எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடனொரு நேர்காணல்!
- ஆல்பர்ட் (அமெரிக்கா) -
"கல்வினோ'வில் ஆரம்பித்து, 'தெரிதா'வாக தங்களை நிறுத்திக் கொண்டு எழுதப்போக
மிஞ்சுவது கடைசியில் குழப்பம் தவிர வேறில்லை" - நாகரத்தினம் கிருஷ்ணா.
இன்றைய
தமிழ் இலக்கிய உலகில் தனித் தன்மைகளுடன் முகம் காட்டும் கலைஞர்கள் அனேகர் வலம்
வந்து வளம் சேர்த்து
வருகின்றனர். இதனால் பல நிலைகளில் பல தளங்களில் மென்மேலும் பல்வகையில் பரிமாணம்
பெற்று வளர்கிறதைக் காண்கிறோம்! இந்த மரபிற்கு மகுடம் சூட்டும் ஒருவர்தான்
நாகி எனப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள்!
தமிழ் இலக்கியத்தின் வரைபடத்தை உலகளாவிய சிந்தனையில் சிலிர்த்துச் சிறகுவிரிக்கும்
சிந்தனையாளர்! தமிழ் இலக்கிய மரபில்
கதைவெளியை ஆழமாக்கும் பொருட்டு பன்னாட்டு இலக்கியங்களில் மூழ்கி நுண்ணுணர்வுகளோடு
புதிய சாளரங்களைத் திறந்து காட்டியிருக்கிறார் தனது நீலக்கடல் எனும் சரித்திரப்
புதினத்தில்! இலக்கிய பிம்பங்களைத் தாண்டி, தேடலும் வேட்கையும் நிறைந்த அவரது
அனுபவத்தை நீலக்கடலை வாசிப்பவர்கள் அனைவரும் நுகரமுடியும்!
இணைய இதழ்களில் பரவலாக அறியப்பட்டவர், நாகரத்தினம் கிருஷ்ணா! குறிப்பாக
பதிவுகளிலும், திண்ணையிலும் இவரது படைப்புகள் வாரம்தவறினாலும் தவறாது இவரது
படைப்புகள் முகம் காட்டும்!
சமூகவியலில் முதுகலைப் பட்டம்பெற்ற இவர் புதுவையை பிறப்பிடமாகக் கொண்டவர்! புதுவை
அரசின் வருவாய்த்துறையில்
பணியாற்றி குடும்பச் சூழல் இவரை பிரான்சுக்குத் தள்ளிக்கொண்டுவந்தது! பிரான்சில்
ஸ்ட்ராஸ்பூர் பல்கலைக்கழகத்தில் கணக்காயருக்கான் பட்டயம் பெற்று அங்கேயே நகரசபையில்
பணிபுரிந்தார். அந்த வேலையை உதறிவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அங்காடி ஒன்றை
நடத்திக்கொண்டுவருகிறார்.
ஒன்பதாம் வகுப்பில் கவிதை எழுதத் துவங்கி கையெழுத்துப் பிரதி நடத்தியதோடு வெகுஜன
இதழ்களிலும் இவரது படைப்புகள்
வெளிவந்தது. 90களில் பிரான்சில் முரசு என்ற இதழையும் நிலா என்ற மாதமிருமுறை
இதழையும் நடத்தினார். பிரான்சில் நிலா
ஆசிரியர் என்றே பெரும்பாலோர்க்கு பரிச்சயமானவர்!
சிற்றிதழ்களிலும்,
இணைய இதழ்களிலும் எழுதிவருகிற இவர் இதுவரை இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு
கட்டுரைத் தொகுப்பு, ஒருகவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுதி ஒன்றும்
நீலக்கடல் நாவலொன்றும் இதுவரை வெளிவந்துள்ளன. அமுத சுரபி சிறுகதைப் போட்டியில்
"ருக்குமணியின் சபதம்" என்ற சிறுகதை சமீபத்தில் பரிசை வென்றது! வாசிக்கும்
பழக்கத்தை சுவாசமாக்கியது எனது தாய் என்று பெருமைப்படும் இவர், மு.வ.விலிருந்து
இன்றைய தேதி வரையிலான அனைத்து எழுத்தாளர்களையும் நேசித்து அவர்கள் எழுத்துக்களை
வாசிப்பது எனக்குப் பிடித்தமான விடயம் என்கிறார். கவிஞர்களில் ஆண்களைப் பெண்கள்
முந்துவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றே தோன்றுவதாக நாகரத்தினம் கிருஷ்ணா வியந்து
சொல்கிறார்.
படைப்பாளியின் எழுத்துவேலிகளுக்கு அப்பால் படைப்புகள் வெளிப்படுத்தும் அனுபவம்
புரிதல்தான் முக்கியம். அதாவது வாசகர் மனம்தான் எதையும் தீர்மானிக்க முடியும்,
என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ளவர். நீலக்கடல் நாவல் புலம்பெயர்
எழுத்தாளர்களுக்கான தமிழக அரசு விருதை வென்றெடுத்துள்ள நிலையில் பதிவுகளுக்காக ஓர்
நேர்காணலைச் செய்ய நமது விருப்பத்தை தெரிவித்தவுடன் இன்முகத்தோடு ஒப்புக்கொண்டார்.
இனி சந்திப்போம் நாகியை....
பதிவுகள்:- தங்கள் நாவலுக்கு விருது கிடைத்தமைக்கும் மென்மேலும்
கிடைக்கவும் முதலில் வாழ்த்துக்கள். விருது கிடைத்த செய்தியறிந்தபோது உங்கள்
உள்ளத்துணர்வுகள் குறித்து...?
நாகி: - மிக்க நன்றி. உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன்,
மறுப்பதற்கில்லை. நீலக்கடல் நாவலை சிரத்தை
எடுத்துக்கொண்டு வித்தியாசமாக எழுதினேன். மூன்று காலத்திற்கும் மூன்றுவிதமான
மொழிகளை பாவித்தேன். அம்மொழிகளும் பாத்திரங்களின் சமூகச் சூழல், அறிவுத் திறன்,
சம்பவ நெருக்கடிகள் என பலக் காரணிகளின் அடிப்படையில்
உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கதையல்ல ஆண்டவர்களையும், அவர்களின் குடிகளையும்
சமதளத்தில் வைத்து, வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களின் உண்மை
மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் உண்மை என தெரிவித்த முயற்சி. அந்த உண்மையையை நிறுத்த
ஒரு சராசரி தமிழ்
எழுத்தாளனைக்காட்டிலும் பொருட் செலவையும், புலம்பெயர்ந்தவர்களால் இயலாத காலச்
செலவையும் தயக்கமின்றி செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக வெளியீடுகளையும்,
பிரான்சில் நான் வசிக்கிற நகரத்து நூலகங்களில் கிடைக்காத புத்தகங்கள், இந்தியாவில்
வாங்கிய நூல்களென சொந்தமாக வாங்கி வரவழைத்துப் படித்தேன், நீலகடலுக்கெனவே சிறிய
நூலகம் வைக்கலாம்.
