| இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்
            
 - சு. குணேஸ்வரன் -=
 
 1.0 அறிமுகம்
 
  புகலிடச் 
            சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் 
            இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் 
            இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா 
            மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் 
            பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது 
            எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் 
            சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது. 
 2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
 கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள்
            (Little Magazines) 
            என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் 
            வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் 
            வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த 
            ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் 
            இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ 
            இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் 
            வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் 
            இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக 
            அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு
 
 “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை 
            உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் 
            இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)
 
 
  என 
            வல்லிக்கண்ணன் விளக்கம் கொடுக்கின்றார். வெளிவந்த அதிகமான சிற்றிதழ்கள் 
            நின்று விட நிலையிலே கலை இலக்கியத்தில் தம்மைத் தக்கவைக்கும் நோக்குடன் 
            புகலிடத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருப்பனவாக உயிர்நிழல்> 
            காலம்> எதுவரை> தேசம்> 
            மண்> கலப்பை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கடந்த 
            ஓரிரு ஆண்டுகள் வரை வெளிவந்து நின்றுபோனவை இவற்றைவிட அதிகம். 
            அச்சுப்பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இன்றைய 
            இலத்திரனியற் சூழலும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் 
            புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டைப் பின்வருமாறு நோக்கலாம். 
 1 அச்சிதழ்கள் (Print magazines)
 2. அச்சிதழ்களும் இணைய இதழ்களும் (Print 
            magazines and net magazines)
 3. இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals 
            /e-zines)
 4. இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and 
            blogspot)
 
 2.1 அச்சிதழ்கள் (Print 
            magazines)
 
  ஒரே 
            காலப்பகுதியில் ஏறத்தாழ 40 வரையான சிற்றிதழ்கள் வெளிவந்த வரலாறு 
            புகலிடச் சூழலில் உண்டு. அது அருகி கடந்த காலம் வரை 10 -15 வரையான 
            இதழ்களே வந்துள்ளன. தற்போது 10 ற்கும் குறைவான இதழ்களே கலை இலக்கியம் 
            சார்ந்து தொடர்ந்து வெளிவருவதைக் கட்டுரையாளரால் இனங்காண 
            முடிந்துள்ளது. பிரான்சில் இருந்து வெளிவரும் உயிர்நிழல் என்ற சஞ்சிகை 
            (1999 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்துள்ளது) இடையில் வெளிவராதிருந்து 
            கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர். லஷ்மியால் முன்னெடுக்கப்பட்டு 
            இன்றுவரை தொடர்ந்து வருகிறது. உயிர்நிழல் நவீன இலக்கியத்தின் மீதான 
            அக்கறையை> குறிப்பாக பின்நவீனத்துவம்> பெண்ணியம்> தலித்தியம் 
            எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்த இலக்கிய அரசியலில் மிகுந்த கவனம் 
            செலுத்தி வருகின்றது. இவ்விதழின் உள்ளடக்கம்; இலக்கியம் மற்றும் 
            அரசியல் சார்ந்தது மட்டுமல்லாமல் சினிமா அல்லது குறும்படம் குறித்தும் 
            முக்கிய படைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. 
 கனடாவில் இருந்து காலம் என்ற இதழ் கடந்த 1990 ஜூலை முதல் வெளிவருகிறது. 
            இதழ் தொடங்கிய காலம் முதல் செல்வம் ஆசிரியராக இருக்கின்றார். இன்றுவரை 
            35 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழின் சிறப்பம்சமாக தமிழ்ப் 
            படைப்பிலக்கியச் சூழலின் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களின் படைப்புக்கள் 
            பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் சிறப்பிதழ்களா அமைந்திருத்தலைக் 
            குறிப்பிடலாம். சுந்தரராமசாமி அ. முத்துலிங்கம்> தெணியான்> ஏ.ஜே 
            கனகரட்னா> கே.கணேஷ் மற்றும் கலைத்துறைக்குப் பணியாற்றியவர்களையும் 
            வெளிக் கொண்டு வரும் இதழாக காலம் இதழ்கள் அமைந்துள்ளன.
 
 இலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சிற்றிதழின் ஆசிரியாகிய 
            எம் பெளசர் 2009 ஏப்ரல் முதல் லண்டனில் இருந்து எதுவரை என்ற 
            சிற்றிதழைக் கொண்;டு வருகிறார். இதுவரை 4 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழ் 
            புகலிட எழுத்துச் சூழல் ஈழ அரசியற்சூழல் குறித்த படைப்புக்களுக்கு 
            முன்னுரிமை கொடுக்கின்றது.
 
 மண் சஞ்சிகை 20 வருடமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் வியப்பு 
            என்னவென்றால் இந்த இதழுடன் சமகாலத்தில் பெருந் தொகையாக வெளிவந்த 
            இதழ்கள் நின்று போன பின்னரும் கூட இந்த இதழ் கடந்த ஏப்ரல் 2010 இல் 
            20ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. (2) சிறுவர்களை மனங்கொண்டு 
            தமிழ்மொழி> தமிழ் இலக்கியம்> இளையவர்களின் எழுத்தாற்றலை வளர்த்தல் 
            ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து வருகின்றது.
 
 கலை இலக்கியம் தொடர்பான ஆண்டிதழ்களும் வேறு இதழ்களும் வருகின்றன. 
            தமிழ்ச் சூழலில் ஓரளவு வாசிப்புக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களையே மேலே 
            குறிப்பிட்டேன். இவை தவிர கலை இலக்கியம் சாராத விளம்பர இதழ்களும் 
            மற்றும் அமைப்புக்கள் நிறுவனங்கள் சார்பான இதழ்களும் வெளிவருகின்றன. 
            அவை இக்கட்டுரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
 
 2.2 அச்சிதழ்களும் இணைய இதழ்களும் 
            (Print magazines and net magazines)
 
  தமிழ்நாட்டிலிருந்து 
            வருகின்ற காலச்சுவடு, உயிர்மை ஆகியன இவ்வகைப்பாட்டுக்கு நல்ல 
            உதாரணமாகும். இதேபோல் அச்சில் வெளிவருகின்ற எதுவரை> 
            உயிர்நிழல்> காலம் 
            ஆகியவற்றை இணையத்திலும் வாசிக்க முடிகின்றது.  லண்டனில் இருந்து 
            முல்லை அமுதனின் முயற்சியால் காற்றுவெளி என்ற இதழ் வெளிவந்தது. இதுவரை 
            16 இதழ்கள் அச்சில் வந்துள்ளன. ஈழ> தமிழகப் படைப்பாளிகளும் இதில் 
            எழுதுகிறார்கள். நல்ல படைப்புக்களை மீள்பிரசுரமாகவேனும் தொடர்ந்த 
            இச்சஞ்சிகை இவ்வருடம் யூலை மாதம் முதல் மாதாந்தம் மின்னிதழாக 
            வெளிவருகின்றது. 
 த. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘தேசம்’> 
            தேவதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வடு’ ஆகியனவும் மின்னிதழ்களாகவே 
            வாசிக்கக் கிடைக்கின்றன.
 
 “இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று நீடித்து 
            எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்கவேண்டும் என்றால்> 
            மின்வெளியில் (Cyber Space) நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும்” 
            (3)
 
 இது புகலிடச் சூழலில் இன்று சாத்தியமாகி வருகின்றது. இவையெல்லாம் 
            இன்றைய வாசிப்பு சாதாரண அச்சுநிலையைத் தாண்டி இணையத்தின் தேவையை 
            வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
 
 2.3 இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் 
            (e- journals /e-zines)
 
