இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம!

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல் (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)

- கே.பாலமுருகன் (மலேசியா) -


ஜெயந்தி சங்கர்கே. பாலமுருகன்:இலக்கிய சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல் கட்டமாக சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன் எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது அல்லது எங்களின் உரையாடல் முடிவடைந்த புள்ளி தீர்வாகவோ பரிந்துரையாகவோ அடையாளப்படுத்த இயலாமல் தொடர்ந்து அடையாள அரசியலின் அடுத்தகட்ட உரையாடலாக முன்னகர்த்திக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.

படைப்பாளியை நேரடியாக அவனைச் சார்ந்த புற அடையாளடங்களை வரையறுப்பது மூலம் அது படைப்பாளர்களின் மீதான அதிகார கட்டமைப்பாக அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய மதிப்பீடுகளாக பிரயோகிக்கப்படுவதை பலவீனமான இலக்கிய பார்வை என்றே சொல்லலாம்.

கே. பாலமுருகன்: தாங்கள் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிகிறேன். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை எத்துணை விமர்சனங்கள் அல்லது கட்டுரை எழுதியுள்ளீர்கள்? சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அக்கறை காட்டுவதில்லை மேலும் அதன் வரலாறையும் வளர்ச்சியும் பற்றிய அவாதானிப்புகளும் இல்லாமல் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஜெயந்தி சங்கர்: நான் சிங்கப்பூர் வந்து வசிக்க ஆரம்பித்து இது இருபதாவது ஆண்டு. உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கப்பூர் இலக்கியம் குறித்த அக்கறைகளும் அவதானிப்புகளும் எனக்கு நிறையவே உண்டு. என்னைப் போன்ற பலருக்கும் கூடத் தான். எழுதியவர்கள் எல்லோருக்கும் சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அக்கறையுண்டு என்பது அர்த்தமில்லை. எழுதாதவருக்கு அந்த அக்கறையில்லை என்றும் அர்த்தமுமில்லை.

சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை நான் எழுதியதில்லை. என் மனம் புனைவையே எப்போதும் எழுதவும் வாசிக்கவும் விரும்புகிறது. அதற்கடுத்து நான் எழுத நினைப்பது சமூக கட்டுரைகள் அல்லது மொழியாக்கம். தொடர்ந்த வாசிப்பும் நடக்கவேண்டும். இதெல்லாமே என் நேரத்தை முழுமையாக உறிஞ்சி விடுகின்றன. இந்தக் கணத்தில் யோசிக்கும் போது இலக்கிய வரலாற்றைக் குறித்து எழுதுவதைவிட இலக்கிய வரலாறு படைப்பதில் தான் எனக்கு இன்னும் அதிக விருப்பம் இருக்கிறதென்றே தோன்றுகிறது.

இலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டுமானால், எப்படியும் என்னைப் போன்ற படைப்பாளிகளும் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்க வேண்டுமில்லையா? படைப்பதும் சீரிய பங்களிப்பு தானே. எழுதுவோமே என்ற எண்ணமும் என்னுள் அடிக்கடி ஏற்படுகிறது என்பதையும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும். எதிர்காலத்தில் எப்போதாவது அது நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

கே. பாலமுருகன்:கே. பாலமுருகன்: சிங்கப்பூர் இலக்கிய மாற்றங்கள் குறித்தும் இதற்கு முன் சிங்கப்பூர் இலக்கியம் எப்படி இருந்தது, அதை ஒரு படைப்பாளியாக நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என உங்கள் கருத்துகளைப் பதிவு செய்வது (விமர்சனப் பார்வையாகவோ அல்லது கட்டுரையாகவோ) மிக முக்கியம் எனக் கருதுகிறேன். இது எந்த நிர்பந்தமும் நிபந்தனையும் இல்லாத ஒரு படைப்பாளியிடம் இருக்க வேண்டிய அக்கறையை நோக்கிய எதிர்ப்பார்ப்பு. இதை தூக்கி எறிந்துவிட்டு, அல்லது நிராகரித்துவிட்டு, நான் வெறும் படைப்பு மட்டுமே செய்வேன், என் படைப்புகளை படித்துக் கொண்டு இரு, அதுதான் என் பங்களிப்பு என ஒதுங்கிக் கொள்வதை ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என சொல்லிக் கொள்ளலாமா? இவ்வளவுதான் ஒரு படைப்பாளியின் பங்களிப்பா? உங்களை நோக்கிய கேள்வியாக எடுத்துக் கொள்ளாமல் பொதுவாகவும் பதிலளிக்கலாம்.

ஜெயந்தி சங்கர்: ஆமாம். கண்டிப்பாக, எதெதைச் செய்வதென்று தேர்ந்தெடுப்பது ஒரு படைப்பாளியின் சுதந்திரம் தான்.

கே. பாலமுருகன்: அப்படியென்றால் ஒரு வாசகனாக அக்கறை சார்ந்துகூட ஒருவன் உங்களைப் பார்த்து ஏன் இதைச் செய்யவில்லை எனக் கேட்கக் கூடாதா? அப்படியென்றால் அது ஒரு படைப்பாளி என்கிற தங்களின் அடையாளத்தின் மூலம் நிறுவப்படும் அதிகாரமா?

ஜெயந்தி சங்கர்: எனக்குச் சிரிப்பு தான் வருகிறது. அதிகாரமும் இல்லை ஒன்றுமில்லை. என்னைப் போன்ற ஒருவருக்கு ஏது நீங்கள் சொல்லும் அதிகாரம் போன்ற சமாச்சாரங்கள்? எழுதப்பிடிக்கிறது, எழுதுகிறேன். மற்றபடி, இலக்கிய அரசியலிலெல்லாம் எனக்கு என்றைக்குமே நாட்டமிருந்ததில்லை.

கே. பாலமுருகன்: சரி, இப்படிக் கேட்கிறேனே, இப்பொழுது முன்னிலையில் மிக தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாக உங்களை ஒருவர் அடையாளப்படுத்தும் போது ( உங்கள் வாசகராகவே இருக்கட்டும் - நீங்கள் புத்தகத்தை பிரசுரிப்பதால் அதை அவன் வாங்கிப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு அந்த உரிமையில் உங்களிடன் வைக்கப்படும் கோரிக்கையாக) அதே அக்கறை சார்ந்து ஏன் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் இலக்கியங்களை விமர்சனம் செய்யக் கூடாதா எனக் கேட்பது உங்களின் சுதந்திரத்தைச் சிதைத்துவிடுமா?

ஜெயந்தி சங்கர்: இல்லை. கண்டிப்பாக இல்லை. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் வாசகர் அவ்வாறு என்னிடம் தாராளமாகச் சொல்லலட்டுமே. அதைத் தவறென்று நான் சொல்வேனா? ஆனால், ஏற்பதும் எப்போது செயல்படுத்துவது போன்றவற்றைத் தீர்மானிக்கும் உரிமை என்னுடையதென்று மட்டும் தான் சொல்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அக்கறைகள் என்னிலும் உண்டு. அதே காரணத்துக்கு தான் உங்களின் இந்த உரையாடலுக்கு நான் இசைந்து இப்போது பதிலளிக்கிறேன்.

எப்போது எதைச் செய்வது என்று முடிவெடுக்க படைப்பாளிக்குத் தெரியும். சொல்லப் போனால், தெரிந்திருக்க வேண்டும். இப்போது இதை எழுது அப்போது அதை எழுதாதே என்று ஒரு படைப்பாளியைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்று தான் சொன்னேன்.

சிங்கப்பூர் வரலாறும் வளர்ச்சியும் ஏற்கனவே சிலரால் எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும், போதிய ஆழமில்லாதிருக்கிறதென்றும் அப்படியே சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும் சுய வெறுப்பு விருப்புகளையும் மனதில் வைத்து எழுதப்பட்டதென்றும் பல்வேறு விதமாக பெரும்பான்மையோரால் இங்கே பரவலாக கருதப்படுகிறது.

