| 
மீள்பிரசுரம்: ஜெயமோகன் வலைப்பதிவிலிருந்து...தமிழ்மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் 
ஈழத்தமிழர்களுக்கு எதிரானதல்ல... நாம் ஒன்றே!  
- ஜெயமோகன் -
 
  சினிமா மாதிரியே எனக்கு பெரும்பாலும் ஆர்வமில்லாத துறைதான் அரசியல் என்று சொன்னால் 
என் நெருக்கமான நண்பர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள் என எனக்குத்தெரியும். நான் நேரடியான அரசியல் 
பேசுவது மிகமிகக் குறைவு. அரசியல்
கட்டுரைகளை வாசிப்பதும் சரி, நுண்தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதும் சரி, அனேகமாக 
கிடையாது. அரசியல் சார்ந்து 
திடமான நிலைபாடுகள் ஏதும் எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாகக் கிடையாது. 
 ஆகவே நான் தேர்தல்களை மிகமிக மேலோட்டமாகவே கவனிக்கிறேன். உண்மையில் இந்த தேர்தலில் 
நான் வாக்களிக்கவில்லை. 
காரணம் ஒரு திரைப்பட விஷயமாக சென்னையில் இருந்தேன். காலையில் ஒன்பது மணியளவில் 
தேர்தல்செய்திகளைப்பார்த்து என்ன 
நடக்கிறதென்று அறிந்துகொண்டேன்.
 
 சமீபமாக எந்தத் தேர்தலிலும் நான் பெரிய அளவில் பக்கச்சார்பு எடுத்ததில்லை. ஆகவே 
எனக்கு உவகையும் ஏமாற்றமும் 
ஏற்பட்டதில்லை. இந்திராகாந்தி அவசரநிலைக்குப் பின் தோல்வியடைந்த தேர்தலில் நான் 
துள்ளிக்குதித்து அலறி ஆர்ப்பரித்து 
கோண்டாடியது நினைவிலிருக்கிறது. நாட்கணக்கில் அந்தப்போதை நீடித்தது. பின்னர் 
வி.பி.சிங் பதவிக்கு வந்த தேர்தலில் இரவெல்லாம் 
கண்விழித்து தேர்தல்செய்திகளைப் பார்த்தேன். அந்த இரு எதிர்பார்ப்புகள் மற்றும் 
ஏமாற்றங்கள் வழியாக நான் கற்றுக்கொண்ட அரசியல்
இன்றும் என்னில் நீடிக்கிறது போலும்.
 
 தேர்தலரசியலின் விவாதங்களை நான் எப்போதுமே முற்றாகத்தவிர்த்துவிடுவேன். இந்த 
இணையதளத்தில் ஒரு வரியைக்கூட
எழுதாமைக்குக் காரணம் இதுவே. ஆனால் பேச்சுகள் என் காதில் எப்போதும் விழுந்துகொண்டே 
இருக்கின்றன. கூட்டுக் கணக்குகள், 
சாதிக்கணக்குகள், கோடிக்கணக்குகள். அவையெல்லாம் பெரும்பாலும் நம் இதழ்களின் 
கட்டுரைகளை நம்பி முன்வைக்கப்படும் ஊகங்கள். 
எனக்கு இவற்றை எழுதும் நிருபர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பலரை நெருக்கமாகவே 
தெரியும். அவை எப்படி எழுதப்படுகின்ரன என்றும் 
தெரியும். அத்துடன் எப்போதுமே அதிகார அரசியலின் உள்ளே உண்மையில் என்ன நடக்கிறதென 
எனக்குச் சொல்லும் முக்கியமான 
வாசகர்களும் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்டுரைகளில் தொண்ணூறு சதம் கருத்துக்களும் 
கணிப்புகளும் அபத்தமான கற்பனைகள் 
என்று நன்றாகவே அறிவேன்.
 
