| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நேர்காணல்:! |  
| 
              
                
                  
                    
                      
                        
                          
                            
                              
                                
                                  
                                    
                                      
                                         
                                        உதயகுமாரி பரமலிங்கத்துடனான (நிலா) 
                                        சந்திப்பு!
 - நவஜோதி யோகரட்ணம் -
 
 
   அரியாலையூர் 
                                        அம்புஜம், நிலா ஆகிய புனைபெயர்களில் எழுதி 
                                        வரும் உதயகுமாரி பரமலிங்கம் இலங்கையில் 
                                        பதினைந்திற்கும் மேற்பட்ட 
                                        நாடகங்களை இயக்கியுள்ளார். 
                                        தொலைக்காட்சிகளில்; பங்கேற்றும், 
                                        வானொலியில் அறிவிப்பாளராகவும் 
                                        பங்களித்துவரும் உதயகுமாரி 
                                        பரமலிங்கம் ‘எந்தையும் யானும்’ என்ற 
                                        கவிதைத் தொகுப்பினையும் ‘எழுத எழுத’என்ற 
                                        தனது அனுபவங்களின் கோர்ப்பாகவும் இரண்டு
                                      
                                        நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். லண்டனில் 
                                        கணனி வலை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற 
                                        உதயகுமாரி நிலாமுற்றம் என்ற 
                                        இணையத்தளத்தை திறம்பட நடத்தி வருகின்றார். 
 நவஜோதி: புலம்பெயர் வாழ்வில் எங்களுக்கு 
                                        உடல்ரீதியாக வசதிகள் இருப்பினும் 
                                        மனநிலையில் வெறுமைகொண்டது போன்ற
                                        உணர்விலிருக்கிறோம். ஆனால் நீங்கள் உடலில் 
                                        வலு குன்றியவராய் இருந்தும் மனரீதியாக 
                                        மிகவும் தென்பாகஇ மிகுந்த உற்சாகமாகஇ 
                                        ஆளுமையோடு இருக்கிறீர்கள். இத்தகைய 
                                        நம்பிக்கை உங்களுக்கு எப்படி 
                                        வேரூன்றியது.?
 
 உதயகுமாரி: இங்கு வருவதற்கு முன்பே 
                                        எனக்குள் நம்பிக்கை வேரூன்றி விட்டது 
                                        என்று தான் நான் நினைக்கிறேன். நானொன்றும்
                                        
                                        வானத்தால் குதித்தவளல்லவே! எனக்கும் 
                                        நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதித்து 
                                        விடவில்லை. என் குடும்ப உறுப்பினர் மீது 
                                        வைத்த 
                                        பாசம் தான், இந்த உலகத்தில் வாழ்ந்தே ஆக 
                                        வேண்டிய சூழலுக்கு என்னை ஆளாக்கியது என்று 
                                        நான் கூறுவேன். பதினெட்டு, 
                                        பத்தொன்பது வயதாக இருக்கும் காலங்களில் 
                                        நான் மனதுக்குள் மிகவும் முறுகியவளாக மனம் 
                                        வெதும்பி தற்கொலை செய்தாலென்ன
                                        எனத் தீவிரமாக சிந்தித்ததுண்டு. என் மரணம் 
                                        என் வீட்டாரின் இயல்பு நிலையைக் 
                                        கெடுக்கலாம், பெற்றோரின் வாழ்வை மிகப்                                         பாதித்து விடலாம், என் உடன் பிறப்புகளின் 
                                        முன்னேற்றத்துக்கு பாதகமாக அமைந்து 
                                        விடலாம் என்று நினைத்து என் உயிரைக் 
                                        காத்து
                                        வந்தேன். எமக்காக இல்லாவிடினும் 
                                        மற்றவர்களுக்காக வாழ்வது என்று என்னைச் 
                                        சமாதானப் படுத்தி, இருக்கும் வரை மகிழ்வாக
                                       
                                        வாழ்வது என வாழ்ந்த காலங்களில் நான் 
                                        பார்த்த 'பூவே பூச் சூடவா” என்ற 
                                        திரைப்படம் எனக்கு என் வாழ்வின் 
                                        சமன்பாட்டை நிறுவித் 
                                        தந்தது. அந்தத் திரைப்படத்தின் கதா நாயகி 
                                        இருக்கும் சொற்ப நாட்களை மிக 
                                        அர்த்தமுள்ளதாக வாழ முற்படுவது எனக்குப்
                                       
                                        பிடித்திருந்தது. அதன் படி என் 
                                        வாழ்நாட்களை அர்த்தமுள்ளதாக ஆக்க, மிக 
                                        மும்முரமாக நேரத்தைச் செலவு செய்யப் 
                                        பழகிக் 
                                        கொண்டேன். அயலவர்களின் பிள்ளைகளுக்கு 
                                        அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பாடம் 
                                        சொல்லிக் கொடுத்தேன். வேகமாக அதேநேரம் 
                                        பயனுள்ளதாக என் நேரம் விரயமாகியது. 
                                        என்னாலும் சிலவற்றை ஆக்கபூர்வமாகச் செய்ய 
                                        முடிந்தது. எனது செயற்பாடு மற்றவர்களுக்கு
                                       
                                        ஆச்சரியத்தைத் தந்தது. அதுவே எனக்கு 
                                        நம்பிக்கையையும் தந்தது. மகிழ்வையும் 
                                        தந்தது.
 
 நவஜோதி: உங்களைப் பொறுத்தளவில் உங்களைப் 
                                        பராமரிக்க ஐரோப்பாவில் பலவசிதகள் 
                                        இருக்கின்றன. மேற்கு நாட்டில்
                                        உள்ளதைப்போன்று நவீன மருத்துவ வசதிகள் 
                                        அல்லாத சூழலில் அதாவது இலங்கையில் உங்கள் 
                                        வாழ்வை எப்படி எதிர்கொண்டீர்கள்?
 