துரதிருஷ்டவசமாக, படைப்புகளைச் சரியான முறையில் சீர்தூக்கிப் பார்க்கக் கூடியவர்களுக்கு ஆய்வு/விமரிசனப் பார்வையில் விருப்பமிருப்பதில்லை. பார்வையும் விருப்பமும் இருப்பவருக்கோ மற்ற விஷயங்களையெல்லாம் புறந்தள்ளும் மனமிருப்பதில்லை. இனிமேலும் கூட சிலர் சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறையும் வளர்ச்சியையும் மேலும் சிறப்பாக ஆய்ந்து எழுதலாம். எழுதுவார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

மூத்த படைப்பாளி ஒருவரும் இளம்படைப்பாளி ஒருவரும் சேர்ந்து கூட்டு முயற்சியாக இதைச் செய்தால் மேலும் காத்திரம் கிடைக்கும் என்பது என் தனிப்பட்டதொரு கருத்து. குடுகுடுவென்று எதையும் செய்தால் அது பிஞ்சில் பழுத்ததுபோல தான் உருப்பெறும். அதுபோன்ற ஆய்வுகள் மிகப்பெரிய அளவில் வருடங்கள் எடுக்கக் கூடியவை. சரியான சந்தர்ப்பமும் மனநிலையும் வாய்க்கும் போது அதிக கால அவகாசம் எடுத்துச் செய்ய ஆசை. அல்லது, வேறு யாரும் செய்தாலும் ஆலோசனைகளோ உதவிகளோ செய்யவும் நான் தயார்.

கே. பாலமுருகன்: யாரெல்லாம் எழுதியிருக்கிரார்கள்? எவை/ஏன் அவர்களின் வரலாற்றுப் பதிவில் நீங்கள் குறிப்பிடும் போதாமைகள்? இதைக் கண்டறிந்த பிறகு இதை நிவர்த்திக்க ஏதேனும் மாற்று முயற்சிகளில் ஈடுப்பட்டீர்களா? அப்படி இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்ய முயற்சிக்கவில்லை?

ஜெயந்தி சங்கர்: அவ்வாறு காதில் வந்து விழும் கருத்துக்களுக்கு எதிர்கருத்தோ ஒத்த கருத்தோ சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. மேம்போக்கான எதிர்வினைகளில் பயனென்ன? நானே என் கருத்தைச் சொல்லும் முன்னர் நுட்பமாக ஆராய்ந்த பிறகே அதற்கான தருணம் வரும் போது என் கருத்தைப் பதிவேன்.

கே. பாலமுருகன்: குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள். அதற்கான தருணம் கூடிய விரைவிலேயே வந்துவிடும். மலேசிய மௌனம் இதழில் முனைவர் ஸ்ரிலட்சுமி எழுதிய குடியேறிகளின் இலக்கியம் குறித்த விமர்சனக் கட்டுரையை தாங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். பரிந்துரைக்கிறேன்.

ஜெயந்தி சங்கர்: சரி, கண்டிப்பாக வாசிக்கிறேன். இருப்பினும், எதையும் வாசித்ததுமே எதிர்வினையாற்றுவதில்லை என்று ஒரு கொள்கை எனக்குண்டு. உடனே அதற்கு ஒரு எதிர்கேள்வி போட வேண்டாம் என்பதற்காகவே இதைச் சொன்னேன். அதற்குக் காரணங்கள் இரண்டு. கோபத்திலோ எரிச்சலிலோ இருக்கும் போது எதிர்வினையாற்றுவது கூடாதென்பதால். இரண்டாவது, நான் எதிர்வினையாற்றப் போகும் விஷயத்துக்க எதிர் கருத்தை துல்லிய சான்றுகளுடனும் பிழையற்ற ஆதாரத்துடனும் அணுக வேண்டும் என்று நினைப்பது தான். அவ்ளோ தான்.

பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் எந்தவொரு படைப்பாளியும் மிக இயல்பாக வந்து நிற்க வேண்டிய இடம் தான் நீங்கள் சொல்லும் அதுபோன்ற ஆய்வுகள். படைப்பூக்கம் அமையப்பெறும் காலங்களில் மொழியாக்கம் செய்வது வாசிப்பது போன்றவற்றைக் கூட தவிர்த்து விட்டு புனைவுகள் எழுதுவதில் தான் நான் கவனம் செலுத்துவேன். பொதுவாக, அதுதான் சரியும் கூட என்று நினைக்கிறேன்.

கே. பாலமுருகன்: தங்களின் எழுத்து சார்ந்து, சிங்கப்பூர் வாழ்வியலையும் அதன் பின்புலத்தையும் எப்படியெல்லாம் படைப்பாக்கியிருக்கிறீர்கள்? இது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவா?

ஜெயந்தி சங்கர்: சிங்கப்பூரையும் அதன் பின்புலத்தையும் நான் உள்வாங்குவதற்கு ஒரு வகையில் காரணமான எனது இளமைப் பருவத்தைக் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. சிறுவயது முதலே ஒரிஸா, தமிழ்நாடு, கர்நாடகா, மேகாலயா போன்ற பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்தவளான நான் அதிகமாக ஒரே ஊரில் வசித்ததென்பது சிங்கப்பூரில் தான்.

1990ல் இங்கு வந்ததுமே ஊரை உள்வாங்க எனக்கொரு சிரமமும் இருந்ததில்லை. நான் பார்த்த பல்வேறு இடங்களிலிருந்து வேறு பட்டிருந்த போதிலும் நூலகம் தவிர்த்து வேறெதிலும் எனக்குப் பெரிய பிரமிப்புகள் இருந்ததில்லை. இங்கு எனக்கு மிக இயல்பான ஆரம்பமும் வாழ்வும் அமைந்துவிட்டது. 2-4 ஆண்டுகளுக்கொரு முறை பல இடப்பெயர்வுகள் கண்டிருந்த என் சிறுவயதில் புது ஊர்களுக்குப் போனதும் அங்கே சூழலைக் கூர்ந்து கவனித்து உள்வாங்குவதென்பது ஒருவித பயிற்சியாகவே என்னில் படிந்து போயிருக்கிறது. அதனாலேயே என்னுடைய பார்வை அதிகமும் சமூகம் சார்ந்ததாக அமைந்துள்ளதையும் என்னால் அவதானிக்கமுடிகிறது. நானொரு பெண் என்ற காரணத்தால், சில வேளைகளில் என் படைப்புகளில் பெண் அல்லது பெண்ணியக் குரலும் ஒலிப்பதுண்டு என்பதையும் நான் மறுப்பதற்கில்லை.

எல்லாப் படைப்பாளிகளையும் போல கேட்டதும் கண்டதும் உணர்ந்ததுமான மனதை நெருட வைக்கும் நிகழ்வுகள் மற்றும் விஷயங்களைத் தான் 'திரைகடலோடி', 'ஈரம்', 'பின் சீட்', 'தம்மக்கள்', 'நாலேகால் டாலர்', போன்ற எனது பல சிறுகதைகளிலும் 'மனப்பிரிகை', 'நெய்தல்' போன்ற நாவல்களிலும் எழுதியிருக்கிறேன். உள்ளூர் ஆங்கில நாளிதழில் வாசித்த செய்தியின் தாக்கம் 'சேவை', 'நான் யார்?', 'திரவியம்', 'பொம்மை', 'மழலைச் சொல் கேளாதவர்' போன்ற எனது வேறு சில சிறுகதைகளுக்கான உந்து சக்தியாகியிருக்கின்றன. இவற்றுடன், விடுமுறைக்கு இந்தியாவுக்குப் போகும் போது ஏற்படும் என் அனுபவங்கள் தான் 'எழுபது ரூபாய்', 'கடவுச்சீட்டு' போன்ற சில சிறுகதைகளாகின.

