| மொன்றியல் மாநகரில் மகாஜனா 
            கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
 - மாலினி அரவிந்தன் -
 
 
  மகாஜனக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நூற்றாண்டு; 
            ஆரம்ப விழாவை மொன்றியலில் 
            Ecole 
            Secondaire Marie Anne என்ற 
            பாடசாலை உள்ளரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (01-05-2010) கொண்டாடினர். 
            மாலை 5.55க்கு ஆரம்பமான அரங்கம் நிறைந்த இந்த நிகழ்வு இரவு 10:30 
            மணிக்கு நிறைவு பெற்றது. மகாஜனக் கல்லூரி பழைய மாணவரான திரு. விஜே 
            ஆனந்தும், வைஷ்ணவி ஞானசரவணபவானும் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடத்தினர். 
 மொன்றியல் மகாஜனக் கல்லூரி பழையமாணவர் திரு. எஸ். சபேசன் அவர்கள் ஆரம்ப 
            உரைநிகழ்த்தி விழாவைத் தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து மங்கல 
            விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மகாஜனக் கல்லூரி 
            பழைய மாணவர் சங்க, கனடா கிளையின் தலைவர் திரு. இ. இரவீந்திரன், சிறப்பு 
            விருந்தினர் திரு. திருமதி. ஜெகன், காப்பாளர்களான திரு. கதிர் 
            துரைசிங்கம், திரு. வே. நந்தீஸ்வரர் ஆகியோர் கலந்து கொண்டனர். மங்கல 
            விளக்கேற்றலைத் தொடர்ந்து கல்லூரிக் கீதமும், தேசிய கீதமும் இடம் 
            பெற்றன. கஜாந்தி அகிலனிடம் இசைப்பயிற்சி பெற்ற, லக்ஷிமி சிவபாலன், 
            அஞ்சலா ராஜேஸ்வரன், லதிகா சிவநாதன், ஆகாஸ் சசிதரன், அபிலாஸ் சசிதரன், 
            குகதாரணி கந்தசாமி, ரேணுகா சிவநாதன் ஆகியோர் இந்த நிகழ்வில் 
            பங்குபற்றினர். வேணன் சிவபாலன் இதற்கு இசை வழங்கினார்.
 
 
  
            அடுத்ததாக திரையில் மகாஜனா என்ற மகாஜனாவின் நூற்றாண்டு வரலாறு பற்றிய 
            விவரணப் படம் ஒன்று ஒன்பது நிமிடங்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 1910ம் 
            ஆண்டில் இருந்து இன்று வரையிலான அதிமுக்கிய நிகழ்ச்சிகளில் மகாஜனாவின் 
            பங்களிப்பு பற்றியதாக இது அமைந்திருந்தது. மகாஜனா பற்றிய மிகப் பழைய 
            புகைப்படங்களை எல்லாம் தேடிஎடுத்துத் தொகுத்துக் கொடுத்த பெருமை 
            இதற்குப் பொறுப்பாக இருந்த கே. ஞானசரவணபவானையும் அவரது குழுவினரையும் 
            சேரும். 
            
             
            தொடர்ந்து இசை ஆசான் கீதவாணி தர்மாகரனின் உருவாக்கத்தில் இசை நிகழ்ச்சி 
            ஆரம்பமானது. நிலக்சனா ஸ்ரீபாலன், சபேதா பேரம்பலம், ரம்யா எட்வேட், 
            பாரதி நவரட்ணம், சன்ஜீவன் நவரட்ணம், நிருஜன் கிரிதரன், பிரணவன் 
            பாலச்சந்திரன், ரிஷிகார் குகதாசன், அனோஜன் இரஞ்சன், கஜன் பரமசிவம், 
            விதுரன் ராஜரட்ணம், அருண் மகாதேவன், சஜீவன் ராஜ்நேரு, நீல் ஞானவேல், 
            பவித்ரன் ஆதி, துஷிந்தன் கெங்கபாலன் ஆகியோர் இசை வழங்கிச் சபையோரை 
            மகிழ்வித்தனர். 
             