 உதயகுமாரி: ஆம் இங்கு பல வசதிகள் 
                                        இருக்கின்றன. எம் நாட்டிலோ மிகவும் 
                                        மட்டுப்படுத்தப் பட்ட வசதிகளே 
                                        இருக்கின்றன.
                                        ஆண்டவன் புண்ணியத்தில் என் நோயும் 
                                        அதிகரிக்க என் வீடு வசதிகளும் அதிகரித்தன. 
                                        அதனால் எங்கள் நாற்சார் வீட்டை அப்பாவின்
                                       
                                        அனுமதியுடன் சமமான தளமுள்ள வீடாக மாற்றிக் 
                                        கூட என் நாற்காலிச் சக்கரம் உருளக் கூடிய 
                                        விதமாக ஆக்கி என் வாழ்வுச் சக்கரத்தை 
                                        ஓட்ட என் உயிருக்குயிரான அம்மா ஒர் 
                                        செக்குமாடாகவே உழைத்தார். அம்மா என் உடல் 
                                        நலத்தைப் பேணுவதோடு என் உள 
                                        நலத்தையும் மிக உறுதியோடு, அதேவேளை மிக 
                                        மெல்லிய உணர்வையும் பேணியும் வளர்த்த 
                                        பெருமை அம்மாவையே சாரும். என் 
                                        உடன் பிறப்புகள் கூட என்னை உதாசீனம் 
                                        செய்யாது எனக்கு முக்கியத்துவம் தந்து 
                                        என்னை ஆதரித்தது எனது பலமென்றால் 
                                        மிகையில்லை. அம்மாவின் உறுதியும் சோர்வு 
                                        படாத குணமும் தான் என்னை இன்று உங்கள் 
                                        முன்னே வைத்து இருக்கிறது. நோயுடன் 
                                        போர் தந்த துன்பங்களை நானும் அம்மாவும் 
                                        அனுபவித்தே இருக்கிறோம், நானோ அம்மாவோ 
                                        குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாக்க 
                                        பதுங்குகுழிகளுக்குள் செல்வதில்லை. என்னை 
                                        ஒவ்வொருமுறையும் தூக்கிச் செல்லமுடியுமா 
                                        என்ன! வருவது வரட்டும் எனவாழ்வை 
                                        ஓட்டினோம். பன்னிரண்டு வயதிலே 
                                        என்னையறியாமலே எனக்குள் புகுந்த muscular dystrophy (limb/girdle) என்ற 
                                        வியாதியால் சிறிது சிறிதாக என் உடலியக்கம் 
                                        குன்றிப்போனது. நான் வேம்படி பெண்கள் 
                                        பாடசாலையில்தான் படித்தேன். ஆனால் என் 
                                        பாடசாலை வாழ்வில் பெரும்பகுதி 
                                        வியாதியாலும் வைத்தியத்தாலும் 
                                        நிரப்பப்பட்டது. பாடசாலை செல்லும் 
                                        காலங்களில் அப்பாவும்
                                        சகோதரர்களும் எம்முடன் இருந்தார்கள். 
                                        உதவினார்கள். காலங்கள் மாறின. உதவிக்கென 
                                        இருந்த சின்னண்ணரும் இந்திய அமைதிப் 
                                        படையினரால் சந்தேகத்தின் பேரால் 
                                        சிறைவைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 
                                        அவரும் இங்கிலாந்து போய்விட நானும் 
                                        அம்மாவும் 
                                        மட்டுமே ஊரில் வாழ்ந்தோம். ஏறக்குறையப் 
                                        பத்து வருடங்கள் அம்மா தனியாகவே என்னைப் 
                                        பராமரித்தார். என் கைகளை தன் 
                                        கழுத்தைச் சுற்றி மாலை போலப் போட்டு என்னை 
                                        இறுக அணைத்துத் தூக்கி சக்கர 
                                        நாற்காலிக்கும் படுக்கைக்கும் என எனை 
                                        மாறியமர
                                        வைத்து என் தாய் என் தேவைகளைத் தீர்த்த 
                                        கதைகள் எல்லாம் என் மனதின் இரணங்கள். 
                                        முப்பது வயதுக் குமரியை அறுபது 
                                        வயதுத்தாய் சுமந்து பராமரிப்பது ஒன்றும் 
                                        சுலபமல்ல. அன்று அம்மாவிடம் அதற்கான வலு 
                                        உடலிலும் மனதிலும் இருந்தது. இப்போது 
                                        அம்மாவின் அருகாமையுடன் இங்கு வாழும் 
                                        நான், இந்த நாட்டு அரசாங்கம் தந்த ஆதரவால் 
                                        24 மணிநேரமும் சேவைக்கென பணிபுரிய 
                                        பணிப்பெண்களை நியமித்துள்ளேன். இனியும் 
                                        நான் வாழ வேண்டும் என்பது இறைவன் 
                                        விருப்பம் போலும்! அதனால் தான் என்னை
                                        இங்கிலாந்திற்கு அழைத்து வந்தாரோ என்னவோ!
 
 நவஜோதி: உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை 
                                        ஏற்படுத்தியவர்கள் யார்?
 
 உதயகுமாரி: என் வாழ்வைப் பொறுத்தவரை என் 
                                        குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருமே எனக்கு 
                                        நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள். 
                                        அவர்கள் மட்டுமல்ல என் உறவினர்கள், 
                                        அயலவர்களும் தான். அப்பா எப்போது 
                                        பெண்பிள்ளை நீ படித்திருக்க வேண்டும் என 
                                        என்னை 
                                        உற்சாகப் படுத்தினார். அம்மா எப்போதும் 
                                        என் உடன்பிறப்புகளுக்கு தங்கச்சிக்கு 
                                        அதைச் செய் இதைச் செய் என எனக்கு 
                                        முக்கியத்துவம் 
                                        கொடுத்து வளர்த்ததும் காரணம் என நான் 
                                        நினைக்கிறேன். குறிப்பாக எனது இரண்டு 
                                        அண்ணன்மாரும் சலிக்காது பாடசாலை கொண்டு
                                       
