| இன்னொரு உலகில்.. இன்னொரு மாலையில்... கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல்!
 - சி. ஜெயபாரதன், 
கனடா -
 'சுவை புதிது ! பொருள் புதிது ! வளம் புதிது !
 சொற் புதிது ! சோதி மிக்க நவ கவிதை' - பாரதியார் -
 
 
    "எழுக 
நீ புலவன்" என்று பாரதியார் ஆசீர்வதிக்கப் பாரதிதாசன் பரவசமாய் எழுதிய ஓர் 
பைந்தமிழ்ப் பாட்டுடன் அரங்கேற்றமாகிறது வைகைச் செல்வியின் "இன்னொரு உலகில் 
இன்னொரு மாலையில்" என்னும் இரண்டாம் கவிதை நூற்படைப்பு. 20 ஆம் நூற்றாண்டில் 
விண்வெளித் தீரர்கள் வெண்ணிலவில் கால்வைத்த பிறகு வைகைச் செல்வி தனது கவிதைகளைப் 
புனைய வாழும் பூதளம் விட்டு வேறுலகத்தின் மாலைப் பொழுதைத் தேடுவதில் வியப்பில்லை. 
 பாரதிதாசன் பாரதியார் முன்னின்று பாடிய பாட்டை முதலில் நாம் கேட்போமா ?
 
 காளை ஒருவன் கவிச் சுவையைக் - கரை
 காண நினைத்த முழு நினைப்பில்
 தோளசைத் தங்கு நடம் புரிவாள் ! - இவன்
 தொல்லறி வாளர் திறம் பெறுவான் !
 
 காளை ஒருவன் மட்டுமா இப்போது கவிச் சுவையைக் கரை காண விழைபவன் ? காளையர், கன்னியர், 
வாலிபர், மாதர், முதியவர்
 அனைவருமே சுவைத்தறிய 45 கவிதைகளைத் தொகுத்து வைகைச் செல்வி தன் இரண்டாம் நூலில் 
வெளியிட்டுள்ளார். 'அம்மி' என்னும் பெயர் கொண்டது அவரது முதல் கவிதைத் 
தொகுப்பு.
 
 காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் புகுந்து பணிச்சுமை பெருக இரவு 8 மணி வரை பணிபுரிந்து 
களைத்துப் போய் இல்லத்துக்கு
 மீளும் ஆயிரத்தில் ஒரு மேலாளர் இவர். சூழ்வெளி மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் 
மேலாளராகப் பொறுப்பில் இருக்கும் இவர் தினமும் வீட்டுக்குத் திரும்பும் போது 
மறக்காமல் நாலைந்து பைல்களோடுதான் வீட்டுக்குள் நுழைவார். சனிக்கிழைமைகளில் கூட 
வைகைச் செல்வியை அலுவலகத்தில் காணலாம். வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை 
மட்டும்தான் அவருக்கு ஓய்வு ! இந்த பணிப்பளு அழுத்தத்தில் இடையிடையே சொற்பொழிவுகள் 
இருக்கும் ! அண்ணா பல்கலைக் கழகத்தில் சூழ்வெளிச் சிதைவுகள் பற்றி மாணவருக்கு 
வானொலி முழக்கங்கள் இருக்கும் ! நெய்வேலிக் குழுவினருக்குப் சூழ்வெளிப் 
பாதுகாப்புகள் பற்றி பயிற்சி முறைபாடுகள் இருக்கும் !
 அத்தனை நெருக்கடிகள் ஊடேயும் கவிதை ஊற்றுகள் எழும்பி வார்த்தைகளும் ஆத்மாவும் 
சேர்ந்து கவிதைக் காவியங்கள் தோன்றி இரண்டாம் கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார் 
என்பது நமக்கு விந்தை ஊட்டுகிறது.
 