கதை நடக்கும் முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். பிறகு இணைய தளங்களின்
உதவியையும் மறுப்பதற்கில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் காரர்களின் உணவென்றால், பிரான்சின் எந்தப்
பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களுடைய உணவுப்
பழக்கவழக்கங்கள் என்னென்ன, ஒரு இசைக்கருவியின் பெயரைச்
சொல்லவேண்டுமானால் கூட கதை நடந்த ஆண்டில், கதை நடக்கும் களத்தில் அதன்
உபயோகத்திற்கான சான்றுகள் இப்படித் தேடித் தேடி எழுதியதுகூட பரிசுக்குக் காரணமாக
இருக்கலாம்.
பிறகு எதையும் எனக்காகத்தான் செய்கிறேன். உண்பது, உடுப்பது, நேசிப்பது என
எல்லாவற்றையும். எனது எழுத்தும் அப்படித்தான்.
ஒருவகை சுயநலம். சில சுயநலங்கள் பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நீலக்கடலுக்கு அப்படியான வெற்றியாகக்கூட இருக்கலாம், பரிசுக்காக எழுதப்படவில்லை.
எனினும் தமிழக அரசுக்கு நன்றி. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும், அது நீங்களும்
அறிந்ததுதான். பரிசு பெற்றவைமட்டுந்தான் உலகில் பெரிய படைப்புகளென்றோ,
பரிசுவாங்கியவர்கள் மாத்திரந்தான் பெரிய எழுத்தாளர்களென்றோ
சொல்வதற்கில்லை. பரிசேதும் இல்லை என்றாலும் சோர்ந்திருக்கமாட்டேன். உலகமெங்கும்
பரிசுகள் பெற்றிராத தரம் வாய்ந்த படைப்புகள், மிகப்பெரிய படைப்பாளிகள் இருக்கத்தான்
செய்கின்றனர். சமீபத்திய உதாரணம் சுந்தர ராமசாமி.
பதிவுகள்:- நீலக் கடல் நாவல் உருவானது குறித்து உங்கள் மலரும் நினைவுகளை
பகிர்ந்துகொள்ளமுடியுமா?
நாகி: - நீலக்கடல் நாவலை 1973ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தொல்லைகொடுத்த,
இரண்டு மன ஆக்ரமிப்புகளின் வடிகால் என்று
சொல்லலாம். முதலாவது சென்னையில் சர் தியாகராயாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
நேரம். இராயபுரத்திலிருந்து கல்லூரிக்குத் நடந்து செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு
நாளும் ஒன்பது நாற்பந்தைத்துக்கு, T.H. ரோடு எனப்படும், திருவொற்றியூர் சாலையில்
ஒரு பள்ளிமாணவி எதிர்படுவாள். நான் அறிந்து, தோழியர் கூட்டத்தோடு அவளைப்
பார்த்ததில்லை. சில நேரங்களில் எங்கள் பார்வைகள் சந்தித்திருக்கின்றன. மனதில்
பதிந்திருந்தாள், நிறைய கவிதைகள், ஒன்றிரண்டு சிறுகதைகள் அவளை மையமாக வைத்து
எழுதியிருக்கிறேன். இன்றுவரை சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வர்ணணைகள் என்று
எழுதுகிறபோதெல்லாம் அவள் குறுக்கிடுகிறாள். நீலக்கடல் தேவயானி அந்தப் பெண்ணாகக் கூட
இருக்கலாம். இரண்டாவதாக அதே ஆண்டில் ஏதேச்சையாகக் கேட்ட புலவர் கீரனின் கந்தபுராண
சொற்பொழிவு. நீலக்கடல் கதைக்கு ஆதாரமான கருமாறிப்பாய்தல் என்றால் என்ன? என்பதை,
தமது உரைக்கு இடையில் குறிப்பிட்டார். ஆக நீலக்கடலுக்கான விதை 1973ம் ஆண்டிலேயே என்
மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.
பதிவுகள்:- நீலக்கடல் நாவல் உருவாக வித்திட்டது ஆனந்தவிகடனில் வெளியான
தங்கள் சிறுகதை. அதன் பெயர் என்ன? ( அதை தனியாக வாசகர்களுக்கு வாசிக்க
வழங்குவீர்களா?)
நாகி: - முன்பே குறிப்பிட்டதுபோல 1973ம் ஆண்டு வித்திட்ட நீலக்கடல்
'பார்த்திபேந்திரன் காதலி' என்ற பெயரில் 'கதை சூப்பர் ஸ்பீடு, கலக்கல் டர்னிங்,
நெஞ்சை தொட்டுட்டேம்மா' என்ற குறிப்புடன் ஆனந்தவிகடன் இதழில் (09-05-2004)
பிரசுரமானது. பதிவுகள் விருப்பினால் தாரளமாக வெளியிடலாம்.
பதிவுகள்: நீலக்கடல் நாவலுக்காக தொடர்புடைய நாடுகளுக்கெல்லாம்
சென்றுவந்ததாகச் சொன்னீர்கள்! அந்தப் பயண அனுபவங்களில் (குறிப்பிட்டுச்
சொல்லும்படியாக) மனதிலிருப்பதை துடைத்தெறிய இயலாத நினைவுகள் குறித்து?
நாகி: - நாடுகள் என்று சொல்லவில்லை, இடங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.
உண்மையில் நீலக்கடல் நாவலில் முக்கிய பங்கினை வகிக்கும் மொரீஷியஸ் தீவுக்குச் செல்ல
இயலவில்லை. இரண்டு முறை தேதி குறித்து பதிவு செய்த பயனச்சீட்டை ரத்து செய்ய
வேண்டியிருந்தது. ஆனால் நாவலுக்கு வேண்டிய தகவல்களை, The Mauritious Archives,
Mahatma Gandhi Institute ஆகியவற்றோடு தொடர்புகொண்டு வேண்டியவற்றைப் பெற மொரீஷியஸ்
நண்பர் உதவினார். பிரான்சில் குடியேறிய வயதான மொரீஷியத் தமிழர்களைச் சந்தித்தேன்.
மிக முக்கியமாக மொரீஷியஸ் மற்றும் காலணி ஆதிக்கம் சம்பந்தமான ஆவணங்களை பிரான்ஸின்
தென்பகுதியிலுள்ள, Aix-en- Provence நகரத்தில் பார்வை இட முடிந்தது. இந்தியாவில்
கதை
நடைபெறுகிற எல்லா இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். குறிப்பிட்டுச்
சொல்லும்படியான அனுபவங்கள் ஏதுமில்லை.