  இணையத்தில் 
            மட்டுமே வெளிவரக்கூடிய இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடுவர். இவை 
            அச்சிதழ்களாக அல்லாமல் தொடர்ந்தும் இணையத்திலேயே குறிப்பிட்ட கால 
            ஒழுங்கில் புதுப்பிக்கப்படுகின்றன. படைப்புக்களைப் பெறுவதுமுதல் அதன் 
            செம்மையாக்கம்> வடிவமைப்பு இடுகை> பின்னூட்டம் என்பனவெல்லாம் 
            இணையத்திலேயே நிகழ்கின்றன. தேவைப்படும் படைப்புக்களின் பக்கங்களைப் 
            பிரதி எடுக்கக்கூடிய வசதிகளும் மற்றவர்களுக்கு அந்தப் பக்கங்களை 
            அனுப்பக்கூடிய வசதிகளும்> வாசிப்பதற்கு இணைப்புக் கொடுக்கக்கூடிய 
            வசதிகளும் இந்த இதழ்களின் எளிமையான வழிமுறைகளாக உள்ளன. 
 தமிழிலே பிரபலமான இணைய இதழ்களாகவும் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் 
            திண்ணை> பதிவுகள்> வார்ப்பு> 
            நிலாச்சாரல்> தமிழோவியம்> வரலாறு. கொம்> 
            முத்துக்கமலம்> அம்பலம்> திசைகள்> 
            ஊடறு> ஆறாம்திணை , மரத்தடி 
            > வெப். 
            உலகம் > தமிழ் சிபி> தோழி.கொம்> ஆகியன உள்ளன. இவற்றில் புகலிடத்தைப் 
            பொறுத்தவரையில் புகலிடத்தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக 
            பதிவுகள்> அப்பால் தமிழ்> ஊடறு> 
            லும்பினி> நிலாச்சாரல்> தமிழோவியம்> 
            தமிழமுதம்> நெய்தல்> வார்ப்பு> 
            புகலி> ஈழம்.நெட்> தூ, 
            இனி> ஆகியவை 
            முக்கியமானவை.
 கனடாவில் இருந்து எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு 2000 ஆம் 
            ஆண்டிலிருந்து வெளிவருகின்ற ‘பதிவுகள்’ தமிழ்ச் சூழலில் மிகுந்த 
            கவனத்திற்குரிய இணைய இதழாகும்.
 
 ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்’ என்ற மகுட 
            வாக்கியத்துடன் கலை இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய அம்சங்களையும் 
            தன்னகத்தே கொண்டுள்ளது. இணையத்தைத் தமிழ்ச் சூழல் பயன்படுத்தத் 
            தொடங்கியவுடனே ஆரம்ப காலங்களில் வெளிவந்த திண்ணை , 
            அம்பலம் , ஆறாம்திணை 
            ஆகிய இதழ்களுடன் பேசப்படக்கூடியதாக ‘பதிவுகள்’ இணைய இதழும் 
            அமைந்திருந்தது.
 
 தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும்> தரவுகளையும்> 
            இணைப்புக்களையும்> ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டுள்ளதோடு: ஆங்கிலக் 
            கட்டுரைகள்> மொழியாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றையும் பதிவுகள் தாங்கி 
            வருகின்றது. குறிப்பாகப் புகலிட எழுத்துக்களை இணையத்தில் கொண்டு வந்த 
            இதழ்களுள் முதன்மையானதாக பதிவுகளைக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
 
 
  றஞ்சி> 
            தேவா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஊடறு என்ற இணைய இதழ் 2005 ஜூனில் 
            இருந்து வெளிவருகின்றது. 2009 இல் இருந்து உமா> ஆழியாள் ஆகியோரும் 
            இணையாசிரியர்களாகச் செயற்படுகின்றனர். பெண்களின் எழுத்துக்களைக் கொண்டு 
            வருவதற்கான ஒரு களமாக இது அமைந்துள்ளது. ‘அதிகாரவெளியினை ஊடறுக்கும் 
            பெண்குரல்' என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு அரங்கியல்> அறிவிப்பு> 
            இதழியல்> உரையாடல்> கட்டுரை> கவிதை> சினிமா> குறும்படம்> சிறுகதை> 
            செவ்வி> பதிவு> மடல்> விமர்சனம்> வேண்டுகோள் ஆகியவற்றைப் பிரிவுகளாகக் 
            கொண்டுள்ளது. 
 பெண்களின் படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் சிற்றிதழ்களாக இருந்த 
            சக்தி> கண்> ஊதா மற்றும் 
            ஊடறு பெண்கள் சந்திப்பு மலர்கள் ஆகியவற்றில் 
            எழுதிய பெண்படைப்பாளிகள் ஊடறு இணையசஞ்சிகையில் இணைந்து எழுதுகிறார்கள். 
            வெளிவந்த பெண்சஞ்சிகைகள் நின்றுவிட்ட நிலையிலே பெண்களின் எழுத்துக்களை 
            ஒருமுகப்படுத்தும் பணியினை ஊடறு செய்து வருகின்றது. வருடாந்தம் 
            நடைபெறும் பெண்கள் சந்திப்பு மலர்கள் பற்றிய செய்திகள் தகவல்கள் 
            வெளிவருதல் இதன் சிறப்பசமாகும். புகலிட ஈழ தமிழகச் சூழலில் பெண்கள்> 
            அவர்களின் பிரச்சினைகள்> அவை சார்ந்த உரையாடல்கள்> பெண் அமைப்புக்களின் 
            செயற்பாடுகள்> என்பவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. பெண்ணியம் சார்ந்த 
            உரையாடலுக்கான சிறந்த களமாகவும் தன்னை வளர்த்து வருவதோடு சமூக நல 
            செயற்பாட்டிலும் பெண்படைப்பாளிகள் இணைந்து செயற்படுவது அறியமுடிகிறது.
 
