பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
'தமிழியலு'ம் தமிழகத்தில் ஈழத்து இலக்கியமும்!
- மு.நித்தியானந்தன் (யாழ் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளர்) -
[தமிழியல் வெளியீடான மு.புஷ்பராஐனின் 'மீண்டும் வரும் நாட்கள்" கவிதைத்
தொகுப்பிற்கு எழுதப்பட்ட பதிப்புரையிது.]
தமிழியல்
ஈழத்தின் பதிப்புத்துறையில் தன் காலடிகளைப் பதித்தபோது ஈழத்து வெளியீட்டுலகம்
அவ்வளவு பிரகாசமாக இருக்கவில்லை. அத்திப்பூவாய் ஆங்காங்கே எழுதியவர்களின்
அரும்பெரும் முயற்சியால் நூல்கள் வெளியாவதும் அவையும் சேற்றில் விழுந்த கல்லாய்
எதிர்வினையற்று முடங்கிப்போவதுமே இயல்பாய் இருந்தது. இலங்கை முற் போக்கு
எழுத்தாளர் சங்கம் ஈழத்து நூல்களைப் பதிப்பிக்க ஸ்தாபனரீதியாக மேற் கொண்ட
செயற்பாடுகள்கூடப் பலிதமாகவில்லை. அச்சிடும் செலவு, நிதிநெருக்கடி, நூல்களை
வாங்கி ஆதரிக்க அமைப்புகள் இன்மை, வாசக ஆதரவின்மை என்ற காரணங்களுக்கப்பால்
ஈழத்தின் பதிப்புத்துறை பற்றிய நீண்டகால நோக்கிலான தரிசனமின்மையும் நிலவியது.
தமிழியல் இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த ஆக்கபூர்வமான உணர்வுகொண்டவர்களின்
தார்மீக பலத்துடன் ஈழத்து நூல் வெளியீடுபற்றிய இருப்புநிலை குறித்தும்,
வெளியீட்டை வேண்டிநிற்கும் படைப்புகள் குறித்தும் திட்டவட்டமான நோக்கினைக்
கொண்டிருந்தது.
எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழியலின் தோற்றத்திற்கு முன்னரான பூர்வாங்க முயற்சிகள்
போன்று தத்துவம், இலக்கிய வரலாறு, சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று
பல்துறை சார்ந்தும் ஏறத்தாழ இருபது நூல்களைத் தமிழகத்தில் பிரசுரிக்க மேற்கொண்ட
முயற்சிகள் பதிப்புத்துறையில் எமது நம்பிக்கை வேருக்கு நீர்பாய்ச்சின.
ஈழத்து ஆக்கங்களைத் தமிழகத்தில் பதிப்பிக்கும் பணியில் செ.கணேசலிங்கனின் பங்கு
கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். கலாநிதி க.கைலாசபதியைத் தமிழகத்தில்
அறிமுகப்படுத்திய நூலான அவரின் தமிழ் நாவல் இலக்கியம் (1968) செ.கணேசலிங்கனின்
முயற்சியினாலேயே பாரி நிலையம் வெளியீடாகத் தமிழகத்தில் பிரசுரம் பெற்றது.
அ.ந.கந்தசாமி, யோ.பெனடிக்ற் பாலன் ஆகியோருடைய நூல்களுடன் செ.கணேசலிங்கனின்
அனைத்து நாவல்களும் தமிழகத்திலேயே வெளியாகின. செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம்
(1965), செவ்வானம் ஆகிய நாவல்கள் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட நாவல்களாகத்
திகழ்ந்தன.
சோ.சிவபாதசுந்தரத்தின் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947) என்ற நூல்
தமிழகத்தில் வெளியானபோது பயண இலக்கியத்தில் புதிய பாதையை அது திறந்துவைத்தது
என்று கூறலாம். கௌதம புத்தர் அடிச்சுவட்டில் (1960), சேக்கிழார் அடிச்சுவட்டில்
(1978) ஆகிய சோ.சிவபாதசுந்தரத்தின் நூல்கள் தமிழகத்தில் பெருங்கணிப்பினைப் பெற்ற
நூல்களாகும். ராஜாஜியின் முன்னுரையுடன் தமிழகத்தில் வெளியான அவரின்
ஒலிபரப்புக்கலை (1954) ஒலிபரப்புத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூலாக இன்றளவும்
பேசப்பட்டு வருகிறது. கி. லக்ஷ்;மண ஐயரின் இந்திய தத்துவஞானம் பழனியப்பா
பிரதர்ஸ் வெளியீடாகப் பல பதிப்புக்களைக் கண்ட நூலாகும்.
