| 
அ. முத்துலிங்கத்தின் இலக்கிய வாழ்வில் 
ஜம்பது ஆண்டுகள்.
 - குரு அரவிந்தன் -
 
 
 ![எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் கட்டுரையாசிரியர்]](images/AM_WITH_KR2.jpg) 
[எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஐம்பதாண்டு 
கால இலக்கியப் பணியினைச் சிறப்பிக்குமுகமாக 'காலம்' சார்பில் நடைபெறவுள்ள 
விழாவினையொட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் தன் எண்னங்களை இங்கே பகிர்ந்து 
கொள்கின்றார் - ஆசிரியர் -]சுமார் பதினைந்து வருடங்களுக்கு 
முன்பாக இருக்கலாம், கடிதம் ஒன்று வந்திருந்தது. "நீங்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் 
உதவிக்கு நன்றி. எனது தந்தை வெளி நாடுகளில் இருந்ததால் எனக்கு எனது தாய் மொழியான 
தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற முடியவில்லை. அந்தக் குறை எனது மனதில் 
எப்பொழுதும் இருக்கிறது. எனது மகளுக்கும் அந்தக் குறை இருக்கக் கூடாது என்பதால் 
அவர் தமிழ் மொழி கற்பதற்குத் தேவையான சரியான சாதனங்களைப் பல இடங்களிலும் தேடிக் 
களைத்துப் போனேன். அப்பாவின் கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தங்களின் 
தமிழ் ஆரம் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டுக் கிடைத்தது. அருகே உள்ள கனடாவில் 
தயாரிக்கப் பட்டது 
என்று தெரியாமல், இது போன்ற பாடல்கள் அடங்கிய குறுந்தட்டிற்காக எங்கோ எல்லாம் 
நாங்கள் இதுவரை தேடினோம்.
இப்போதெல்லாம் எனது மகள் தினமும் தாங்கள் தயாரித்த இந்தப் பாடல்களையே கேட்டு 
மகிழ்ந்து போகிறாள். இசை மூலம் மொழியைப் புகுத்துவதில் தாங்கள் எடுத்துக் கொண்ட 
முயற்சி பாராட்டுக்குரியது. அதுமட்டுமல்ல, வெற்றியும் அடைந்திருக்கிறது என்பதற்கு 
எனது மகளே சாட்சி. மீண்டும் தங்களுக்கும், இந்த முயற்சியில் துணை 
நிற்றவர்களுக்கும், பாடல்களுக்கு இசை அமைத்த முல்லையூர் பாஸ்கரன் அவர்களுக்கும் 
எங்கள் மனமார்ந்த நன்றி." 
 அந்தக் கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. எழுதியது வேறுயாருமல்ல பிரபல 
ஈழத்து எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கத்தின் அருமைப் புதல்வி தான் ஆங்கிலத்தில் 
எழுதியிருந்தார். நண்பர் கதிர் துரைசிங்கத்தின் மூலம் அந்தக் குறுந்தட்டு அங்கே 
சென்றடைந்ததாகப் பின்பு அறிந்தேன். சந்தோஷமிகுதியால் இதைப்பற்றி அதிபர் 
கனகசபாபதியிடம் குறிப்பிட்டபோது அவர் இன்னுமொரு சந்தோஷமான செய்தியையும் சொன்னார். 
அதாவது பதிவுகள் என்ற இணையத்தளத்தில் தமிழ் ஆரத்தைப் பற்றி திரு. அ. முத்துலிங்கம்
அவர்கள் எழுதியிருப்பதாகவும் அதை வாசித்துப் பார்க்கும் படியும் 
குறிப்பிட்டிருந்தார். நண்பர் வ. ந. கிரிதரன் ஆசிரியராக இருக்கும் 
பதிவுகள் இணையப் பத்திரிகையில் அதைத் தேடி வாசித்தேன். "மூன்று குருட்டு எலி" என்ற 
தலைப்பில் அதை எழுதியிருந்தார். அதை வாசித்துப் பார்த்தேன். கையிலே வெண்ணெய்யை 
வைத்துக் கொண்டு உலகமெல்லாம் இப்படியான ஒரு குறுந்தட்டுக்காகத் தாங்கள் தேடியலைந்த 
கதையை அவர் மிகவும் அருமையாக நகைச்சுவை உணர்வோடு அங்கே குறிப்பிட்டிருந்தார். நன்றி 
கூறி அந்தக் கடிதத்திற்குப் பதில் அனுப்பியிருந்தேன். அவர் கனடாவிற்கு வந்தபின்தான் 
அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 
சிறுவர்களுக்கான எனது புத்தகங்கள் வெளியிடப்படும் போது, ஒவ்வொரு முறையும் தானே 
நேரில் வந்து பாராட்டிப் புத்தகங்களைப் பெற்றுச் செல்வார். பின் அதைப் 
படித்துவிட்டு அந்தப் புத்தகம் பற்றிய விமர்சனங்களையும் தொலைபேசி மூலம் எடுத்துச் 
சொல்லுவார்.
 
