தமிழ்ப் புலத்தில் பொலிந்த செஞ்சாலி - கவிஞர் இ. முருகையன்
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -
மறவன்புலவுக்கு
வடக்கே நுணாவில். அங்கே மேற்குக் கிழக்காகக் கண்டி வீதி. நுணாவிற்
சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் தெரு வழியாகப் பருத்தித்துறைக்குச்
செல்லலாம். அந்தத் தெருவில் முதலாவது சந்திக்குக் கனகன்புளியடி எனப் பெயர்.
நுணாவில் சந்தியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் கனகன்புளியடிச் சந்திக்குப்
போகுமுன்பு வருகின்ற ஊர் கல்வயல். அந்தத் தெருவிலேயே தொடக்க நிலைப் பாடசாலையாகச்
சைவப்பிரகாச வித்தியாசாலை. அந்தப் பாடசாலை ஆசிரியர்களுள் ஒருவர் இராமுப்பிள்ளை.
அவர் தமிழாசிரியர்.
ஆசிரியர் என்றால் தொழிலாகச் செய்பவரல்லர். ஆசிரியராக வாழ்ந்து காட்டியவர். எந்த
நெறிகளைக் கற்பிக்கிறாரோ அந்த நெறிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் இராமுப்பிள்ளை.
அவரை நன்றாக அறிவேன். அவரும் என் தந்தையாரும் நல்ல நண்பர்கள். என் தந்தையாரும்
தமிழாசிரியர். நாங்கள் மறவன்புலவில் வாழ்ந்தோம். இராமுப்பிள்ளை குடும்பத்தினர்
கல்வயலில் வாழ்ந்தனர்.
இருவருக்கும் ஒற்றுமைகள் பல. இருவரிடமும் நீண்ட காலமாக மிதிவண்டிகள் இருந்தன.
இருவரும் வேட்டியும் மெய்ப்பும் அணிந்தனர். இராமுப்பிள்ளை சால்வையும் அணிவார்.
நெற்றியில் திருநீற்றையும் நடுவில் சந்தனப் பொட்டையும் இருவரும் அணிந்தனர்.
இராமுப்பிள்ளை உயரம் குறைந்தவர். என் தந்தையார் நடுத்தர உயரம்.
என் தந்தையார் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியர்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் ஓர் அச்சகத்தையும் பதிப்பகத்தையும் நிறுவி நடத்தி
வந்தார்.
அக்காலத்தில் இராமுப்பிள்ளை மாலை வேளைகளில் அச்சகத்துக்கு வருவார். அவர்
மிதிவண்டியை நிறுத்தி அச்சகத்துள் வருமுன் என் தந்தையார் இருக்கையை விட்டு
எழுந்து ஓடிச் சென்று, 'வாருங்கோ வாத்தியார்' எனக் கூறி அழைத்து வருவார். அத்துணை
மரியாதையும் அன்பும் இராமுப்பிள்ளை மீது வைத்திருந்தார். அவரும் என் தந்தையாரை
மிக ஆர்வத்துடன் பார்த்து, 'எப்படி இருக்கிறியள் வாத்தியார்' என விசாரிப்பார்.
அறுபதுகளின் பிற்பகுதியில் கொழும்புக்கு வேலைசெய்ய நான் வந்த பொழுது, எனக்கு
முதலில் அறிமுகமானவர் சிவானந்தன். இராமுப்பிள்ளையின் இரண்டாவது மகன்.
பின்னர் அறிமுகமானவர் முருகையன். இராமுப்பிள்ளையின் மூத்த மகன்.
அதன்பின்னர் அறிமுகமானவர் அவர்களின் தங்கை கமலாம்பிகை. இன்னுமொரு தங்கை
இருந்தவர். அவரை எனக்கு அறிமுகமில்லை.