                                        சென்று வந்தார்கள். என் சின்னண்ணரின் 
                                        அக்கறையும் ஊக்குவித்தலும் இங்கு 
                                        குறிப்பிட்டேயாக வேண்டும். நான் 
                                        கடைக்குட்டி என்பதும் 
                                        கூடக் காரணமாக இருக்கலாம். என்னை என் 
                                        உறவினர்களும் இயலாதவள் என்று 
                                        புறக்கணித்ததில்லை. எந்தக் 
                                        குடும்பத்தினரும் தங்கள்
                                        பிள்ளைகளை மற்றவர் முன் தாழ்த்தி; பேசுதல் 
                                        கூடாது என்று கூறுவார்கள். அது 
                                        என்விடயத்தில் மிகவும் உறுதுணையாக 
                                        இருந்திருக்கிறது. உறவினர்கள் போல் 
                                        அயலவர்களும் நண்பர்களும் என் மேல் மிகவும் 
                                        நம்பிக்கை உள்ளவர்களாக விளங்கும் போது 
                                        மற்றவர்கள் நம்புவது போல் செயற்படப் 
                                        பழகிவிட்டேன். என் வீட்டார் மீது நான் 
                                        வைத்திருந்த நேசமும் பாசமும் தான் 
                                        வாழ்ந்தே 
                                        ஆகவேண்டும் என் சூழலுக்கு என்னை 
                                        ஆளாக்கியது. அது என் வாழ்வில் நம்பிக்கை 
                                        ஏற்படுத்தியது.
 
 நவஜோதி: உங்கள் பொழுதை எப்படிக் 
                                        கழிக்கிறீர்கள்? புத்தகங்கள் 
                                        வாசிப்பீர்களா? என்ன மாதிரிப் புத்தகங்கள் 
                                        வாசிப்பீர்கள்? 
                                        உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?
 
 உதயகுமாரி: எனக்கு புத்தகம் வாசிப்பது 
                                        என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு 
                                        ஓய்வு நேரம் கிடைப்பதே மிகவும் 
                                        அரிதாகவே உள்ளது. என் நாளாந்த வாழ்க்கையே 
                                        மிகவும் மும்முரமானது. மும்முரமாக 
                                        இருப்பது தான் எனக்குப் பிடித்தமானதும் 
                                        கூட. 
                                        மும்முரமாக இருப்பதால் கவலைப்படக் கூட 
                                        அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது அல்லவா? 
                                        எனக்கு இந்த 24 மணிநேரமுமே
                                        ஒருநாளுக்குப் போதாது எனும் விதமாக கடந்து 
                                        செல்லும் என்வாழ்வில் இணையம் இணைந்தே 
                                        பயணிக்கிறது. என்னதான் 
                                        இணையத்துடன் என் வாழ்வு கழிந்தாலும் 
                                        எனக்கு புத்தகம் வாசிப்பது என்றாலே 
                                        மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு ஓய்வு 
                                        நேரம் 
                                        கிடைப்பதே மிகவும் அரிதாகவே உள்ளது. அதே 
                                        வேளை எனது நோய் பலவகையிலும் என்னைத் 
                                        தாமதப் படுத்துகிறது. மற்றவர்களைக் 
                                        கொண்டு காரியங்களை ஆற்றி வாழ்வதனாலும் 
                                        நான் வேகம் குறைந்தவளாகவே வாழ்க்கைப் 
                                        பயணத்தை நடாத்தி வருகிறேன்;.
                                        கிடைக்கும் நேரத்தில் நூல் வாசிக்க என் 
                                        ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் ஆரோக்கியம் 
                                        குறைந்த என் கரங்கள் மூலம் நூல்களைத் 
                                        தூக்கிப் படிக்கும் ஆர்வம் குன்றியவளாக 
                                        என் வாழ்வு கழிகிறது. இவர்தான் என் 
                                        பிரியமான எழுத்தாளர் என்று கூறுமளவுக்கு 
                                        குறிப்பிட்ட 
                                        எழுத்தாளரது நூல் என வாசிக்கும் பழக்கம் 
                                        எனக்கு இல்லை. முக்கியமாக தத்துவம் 
                                        சார்ந்த புத்தகங்கள், மனதுக்கு 
                                        வலுவூட்டும் தன்மை 
                                        நிறைந்த நூல்கள் எப்போதும் என்னைக் 
                                        கவர்வன. கவிஞர் கண்ணதாசனின் நூல்களை 
                                        மீண்டும் மீண்டும் வாசித்துச் சுவைத்தவள் 
                                        நான். 
                                        கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள், 
                                        அனுபவங்கள் கூட என்னைக் கவர்ந்தன. 
                                        சிறுவயதுக் காலங்களில் பிடித்த அளவுக்கு
                                       
                                        இப்போதெல்லாம் கதையம்சம் நிறைந்த 
                                        புத்தகங்கள் பெரிதாகப் பிடிக்கவில்லை. 
                                        அந்தக் கதைப் புத்தகங்கள் வித்தியாசமான 
                                        சூழலைப் 
                                        பிரதிபலித்தால் வாசிக்க முடிகிறது. அந்த 
                                        விதத்தில் சுஜாதாவின் எழுத்துக்கள் எனைக் 
                                        கவர்ந்தன. எல்லாவற்றிலும் தத்துவம் தேடும்
                                     
                                        மனப்பாங்கு எனக்குள் வந்து விட்டதை 
                                        உணர்கிறேன். இந்த எழுத்தாளரைப் பிடிக்கும் 
                                        என்று ஒருவரைக் குறிப்பிட்டு என்னால் 
                                        கூறமுடியவில்லை. வாசிக்கத் தொடங்குவேன். 
                                        எந்த எழுத்து நடை என்னைக் கவர்கிறதோ 
                                        அந்தப் புத்தகத்தைப் படிப்பேன்.
 