 அப்பால் தமிழ் (பிரான்ஸ்) இதுவும் ஒரு இணைய இதழாகும். “அப்பாலும் 
            விரிகின்றது வேற்றுமைச் சூழல் அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தழல் 
            ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்” என்பதை மகுட 
            வாக்கியமாகக் கொண்டு 2002 இல் இருந்து வெளியாகின்றது. 1993 இல் 
            வெளியாகிய ‘மெளனம்’ என்ற காலாண்டிதழில் (6 இதழ்கள் வெளிவந்தது) 
            பங்கேற்றவர்கள் அப்பால் தமிழில் இணைந்து செயற்படுகிறார்கள். 
            மட்டுப்படுத்தப்பட்ட பொது நோக்குக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகவும் 
            அப்பால் தமிழ் இணையத்தளத்துடன் அப்பால் தமிழ் நூல்வெளியீட்டு 
            பதிப்பகமாகவும் இது செயற்படுகின்றது. சமூகம் கலை இலக்கியம் வரலாறு 
            தத்துவம் அரசியல் பொருளியல் ஆகிய துறைகளில் அக்கறை காட்டுவதோடு 
            குறுநாவல்கள் குறும்படங்கள்> ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் தாங்கி 
            வருகிறது.
 
 2.4 இணையத்தளம் மற்றும் வலைப்பூ 
            (Website and blogspot)
 
  புகலிடத்திலிருந்து 
            வருகின்ற தனிநபர் இணையப்பக்கங்களையும் வலைப்பூக்களையும் 
            (வலைப்பதிவுகள்) ஒன்றாக நோக்கலாம். இவையே இன்றைய புகலிட எழுத்துலகை 
            அதிகமாகக் கொண்டு செல்பவை. இணையத்தளம் என்பது ஒரு நிறுவனமோ> அமைப்போ 
            தனிநபரோ தம்மைப் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் தமது 
            செயற்பாடுகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஓர் ஊடகமாகும். இதில் 
            தனியே எழுத்துத் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒலி ஒளி தகவல்களையும் 
            இணைப்பதற்குக் கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரவுத்தளங்கள்> 
            செய்தித்தளங்கள்> இணையத்திரட்டிகள் இவற்றில் முக்கியமானவை. புகலிடப் 
            படைப்பாளிகள் தனிநபராகவோ கூட்டாகவோ தமது படைப்புக்களைப் பதிவேற்றி 
            அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்கள். தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கு 
            மேற்பட்ட வலைப்பக்கங்கள் உள்ளதாக எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார் 
            (இணைய எழுத்து> pathivukal.com) 
 இணையத்தின் கட்டற்ற வெளியைப் பயன்படுத்துவதில் இன்று இணையத்தளங்களுக்கு 
            அடுத்ததாகப் பேசப்படுவன வலைப்பதிவுகளே ஆகும். வலைப்பதிவுகள் 1997 இல் 
            இருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் Blog என்றும் 
            தமிழில் ‘வலைப்பூ’ என்று அழைப்பர். இந்த வலைப்பூக்களில் தமது 
            பதிவுகளைச் செய்வோர் வலைப்பதிவர் என்று அழைக்கப்படுவர். எல்லா 
            வலைப்பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் இணையத்தளங்களும் உள்ளன. (இலவசமாக 
            பதிவிடும் வசதியை வழங்குபவற்றில் blogger.com, wordprees.com ஆகியன 
            பிரபலமானவை) வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கும் பிரபல்யமான 
            திரட்டிகளாக தமிழ்மணம்> திரட்டி.கொம்>
            தமிழ் 10.கொம்> தமிழிஷ்> 
            தமிழ்வெளி , தமிழ்ப்புள்ளி மற்றும் இலங்கையில் 
            யாழ்தேவி ஆகியன உள்ளன.
 