பதிவுகள்:- நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழக அரசின் விருதுக்கு
விண்ணப்பித்தீர்களா? அல்லது தற்செயலாக நீங்கள் அனுப்ப எதிர்பாராமல் விருது
கிடைத்ததா?
நாகி: - இதில் என்பங்கு எதுவுமில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம்
தேதியன்று, சந்தியா பதிப்பகம் தெரிவித்த செய்தியை எனது இளைய மகள் மூலம் அறிந்தேன்.
மறுநாள் தொடர்புகொண்டு விசாரித்ததில் நீலக்கடலுக்கு தமிழக அரசின் விருது
கிடைத்திருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லா பதிப்பாளர்களையும்போலவே, போட்டியில்
கலந்துகொள்ள தாம் வெளியிட்ட நூல்களை அரசின் பார்வைக்கு சந்தியா பதிப்பகம்
அனுப்பிவைத்திருக்கிறது. பரிசு கிடைத்தபிறகுதான் இதனை அறிந்தேன். உண்மையில் இந்த
விருது 2005ல் வெளிவந்த நூல்களுக்கான விருது, 2006ம் ஆண்டு கூடிய தேர்வுக்குழுவினர்
அதுபற்றி விவாதித்து 2007ல் விருதினைக் கொடுத்திருக்கிறார்கள்.
பதிவுகள்: அப்படியானால் தமிழக அரசு விருது குறித்து தங்களுக்கு நேரடியாக
தெரிவிக்கவில்லையா? அரசின் விருதைப்பெற உங்களுக்கு அரசு அழைப்பு அனுப்பியதா?
விருதின் சாராம்சம்ங்கள் என்ன?
நாகி: - தமிழக அரசின் 'தமிழ் வளர்ச்சித்துறை' ஆண்டுதோறும் பலதுறைகளிலும்
தமிழில் பிரசுரமாகிற கவிதை, புதினம், சிறுகதை,
நாடகம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்க்கை வரலாறு, பயணநூல், மானுடவியல்,
தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பரிசுகள் வழங்குகிறது. இதில் நீலக்கடல் வெளிநாட்டு
படைப்பிலக்கியம் எனும் வகைபாட்டில் சிறந்த நாவாலுக்கான விருதினைப் பெற்றிருக்கிறது.
தமிழ் நாட்டளவில் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியாது. விருது அறிவிப்பும் அதனைத்
தொடர்ந்து நடைபெற்ற பாராட்டிதழ் வழங்கும் விழாவும் குறுகிய கால இடைவெளியில்
நடைபெறுவதால் தொடர்புகொள்ள இயலவில்லை எனச் சொல்லப்பட்டது. உள்ளூரிலே கூட,
சென்னையைச் சேர்ந்தவர்களைத் தவிர பரிசுபெற்ற பிற
எழுத்தாளர்கள் வந்திருப்பார்களா, பாராட்டிதழ் வழங்கிய நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. கேட்டால் உங்களுக்கெல்லாம் புகழ்வந்து
சேருகிறதே என்பார்கள். என்ன செய்ய அதை மறுக்கும் ஆசனத்திலும் நானில்லை. எனக்கு
அடையாளம் தேவைப்படுகிறது.
கடந்த அக்டோபர் 2006ல் அதாவது எனக்குப் பரிசு கிடைப்பதற்கு முன்னால்,
"வணக்கத்திற்குரிய எழுத்தாளர் திரு ரெ.கார்த்திகேசு
'மரத்தடி.காம்' இணைய குழுமத்தில் எழுதியக் கட்டுரை ஒன்றில் '2005 ல் பதிக்கபட்ட
நீலக்கடல் எனும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலுங்கூட அதிகம்
அறியப்படாமலும், பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில்
வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள்
இருக்கின்றன... என எழுதுகிறார்.
திரு.ரெ.கார்த்திகேசுவிற்கு நன்றி பாராட்டி எழுத அவருடைய முகவரிகூட எனக்குத்
தெரியாது. இணைய குழுமத்திற்கே நன்றியைத் தெரிவித்து மடலை எழுதினேன். திரு
ராஜலிங்கம், சுவிஸ் நாட்டில் வசிக்கிறார், முதுபெரும் பத்திரிகையாளர், தனக்கு 70
வயது ஆகிறது என்றார். நாவலைப் படித்துவிட்டு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு
வெகு நேரம் பாராட்டிப் பேசினார். இப்படியான பாராட்டுதல்கள்தான் ஓர்
எழுத்தாளனுக்குத் தேவை. இவைகள்தான் பெரிய விருதுகள்.
பதிவுகள்:- முதல் கதை, முதல் கவிதை எழுதி வெளிவந்தபோது உங்களுக்குள்
பொங்கிவழிந்த மகரந்த நினைவுகளை கொஞ்சம் மலருங்களேன்....?
நாகி: - அதனைப் படைப்பென்று சொல்ல முடியாது, எனது உணர்வுகளை எழுத்தில்
அளிக்க முடியுமென்கிற நம்பிக்கையை ஊட்டிய தருணமென்று சொல்லலாம். அப்போது ஒன்பதாம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளை,எனது தமிழாசிரியர் 'நாகி'யென எங்களால் அன்புடன்
அழைக்கப்பட்ட திரு நா.கிருஷ்ணசாமி யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாக ஆசிரியப்பாவை
முடித்துவிட்டு, ஆளுக்கொரு கவிதை எழுதச்சொன்னார் 'காகமே காகமே கருநிறக்
காகமே,வேகமாய்ச் சென்று நீ மேகமாய் மறைவதேன்', என ஒருக் கவிதையை எழுதிப்போய்
காட்ட, பிற மாணவர்களைக்காட்டிலும் எனக்குக் கொஞ்சம் எழுதவருகிறதென நினைத்தவர் பள்ளி
ஆண்டுமலர் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அதற்கடுத்த
ஆண்டு, பள்ளியில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியான 'மனம்' இதழுக்கு ஆசிரியராக
உத்தியோக உயர்வு. எனது முதற் கவிதை, முதற்கதை, முதற்கட்டுரை மூன்றும் அவ்விதழில்
இடம்பெற நேர்ந்ததை வாய்ப்பென்றுதான் சொல்லவேண்டும். அக்கையெழுத்துப் பிரதியை
எவர்கையில் கண்டாலும் என்னிடத்தில் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொள்ளூம். அந்த இதழை
அநேகமாகப் பள்ளியில் அதிகமுறைவாசித்தவன் நானொருவனாகத்தான் இருக்கவேண்டும்.
பதிவுகள்:- எத்தனை மொழிகளில் பரிச்சயம் உண்டு? உங்கள் நூல் எதுவும் பிற
மொழியில் மொழிபெயர்க்கப்படவுள்ளதா?