 நவஜோதி: இணையத்தளத்தில் என்ன மாதிரியான 
                                        மகிழ்ச்சியைப் பெறுகிறீர்கள்? 
                                        இணையத்தளங்கள் உங்களுக்கு எவ்வளவு துணையாக
 இருக்கிறது?
 
 உதயகுமாரி: இணையத் தளம் என் போன்ற உடல் 
                                        ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளான 
                                        மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான்
                                    
                                        நான் கூறுவேன். இணையத்தளம் நான் 
                                        நினைப்பவர்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்பை 
                                        எனக்குத் தேடித் தருகிறது. நினைக்கக 
                                        முடியாதவர்களைக் கூடச் சந்திக்கும் 
                                        தருணங்களைத் தேடித் தந்திருக்கின்றது. 
                                        பலவிடயங்களையும் மற்றவர் உதவியின்றியே 
                                        தெரிந்து 
                                        கொள்ளப் பலவகையிலும் உதவுகிறது. பலரையும் 
                                        மிக விரைவில் தொடர்பு கொள்ளவோ, காரியங்களை 
                                        ஊக்கப் படுத்தவோ எனக்கு
                                        உதவி வருவதால் அறைக்குள் இருந்தே 
                                        அவனியடங்க சிறகை விரிக்க உதவும் இந்த 
                                        இணையமே. இது ஒரு புறமிருக்க எனக்கு மிக
                                       
                                        உற்சாகம் தரும் நண்பர்கள் பலரையும் 
                                        சம்பாதித்துத் தந்தது இந்த இணையத் தளம். 
                                        அவர்கள் தந்த ஊக்கம் என்னைப் பல கவிதைகளை
                                       
                                        ஆக்க வைத்ததை நான் இங்கே சொல்லியே தான் ஆக 
                                        வேண்டும். இந்த அன்புள்ளங்கள் தந்த 
                                        ஊக்கத்தின் காரணமாத்தான் என்னால் படும்
                                       
                                        துன்பங்களைக் கூடக் குறைக்க முடிந்தது. 
                                        குறைக்க முடிகிறது. நான் என்துன்பங்களைப் 
                                        பகிர்வதால் மனது இலேசாவதை என்னால் 
                                        உணரமுடிவதுண்டு. துவண்டு போகும் மனதை 
                                        தூக்கி நிறுத்த இந்த நண்பரகளின் ஆறுதல் 
                                        வார்த்தைகள், ஊக்கம் தரும் சிந்தனைகள்,
                                        
                                        பாராட்டுகள் தந்த தென்பு என்னை பல 
                                        துன்பங்களின் மத்தியிலும் பல்கலைக்கழகப் 
                                        படிப்பைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்ற
                                        உதவியிருக்கிறது என்றால் பாருங்களேன். 
                                        அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற 
                                        வேண்டுமே என்றளவுக்கு தங்கள் ஈடுபாட்டைக்
                                       
                                        காண்பித்த என் இணையத்து நண்பநண்பியர்;கள். 
                                        எனதும் என் நண்பர்களினதும் படைப்புகளை 
                                        பிரசுரித்து மற்றவர்களின் விமர்சனங்களை
                                      
                                        அறிய பொழுது போக்காக அமைத்தே நிலாமுற்றம் 
                                        (www.nilamutram.com)என்ற இணையத்தளம் 
                                        ஆகும். இந்த தளத்தில் என், 
                                        நண்பர்களின் ஆக்கங்களைப் பிரசுரிக்கும் 
                                        போது அதைப்பார்வையுற்று தங்கள் எண்ணத்தை 
                                        வெளிப்படுத்த உதவி வருகின்றது இத்தளம்.
                                     
                                        என்னைப் பொறுத்தளவில் என் இயலாமையின் 
                                        பாதிப்பைப் பலவகையில் குறைத்துக் 
                                        காண்பிப்பது இந்த இணையம். 
                                        வெளியே சென்று பலமணிநேரம் செலவழித்து 
                                        செய்யவேண்டிய காரியத்தை வீட்டிலிருந்தே 
                                        சில நிமிடங்களில் ஆற்ற முடிகிறது. தகவல்
                                       
                                        சேகரிப்பு, வங்கிப் பணமாற்றம், விரும்பிய 
                                        பொருட்தேர்வு, பொருட்களை வாங்கல் எனப் 
                                        பலவிதத்தில் என் போன்ற உடலநலம் 
                                        குறைந்தவருக்கு வரமன்றி வேறென்ன! அவசரமான 
                                        உலகத்தில் மற்றவர்களின் வேகத்துடன் 
                                        பயணிக்க இணையம் பெரிதும் எனக்கு
                                        உதவுகிறது.
 
 நவஜோதி: எந்த வகையில் மனவுணர்வுகளுக்கு 
                                        வடிகாலாக கவிதை அமைந்துள்ளது?
 
 உதயகுமாரி: மனங்கனத்தால் கவிதை வரும் 
                                        என்பார்கள். எனக்கும் அப்படியான அனுபவம் 
                                        கிடைத்துள்ளது. பலவேளைகளில் என்மனதில் 
                                        உள்ளவற்றை எழுத்தில் வடித்தவுடன் மனம் 
                                        இலேசாவதை நான் உணர்கிறேன். பலரையும் 
                                        வாழ்த்த நான் கவிதைகள் புனைவதுண்டு. 
                                        அவர்களின் மகிழ்ச்சி என் மனதை 
                                        நிரப்புகிறது.
 
 நவஜோதி: உங்கள் படைப்புகள் எவ்வளவு தூரம் 
                                        ஏற்றுக்கொள்ளப்பட்டது?
 