எனக்கு அறிமுகமான மூவரிலும் ஒரு பொதுத் தன்மை இருந்தது. மூவரும் தமிழ் மொழி
கைவரப் பெற்றவர்கள். தென்மராட்சியிலுள்ள பாடசாலைகளில் படித்துவிட்டுத் தமிழ் மொழி
கைவராமல் இருப்பது அரிதிலும் அரிது. எனவே அவர்கள் மூவரின் மொழித் திறன்
அருமையன்று.
கல்வயலுக்குச் சிறிது வடமேற்காக, மட்டுவில்லில் வாழ்ந்தவர் வேற்பிள்ளை. அவரை ம.
க. வேற்பிள்ளை எனவும் உரையாசிரியர் எனவும் அழைப்பர். சிதம்பரத்திலிருந்து,
மட்டுவில்லுக்கு வந்து, வேற்பிள்ளையின் வீட்டுத் திண்ணைகளில் இருந்து
பாடங்கேட்டவர் தண்டபாணி தேசிகர். பின்னாளில் திருவாரூரில் கலைஞர் கருணாநிதிக்குத்
தமிழாசிரியரான இவர், அண்ணாமலை மற்றும் மதுரைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப்
பேராசிரியரானவர்.
புராண படனங்கள், பாடலுக்குப் பொருள் சொல்லல், கதைகளை மீட்டல், எவருக்கும்
புரியும் எளிய முறையில் தருதல், கவிதைகள் யாத்தல், நாடகங்கள் எழுதுதல் என்பன
மட்டுவில், கல்வயல், சரசாலை, நுணாவில் ஆகிய இடங்களின் மண்ணோடு கலந்தவை. அந்த
மண்வாசனை அச் சூழலில் வளரும் எவரை விட்டுவைக்கும்?
கல்வயலில் திறமைசாலிகளாகப் பிறந்து, தமிழாசிரியர் வீட்டில் தவழ்ந்து, தமிழ்
வழங்கிய தென்மராட்சியில் திரிந்து வளர்ந்த இராமுப்பிள்ளையின் மக்கள், அறிவியல்
பட்டதாரிகளானாலும் மொழித் திறனில் எவருக்கும் சளைத்தவர்களல்லர் எனக் கொழும்பில்
மிளிர்ந்த காலங்களில் நான் அவர்களோடு பழகத் தொடங்கினேன்.
தம் தந்தையாரைப் போலவே இவர்களும் உயரத்தில் குறைந்தவர்கள். ஆங்கிலத்தில்,
தமிழில், அறிவியலில் இவர்கள் கொண்ட நாட்டமும் திறனும் இளவயதிலேயே சமூகத்தில்
முத்திரை பதித்தவர்கள் ஆக்கின; அறிவால், சிந்தனைத் தெளிவால் ஏனையோரைவிட
உயர்ந்தவர்கள் ஆக்கின.
சிவானந்தன், யாப்பமைதி குன்றாது கவிதைகள் எழுதுவார். அதுவும் அறிவியல்
கருத்துகளைக் கவிதைகளாக வடிப்பார். அவரது கையெழுத்துப் படிகளைப் பல முறைகள்
பார்த்து வியந்திருக்கிறேன். சிலவற்றை அவர் நூல்களாக்கியமையும் எனக்குத்
தெரியும். படிக்கப் படிக்கச் சுவை குன்றா எழுத்துகள் அவை.
மூவரும் மொழிபெயர்ப்பில் வல்லுநர்கள். கலைச் சொல்லாக்கத்தில் முற்றிய புலமை
கொண்டவர்கள். இளவயதிலேயே இத்துணை சொல்லாட்சியா எனப் பலர் வியக்குமளவுக்கு,
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணர்பவர்கள். தமிழுக்கு என்றால் தமிழ்
வரிவடிவங்களுக்கு அல்ல, பிறமொழிக் கலப்பற்ற தமிழ் மொழிக்குக் கொணர்வார்கள்.
