| மீள்பிரசுரம்: வீரகேசரி.காம்!மலையகம் தந்த சிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்.எம்.கார்மேகம்
 
  மலையகத்தில் 
புத்திஜீவிகள் தோன்றி தங்களின் அறிவை பயன்படுத்தி மலையக சமூகத்திற்கும், 
கல்விக்கும், மலையக மேம்பாட்டிற்கும் கலை, இலக்கியத்துறைக்கும் பெரும் 
சேவையாற்றியவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர்ந்து சென்றதாலும் சிலர் நகரங்களை 
நோக்கி சென்றதõலும் மலையக கல்வியும் மேம்பாடும் மலையக அபிவிருத்திகளும் பின் 
தள்ளப்பட்டன. அந்த வகையில் மலையகத்தில் புத்திஜீவிகளை கொண்ட தலைமை உருவாக வேண்டும் 
என்று போராடிய மலையகத்தில் ஒரு எழுத்து போராளியாகத் திகழ்ந்த எஸ்.எம். கார்மேகம் 
அவர்களும் புலம்பெயர்ந்து தமிழகம் சென்றதையும் கவனிக்கத்தக்கது. மலையகத்தில் 
புத்திஜீவிகளை கொண்ட பலமான தலைமை உருவாக வேண்டும். அப்போதுதான் நாம் 
எதிர்பார்க்கும் ஒரு புதிய மலைகயம் உருவாகும். அந்த நாள்தான் மலையக மக்கள் 
அறிவோடும் தெளிவோடும் சிந்தித்து தமது இலக்குகளை அடையலாம். கடந்த காலங்களில் மலையக 
மேம்பாட்டிற்காக, எழுத்து மூலமும், பத்திரிகைத்துறை மூலமும் சேவையாற்றி 
வந்தவர்களில் மூத்த பத்திரிகையாளர் அமரர் எஸ்.எம்.கார்மேகம் குறிப்பிடத்தக்க 
ஒருவராவார். அந்த வகையில் இவர் மலையகத்தில் பூத்த ஒரு மலர், அறிவு ஜீவி, மூத்த 
பத்திரிகையாளர், வீரகேசரி, தமிழக தினமணி போன்ற பத்திரிகைகளில் துணை ஆசிரியராக 
கடமையாற்றியவர். 
 சென்னை வீரகேசரி மற்றும் கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சியும் போன்ற நூல்களின் 
ஆசிரியர், மலையக சிறுகதைகள், அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர் என பன்முகம் 
கொண்டவர்.
 
 2005 ஆம் ஆண்டு இவர் தமிழகத்தில் காலமானார். அவரை பற்றிய சில நினைவுகள்... மலையக 
மக்களை தோட்டக்காட்டான் வடக்கத்தியான் என சிலர் எள்ளி நகையாடிய ஒரு காலம் 
இருந்ததுதான். மலையகத்தவன் என்று கூறிக்கொள்வதில் வெட்கப்பட்ட படித்த சிலரும் 
இருந்த காலமும் இருந்தது. தம்மை மலைநாட்டான் என்று எங்கும் அடையாளப்படுத்தியவர் 
திரு. கார்மேகம். வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் மலையக எழுத்தாளர்களை எழுதத்தூண்டி 
மலையக எழுத்தாளன் என தனது சக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்.
 
 வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் எனும் புனைபெயரில் தேயிலையின் கதை எனும் 
கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் எனும் புனை பெயரில் நான் பிறந்து வளர்ந்த 
இடம் எனும் கட்டுரையைஎழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக 
எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவரும் இவரே. ஆறு 
சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவரும் இவரே.
 
 ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவரது மலையகம், சார்ந்த 
கட்டுரைகளை மறு பிரசுரம் செய்தன. பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இவரது கட்டுரைகளை 
தொடர்ந்து மறுபிரசுரம் செய்தது. வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்தப்பட்ட முதல் 
நான்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிவர 
உதவினார். வீரகேசரியில் இருந்து நூல் வடிவில் வெளிவந்த முதல் நூல் கதைக்கனிகள் 
என்பது குறிப்பிடத்தக்கது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்நாட்டை 
விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் அவர்கள் புறப்பட்டு 
விட்டார்கள்'எனும் இவருடைய கட்டுரை இம்மக்களின் கண்ணீர் காவியமாகும்.
 
 தனது எழுத்தை பல துறைகளுக்குப் பயன்படுத்தி மலையக மக்களின் துன்பத்தை, சோகத்தை, 
துயரத்தை, ஏக்கப் பெருமூச்சை இலக்கியமாக்கியவர். மித்திரன் வாரமலரில் "தந்தையின் 
காதலி' அழைக்காதே நெருங்காதே', ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். நண்பர் கார்மேகம் 
23 வருடங்கள் வீரகேசரியில் சிறந்த முறையில் பணியாற்றினார்.
 
 இவர் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் அரசியல்வாதிகளோடும் தொழிற்சங்கவாதிகளோடும் 
புத்திஜீவிகளோடும் வர்த்தக பெருமக்களோடும் அவர் ஏற்படுத்திக் கொண்ட நட்பு அவருக்கு 
நன்மதிப்பை தந்தது.
 
 இவர் வீரகேசரியில் பெருநிதி பெருமாள். மூக்கையாபிள்ளை தமிழோவியன் போன்றோரின் 
உந்துதலாலும் ஊக்கத்தாலும் வீரகேசரி நிர்வாகத்தோடு பேசி தோட்ட வட்டாரம் எனும் 
பகுதியை 1960 ஆண்டு ஆரம்பித்தார். அதன்பிறகு அப்பகுதியை தோட்ட மஞ்சரி என பெயர் 
மாற்றம் செய்தார். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக மலையக 
சிறுகதைப் போட்டிகளை நடத்தி மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த 
பெருமை இவரையே சாரும். இவரது பத்திரிகைத்துறை திறமை அனுபவங்களை கவனத்தில் கொண்டு 
இலங்கை இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் இந்திய பிரிவின் தலைவராக 
நியமிக்கப்பட்டார்.
 
 கொட்டக்கலை கல்மதுரை தோட்டத்தில் 19.11.1939 ஆம் ஆண்டு பிறந்த அமரர் 
எஸ்.எம்.கார்மேகம் அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
 
 நன்றி 
http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=636
 |