 உதயகுமாரி: நான் இரண்டு நூல்களை 
                                        வெளியிட்டிருப்பது நீங்கள் அறிந்ததே. 
                                        காலமான, பேரன்புக்குரிய எனது தந்தையார் 
                                        சிவஞானம் 
                                        பரமலிங்கம் அவர்களது கவிதைகளையும் எனது 
                                        கவிதைகளையும் அப்பாவும் யானும் ஏற்கெனவே 
                                        திட்டமிட்டதன் படி ‘எந்தையும் 
                                        யானும்’ என்ற பெயருடன் வெளியிட்டதோடு 
                                        மற்றைய நூலில் எனது வாழ்வின் சுமைகளையும் 
                                        அவற்றை நான் கடந்ததன்
                                        அனுபவங்களையும் கொட்டி ‘எழுத எழுத’ என்ற 
                                        பெயருடனும் 2006 நவம்பர் இல் 
                                        வெளியிட்டிருந்தேன். அப்பா காலமாகி மூன்று
                                       
                                        வருடங்களின் பின்பே அது சாத்தியமானது.
                                        
                                        ‘எந்தையும் யானும்’ நூலில் வரும் 
                                        அப்பாவின் கவிதைகளில் அவரின் வயதுக்கேற்ற 
                                        அனுபவங்கள் தொனிப்பதாகவும், எனது 
                                        கவிதையில் 
                                        நான் என் உணர்வுகளைக் கொட்ட முற்பட்டது 
                                        புலப்பட்டதாகவும், ‘எழுத எழுத’ என்ற எனது 
                                        அனுபவக் கோர்ப்பு பலரையும் தங்களுக்குள்
                                       
                                        கேள்வி கேட்க வைத்ததையும் அறிந்து மிகவும் 
                                        களிப்படைந்தேன். அது லண்டன் தமிழ் 
                                        வானொலியில் பிரதி புதன் அங்கம் அங்கமாக
                                     
                                        வாசித்தளித்த ஆக்கம். அப்போது நான் 
                                        வானொலியில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 
                                        எனது அனுபவம் சோகமாகவும், சுகமாகவும், 
                                        பாடமாகவும் இருக்கலாம் என்று கூறுவது போல் 
                                        அது பலருக்கு பாடமாக அமைந்தது என்று 
                                        கூறும் போது எனக்கு மகிழ்ச்சியாக
                                        இருக்கிறது.
 
 எழுதியவற்றை நூலாக வெளியிட்டதன் பின்பு 
                                        மிகப் பெரிய நிறைவு எனக்குக் கிட்டியது. 
                                        ஒரு படி உயர்ந்து விட்டது போன்ற உணர்வு
                                    
                                        எனக்கு ஏற்பட்டது. அதாவது என் எழுத்துக்கு 
                                        அங்கீகாரம் கிடைத்த திருப்தி. 
                                        வெளிநாட்டில் வாழும் எம்போன்றவர்க்கு நூல்
                                      
                                        வெளியிடுவதொன்றும் பெரிய விடயமல்ல தான். 
                                        ஆனால் வெளியிடும் போது தான் நமது 
                                        ஆக்கங்கள் மற்றவர் மத்தியில் எந்தளவு 
                                        பேசப்படுகிறது என்பது புரிகிறது. அதேவேளை 
                                        நாம் செல்ல வேண்டிய தூரமும் புரிகிறது. 
                                        பொறுப்புணர்ச்சியும் கூடுகிறது.
 
 நவஜோதி: உங்கள் சமூக ஈடாட்டம் எப்படி 
                                        இருக்கிறது?
 
 நான் இங்கு எங்கும் என் சக்கரநாற்காலி 
                                        துணையுடன் பல இடங்களுக்கும் 
                                        போய்வருகிறேன். வீதியால் நான் போகும் போது 
                                        என் 
                                        போன்றவர்களை புருவமுயர்த்தி எவருமே 
                                        விநோதமாகப் பார்ப்பதில்லை. இலங்கையில் 
                                        வாழ்ந்த காலங்களில் சக்கர நாற்காலியில் 
                                        நான் 
                                        வெளியே போனது மிக மிகக் குறைவு. அதுவும் 
                                        என் வீட்டிலிருந்து பலமைல்கள் தொலைவிலுள்ள 
                                        இடத்துக்கு சிற்றூந்தில் சென்று 
                                        இறங்கியபின், அங்குள்ள கோவில்களுக்கு 
                                        சக்கர நாற்காலியில் போயிருக்கிறேன். 
                                        அப்போது என்னிடம் சாதாரண சக்கர 
                                        நாற்காலிதான் 
                                        இருந்தது. இப்போது என்னிடம் உள்ள இந்த 
                                        தானாக இயங்கவல்ல சக்கர நாற்காலியில் பல 
                                        இடங்களுக்கும் போய்வருகிறேன். இங்கு 
                                        விஸ்தரிக்கப்பட்டுள்ள வசதி காhரணமாக 
                                        சிற்றூந்து, பேருந்து, தொடரூந்து 
                                        எல்லாவற்றிலும் பயணஞ் செய்து கோயில்கள், 
                                        சில 
                                        திருமணவைபவங்கள், இலக்கிய கூட்டங்கள், 
                                        வணிக நிலையங்கள் என பல நிகழ்வுகளில் 
                                        பங்குபற்றி வருகிறேன். இங்கு வந்து 
                                        கிடைத்த 
                                        இந்த வசதிகளால் நான் என் மிகப் பெரிய 
                                        கனவான, பல்கலைக் கழகக் கல்வியைக் கூடத் 
                                        தொடர முடிந்ததென்றால் பாருங்களேன்.
                                        என்னை நோய்வாட்டாதவிடத்து, என்னால் தொடரக் 
                                        கூடியதாயிருந்தால் நான் விருப்பப்பட்ட 
                                        இடத்துக்கு நான் பயணஞ் செய்கிறேன். இந்த
                                       
                                        நாட்டுக்கு வந்ததால் பல இலக்கியவாதிகளின் 
                                        அறிமுகமும் நட்பும் எனக்குக் 
                                        கிடைத்திருக்கிறது. நானும் 
                                        இலக்கியத்துறையில் 
                                        முன்னேறியிருக்கிறேன்.
 