            அடுத்து கனடா பழையமாணவர் சங்கப் பொருளாளர் க. ஜெயேந்திரன் வரவேற்புரை 
            நிகழ்த்தினார். வரவேற்புரையைத் தொடர்ந்து, அவசரம் அவசரம் என்ற சிறுவர் 
            நாடகம் இடம் பெற்றது. மாவை நித்தியானந்தனின் பிரதியை நெறியாள்கை 
            செய்தவர் ந. வசவதேவன். இதில் துபீஷன் ஜீவமோகன், ஜனகன் நந்தகுமார், 
            கோபிகா ஜீவமோகன், சைந்தபி சிவசோதிநாதன், தர்சிகா தயாளசீலன், ஜனோஜன் 
            நந்தகுமார் ஆகியோர் பங்குபற்றினர். சென்ற வருடம் மகாஜனா முத்தமிழ் விழா 
            ரொறன்ரோவில் நடந்தபோது, பெரியவர்கள் பங்கு பற்றிய இந்த நாடகத்தை 
            மொன்றியலில் உள்ள சிறுவர்களும் இளைஞர்களும் பங்குபற்றிச் சிறப்பாகத் 
            தங்கள் திறமையை வெளிக்காட்டினர். 
            
             
            அடுத்து மன்றத்தலைவர் இ. இரவீந்திரன், மகாஜனாவின் நூற்றாண்டு 
            சாதனையையும், கனடா கிளையின் கடந்தகால ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் 
            குறிப்பிட்டு உரையாற்றினார். தொடர்ந்து தாரகா சற்குணபாலனின் 
            உருவாக்கத்தில், சலங்கைகளின் ரீங்காரம் இடம் பெற்றது. இதில் நாட்டிய 
            ஸ்ருங்கா மாணவர்களான ஜெசானா பாஸ்கரன், மேரிடினுஷா செலஸ்டீன், சாமந்தி 
            சந்திரசிகாமணி, நேருஜா ரவீந்திரன் ஆகியோர் பங்குபற்றினர். துன்பம் 
            நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா என்ற பாரதிதாசனின் 
            பாடலுக்கு அவர்கள் அபிநயம் பிடித்து நடனமாடியதாலோ என்னவோ, சபையோர் 
            பலரின் பாராட்டையும் பெற்றனர். அடுத்து மகாஜனக் கல்லூரி முன்னாள் 
            அதிபரும், மகாஜனா பழையமாணவர் சங்க, சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான திரு. 
            பொ. கனகசபாபதி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மகாஜனக் கல்லூரியின் 
            நூற்றாண்டு வரலாற்றைச் சுருங்கச் சொல்லி, மிகவும் ஆர்வத்தோடு முத்தமிழ் 
            விழாவைக் கண்டு களிக்க வந்திருந்த கலை ஆர்வலர்களைப் பாராட்டினார். 
            படிப்பிலும் விளையாட்டுத்துறையிலும் மட்டுமல்ல, கலைத்துறையிலும் 
            குறிப்பாக 1965ம் ஆண்டு தொடக்கம் 1969ம் ஆண்டுவரை தொடர்ந்து ஐந்து 
            வருடங்கள் நாடகத்துறையில், அகில இலங்கைக்கான நாடகப்போட்டியில் 
            முதற்பரிசு பெற்று மகாஜனாக் கல்லூரி முன்னணி வகுத்தது என்பதையும் இங்கே 
            குறிப்பிடலாம். 
             
