| 
            ஜெயந்தன் நினைவுகள்! 
            -தமிழ்மணவாளன் - 
            
             தமிழின் முக்கியமான எழுத்தாளர் ஜெயந்தன் தனது சொந்த ஊரான, 
            தமிழ்நாடு,திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காலமானார்.
            எனக்கு அவரோடு 15 ஆண்டு கால நட்பு. என்னையும், இலக்கியம் கடந்த உறவு 
            பாராட்டி பிள்ளை போலவே அன்பு காட்டினார். 
            அவர் சென்னையில், அவரது மகன் சீராளன் உடன் இருந்த போது இலக்கிய 
            நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். தொலைபேசியில் அவ்வப்போது 
            பேசிக்கொள்வோம். 2007 ல் அவரது சொந்த ஊரான மணப்பாறைக்குக் 
            குடிபெயர்ந்தார். எனக்கும் சொந்த ஊர் அது
            என்பதால், ஊருக்கு செல்லும் போதெல்லாம் அவரையும் அம்மாவையும் 
            சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. அவர் கூட 'சென்னையில் இருக்கும் 
            போது கூட அடிக்கடி சந்திக்க முடியாது. மணப்பாறை வந்ததிலிருந்து மாதம் 
            ஒரு தடவையேனும் சந்தித்து விடுகிறோம் என்று' சொல்வதுண்டு. 
 பிப்ரவரி 12ஆம் தேதி மணப்பாறையில் நான் கலந்து கொள்கிற இலக்கிய 
            நிகழ்ச்சி பற்றி 5ஆம் தேதி போனில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
            'வாங்க தமிழ், 12ஆம் தேதி சந்திப்போம்',என்றார். ஆனால் 7ஆம் தேதியே 
            அவரது இறுதி நிகழ்ச்சியில்
            பங்கேற்க மணப்பாறை செல்ல நேர்ந்தது பெரிய துரதிர்ஷ்டம்.
 
 அவரோடு பேசுவது என்பது மகிழ்ச்சி தரக்கூடியது. பல விஷயங்களை பேச்சின் 
            போது சொல்லிக் கொண்டே இருப்பார். தான் அறிந்த விஷயங்களை அடுத்த 
            தலைமுறைக்கு கடத்தி விட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக 
            இருந்தார்.
 
 ஒரு ராணுவ அதிகாரியின் தோற்றத்தோடு கம்பீரமாக காட்சி தந்த ஜெயந்தனின் 
            திடீர் மரணம் எனக்கும், என் மனைவிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகும்.
 
 ஜெயந்தன் பற்றிய குறிப்புகள்
 
 இயற்பெயர்: கிருஷ்ணன். திரு. பெருமாள்-ராஜம்மாள் தம்பதியினருக்கு 
            மகனாய் 15-06-1937ல் பிறந்தார். மனைவி நாகலட்சுமி. சீராளன், அன்பு ஆகிய 
            இரு மகன்களும் வளர்மதி என்ற மகளும் உள்ளனர். கணையாழியில் இவர் எழுதிய 
            'நினைக்கப்படும்' என்னும் நாடகம் மிகவும் வரவேற்பைப் பெற்றது. இவரின் 
            'வாழ்க்கை ஓடும், சம்மதங்கள், மொட்டை, அவள், இவன் போன்ற கதைகள் உலகத்
            
            தரத்திற்கு நிகராகப் போற்றத்தக்கன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம், 
            ஹிந்தி,தெலுங்கு,மலையாள்ம் ஆகிய மொழிகளில்
            பெயர்க்கப்பட்டுள்ளன. 'சிறகை விரி வானம் உனது', என்ற வானொலி நாடகம் 
            அகில இந்திய முதல் பரிசு பெற்றது. பாவப்பட்ட ஜீவன்கள், இந்தச் 
            சக்கரங்கள், முறிவு ஆகிய குறு நாவல்களை எழுதியுள்ளார். நிராயுதபாணியின் 
            ஆயுதங்கள், சம்மதங்கள், ஞானக்கிறுக்கன் கதைகள், மீண்டும் கடவுளும் 
            கந்தசாமியும், மனச்சாய்வு ஆகிய சிறுகதை தொகுப்புகள் வந்துள்ளன.
 
 மணப்பாறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மணவை தமிழ் மன்றத்தை 
            மணவை முஸ்தபாவோடு இணைந்து தொடங்கியவர். கடந்த மூன்று ஆண்டுகளாக 
            மணப்பாறையில் 'சிந்தனைக் கூடல்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். 
            அவர், 'நித்யா' என்னும் அறிவியல் புதினம் ஒன்றினை எழுதி வந்தார். அந்த 
            நாவல் முற்றுப் பெறுமுன்னர் அவரது வாழ்வு நிறைவு பெற்று விட்டது.
 
 tamilmanavalan@yahoo.co.in
 |