பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
எதிர்காலம் என்ற ஒன்று .... !
- ஜெயந்தி சங்கர் -
இலக்கியத்தின் அவசியம் குறித்துப் பேசும் போது, 'ஒரே ஒரு வாழ்க்கையோ வாழ்க்கைமுறையோ
நமது மனித மனத்துக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே தான், நம் மனமானது வெவ்வேறு
மனித வாழ்க்கைகளிலும் வெவ்வேறு நிகழ்வுகளிலும் தன்னைப் பொருத்தித்
திருப்தியடைகிறது", என்பதைச் சற்றே வேறுவிதமான சொற்களில் இங்கே சிங்கப்பூருக்கு
வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது அறிவியல் புனைவுகளுக்கும் கூட மிகமிகப்
பொருந்தும்.
அறிவு யுகத்தின் புதிய வரவான 'எதிர்காலம் என்று ஒன்று' என்ற இந்நூல் தமிழ் நவீன
இலக்கியத்தின் முக்கிய வரவு என்பதை படிக்கும் போது வாசகன் கண்டிப்பாக உணர்வான்.
உலகளவில் நடத்தப்பட்ட அறிவியல் புனைக்கதைப் போட்டிக்கு மிகப் பொருத்தமான தேர்வாக
எழுத்தாளர் சுஜாதா நடுவராக இருந்திருக்கிறார். அப்போட்டியில் வென்ற மற்றும்
முன்னிலையில் வந்த கதைகளின் தொகுப்பு இது. சுஜாதாவுக்குப் பிறகு மாலன் போன்ற வெகு
சிலரே சில அறிவியல் புனைக்கதைகளை எழுதினர். அதற்குப் பின்னர், தமிழில் அறிவியல்
புனைவுக்கு இருந்திருக்க வேண்டிய வளர்ச்சி இருக்கவில்லை என்ற குறையை இந்நூல்
ஓரளவிற்கு தீர்க்கும் என்று சொல்லலாம்.
நூலுக்கு எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் 'அணிந்துரை' வழங்கிச்
சிறப்பித்துள்ளார். கண்ணுக்குக் குளிர்ச்சியாக நீல வண்ணப் பின்புலத்தில் ஒரு
செயற்கைக் கோள்! இந்த அட்டையைப் பார்த்ததுமே எடுக்கவும் படிக்கவும்
தோன்றிவிடுகிறது. குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய இயல்பான குழந்தைமை இல்லாமல்
இருந்தால் எப்படியிருக்கும், மரபணுவின் மூலம் மாற்றியமைக்கப் பட்ட பயிர்களோ இனங்களோ
இருக்கும் உலகம் எப்படியிருக்கும், மனிதர்கள் நகலெடுக்கப் படுவார்களேயானால் உலகம்
எப்படியிருக்கும், 'ரோபோ' என்றறியப்படும் இயந்திர மனிதன் மனித உணர்வுகளைப் பெற்றால்
என்னவாகும், வாழ்வில் விதியும் விதிப்பவரும் யார், மூளைமாற்று ஆராய்ச்சி எப்படி
நடக்கும் என்பது போன்றெல்லாம் சிந்திக்கும் பல்வேறு உத்திகளில் பல்வேறு நாட்டுப்
படைப்பாளிகளிடமிருந்து 21 சுவாரஸியமான கதைகள் அடங்கி நேர்த்தியான தொகுப்பு
எதிர்காலம் என்ற ஒன்று .... !
அறிவியலின் மேல் அச்சம், ஆச்சரியம் மற்றும் சந்தேகம் கொள்ளும் மனிதன் நிறைய
யோசிக்கிறான். இடக்கு மடக்காகவும் கோணலான/நேரான கற்பனைகளையும் செய்கிறான். பொதுவாக,
இறைவனின் வேலையை நாம் செய்தால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பேசுவதே அறிவியல்
புனைக்கதையின் அடி நாதமென்று அணிந்துரையில் பி.ஏ. கிருஷ்ணன் சொல்லும் போது, 'அட
ஆமால்ல', என்றே வியக்கிறோம். தொகுப்பில் உள்ள இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகள்
அறிவியல் புனைக்கதைகள் எழுதத் துவங்குவோருக்கு ஓர் உந்துதலாக அமையும் என்ற நோக்கில்
சேர்க்கப் பட்டிருக்கிறதாக உணர்கிறேன்.