 நவஜோதி: உங்களது மற்ஸ் கோணர் என்ற வானொலி 
                                        நிகழ்ச்சியை லண்டன் தமிழ் வானொலியில் 
                                        தயாரித்து வழங்கி வருகிறீர்கள். அது 
                                        எப்படி சாத்தியமாகியது?
 
 உதயகுமாரி: இங்கிலாந்து நாட்டில் முதன் 
                                        முதலில் ஆரம்பித்த தமிழ் வானொலி சன்ரைஸ் 
                                        வானொலி. இந்த வானொலியின் ஒரு நீட்சி 
                                        தான் இலண்டன் தமிழ் வானொலி. இந்த 
                                        வானொலியில் மாலை நேரத்தில் இடம்பெறும் 
                                        நிகழ்வு தான் மாலைத் தென்றல்.
 
 பிரதி திங்கட் கிழமை தோறும் ஐக்கி 
                                        இராச்சிய நேரப்படி மாலை ஐந்து மணி முதல் 
                                        ஆறு மணி வரையுள்ள பொழுதுகளில் 
                                        ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 
                                        கணிதபாடம் சார்ந்த கேள்விகளை நான் 
                                        தொடுப்பேன். பதினொரு வயதுக்கு உட்பட்டோர், 
                                        மேற்பட்டோர் 
                                        என வினாக்கள் கொடுக்கப்படும். அப்போது 
                                        உலகம் பூராவுமிருந்து நேயர்கள தங்கள் 
                                        பதிலை தொலைத்தொடர்பு கொண்டு உடனே 
                                        தெரிவிப்பார்கள். எல்லாப் பதில்களையும் 
                                        உள்வாங்குவோம்.
 
 முக்கியமாக ஐரோப்பியக் குழந்தைகள் 
                                        கணிதத்தை தமிழில் பயில்வதும் அதற்கு 
                                        விடையளிக்கும் பாங்கும் மிக ஆச்சரியமும் 
                                        எனக்கு 
                                        மிக்க மகிழ்வையும் தருவது. இப்படியாக 
                                        பதில் அளிப்பு நிறைவு பெற்றதும் புள்ளிகள் 
                                        வழங்குவதோடு விடைகளையும் அதன் 
                                        படிமுறைகளையும் விளக்கம் கொடுப்பேன். இந்த 
                                        நிகழ்ச்சியானது எனக்கு மிகுந்த மன 
                                        நிறைவைத் தருகிறது.
 
 நான் தனியார் நிறுவனத்தை யாழ்ப்பணம், 
                                        அரியாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக 
                                        நடாத்தியவள். நேருக்கு நேராக 
                                        மாணவர்களுக்கு
                                        படிப்பித்தல் என்;;பது ஒரு வித அனுபவம். 
                                        அவர்களுக்குப் புரிகிறதா என அவர்கள் முகமே 
                                        காட்டிக் கொள்ளும். இந்த வானொலி நிகழ்ச்சி
                                        
                                        கூட பல சிறார்களுக்கு உதவியாக அமைவதை 
                                        அவர்கள் அளிக்கும் பதில்களின் 
                                        தரத்திலிருந்தும், அவர்கள் 
                                        மடல்களிலிருந்தும் அறியும் 
                                        போது உள்ளம் பூரிக்கிறது.
 
 நாம் கற்ற கல்வியானது மற்றவர்களுக்கு 
                                        அதுவும் பலருக்கு ஒரே நேரத்தில் 
                                        சென்றடைகிறதே என்று நினைக்கும் போது 
                                        மகிழ்ச்சி தான். 
                                        நான் வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் 
                                        கணிதம் பயிற்றுவிக்க இந்த நிகழ்ச்சி 
                                        உதவுவது இனிமையே. திரு நடாமோகன் தந்த 
                                        ஆர்வத்துக்கு அவருக்கு எனது நன்றிகள். ஒரு 
                                        இனிய செய்தி என்னவென்றால் ‘வல்லமை தாராயோ’ 
                                        என்றவோர் நிகழ்ச்சியையும் நான் 
                                        நடாத்தவுள்ளேன்.
 
 நவஜோதி: பல்கலைக்கழக வாழ்வை எப்படிப் 
                                        பார்க்கிறீர்கள்?
 
 உதயகுமாரி: தொலைந்த ஆரோக்கியத்தால் நான் 
                                        என் உயர்தரக்கல்வியை மற்றவர்களைப்போல் 
                                        கற்க வேண்டிய வயதில் கற்கக் 
                                        கிடைக்கவில்லை. அதனால் நான் பட்ட மனக்கவலை 
                                        எழுத்தில் வடிக்க முடியாது. வளர்த்து வந்த 
                                        வியாதியால் நான் சிறிது சிறிதாக 
                                        நடக்க முடியாமல் வீட்டில் 
                                        முடக்கப்பட்டேன். சிலவருடங்களில் தனியார் 
                                        கல்வி நிறுவனம் நடாத்த முற்பட்டேன். 
                                        என்றாலும் படிக்க 
                                        வேண்டும் என்ற தாகம் என்னுள்ளே இருந்து 
                                        கொண்டே தான் இருந்தது.
 
 நானாக ஆங்கிலம் படித்தேன். தைக்கவும் 
                                        பழகியது நானாகவே தான். சோதிடம் கூட 
                                        நூல்கள் உதவிகொண்டு கற்றேன். கண்டது 
                                        கற்கப்
                                        பண்டிதனாவான் என்பது மாதிரி நான் 
                                        படிப்பிலே ஆர்வம் கொண்டவளாக, தேடல் 
                                        கொண்டவளாக இருந்த எனக்கு காலப்போக்கில் 
                                        96ம் 
                                        ஆண்டு இடப்பெயர்வால் கொழும்பு வந்த 
                                        காலங்களில் கணனி பயிலும் வாய்ப்புக் 
                                        கிட்டியது.
 