ஈழத்து நூல்களை வெளியிடுவது என்ற நோக்குடன் தமிழகத்தில் ஈழத்து சிருஷ்டிகளை
அறிமுகப்படுத்தும், பரவலாக்கும் நோக்கும் தமிழியலின் பதிப்பு முயற்சிகளின்
அடிநாதமாக இருந்தன. கே.கணேஷ், கந்தையா நவரேந்திரன், கா.கைலாசநாத குருக்கள்,
எம்.ஏ. நுஃமான், என்.கே.மகாலிங்கம், சேரன், குப்பிளான் ஐ.சண்முகன், சி.சிவசேகரம்,
மு.தளையசிங்கம், அ.யேசுராசா, சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய ஈழத்து எழுத்தாளர்களின்
படைப்புகள் தமிழகத்தின் வாசிப்புப்பரப்பிற்குக் கொண்டுவரப்பட்டன. தமிழகத்தின்
க்ரியா, நர்மதா பதிப்பகம், பொதுமை வெளியீடு, காவ்யா, கோவிந்தனின் சமுதாயப்
பிரசுராலயம்,
மீனாட்சி பிரசுராலயம் ஆகிய முன்னனிப் பதிப்பாளர்கள் எமது நூல்களை வெளியிட்டு எமது
பதிப்பு முயற்சிக்கு மிகுந்த ஆதரவு தந்தனர். அமரர் கோவிந்தன் தனது சமுதாயப்
பிரசுராலயத்திற்கூடாக மு.தளையசிங்கத்தின் ஐந்து நூல்களைப் பதிப்பித்து எமக்குப்
பேரூக்கம் தந்ததை நாம் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
கம்பனும் மில்டனும் போன்ற நூல்களைத் தந்த அமரர் எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தர
ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்றோர் ஈழத்து நூல்களைத் தமிழகத்தில் பதிப்பிக்கும்
முயற்சிக்குப் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். சி.சிவசேகரத்தின் நதிக்கரை
மூங்கில் (1983) காவ்யா சண்முகசுந்தரத்தின் இனிய ஒத்துழைப்பின் நல் அறுவடையாகும்.
கே.கணேஷின் தமிழாக்கத்தில் உருவான போர்க்குரல் (1981) (லூ சுன் சிறுகதைகளின்)
தொகுதியையும், சேரனின் இரண்டாவது சூரிய உதயம் (1983) கவிதைத் தொகுப்பையும்
தமிழகத்தில் பதிப்பிக்கும் முயற்சிக்கு எஸ்.வி. ராஜதுரை நிறைந்த ஆதரவு நல்கினார்.
1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் கலாசாரவெளியில் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழியலின் செயற்பாடுகளுக்கு உரமூட்டின. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும்
அதனையொட்டி மட்டக்களப்பு, மலையகம் சார்ந்த இலக்கியவாதிகளின் வருகையும் இலக்கியப்
பரிவர்த்தனைகளும் காத்திரமான சூழலை உருவாக்கின. பல்கலைக்கழக சமூகத் திற்கும்
இலக்கிய உலகிற்கும் இடையிலான உறவுகள் பல்வேறு தளங்களில் பலம் கொண்டன.