 ஒரு கவிதைத் தொகுப்பு எத்தகைய கோணங்களில் உளவி நோக்கப்படுகிறது என்று தனது 
முன்னுரையில் சொல்கிறார் வைகைச் செல்வி. தலைப்பில் ஆரம்பித்து அட்டைப் படம், 
அணிந்துரை, கவிஞர் உரை, கவிதைகளின் உட்பொருள், நடை, உடை, நளினம், கையாளும் 
உத்திகள், மொழித் தேர்ச்சி ஆகியவை அனைத்தும் விவாதத்தில் எடுத்துக் 
கொள்ளப்படுகின்றன. கவிஞர் பெண்ணாக இருப்பின், அதில் 'பெண் மொழி' பெண்ணியம், பெண் 
விடுதலை, கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பார் பலர் உள்ளார். கவிதைகளில் மலரும் 
வார்த்தைகளுக்கு ஓர் 'உள் அழகு' (Moral Beauty) இருக்க வேண்டும் என்று நோபெல் பரிசு 
பெற்ற ஆங்கிலக் கவிஞர் டபிள்யு. பி, ஏட்ஸின் வரிகளை எடுத்துக் கொள்கிறார்.
 
 "வார்த்தைகள் நடந்தால் நடை ! நடனம் ஆடினால் கவிதை !" என்று வலம்புரிஜான் அவர்களின் 
பொன்மொழியைக் கையாளுகிறார். சொற்றொடர் நடனத்தின் உயிரோட்டமும், கையாளும் நளினக் 
கலைத்துவமும் படிப்போர் கவனத்தைக் காந்தமாய் இழுக்கின்றன. சொற்களை ஆளும் தனித்துவத் 
திறமையில், கவிஞன் கடவுளைப் போல் வார்த்தைகளுக்கு உயிரூட்டுகிறான். நிமிர்ந்து 
நடக்க வைத்துக் கவிதையை நெஞ்சிலே ஏற்றி விடுகிறான். வைகைச் செல்வி தனது ஆத்மாவின் 
கீதங்களை அத்தகைய மொழிகளில் வடித்துள்ளார்.
 இரண்டாம் நூல் தொகுப்பிலும், முதல் நூல் போன்று பல கவிதைகள் வைகைச் செல்வியின் 
பிறவிப் பெரும் பணியான சூழ்வெளித் தூய்மையைச் சுட்டிக் காட்டி அவரைப் பசுமை 
போற்றும் வனராணியாகக் காட்டி விடுகின்றன.
 
 இதோ வைகைச் செல்வி கவிதை ஆரங்களின் சிதறிய முத்துக்கள் : "எதைத் தருவேன் 
நானுனக்கு ?" என்னும் கவிதையில்
 
 புகை கக்கும் வானகங்கள்
 அலறி வரும் ஒளியதிர்வை
 படபடக்கும் நெஞ்சத்தின்
 ஓசையுமே மீறுகையில்
 உடம்போடு உள்ளுயிரும்
 உன் விரலுக்குள் ஊடுருவும் !
 
 "கடல்" என்னும் கவிதையில்
 
 என்னதான் இல்லை கடலில் ?
 கடற்கரையில் ?
 . . . . . . .
 உப்புக் கரிக்கின்ற நீரோடு
 உறவாடும்
 பாதரச மீன்கள் !
 . . . . .
 வெண்மையாய், நீலமாய்
 பச்சையாய் ஒளிர்ந்து
 கண்ணாமூச்சி ஆடும்
 (கடல்) நீரலைகள் !
 
 "மரமகள்," என்னும் கவிதையில் கூடுகட்ட மருமகள் வந்தாளாம் !
 
 மரத்தைக் காக்க
 மனிதன் நினைத்து
 கடும்புயல் காற்றில்
 தட்டாமாலை
 சுற்றிய மரத்தை
 வெட்டி எடுத்துக்
 கட்டில் செய்ய
 மெத்தை யிட்டுக் கூடு கட்ட
 புத்தம் புதிய
 மருமகள் வந்தாள் !
 
 "காதல்" என்னும் கவிதையில்
 
 பேருந்தில் ஏறிச்
 சன்னலுக்கு வெளியே
 கைகளை நான் அசைக்கையில் ....
 கீழே நின்ற
 உன் கண்ணில்
 மின்னியது
 ஒரு தாஜ்மகால் !
 
 "வானவில்லாய் மாற்றிவிடு," என்னும் கவிதையில்
 
 என் தலைவா !
 பிறருக்காய் நான்
 கல்லாய் புல்லாய்
 இருந்தது போதும் !
 உம் கிறுக்கலில்
 வார்த்தைச் சித்திரத்தில்
 உமக்காய்ச் சிலநாள்
 வாழ்வதற்கு
 வானவில்லாய் என்னை
 வரைந்திடுவாய் !
 