 நான் தொடர்ந்து பயணம்செய்துகொண்டிருப்பவன். மக்கள் நடுவே, அவர்கள் பேச்சை ஓயாமல் 
கேட்டுக்கொண்டிருப்பவன். அவற்றின் 
மூலம் கிடைக்கும் மனச்சித்திரங்களை மட்டும் கொண்டே என் அரசியல் ஊகங்களை உருவாக்கிக் 
கொண்டிருக்கிறேன். அறிவுஜீவிகளின் 
கணிப்பின்மூலம் அந்தக்கருத்துக்களை பரிசீலனை செய்வதேயில்லை. ஆகவே என் அரசியல் 
ஊகங்கள் தமிழ்நாடு, கேரள அரசியல் 
சார்ந்து மிகக் குறைவாகவே பொய்த்திருக்கின்றன. இந்தத் தேர்தலிலும் அப்படித்தான்.
 
 ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது பல நண்பர்களிடம் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 
நாற்பது தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க 
கூட்டணி வெற்றி பெறும் என்ற உறுதியான கருத்து இருப்பதை கண்டுகொண்டேன். 
ஈழப்பிரச்சினையே தமிழகத்தின் முதன்மையான 
தேர்தல் பிரச்சினை என்றும், தமிழகமே கொந்தளிக்கிறது என்றும் அவர்கள் சொன்னார்கள். 
அந்த எண்ணம் இங்குள்ள சில இதழ்களால் 
உருவாக்கப்பட்டது என்பதே உண்மை.
 
 நான் என் கவனிப்பில் அப்படி எதையும் உணர முடியவில்லை என்று அவர்களிடம் சொன்னேன். 
சராசரித் தமிழர்களின் அரசியல் என்பது 
முழுக்கமுழுக்க தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு வினியோகம், விலைவாசி ஆகியவற்றைச் 
சார்ந்த அரசியல். அதில் தனிநபர் 
ஈர்ப்புக்கு ஓர் இடமுண்டு. அது ஈர்ப்பு என்பதை விட தனிநபரின் பொதுப்படிமம் சார்ந்த 
ஒன்று புரிந்துகொள்வதே பொருத்தமானது. 
உணர்ச்சிகர அரசியலுக்கும் சரி, தனிநபர் வழிபாட்டுக்கும் சரி, தமிழகத்தில் 
அப்படியொன்றும் முக்கியமான இடம் இல்லை என்பதே நான் 
கண்ட உண்மை.
 
 பலர் எம்.ஜி.ஆரின் அரசியல்சக்தி என்பது வெறும் சினிமாக்கவற்சி என்ற எண்ணத்தை 
இன்றும் வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் 
நேர்மையான மனிதர், ஏழைகளுக்கு உதவக்கூடியவர் என்ற பிம்பத்தை சினிமா 
பிரபலப்படுத்தியது என்பது உண்மை. ஆனால் தன் 
அரசியல்வாழ்க்கையில் அவர் செய்த பங்களிப்பே அவரை ஒரு சக்தியாக நிலைநாட்டியது, 
இன்றும் அந்த ஈர்ப்பை நீடிக்கச் 
செய்கிறது.எம்ஜியாருக்குப்பின் மொத்த தமிழகத்தையும் தன் கவற்சியில் வைத்திருக்கும் 
ஆளுமை என்று எவரும் இல்லை.
 
 
  