கலை, இலக்கிய, நாடக மையமாகக் கொழும்பு திகழ்ந்த நிலையிலிருந்து யாழ்ப்பாணம்
அரங்கச் செயற்பாடுகளின் தளமாக மாறியது. நாடக உலகின் சர்ச்சைகள் இலக்கிய உலகில்
முதன்மை பெற்றுத் திகழ்ந்தது. மல்லிகை, அலை, சமர் ஆகிய சஞ்சிகைகள் இக்காலத்தின்
முக்கிய இலக்கிய வெளியீட்டுக்களங்களாக அமைந்தன. வைகறை, அலை, முத்தமிழ்
வெளியீட்டுக் கழகம் ஆகியன புதிய இலக்கியப் பரப்புகளில் தமது வெளியீடுகளைத்
துணிச்சலோடு கொணர்ந்தன. யாழ்ப்பாணத்தில் Saturday Review என்ற ஆங்கில
வாரப்பத்திரிகையின் வரவும், கொழும்பில் இருந்து வெளியான Lanka
Guardian இதழும் இந்தக் கலாசாரவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தன. சிங்களத்
திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜா, ஆங்கில இலக்கிய விமர்சகர் ரெஜி
சிரிவர்த்தன, ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் கலை, இலக்கிய ஆளுமைகளும் இக்காலகட்டச்
சூழலைப் பாதித்திருந்தன. இக்காலகட்டத்தில் அலை வெளியீடாக வெளியான ஏ.ஜே.
கனகரட்னாவின் தமிழாக்கத்திலான இரு நூல்கள், மைக்கேல் லோவியின் மார்க்சியவாதி
களும் தேசிய இனப் பிரச்சினையும் (1978) மற்றும் மார்க்சியமும் இலக்கியமும்: சில
நோக்குகள் (1981), தீவிர வாசிப்புற்குள்ளாகின.
அரசியல், சமூகத் தளங்களில் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் ஒடுக்குமுறை எழுபது
களில் கூர்மையுற்றது. 1977இன் இனக்கலவரம், தமிழர்கள் மீதான அரசின் உதாசீனம்,
1978இல், பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களின் அனுமதி பற்றிய சிறில் மத்தியூ
வின் இனத்துவேசக் கருத்துகள், 1978இல் மட்டக்களப்பு புயலால் உருக்குலைந்தபோது
வெளிநாட்டு அரசு கொடுத்த நிவாரண உதவிகளைக்கூட அங்கு வழங்க மறுத்த அரசின்
காழ்ப்புணர்ச்சி, மலையகத் தோட்டப்பகுதிகளில் சிங்களக் காடையர்கள் தமிழ்த்
தொழிலாளர்கள் மீது நடத்திய வெறியாட்டங்கள் என்பன தமிழ் அரசியலில் அதிர்வலைகளை
எழுப்பின. 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்ப் பகுதிகளில்
இராணுவம் நினைத்ததைச் செய்வதற்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது. பயங்கர
வாதத்தை ஒழிப்பதற்கென்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரிகேடியர்
வீரதுங்கவின் கொடூரமான இராணுவ அடக்குமுறைகள் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத ரணமாகப்
பதிந்தன. பயங்கரச் சித்திரவதைக்குட்பட்ட நிலையில்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்பம், செல்வம் என்ற இளைஞர்களின் சடலங்கள்
பண்ணைக் கடற்கரை யில் வீசப்பட்டுக் கிடந்தன.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவிட்டு சிங்கள இராணுவம் யாழ். பொதுசன நூல்
நிலையத்தைத் தீக்கிரையாக்கிய கொடூர சம்பவம் உலகெங்கும் வாழும் நூல் அபிமானிகளின்
நெஞ்சிலே கனல் பரப்பியது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த ஒருநாள் நிதியில்
தமிழகத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுவரும் பொறுப்பை திரு. பத்மநாப ஐயரிடம்
ஒப்படைக்கலாம் என்று நான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை கூறியபோது
மாணவருலகமும் அதை அங்கீகரித்தது. தமிழகத்திலிருந்து தனியே புத்தகப் பொதிகளை
யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்துசேர்த்த பத்மநாப ஐயரின் உழைப்பு அரியது.
1983இல் இலங்கையில் ஏற்பட்ட இனசங்காரத்தின்போது தமிழ் மக்களது இருப்பும் வாழ்வும்
கேள்விக்குறியாகின. அரச பயங்கரவாதத்தின் கோரம் தமிழ் மக்களில் ஆழமாகப் பதிந்தது.