            அடுத்து மனவெளி கலையாற்றுக் குழுவின் தயாரிப்பில், சகாப்தனின் 
            பிரதியாக்கத்தில் நாகமுத்து சாந்திநாதனின் நெறியாள்கையில் ஆக்குவாய் 
            காப்பாய் என்ற நாடகம் இடம் பெற்றது. இதில் சுமுதினி சக்திவடிவேல், 
            தயாபரன் ஆறுமுகம், கதிர் துரைசிங்கம், லக்ஷியா கதிர்காமநாதன் ஆகியோர் 
            பங்குபற்றினர். பண்பட்ட நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் அடுத்து 
            என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைப் பார்வையாளர் மத்தியில் தூண்டிவிடும் 
            ஒரு நாடகமாக இது அமைந்திருந்தது.
 தொடர்ந்து மாணவர்களுக்கான கணித, பொதுஅறிவுப் போட்டியில் பங்குபற்றி 
            2010ல் மொன்றியலில் பரிசு பெற்றவர்களுக்கு இரண்டு பிரிவாகப் 
            பரிசளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் (1000) 
            மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்ததும் இங்கே 
            குறிப்பிடத்தக்கது.
 
             
            அடுத்து நம்பிக்கை என்ற நேர்காணல் நிகழ்ச்சி இடம் பெற்றது. ஈழத்து 
            மூத்த கலைஞர்களில் ஒருவரான, தணியாததாகம் புகழ் சோமுவின் பாத்திரமேற்று 
            நடித்த புகழ் பெற்ற நடிகர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களும், சிறந்த 
            நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீ முருகனும் இதில் 
            பங்குபற்றிப் பார்வையாளர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க 
            வைத்தனர். நேர்காணலைத் தொடர்ந்து சங்கீத மைந்தர்களின் திரையிசை நடனம் 
            தொடர்ந்தது. அதன்பின் சங்கச் செயலாளர் க. முத்துலிங்கத்தின் நன்றியுரை 
            இடம் பெற்றது. அவர் தனது நன்றியுரையில் மகாஜனன்களை மதித்து அவர்களது 
            நூற்றண்டு முத்தமிழ் விழாவிற்கு வருகைதந்தவர்களுக்கும், கணித பொது 
            அறிவுப்போட்டியிலும், விழா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி அதன் மூலம் 
            இந்த விழாவைச் சிறப்பித்தவர்களுக்கும் நன்றி கூறினார். 
             
            
             
            அடுத்ததாக இடம் பெற்றது எங்களை விடுங்கோ என்ற சமூக சீர்திருத்த நாடகம். 
            பிரபல நடிகரான கணபதி ரவீந்திரனின் கருவாக்கத்தில் குரு அரவிந்தனின் 
            கதையாடலில் நாகமுத்து சாந்திநாதனின் நெறியாள்கையில் எங்களை விடுங்கோ 
            என்று முனகிய அவலக்குரல் மேடையில் மட்டுமல்ல மொன்றியல் எங்கும் 
            கேட்கக்கூடியதாக இருந்தது. இந்த நாடகத்தில் கணபதி ரவீந்திரன், ரூபினி 
            யோகதாசன், ஜெகநாதன் சுஜந்தன், சுஜந்தன் வாஞ்சிதா ஆகியோர் பங்கு 
            பற்றியிருந்தனர். இதில் நடித்தவர்கள் தங்கள் அருமையான நடிப்பால் 
            சபையோரை மகிழ்வித்தது மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தனர்.
 சிறப்பு விருந்தினராக வந்திருந்த பழையமாணவி வைத்திய கலாநிதி 
            சர்வலக்ஷ்மி ஜெகனின் உரையைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு 
            நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த முத்தமிழ் விழாவிற்கான ஒலி, ஒளி அமைப்பை 
            தர்மாகரன் செய்திருந்தார்
 
            
             
            மொன்றியல் மாநகரில் நடந்த முத்தமிழ் விழாவைத் தொடர்ந்து, ரொறன்ரோவில் 
            2010 யூலை மாதம் இரண்டாம், மூன்றாம் திகதிகளில் கனடா பழைய மாணவர்களின் 
            முத்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 
 maliniaravinthan@hotmail.com
 |