நாகி: - ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிவேன். இதுவரை எனது எந்தநூலும்
மொழிபெயர்க்கபடவில்லை. பிரான்சில் உள்ள நண்பர்கள் சிலர் நீலக்கடலை மொழி
பெயர்க்கவேண்டுமென்றனர். பிரான்சில் Act Sud பதிப்பகம் நீலக்கடல் மாதிரியான
நூல்களில் அக்கறை காட்டும் நிறுவனம். அவர்களிடம் ஓராண்டிற்குமுன் எழுதி கேட்க
மொழிபெயர்ப்பினை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். ஒரு சில நண்பர்கள் மொழி
பெயர்க்கிறேனென்று இணங்கி ஒரு பக்கங்கூட மொழிபெயர்க்கவில்லை. நானுங்கூட முதல்
அத்தியாயத்தை மொழிபெயர்க்க உட்கார்ந்து சோர்ந்துவிட்டேன். நாவலின் பதினெட்டாம்
நூற்றாண்டு மொழி சங்கடப்படுத்துகிறது. சிறுகதையொன்றை நேரடியாக
பிரெஞ்சில் எழுதியிருக்கிறேன். தமிழ் அளவிற்கு மொழியை லாவகமாக பிரெஞ்சில் என்னால்
கையாள இயலவில்லை. ஆனால் நீலக் கடலை எப்படியும் மொழி பெயர்த்து பிரெஞ்சில்
வெளியிடுவது என்கிற கனவிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
பதிவுகள்:- இந்தப் பன்மொழிப் புலமை உங்கள் படைப்புகளை செழுமைப்படுத்த
உதவுகிறதா?
நாகி: - பன்மொழிப் புலமை என்றெல்லாம் சொல்வது அதிகப்படியான அடைமொழி. மூன்று
மொழிகளிலும் பேச எழுத முடியும், தமிழில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறேன்
அவ்வளவுதான். நிறைய விஷயங்களில் எனக்குப் பற்றாக்குறை இருக்கிறது அதனை எழுதும்போது
உணருகிறேன். எனக்கு வாசிப்பு போதாது. ஆங்கிலமும் பிரெஞ்சும் படைப்புலகில்
முக்கியமான மொழிகள். சமீபகாலமாக ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்கள் சந்தை நோக்கோடு
செயல்படுகின்றன. விற்பனைக்கான அத்தனை தந்திரங்களும் கையாளப்படுகின்றன. குறிப்பாக
அமெரிக்கர்கள் கதைசொல்வதில் தேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கு எழுத்து
முக்கியம். ரஷ்ய எழுத்தாளர்களைப்போல. உயிர்ப்புள்ள இலக்கிய படைப்புகளில் ஆர்வம்
கொண்டவர்கள்-பிரெஞ்சு படைப்புலகம் என்பது நிலைப்பாடுக்கு எதிரான கலகக்குரல்களால்
வளர்ந்தது. தன்னுணர்வு, அகமனப் போராட்டம் இவைகள் பிரெஞ்சில் அதிகம்.
இரண்டு மொழி படைப்புகளையும் அந்தந்த மொழியில் படிக்கிறேன். இரு மொழி படைப்பும் என்
எழுத்துக்கு உதவுகின்றன. இங்கேயுள்ள நூலகத்தில் Bi-Langue என்று ஒரு பிரிவு உண்டு.
அப்பிரிவில் புகழ்பெற்ற ஆங்கில சிறுகதைகள், மூலமும் மொழிபெயர்ப்புமாக எதிரெதிர்
பக்கங்களில் இருக்கும். அம்மாதிரியான நூல்களை மாதத்திற்கு ஒன்றேனும் வாசிக்கும்
பழக்கமுண்டு. இந்த ஒப்புநோக்குவாசிப்பு புறநோக்கில், மொழியின் வல்லமையை
புரிந்துகொள்ள உதவ, அகநோக்கில்(மொழி இரண்டையும் இரு கண்களெனக் கொண்டால்)
ஒத்துணர்வில் துடிப்பது வலமா இடமா? என்பதைப் புரிய வைக்கிறது. இப்படியானப்
புரிதல்கள், நமது எழுதும் திறனிற்கு நிச்சயம் உதவக் கூடும்.
பதிவுகள்:- விருது..வாசகனின் பாராட்டு...இதில் எதைப் பெருமையாகக்
கருதுவீர்கள்?
நாகி: - பாராட்டும் விருதும் இருவேறு சொற்கள் என்றாலும் பொருள் ஒன்றுதான்.
இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை, வாசிப்பில்லாமல் விருது ஏது. பாராட்டுவதற்கு
முன்னால் வாசிப்பு, வாசிப்பு முக்கியம்.
பதிவுகள்:- புதுக்கவிதையின் திசை திருப்பப்பட்டு, அதன் பாதை இன்றைக்குச் சரியாக
இல்லை என்ற கவிஞர் மேத்தாவின் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?
நாகி: - இதில் சொல்வதற்கென்ன இருக்கிறது, அறுபதுகளில் எழுப்பி பாரதியைக்
கேட்டிருந்தால் கூட அவருக்குப் பின்னால் கவிதை எழுதவந்தவர்களைப் பார்த்து இதைத்தான்
சொல்லியிருப்பார். தம்மை அடையாளப்படுத்த பிறர் இருப்பை நிராகரிப்பதென்பது,
அரசியல்வாதிகளிடமிருந்து படைப்பாளிகள் பெற்ற தாக்கம். கவிதையை ஓர் வீடென்று
வைத்துக்கொண்டால், அதன் வடிவங்களில் ஒன்று புதுக்கவிதை. ஒரு வீட்டின் உட்பகுதி எந்த
நாட்டிலும், எக்காலத்திலும் பொதுவானத் தன்மைகளுடன் நிரந்தரமாக இருக்கின்றன,
வெளித்தோற்றங்கள் அதாவது வடிவங்கள் காலத்திற்கேற்ப, மக்களின் வளர்ச்சிக்கேற்ப,
தேவைசார்ந்து மாற்றம் பெருகின்றன.
கவிதை நிரந்தரமானது. அதன் உணர்வுகள் நிரந்தரமானவை. வடிவம் மாறும் தன்மையது,
புதுக்கவிதையும் அதிலொன்று. கற்பனைத் திறனும், நாடகப் புலமையும் இணைந்த
காப்பியங்களை அறிவோம், உரைநடை வடிவத்திற்கு மாற்றாக அவை எழுதபட்டன. பிறகு நாடகத்
தன்மைகளை குறைத்துகொண்டு கவிஞன் தன் மனம்சார்ந்த உணர்வுகளில் அக்கறைகாட்டினான்
எனினும் மரபுக் கவிதைகளாகத்தான் அவை இருந்தன. கவிதையென்பது இசையோடு தொடர்புகொண்டது,
என்ற எண்ணத்தின் அடிப்படையில், தனிமனித உணர்வுகளை பேசும் போதுங்கூட யாப்பிலக்கணம்:
சீர், அசை, தளை எதுகை மோனை விதிகள் அத்தியாவசியமாக இருந்தன.