ஈழத்து அரசியலின் பின்புலமாகத் தமிழகம் மாறிய காலகட்டத்தில் தமிழியல் தீர்க்கமான
முன்னோக்குடன் தமிழகத்தில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டது. யாழ். நூல் நிலையம்
தீக்கிரையாக்கப்பட்ட கலாசாரப் பேரழிவின் பின் ஈழத்தமிழரின், அரசியல், இலக்கிய,
கலாசாரச் செயற்பாடுகள் பதிவாக வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்ற நிலையில்
தமிழியல் வேகம் கொண்டது.
ஈழத்தமிழரின் படைப்பு முயற்சிகளுக்கும் அவை நூல்வடிவம் பெறுவதற்கும் இடையிலான
பாரிய இடைவெளியைத் தமிழியல் இனங்கண்டது. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் எழுத்
துலக முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பற்றி இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூற,
அவர்களின் படைப்புகள் நூல்வடிவம் பெறவேண்டிய தேவையைத் தமிழியல் உணர்ந்தது.
வரலாற்று முக்கியத்துவம்கொண்ட நூல்கள் பல மறுபிரசுரம் நாடிநின்றன.
சிறுகதை, நாவல், கவிதைக்கு அப்பால் அரசியல் எழுத்துகள், வரலாறு, சமூகவியல்,
பண்பாடு, ஓவியம் போன்ற பன்முகப்பட்ட துறைகளிலும் நூல் வெளியீடுகள் விரிவாக்கம்
பெற்றாக வேண்டிய தேவையை தமிழியல் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்தது. ஈழத்துத் தமிழரின்
தலையாய பிராந்தியப் பத்திரிகையாக வெளிவந்த ஈழநாடு இதழில் ந.சபாரத்தினம் அவர்கள்
எழுதிவந்த ஆசிரியத் தலையங்கங்கள் தமிழ் மக்களது தார்மீகக் குரலின் வெளிப்பாடாகவே
அமைந்தன. ஒரு நாளிதழின் தலையங்கங்கள் ஒருநாள் சாம்ராஜ்யத்தில் விகசித்து
மங்கிவிடுபவை. ஆனால் தமிழர்தம் அரசியல் வாழ்வின் நெருக்கடியான காலப் பகுதியின்
அசலான பதிவுகளாக அமைந்த சபாரத்தினத்தின் ஆசிரியத் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு
நூலாக
வருவது முன்னோடி முயற்சியாகும். ஊரடங்கு வாழ்வு (1985) என்ற இந்த அரசியல் பத்தி
எழுத்துகளை நூலாக்கி உதவ அமரர் கோவிந்தன் இசைந்திருந்தார் என்பதை நன்றியுடன்
நினைவுகூர்கின்றோம்.
பொ.ரகுபதியின் Early Settlements in Jaffna என்ற ஆய்வேடு பத்மநாப ஐயரின் துணிச்
சலான செயற்பாடுகளால்தான் நூல்வடிவம் பெற்றது என்பதும் இங்கு பதிவு பெறுவதற் குரிய
செய்தியாகும். அவ்வாய்வேடு நூல்வடிவம் பெறவேண்டும் என்ற பெருவிருப்புடன்
அவ்வாய்வேட்டை இயக்கப்படகுவழியாகத் தமிழகம் கொண்டுசென்றதிலிருந்து, சென்னையில்
ஒரு வெள்ளிகூட இல்லாத நிலையிலும் அதனை ஒளிப்பதிவில் எழுத்துருவாக்கி அந்நூல் பூரண
வடிவம் பெறும்வரை அவர் அந்நூலாக்கத்தில் காட்டிய சிரத்தை அசாதாரணமானது.