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களும் சாலைகளால் 
இணைக்கப்பட்டன, எல்லா ஊர்களுக்கும் 
மின்சாரமும் மேல்நிலைக்குடிநீர்த்தொட்டியும் வந்தது. சத்துணவு போன்று தமிழகத்தின் 
கல்விவளர்ச்சிக்கு உதவிய திட்டங்கள் அவரை 
பிரபலப்படுத்தின. இந்தியாவிலேயே முன்னோடியாக அவர் கொண்டு வந்த பிளஸ்டூ 
கல்விமுறைதான் இன்று தமிழகம் 
தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெற்ற முன்னேற்றத்துக்கு அடிப்படை. 
ஆட்சிக்காலம் முழுக்க பொதுவினியோகத்தை 
அபாரமான கவனத்துடன் சீராக வைத்திருந்தார்.அத்துடன் அவர் எப்போதுமே சாமர்த்தியமான 
அரசியல்கூட்டுகளை வைத்திருந்தார். 
 இந்தத்தேர்தலில் முக்கியமான அரசியல் பிரச்சினைகளாக நான் கண்ட விஷயங்கள் இரண்டு. 
ஒன்று, மின்வெட்டு. தமிழகத்தில் மூன்றில்
ஒருபங்கினர் மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்ட சிறுதொழில்களைச் சார்ந்து வாழ்பவர்கள். 
மின்வெட்டு அவர்களின் வயிற்றில் 
அடித்திருக்கிறது. அதை எங்கே போனாலும் கேட்கிறேன். பொதுவான விலைவாசி உயர்வும் 
மக்களிடையே கசப்பை 
உருவாக்கியிருக்கிறது என உணர்ந்தேன்.
 
 அதைத்தாண்டி மு.கருணாநிதி அவர்களின் ஆட்சிமேல் கடுமையான கசப்பு ஏதும் மக்களிடையே 
இல்லை. மேலும் தமிழகத்தின் எளிய 
மக்கள் தேர்தலில் மிகக்கவனமாக யோசித்துத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதை பலமுறை 
கவனித்திருக்கிறேன். இது பாராளுமன்ற 
தேர்தல் என அவர்களுக்குத் தெரியும். தி.மு.க காங்கிரஸ் ஆட்சிக்காக தேர்தலைச் 
சந்திக்கிறது. அ.தி.மு.க? ஜனதாக் கட்சி என்ற முதல்
சோதனைக்குப் பின் வரிசையாக நடந்த அனுபவங்கள் மூலம் உதிரிக்கட்சிக்கூட்டணி என்ற 
கருத்தின்மீது மக்களுக்கு இருக்கும் கசப்பு எந்த ஒரு எளிய மனிதனுக்கும் தெரிந்திருக்கும்.
 
 ஆகவே திமுக கூட்டணி இருபதுக்கு மேல் இடங்கள் பெற்று முன்னணியில் இருக்கும் அல்லது 
சரிசமமான இடங்கள் பெறும் என்று நான் 
நண்பர்களிடம் சொன்னேன். காங்கிரஸ¤க்கு எங்குமே டெபாசிட் கிடைக்காது என்று அவர்கள் 
நம்புவது பொய் அது குறைந்தது ஐந்து 
இடங்களை வெல்லும் என்றேன். அவர்கள் நம்பவில்லை. என் நம்பிக்கைக்கான காரணங்களை 
அவர்களுக்கு நான் விளக்க 
வேண்டியிருந்தது, மீண்டும் மீண்டும். தமிழகம் திரும்பியபோது இதழாளர்களில் ஒருசாரார் 
திமுக கூட்டணி நாற்பது தொகுதிகளிலும்
டெபாசிட் இழக்கும் என்ற அளவில் கடும் பிரச்சாரம் செய்வதைக் கண்டேன். பல 
நண்பர்களிடம் அதை நான் நம்பவில்லை என்றேன்.
 
 தமிழகத்தில் ஈழ ஆதரவு ஒருபோதும் ஓர் அரசியல் பிரச்சினை அல்ல. தமிழகத்தின் 
முதன்மைகளே வேறு. தமிழகம்
சென்றுகொண்டிருப்பதுநம் இதழாளர்கள் ஓட்டிக்கொண்டுசெல்லும் திசையில் அல்ல. தமிழகம் 
கடந்த இருபது வருடங்களாக சீராக
வளர்ச்சிபெற்று வரும் ஒரு மாநிலம். ஆந்திராவும் கர்நாடகமும் இதற்கிணையாகவே வளர்ச்சி 
பெற்று வருகின்றன. எண்பதுகளில் 
தமிழகக் கிராமங்களிலும் இடைத்தர நகரங்களிலும் காணப்பட்ட கடும் வறுமை இன்று இல்லை. 
உணவுப்பஞ்சம் அனேகமாக இன்று 
தமிழகத்தில் இல்லை. உழைப்புக்கு வேலை இல்லை என்ற நிலை மாறி தகுதியான உழைப்பு 
கிடைப்பதில்லை என்ற நிலையே 
உள்ளது. மிகப்பெரிய ஒரு நடுத்தர வற்கம் உருவாகியிருக்கிறது. குடிப்பழக்கம் இல்லாத 
ஒரு தொழிலாளரின் குடும்பம் பத்துவருடத்தில்
அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும் என்பதே உண்மைநிலை.
 
 தமிழகத்தின் எந்த ஒரு நகரும் பலகிலோமீட்டர் முன்னதாகவே புறநகராக 
ஆரம்பித்துவிடுகிறது என்பதைக் காணலாம். தமிழகக் 
கிராமங்களில் கூட பாதிக்குமேல் வீடுகள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாகக் 
கட்டப்பட்டவை. பழைய வீடுகளினாலான ஒரு தெருவை 
இன்று தமிழகத்தில் காணமுடியாது. தமிழகத்தின் நுகர்வு வருடத்துக்கு நாற்பது சதவீதம் 
கூடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
 
 இதற்கு முதற்காரணம் இங்குள்ள சமூக மனநிலை. சராசரித்தமிழர்கள் மொத்த வாழ்க்கையையே 
கடும் உழைப்பிலும்,சேமிப்பிலும் 
செலவழிக்கிறார்கள். அடுத்த தலைமுறையை தன்னைவிட மேலே கொண்டுசெல்வதைத்தவிர வேறு கனவே 
இன்று மக்களிடம் இல்லை. 
ஒரு சராசரித்தமிழருக்கு கேளிக்கை இல்லை. ஓய்வு இல்லை. எந்தவித பண்பாட்டு 
நடவடிக்கையும் இல்லை. அவர் வாழ்வதே 
சேமிப்பதற்காக. அடுத்த தலைமுறையை தனக்கு மேல் ஏற்றிவிடுவதற்காக மட்டுமே
 
 இந்த மனநிலை மூலம் மெல்லமெல்ல தமிழகத்தில் மூலதனம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த 
மூலதனம் முதலீடாக மாறுகிறது.
தமிழகத்தின் நான்கு மாபெரும் தொழில்வட்டங்கள் 1. சிவகாசி,விருதுநகர் 2. 
நாமக்கல்,கரூர் 3. ஈரோடு,கோவை 4. ஓசூர் ஆகியவை 
முழுக்கமுழுக்க இந்த சிறுமுதலீட்டால் உருவானவை என்பது ஒரு மாபெரும் பொருளியல் 
அற்புதம். இதையெல்லாம் யாராவது 
முறையாக ஆய்வுசெய்துள்ளார்களா என்றே தெரியவில்லை
 
 குறிப்பாக கொங்கு மண்டலம். ஐம்பதுகளில் சி.சுப்ரமணியம் போன்றவர்களின் முயற்சியால் 
பரம்பிக்குளம் ஆழியாறு. மேல் பவானி, கீழ் 
பவானி, அமராவதி என்னும் நான்கு அணைகள் அப்பகுதியில் வந்தன. வரண்ட கல்மண்டிய 
மேய்ச்சல் நிலங்களை கடும் உழைப்பால்
அம்மக்கள் வேளாண்மைக்குக் கொண்டுவந்தார்கள். அந்த வேளாண்மையில் கிடைத்த உபரி 
மெல்லமெல்ல தொழில் முதலீடாக ஆகியது. 
கொங்குவேளாளர்கள் தமிழ்மனத்தின் சேமிப்புத்தன்மைக்கும் தொழில்திறமைக்கும் சரியான 
உதாரணம். இன்று ஏறத்தாழ 
ஐம்பதாயிரம்கோடி ரூபாய் அவர்களிடம் தொழில் முதலீடாக உள்ளது என்றார் ஒரு நிபுணர் 
என்னிடம். விவசாயத்தில் இருந்து இப்படி
ஒரு பெருமுதலீடு வேறெங்காவது உருவாகியிருக்குமா என்பதே ஐயம்தான். இரவு பகலாக 
கொடும்வெயிலில் மண்வெட்டி பிடித்து 
வேலைசெய்யும் ஒரு கிராமத்துக் கவுண்டச்சி ஒரு மாபெரும் பொருளியலெழுச்சியின் 
ஊற்றுக்கண்.
 
 இந்த வளர்ச்சியின் விளைவாக உருவாகி வரும் நடுத்தர வற்கத்தின் கவலைகளும் ஆர்வங்களும் 
வேறு. வீடுகட்டுவது, வாகனங்கள் 
வாங்குவது, குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைப்பது ஆகியவை அவனுடைய 
வாழ்க்கையின் அடிப்படை உந்துதல்கள். 
சின்னஞ்சிறு கிராமங்களில்கூட உருவாகியுள்ள ஆங்கிலக் கல்விக்கூடங்கள் இதற்கான 
ஆதாரங்கள். விலைவாசிக் கட்டுப்பாடு, சட்டம் 
ஒழுங்கு சீராக இருப்பது, உட்டமைப்பு வசதிகள் ஆகியவையே முறையே இம்மக்களின் 
எதிர்பார்ப்புகள்.
 
 இங்கே மக்கள் எதிர்பார்ப்பது இந்த இயல்பான வளர்ச்சிப்போக்கு உதவக்கூடிய ஓர் 
அரசியலை. அல்லது, குறைந்தபட்சம் தடையாக 
ஆகாமலிருக்கும் ஓர் அரசியலை. ஊழல், குடும்ப அரசியல், பொதுவாழ்க்கையில் தூய்மை போன்ற 
அறப்பிரச்சினைகள் எதுவுமே ஒரு 
பொருட்டு அல்ல. தங்கள் லௌகீக வளர்ச்சி மட்டுமே இலக்கு. இதற்கு தடையாக அமையக்கூடிய 
ஓர் அரசியலை மக்கள் அஞ்சுகிறார்கள். 
நூற்றாண்டுகளாக மண்ணில் ஒட்டிக்கிடந்த தாங்கள் மெல்ல தலை தூக்கும்போது ஏதோ ஒரு 
விதியின் செருப்பு வந்து மீண்டும் மிதித்து 
மண்ணோடு மண்ணாக்க கூடும் என்ற அச்சம்.
 
 தமிழ்நாட்டில் ரயில்களில் பேருந்துகளில் பேச்சுக்கொடுக்கும் நான்கு பேரில் மூவர் 
இப்படித்தான் ஆரம்பிப்பார் ”ரொம்ப கஷ்டப்பட்ட 
குடும்பம் சார்… அந்தக்காலத்திலே அரிசிச்சோறே தீபாவளி பொங்கல் இந்தமாதிரி 
எப்பவாச்சும்தான்… கேப்பைக்களியும் வெங்காயமும் 
குடிச்சுதானே சார் நானெல்லாம் வளந்தேன்…இப்ப நம்ம புள்ளைக நாயித்துக்கெழமை சிக்கன் 
எடுக்கலேன்னா கோச்சுட்டு போறானுக…” 
அந்த வாழ்க்கையை பாதிக்கக்கூடுமென அவர்கள் எண்ணும் எதையுமே மக்கள் வெறுக்கிறார்கள்.
 
 ஈழத்தமிழர்களின் வரலாற்றுத்துயரம் இந்த நூற்றாண்டின் மாபெரும் அவலங்களில் ஒன்று. 
அடிவயிற்றில் செருகப்பட்ட துருப்பிடித்த கத்தி 
போல. வரலாற்றுப்பிழைகளின் விஷம் நம் உடலில் ஊறுகிறது இன்று. ஆனால் இந்த விஷயத்தை 
இங்கே பேசியவர்கள் யார்? எப்படிப் 
பேசினார்கள்? தமிழகத்தில் ஓர் உள்நாட்டுப்போரை, பிரிவினையைத் தொடங்குபவர்களைப்போல 
மேடைதோறும் வெறுப்பைக் 
கக்கினார்கள்.
 
 இங்கே தெருத்தெருவாக ஈழ அழிவு பற்றிய சிடிக்கள் உலவின. ஆனால் எளிய மக்களில் இவை 
உருவாக்கிய அச்சத்தையும் கசப்பையும் 
நான் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருந்தேன். ஈழத்த்துயரை அவர்கள் புரிந்துகொண்ட 
விதம் இது. ”அங்க உள்ள பாவப்பட்ட சனங்களை 
நாயாப்பேயா தட்டழிய விட்டானுக. இப்ப இங்க வந்து இங்க மானமா வாழுறவன் சோத்தில மண்ணை 
அள்ளிப்போடப் பாக்கானுக”
மணிகண்டன் ஓட்டலில் வைத்து வயதான விவசாயி சொன்னார். அது தமிழகத்தின் குரல். தமிழகம் 
வன்முறையையே வெறுக்கிறது.
வெறுப்பை அது முழுக்கமுழுக்க நிராகரிக்கிறது.
 
 உலகமெங்கும் உள்ள ஈழ மக்கள் இப்போது தமிழகத்தின் எளிய மக்கள் மேல் கடும் சினத்துடன் 
விரக்தியுடன் இருப்பார்கள் என்பதை நான் 
ஊகிக்கிறேன். வரும் நாட்களில் தமிழ்மக்களை குற்றம் சாட்டும் வரிகளாக எழுதிக் 
குவிக்கப்படும் என நான் அறிவேன். அவர்களிடம் 
ஒன்றுதான் சொல்லவிருக்கிறது. உங்களுக்கு இந்த மக்களைப்பற்றி தெரியாது. 
வரலாற்றுணர்வோ மக்கள்மேல் அன்போ மதிப்போ இல்லாத வெறுப்புப் பிரச்சாரகர்களால் நீங்கள் திசை திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
 
 தயவுசெய்து இந்த மக்களைப் புரிந்துகொள்ளுங்கள். இன்று ஒரு ஈழ அகதிமுகாமில் 
இருக்கும் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அதைவிட மோசமான சூழலில் தலைமுறைகளாக வாழ்ந்த மக்கள் இவர்கள். பன்றிக்குழிகளை விட மோசமான 
வீடுகளில், நாள்கணக்கில் 
பட்டினியில் கோடிக்கணக்கானபேர் வாழ்ந்த மண் இது. அந்த வறுமையை ஒரு சராசரி 
ஈழத்தமிழர் பார்த்திருக்கவே மாட்டார்.
சொன்னாலும் அவரால் புரிந்துகொள்ள முடியாது.
 
 அகதி முகாம்களில் கையேந்தி நிற்கும் ஈழ மக்களின் காட்சி நெஞ்சை கனக்கச்செய்கிறது. 
ஆனால் எண்பதுகளில் ஓட்டல்களில் மிஞ்சி 
குப்பையில் கொட்டும் உணவைச் சேகரித்து நகர்ப்புறச்சேரிகளில் வினியோகம் செய்யும் ஓர் 
தொண்டுநிறுவனத்துடன் சிலநாள் 
பணியாற்றினேன். மென்று துப்பிய சக்கைகளும் அழுகல்களும் தோல்களும் எல்லாம் கலந்த 
அந்த எச்சில்குழைவை வாங்கிச்சாப்பிட
சென்னையில் பிஞ்சுக்குழந்தைகளும் தாய்மார்களும் முண்டியடிப்பதைக் கண்டிருக்கிரேன்.
 
