சிண்டா!
- ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்) -
ஒரு
சமூகம் உயர வேண்டுமானால் அச்சமூகத்தினைச் சேர்ந்த குடும்பங்களும் தனிநபர்களும்
வளர்ந்தாக வேண்டும். அத்தகைய வளர்ச்சி மட்டுமே நிலையான வளர்ச்சியாக அமைய முடியும்
என்றும், அதற்கு கல்வி மேம்பாடே அடித்தளம் என்றும் சரியாகப் புரிந்து கொண்ட
அமைப்புக்கள் எத்தனையோ இருக்கலாம். அதன்படி மிகச் சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தக்
கூடிய அமைப்புக்கள் தான் அரிது. (The Singapore Indian Development Association -
SINDA) சிண்டா என்னும் அமைப்பு அத்தகைய ஓர் அரிய அமைப்பு.
இந்தியர்களின் கல்வி தொடர்பான குழு (Action Committee on Indian Education -ACIE)
செப்டம்பர் 1990 ருக்கும் மார்ச் 1991 க்கும் இடையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரின்
இந்தியச் சமூகத்தின் கல்வி நிலை மற்றும் சமூக/பொருளாதார நிலை குறித்து நிறைய
ஆராய்ந்து பேசினர். அதன் பயனால ஜூலை 1991ல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில்
இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறித்த அக்கறையும் அதற்கு வேண்டிய பலவிதமான
சீரமைக்கும் பரிந்துரைகளும் செய்யப்பட்டன. அப்போது துவங்கியது தான் சிண்டா எனும்
சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கம். சிண்டா ஆகஸ்ட் 1991 ஆம் ஆண்டு உருவானது.
இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சிண்டாவின் செயல்பாடு இரு கூறுகளைக்
கொண்டதாக அமைகிறது. கல்வி மற்றும் குடும்பத்தில் துவங்கும் சமூகம். இந்த அமைப்பின்
முக்கியக் குறிக்கோள் இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தான். அது
மட்டுமின்றி இந்தியச் சமூகத்தினரிடையே குடும்ப ஒற்றுமையினை வலியுறுத்தி, சமூக
மற்றும் பொருளாதார மேம்பாடு அடையச் செய்வது. சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்திற்கு
ஏற்றாற்போல் சிண்டா சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தை கல்வியில் உயர்த்தி
தன்னம்பிகையுள்ள ஒரு இனமாக மாற்றி, மற்ற இனத்தாருக்கு இணையாக வாழவைக்கும் உயர்ந்த
நோக்குடன் செயல்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களை தேசிய சராசரி
மதிப்பெண்கள் எடுக்கச் செய்தலும் குடும்ப அமைப்பை வலுப்படுத்துதலும் சமூகப்
பொறுப்புணர்வை வளர்த்தலும் அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள். அதே நேரத்தில், மற்ற
இனத்தாருடனான இணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தவும் தவறுவதில்லை.
சிங்கப்பூர்
இந்திய சமூகத்தின் முக்கிய தூண் சிண்டா என்றால் அது நிச்சயம் மிகையில்லை. இந்திய
சமூகத்தை வளர்க்கும் அதே நேரத்தில் தானும் பிரமிக்கும் வளர்ச்சியடைந்து வருகிறது.
துவக்கத்தில் ஒரு இனத்திற்காக உருவான அமைப்பு என்று எல்லோராலும் பார்க்கப்பட்ட
சிண்டா, பத்து வருடங்களில் சுமார் 10% பிற இன தொண்டூழியர்களைப் பெற்று ஒரு சமூக
அமைப்பு என்னும் தகுதியினை அடைந்து விட்டது. மற்ற சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து
செயல் பட்டதன் மூலம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்த நினைக்கும் சிண்டா இன்று
வரவேற்கத் தக்க வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் எல்லா இனத்தவருக்கும் வாய்ப்புக்களை
உருவாக்குகிறது.
திரு.பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு. எஸ். தனபாலன் சிண்டாவின் தலைவராக இருந்தார்.