உலகமெங்கும் அதுதான் நடந்தது. பிரான்சில் மரபுக் கவிதைகளை அவர்கள் Poesie Classique
என்று அழைத்தனர், பின்னர் Poesie Moderne
(புதுக்கவிதை) அங்கு 1880ல் குறியீட்டாளர்களால்(Symbolists) அறிமுகப்படுத்தபட்டது.
கட்டுபாடற்ற வரிகளில், ஓசை ஒழுங்குகளை ஒதுக்கிவிட்டு எழுதத் துணிந்த Gustave Kahnன்
கவிதையான Palais Nomade அதற்கு முன் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. Vers Libres -
Free verses என இலக்கியத்தில் பொருள்கொள்ளப்படும் அக்கவிதைகள் கவிதை வடிவத்தின் ஓர்
அங்கம்.
உணர்வுகளுக்கு, சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கப்படவேண்டும், என்பது
புதுக்கவிதைகளின் எழுதப்படாத விதி. புதுக்கவிதையை கர்த்தாக்களான குறியீட்டாளர்கள்
கவனமெல்லாம், அந்த நேரத்தில் அபௌதிகம், புதிர்நிலை என்றிருந்தது. டி.எஸ் எலியட்
புதுக்கவிதையை "means too much to mean anything at all" என்றவர். புதுக்கவிதை
என்பதே சுதந்திர எழுத்து என்கிறபோது அதற்கான திசை, குவிமையம் என்றெல்லாம் பேசுவது
சரியல்ல. அதைவிட திசைகளைப் பற்றி அக்கறைகொள்ளாமல், கவிதை இருக்கிறதா,
படைப்பு மனம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது. தமிழ் நாட்டில் சமீபகாலமாக
ஆபத்தான போக்கு வளர்ந்துவருகிறது.
சிற்றிதழ்களுக்குள் போட்டி நிலவுவதால், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வி;ஐ.பி.
படைப்பாளிகளுக்கு வலைவிரிக்கவேண்டிய கட்டாயம், தமிழ்ச் சூழலில் படைப்பாளிகளுக்கு,
பொருள் சம்பாதிப்பது இயலாதது.
புகழைத்தான் சம்பாதிக்கவேண்டும். பெரிய புகழென்றில்லை ஏதோ கொஞ்சம் - அதற்கும்
சிற்றிதழ்களின் தயவு வேண்டும். இது
ஒருவகையான பரஸ்பர உயிர்ப்பிச்சை. பெரும்பாலான படைப்புகள், அவர்களின் படைப்புத்
திறனோடு சம்பந்தப்பட்டதல்ல. பல வி.ஐ.பி. களின் எழுத்துக்களை பேரை எடுத்துவிட்டு
பிரசுரித்தால் படிப்பதற்கு ஆளிருக்காது. இதை நமது படைப்பாளிகளும் நன்கு அறிவார்கள்.
ஒருவகையில் வாசகர்களும் பொறுப்பு. நல்ல படைப்புகள் வலிகளைச் சொல்லவேண்டும்,
உண்மையைப் பேசவேண்டும். இப்போது நிலைமை பரவாயில்லை. ஒருகாலத்தில் எழுத்தென்றால்
'அவர்கள்' மட்டுமே என்ற நிலையிருந்துவந்தது. சமுதாயத்தின் எல்லா தரப்பினரும்
எழுத்துலகில் தங்கள் உணர்வை பதிப்பிக்க முடியும் காலமிது. படைப்புலகம் அவ்வப்போது
தடுமாறினாலும், நிமிர்ந்தே நிற்கும். திசைமாற்றமும் அதற்கு உதவலாம்.
பதிவுகள்:- உடலுறுப்புகளை கொச்சையாகப் பெயர் குறிப்பிட்டு கவிதையில்
பெண்களே எழுதுவது இன்றைக்கு பரவலாக நடந்துவருகிறது. இது குறித்து தாங்கள் என்ன
கருதுகிறீர்கள்?
நாகி: - பெண்கள் எழுதினால் என்ன தப்பு? ஏன் அவர்கள் எழுதக்கூடாதா?
ஒரு படைப்பாளி அவர் ஆணோ, பெண்ணோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தானொரு
புரட்சிகரமான சிந்தனாவாதி என்று காட்டிக்கொள்வதற்காகவும், தனது படைப்புப்
பேசப்படவேண்டுமென்பதற்காகவும் உடலுறுப்புகளை நீங்கள் சொல்வதுபோல கொச்சையாக தமது
எழுத்துக்களில் கொண்டுவருகிறாரென்றால் அது கண்டிக்கத் தக்கது.
ஆனால் தனது வலிகளையும், குமுறல்களையும் வெளிப்படுத்த, அல்லது ஒரு படைப்பின் தேவை
சார்ந்து அதைப்பயன்படுத்த
வேண்டியிருக்கிறது என்றால் தாராளமாக எழுதலாம். அந்த உரிமையைப் பெண்கள்
விஷயத்தில்மட்டும் மறுப்பது என்ன நியாயம். சொல்லபோனால் ஆண்களைக்காட்டிலும் பெண்கள்
தார்மீக உரிமை உடையவர்கள். அக்கவிதைகளில் தாக்குதல்களில்லை, தற்காப்பு நிலை.
மூச்சுத் திணறிக் கிடந்தவன் சுவாசம் பெறும் முயற்சி. பொதுவாக இம்மாதிரியான
கவிதைகளுக்கு புகலிடமாக இருப்பவை சிற்றிதழ்கள் சிற்றிதழ்வாசகர்களில் பெரும்பாலோர்
அவர்களது கவிதைகளை ஏனைய கவிதைகளைப்போலவே எடுத்துக்கொள்கின்றனர்,
புரிந்துகொள்கின்றனர். முகஞ்சுளிப்பதில்லை. ஆபாசம் எங்கே இருக்கிறது தெரியுமா
குடும்பபத்திரிகைகளில், வெகுசன இதழ்களில், தினசரிகளில், நமது சீரியல்களில்,
சினிமாக்களில்.
பதிவுகள்:- பிரான்சில் நீங்கள் நடத்திவந்த "நிலா" இதழைத் தொடர்ந்து நடத்த
இயலாது போனதற்கு என்ன காராணம்?
