பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
மலை மொழி : ஹெரால்ட் பின்ட்டர்
அறிமுகமும் மொழியாக்கமும் : யமுனா ராஜேந்திரன்
‘எனது
படைப்புக்களையும் அரசியலையும் பிரிக்க முடியாது’ எனக் குறிப்பிடும் ஹெரால்ட்
பின்ட்டரின் நாட்கங்களில் ஆரம்ப நாட்களில் பாலுறவு அதிகாரத்திற்கு எதிரான குரல்
ஒலித்ததெனவும், பிற்பாடான அவரது நாடகங்களில் அரசியல் அதிகாரத்தின் வக்கிரத்திற்கு
எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது எனவும் குறிப்பிடுகிறார் அவரது வாழக்கை
வரலாற்றாசிரியரும் பின்டரின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் பிலிங்டன். முன்னாள்
நோபல் பரிசாளரான சாமுவேல் பெக்கட்டின் ஆதர்சத்தில் தான் நாடகம் எழுதப் புகுந்ததாகக்
குறிப்பிடுகிறார் ஹெரால்ட் பின்ட்டர். பின்ட்டரது பிரவேசம் பிரித்தானிய நாடகமேடையை
என்றென்றும் மாற்றியமைத்தது என எழுதுகிறார் மைக்கேல் பிலிங்டன். பின்ட்டரது பாணி,
‘பின்டர்ஸ்க்கு’ எனும் ஒரு சொல்லையே ஆங்கில அகராதிக்கு வழங்கியிருக்கிறது.
தத்தமது பிடிக்குள் எதிராளியை வைத்திருக்கும் இரண்டு பாத்திரங்கள். ஒருவர் பேசும்
போது பிறரைப் பேச இயலாது மெளனத்திற்குத் தள்ளும் கொடுமையான உளவியல் தன்மை வாய்ந்;த
வசனங்கள். பிற பாத்திரத்தின் மெளனத்தில் விளையும், ‘மெளன இடைவெளி’யில் பரவும்
அர்த்தங்கள் என்பதாக விரிவதுதான் பின்ட்டரின் நாடகபாணி.
அரசியல் ரீதியில் பாசிசத்திற்கும் பாலுறவுக்கும் இருக்கும் உறவை சதா துருவித்
தீர்ப்பதாகவே பின்ட்டரது பெரும்பாலான நாடகங்கள் அமைகின்றன என்கிறார் மைக்கேல்
பிலிங்டன். வெளியெனும் அளவில் ஒரு தனித்த அறையும் ஒவ்வொரு தனிமனிதனும் சதா
பதட்டத்திலும் பயத்திலும் பாதுகாப்பின்மையிலும்தான் விட்டுவைக்கப்பட்டிருப்பதாகக்
கருதுகிறார் பின்ட்டர். இரண்டு வெளிகளுமே பயங்கரத்தையும் பிறமனிதரின்
அத்துமீறலுக்கான சாத்தியத்தையும் கொண்டிருப்பதாகப் பின்ட்டர் கருதுகிறார்.
அறைக்குள் நுழையும் மனிதனும் இன்னொரு மனிதனின் அகத்துள் நுழையும் -மொழிவழியிலோ
அல்லது சிந்தனை வகையிலோ நுழையும் மனிதன் - எப்போதுமே வன்முறையையே கொண்டு வருகிறான்
என்கிறார் பின்ட்டர். ஆண் பெண் பாலுறவு அதிகாரச் சமன்பாடு குறித்த அவரது முன்னைய
நாடகங்களிலும், அரசியல் வன்முறையும் மேலாதிக்கமும் குறித்த அவரது பின்னைய
நாடகங்களிலும் ‘அறை எனும் வெளி’ ஒரு முக்கியமான உயிரியாக இடம் பெறுகிறது.
வன்முறையின் சாட்சியமாக, அத்துமீறலின் சாட்சியமாக அதற்கு எதிரான ஒடுக்கப்படும்
மனிதரின் மெளன நம்பிக்கையின் சாட்சியமாக ‘அறை’ என்பது இருக்கிறது. பின்ட்டரது ‘சிறை
எனும் அறை’ சதா விளையும் பயங்கரத்தை, பார்வையாளரின் சிந்தைக்குள் ஆழ்மனதினில்
இருத்தி விடுகிறது. சுற்றிலும் இருக்கும் அரசு, அமைப்புகள் போன்ற பயங்கரத்தினுள்
பார்வையாளன் இதனால் ஆழ்த்தப்பட்டு விடுகிறான்.