எண்பதுகளின் பின் யாழ். குடாநாடு யுத்தபூமியாக மாறிய நிலையிலும் ஈழத்தின்
தனித்துவத்தைக் குறிக்கும் கலைப்பரிமாணங்களிலும் தமிழியல் காட்டிய அப10ர்வ
அக்கறையின் வெளிப்பாடு தேடலும் படைப்புலகமும் (1987) என்ற ஓவிய, சிற்பத்துறை
நூலாகும். ஈழத்தின் நவீன ஓவிய முன்னோடியான மாற்குவின் ஓவியங்களை முன்வைத்து
வெளியான தேடலும் படைப்புலகமும் என்ற தொகுப்பிற்காக பத்மநாப ஐயர் தமிழகத்தில்
ஓவியக் கலைஞர்களின் ஆக்கங்களைத் திரட்டிய சந்தர்ப்பத்தில் நானும் அவருடன்
சென்றிருக்கிறேன். பத்மநாப ஐயரின் தொலைநோக்குடன்கூடிய அயராத தேடலின் அறுவடை அது.
யாழ்ப்பாணத்தில் கைகூடிவரக்கூடிய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அச்சக வசதிகளுடனும்
பொருளாதாரக் கஷ்டங்களுடனும் தேடலும் படைப்புலகமும் வெளியானபோது தமிழகத்திலும் அது
ஓவியக் கலைஞர்களால் வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது.
சாந்தி சச்சிதானந்தனின் பெண்களின் சுவடுகளில்…(1989) தாய்வழிச் சமூகத்தின் பரிணாம
வளர்ச்சியை விளக்கும் முக்கிய நூலாகத் தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புதிய
புதிய துறைகள் சார்ந்தும், பரவலான கவனஈர்ப்பைப் பெறாத சீரிய எழுத்துக்கள்
குறித்தும் தமிழியல் விசேஷ அக்கறை கொண்டிருக்கிறது. கைலாசநாத குருக்களின் வடமொழி
இலக்கிய வரலாறு (1981) நு}லிலிருந்து சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள்
(1988)
வரை இது பரந்து விரிந்திருக்கிறது.
தமிழகத்தில் தமிழியலின் பதிப்பு முயற்சிகளில்; உறுதுணையாக இருந்தவர்கள் இருவர்:
ஒருவர், தமிழ்ப் பதிப்புத்துறையினைப் புதியதோர் திசையில் இட்டுச்சென்ற க்ரியா
எஸ். ராமகிருஷ்ணன். பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984), ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
(1984) முதலான ஐந்து ஈழத்து நூல்களை ~க்ரியா வெளியீடாகக் கொணர்ந்தவர். மற்றவர்,
~வயல் சி.மோகன். விமர்சனம், புனைகதை, ஓவியம், சினிமா, உலக இலக்கியம் எனப் பல்துறை
ஆளுமை மிக்கவர்.
ஈழத்து இலக்கியத்தை ஆங்கிலத்திற்கும் ஏனைய மொழிகளுக்கும் எடுத்துச்செல்லும்
பெரும் இலக்கையும் தமிழியல் கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ஆக்கங்களை இனங்
கண்டும், தகுதிகண்டும் உரிய எழுத்துகளை அடையாளப்படுத்தியும் முன்னெடுக்கப்பட
வேண்டிய பெரும் இலட்சியத்திலும் தமிழியல் ஆழ்ந்த சிரத்தையை வெளிப்படுத்துகிறது.
தமிழியல் பதிப்பு முயற்சிகள் பத்மநாப ஐயரின் பேருழைப்பின் அறுவடை. அவரின்
இலக்கியக் கனவுகள் விசாலமானது, தொடுவான எல்லையில் விரிவது.
வாசகர் வட்ட வெளியீடாகத் தமிழகத்தில் வெளியான அக்கரை இலக்கியம் (1968) தெகுப்பு
முயற்சியிலிருந்து இன்றுவரை அயராது பதிப்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் பத்மநாப
ஐயரின் செயற்பாட்டால் ஈழத்து நூலாக்க முயற்சிகள் பலம் பெற்றுள்ளன.
மாறுபட்ட சிந்தனைப்போக்குகளையும் அங்கீகரிக்கும் மனவிசாலமும் நூல்தேட்டத்தின்
மீதான தணியாத தாகமும் சர்வதேசத் தொடர்பாடல் ஒழுங்கும் அவரின் பதிப்பு முயற்சி
களுக்குக் கௌரவம் சேர்ப்பவை. எழுத்தாற்றல்களை மிகத்துல்லியமாக இணங்கண்டு அவற்றை
ஊக்குவிப்பதில் ஐயர் சளைத்துப்போவதேயில்லை. ஐயரின் உலகம் எழுத் தாளர்களின்
உலகம்தான்@ புத்தகங்களின் உலகம்தான். இதுதான் அவரின் மிகப்பெரும் பலம்
என்றுபடுகிறது.