நாகி: - எல்லாவற்றையும் தனி ஒருவனாக செய்ய வேண்டியிருந்தது. எனது
எழுத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர 'நிலா' இதழ், வெகுசன இதழ் சாயலில்
வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம். எனக்கான இடம் அது இல்லை என்பதும், வாசகர்களுக்காக
நான் என்ற மனநிலையில், சினிமா செய்திகள், துணுக்குகள், ஜோக்குகள் என்று எழுதி
அலுத்துவிட்டது. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து இருமாத இதழாக வெளிவந்தது.
எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய கதைகளில் மூன்றில் ஒரு பங்கு அதில்
பிரசுரமானவையே. எனது பாரீஸ் நண்பர்களில் திரு பாலகிருஷ்ணன் எழுதிய 'நானொரு
சங்கத்தமிழன்', திரு. முத்துக்குமரன் எழுதிய 'பிரான்சு தொழிற்சட்டங்கள்' போன்ற
தொடர்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
பதிவுகள்:- எழுத்தாளர், இதழ் ஆசிரியர் அனுபவங்களை எப்படிப்
பார்க்கிறீர்கள்?
நாகி: - எழுத்தாளராக இருந்துவிடலாம், இதழ் ஆசிரியராக இருப்பது கடினம்.
உங்களுக்குத் தெரியாததா என்ன? எழுத்தாளனுக்கு இரண்டே இரண்டு கவலைகள்தான். ஒன்று:
தனது எழுத்து பிரசுரத்திற்கு ஏற்கப்படுமா? என்பது. இரண்டாவது பிரசுரமானபின் எத்தனை
வாசகர்கள் படித்திருப்பார்கள் என்பது. அத்துடன் சரி. மாறாக இதழ் ஆசிரியர்களை
எடுத்துக்கொண்டால் தலைவலிகள் நிறைய இருக்கின்றன. சொந்த எழுத்துக்களில் கவனம்
செலுத்தமுடியாது. விரும்பியோ விரும்பாமலோ எல்லா எழுத்துக்களையும்
படித்துப்பார்க்கவேண்டிய கட்டாயம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்குத் தார்மீகப்
பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம், இனம், மதம், நாடு என எல்லாவற்றையும்
ஒளித்துக்கொண்டு, நடு நிலையாளராக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்..என
நிறைய சொல்லலாம். எழுத்தாளனாக இருக்கவே விரும்புகிறேன்.
பதிவுகள்: தற்போதைய எழுத்தாளர்களிடம் பின் நவீனத்துவம், மாயா யதார்த்தம்,
க்யூபிசம்(post-modernism , magic realism, neo- structuralism ) போன்ற பரிசோதனை
முயற்சிகள் பரவலாக காணப்படுகின்றன. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
நாகி: - மரபு- நவீனத்துவம்- பின் நவீனத்துவம் என வந்து நிற்கிறோம்.
இதில் க்யூபிஸம் நவீனத்துவம் சார்ந்தது அதாவது 1920 ஆண்டுக்கு முந்தையது.
தாதாயிஸம், சர்ரியலிஸம் இவற்றுக்கெல்லாம்
முன்னோடி. நீங்கள் குறிப்பிடுகிற மாயா யதார்த்தம் என்பது தனிவகை. யதார்த்தத்தையும்,
கனவுகள் மயக்கத்தையும் கலந்து தருவது. இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் இதில்
தேர்ந்தவர்கள். கப்ரியல் கார்சியா, உபெர் லாம்போ முக்கியமானவர்கள். சாலமன்
ருஷ்டியும் ஒருவகையில் மாயா யதார்த்தவாதியே. பின்நவீனத்துவம் வேறு. அடிப்படையில்
இவைகள் ஒவ்வொன்றும் அதற்கு முந்தையதோடு முரண்பட்டு உருவாக்கப்பட்டவை. மரபை ஒதுக்கி
நவீனத்துவமும், நவீனத்துவத்தை ஒதுக்கி பின் நவீனத்துவமும் உருவானவை. இவைகள்
ஒவ்வொன்றின் உடலிலும், முன்னோடிகளின் மரபணுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பொதுவாக இம் மாறுதல்கள் அது நிகழ்ந்தபோதெல்லாம் படைப்புலகின் அத்தனை
பிரதிநிதித்துவத்திலும் - அதாவது கலை, இலக்கியம், மெய்யியல், இசை என அத்தனை
பரிணாமங்களிலும் -விளைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த இயக்கவாதிகள் அனைவருடைய அணுகுமுறையும் ஒரே மாதிரியாக இருந்ததென்று
சொல்வதற்கில்லை. ஓர் படைப்பின் பொருள் வெளியில் அல்ல படைப்பிலே இருக்கிறதென்று
இவர்கள் கருதுகிறார்கள். கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்றார்கள். என்ன
கேள்விப்பட்டதுபோல இருக்கிறதே என்கிறீர்களா. என்ன செய்வது நமக்கு எல்லாவற்றையும்
வெள்ளைக்காரன் சொன்னால்தான் வேதவாக்கு.
பின் நவீனத்துவத்தில் என்ன நடந்திருக்கிறது?
இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் பின் நவீனத்துவ வாதிகளின் படைப்பு என்பது ஒரு வித
ஒட்டு வேலை -அதாவது 'Collage work'. 'Patchwork' என்று சொல்வதும் சரியாக இருக்குமென
நினைக்கிறேன். நாடோடிமக்கள் வண்ண வண்ணத் துணிகளைச் சேர்த்து ஓர் ஆடையாகவோ, அல்லது
பையாகவோ உபயோகத்தில் வைத்திருப்பார்கள், அதுபோலவென்று சொல்லலாம். அந்தத் துண்டுத்
துணிகள் பட்டாகவும் இருக்கலாம், பருத்தியாகவும் இருக்கலாம், வட்டமாகவும் இருக்கலாம்
சதுரமாகவும் இருக்கலாம், நீலமாகவும் இருக்கலாம் சிவப்பாகவும் இருக்கலாம்,
குறுக்கிலும் தைத்திருக்கிலாம் அல்லது நெடுக்கிலும் தைத்திருக்கலாம், அல்லது
இவைகளுக்கு உட்படாத அல்லது இவைகளோடு இணைந்த மூன்றாவது நான்காவதாக குணங்கொண்டதாகவும்
இருக்கலாம். இறுதியில் இக்கூட்டுக்கலவையில் ஒரு பொது உபயோகம் இருக்கிறது. அவ்வாறே
பின் நவீனத்துவ இலக்கியங்களையும் தெளிவற்ற தனிமங்களின்(Element) கலவை எனலாம்.
அவற்றிர்க்கு மரபுவழி இலக்கியங்கள் அல்லது நவீனத்துவ இலக்கியங்களுக்குண்டான
சீரமை(Harmony) அவசியமல்ல.
சொல்லப்போனால் இந்த ஒட்டுவேலையையை தாதாயிஸ்டுகளும்(Dadaists),
மிகையதார்த்தவாதிகளும்(Surrealists) செய்தவர்கள்தான்.