 உயர் கல்வி கற்க முடியவில்லையே என்ற எனது 
                                        ஆழ்மனக்கவலையைத் தீர்த்தது எனது 
                                        பல்கலைக்கழக நுழைவு. என் ஆழ்மனதில் 
                                        ஊன்றிப் போயிருந்த துயரிலிருந்து நான் 
                                        மீண்டதோடு என் வாழ்விலும் 
                                        அர்த்தமிருக்கிறது என்ற உணர்வை அது 
                                        எனக்குத் தந்ததோடு என் 
                                        வாழ்விலும் ஓர் பிடிப்பை இது எனக்குத் 
                                        தந்துள்ளது. அது மட்டுமல்ல பலர் மத்தியில் 
                                        என்னைப் பற்றிய உயர்வான எண்ணத்தைப் பலர்
                                       
                                        மனதில் தந்திருப்பதைப் பலதடவை உணர்ந்து 
                                        இருக்கிறேன்.
 
 நவஜோதி: இந்த நாடுகளில் வழங்கப்படும் 
                                        சேவைகள் திருப்திகரமானதாக இருக்கிறதா?
 
 உதயகுமாரி: இங்கு பலவசதிகள் இருக்கின்றன. 
                                        அவற்றை முழுமையாக அனுபவிப்பதற்கும் பல 
                                        சிரமங்களை எதிர் நோக்க 
                                        வேண்டியிருந்தது. அதைத்தான் ‘எழுத எழுத’ 
                                        என்ற புத்தகத்தில் எழுதியுள்ளேன். ஆனால் 
                                        இந்த நாட்டுக்கு வந்து வாழும் இந்த 
                                        வாய்ப்பு 
                                        என் முன்னேற்றத்துக்கு மிகவும் 
                                        கைகொடுத்திருக்கிறது என்பது மறுக்க 
                                        முடியாத உண்மை. சேவைகள் திருப்திகரமாக 
                                        இருப்பதற்கும் 
                                        நானும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது.
 
 பணமோ, சட்டமோ எல்லாவற்றையும் செய்து 
                                        விடமுடியாது. அதற்கு மேல் 
                                        மனிதாபிமானத்துடன் செயற்படும் சேவகர்களைத்
                                        
                                        தெரிந்தெடுப்பதோ, தக்க வைப்பதோ எம் 
                                        கையிலிருக்கிறது. எம் தேவைகளை மற்றவர்களை 
                                        இயக்கிப் பெற்று வாழ்ந்து காரியங்களை 
                                        வெற்றிகரமாக நகர்த்துவது இலேசானதல்ல. 
                                        உதாரணத்துக்கு உங்களுக்கு விரும்பிய 
                                        பொருளை நீங்களே சென்று வாங்குவதில் உள்ள
                                        
                                        சுகம் மற்றவர்களை அனுப்பி வாங்குவதில் 
                                        இருக்காதே! எவ்வளவு தான் உதவினாலும் 
                                        மற்றவர்களைத் திருப்திப் படுத்துவது 
                                        மிகக்கடினமே!
 
 பலவிதமான சேவைகள் இங்கு உள்ளன. அவற்றை 
                                        நான் அறிவதோடு இலண்டன் தமிழ் வானொலியில் 
                                        சில சந்தர்ப்பங்களில் 
                                        மற்றவர்களுக்கு அறிவிக்கவும் செய்கிறேன். 
                                        நான் அறியாத சேவைகளும் இருக்கலாம். இந்த 
                                        நாட்டைப் பொறுத்தளவில் நாம் முயற்சி 
                                        எடுத்தால் தான் முன்னேறலாம்.
 
 நவஜோதி: உங்கள் தொழில் துறை பற்றிக் 
                                        கூறுங்களேன்.
 
 உதயகுமாரி: நான் கற்ற கல்விசார் துறையில் 
                                        விரும்பியது போல் எனது வீட்டுக்கு 
                                        அண்மையில் வேலை கிட்டாததால் படிப்பித்தல்
 துறையில் நான் இருக்கிறேன். இங்கு தனி 
                                        ஒருவராக தனியார் நிறுவனம் நடாத்துவது 
                                        என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஒன்றரை
                                        
                                        வருடத்தின் பின்பு உணர்ந்திருக்கிறேன். 
                                        என்றாலும் என் முயற்சியைக் கைவிடவில்லை. 
                                        சிலருக்கு இலவசமாகக் கணனி
 பயிற்றுவிக்கிறேன்.
 
 அத்துடன் ஓர் தொண்டர் நிறுவனமொன்றில் 
                                        ஆலோசகராகப் பணியாற்றுகிறேன். பலருக்கும் 
                                        வீடின்மை, இந்த நாட்டின் விதிமுறைகள், 
                                        அதை எப்படி அணுகுவது என்பது போன்ற பல 
                                        பிரச்சனைகள் உண்டு. வயது போன, வலது 
                                        குறைந்த பலருக்கும் உதவும் இந்தத் 
                                        தொண்டர் நிறுவனம்.
 
 நவஜோதி: உங்கள் வாழ்வின் கனவு என்ன நான் 
                                        அறியலாமா?
 
 உதயகுமாரி: கனவு காணுவது சுலபம். அதைச் 
                                        செயற்படுத்துவது தான் வாழ்வின் சிறப்பு. 
                                        சொல்வதை செய்யவேண்டும் என்ற கருத்தில் 
                                        பிடிப்புள்ளவள் நான். ஆகவே என் கனவுகளை 
                                        வெளியில் சொல்ல நான் பிரியப்படவில்லை. 
                                        மன்னிக்கவும்.
 
