கனடா: ஆர்த்தி / ஆனந்தி
சகோதரிகளின் அரங்கப் பிரவேசம்.
- மாலினி அரவிந்தன் -
அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரி ஆசிரியர் லலிதாஞ்சனா
கதிர்காமனின் மாணவிகளான ஆர்த்தி அனந்தி சகோதரிகளின் அரங்கப்பிரவேசம் ஆவணி 16ம்
திகதி 2009, ரொறன்ரோவில் உள்ள ஆமேipயன் யுத் சென்டரில் குறித்த நேரத்தில்
ஆரம்பிக்கப்பட்டு; மிகசிறப்பாக நடந்தேறியது.
கலைத் தன்மையோடு மிகவும் சிறப்பாக அரங்க மேடை அமைக்கப்பட்டிருந்தது. சரியாக மாலை
ஐந்து மணிக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த நடராஜருக்கான சலங்கைப் பூசையுடன்
நிகழ்ச்சி ஆரம்பமானது. இன்று முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரான
திரு. குயின்ரஸ் துரைசிங்கம், செல்வி. சந்தியா குணசேகரன் ஆகியோர் அரங்கப்பிரவேச
நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்கள். தமிழ்த்தாய் வணக்கம்,
கனடிய தேசிய கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. ஆர்த்தி,
அனந்தி ஆகியோரின் பெற்றோரான திரு.பா. ஜெயசிங்கம் திருமதி ரஜனி ஜெயசிங்கம் ஆகிய
இருவரும் வரவேற்புரையாற்றினார்கள்;.
அரங்கப் பின்னணிக் கலைஞர்களான (நட்டுவாங்கம்) பரதகலாவித்தகர் ஸ்ரீமதி லலிதாஞ்சனா
கதிர்காமன், (வயலின்) இசைஞானபூபதி ஸ்ரீ ஆர். எஸ். கேசவமூர்த்தி, (பாட்டு)
இசைக்கலாவித்தகர் லாசந்தி இராஜ்குமார், (மிருதங்கம்) மிருதங்க கலாவித்தகர் ஸ்ரீ
கனகேந்திரன் குகேந்திரன், (கடம்) செல்வன் அஸ்வந் சிறிகரன், (மோர்சிங்) செல்வன்
கரி~; சிவரூபன் ஆகியோர் தங்கள் இசைத் திறமையால் எந்த ஒரு குறையும் இல்லாமல்,
நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார்கள்.
பரதத்திற்கான உடல் அமைப்பையும் கண்களையும் கெண்ட ஆர்த்தி, ஆனந்தி சகோதரிகளின்
அரங்கப் பிரவேசம் தோடை மங்களத்தோடு ஆரம்பித்து புஸ்பாஞ்சலி,
ஆலாரிப்பு ஜதீஸ்வரம், நவரசம், சப்தம், பதவர்ணத்தோடு தொடர்ந்தபோது,
பார்வையாளர்களுக்காக சிறிது நேரம் இடைவேளை விடப்பட்டது. நவரசத்தில் இருவரும் நவரச
பாவங்களை மிகவும் சிறப்பாக வெளிக் கொண்டு வந்து சபையோரின் பாராட்டைப் பெற்றுக்
கொண்டனர்.
பரத நாட்டியத்தில் மட்டுமல்ல, ஏனைய துறைகளிலும் சகோதரிகள் சிறந்து
விளங்குகிறார்கள் என்பதற்கு அடுத்து நடந்த நிகழ்ச்சி கட்டியம்கூறி நின்றது.
ஆர்த்தி பாட்டுப்பாட, அனந்தி வயலின் இசைக்க, திடீரென இசை நிகழ்ச்சி நடக்கும்
அரங்கத்திற்கு நாங்கள் வந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றியது. அந்த இசையில்
மூழ்கிப்போன சபையினரின் ஏகோபித்த பாராட்டையும் இருவரும்; பெற்றுக் கொள்ளத்
தவறவில்லை.