அனைத்துலகு தழுவிய நோக்கில் அவர் தொகுத்து வெளியிட்ட லண்டன் தமிழர் நலன்புரி சங்க
ஆண்டுத் தொகுதிகளான 10ஆவது ஆண்டுச் சிறப்பு மலர் (1996), கிழக்கும் மேற்கும்
(1997), இன்னுமொரு காலடி (1998), யுகம் மாறும் (1999), கண்ணில் தெரியுது வானம்
(2001) ஆகிய தொகுதிகள் சமகாலத் தமிழ் இலக்கியச் செல்நெறியினை
நாடிபிடித்துப்பார்க்க உதவுவன. ஓவிய வெளிப்பாடுகளையும் அவர் பிரக்ஞைபூர்வமகாவே
தனது நூல் தொகுதிகளிலே இணைத்திருக்கிறார்.
லண்டனில் பத்மநாப ஐயரின் இலக்கிய வெளியீட்டுக் கனவுகள் ஓவியர் கே.கே.ராஜாவின்
து}ரிகையின் சாதுரியத்தில் - வண்ணங்களின் கலவையில் - கோட்டோவியங்களின் அழுத்
தங்களில் - வடிவமைப்பின் ஒழுங்கில் - பாPட்சார்த்த மனோலயத்தில் - கணனியின் அசல்
பரிச்சயத்தில் - இரவுக்கும் பகலுக்கும் பேதம் தெரியாத உழைப்பின் வியர்வையில்தான்
சாத்தியப்பட்டன என்றால் அது மிகையாகச் சொல்வது ஆகாது. நியூஹாம் தமிழர் நலன்புரி
சங்க வெளியீடாக வெளிவந்த அனைத்துத் தொகுப்புகளின் ஒவ்வொரு பக்கமும் ராஜாவின்
பேருழைப்பில் ஊறித் தோய்ந்தது. இவை ராஜாவின் விளக்கப்படங்கள் என்றாலும் -
எழுத்துப் பிரதியின் கற்பனார்த்த கட்புலமொழியில் அவை சுயத்துவமான ராஜா வின்
கம்பீரமான கலைப்படைப்புகளாகவும் பிரசவம் கண்டிருக்கின்றன. ரெம்ப்ராண்ட்டும்
மைக்கேல் அஞ்சலோவும் தீட்டிய உன்னத ஓவியங்கள் பைபிள் சித்திரங்கள்தான் என்றா லும்
அவை அக் கலைஞர்களின் சுயத்துவ வெளிப்பாடாகவே பாராட்டுப் பெறுகின்றன. பத்மநாப
ஐயரின் மலர்களில் இடம் கிடைக்கப்பெற்ற படைப்பாளிகள் பாக்கியசாலிகள் தான். தன்
நுணுகிய வாசிப்பில் எழுத்துருக்களின் ஆத்மாவைத் தரிசித்து அதனைக் கோடுகளில்,
வண்ணங்களில் தனது கற்பனையின் விகசிப்பில் தீட்டி வெளிப்படுத்திய ராஜாவின்
விளக்கப்படங்கள் தனித்துவ கலை ஆய்வுக்குரியன.
பிரார்த்தனைக்கு இனிய கீதங்கள் போல இந்நூல் தொகுதிகளின் பெருவெற்றிக்கு ராஜாவின்
ஓவியங்கள் ஆதார மாக அமைந்திருக்கின்றன.