மனிதர்கள்
மீதான அவமானப்படுத்தலுக்கும் ஆதிக்கத்திற்கும் பாலுறவு அதிகாரம் ஓரு முக்கியமான
காரணியாக பின்ட்டரது நாடகங்களில் இயங்குகிறது. பாசிசத்தை நேரடியாகவே சில நாடகங்கள்
கதைக் கருவாக எடுத்துக் கொண்ட போதிலும், சமகால அரசியலினதும் பாசிசத் தன்மைகளை,
குறிப்பாகப் பிசாசு எனப் பின்ட்டர் குறிப்பிடும் அமெரிக்க மேலான்மை அரசியல்
அமைப்பிலும், தேசிய அரசு பிற சிறுபான்மையினர் மீது திணிக்கும் அதிகார அமைப்பிலும்
காண்கிறார் பின்ட்டர். பின்ட்டரது நாடகங்களில் அதிகமும் இடம்பெறும் பாலுறவு
வசவுகளையும் மட்டுமிறீய சொற்களின் வன்முறையையும், சொற்களின் இடைவெளியில் மெளனம்
அழைக்கும் உடலின் அத்துமீறலையும் இந்தப் பிண்னணியில் ஒருவர் சரியாகப் புரிந்து
கொள்ள முடியும்.
மொழியாக்கம் பெற்றிருக்கும் அவரது ‘மலை மொழி’ நாடகம், முதன்முதலாக 1988 ஆம் ஆண்டு
இங்கிலாந்தில் புத்தக உருவில் வெளியானது. 1989 ஆம் ஆண்டு அதனது முதல்
மேடையேற்றத்தினை இடதுசாரி குர்திஸ் விடுதலை ஆதரவாளர்கள் நிகழ்த்தினர். பின்ட்டரே
இந்த நாடகத்தின் முதல் மேடையேற்றத்தை நெறிப்படுத்தினார். நாடகத்தின் ஒத்திகை
நடந்துகொண்டிருந்த மண்டபத்தைச் சுற்றிலும் பிரித்தானிய அதிரடிப் படையினர் வட்டமிட்ட
நிலையில், மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமிட்ட நிலையில் நாடகத்தின் ஒத்திகை நடந்ததாக
அன்று அதனது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை பிரித்தானிய நாடக வட்டாரங்களில் ஒரு
பிரசித்தமான செய்தி.
‘மலை
மொழி’ எழுதப்பட்ட காலத்தில் பின்ட்டர் குர்திஸ் மக்கள் விடுதலைக்காக மனித உரிமை
அரங்குகளில் உரத்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். துருக்கியில் குர்திஸ்
மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாகச் சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லைலா
ஜானா எனும் இளம் பெண் பாராளுமன்றத்தில் தனது தாய்மொழியான குர்திஸ் மொழியில்
உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம் அப்போது
துருக்கியில் குர்திஸ் மொழி தடை செய்யப்பட்டிருந்ததுதான். குர்திஸ் பிரதேசங்களில்
கூட குர்திஸ் மக்கள் தமது சொந்த மொழியில் பேசமுடியாத ஒரு சூழல் அன்று நிலவியது.
‘மலை மொழி’ நாடகம் உடனடியாகக் குர்திஸ் மக்களின் ஒடுக்குமுறை சார்ந்ததாகத்
தோன்றினாலும், நாடகம் எழுப்பும் அனுபவம் இந்த ஒடுக்குமுறையை இனம், மதம், சாதி என
நிகழும் ஒடுக்குமுறையினோடும், தமது நம்பிக்கைகள், கலாச்சாரம் சார்ந்த
ஒடுக்குமுறையினோடும் வைத்து ஒருவர் அனுபவம் கொள்ள முடியும். அடையாளமற்ற நாட்டிலும்,
குறிப்பான இடமற்ற சிறையிலும், குறிப்பிட்ட காலமற்ற காலத்திலும் நிகழும் இந்த
நாடகத்தினை ஒருவர் தத்தமது பிரதேசத்தின் குறிப்பிட்ட ஒடுக்குமுறை சார்ந்த அனுபவமாக
உணர்ந்துகொள்ள முடியும். இந்த நாடகம் தற்போது குண்டானமோ சிறையிலும் நடந்து
கொண்டிருக்கும் நாடகம்தான். எந்தச் சிறுபான்மையினச் சமூகமும் ஒரு
மத்தியத்துவப்படுத்தப்பட்ட தி;ட்டமுள்ள நாட்டிலும்; எதிர்கொள்ளும் அனுபவம்தான்
பின்ட்டரது மலைமொழி எழுப்பும் அனுபவம். இந்த வகையிலேயே பின்ட்டரது மலைமொழி நாடகம்
பிரபஞ்சத்தன்மையை எய்துகிறது.