 “வலைப்பதிவு என்பது அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும் கடைசிப்பதிவு 
            முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 
            தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப் படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 
            வாசகர் வலைப்பதிவுகளில் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் 
            காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” (4)
 
 சிற்றிதழ்கள் போலவே வாசிக்கக்கூடிய மிகக் கனதியான படைப்புக்கள் 
            வலைத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் கிடைக்கின்றன. மிகப் பிரபல்யமான 
            படைப்பாளிகள் முதல் புதியவர்கள் வரை தத்தமக்கென பக்கங்களை உருவாக்கி 
            எழுதி வருகின்றார்கள்.
 
 அ. முத்துலிங்கம்> எஸ். பொ> பொ. கருணாகரமூர்த்தி> ஷோபாசக்தி> றயாகரன்> 
            வ.ந.கிரிதரன்> இளைய அப்துல்லா> டி.செ.தமிழன்> ப.வி சிறீரங்கன்> 
            கறுப்பி> முல்லை அமுதன்> சந்திரவதனா செல்வக்குமரன்> சந்திரா 
            ரவீந்திரன்> செங்கள்ளுச்சித்தன்> நளாயினி தாமரைச் செல்வன்> பெட்டை> 
            சுகன்> ரமணிதரன்> பொறுக்கி> தேவகாந்தன் ஆகியோர் தொடர்ந்து 
            எழுதுகிறார்கள்.
 
 இவர்களுள் பொ. கருணாகரமூர்த்தி (karunah.blogspot.com) 2003 
            செப்ரெம்பரில் இருந்து பதிவிடத் தொடங்கியதே புகலிடத்தில் ஆக முதலில் 
            வெளியாகிய வலைப்பதிவாக கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. 
            அதிகமானவர்கள் 2004 - 2005 காலத்திலிருந்தே பதிவிடலைச் 
            செய்திருக்கின்றார்கள். ஆழியாள்> சாந்தி ரமேஷ் வவுனியன்> தான்யா> 
            நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னும் பலரின் ஏற்கனவே பதிவிட்ட 
            வலைப்பதிவுகள் பார்க்கக் கிடைக்கின்றன.
 
 அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவது போலவும் எழுதமுடியும். எழுதும் 
            படைப்புக்களுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்களைப் பெறமுடியும். இன்னொரு 
            அம்சம் சுதந்திரமான வெளி. சஞ்சிகைகள்> பத்திரிகைகளில் தணிக்கைக்கு 
            உட்படக் கூடியவற்றை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பதிவு செய்யலாம். 
            ஒலிஒளிக் காட்சிகளை இணைக்கும் வசதியும் உண்டு. இதனாலேயே இன்று உலக 
            அளவில் பேசப்படும் மிக முக்கிய ஊடகவெளியாக வலைப்பதிவுகளும் 
            இணையத்தளங்களும் உள்ளன.
 
 ஊடகவெளி மாற்றம்
 80 களின் இருந்து ஒரு அலையாக பெருமளவிலான சஞ்சிகைகளில் புகலிடப் 
            படைப்பாளிகள் எவ்வாறு எழுத ஆரம்பித்தார்களோ அந்த அலை 90 களின் 
            நடுப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைய ஆரம்பித்தது.  
            இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியமையை அவதானிக்கலாம். 
            ஈழத்திலிருந்து இனப்போராட்டத்தின் காரணமாக அதிகமான இளைஞர்கள் புலம் 
            பெயர்ந்தனர். அந்தப் புலப்பெயர்வுக்கு பல காரணங்கள் இருந்தன. அவை இந்த 
            சஞ்சிகை வெளியீட்டுக்கு செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. 
            காலத்துக்குக் காலம் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்> 
            அடக்குமுறையின் வடிவங்கள்> என்பன புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் 
            விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. அது 90 களின் நடுப்பகுதி வரை 
            தொடர்ந்தது.
 
 என்றாலும் அவர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது 
            கண்காணிப்புக்கு உள்ளாகியது. இதனால் சஞ்சிகைகளில் தொடர்ந்து 
            இயங்குவதும் அச்சுறுத்தலாக அமைந்தது. இலக்கியச் செயற்பாட்டிலிருந்து 
            ஒதுங்குவதும் தொடர்ந்து இயங்குவதும் மாற்றம் கண்டது.
 
