| 
  தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்: தமிழில் மொழிபெயர்ப்பு 
  முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன!
 - லதா ராமகிருஷ்ணன் ( செயலர்
 தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் ) -
 
 
  மதிப்பிற்குரியீர், 
  வணக்கம். ஒரு மொழியின் இலக்கிய வளமைக்கும், மொழியின் செழுமைக்கும், பிற மொழி, பிற 
  நில தனித்துவங்களையும், எல்லா மொழிகளுக்கும், வாழ்வியல்களுக்கும் இடையே நிலவும் 
  அடிப்படையான ஒற்றுமைகளையும் அறிந்துகொள்வதிலும், புரிந்துகொள்வதிலும் 
  மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்திருக்கின்றன; வருகின்றன. 
 நம் தமிழ்மொழியை எடுத்துக்கொண்டால் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் பிறமொழி 
  எழுத்தாக்கங்களை – புனைவு சார்ந்த / சாராத படைப்புகள் – தொடர்ந்தரீதியில் 
  வருடக்கணக்காக, எந்தவித அங்கீகாரமில்லாத நிலையிலும்கூட, பெரும்பாலும் ஆங்கிலம் 
  தொடர்புமொழியாக உள்ள அளவில் தமிழில் மொழிபெயர்த்துவந்திருக்கிறார்கள்; 
  வருகிறார்கள்.
 
 இன்று தமிழகக் கல்லூரிகள் சிலவற்றில் மொழிபெயர்ப்புக் கலை குறித்த 
  பட்டயப்படிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் மேலைய நாட்டினரும், வட 
  இந்தியர்களும் மொழிபெயர்ப்பு குறித்து எழுதியுள்ள நூல்களே பயன்படுத்தப்படுகிறது. 
  எனில், தமிழில் மொழிபெயர்ப்பாளராக இயங்கக் கூடியவர்கள் தமிழில் 
  மொழிபெயர்ப்புக்கலையின் வரலாறையும், அதன் முந்தைய , தற்காலத்தைய பார்வைகள், 
  போக்குகள், பின்னணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
 இந்தப் புரிதலோடு, மொழிபெயர்ப்பாளர்களுடைய பணி, பங்களிப்பு குறித்த 
  விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத்தோடு இயங்கிவரும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் 
  சங்கம் கடந்த வருடங்களில் மொழிபெயர்ப்புக்கலை இன்று.,( தமிழில் இயங்கி வரும் 
  மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பு அனுபவங்களையும், சவால்களையும் 
  எடுத்துரைக்கும் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும் இந்த நூலில் மொழிபெயர்ப்பாளர்கள் 
  பற்றிய விவரக்குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன) மொழிபெயர்ப்பியல் – தற்காலப் 
  பார்வைகள் ( ஐந்து அனுபவம் மிக்க மொழிபெயர்ப்பாளர்களின் அகல்விரிவான கட்டுரைகள் 
  இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன) என்ற இரு நூல்கள் வெளியாகக் காரணமாக 
  இருந்திருக்கிறது. பாவை பதிப்பகம்(என்.ஸி.பி.ஹெச்) இந்த இரு நூல்களையும் 
  வெளியிட்டு உதவியிருக்கிறது.
 
 இதன் தொடர்ச்சியாக ’தமிழில் சிற்றிதழ்கள் மொழிபெயர்ப்புக்கலைக்கு ஆற்றியுள்ள 
  கணிசமான பங்களிப்பை ஆவணப்படுத்தும் இன்னொரு நூலையும் கொண்டுவரத் 
  திட்டமிட்டுள்ளோம்.
 
 தமிழ்ச்சிற்றிதழ்கள் சார்ந்த தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள், ஆர்வலர்கள், 
  சிற்றிதழா சிரியர்கள், பதிப்பகத்தார் இந்த முயற்சியில் ஆர்வத்தோடு 
  பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று என யாராக இருந்தாலும் சரி, தமிழில் 
  மொழிபெயர்ப்புப் பணிகள் குறித்து கீழ்க்கண்ட தலைப்புகளில் முழு வெள்ளைத்தாளில் 10 
  பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகள் எழுதியனுப்பித் தரும்படி கேட்டுக் 
  கொள்ளப்படுகிறார்கள். தங்கள் புகைப்படத்தையும், தங்களைப் பற்றிய அடர்செறிவான 
  விவரக் குறிப்பையும் இந்த மாத இறுதிக்குள் புதுப்புனல் அலுவலக முகவரிக்கு 
  அனுப்பித் தரும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 கட்டுரைகள் நூல்வடிவம் பெறும்போது அதில் இடம்பெற்றுள்ள கட்டுரையாளர்களுக்கு 
  நூலின் இரண்டு பிரதிகளும், குறைந்தபட்சமாக ரூ.250 சன்மானமும் அனுப்பித் 
  தரப்படும்.
 
 நன்றி
 
 தங்கள் உண்மையுள்ள
 லதா ராமகிருஷ்ணன்
 செயலர்
 தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்
 
 கட்டுரைகளுக்கான பொதுத்தலைப்பு: தமிழ்ச் சிற்றிதழ்களின் மொழிபெயர்ப்புக் 
  கலை சார் பங்களிப்பு
 
 •தமிழில் சிற்றிதழ்கள் – வரலாறு
 •தமிழ்ச் சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்பின் இடம்
 •இயக்கம் சார்ந்த ஏடுகளின் மொழிபெயர்ப்புகள்
 •புனைவு / புனைவு-சாரா மொழிபெயர்ப்புகள்
 •தலித்திய மொழிபெயர்ப்புகள்
 •பெண்ணிய மொழிபெயர்ப்புகள்
 •நாடகம் / ஓவியம் சார் மொழிபெயர்ப்புகள்
 •பிறவேறு
 
 கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
 புதுப்புனல்
 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை(முதல் மாடி)
 (ரத்னா கஃபே எதிரில்)
 சென்னை – 600 005
 
 Email: ramakrishnanlatha@yahoo.com
 |