பெரும்பாலும் நேர்மறையான விமரிசனங்களையே எதிர்கொண்டிருக்கிறேன். விமரிசனங்கள் பல எழுதப்பட்டிருக்கின்றன. உள்ளூரில் பெரும்பாலும் முறையான விமரிசனமாக அல்லாமல் வாய்வார்த்தையாகவும் சாதாரண மின்னஞ்சலிலும் கிடைத்தவை தான். நிறைய பேர் புனைவுகளில் சிங்கப்பூரை இதுவரை யாரும் இத்தனை சிறப்பாகச் சொன்னதில்லை என்றெல்லாம் கூட வியந்து சொன்னதுண்டு. ஆனாலும், ஒரு சிலர் விதிவிலக்குகளை எழுதுவதாகவும் சிங்கப்பூரைப் பற்றி தவறாக எழுதுவதாகவும் விமரிசிப்பதுண்டு. ஆனால், பரவலான தொடர்ந்த வாசிப்பிருப்போர் பெரும்பாலும் என்னைச் சரியாகவே வாசிக்கிறார்கள்.

கே. பாலமுருகன்: சமூகக் கட்டுரைகள் என வரும்போது சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் சமூகமும் ஒரு சமூகம் தானே? சிங்கப்பூரில் இருக்கக்கூடிய அசல் சிங்கப்பூர் தமிழர்களின் சமூகம் தனது சுய கலாச்சாரத் தளத்தில், இலக்கியத் தளத்தில் எப்படி இயங்கிக் கொண்டிருப்பதாக அவதானிக்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: இந்த இரண்டு தளத்திலும் பல வருடங்காளாக நான் தொடர்ந்து அவதானித்து வந்தவை ஏராளம். இருப்பினும், சுருக்கமாக சிலவற்றை மட்டும் சொல்லலாம்.

முன்பெல்லாம் குடி, சூது, குற்றச்செயல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சிறைவாசம், மணவிலக்கு போன்ற காரணங்களுக்காக உடைந்த குடும்பங்களும் சிதறிய குடும்பங்களும் சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் அதிகமிருந்தன. இதனால், பதின்பருவத்து தமிழ் மாணவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதும் முன்பு அதிகம் இருந்து வந்தது.

கடந்த பல வருடங்களாக விழிப்புணர்வும் பொருளுதவியும் உளவியல் ஆலோசனை/சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு வழிகளிலும் சிண்டா (SINDA) மிகச்சீரிய முறையில் இந்தியச் சமூகத்துக்கு உதவி வருகிறது. இந்தியக் குடும்பங்கள் உடையாமலும் சிதையாமலும் பேணப்பட்டால் இந்தியச்சமூகம் மேம்படும் என்ற நுண்ணிய சூத்திரத்தின் அடிப்படையில் மிகமிகச் சிறப்பாக இயங்கி சமூகத்தில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தது சிண்டா. அதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் ஒரு சதாப்தத்திற்கு முன்னால் இருந்ததைவிட வாழ்வில் மேம்பட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமானதொரு பார்வையில் தான் நான் இதைச் சொல்கிறேன்.

சிண்டா குறித்த ஒரு கட்டுரை நான் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியதுண்டு. 'வாசிப்புக் கலாசாரம்' என்று நூலகம் மற்றும் நூலகச் செயல்பாடுகள் குறித்தும் ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன். 'சிங்கப்பூரில் தமிழ்' என்று வேறொரு கட்டுரையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இக்கட்டுரைகள் தமிழக அச்சு ஊடகங்களிலும் பின்னர் இணையத்திலும் வெளியாகியுள்ளன.

இலக்கியத்தளத்தில் சொல்ல வேண்டுமானால், கடந்த பத்திருபதாண்டுகளாக படைப்புகளின் படைப்பாளிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. அடுத்தடுத்த தளத்துக்கு படைப்புகளை மேம்படுத்தித் தம்மை வளர்த்தெடுக்க ஆர்வம் காட்டும் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவென்றபோதிலும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவர்களிலும் போதிய தொடர் வாசிப்பில்லாத படைப்பாளிகளே இவர்களில் அதிகம் என்பது அக்கறைக்குரியது. தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அதுவும் முக்கிய தடை என்று கருதுகிறேன். இலக்கியம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் உயர்பதவிகளில் இருப்போரில் பெரும்பான்மையோர் சமகால இலக்கியப் போக்குகளை அறியாதிருப்பது இன்னொரு முக்கிய அக்கறைக்குரிய விஷயம்.

வாசிப்புக்கான நூலக வாரியத்தின் வாசிப்பு இயக்கங்கள் நியாயமாகக் கொண்டு வந்திருக்க வேண்டிய மாற்றங்களை தமிழ்ச்சமூகத்தில் கொண்டு வரவில்லையோ என்ற அக்கறை எப்போதுமே என்னில் இருந்து வருகிறது. ஏனெனில், இளையரில்/மாணவர்களில் புதிய வாசகர்கள் அதிகபேர் உருவாகவில்லை. அது மட்டும் நடந்தால், இயல்பாகவே சரியான இலக்கிய எதிர்காலம் உருவாகிவிடும்.

எழுதுவோரிடையே, பணப்பரிசு அறிவிக்கப்பட்டால் மட்டுமே பேனாவை எடுக்கும் போக்குகளும், ஒரு கட்டத்துடன் திருப்தியேற்பட்டு விட்டதாலோ இல்லை வேறு காரணங்களாலோ படைப்பில் மேம்பாடு குறித்த முனைப்புகளின்றி உறைந்துவிடுதலும் காணாமல் போனால் இன்னும் கூட நல்லது நடக்கும்.

அடையாள, இலக்கிய மற்றும் குழு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டில் வெறும் கால்பங்கு நல்ல பல படைப்புகளை உருவாவதிலும் அவற்றை மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் இருந்தாலே போதுமானது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும். இதற்கெல்லாம் இப்போதைக்கு ஆசை மட்டும் தான் படலாம். மாற்றங்கள் ஏற்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கே. பாலமுருகன்: சிங்கப்பூர் நவீன இலக்கியங்கள் வாசித்ததுண்டா? அதில் ஏதாவது பிராந்திய பதிவுகள் குறித்த படைப்புகள் உள்ளனவா?

ஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக இருக்கின்றன. சிங்கப்பூர் நவீன இலக்கியங்களை கூடிய வரை தேடி வாசிக்கிறேன். படைப்புகள் சிலவற்றில் சிங்கப்பூரின் வாழ்வியல் கூறுகள் காணக் கிடைப்பதுண்டு. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்திரஜித்தின் 'உள்வரம்பு', லதாவின் 'பயணம்', எம்.கே.குமாரின் 'மஹால் சுந்தர்', சிவஸ்ரீயின் 'பொழப்பு', சித்ரா ரமேஷின் 'பறவைப் பூங்கா', சு.ரமேஷின் 'கண்டடைதல்', ஜெயந்தி சங்கரின் 'தேநீரம்' போன்ற பல சிறுகதைகளும் சிங்கப்பூர் வாழ்வையும் களத்தையும் கொண்டதாக இருக்கின்றன. அடையாள அரசியலிலிருந்து விலகி நின்று வாசித்தால் கிடைக்கக் கூடியவை இவை. மேலும் சில சிறுகதைகள் கண்டிப்பாக இருக்கும். வடிவ மற்றும் உத்தி சார்ந்த பிரக்ஞைகள் சிலவற்றில் இல்லாதிருக்கலாம். ஆனால், நீங்கள் சொல்லும் பிராந்தியக் கூறுகள் அந்த சிலவற்றில் கண்டிப்பாக இருக்கும்.