 இக்காலகட்டத்தில் உலகமயமாக்கலின் விளைவான இணையத்தின் செல்வாக்கும்> 
            புலம்பெயர்ந்தவர்களின் பல்கலாசார சூழலும் இணையத்தினினூடாக அவர்களின் 
            எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கு சாத்தியங்களை ஏற்படுத்தின. இணையம் 
            என்ற கட்டற்ற வெளி கதையாடலுக்கான வெளியாக மாறியது. ஓரளவு கணனி அறிவு 
            பெற்றவர்கள் படிப்படியாகத் தமது விமர்சனங்களையும் படைப்புக்களையும் 
            இந்த வெளியில் வைப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
 
 குறிப்பாக இணைய இதழ்களின் வருகையே இங்கு முக்கியமாக அமைந்தன. அதனோடு 
            இணைந்த தமிழகத் தொடர்புகள்> தமிழகத்தில் பதிப்பகங்களின் வாய்ப்புக்கள் 
            இன்னும் இந்த எழுத்துக்களை நூலாக்குவதற்கு ஏற்ற வாய்ப்பைக் கொடுத்தன. 
            அதிகமான புகலிடப் படைப்புக்கள் 90 இன் பிற்பகுதியிலிருந்து 
            நூலுருப்பெறுவதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
 
 எனவே> இந்த மாற்றங்கள் ஈழ அரசியலோடு மட்டும் தொடர்புடையனவல்ல. 
            புலம்பெயர் தமிழர்களின் பல்கலாசார சூழலும் இதில் செல்வாக்குச் 
            செலுத்தியிருப்பதை அவதானிக்கவேண்டும். இது புகலிடச் சஞ்சிகைச் சூழலில் 
            வீழ்ச்சி எனக் கருதுவதற்குப் பதிலாக அவர்களின் எழுத்துக்கள் இன்னொரு 
            தளத்திற்கு நகர்ந்துள்ளன எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். அந்த 
            எழுத்துக்களே இணையம் என்ற கட்டற்ற வெளியில் இன்று தொடர்கின்றன.
 
 அடுத்த கட்ட நகர்வு
 “பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் 
            ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி> 
            கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே 
            இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே 
            கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்து கொள்ளாமலே தான் இவை 
            செயல்படுகின்றன.
 
            வீடியோ> ஆடியோ மற்றும் ஓவியங்கள்> கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள்> 
            நேர்காணல்களின் தரவிறக்க வசதி> நேரடியாக எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு 
            உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய 
            முயற்சிகளுக்காக மேற்கொள்ளப்படவில்லை” (5) என்ற எஸ். 
            ராமகிருஷ்ணனின் கூற்று இணைய எழுத்துக்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய 
            சிந்தனையை முன்வைக்கின்றது. 
 இணையவெளியின் வாய்ப்பை எல்லாப் படைப்பாளிகளும் சரியாகப் 
            பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி முதலில் முக்கியமானது. புகலிட 
            வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதும் அனைத்துலகத் தளத்திற்கு 
            எடுத்துச் செல்லக்;கூடியதுமான எழுத்து வகையறாக்கள் எவ்வளவு து}ரம் 
            சாத்தியமாகியுள்ளன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். ‘நானும் 
            இணையத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்வதற்காக எழுதும் எழுத்துக்களையும் 
            ‘கட்டற்ற வெளியில் எதையும் எழுதலாம்’ என்ற எழுத்துக்களையும் கணக்கில் 
            எடுக்கமுடியாது.
 
 அடுத்து இணைய வெளியில் யுனிக்கோட் எழுத்துருக்களைப் பயன்படுத்துதல்> 
            தேடு பொறிகளில் படைப்புக்களைப் பெறமுடியுமாறு பதிவேற்றுதல்> பழைய 
            சிற்றிதழ்களை pdf கோவைகளாக மாற்றி ஆவணப்படுத்துதல்> அச்சில் வரும் 
            இதழ்களை இணையத்திலும் வாசிப்பதற்கு வழிசெய்தல்> படைப்பாளிகள் மற்றும் 
            படைப்புக்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் ஆகியன இணையவெளியில் 
            கவனத்திற் கொள்ளவேண்டிய ஏனைய முக்கிய அம்சங்களாகும்.
 