ஒவ்வொரு பின் நவீனத்துவாதியும் சில உத்திகளை நம்புகிறார். பிலி•ப் சொல்லெர்
(Philippe Sollers) ஒரு Cut-Up எழுத்தாளர், அதாவது
எழுதிய பத்திகளை வரிசையுடைத்து பின்னர் வாசிக்கச் செய்தார். கல்வினோ வின்
எழுத்துகள் வேறுவகையானவை, நாவல்
வடிவமென்று நாம் நம்பியிருந்த பிம்பத்தைக் கலைத்திருந்தார். அவரது எழுத்துக்களில்
நிறைய வஞ்சப் புகழ்ச்சி(Irony) இழையோடும். உம்பர்த்தோ எக்கோ( Umberto Eco)
உத்திகளில் மாறுபட்டிருந்தாலும் சுவாரஸ்யமாகச் சொல்லத்தெரிந்திருந்தார்.
ஆனால் தெரிதா என்றழைக்கபடும் ழாக் தெரிதா(Jacque Derida) ஒரு Fictionist அல்ல. ஒரு
மெய்யறிவியல் சிந்தனைவாதி (Philosopher)
ஆரம்பக்காலத்தில் மொழிவல்லுனராக இருந்து பின்னர் ஜெர்மானிய ஹெய்டெக்கர்(Heidegger)
தாக்கத்தினால் ஈர்க்கபட்டவர். பிளாட்டோ, ரூஸ்ஸோ, காண்ட், எகெல், நீட்சே, பிராய்டு
என்று பலரின் தத்துவங்களையும் கட்டுடைத்து விசாரணக்கு உட்படுத்தியவர். சொற்களுக்கு
புதிய பரிமாணத்தைக் கண்டார். வார்த்தை சித்தர். சொற்களில் விளையாடினார். குழப்பமான
ஆசாமி என்று பெயரெடுத்தவர்.
இதில் பிரச்சினை என்னவென்றால் நம்மர்கவள் 'கல்வினோ'வில் ஆரம்பித்து, 'தெரிதா'வாக
தங்களை நிறுத்திக்கொண்டு எழுதப்போக
மிஞ்சுவது கடைசியில் குழப்பம் தவிர வேறில்லை. 'கல்லைக்கண்டால் நாயைக் காணோம் நாயைக்
கண்டால் கல்லைக் காணோம்', என்பதும் பின் நவீனத்துவமே. நம்ம ஊரு மகாபாரதம்,
இராமாயணம், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை உட்பட எல்லாவற்றிலும் எல்லா
இஸங்களும் இருக்கின்றன. கீழை நாடுகளுக்கென அடையாளங்கள் இருக்கின்றன. இங்கே
சொல்லப்படாத விஷயங்களா? நடத்தப்படாத தத்துவ விசாரணைகளா? மேற்கத்திய, தென் அமெரிக்க
இஸங்களை புரிந்து கொள்வதில் தப்பில்லை. 'தானும் அதுவாக பாவித்து' எழுதுவதுதான்
எதற்கென்று புரியவில்லை.
பதிவுகள்: புரிந்துகொள்ளவே சிக்கலான, திருகலான நடையில் எழுதும் போக்கு
அதிகரித்துவருவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? அது தேவையா?
நாகி: - இந்தக் கேள்விக்கும் மேற்சொன்னபதிலையே எடுத்துக்கொள்ளலாம்.
பதிவுகள்: தமிழில் இலக்கிய விமர்சனத் தளம் குறித்து உங்கள் பார்வை என்ன?
பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. விமர்சனத்தளங்கள் என்பது இங்கே பெரும்பாலும்
நடுநிலைமையானது அல்ல. ஒரு வித விளம்பர உத்தி. பதிப்பகங்களின் செல்வாக்கினைப்
பொறுத்தது, சம்பந்தப்பட்ட விமர்சகரோடு எழுத்தாளனுக்கு உள்ள உறவின் முறையைப்
பொறுத்தது. ஒன்றிரண்டு உண்மையாகவும் எழுதப்படலாம். கடந்த காலத்திலிருந்த குறைந்த
பட்ச நேர்மைகூட இப்போதில்லை என நினைக்கிறேன்.
பதிவுகள்: துவக்க நிலை எழுத்தாளர்களுக்கு உங்கள் அனுபவத்திலிருந்து
சொல்லவிரும்புவது என்ன?
நாகி: - நானே துவக்க நிலை எழுத்தாளன் தான். எனக்கு மேலே பெரியவர்களெல்லாம்
நிறைய சொல்லியிருக்கிறார்கள். வேண்டுமானால் இதைச் சொல்லலாம். உங்களுக்காக
எழுதுங்கள், உண்மையை எழுதுங்கள், மாறுபட்டு எழுதுங்கள்.
பதிவுகள்:- சிறுகதை, நாவல், கவிதை இந்த மூன்றிலுமே தடம்பதித்துள்ள
தாங்கள் எதில் அதிகமாக முகம் காட்ட விரும்புகிறீர்கள்?.
நாகி: - உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தரமானக் கவிதைகள் எழுத எனக்குப்
போதாது. கவிதை உலகம் எனக்குப்
பிடிபடாததுபோல இருக்கிறது. கவிதை எழுதுவதென்பது உட்கார்ந்துகொண்டு காய்களை
நகர்த்தும் சதுரங்க விளையாட்டு, எனக்கு ஓடிப் பிடித்து விளையாடவேண்டும். அதற்கு
உரைநடை வெளியே எனக்கு உகந்ததென தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக
சிறுகதைகள்:அன்றாட வாழ்க்கையில், சட்டென்று நமது கவனத்தில் இடம்பெறும் ஏதோ ஒன்று
சிறுகதையாகக்கூடும். அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமைகள்
நிறைய.
பதிவுகள்:- அச்சு இதழ்களில் உங்கள் ஆக்கம்..... இணைய இதழ்களில் உங்கள்
ஆக்கம் வெளியாகும்போது எதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக கருதுகிறீர்கள்?
நாகி: - அச்சு இதழ்களில் வருகிறபோது கூடுதலாக மகிழ்ச்சிக் கிடைக்கிறது.
எனினும் அச்சு இதழ்களில் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்களைக்
காட்டிலும் இணைய இதழ்களில் குறிப்பாக திண்ணை, பதிவுகள் இதழ்களில் படித்துவிட்டு
தொடர்புகொண்டவர்கள் அதிகம். உண்மையைசொல்லபோனால் எனது வளர்ச்சியே இணைய இதழ்களினால்
ஏற்பட்ட வளர்ச்சி.
பதிவுகள்:- புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ப கதை,
பாட்டு எழுதி வெளியிடும் எண்ணம் உண்டா?