தொடர்ந்து
அக்கடமி ஒவ் பைன் ஆட்ஸ் அதிபர் நிரஞ்சனா சந்துருவின் உரை இடம் பெற்றது. நடன
ஆசிரியையும், அவரது சகோதரியுமான லலிதாஞ்சனா கதிர்காமனின் சிறப்பான பணியைப்
பாராட்டியதோடு மட்டும் நின்றுவிடாது மாணவிகளின் பெற்றோரையும் மனம் திறந்து
பாராட்டினார். ஆசிரிய தராதரத்தை அடையும் மாணவிகளுக்குத் தொடர்ந்தும் பயிற்சிகள்
கொடுத்து அவர்களைப் பண்பட்ட, பயிற்ச்சி பெற்ற ஆசிரியர்களாக்குவதற்கு வேண்டிய சகல
முயற்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்பு
விருந்தினராக வருகை தந்திருந்த லீலா சந்திரசேகரனின் உரை இடம் பெற்றது. சிறுபராயம்
முதல் பயின்று இன்று உயர் நிலையை அடைந்துள்ள ஆர்த்தி அனந்தி சகோதரிகள் தாம் கற்ற
கலையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று தமிழிற்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை
சேர்க்கவேண்டும் என்று கூறி, நடன ஆசிரியை திருமதி லலிதாஞ்சனாவையும், பெற்றோரையும்
வாழ்த்தி விடைபெற்றார்.
தெடர்ந்து உரையாற்றிய பிரதம விருந்தினரான திரு. குரு அரவிந்தன் தனது பிரதம
விருந்தினர் உரையில், உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் தெய்வீக அம்சம் கொண்டபரதக்
கலை இன்று தமிழர் வாழ்வியலில் முதன்மை பெற்ற கலையாகத் திகழ்கின்றது என்றும்,
அந்தக் கலையை முறையாகக் கற்று இன்று அரங்கப் பிரவேசம் செய்யும் ஆர்த்தி
ஜெயசிங்கம், அனந்தி ஜெயசிங்கம் ஆகியோரை அதற்காகப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் ஆடற்கலையில் மட்டுமல்ல, கல்வி கேள்விகளிலும் மிகவும் சிறந்து
விளங்குவதாகவும், மேலும் இவர்களுக்கு இந்த தெய்வீகக் கலையைப் பயிற்றுவித்த நடன
ஆசிரியையான பரதகலாவித்தகர் லலிதாஞ்சனா கதிர்காமன் அவர்களையும், இவர்களின்
பெற்றோரான திரு.பா. ஜெயசிங்கம், திருமதி ரஜனி ஜெயசிங்கம் தம்பதியினரையும் அவர்கள்
எடுத்துக் கொண்ட அரிய முயற்சிக்காகப் பாராட்டினார். தான் ஆரம்ப கல்வியைக் கற்ற
காங்கேயன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் தான் நண்பர் ஜெயசிங்கமும் அவரது
சகோதரர்களும் கல்வி கற்றார்கள் என்பதையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை. ஆர்த்தி,
அனந்தி இருவரும் சிறந்த நாட்டிய தாரகைகளாகப் பரிணமித்துத் தங்கள் குருவிற்கும்
பெற்றோருக்கும் மட்டுமல்ல, எங்கள் இனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று
மனதார வாழ்த்தினார்.
தொடர்ந்து
கீர்த்தனம், பதம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இருவரும் தனித்தனியே நடனமாடினர். அதைத்
தொடர்ந்து அம்மன் பஜன், எழுச்சி நடனம், தில்லானா போன்ற நடன நிகழ்ச்சிகளும் இடம்
பெற்றன. மொத்தத்தில் சகோதரிகள் மிகச் சிறப்பாக நடனமாடித் தமது திறமையைச்
சபையோருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். ஒவ்வொரு நடன முடிவிலும் சபையோரின் ஏகோபித்த
கரவோசை அவர்களுக்கான அங்கீகாரமாக அமைந்திருந்ததை அறியமுடிந்தது. பரதகலாவித்தகர்
ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமன் சிறுவயதில் இருந்தே கலை துறையில் ஆர்வமுடையவர்.
இவர்களின் ஆசிரியரான இவரது கற்பிக்கும் ஆற்றலும் ஆர்த்தி, அனந்தியின் திறமையும்
அரங்கப்பிரவேசத்தின் போது மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டன. தொடர்ந்து
அரங்கப் பின்னணி இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். ஆர்த்தி, அனந்தியின்
நன்றி உரையைத் தொடர்ந்து மங்களத்துடன் அரங்கப் பரவேசம் இனிதே முடிவுற்றது.
ஆர்த்தி, அனந்தியைப் பாராட்டி அவர்கள் எங்கள் இனத்திற்கும் தமிழ் மண்ணிற்கும்
பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
kuruaravinthan@hotmail.com |