இன்று தமிழில் பதிப்புத்துறை கணிசமான வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதில் சந்தேக
மில்லை. புதிய பதிப்பாளர்களின் வரவும், புதுமை முயற்சிகளில் நாட்டமும் இந்தப்
புதிய வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள். வன்னியிலிருந்து வெளியாகும் நூல்களின்
வடிவநேர்த்தி நம்மைப் பிரமிக்கவைக்கின்றது. கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும்
காத்திரமான நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுவாமி விபுலானந்த
அடிகள் இயற்றி
1947இல் முதற் பதிப்புக் கண்ட யாழ் நூல், வி.சீ.கந்தையா எழுதி 1964இல்
முதன்முதலில் வெளிவந்த மட்டக்களப்புத் தமிழகம் போன்ற பழைய நூல்கள் வெகு
சிரத்தையோடு மீளப்பதிப்பிக்கப்பட்டு வருவது சிலாகிக்கத்தக்கதாகும்.
ஈழத்து எழுத்துலகில் புத்தகச் சந்தை வியாபாரிகளின் பிரவேசமும் அதிகரித்துள்ள
சூழலில் தமிழியல் பதிப்புத்துறையில் தன் பணியை
விசாலித்திருப்பது நம்பிக்கை தருவதாகும். இது பவுண்களாலும் டொலர்களாலும்
உருவாவதில்லை. திரண்ட நோக்கு, அயராத தேடல், பாரிய உழைப்பு, கூட்டு ஒத்துழைப்பு
ஆகிய ஆதாரதளங்களில் எழுப்பப்படும் இலட்சிய வேள்வி. (தமிழியல் வெளியீடான
மு.புஷ்பராஐனின் 'மீண்டும் வரும் நாட்கள்"
கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட பதிப்புரை.)
நன்றி: அப்பால்தமிழ். காம்
[மேற்படி கட்டுரையில் திரு.மு.நித்தியானந்தன் மேலும் பல முக்கியமான
பதிப்பகங்களைக் குறிப்பிடத் தவறியுள்ளார். திரு. பத்மநாபரின் (இலண்டன்) தகவல்கள்,
முயற்சிகளின் அடிப்ப்டையிலேயே மேற்படி கட்டுரை எழுதப்பட்டிருப்பதால் மேலும் சில
பதிப்பகங்களின் பெயர்கள் தவறவிடப்பட்டுள்ளன.
திரு.பத்மநாபரின் இலங்கை-இந்தியத் தமிழ் எழுத்தாளர்களுகிடையில் தொடர்புகளை
பேணுதற்கெடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆயினும் அவரது முயற்சிகளை மட்டும்
அடிப்படையாக வைத்து ஆய்வுகளையோ அல்லது விமர்சனங்களையோ எழுத முற்படின் சில
சமயங்களில் அவை முழுமையானவையாக அமைந்து விடாமல் போவதற்குரிய சாத்தியங்களுள்ளன.
ஒருகாலத்தில் பேராசிரியர் கைலாசபதி போன்றவர்கள் தம் சார்பான
அணியினரையே முன்வைத்து விமர்சிக்கின்றார்களென்று குற்றச்சாட்டொன்று
முன்வைக்கப்பட்டது. அதே குற்றச்சாட்டினை இன்று திரு,பத்மநாபர்
பிரதிநிதிப்படுத்தும் ஈழத்து இலக்கியவாதிகள்/ படைப்புகள் விடயத்திலும் வைக்கலாம்.
எனவே இத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை அல்லது விமர்சனங்களை எழுத விரும்புவோர் திரு.
பத்மநாபரின் முயற்சிகளுடன் , தங்களது தனிப்பட்ட ரீதியிலான தேடல்களையும் சிறிது
நிகழ்த்தினால் ஓரளவு விரிவான, முழுமையான ஆய்வுகள் அல்லது விமரிசனங்கள்
வெளிவருதற்கு வாய்ப்புகளுள்ளன என்பது எமது கருத்து. மேற்படி கட்டுரையில்
குறிப்பிட வேண்டியதாகப் பின்வரும் பதிப்பகங்களின் முயற்சிகளும் கவனத்தில்
எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம்:
மணிமேகலை பிரசுரத்திலிருந்து புற்றீசல்கள் புறப்பட்டதுபோல் பல படைப்புகள்
வெளிவந்தாலும் அவ்வப்போது ஈழத்தின் முக்கியமான பல எழுத்தாளர்களின் படைப்புகளும்
வெளிவந்துள்ளன. அந்ந வகையில் அருள் சுப்பிரமணியம், நா.பாலேஸ்வரி, புலோலியூர்
சதாசிவம் போன்ற பலரின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.
எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பாரி பதிப்பகத்தின் மூலம் வெளிவரச் செய்த் படைப்புகள்
பற்றிக் குறிப்பிட்ட மு.நித்தியானந்தன் அவர்கள் செ.க.தனது சொந்தப் பதிப்பகமான
குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்ட பல ஈழத்து நூல்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்', 'ஒப்பியல் இலக்கிய'முட்படப்
பல நூல்கள் , கலாநிதி கா.இந்திரபாலாவின் 'இலங்கையின் திராவிடக் கட்டிடக்கலை' ,
கலாநிதி
கார்த்திகேசு சிவத்தம்பியின் 'யாழ்ப்பாணம்', பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின்
'ஈழத்து வாழ்வும் வளமும்', கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளையின் 'வட இலங்கை
நாட்டார் அரங்கு' மற்றும் செ.கணேசலிங்கன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன், கலாநிதி
சபா.ஜெயராசா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், நந்தி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,
பொ.கருணாகரமூர்த்தி, வ.ந.கிரிதரன், கடல்புத்திரனுட்படப் பலரது நூல்களை செ.க.வின்
குமரன் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு தமிழகத்துப் பதிப்பகமான ஸ்நேகா பதிப்பகத்தையும் நிச்சயம்
குறிப்பிடத்தான் வேண்டும். ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக
கி.பி.அரவிந்தனின் 'முகம் கொள்', பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும்
நேரம்', 'கிழக்கு நோக்கிச் சில மேகங்கள்', வ.ந.கிரிதரனின்'அமெரிக்கா' மற்றும்
'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' , வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள் ஆகிய நூல்கள வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் ஈழத்துப் படைப்புகளை வெளியிடும் இன்னுமொரு முக்கியமான பதிப்பகம்
எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பகமாகும். எஸ்.பொ.வின் பல நூல்கள்,
குறமகளின் சிறுகதைத் தொகுதிகள், இரசிகமணி கனக-செந்திநாதனின் 'ஈழத்து இலக்கிய
வளர்ச்சி' மற்றும் 39 புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பாக
வெளிவந்த 'பனியும் பனையும்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். முதல் முதலாக உலகெங்கும்
பரந்து வாழும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்ளை உள்ளடக்கிய மேற்படி
'பனியும் பனையும்' தொகுதி வெளிவந்த காலத்தில் தமிழக இலக்கிய
சூழலில் மிகுந்த பாராட்டுதல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடையாளம் இன்னுமொரு முக்கியமான பதிப்பகம்.
சோபாசக்தியின் 'கொரில்லா' நாவல், டானியலின் நாவல்களெனப் பல நூல்களைத் தமிழகத்தில்
வெளியிட்டுள்ளது. சுகன் , சோபாசக்தியின் 'கருப்புப் பிரதிகள்' பதிப்பகமும்
தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தனின் 'காந்தளகமும்' ஈழத்துப்
படைப்பாளிகளின் நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. [இங்கு குறிப்பிட்டுள்ள பதிப்பகங்கள் சில ஓர்
உதாரணத்திற்காக, ஞாபகத்திலிருந்தவரை, குறிப்பிடப்பட்டுள்ளன. முழுமையான
பட்டியலல்ல.]
இவற்றையெல்லாம் திரு.மு.நித்தியானந்தன் வேண்டுமென்றே தவிர்த்திருப்பாரென்று நாம்
கருதவில்லை. அவர் அவருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்படி
கட்டுரையினை எழுதியிருப்பதாகக் கருதுகின்றோம். அவர் தனது மேற்படி கட்டுரையில்
ஈழத்துப் படைப்புகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பதிப்பாளர்கள், தனி
மனிதர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதால் இது பற்றிய எமது கருத்தினை ஒரு பதிவுக்காக
இங்கே குறிப்பிடுகின்றோம். - பதிவுகள் -] |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|