நாகி: - அப்படி ஏதும் எண்ணம், இதுவரை தோன்றவில்லை. உங்கள் கேள்வி அதற்கு
வித்திட்டிருக்கிறது. குழந்தைகளுக்குச் சொல்ல, நிறைய இருக்கிறது. வழக்கமான
உத்திகளிலிருந்து மாறுபட்டு கதை பாட்டு எழுதலாம்.
பதிவுகள்:- நீங்கள் எழுதிய படைப்புக்களில் மன நிறைவைத் தந்த ஆக்கமாகக்
கருதுவது எதை?
நாகி: - சிறுகதைகள். துரதிஷ்டவசமாக அவை சரியாக அறியப்படவில்லை. அன்புள்ள
அப்பா, அக்கினி காரியம், எமன் அக்காள் கழுதை, பிறகு, நாளை போவேன்..எனக்குப் பிடித்த
என்னுடைய சிறுகதைகளில் முக்கியமானவை.
பதிவுகள்:- எழுத்தாளர் என்ற நிலையில் உங்களின் இலட்சியங்கள் என்று.....?
நாகி: - எல்லா எழுத்தாளர்களுக்குமுள்ள இலட்சியங்கள் எனக்கும் இருக்கின்றன.
முதலாவதாக ஒரு நல்ல எழுத்தாளனென்று
பேர்வாங்கவேண்டும். இரண்டாவது கனவு, Simone de Beauvoir எழுதிய Le Deuxieme Sex
நூலையும், Margurite Yourcenarடைய Memoire
d'Adrien நூலையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். இதைத் தவிர பெரிதாகச் சொல்ல
ஒன்றுமில்லை
பதிவுகள்:- உங்களின் நாவல் வெற்றிக்கு மூவர் காரணம் என்று
சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக இணையத்தில் கதையைப் படித்து ஊக்கமூட்டும்வகையில்
பின்னூட்டு கொடுத்தவர்கள் குறித்து...?
நாகி: - அவர்கள் எனது நாவல் வாசகர்கள் மட்டுமல்ல எனது சிறுகதைகளையும்,
கவிதைகளையுங்கூட வாசித்து விட்டு பாராட்டுபவர்கள் எனவே நாவல் எழுதியபோது அவ்வப்போது
பாராட்டினாலும் புத்தகமாக வெளிவந்தபிறகுதான் முழுவதுமாக படித்துவிட்டுப்
பாராட்டினார்கள். அப்படித்தான் கவிஞர் சதாரமாலதியின் நட்புக் கிடைத்தது. பிறகு
மரியதாஸ் என்ற நண்பர் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியவர். இந்த நாவல் எனக்குப்
புகழ் சேர்க்கும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.
பதிவுகள்:- உங்கள் குடும்பத்தைப்பற்றி....?
நாகி: - மனைவி கிரிஜா, சராசரி இந்தியப் பெண்மணி. வணிகம் தொடர்பான எனது
பணிகளை அவள் பங்கீடு செய்துகொள்வதால்
எழுத்தில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு மகன் இரண்டு பெண்கள்.மகன் ஒரு
பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பாரீஸில் பணிபுரிறார். மூத்த மகள் தனது
கணவருடன் அமெரிக்காவில் இருக்கிறாள். இளையவள் மருத்துவம் முதலாண்டு படிக்கிறாள்.
பதிவுகள்: மறுபிறவியைப்பற்றிய நம்பிக்கையில் நீலக்கடல் நாவலை
அமைத்துள்ளீர்கள்! மறுபிறவி குறித்து நம்பினால் நீங்கள் அடுத்த பிறவியில் யாராகப்
பிறக்க விரும்புகிறீர்கள்?
நாகி: - மறுபிறவி நம்பிக்கைகள் உண்மையில் எனக்கில்லை. எனவே அடுத்த பிறவி
என்ற கேள்வி எழவில்லை. உண்மையைச்
சொல்லப்போனால் நீலக்கடலில் வரும் தலித்வேலு எனது குரலைத்தான் ஒலித்திருக்கிறார்.
எனது மனதின் பெரும் பகுதி பொதுவுடைமை வாதிகளோடு இணங்கிப்போகிறது. நாத்திகனா என்று
கேட்டாலும் இல்லையென்றுதான் பதில் வரும். நண்பர்களில் பலர் மத நம்பிக்கையோடு சில
நற்பணிகளை செய்து வருகிறார்கள். நல்லமனிதர்கள் எங்கே இருந்தால் என்ன? தேடிச்
செல்லத்தான் வேண்டும். எனவே அவர்களோடு இணைந்தும் செயலாற்றுகிறேன். பதிவுகள்:
எழுத்து துறை தவிர வேறு ஏதேனும் சமூகப்பணி, இசை போன்ற துறைகளில் ஈடுபாடுண்டா?
இசையில் நாட்டமுண்டு, சங்கீத ஞானமென்றில்லை. பாடவும் செய்திருக்கிறேன். பிறகு
எங்கள் கிராமத்தில் பள்ளியில், கல்லூரியில் நாடகங்கள் எழுதி நடித்த காலமொன்றுண்டு.
திருமணத்திற்குப் பிறகு நாடகத்தை எல்லாம் மறந்தாயிற்று. வந்த புதிதில் இங்கே
நடக்கும் விழாக்களில் நண்பர்களின் வற்புறுத்தலில் பாடியும் வந்தேன்.
பத்துவருடங்களாக நாசூக்காக மறுத்துவிடுகிறேன்.கூச்சமாக இருக்கிறது. வீட்டில்
கர்நாடகம், இந்துஸ்தானி, மேற்கத்திய இசை, மெல்லிசை, பழைய திரைப்படப் பாடல்கள் என்று
ஒரு பெரிய கலெக்ஷனே இருக்கிறது. சமூகப்பணியைப் பெரிதாக சொல்லமுடியாது. மனம்
விசாலமாக இருந்தால், நமக்கென்று நான்குபேர் இருப்பார்கள்
இல்லையா அதற்காகச் சிலதைச் செய்கிறேன். பிரிந்திருந்த தமிழ் சங்கங்கள் இணைந்து
என்னைப் பாராட்டியதும் அப்படி நடந்ததுதான். சொந்த கிராமத்திற்கு என்னால்
முடிந்ததைச் செய்கிறேன். அதை விளக்கமாகச் சொல்வது நாகரீகமாகாது.
பதிவுகள்: தங்களின் பலவேலைகளுக்கிடையே நேரம் ஒதுக்கி பதிவுகளுக்காக
தங்கள் பதில்களை பொறுமையாக பதிவு செய்து அனுப்பியமைக்கு என் சார்பிலும் பதிவுகள்
சார்பிலும் மிக்க நன்றி. வணக்கம்.
நாகி: - நன்றி. வணக்கம்.
albertgi@gmail.com |