ooo
பிராஸிலிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய 'அமலா.. விமலா.. கமலா' என்ற கதையைத்
தவிர இன்னொரு கதையான 'ஆபரேஷன் மகா சங்காரம்'ல் கதைஞர் பூவுலகத்திற்கு வரவிருக்கும்
பேராபத்தைச் சொல்லி நம்மை ஓடச் சொல்கிறார். வாசகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை
கணினி அறிவு இவரின் இந்தக் கதையை மேலும் சிறப்பாக ரசிக்க நிச்சயம் உதவும்.
பாதுகாப்பான இடத்தைத் தெரிவு செய்து கொள்ளச் சொல்லி நமக்கும் வலியுறுத்தும் போது
அமெரிக்காவென்றால் உயர்ந்த கட்டிடங்களையும், இஸ்ரேலென்றால் பேருந்துகளையும், அரேபிய
நாடுகளென்றால் திறந்த வெளிகளையும் தவிர்க்கச் சொல்லி, 'இந்தியாவென்றால் காவல்
நிலையங்களையும் தவிர்க்கவும்' என்பதையும் 'கொஞ்சலுக்கு ஹீப்ரு மொழி உகந்ததல்ல'
என்பதையும் போல கதையெங்கும் பல்வேறு இடங்களில் போகிற போக்கில் எழுதிச் செல்லும்
அவரின் குறும்புகள் இவரது நடையில் இருக்கும் சுஜாதாவின் நடையின் சாயலையும் தாண்டி
வாசகனை ரசிக்க வைக்கின்றன.
ஜெயமோகனின் 'நாக்கு' எனும் கதை உணவு குறித்தும் நாக்கில் படிந்திருக்கும்
குறிப்பிட்ட உணவின் ருசியானது நெடுங்காலத்திற்கு அப்படியே தங்கியிருந்து அதே
ருசியைத் தேடியபடியிருக்கும் என்பதை மிக நுட்பமான ஆச்சரியத்தக்க கோணத்தில்
சொல்கிறது. பல்லாண்டுகளாக அம்மாவின் சமையலுக்குப் பழகிவிட்டு அந்த ருசியை புது
மனைவியின் சமையலில் நீங்கள் தேடிச் சலித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறதா?! ஆம்,
இதிலும் பொருந்தவே செய்கிறது. எனினும், இந்தக் கதையின் களமே வேறு. 'கேக் ஒரு
பெண்ணின் முகம் போல வடிவமைக்கப் பட்டிருந்தது', என்ற முதல் வரியிலேயே முழுவதையும்
சொல்லிவிடாமல், கதையின் மையப்புள்ளியை லேசாகத் தொட்டு மட்டும் காட்டுவது மிகவும்
சுவாரஸியமானது. 'சாக்ஷ்' எனும் மதுவகை எவ்வாறு செய்யப் பெறுகிறது என்பதை போன்றவற்றை
உணரும் போது, இந்தக்கதை பலருக்கும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது.
தத்துவார்த்த பார்வை கொண்ட சேவியரின் 'எலி எலி லாமா சபக்தானி' என்ற கதை, ஒரு கதை
என்ற அளவில் சிறப்பாகவே இருந்தது. வித்தியாசமான கற்பனை. டா வின்ஸி கோட்
பிரபலமாகியிருக்கும் இவ்வேளையில் இந்தச் சிறுகதையும் நிச்சயம் கவனத்தை பெறும்;
அதற்கான தகுதியுடையதும் கூட. அதில் எனக்கு யாதொரு ஐயமும் இல்லை. (நான் இப்படிச்
சொல்வதால் சேவியரின் கதைக்கும் 'தான் ப்ரௌனி'ன் கதைக்கும் ஏதோ தொடர்புண்டு என்ற
நினைத்து விட வேண்டாம். கிருத்துவம் குறித்த பின்புலம் எனும் ஒரே ஒரு சிறிய
ஒற்றுமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை) இருப்பினும், வரலாற்றை மாற்றியமைக்கும்
சிந்தனை அறிவியலில் அடங்குமா என்ற சந்தேகம் என்னுள் எழுந்ததை இங்கு சொல்லாமல்
இருக்க முடியவில்லை. காலம் பின்னோக்கிப் போகிற ஒரு கூறு தான் இக்கதையை அறிவியல்
புனைக் கதையாக்குகிறதோ!?