கே. பாலமுருகன்: மேற்குறிப்பிட்ட பதிலில் நீங்கள் கொடுத்ததை, இப்பொழுது நடைமுறையில் இருக்கும் அடையாள அரசியலின் மதிப்பீடுகளோடு அணுகினால், ஜெயந்தி சங்கர் முன்மொழியும் அத்தனை பேரும் குடிப்பெயர்ந்து இங்கு எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள். அவருடைய வாசிப்பு மிக குறுகலாக தமிழக பின்புலமுடைய படைப்பாளிகளையே பின்னனியாகக் கொண்டு வருகிறது. சிங்கப்பூர் படைப்பாளிகளை அவர் அடையாளம் காணவில்லையா அல்லது நிராகரித்துவிட்டாரா? அல்லது சிங்கப்பூர் அசல் இலக்கியவாதிகள் நவீன இலக்கியமே படைப்பதில்லையா? இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழக்கூடும் என நினைக்கிறேன். இதை எப்படி எதிர்க் கொள்வீர்கள்?

ஜெயந்தி சங்கர்: எந்தவொரு நோக்கத்துடனோ பின்புலச் சிந்தனையுடனோ நான் பட்டியலிடவேயில்லை. சட்டென்று சமீபத்தில் வாசித்த, நினைவிலிருக்கும் ஆக்கங்களைத் தான் சொன்னேன். நான் பட்டியலிட்டது நீங்கள் கேட்டதற்கிணங்க சிங்கப்பூரின் வாழ்வியல் கூறுகள் காணக் கிடைக்கும் ஒரு சில ஆக்கங்களை. ஆனால், நீங்கள் பார்ப்பது படைப்பாளிகளையும் அவர்களின் மீது திணிக்கப்படும் அடையாளத்தையும்.

கே. பாலமுருகன்: என்னை நோக்கிய நேரடியான விமரிசனமாக இருக்கிறதே இது,.. எனக்கு எந்த விதத்திலும் அடையாள அரசியலின் மீது உடன்பாடு கிடையாது. எப்பொழுதும் அது குறித்த எதிர்வினைத தான் என்னிடம் உண்டு. முக்கியமாக இந்த உரையாடலை உங்களுடன் நான் நடத்தும் நோக்கமே சிங்கப்பூரில் நிலவி வரும் குடியேறிகளின் இலக்கியம் என்கிற மனப்பாவத்தை உடைக்க வேண்டும் என்பதே.

ஜெயந்தி சங்கர்: (சிரித்துக் கொண்டே) இல்லையில்லை. இங்கே நீங்கள் என்று குறிப்பதே அது போலப் பார்க்கப் போகிறவர்களுக்கும் தானேயொழிய குறிப்பாக உங்களை மட்டும் அல்ல,..

சிங்கப்பூரின் வாழ்வியல் கூறுகள் காணக் கிடைக்கக்கூடிய படைப்புகள் (நான் வாசித்ததிலேயே) இன்னும் இருக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே வலியுறுத்துகிறேன்.

பாதிக்கு பாதி பெண் படைப்பாளிகள் என்று கூடத்தான் இதை வாசித்துவிட்டு வேறு யாராவது சொல்வார்கள். இதையே வேறொருவர் வேறொரு வகையில் அவரது இஷ்டம் போல வாசித்துச் சொல்வார்.

சமீபத்தில் வந்தவர்கள் எழுதியிருக்கும் சிறுகதைகளில் சிங்கப்பூர் வாழ்க்கை இருக்கிறதென்ற போதிலும் அது வந்தேறி/குடிபெயர் இலக்கியமாகிவிடுவது துரதிருஷ்டம் தான். வேறென்ன சொல்வது?
எங்களுக்கு படைப்பு முக்கியமில்லை, படைப்பாளியின் மீது பூசப்பட்டிருக்கும் அடையாளம் தான் முக்கியமென்று அடம்பிடித்தால் என்ன தான் செய்ய முடியும்? சாதிய மனோபாவத்துக்கு நிகராக நான் இதைப் பார்க்கிறேன். எல்லோருமே அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித் தான் இருக்கிறார்கள்.

சுருங்கி வரும் இன்றைய உலகில் இவ்வாறான அடையாளங்களுக்குப் பொருளே இல்லை என்பது தான் நான் சொல்வது. இதைப் புரிந்து கொள்ளாதவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. இன்னும் பத்திருபதாண்டுகளில் இதே ஆட்கள் ஒத்துக் கொள்வார்களாக இருக்கும். சீனர்களைப் போலவே தமிழர்கள் எல்லோருமே இந்தத் தீவுக்கு வந்தேறியவர்கள் தான் என்பதை ஏனோ மறந்து போகிறார்கள்.

படைப்பைக் கொண்டு தான் வகைப்படுத்துதல் வேண்டும்; படைப்பாளியை வைத்தல்ல என்பதே என் கருத்து. படைப்பாளியின் அடிப்படையில் என்பது வகைப்படுத்துதல் மிகச் சிறியதொரு இலக்கியப் பரப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் இலக்கியத்துக்கு சாதகமாக இருக்காதென்பதே என் அக்கறை. அடையாள அரசியல் ஆகிய அனைத்தையும் கடந்து தான் என்னைப் போன்ற பலரும் இயங்கி வருகிறோம். இனியும் இயங்குவோம். எங்கள் படைப்புகள் சிங்கப்பூர் தமிழிலக்கியத்துக்கான பங்களிப்பாகவே தொடர்ந்து அமையும்.

கே. பாலமுருகன்: என்னுடைய எதிர்வினையும் இங்கிருக்கும் ஒரு புள்ளியின் திருப்தியின்மையால் தான் வெளிப்படுகிறது.

ஜெயந்தி சங்கர்: சரி. சந்தோஷம். நல்லதொரு துவக்கம் தான் இது. அதுவும் உள்ளிருந்தல்லாமல் வெளியிலிருந்து உங்களைப் போன்ற ஒருவரிடமிருந்து வரும் சொற்கள் என்ற வகையில்,..

கே. பாலமுருகன்: விஷயத்துக்கு வருவோம்,.. நீங்கள் சொல்வது போல அவ்வாறு கடந்து வந்துவிடுவதில் ஒரு சுயநலம் தென்படுகிறது.

ஜெயந்தி சங்கர்: இல்லை. நிச்சயமாக இல்லை. அவ்வாறான ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு பிலாக்கணம் வைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றும் சரியாகப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் குறைவாக இருக்கும் சூழலில் சண்டைகளால் ஒரு பயனுமில்லை என்றும் தான் பொருள். குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள்.

கே. பாலமுருகன்: நான் சொல்ல வந்தது,.. அடையாள அரசியல் என்கிற கிருமி நாளை உங்களைப் போல வரும் அடுத்த படைப்பாளியைப் பாதிக்குமே. . அதைப் பற்றி என்ன கவலை என்ற எண்ணமா? அடையாள அரசியலை முன்னெடுப்பவர்களுடன் விவாதிக்கவும் அந்த அடையாள அரசியலை தகர்க்கவும், அதை அந்தக் காலத்திலேயே சந்திக்கும் ஒரு படைப்பாளி வெறுமனே அதைக் கடந்து போய்விடலாமா?

ஜெயந்தி சங்கர்: இதுகுறித்து வெளிப்படையாக இதுவரை எங்கேயும் யாரும் சர்ச்சையாக எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற இன்னும் சிலர் உட்பட. வெளிப்படையாக இப்போது தான் எழுந்திருக்கிறது. இதுவரை, முதுகுக்குப் பின்புறத்தில் பேசிக் கொண்டும் பூடகமாகவே செயல்களிலும் முடிவுகளிலும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே என் முன்னால் 'அப்படியொன்றும் இல்லாத' பாவனை காட்டுவோர் மத்தியில் நானும் 'ஒன்றும் இல்லாத பாவனை'யுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்னொன்றும் சொல்லவேண்டியிருக்கிறது. கவனங்களும் அங்கீகாரங்களும் ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் மீது கவியும் தருணங்களில் முன்பைவிட அதிக தீவிரம் கொள்கிறது நீங்கள் சொல்லும் இவ்வரசியல்; சிந்தையில், செயல்களில், அணுகுமுறைகளில், அவதானிப்பில். வெற்றியை மட்டுமே பார்க்கும் இவ்வரசியல்வாதிகள் அந்த வெற்றியின் மீதும் அதே அடையாளத்தைத் தம் சௌகரியத்துக்கு திருப்பிப்போட்டுப் பார்க்கவும் பேசவும் தயங்குவதில்லை. இலக்கிய அரசியல் தான் தம் தேர்வென்றான பின்னர் அது அவர்களுக்கு மிகச் சுலபமாகவும் இயல்பாகவும் வந்துவிடுகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், படைப்பாளியின் வழியாக படைப்பை அடைவதும் படைப்பின் வழியாக படைப்பாளியை அடைவதும் வேறுபட்டது. என் அனுமானத்தில், சிங்கப்பூரின் இலக்கிய உலகின் இன்றைய நிலையில் பின்னது தான் ஏற்றது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்துக்கு ரொம்ப ஆரோக்கியமானதும் கூட.