 கடைசியில் "கடை விரித்தேன்" என்னும் கவிதையில்
 
 முதலைப் பண்ணையில்
 ஒற்றை மீன்குஞ்சாய் நான் !
 எதை விற்று . . . எதைக் கொள்ள ?
 எதை இழந்து ... எதை அடைய ?
 
 பண்ட மாற்று உத்திகள்
 எதுவும் புரியாமல்
 விற்கவும் வழியின்றி. . .
 வாங்கவும் வக்கின்றி
 சந்தையை விட்டுத்
 திரும்பினேன்,
 நான் . . . . நானாக !
 
 வைகைச் செல்வியின் கவிதைகள் என்ன காட்டுகின்றன ? கவிஞரின் ஆத்மாவைக் காட்டுகின்றன. 
தன்னைக் காட்டுகின்றன. உன்னை, என்னை, சூழ்வெளி உலகைக் காட்டும் கண்ணாடியாக உள்ளன. 
அவரது கவிதைகள் எப்படி இல்லை ? தற்காலப் புதிய கவிதைகளைப் போல் வெறும் 
வார்த்தைகளின் வெடிப்புப் பட்டாசாக, சடுகுடு ஆட்டமாக, சர்க்கஸ் தாண்டவமாக இல்லை ! 
அப்படிப் புதிய கவிதை எதிர்பார்ப்பவருக்கு அவரது கவிதைகள் பெருத்த ஏமாற்றம் 
அளிக்கலாம் !
 
 மகாத்மா காந்திக்கு வாழ்த்துப் பாவிசைத்த பாரதியாரைப் பின்பற்றி
 
 வாழ்க நீ வைகைச் செல்வி
 வையத்து நாட்டி லெல்லாம் !
 தாழ்வுற்று உரிமை நீங்கி
 தவித்திடும் பெண்டிர்க் கெல்லாம்
 ஊழ்விதி இல்லை என்று
 ஊக்கிடும் மாதர் மணியே !
 சூழ்வெளி காத்துப் பசுமைச்
 சொர்க்கத்தை மீட்டு வருவாய் !
 
 என்று கவிஞர் வைகைச் செல்வியைப் பாராட்டிக் கட்டுரையை முடிக்கிறேன்.
 
 நூல் வெளீயீட்டு விழாக் காட்சி....
 
 கவிதாயினி வைகைச்செல்வியின் "இன்னொரு உலகில்... 
இன்னொரு மாலையில்..." என்ற கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் 
வருமாறு:
 6.10.2007 அன்று சிவகாசி பாரதி இலக்கியச் சங்கம் சார்பில் பட்டிவீரன்பட்டியில் 
நிகழ்ந்த செளந்தபாண்டியனார் அரங்கத்தில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் கவிஞர் வைகைச் செல்வியின் "இன்னொரு உலகில்... இன்னொரு மாலையில்..." என்ற 
கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. பேராசிரியா திருமதி பொ.நா.கமலா வெளியிட, கவிஞர் 
ரெங்கநாயகி பெற்றுக்கொண்டார். இருவருக்கும் நடுவிலிருப்பவர்
 கவிஞர் வைகைச் செல்வி. பொன்னீலன் இடது கோடியில் நிற்கிறார். வலது கோடியில் நிற்பவர் 
கவிஞர் திலகபாமா.
 
 இந்நிகழ்ச்சியில் விழா அமைப்பாளர் கவிஞர் திலகபாமா, திருமதி லட்சுமியம்மாள், 
எழுத்தாளர் பொன்னீலன், சுகதேவ், கவிஞர்கள் பிரம்மராஜன், அண்ணா கண்ணன், வில்விஜயன், 
சொர்ணபாரதி, அமிர்தம் சூர்யா, கவின், விஜயேந்திரா, எழிலரசு, தமிழ்மணவாளன், உள்ளிட்ட 
பலரும் கலந்து கொண்டனர்.
 
நூல் கிடைக்குமிடம் :
 இன்னொரு உலகில் . . .
 இன்னொரு மாலையில் . . .
 
 விலை ரூ. 50
 
 காவ்யா வெளியீடு (2007)
 16, இரண்டாம் குறுக்குத் தெரு
 டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்
 சென்னை : 600 024
 S. Jayabarathan (jayabarat@tnt21.com |