 பத்துவருடம் முன்புவரைக்கூட மதிய உணவு கொண்டு சென்றுகொடுக்கும் கூடைக்காரிகள் 
அவற்றில் எஞ்சும் எச்சிலை உருண்டையாந்த்
திரட்டி அரைரூபாய்க்கு ஒரு கவளம் என விற்கும் மரத்தடிகள் சென்னையில் இருந்தன 
தெரியுமா? நானும் அதை வாங்கி உண்டு என் 
உயிரின் தீயை அணைத்திருக்கிறேன்.
 
 பதுங்குகுழிகளில் வாழும் மக்களைக்கண்டு நான் துக்கமிழந்த இரவுகள் பல. ஆனால் மழையில் 
குடிலுக்குள் பெரும் சாக்கடை நீரில் 
பாலிதீன் பைகளில் குழந்தைகளை போட்டு சுவரோரம் சாய்ந்து வைத்துவிட்டு நீருக்குள் 
குந்தி அமர்ந்து தூங்குபவர்களை நான் 
கண்டிருக்கிரேன்.
 
 தமிழ்மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதல்ல, அவை தங்களின் 
வறுமைக்கு எதிரான ஓட்டுக்கள். 
ஈழப்பிரச்சினையைச் சொல்லி தங்கள் வெறுப்பரசியலை முன்னெடுத்தவர்களுக்கு எதிரான 
ஓட்டுகள். கொங்குமண்டலம் மட்டும் மின் 
தடைக்கு எதிராக வாக்களித்திருக்கிறது.
 
 இம்மக்களை நன்றாக அறிந்தவன் என்ற முறையில் அவர்களின் நெஞ்சு ஈழத்தமிழர்களுக்காக 
கண்ணீர் வடிக்கிறதென்றே சொல்வேன். 
எல்லைகளைத்தாண்டி தங்கள் சகோதரர்களை அவர்கள் இன்னமும் தங்கள் மார்போடு 
அணைத்துக் கொள்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.
வரும் காலத்திலும் அம்மக்களின் துயர்களில் துணைநிற்க விரும்புகிறவனாகவே எளிய தமிழன் 
இருப்பான். ஆகவே நண்பர்களே,
இந்தியத்தமிழர்களை வெறுக்காதீர்கள், நாம் ஒன்றே.
 
 இந்திய அரசியல் முடிவு குறித்து நான் சொல்வதற்கேதுமில்லை. எந்த முடிவும் எனக்கு 
நல்ல முடிவே. இந்தியாவின் மாபெரும் 
ஜனநாயகத்தின் இயல்பான இயக்கம் பெருமிதமளிக்கிறது. பல்லாயிரம் பேதங்களும் முரண்படும் 
பல்லாயிரம் உள்ளோட்டங்களும் 
கொண்ட இந்திய சமூகம் அதன் இயல்பான இயக்கத்தின் மூலம் வரலாற்றில் எப்போதும் 
பொருத்தமான சமரசப்புள்ளியையே 
கண்டடைகிறது.
 
[தமிழக மக்கள் எப்பொழுதுமே மத்திய அரசுக்கான 
தேர்தலையும், தமிழக அரசுக்கான தேர்தலையும் பிரித்து வைத்தே வாக்களிப்பவர்கள். 
எம்.ஜி.ஆர் காலத்திலேயே ஒருமுறை தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்த இந்திரா 
காங்கிரசுக்கு மிகவும் பெரும்பான்மையாக வாக்களித்த தமிழக மக்கள் எம்ஜிஆரின் 
அ.தி.மு.கவை இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வைத்தார்கள். ஆனால் அதே தமிழக 
மக்கள் கலைக்கப்பட்ட தமிழக அரசுக்கான தேர்தலில் எம்ஜீஅரின் அதிமுகவுக்கே வெற்றிக் 
கனியைப் பரிசளித்தார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவின் த்லைமையில் 12 இடங்களை 
வென்றது அதிமுகவைப் பொறுத்தவரையில் தோல்வி என்று சொல்வதற்கில்லை.- ஆசிரியர் -]
 நன்றி: http://jeyamohan.in/?p=2800
 |