பிறகு, திரு. கே சண்முகம் தலைவராகச் செயல்பட்டார். தலைமைத்துவம் மிகச் சிறப்பாக
இருப்பதால் நோக்கங்கள் மாறி விடாமல், மிகவும் கவனமாகத் தனது சேவையை இந்திய
மாணவர்களுக்குக் கொண்டு செல்கிறது சிண்டா. தோண்டூழியர்களை தேர்ந்தெடுப்பது,
பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது ஆகியவற்றை மிகக் கவனமாகச் செய்வதுடன் அவர்களை
சிண்டாவிலேயே இருத்திக் கொள்ளும் சவாலிலும் சிண்டாவின் மேலாண்மை வெற்றி கண்டு
வந்துள்ளது. ஒன்பது ஆண்டுகளாக தலைமை நிர்வாகியாக இருந்தவர் திரு. எஸ்.
விவேகானந்தன். 2007ஆம் ஆண்டு 23 ஆம் தேதி நிர்வாக அதிகாரியாகப்
பொருப்பேற்றிருப்பவர் திரு. மோகன் சுப்பையா அவர்கள். இவர் சிண்டாவின் கீழ்
ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் ஒரு கல்வியாளர் என்பது
குறிப்பிடத்தக்கது. சிண்டா கல்விக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் தந்து
வந்திருப்பதால் அவரது கல்வித் துறை சார்ந்த அனுபவம் மிகவும் உதவும் என்று பரவலாக
எதிர்பார்க்கப் படுகிறது.
பள்ளிப்படிப்பை
நிறுத்தி விடும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேரச் செய்தல்,
சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பள்ளிக்குப் போகிறார்களா என்று ஊழியர்கள் மூலம்
கவனித்தல், முக்கிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்
ஆலோசனை வழங்குதல், வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த
கட்டண/இலவச துணைப்பாட வகுப்பு, வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு முதல் எட்டு
வயதான அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு வாசித்தல், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு
நூலகப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தல், சாதாரணநிலை முடித்ததும் தொழில்நுட்பக்
கல்லூரிக்குள் நுழையவிருக்கும் உயர்கணிதம் (Advanced Maths) எடுத்துப் படித்திராத
மாணவர்களுக்கு உயர்கணித வகுப்புக்கு ஏற்பாடு செய்தல், வாராந்திர விளையாட்டுக்கள்
மூலமாக நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின்
திறமைகளைக் கண்டறியச் செய்யும் நடவடிக்கைகள், விளையாட்டுத் துறையில் இந்திய
மாணவர்களை ஈடுபடுத்த 10-12 வயதுடைய மாணவர்களுக்கு ஆறு மாத காற்பந்தாட்டப் பயிற்சி,
பிள்ளைகளுக்கு பெற்றோர் கணிதப்பாடம் சொல்லிக் கொடுக்க பெற்றோருக்குப் பயிற்சி
முகாம் ஆகியவை சிண்டாவின் முக்கிய திட்டங்களுள் சில.
படிப்பை நிறுத்துவோர் எண்ணிக்கையை குறைக்க பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின்
எண்ணிக்கையைக் குறைக்கக் கல்வி அமைச்சு குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி
ஆசிரியர் தினத்தை முன்னனிட்டு 2006 ஆகஸ்ட் 31ம் தேதி பேசிய பிரதமர் லீ சியென்
லுக்ங், பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 3% ஆக உள்ளது
என்றும் இதை அரசாங்கம் 1.5% ஆக குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கும்
என்று அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்விஷயத்தில் சிண்டா
(SINDA- Singapore Indian Development Association) இந்திய மாணவர்களின்
உயர்விற்குக் கணிசமான பங்கினை ஆற்றி வருகிறது.
சிண்டா சென்ற ஆண்டு அதிகமான மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி அளித்திருக்கிறது.
2005ம் ஆண்டு சுமார் 2117 வசதி குறைந்த மாணவர்களுக்கு சிண்டா கல்வி நிதி உதவி
வழங்கியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பு நோக்க இது 58% அதிகம். இந்திய
சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குச் சிறந்த பணியாற்றி வரும் சிண்டா, வசதி குறைந்த
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க துணைப் பாட
வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 2005ம் ஆண்டு ஆக அதிகமாக
6029 மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை சிண்டா நடத்தியிருக்கிறது. இது அதற்கு
முந்தைய ஆண்டைக் காட்டிலும் 29% அதிகமாகும். இவர்களுள் 30 விழுக்காட்டு மாணவர்கள்
இலவசமாகக் கற்றனர்.