ஒரு படைப்பை அரசியலின்றி அணுக முடியும் என்ற அடிப்படை விஷயம் அறிந்தோர் இங்கு மிகக் குறைவு. அதேபோல விமரிசனத்தைச் சரியாகப் பார்ப்போரும் தான். இவ்விரண்டு புறமும் அணுகுமுறைகளில் நல்ல மாற்றங்கள் அடைந்தால் நீங்கள் சொல்லும் விமரிசனக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள் மிகவும் மேம்பட்டதாக அமையும். அதே போல, எழுதப்பட்ட அவ்வாறானவற்றை எந்த ஒரு அரசியல் கண்ணாடியும் போடாமல் பார்க்கவும் கற்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான குறைபாடுகள் எங்குமுள்ளது தான் என்றாலும் இவ்விஷயங்களில் சிங்கப்பூர் தமிழிலக்கியம் போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்று பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்வர். ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதுவே நிதர்சனம். சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அவ்வாறான திசையிலொரு நல்ல துவக்கத்தையும் வளர்ச்சியையும் உங்களைப் போலவே நானும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

கே. பாலமுருகன்: சரி. உள்நாட்டு எழுத்தாளர்கள் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் எழுத்தாளர்களின் எழுத்துகளை படைப்புகளை எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? ஒருவகை அன்னிய பார்வை விழுவதாக ஏதேனும் அடையாளங்கள்?

ஜெயந்தி சங்கர்: சமீபத்தில் உள்ளூரில் இருவரிடம் இருவேறு இடங்களில் ஒரே பொருள் தரும் கேள்வியைச் சந்தித்தேன். “உங்களத் தமிழக எழுத்தாளராப் பாக்கறாங்களா, இல்ல சிங்கப்பூர் எழுத்தாளராப் பாக்கறாங்களா?”, என்று என்னிடம் ஒருவர் கேட்டார். இத்தனைக்கும் கேட்டவர் படைப்புலகைக் குறித்த பரிச்சயமில்லாதவரும் அல்ல. "நான் அந்த அடையாளங்களை நிராகரிக்கிறேன். பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும். எனக்கு அவ்வாறான அடைமொழிகளில் துளிக்கூட நம்பிக்கையில்லை", என்று நான் பதிலாகச் சொன்னதைப் புரிந்து கொண்டாரா என்பதே தெரியவில்லை. இந்தக் கேள்வியைக் கேட்டுக் கேட்டு எனக்கு மிகுந்த சலிப்பேற்பட்டுவிட்டது. முன்பெல்லாம் பார்வையால் கேட்ட கேள்வியை இப்போதெல்லாம் வாய்திறந்தே என்னிடம் கேட்கிறார்கள். அதொன்று தான் வித்தியாசம்.

இன்னொருவர் இன்னொரு நாளில் அதே கேள்வியைக் கேட்டுவிட்டு தொடர்ந்து, "உங்க இலக்கிய பங்களிப்புக்கும் திறமைக்கும் நீங்க இருக்க வேண்டிய உயரமே வேறன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க, உங்களுக்குத் தெரியுமா?", என்றும் சொன்னார். பிறகு என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டு, “கண்டுக்க வேண்டிய யாரையும் போயி கண்டுக்காத நீங்க பாட்டுக்கு உங்க போக்குல எழுதிட்டிருக்கீங்கல்ல அதனால தான்னு பக்கத்தில இருந்தவரு சொன்னாரு”, என்று சொல்லி முடித்தார். இது போன்ற பேச்சுக்களை எதிர்கொள்வதென்பது இப்போதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது.

அடையாள அரசியலுக்கு இன்னொரு சிறு சான்று. சிங்கப்பூர் தமிழிலக்கிய உலகின் ஒரு முதியவர் என்னைக் காணுந்தோறும் கூடுதல் பணிவுடன் வணக்கம் சொல்லிவிட்டு தவறாமல், "நீங்க இங்க வந்து எத்தன காலமாச்சு?", என்று கேட்பார். ஒரே மாதத்தில் மீண்டும் சந்தித்தாலும் அதே கேள்வி. இப்போதெல்லாம் தூரத்திலிருந்து அவரைப் பார்த்ததுமே பதில் சொல்லவென்று என் மனதில் ஆண்டுகளைக் கணக்கிட்டு விடுகிறேன்.

அன்னியப்பார்வை குறித்துக் கேட்டீர்களில்லையா,..... மனதில் இருக்கும் அவர்களின் அந்தப்பார்வை தானே இம்மாதிரியான அணுகுமுறைகளைத் தோற்றுவிக்கின்றன? "வேற ஏதாச்சும் நெனச்சுக்கிடாத. உன்னைய நாங்க இன்னமும் உள்ளூர் படைப்பாளியா அங்கீகரிக்கல்ல. ஏத்துக்கவுமில்ல, புரிஞ்சிச்சா?", என்பது போன்ற ஒரு நினைவூட்டல் தான் அது. அல்லது, அவர்கள் தாம் நம்புவதை நானும் நம்ப வேண்டுமென்பதற்காக எடுக்கும் பிரயத்தனங்கள் என்றும் கொள்ளலாம். இவ்வகை உளவியல்கள் எனக்கு மிக நன்றாகவே புரிந்துபோயிருப்பதால் நானும் வெறுமன ஒரு பார்வையாளராக மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

நான் எழுதுவது எந்தவொரு அடையாளத்திற்காகவும் இல்லை என்பதை மீண்டுமொரு முறை பதிய வாய்த்த சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறேன். எனக்கான மனத் திருப்திக்கு மட்டும் தான் நான் எழுதுவது. சிங்கப்பூரில் எழுத ஆரம்பித்ததாலும் நீண்ட காலமாக இங்கே வாழ்வதாலும் சிங்கப்பூரை எழுதுகிறேன் என்பதும் மிக இயல்பாக அமைந்ததொரு விஷயம்.

கே. பாலமுருகன்: சிங்கப்பூர் இலக்கிய வரலாறு ஆய்ந்து எழுதப்பட வேண்டுமானால், நீங்கள் பரிந்துரைக்க நினைக்கும் அந்த மூத்த இளைய படைப்பாளி யாராக இருக்கலாம்? குடிப்பெயர்வு இலக்கியவாதியா அல்லது சிங்கப்பூர் அசல் இலக்கியவாதிகளா? இவர்களுக்குள் இறுக்கமாக இருக்கும் பிராந்திய அரசியல் இதற்கு இடம் கொடுக்குமா?

ஜெயந்தி சங்கர்: நான் பரிந்துரைக்கும் மூத்தவர் மா.இளங்கண்ணன், நா.ஆண்டியப்பன், பி.கிருஷ்ணன், இராம. கண்ணபிரான், கமலாதேவி அரவிந்தன், முனைவர். ஸ்ரீ லட்சுமி ஆகிய அறுவரில் ஒருவராக இருக்கலாம். ஒருவர் என்றில்லை ஒன்றுக்கு மேற்பட்டவராகக் கூட சேரலாம். விரிவான இதுபோன்ற பணியைச் செய்ய இவர்களில் சிலரது உடலாரோக்கியம் ஒரு இடையூறாக இருக்கும். அதுவும் எனக்குப் புரியும். அதற்காகத் தான் இளையவர் ஒருவர் தேவை என்றேன். மூத்தவரின் அக்காலத்துப் படைப்புலக அனுபவங்கள், நினைவுகள், வழிநடத்தல் மற்றும் இளையவரின் இன்றைய படைப்புலகப் பரிச்சயம், உழைப்பு மற்றும் வேகம் சேர்ந்தால் அந்தக் கூட்டு முயற்சி நல்ல வரலாற்றைப் பதிவைத் தருமில்லையா? இளைய படைப்பாளிகளில் சீதாலட்சுமி, (கல்வி அமைச்சின்) சுப்ரா, லதா, போன்றோர். இன்னும் கூட பலர் இருக்கிறார்கள். சட்டென்று நினைவில் தோன்றியவர்களில் செய்யக் கூடியவர்கள் என்று நான் கருதும் சிலரை மட்டும் சொல்லியிருக்கிறேன்.

குடிப்பெயர்வு இலக்கியவாதியா அல்லது சிங்கப்பூர் அசல் இலக்கியவாதிகளா என்ற வகைமைக்குள் நான் போகவில்லை. அதற்கு விருப்பமிருப்போர் பலர் உளர். அவர்கள் செய்துகொள்ளட்டுமே அதையெல்லாம். நீங்கள் கேட்டதால், வெறும் தகுதியினடிப்படையில் என் பரிந்துரை அது, அவ்வளவு தான். ஏற்கவும் நிராகரிக்கவும் எல்லோருக்கும் உரிமையுண்டு. (சிரித்துக் கொண்டே) அதையே இலக்கிய அரசியலாக்கவும் தான்.

கே. பாலமுருகன்: மீண்டும் அடையாள அரசியல் தொடர்பாகவே கேட்கிறேன். அடையாள அரசியலை நிராகரிப்பதே உங்களின் ஆற்றலாக புரிந்துகொள்ளப்பட்டு, அதுவே உங்களுக்கு ஓர் அடையாளமாக நிறுவபடவும்கூடும். அடையாளம் அழிக்க அழிக்க ஒரு நுண்ணுயிர் போல முளைத்துக் கொண்டே இருக்கும் போல. மிகவும் தட்டையாக அடையாளங்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லாம் அடையாளங்களை தூக்கி எறிந்துவிட்டால், நமது இருப்பே சூன்யமாகிவிடும் அல்லவா? எப்படியிருப்பினும் அடையாள அரசியல் உங்கள் மீது திணிக்கப்படும் போது அதற்கு எதிராக நீங்கள் செயலாற்ற வேண்டி வருமே. ஒரு படைப்பாளி எதிர்க்காமல் ஓடி ஒளிந்துகொள்ள முடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீகள்? அல்லது எப்படி எதிர்க்கொள்வீர்கள்?

ஜெயந்தி சங்கர்: இதுவரை எப்படித் தொடர்ந்து இயங்கினேனோ அப்படித்தான். முகத்துக்கு நேராக யாரும் கேட்டால் என்ன செய்வாய் என்கிறீர்களா? 'உங்கள் கருத்தை நீங்கள் சுமக்க எப்படி உரிமையுண்டோ அதே உரிமை என் கருத்தைச் சுமக்க எனக்குமுண்டு', என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு என் போக்கில் என் பணியைத் தொடர்வேன்.

ஓடி ஒளிவதா? நல்ல வேடிக்கை. ஓடி ஒளிந்து கொள்வதானால், தொண்ணூறுகளின் பிற்பகுதியிலோ சில ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தபட்சம் 2004 இறுதியிலோ அதை நான் செய்திருக்க வேண்டும். வளர்ச்சியை ஒடுக்கும் முனைப்பில் செய்யப்படும் செயல்களுக்கெல்லாம் நான் எதற்கு அஞ்ச வேண்டும்?

என் கருத்தின் படி, இந்த அடையாளம் மற்றவர் என் மீது திணிப்பது.அவர்கள் திணிக்கட்டும்; அதன்படி அவர்கள் என்னைப் பார்க்கட்டும். நான் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயமா என்ன?

ஏன் நமக்கான எல்லா அடையாளங்களையும் தூக்கியெறிய வேண்டும்? வேண்டாமே. எங்கேயும் அப்படி நான் சொல்லவுமில்லை. நான் பெண் என்ற அடையாளத்தில் பெருமிதம் கொள்கிறேன். அந்த அடையாளத்தை நான் இழக்கவோ நிராகரிக்கவோ இல்லையே. அதேபோல நான் ஒரு படைப்பாளி. இவ்வடையாளத்தையும் நான் மகிழ்வுடன் ஏற்கிறேன்.

தட்டையா? நீங்கள் கையிலெடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொருளற்ற இந்த அடையாளம் தான் மிகத் தட்டையானது.

கே. பாலமுருகன்: இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. அடையாளங்கள் மீது தட்டையான பார்வை விழக்கூடாது என்றே சொல்லியிருக்கிறேன்.

ஜெயந்தி சங்கர்: ம், பார்வை! மிகச் சரி. எல்லாமே பார்வையில் தானே அடங்கியிருக்கிறது.

கே. பாலமுருகன்: இன்னொரு அக்கறைகுரியதாக நான் கருதும் விஷயம்,..சிங்கப்பூர் இலக்கியப் பின்புலத்திலிருந்து இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் எழுத்தாளர் இயக்கங்கள் சார்ந்து மட்டும் அவ்வப்போது வந்து போகும் நபர்களாகவே இருப்பதாக நினைக்கிறேன். அல்லது மேடையில் கவிதை வாசிப்போடு முடிந்து விடுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: மாணவப் பருவத்தினரைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் குறித்து யோசிக்கும் போது நானும் இதுகுறித்து பலவாறாக நிறையவே யோசித்ததுண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதும் ஆர்வம் கொண்ட மிகச்சிலரைத் தவிர பெரும்பாலும் இல்லை என்பதே நிலை. இங்கிருக்கும் மொழிக்குரிய அங்கீகாரம், நூலக வசதிகள், பள்ளி நூலக வசதி போன்ற அனைத்தையும் வைத்துக் கொண்டு மாணவர்களிடையே இருந்திருக்க வேண்டிய தமிழ் மொழிப்புலமையும், தாய்மொழியிலான படைப்பூக்கமும் இல்லாமல் இருப்பது உண்மையில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான். இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவதைச் சுருக்கமாகச் சொல்கிறேனே,..

பொதுவாக இளையர்களுக்கு தமிழ் மொழியின்பால் இருக்கும் அச்சமும் அசௌகரியமும் முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழிலும் நல்ல பல சுவாரஸியங்கள் நிறைந்த ஆக்கங்கள் இருக்கின்றன என்று அவர்களுக்கு பல்வேறு படைப்புகளை அறிமுகப்படுத்துவது நடைமுறையின் மிக அரிதாகவே நடக்கிறது. அப்படி நடக்கும் போதும் அதில் ஒரு தொடர்ச்சி இருப்பதில்லையாதலால், எப்போதேனும் நடக்கும் வெறும் சடங்கு போலாகி விடுகிறது. .

சீரிய பல நவீன இலக்கியங்களைத் தொடர்ந்து அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் தமிழாசிரியர் முதலில் தொடர்ந்து வாசித்தல் வேண்டும், இல்லையா? மாணவர்களுக்கு தமிழ் வெறும் ஒரு தேர்வுப்பாடம் என்ற பார்வை போல ஆசிரியருக்கு தமிழ் வெறும் கற்பித்துப் பொருளீட்டும் கருவி. இலக்கிய மற்றும் மொழி ஆர்வமும் ஈடுபாடுமுள்ள ஆசிரியர்கள் மிகக் குறைவு.