 தொகுப்பு
 இலத்திரனியல் உலகத்தில் தினந்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் 
            இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து எமது இருப்பை 
            நிலைநிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது. இந்த வகையில் தமிழ்ச் 
            சூழலில் புகலிடச் சிற்றிதழ்களுக்கு இருக்கும் பங்களிப்பைக் குறைத்து 
            மதிப்பிட முடியாது. அவை இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப மாற்றம் 
            கண்டுள்ளன. சில பிரதிகள் மட்டுமே அச்சாகி சிலரின் கைகளிலேயே முடங்கிப் 
            போயிருந்த படைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் இன்று உலகின் பார்வைக்கு 
            கிடைத்து வருகின்றது.
 
 புகலிடத் தமிழரது வாழ்வு> அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்> பல்கலாசார 
            சூழலில் அவர்களின் இடம்> தமிழ்மொழி - தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றின் 
            எதிர்காலம் என்பன பற்றியெல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் ஆராய்வதற்கும் 
            அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்துச் செயற்படுவதற்கும் இவற்றில் 
            வெளிவரும் படைப்புக்கள் முக்கியமாக அமைந்துள்ளன.
 
 எனவே> புகலிடச் சிற்றிதழ்களும் அவற்றில் வெளிவந்த படைப்புக்களும் இன்று 
            இணைய வெளியில் உலாவரும் காத்திரமான படைப்புக்களும் நூலுருப்பெறும்போது 
            அவற்றின் பெறுமதியை தமிழ்ச் சூழல் கணித்துக் கொள்வதற்கு வாய்ப்பு 
            ஏற்படும். இந்தச் சிற்றிதழ்கள் அச்சில் வெளிவந்தாலும் இன்றைய உலகப் 
            போக்கைக் கருத்திற்கொண்டு மின்னிதழ்களாகவும் தொடரவேண்டிய தேவையை இன்றைய 
            இலத்திரனியற் சூழல் வலியுறுத்தி நிற்கின்றது. இதன் மூலம் படைப்புக்களை 
            உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் அது சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தவும் 
            அனைத்துலகத் தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் 
            பற்றியும் சிந்திக்க முடியும். அது சாத்தியமாகி வருகின்றது என்பதையே 
            இன்றைய சிற்றிதழ்ச் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
 
 (கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் 08.01.2011 
            அன்று சிற்றிதழ் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
 
 அடிக்குறிப்புகள்
 (1) வல்லிக்கண்ணன்> ‘இலக்கியச் சிற்றிதழ்கள்’ 
            
            http://www.encyclopediatamilcriticism.com/little_magazines.php
 (2) கவிஞர் ப. பசுபதிராஜா> ஜேர்மனி>
 http://tamilamutham.net/home/index.php?option=com_content&view=article&id=395:-20-&catid=55:germany&Itemid=415
 (3) பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்)> ‘இணைய இதழா அச்சிதழா எது 
            நீடிக்கும்’>
 http://www.pathivukal.com/
 (4) 
            http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
 (5) எஸ். ராமகிருஷ்ணன்> ‘இணைய எழுத்து’> 
            http://www.geotamil.com/pathivukal/s_ramakrushnan_on_internet_writing.htm
 
 உசாவியவை
 1. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் 
            அறிமுகம்”>  கலைமுகம்> ஜனவரி-ஜீன் 2008> இதழ் 47> ப3-7
 2. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” 2010 
            ஆய்வரங்கச் சிறப்பு மலர்> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு> கோவை ப.325 
            (பின்வரும் சுட்டியினூடாக கட்டுரையை முழுவதும் வாசிக்கலாம் 
            http://vallaivelie.blogspot.com/ 
            அல்லது
 http://kathiyaalkal.blogspot.com/2010_08_01_archive.html)
 3. தீபச்செல்வன் : “இணையம் : அளவுகளையும் தாமதங்களையும் அகற்றிய 
            கட்டுப்பாடற்ற வெளி”> கலைமுகம்> 50 வது சிறப்பிதழ்> 2010>
 ப225-228
 4. ஹரன் : “இணையம்: கதையாடல்களுக்கான புதிய வெளி”> கலைமுகம்> 
            ஜீலை-டிசம்பர் 2007> இதழ் 46> ப3-9
 5. http://www.google.com : 
            இணைய இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகள்
 6. http://www.noolaham.org
 7. http://www.pathivukal.com/ : 
            கணித்தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகள்
 8. http://www.tamilcircle.net
 9. http://www.tamilmanam.net/
 
 s kuneswaran <kuneswaran@gmail.com
 |