 முன்பெல்லாம் அகவி இலக்கிய வட்டத்தின் சார்பில் ரொறன்ரோ எக்லின்டன் வீதியில் உள்ள 
கொமினிற்ரி சென்ரரில் அடிக்கடி இலக்கியச் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். 
நண்பர் ஞானம் லம்பேர்ட், ரதன் (ரகு) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து 
கொண்டிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இதில் அவ்வப்போது பங்குபற்றினார்கள். 
அப்படிப் பங்குபற்றியவர்களில் குறிப்பாக என்.கே. மகாலிங்கம், திருமாவளவன், குரு 
அரவிந்தன், சுமதிரூபன், வசந்திராஜா, கவிநாகர் கந்தவனம், விக்னேஸ்வரன், அருண் போன்ற 
இலக்கிய ஆர்வலர்கள் சிலரின்; பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றன. ஒரு நாள் 
திரு. அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று விமர்சிப்பதற்காக 
எடுக்கப்பட்டது. ஆளுக்காள் பலவேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்கள். அப்போது திரு 
அ. முத்துலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் மகளுடன் தங்கியிருந்தார். இது சிறுகதைதான் 
என்று சிலரும் இல்லை இது கட்டுரைதான் என்று வேறு சிலரும் 
விமர்சித்தார்கள். சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்களைக் கருத்தில் 
கொண்டுதான்; இந்தக் கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன என்று வேறு சிலரும் 
விவாதித்தார்கள். நான் அவருடைய சில சிறு கதைகளை மட்டுமே வாசித்திருந்தேன். 
விமர்சனத்திற்கு எடுக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை அப்போது நான் 
வாசித்திருக்கவில்லை. எனவே நான் அச்சிறுகதைத் தொகுப்பைப் பற்றிக் கருத்துக்கூறவோ, 
விமர்சிக்கவோ மறுத்து விட்டேன். ஆனாலும் பொதுவாக அவரது அரும் பெரும் முயற்சியை 
வாழ்த்தி ஒலிப்பதிவு செய்திருந்தேன். அது மட்டுமல்ல, ஒரு ரசிகன் என்ற முறையில் அது 
கதையா கட்டுரையா என்று ஆராய்சி செய்வதைவிட அதில் உள்ள 
நல்ல பல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவும், அவரது நகைச்சுவை நடையை ரசிக்கவும் 
நான் கற்றுக் கொண்டேன்.
 
 திரு. அ. முத்துலிங்கம் அவர்களிடம் எனக்குப் பிடித்த விடயம் என்னவென்றால் ஒருவருடைய 
திறமையையும் பாராட்ட அவர் என்றும் பின் நின்றதில்லை. எனக்கு முன்பாகவே அவர் பலரைப் 
பாராட்டுவதை நான் அவதானித்திருக்கின்றேன். என்னுடைய கதைகளோ அல்லது கட்டுரைகளோ 
தனக்குப் பிடித்தாக இருந்தால் உடனே எடுத்துப் பாராட்டுவார். குறிப்பாக ஆனந்தவிடனில் 
வரும் கதைகளைப் பாராட்டுவார். தமிழீழ நெய்தலும் மருதமும் என்ற தொடர் கட்டுரையில் 
சோமசுந்தரப் புலவர் பற்றி ஒரு வாரம் குறிப்பிட்டிருந்தேன். "ஆடிப்பிறப்பிற்கு நாளை 
விடுதலை" என்ற பாடல் பற்றியும், "கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா" என்ற 
பாடல் பற்றியும் 
அந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன். கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா என்ற 
பாடல் வரிகளுக்கு தமிழீழத்தைக் காவல் காக்கும் போராளிகளோடு ஒப்பிட்டு அந்தப் பாடல் 
தீர்க்க தரிசனத்தோடு எழுதப்பட்டிருந்தது என்பதை நான் தெளிவாக விளக்கியிருந்தேன். 
அதை வாசித்துவிட்டு அவர் என்னைப் பாராட்டியது மட்டுமல்ல, ஈழத்துப் புலவர்களின் 
திறமைகளை நாங்கள்தான் வெளிக் கொண்டு வந்து காட்டவேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் 
அப்போது வெளிப்படுத்தினார். ஈழமண்ணில் விடுதலைப் போராட்ட காலங்களில் தான் 
இருக்காத காரணத்தால், விடுதலைப் போராட்டம் பற்றி ஜதார்த்தமாகத் தன்னால் எழுத 
முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. ஆனாலும் 
விடுதலைப் போராட்டம் சார்ந்த சில கதைகளை, ஈழத்தமிழனாய் அவ்வப்போது எழுதித் தனது
 கடமையைச் செவ்வனே செய்திருந்தார்.
 
 இந்த ஜம்பது ஆண்டு காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் அரிய பல சாதனைகளை அவர் 
செய்திருப்பதையிட்டு நிச்சயமாக நாம்
அவரைப் பாராட்ட வேண்டும். அவர் பெற்ற பரிசுகளும், பாராட்டுகளும் ஈழத்தமிழர்களைப் 
பொறுத்தவரை மிகவும் பெறுமதியானவை. எனவே அவரைப் பாராட்டுவதற்கு இதுவே ஏற்ற 
சந்தர்ப்பமும் ஆகும். இந்த அவரது இலக்கியப் பணிக்குப் பின்னின்று உழைக்கும் அவரது 
அருமை மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறி, அவரது 
தமிழ் இலக்கியப்பணி மேலும் பரந்து விரிந்து உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று 
எனது குடும்பத்தின் சார்பிலும், கனடிய தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் சார்பிலும் 
வேண்டிக் 
கொள்கின்றேன். வாழ்க, வாழ்க என மீண்டும் வாழ்த்துகின்றேன்.
 kuruaravinthan@hotmail.com.
 |