உலகில் நடக்கும் பல்வேறு அபத்தங்களுக்கு நடுவில் தொலைக்காட்சியின் செய்திகளினூடே
அவ்வப்போது தோன்றி அல்லது சில வார்த்தைகள் பேசி மறையும் ஐநாவின் முன்னாள் அதிபர்
கோ·பி அனான்னின் முகத் தோற்றத்தை நம்மில் பலரும் கவனித்திருப்போம்.
புஷ்களிடமெல்லாம் மாட்டிக்கொண்டு திணரும் இவ்வுலகை நினைத்துக் கவலை கொள்ளும்
அம்முகத்தில் அப்பியிருக்கும் இயலாமையும், என்ன செய்வதென்றே புரியாத குழப்பமும்
எல்லோருக்கும் அறிமுகமானது தான். மலேசிய எழுத்தாளர் ரே.கார்த்திகேசு ஒரு கதை
எழுதும் அளவிற்கு அவர் முகத்தை ரசித்திருக்கிறார் என்று தெரிகிறது. 'எதிர்காலம்
என்ற ஒன்று .... !' எப்படியிருக்கும் என்ற அக்கறையுடனும் கவலையுடனும் விரியும்
கதையின் முக்கிய பகுதி வேற்றுக் கிரவாசிகள் மற்றும் கோ·பி அனான் ஆகியோரிடையே
நிகழும் உரையாடலாய் வடிவெடுக்கிறது. தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அடிக்கடி, 'நான்
புன்னகைக்க வேண்டும்', என்று தன்னுள் சொல்லிக் கொண்டேயிருக்கும் அனானின்
சிந்தனையோட்டம் சரியான நக்கல்!
ooo
'வாலுடன் பிறந்த குழந்தை' போன்ற செய்திகள்/விநோத நிகழ்வுகள் ஒன்றும் தமிழ்ப்
படைப்பாளிக்குப் புதிதல்ல. அத்தகைய அரிய நிகழ்வுகளைச் சுற்றி கற்பனையை விரித்தால்
எழக்கூடியவை சுவாரஸியம் நிறைந்த ஏராளமான கதைகள். ஒவ்வொன்றும் சொல்லும் விதத்தில்
வேறுபடவும் செய்யலாம். தூக்கிப் போட்டால் பந்து கீழே ஏன் விழுவதில்லை என்று இந்த
கணியுகத்தில் ந்யூட்டனின் விதிகளைப் படித்து ஒரு மாணவன் யோசிக்க மாட்டான். ஆனால்,
கீழே விழாமல் பந்து மேலே போனால் என்னென்னவெல்லாம் நிகழலாம் என்று நிச்சயம் கற்பனை
செய்வான். அல்லது மற்றவர் கண்களுக்குப் புலப்படாமல் நடமாட முடிந்தால், நாளைய
தேர்வின் வினாத்தாளில் இருக்கக் கூடிய வீனாக்கள் கணினித் திரையில் விரிந்தால் என்று
ஒரு மாணவன் கற்பனை செய்தால் ஏராளமான அறிவியல் புனைக்கதைகள் கிடைக்கும்.
அப்பருவத்தைக் கடந்தவர்களுக்கு இன்னும் பல்வேறு விதமான கற்பனைகள் இருக்கவே
செய்கின்றன. எப்படிப் பட்ட கற்பனையையும் அறிவியல் புனைவாக ரசிக்கும் விதத்தில்
சொல்லிவிட முடியும் என்பதை நிரூபிக்கும் கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை.
தத்துவப் பார்வையில் வானிலையை முக்கிய கூறாகக் கொண்ட மண்ணாந்தை எழுதிய 'பழைய
ஆல-விதைக் கதை', துகாராம் கோபால்ராவ் மொழி பெயர்த்து எழுதிய 'ஒரு சொட்டு இரும்பு',
' மூன்றாவது தோல்வி' மற்றும் 'மரபணு', சன்னாசி எழுதிய 'பிறழ்ந்த குறிப்புக்கள்',
நா. சுவாமிநாதன் எழுதிய 'மூளை மாற்று ஆராய்ச்சி', மீனாக்ஸ் எழுதிய 'பால் பேதம்',
நளினி சாஸ்திரி எழுதிய 'வானத்திலிருந்து வந்தவன்', அருண் வைத்யநாதன் எழுதிய 'பிம்ப
உயிர்கள்', என். சொக்கன் எழுதிய 'மழலைச்சொல் கேளாதவர்', கி. சீராளன் எழுதிய 'பகல்
நிலம்', இரா. மகேசன் எழுதிய '14-10-2010', நந்தன் எழுதிய 'சம்பவாமி யுகே யுகே',
நடராஜன் ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கும் 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' ஆகிய இங்கு
விவரிக்கப்படாத மற்ற கதைகளும் நிச்சயம் சுவாரஸியத்தில் கொஞ்சமும் குறைந்தவையல்ல.
எதிர்காலம் என்ற ஒன்றையும் கடந்தும் ஒளிவேகத்தில் பாய்ந்தோடக்கூடிய மனித மனதின்
கற்பனைக்கு ஏற்ற தளமான அறிவியல் புனைவுலகிற்கு இவ்வகையான தொகுப்புகள் மேலும் வளமும்
வளர்ச்சியும் கொணரும். தமிழில் அறிவியல் புனைவுக்கு 'எதிர்காலம் என்ற ஒன்று'
வேண்டும் என்ற அக்கறையில் உலகளவில் 'போட்டி' என்ற பெயரில் கற்பனைக் குதிரையை
உசுப்பிவிட்டு படைப்புக்களைத் தொகுத்திருப்பது போற்றக் கூடியது. ஒரு இணைய இதழ்
சிறுகதைத் தொகுப்பை அச்சில் கொண்டு வருவது இதுவே முதல் முறை என்று சொல்லாம். அது
அறிவியல் புனைவாக அமைந்தது இணைய உலகிற்குச் செய்த நியாயமாகவும் தற்செயலாக அமைந்து
விட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பல்வேறு எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதை தொகுப்பு
என்கிற கோணத்திலும் இது தமிழின் முதல் அறிவியல் புனைகதை தொகுப்பாக அமைகிறது.
திண்ணை டாட் காம் நிர்வாகிகள் வருடந்தோறும் அல்லது, இரண்டாண்டுகளுக்கு ஒரு
முறையேனும் இப்போட்டியை நடத்தலாம். அறிவியல் தவிர, 'புலம்பெயர் வாழ்வு', 'சுற்றுச்
சூழல்', 'உலகமயமாதலின் சவால்கள்', 'உலகக் குடிமகன்' போன்ற பல்வேறு விதமான 'கரு'வினை
ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொடுக்கலாம். சில குறிப்பிட்ட கருக்களைச் சுழற்சியில்
கொடுத்தும் கூட நடத்தலாம். அறிவியல் புனைகதைகள் என்கிற சொல்லாடலே கிட்டத்தட்ட இல்லை
என்று கூறும் அளவுக்கு உள்ள தமிழ் எழுத்துலகில் இந்நூல் ஒரு புதிய மாற்றத்தினை
கொண்டு வரக்கூடுமென்று தெரிகிறது. அவ்வகையில், இந்நூலை ஒரு தொடர் பயணத்தின்
துவக்கமாக வைத்துப் பார்க்கும் போது தமிழ் அறிவியல் புனைவிலக்கியத்திற்கு
'எதிர்காலம் என்ற ஒன்று' பிரகாசமாகவே இருக்கிறதாகவே தோன்றுகிறது.
ooo
நூல்: எதிர்காலம் என்று ஒன்று
பதிப்பு: எனி இண்டியன் பதிப்பகம்
பதிப்பாசிரியர் : கோபால் ராஜாராம்
வகை: அறிவியல் புனைக்கதைகள்
வருடம்: ஜனவரி 2005
விலை: Rs 80/கிடைக்குமிடம்:
AnyIndian Pathippagam
# 102, No. 57, P.M.G. Complex,
South Usman Road, T.Nagar, Chennai - 17,
Tamilnadu, India.
Phone: 044-24329283
Website: http://www.anyindian.com/
Email: customerservice@anyindian.com
sankari01sg@yahoo.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|