அக்காலத்தில் முருகையனின் கவிதைகள், வார இதழ்களில் வெளிவந்தன. அவர் எனக்கு வயதால்
மூத்தவர். அவர் கவிதைகளைப் புரிந்து கொள்வது எளிதல்ல. ஒரு முறைக்கு இரு முறை
படிப்பேன். என்ன பொருளைச் சொல்ல வருகிறார் என்பதை உட்புகுந்து தேடுவேன். ஓரளவு
புரிதல் வந்ததும் விடாது மீட்டும் மீட்டும் படிப்பேன். சுவைப்பேன். சில வரிகள்
மனப்பாடம் ஆகிவிடும்.
நான் எதையாவது எழுத முற்பட்டால் முருகையனின் இனிய தமிழ் நடை எனக்கு உதவ வந்த
காலங்கள் உண்டு. அவர் கையாண்ட சொற்கள் என்னையும் தேடி வரும்.
கவிதை இலக்கியத்தில் தோய்ந்தவர்கள், முருகையனின் கவிதைகளை எடுத்து நோக்கி
அலசியும் ஒப்புப் பார்த்தும் கருத்துரை கூறுவர்.
இலக்கிய வரலாறு தெரிந்தவர்கள், முருகையனுக்குக் கவிதை மற்றும் நாடக இலக்கிய
வரலாற்றில் உள்ள அழியாத இடத்தைக் கூறுவர்.
சமூகக் கண்ணோட்டம் உள்ளவர்களுக்கு, அவரின் சமநோக்கும் காந்தியப் பார்வையும்
பிறவும் வெளிக்கும்.
அரசியல் சிந்தனையாளர், தாம்தாம் சார்ந்த சிந்தனைகளையே முருகையன்
வெளிப்படுத்துகிறார் என்பர்.
அகராதி மற்றும் கலைச்சொல்லாளருக்கு, முருகையனின் பங்களிப்புத் துல்லியமாகத்
தெரியும். மொழிபெயர்ப்பு வன்மை புரியும்.
கல்வி முகாமைத்துவத்தில் முருகையனின் பங்களிப்பைக் கல்வியாளர் அறிவர்.
விருதுகள் அவரைத் தேடி வந்தன. விருதுகளுக்காக ஏங்கும் கண்ணோட்டம் அவருக்கு
இருந்ததில்லை.
பற்றற்றவராக அவரைப் பார்ப்பவர்கள் பலர் இருந்தனர். முருகையன் அதிகம் பேசமாட்டார்.
மனத்துக்குள்ளே ஆயிரம் இருந்தாலும் வெளிக்காட்டார்.
துணைக்கு நல்ல மனைவி, திறமைசாலிகளான மக்கள் இருவர் முருகையனின் அசையும்
சொத்துகள்.
74 வயது வரை வாழ்ந்தவர், தன் இளைய உடன் பிறப்புகளை விட நீண்ட நாள்கள் வாழ்ந்தார்.
சிவானந்தன் காலமானபோது விக்கித்து நின்றேன். சிவானந்தனைப் போலவே அவர் தங்கைகளும்
முருகையனை முந்தினர்.
முருகையன், மரபுக்குள் நின்றவர். மரபுகள் சமைத்தவர். இராமுப்பிள்ளையின் பாதிப்பு
இவரிடம் நிறையவே இருந்தது. கல்வயலின் தமிழ்ப் புலத்தில் பொலிந்த செஞ்சாலி.
தென்மராட்சியின் மரபுப் புலத்தில் பொலிந்த நெடுவேலி. யாழ்ப்பாணத்தின் சிந்தனைப்
புலத்தில் பொலிந்த சித்தாந்தி. ஈழத்தின் வாழ்வுப் புலத்தில் பொலிந்த நன்முத்து.
வரலாற்றோடு பதிந்தவர் முருகையன், எம் நெஞ்சங்களில் வாழ்கிறார்.
tamilnool@gmail.com |