 நவஜோதி: வேறு என்னவென்ன முயற்சிகள் 
                                        எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
 
 உதயகுமாரி: தற்போது எனது கடும்முயற்சியால் 
                                        , எனது ஆறரை வருட கனவு நிறைவேறிய 
                                        திருப்தியில் நானுள்ளேன். எனது சக்கர 
                                        நாற்காலியிலேயே நானாக மகிழுந்தை திறந்து 
                                        உள்ளே சென்று என் இருக்கையை மகிழுந்தில் 
                                        பொருத்திய பின் பலம் குன்றிய எனது 
                                        கைகளால் நானாகவே மகிழுந்தை செலுத்தும் 
                                        விதமாக வடிவமைக்கப்பட்ட மகிழுந்தை நவம்பர் 
                                        மாதம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் 
                                        கிட்டி இருக்கின்றது. என்கையை உயர்த்திக் 
                                        கூட மகிழுந்தின் கதவைத் திறக்கும் வலு 
                                        என்கைகளுக்கு இல்லாதபோதும் விரல்கள் மூலம்
                                        
                                        சாவியுடன் இணைந்துள்ள, தொலைவிலிருந்தே 
                                        இயக்கவல்ல அழுத்தியின் (remote control) மூலம் மகிழுந்தின் கதவு 
                                        திறக்கப்பட்டு நானே ஓட்டும் விதமாக 
                                        பொருத்தப்பெற்ற மகிழுந்து (car)  எனதாகி விட்டது. 
                                        அதைச் செலுத்தப் பயிற்சி பெற்றுக் கொண்டு
 இருக்கின்றேன்.
 
 அதைத் தனித்து நானாகச் செலுத்தும் வல்லமை 
                                        எனக்குக் கிட்டுமாயின் பல சிரமங்களில் 
                                        இருந்து நான் தப்பிக்கொள்ளலாம். 
                                        முக்கியமாக 
                                        குளிர்காலங்களில் பொதுப் போக்குவரத்து 
                                        சேவைகளைப் பயன்படுத்துவதென்பது மிகச் 
                                        சிக்கலானதும் நேரத்தை 
                                        விரயப்படுத்துவதுமானதும் 
                                        கூட. இந்த உடல் நிலையில் என்னாலும் நான் 
                                        நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் 
                                        மற்றவர்களைப் போல் போக முடியுமாக 
                                        இருந்தால் அதுவும் எனது முன்னேற்றப் 
                                        பாதையை மேலும் விரிவுபடுத்தும் தானே.
 
 நவஜோதி: நீங்கள் ஏதாவது வைத்தியத்தில் 
                                        அக்கறை காட்டுகிறீர்களா?
 
 உதயகுமாரி: நான் என்வாழ்நாளில் கைக்கொண்ட 
                                        வைத்தியங்கள் பல. அவை என்னை நோயிலிருந்து 
                                        விடுவிக்கவில்லை தான். 
                                        ஆனால் நாளுக்கு நாள் வளரும் என் நோயைக் 
                                        கட்டுப்படுத்தி இருக்கின்றது. என் 
                                        தந்தையார் எனக்கெனச் செலவு செய்த பணத்தின்
                                        
                                        மதிப்பீடு பல மாடி வீடுகளை நிர்மாணிக்கும் 
                                        செலவுக்கு நிகரானது. யாழ் பண்ணையில் 
                                        மலையாள வைத்தியம் முதல், அக்குபங்சர் 
                                        எனப்படுகின்ற சீனவைத்தியம், இந்தியாவில் 
                                        வேலூர் மருத்துவமனை எனப் பலவிதமான 
                                        வைத்தியங்களுக்கு ஆளானவள் தான் நான்.
 
 என்தாயார் தன் வாழ்வின் பெரும்பகுதியை 
                                        எனக்கு வைத்தியம் செய்வதிலும் அதற்கான 
                                        பராமரிப்புகளிலும் செலவு செய்து விட்டார்.
                                       
                                        அண்மையிலும் கேரளாவிலுள்ள கோட்டக்கல் 
                                        வைத்தியசாலைக்கு வைத்தியம் காரணமாக சென்று 
                                        செப்ரெம்பர் 09 இல் போய் வந்தேன். 
                                        இந்த வைத்தியம் நான் எதிர்பார்த்தபடி 
                                        உடலிலுள்ள இறுக்கத்தைத் தளர்த்தி 
                                        இருக்கின்றது. அதேவேளை உடலில் ஒரு 
                                        புத்துணர்வு 
                                        பெற்றது போல் உணர்கிறேன்.
 
 
 நவஜோதி: ’வாழும் கலை’ யில் நீங்கள் 
                                        உறுப்பினராக இருப்பது பற்றி உங்கள் 
                                        அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளப் 
                                        பிரியப் 
                                        படுவீரகளா?
 
 இந்த அனுபவம் மிகவும் அற்புதமானது. எனது 
                                        இந்திய நண்பர் என் உடல்நிலைகுறித்து மிக 
                                        வருந்தி, குருஐp ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 
                                        அவர்களின் வழிகாட்டலின் பேரிலே உலகின் 
                                        பலபாகங்களிலும் புகட்டப்படுகின்ற 
                                        'வாழும்கலை’ பற்றித் தந்த ஆலோசனையின் 
                                        பேரில் அது 
                                        பற்றிப் பயிற்சி பெற்று சுவாசப்பயிற்சி 
                                        வகுப்புகளை மேற்கொண்டேன். நாம் 
                                        சுவாசிக்கிறோம் ஆகிலும் எமக்குத் தேவையான 
                                        சுவாசத்தை 
                                        சரியாக நாம் இழுத்துவிடுவதுமில்லை, அதனால் 
                                        எமக்குக் கிடைக்க வேண்டிய சக்தியை 
                                        சரியாகப் பெறுவதுமில்லை என்பது 
                                        புரிகின்றது. 
                                        இப்பயிற்சி எனக்கு மிகுந்த நிறைவை 
                                        உடலளவிலும் மனதளவிலும் தந்திருக்கின்றது. 
                                        அது மட்டுமல்ல நான் செப்ரெம்பர் 09 இல்
                                      
                                        இந்தியாவில் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் 
                                        அவரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் 
                                        எனக்குக் கிட்டியது. அது மிகப்பெரிய 
                                        பாக்கியம் 
                                        என்றே நான் கருதுகின்றேன்.
 
 navajothybaylon@hotmail.co.uk
 |  
| 
 |  
|  |  
|   |  
|  ©© 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |