்தார்கள். குற்று விளக்கு ஏற்றிவைத்தார்கள்; என்பதைவிட
மின்விசையைப் பாவித்து விளக்கேற்றினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வானொலி,
சினிமா கலைஞர், செய்திக் கண்னோட்டம் புகழ் குயின்ரஸ் துரைசிங்கம் நிகழ்ச்சிகளைத்
தமிழிலும், செல்வி சாமந்தி ஆங்கிலத்திலும் தொகுத்து மிகவும் சிறப்பாக
வழங்கினார்கள்.
சந்தியாவின் அப்பா குணசேகரன் பாலசிங்கத்தின் வரவேற்புரையைத் தொடர்ந்து
புஷ்பாஞ்சலி இடம் பெற்றது. அடுத்து அலாரிப்பும் அதைத் தொடர்ந்து ஜதீஸ்வரமும் இடம்
பெற்றன. ‘ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே’ என்ற தேவாரத்திற்கு மிகவும் அழகாக
முகபாவம் காட்டி, அபிநயம் செய்தார் சந்தியா. சிரித்துக் கொண்டும் ஒருவனை
வதைக்கலாம் என்று ‘மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே’ என்ற வரிகளுக்குப்;
புன்னகையோடு அபிநயம் செய்தது அற்புதம். அடுத்து நவரசத்தில் மிகவும் தத்ருபமாகக்
காதல் வீரம் கோபம் என்று பாவங்களைக்காட்டி சபையோரின் கரகோஷத்தைப் பாராட்டாகப்
பெற்றுக் கொண்டார். உள்ளத்து உணர்வுகளை தாளத்திற்கேற்ப பாவங்களாயும்,
அபிநயங்களாயும் வெளியே கொண்டு வரும்போது மொழி அறிவு மிகவும் முக்கியம்.
சந்தியாவிடம் அது நிறையவே இருப்பது ஒவ்வொரு பாடலின் போதும் நிரூபணமாகியது.
அடுத்த கௌரவ விருந்தினரான நிரஞ்சனா சந்துருவின் பாராட்டுரை இடம் பெற்றது. சின்ன
வயதில் இருந்தே சந்தியாவின் முன்னேற்றத்தை அவதானித்து தான் வியப்படைந்ததாகவும்,
இன்று அரங்கேற்றம் செய்வதை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அதற்காக அவரது
நடனஆசிரியையான லலிதாஞ்சனாவையும், சந்தியாவின் பெற்றோரையும் பாராட்டுவதாகவும்
குறிப்பிட்டார்.
கீர்த்தனத்தில் ‘கண்டென் கண்டேன்’ என்ற பாடலுக்கு அசல் அனுமான் போலவே சந்தியா
மாறியிருந்தது மட்டுமல்ல, பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலின்போது பாவங்களை
அற்புதமாக வெளிக்காட்டி, பார்வையாளர்களை அப்படியே உறைய வைத்துவிட்டார்.
தொடர்ந்து
சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறப்புரை இடம் பெற்றது.
ஸ்ரீமதி லலிதாஞ்சனாவின் ஒன்பது வருட கடின உழைப்பு சந்தியாவின் இன்றைய நடன
அரங்கேற்றத்தில் பளீச்சென்று தெரிகிறது என்று குறிப்பிட்டு, சந்தியாவின் குருவான
லலிதாஞ்சனாவையும், அவரது மாணவியான சந்தியாவையும் பாராட்டினார். மேலும் நாளைய
எங்கள் தலைமுறைக்கு அதிசிறந்த ஒரு பரதநாட்டிய நர்த்தகியைத் தந்துதவிய சந்தியாவின்
பெற்றோரான திரு திருமதி குணசேகரனையும் மனதாரப் பாராட்டினார். சந்தியா தனது
கல்வியில் முதன்மை மாணவியாகத் திகழ்வது மட்டுமல்ல, கர்நாடக இசை, வயலின்,
விளையாட்டு, நீச்சல் நாடகம் போன்ற சகல துறைகளிலும் முன்னிற்பதாகத் தனது உரையில்
குரு அரவிந்தன் மேலும் குறிப்பிட்டார். தமிழ் பாடல்களே இடம் பெறாத ஒரு
அரங்கேற்றத்தில் ஏன் ஒரு தமிழ் பாடல்களும் இடம்பெறவில்லை என்று நடன ஆசிரியரிடம்
கேட்டபோது, மாணவிக்கே சரியாகத் தமிழ் தெரியாதபோது அது தமிழ்ப்பாட்டாய்
இருந்தாலென்ன தெலுங்காய் இருந்தாலென்ன, ஆங்கிலத்தில்தானே எழுதிக் கொடுக்கிறோம்
என்று பதில் சொன்னாராம். அதற்கு குறைந்த பட்சம் ஒரு பாரதியார் பாடலையாவது
இடம்பெறச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இவர் ஆலோசனை சொன்னாராம்.
மேலும் தான்பிறந்த மண்ணான காங்கேயன்துறையில்தான் சந்தியாவின் அப்பா குணசேகரனும்,
பாடகர் இசைக்கலாவித்தகர் மோகன் திருச்செல்வமும் பிறந்தார்கள் என்பது மட்டுமல்ல
இந்த மண்ணிலே அவர்களைச் சந்தித்ததில் தான் பெருமைப்படுவதாகவும் குரு அரவிந்தன்
குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பரதகலாவித்தகர் ஸ்ரீமதி லலிதாஞ்சனா அவர்கள் நட்டுவாங்கம்
செய்ய, இசை கலாவித்தகர் மோகன் திருச்செல்வம் தனது குரல் வளத்தால் சபையோரைக்
கவர்ந்திழுக்க, கலாவித்தகர் கனகேந்திரம் குகேந்திரன் மிருதங்கம் வாசிக்க,
அளவையூர் இசைஞானபூபதி ஆர் எஸ் கேசவமூர்த்தி வயலின் வாசிக்க, விபூஷன்
கார்வண்ணதாசன் கடம் வாசிக்க, சபையோர் இசை மழையில் அப்படியே மூழ்கிப் போனார்கள்.
தொடர்ந்து
பிரதம விருந்தினரான புல்லாங்குழல், வீணை இசை வித்துவான் திரு. எஸ்.ஸ்ரீதாஸ்
அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் சந்தியாவையும், அவரது குருவான
லலிதாஞ்சனாவையும், சந்தியாவின் பெற்றோரான குணசேகரன் தம்பதியினரையும், புகலிட
மண்ணில் தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலையின் வளர்ச்சிக்கு சந்தியாவின்
பங்களிப்பையும் பாராட்டி உரை நிகழ்த்தினார். சில பாடல்களுக்குப் புல்லாங்குழல்
இசையும், பெண் குரலும் இணைந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் களைகட்டியிருக்குமோ
என்ற எண்ணமும் அவ்வப்போது மனதில் வந்து போனது. முற்றிலும் தமிழ் பாடல்களாக
இருந்ததால், அதன் பொருளை உணர்ந்து பாவங்களை வெளிக்கொண்டுவரக் கூடியதாக இருந்தது
மட்டுமல்ல, பார்வையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. முற்று முழதாய்
அரங்கேற்ற நிகழ்ச்சியைத் தமிழிலே செய்து காட்டமுடியம் என்ற துணிவோடு செய்து
காட்டிய ஸ்ரீமதி லலிதாஞ்சனாவும் அவரது குழுவினரும் இதற்காகப் பாராட்டப்
படவேண்டியவர்கள்.
சந்தியா இந்த அற்புதக் கலையை இத்துடன் விட்டுவிடாமல் தொடர்ந்தும் கற்று,
சிறந்ததொரு நாட்டிய தாரகையாக எங்கள் இனத்திற்கும், இந்த நாட்டிற்கும், தனது
குருவான லலிதாஞ்சனாவிற்கும், பெற்றோரான திரு திருமதி குணசேகரனுக்கும் பெருமை
சேர்ப்பார் என்ற நம்பிக்கையோடு அவரை நாங்களும் மனதார வாழ்த்துகின்றோம்.
maliniaravinthan@hotmail.com |