நான் அறிந்தவரை நாளிதழ்கள், சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் வாசிக்கும் தமிழாசிரியர்கள் இங்கே அரிது. அதற்கு நேரமின்மையைக் காரணம் காட்டும் இவர்கள் மாணவர்களுக்கு மட்டும் வாசித்தலை வலியுறுத்துவார்கள் என்பது தான் நகைமுரண். அவ்வாறு வலியுறுத்துவதே கற்பித்தலின் வழிமுறைகளில் ஒன்று என்பது அவர்கள் எண்ணம் போலும். முன்மாதிரிகள் ஏற்படுத்தும் தாக்கங்களிலும் மாற்றங்களிலும் நம்பிக்கையற்ற இவ்வாறான இயந்திரப் போக்குகளே நிலவுகின்றன என்பது தான் துரதிருஷ்டவசமானது.

கே. பாலமுருகன்: தமிழகத்திலிருந்து வந்து இங்கு தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டு இலக்கியத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் சக எழுத்தாளர்களுடன் தங்களின் உறவு எப்படி உள்ளது? இவர்களின் வருகை சிங்கப்பூரில் இன்னொரு மாற்று இலக்கியமான குடிப்பெயர் இலக்கியம் ஒன்றை உருவாக்குவதைத் தவிர அசல் சிங்கப்பூர் இலக்கியத்துடன் கொஞ்சமும் தொடர்பில்லாமல் தமிழக நகலைக் கொண்டு வருவதாக தோன்றுகிறது. காரணம் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு சிங்கப்பூர் நிலம் சார்ந்த விமர்சனமும் வந்ததாகத் தோன்றவில்லை. உங்களால் அப்படியேதும் அடையாளம் காண முடிகிறதா? அப்படி இல்லையென்றால் அது உண்மை என ஏற்றுக் கொள்ளலாமா அல்லது நீங்கள் பரவலாக வாசிக்கவில்லை என அர்த்தமா?

ஜெயந்தி சங்கர்: இங்கே வரும் போது நான் ஒரு படைப்பாளியே அல்ல. இங்கு வந்து ஐந்தாண்டுகளான பிறகு 1995ல் உருவான ஒரு படைப்பாளி. இதைப்பலரும் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். சிங்கப்பூர் நூலகங்கள், தமிழ்முரசு, தமிழ் எழுத்தாளர் கழகம், தேசிய கலைகள் மன்றம் போன்றவை படைப்பாளியாக நான் வளர பல களங்கள் அமைத்துக் கொடுத்தன. நானும் தொடர்ந்து எழுதினேன்.

இந்தியாவிலேயே இருந்திருந்தாலோ அல்லது வேறு நாட்டுப் போயிருந்தாலோ நான் ஒரு நல்ல வாசகியாகக் கூட ஆகியிருக்க மாட்டேன் என்பது தான் உண்மை. ஒருவேளை, ஆங்கிலத்தில் வாசித்திருக்கலாம். கண்டிப்பாக தமிழில் இந்த அளவிற்கு வாசித்திருக்கவே மாட்டேன். ஆகவே, நான் ஒரு தமிழ்ப் படைப்பாளியாகியிருக்கவும் வழியில்லை. இந்தியாவில் இருக்கும் வரை நான் தமிழில் சொந்தமாக ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. அப்போது தேர்ந்த வாசகியாகக் கூட இருக்கவில்லை. வாசித்ததே மிகக் கொஞ்சம் தான்; அதிலும் தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்தில் கூடுதலாக வாசித்திருந்தேன். சிங்கப்பூர் நூலகத்தில் தான் எனக்குத் தமிழில் ஏராளமாக வாசிக்கக் கிடைத்தது. அவ்வாறு தான் ஒரு வாசகியாகி, பின்னர் ஒரு படைப்பாளியாகவும் ஆனேன்.

தமிழகத்திலிருந்து வந்த படைப்பாளி, இங்கேயே பிறந்த படைப்பாளி, வந்து பல தலைமுறையாக இருப்பவர் என்ற அடையாளங்களையெல்லாம் நான் கவனிப்பதேயில்லை. வாசித்த பிறகு அவரது படைப்பு கவனிக்கக் கூடிய படைப்பா என்று தான் யோசிப்பேன். அந்தப் படைப்பு குறித்து என் கருத்தை நேரிலோ மின்னஞ்சலிலோ சொல்லவும் விரும்புவேன். எல்லோரையுமே சகபடைப்பாளியாகவோ, கொஞ்சம் பழகிய பிறகு நண்பர்களாகவோ தான் பார்க்கிறேன்.

நான் கூடியவரை உள்ளூர் படைப்புகளை குறிப்பாக சிறுகதைகளை வாசித்து விடுகிறேன். முன்பைவிட சமீப காலங்களில் சிங்கப்பூரில் படைப்புகள் அதிகமாகி வருகின்றன. மேலும் அதிகரிக்கக் கூடிய ஆரோக்கிய அறிகுறிகள் எனக்குத் தெரிகின்றன. விமரிசனங்கள் இங்கே குறைவென்பதை நாம் மறுக்க முடியாது. விமரிசனக் கலையென்பது உள்ளூரில் என்றில்லை தமிழிலக்கியத்திலேயே கூட இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் தான் இருக்கிறதில்லையா?

கே. பாலமுருகன்: சரி, அடையாள அரசியலை விட்டுவிடலாம். தமிழகம், குடிப்பெயர்வு என்பதையெல்லாம் நீக்கிவிட்டு, பொதுவாக பேசலாம். இதுநாள் வரையில் பல புத்தகங்களுக்கு மேல் அச்சிட்டு வெளியிட்டுள்ளீர்கள். மேலும் தமிழகத்தில் அது அச்சாகி அங்கேயே பல விருதுகளை வென்றுள்ளன. அதே புத்தகங்கள் சிங்கப்பூரில் அதாவது தங்களின் சொந்த ஊரில் எந்த ரீதியில் கவனம் பெற்றன? இங்கே உங்களின் புத்தகங்களை வெளியீடு செய்தீர்களா? அப்படி இல்லையென்றால் ஏன்?

ஜெயந்தி சங்கர்: 'நியாயங்கள் பொதுவானவை' சிறுகதைத் தொகுப்பும் 'மனப்பிரிகை' நாவலும் முறையே அரிமா சக்தி விருது-2006 மற்றும் அரிமா சக்தி விருது-2008 களைப் பெற்றன. நல்லி திசையெட்டும் 2009 விருது 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற நூலுக்கு கிடைத்தது. அதே நூல் இங்கே கவனம் பெறவில்லை. அதற்குக் காரணம் மொழியாக்கத்திற்கு இங்கே விருதுகள்/பரிசுகள்/அங்கீகாரங்கள் இல்லை என்பதாக இருக்கலாம். அதேபோல 'மனப்பிரிகை' மற்றும் 'குவியம்' நாவல்கள் இனிமேல் தான் இங்கு கவனம் பெற வேண்டும். கடந்த ஆண்டு என்னுடைய 'பின் சீட்' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்குத் தேர்வானது. நான் எப்போதும் சொல்வதைப் போல, படைப்புகளும் நூல்களும் வட்டாரம் மற்றும் பிராந்தியம் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது என்பது என் எண்ணம். சமீப ஆண்டுகளாகத் தானே சிங்கப்பூர் தமிழிலக்கியம் வெளியுலகால் முன்பைவிட அதிகமாகக் கூர்ந்து கவனிக்கப் படுகிறது.

2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் 2005, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் பிரசுரமான மொத்தம் சுமார் 10 நூல்களை முறையான எளிய நிகழ்வுகளின் மூலம் வெளியிட்டேன். இப்படியான நூல்கள் பிரசுரமாகியுள்ளன என்பதை அறிவிக்கும் நோக்கத்தில் வெளியிடலாம் என்று நண்பர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் எடுத்த முடிவு. நூல்களைக் குறித்த அறிமுக உரைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடந்தேறின.