துணைப்பாட ஆசிரியர்களாகவும், சிறார்களுக்கு வாசிக்கும் சேவையாளர்களாகவும், குடும்ப
ஆலோசகர்களாகவும் ஏராளமான தொண்டூழியர்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பத்தே வருடங்களில் கிட்டத்தட்ட 2800 ஊழியர்களைக் கொண்ட பெரும் அமைப்பாக உருவாகி
விட்ட சிண்டா, இன்று சிங்கப்பூரில் அதிக தொண்டூழியர்கள் செயல்படும் அமைப்புகளுள்
ஒன்றாகி விட்டது.
சிண்டா துவங்கி பதிநான்காண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம் மிகவும்
மகிழ்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் தொடக்கநிலை, உயர்நிலை
மற்றும் புகுமுக, தொழிநுட்ப, தொழில் கல்வி மாணவர்களில் 225 மாணவர்கள் கல்வி விருது
பெற்றனர். 2004 ஆண்டு நிலவரப்படி இந்திய மாணவர்கள் சிறப்பாக முன்னேறி
வந்துள்ளார்கள். 2001ல் தொடக்கநிலைத் தேர்வில் கணிதப் பாடத்தில் 69 விழுக்காட்டினர்
மட்டும் தான் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2004ல் 74 விழுக்காட்டினர் தேர்ச்சி
பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரி மதிப்பெண்ணை ஒப்பிடும் போதும்
2001ல் இருந்த 14 மதிப்பெண் வித்தியாசம் 2004ல் 9 மதிப்பெண்ணாகக் குறைந்து விட்டது.
சிண்டாவின் செயல்பாடுகள் பெற்றோரின் ஒத்துழைப்போடு மாணவர்கள் தேர்வில் மேம்பாடடைய
உதவ முடிகிறது. பள்ளி, குடும்பம் மற்றும் சமூகம் சேர்ந்து தொடர்ந்து செயல்
படும்போது கிடைக்கக் கூடிய வெற்றி எத்தகையது என்பதை சிண்டா நிரூபித்துக்
காட்டியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குத் தனிக்கவனம் எடுத்து உதுவுகிறது சிண்டா.
குடும்பங்களுடன் தொடர்புகொண்டு செயல்படும் திட்டங்கள் அதிகம் உண்டு. தனிநபர்
தேவைகளை முன்னிருத்திச் செயல் படுகிறது. பள்ளிகளிலும் வீடுகளிலும் துணைப்பாட
வகுப்புகள் நடத்தப் படுகின்றன. ஒருவரையோ இல்லை ஒரு குடும்பத்தையோ வழிநடத்த
ஊழியர்களுக்கு விடாமுயற்சியும் பொறுமையும் தேவையாக உள்ளது. ஏற்கனவே இவ்வியல்புகள்
அமையப் பெற்றவர்கள் மேலும் திறமையடைகிறார்கள்.
ஆலோசனை வழங்கவென்று வசதிகுறைந்த குடும்பங்களுடன் உறவாடும் சிண்டா ஊழியர்களில் சிலர்
பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். அக்குடும்பங்களில் நல்லவித மாற்றங்கள் உருவாக
உதவும் இவர்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறன்றன. தங்களுக்கு அமைந்துள்ள
நல்வாழ்வை உணரத் துவங்கிவிட்டதாகவும் சில்லறை விஷயங்களுக்கு அதிருப்தியடையும்
தங்களின் போக்கு முற்றிலும் மாறி விட்டதாகக் கூறுவதைக் கேட்லாம். அதுமட்டுமில்லாமல்
வேறு சிலர் மனதளவில் தாங்கள் மிகவும் பண்பட்டு விட்டதாகவும் சொல்வார்கள்.
தீபாவளி போன்ற விழாக்காலங்களில் ஏராளமான குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு
சிண்டா பலகாரங்கள் அடங்கிய பொட்டலங்களை (hampers) வினியோகிக்கிறது. இவ்வகையில் வசதி
குறைந்த அக்குடும்பப் பிள்ளைகளுக்கு விழாக் காலங்களில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச
சந்தோசத்திற்கு சிண்டா பொறுப் பெடுத்துக் கொள்கிறது. வேலையில்லாததால் வருமானமின்மை,
குடி, சண்டை, பிரிவு, இரண்டாம் மணம் என்று பல்வேறு காரணங்களினால் சிறார்கள்
பாதிக்கப் படும் போது சிண்டா உடனடியாகச் செயல்படுகிறது. அத்தைகைய குடும்பங்களைக்
கண்டறிந்து, வேலை வாய்ப்பு இருக்குமிடம் தேடி ஒரு பெற்றோருக்காவது வேலைக்கும்
வருமானத்திற்கும் ஒழுங்கு செய்கிறது. தேவைப்பட்டால் குடும்பத்திற்கு உடனடித்
தேவையான அரிசி, ரொட்டி போன்றவற்றை வீட்டிற்கே அனுப்புகிறது. சில குடும்பங்களுக்கு
தொடர்ந்து இத்தகைய சேவையை வழங்கும் கட்டாயமும் ஏற்படத்தான் செய்கிறது. பல
குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரும்பணியினை சிண்டா செய்து
வருகிறது. சில மாணவர்களுக்கு குறைந்த விலையிலோ, இலவசமாகவோ கூட கணிப்பொறிகளை வழங்கி
அவர்களது கல்விக்குத் துணைபுரிகிறது.
இத்தகைய அரிய சேவைகளுக்கு சிண்டாவிற்கு பொருள் தேவையாக இருக்கிறது. பலர்
நன்கொடையளிக்கிறனர். அரசாங்கமும் சிண்டாவிற்கு பொருளளித்து அதன் செயல்பாடுகளை
மிகவும் ஊக்குவிக்கிறது. அண்மையில் பிரதமர் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தில்
அறிவிக்கப்பட்ட வாய்ப்பு நிதி வழி கிடைக்கப் பெறும் $350,000 நிதியையும் உதவி
தேவைப்படும் மாணவர்களுக்கு சிண்டா செலவிட உள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்களுக்கு கணினி உதவி, கல்வி மான்யங்கள், செறிவூட்டும் (Enrichment)
சிறப்பு பாடத் திட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு உதவ இந்நிதி
பயன்படுத்தப்படும்.
இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்கு முந்தைய பாலர் வகுப்புகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும்
வகையில் சில திட்டங்களையும் சிண்டா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குடும்ப
மேம்பாட்டில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான மாதர் நல
திட்டம் ஒன்றையும் சென்ற ஆண்டு சிண்டா ஏற்பாடு செய்து நடத்தியது. சுமார் 130
பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர். கடந்த ஆண்டு அறிமுகத் திட்டமாகத் தொடங்கப் பட்ட
இத்திட்டம் இந்த ஆண்டும் தொடரும் என்று சிண்டாவின் தலைவர் திரு கே சண்முகம்
அறிவித்தார். பிள்ளைகளின் கல்வி என்பது மிக முக்கியம். அதற்கு குடும்பச் சூழல்
என்பது மிக மிக அவசியம். குடும்ப மாதர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் திட்டம்தான்
அது என்றும் அவர் சொன்னார். சிண்டாவின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே
தெரியப்படுத்த அடுக்கக விருந்து நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் திரு கே சண்முகம் குறிப்பிட்டார்.
கல்வி உயர்வுக்கு அப்பாலும் இந்தியர்கள் சிந்திக்க சிண்டா ஆக்கப்பூர்வமாக
உதவுகிறது. கல்வியை மட்டுமே வலியுறுத்துவதை மாற்றிக்கொண்டு பல திறன் கொண்ட மாணவச்
சமுதாயத்தை உருவாக்க முயலும் கல்வி அமைச்சின் செயல்பாட்டுடன் இணைந்து சிண்டாவும்
செயலாற்றுகிறது. மதிப்பெண்களை முன்னிருத்தி சிந்திக்கும் போக்கினை மாற்றி
வாழ்க்கைக்கான செயல் திறன்களை வளர்த்துக் கொள்ள சிண்டா மணவர்களை ஊக்குவிக்கிறது.
இதனால் தான் சிண்டா இந்திய மாணவர்களுக்கு தொழிற்கல்வியினால் கிடைக்கக்கூடிய
எதிர்காலத்தினை விரிவாக எடுத்துச் சொல்லி அவர்களைத் தொழிற்கல்வியில் சேர
ஊக்குவிக்கிறது. இது தவிர, மாணவனுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கவும், புதிய
துறைகளை அறிமுகப்படுத்தவும் உதவுகிறது. தனது எல்லா முயற்சிகளிலும் பெற்றோர்களையும்
ஈடுபடுத்தத் தவறுவதில்லை சிண்டா.
உயர்நிலைக் கல்விக்குப் பிறகு புகுமுக வகுப்பை (தொடக்கக் கல்லூரி) வலியுறுத்தும்
பெற்றோர்களே அதிகம். சில மாணவர்கள் சாதாரணநிலைத் தேர்வில் (உயர்நிலை) சிறப்பாகத்
தேர்ச்சி பெறாததால், மீண்டும் சாதாரணநிலைத் தேர்வை எழுத நினைக்கிறார்கள்.
பெற்றோரும் இதையே வலியுறுத்துகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களில் எல்லோரும் நல்ல
தேர்ச்சி பெறுவதில்லை. ஒரு வருடம் போனதுதான் மிச்சம் என்று மிகவும் கவலையில்
விழுகிறார்கள். இப்பிரிவினருக்கு சிண்டா மாற்று வழிகளாக தொழில்நுட்பக்கல்வி மற்றும்
தொழிற்கல்வி ஆகியவற்றைப் பரிந்துரைக்கின்றது.
தேசிய அளவில் உயர்நிலைக்குப் பிறகு கல்வியைத் தொடராமல் விடும் மாணவர்கள் 10%.
ஆனால், இந்திய மாணவர்களில் இப்பிரிவினர் 13%. இந்தப்பிரிவு மாணவர்கள் திடீரென்று
படிப்பை நிறுத்தி விடாமல் தொழிற்கல்வி பெறும் போது அவனின் எதிர்காலம் சிறப்பாக
அமையும். மேலும் அவனுக்குத் தன்னம்பிகை உருவாகும் என்பதால், தொழிற்கல்வி
வலியுறுத்தப் பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பை மேற்கொண்டு தொடராமல் அப்படியே
விட்டுவிடும் 16-17 வயது இளையர்கள் 800-1000 வெள்ளி வரை கிடைக்கக் கூடிய
சம்பளத்தைக் கண்டு மயங்கி விடுகிறார்கள். தொழிற்கல்வி முடித்தால் இரட்டிப்பு
சம்பளம் கிடைக்கும் என்பதை இவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. ஆகவே சிண்டா பலகட்ட
ஆலோசனைகள் வழங்கி இளையர்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு வருகிறது.
படிப்பை நிறுத்துவோர் எண்ணிக்கையை குறைக்க பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின்
எண்ணிக்கையைக் குறைக்கக் கல்வி அமைச்சு குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி
ஆசிரியர் தினத்தை முன்னனிட்டு 2006 ஆகஸ்ட் 31ம் தேதி பேசிய பிரதமர் லீ சியென்
லுக்ங், பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 3% ஆக உள்ளது
என்றும் இதை அரசாங்கம் 1.5% ஆக குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கும்
என்று அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்விஷயத்தில் சிண்டா
(SINDA- Singapore Indian Development Association) இந்திய மாணவர்களின்
உயர்விற்குக் கணிசமான பங்கினை ஆற்றி வருகிறது.
ஒரு சமூகத்தினை உயர்த்த நினைக்கும் நோக்கம் நிறைவேற மிகுந்த விடாமுயற்சியும்
பிரச்சனைகளை யதார்த்தமாக அணுகும் போக்கும் அவசியமாக இருக்கிறது. அது தவிர, சேர்ந்து
ஒரே நோக்கத்திற்காக உழைக்கும் ஒற்றுமையும் ஊழியர்களிடையே மிகவும்
இன்றியமையாததாகிறது. வருடக்கணக்கில் தொய்வில்லாமல் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட
உறுதியும் திறமையும் கொண்ட தலைமை வேண்டும். அதிக பணம் தேவை தான். ஆனால், அதைவிட
அதிகமாக தொண்டூழியர் களின் நேரமும் உழைப்பும் தேவையாக இருக்கும். இவை எல்லாமே
சிண்டாவிற்கு அமைந்து விட்டிருப்பது சிங்கப்பூர் இந்தியர்களின் அதிருஷ்டம் என்று
தான் சொல்ல வேண்டும்.
நன்றி: த தமிழ் டைம்ஸ்
sankari01sg@yahoo.com |