திரைப்பிரபலத்தின் வருகை, மாலை, பொன்னாடை, பதாகை, ஆதரவாளர் அது இது என்று கோலாகல விழாவெடுக்கும் கூட்டத்தினரிடையில் அந்த எளிமைக்காகவே மிக விநோதமாகப் பார்க்கப்பட்டேன். அத்துடன், உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்ப்பதென்று ஒரு வழக்கு இருக்கிறது. அதுபோல, சிங்கப்பூரே ஒரு சிறிய தீவு; தமிழர்கள் சிறுபான்மை; இதில் இலக்கிய இயங்குதளம் இன்னும் மிகக்குறுகியது; அதற்குள் பல்வேறு சிறுகுழுக்கள். நானோ எந்தக் குழுவையும் சார்ந்து இயங்குவதில் விருப்பமற்றவள்.

குழு மற்றும் அடையாளங்கள் கடந்து இலக்கிய நாட்டம் கொண்டவர்கள் இங்கே குறைவு. ஆகவே, நிகழ்வுக்கு வருவோரும் நூல்கள் வாங்குவோரும் அதைவிடக் குறைவு. வந்து வாங்கியவர்களாவது நூலைக் குறித்து ஏதும் பேசுவார்களா என்றால் அதிருக்காது. அடுத்து வரும் நாட்களில் எல்லோரும், "எப்டி வரவேற்பு?", என்று கேட்பார்கள். அதற்கு, “எவ்ளோ காசு கெடச்சுது", என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதெல்லாமாக எனக்குள் வெளியீடு குறித்த ஒவ்வாமை தான் மூன்றாண்டுகளில் வளர்ந்தது. அத்துடன், அவ்வெளிய நிகழ்வுகளுக்கு வேண்டிய சில ஒருங்கிணைப்புகள் செய்ததிலும் எனக்கு சலிப்பேற்பட்டது. அந்நிகழ்வுகள் ஒரு மாதிரி பொக்கையாக இருந்த உணர்வேற்பட்டதால் எழுதுவது மட்டும் தொடரட்டும், இனி இதெதுவும் வேண்டாமென்று முடிவெடுத்தேன். இது முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவும் விருப்பமுமாகும்.

கே. பாலமுருகன்: உங்களுக்கு எழுத்துத் துறையில் இருக்கக் கூடிய சவால்கள் என்று எதையெதையெல்லாம் சொல்வீர்கள்?

ஜெயந்தி சங்கர்: சவால்கள் பல்வேறு வகைப்பட்டதாக இருக்கின்றன. அவற்றைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். இருந்தாலும், சுருக்கமாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

வேறு வழியில்லை, மீண்டும் அடையாள அரசியலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பேச்சிலும் செயலிலும் இவ்வாயுதத்தை எடுக்கும் ஆட்கள் பெரும்பாலும் சக படைப்பாளி என்றும் நண்பர் என்று சொல்லிக் கொண்டு பொறாமையில் வெதும்புவோர். குடிபெயர் படைப்பாளி என்று பிறர் உருவாக்கியிருக்கும் அடையாள அரசியல் நான் விருப்பாவிட்டாலும் என்னை விடாது பின்தொடர்கிறது என்று வையுங்களேன். இதன் காரணமாக எனது படைப்புகள் சில சமயங்களில் உரிய கவனம் பெறத் தவறுகின்றன என்பதையும் சொல்லியே ஆக வேண்டியுள்ளது.

ஆணாதிக்கச் சிந்தனையும் முக்கிய சவாலாக முன் நிற்கிறது. நிறைய சொல்லலாம். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று. முன்பு எனது கட்டுரை நூல் ஒன்றை வெளியிட்டு மேடையில் பேசியவர், "வீட்டில் கணவனோடு சண்டை போடுவதை விட இந்த மாதிரி கட்டுரைகள் எழுதுவது நல்லது", என்று சொன்னார். முதல் பார்வையில் வேடிக்கையென்று நினைத்துச் சொன்னதாகத் தோன்றும். ஆனால், அதுதான் இல்லை. ஆண் எழுதினால் எழுத்தாம்; பெண் எழுதினால் அது வெறும் பொருள் பொதிந்த பொழுதுபோக்காம். அவை கவனத்துக்குரியதல்லவென்று அன்று மேடையில் அவர் சொல்லாமல் சொன்னார். அதுபோன்ற ஆணாதிக்கத்தின்று எழும் மனோபாவங்கள் வெளிப்படாத இடமே இங்கென்று இல்லை, எங்கும் இல்லை என்று வையுங்கள்.

ஆண்கள் மட்டுமா சக பெண் படைப்பாளியை இழிவாக நினைக்கிறார்கள்? சில பெண்களும் கூடத் தான் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்று சமீபத்தில் அறிந்து அதிர்ந்தேன். மிகச் சிறிய கூட்டம் ஒன்று நடக்கும் போது என்னை அறிமுகப் படுத்த சக பெண் படைப்பாளி ஒருவர் பலதும் சொல்லிவிட்டு இறுதியில், “இவர் எழுதியுள்ள 19 நூல்களில், 10 புனைவுகள்", என்று சொல்லி நிறுத்தப் போகிறார் என்று நினைத்த தருணத்தில், “இதற்கு முக்கிய காரணம் அவர் ஓர் இல்லத் தலைவி", என்றார். 'இல்லதரசிகளுக்கு மட்டும் ஒருநாளைக்கு 48 மணிநேரமிருக்கிறதா என்றும் வீட்டிலுருக்கும் பெண் படைப்பாளிகளுக்கு எழுதுவது மட்டுமே வேலையா,' என்றெல்லாம் அவரிடம் கேட்க நினைத்து, சபை நாகரிகம் கருதி அப்போது பேசாதிருந்தேன்.

இந்த அதி நவநாகரீக நகரிலும் சாதி மற்றும் மதம் சார்ந்த பாகுபாட்டு எண்ணங்கள் மிக அதிகமாக நிலவுகின்றன என்றால் நம்ப முடியுமா? கவியரங்க/பட்டிமன்ற மேடைகளில் பேசுவதற்கும் சில சமயம் உரைநடையில் எழுதுவதற்கும் உயர்வு நவிர்ச்சியாகக் கவிதைகளில் உருகுவதற்கும் தான் போலும் இனமத நல்லிணக்க சமாச்சாரங்கள். மற்றபடி, பரிச்சயமான சில நிமிடங்களிலேயே எதிரில் நிற்கும் நபரின் மதம், சாதி, குலம், கோத்திரம் அறிந்து கொண்டு விடும் நுண்கலை வாய்க்கப் பெற்றவர்கள் பெரும்பாலான சிங்கப்பூரின் தமிழிலக்கிய ஆசாமிகள். அதன் பிறகென்ன? குழுமனப்பான்மையும் அது சார்ந்த ஏற்பு நிராகரிப்புகளும் தான். சிறிய வட்டமாக இருக்கிற காரணத்தால், குழு அரசியல் இங்கு மிகவும் கூர்மையாகவும் துல்லியமாகவும் சட்டென்று உணரக் கூடியதாக இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டித் தான் என்னைப் போன்ற படைப்பாளிகள் எமது எழுதார்வத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. ஆனாலும், வேடிக்கைகள் பல கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையும் சுவாரஸியங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது.

கே.பாலமுருகன்: அடையாள அரசியலைக் குறித்து எழுத்தாளர் ஜெயந்தியிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் இப்பிரச்சனையை ஒரு சார்பாகவோ அல்லது விரிவாகவோ அணுகப்படாமலும் போயிருக்கலாம் அல்லது அவர் முன்வைத்த நியாயங்கள் முழுக்க அவர் தரப்பின் வெளிப்பாடுகள் எனவும் சொல்லலாம். இது தீர்விற்கான பரிந்துரைகள் கிடையாது. அதே சமயம் தனிப்பட்ட யாரையும் சாடுவதற்காகவோ எதிர்ப்பதற்காகவோ நடத்தப்பட்ட உரையாடல் கிடையாது. அடையாள அரசியலை நோக்கிய எதிர்க்குரலின் ஒரு பகுதியாகவே இதைக் கருதுகிறேன்.


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்