மலை மொழி நாடகத்தை அமெரிக்காவில் மீள நிகழ்த்திய இயக்குனரான கேரி பெர்லோபின்
அனுபவத்தை இங்கு சுட்டுவது பின்ட்டரது நாடகம் மற்ற பிரதேசங்களுக்குப்
பெயர்க்கப்படும் போது எதிர்கொள்ளும் சிக்கலை விளக்குவதற்கான ஒரு சான்றாக அமையும்.
பின்ட்டரது மொழி பிரித்தானிய வயமான ஆங்கில மொழி. ஆங்கில மொழிக்கே உரிய பல
விளையாட்டுக்களை, சாதுரியங்களை பின்ட்டர் தமது நாடக மொழியில் பிரயோகிக்கிறார்.
இவ்வகையில் நாடகம் என்பது பிற பிரதேசவயமாக்கப்படும்போதோ அல்லது மொழியில்
சொல்லப்படும்போதோ அந்தந்த நாடுகளுக்கு ஒப்ப கால இடக் குழப்பங்களையும், அர்த்த
மயக்கங்களையும் உருவாக்கவல்லது. குறிப்பாக பிரதேச ரீதியிலான மொழி ஒடுக்குமுறை
இல்லாத அமெரிக்க சமூகத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தைப் பேசும் நாடகம் எந்த விதமான
உணர்வையும் அர்த்தத்தையும் பார்வையாளரிடம் எழுப்பாது போகலாம். ஆனால் ஒரு
மையப்படுத்தப்பட்ட அதிகாரம் எனும் அளவில் பிறமக்களின் மீதான ஆதிக்கத்தை
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மொழியை மையான அதிகாரமாக வைத்து நிகழ்த்தி
வருகின்றன எனும் பொது உண்மையைக் குறிப்பிட்ட கால இடத்தில் நிகழாத இந்த நாடகம் நிறுவ
முடியும்.
ஆகவே நாடகத்தின் மொழியை அமெரிக்க வயப்படுத்துதல் எனும் நிலைப்பாட்டைப் பின்ட்டர்
ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் கேரி பெர்லோப். ஆனால் மொழிசார்ந்த ஒடுக்குமுறை
நேரடியாக நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு சமூகத்திற்கு, கால இடமற்ற வகையில் நிகழும் மலை
மொழி நாடகம் புரிதலில் எந்தச் சங்கடத்தையும் உருவாக்குவதில்லை.காலச்சாரத்தில்
ஓழுக்கவாத மதிப்பீடுகளையும் படைப்பில் சுத்தத்தையும் வலியுறுத்தும்
மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பின்ட்டர் பாரதூரமான சங்கடத்தையே உருவாக்குகிறார்.
பின்ட்டரது மொழி நிறையப் பாலுறவுக் கொச்சைகளையும் பாலுறவு நிந்தனைகளையும்
வன்முறையையும் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உடலின் மீதான அதிகாரம் செலுத்துவதில்
பாலுறவு நிந்தனைகள் முக்கியமான பீதியூட்டும் பாத்திரம் வகிக்கிறது என்பது
பின்ட்டரது நிலைபாடு.
மனிதரெனும் அளவில் பாலுறவு நிந்தனைகள் மனித ஆன்மாவின் பெருமிதத்தை முற்றிலும்
அழித்துவிடுகிறது என்கிறார் பின்ட்டர். பின்ட்டரது வன்முறையும் பாலுறவுக்
கொச்சையும் அடர்ந்த மொழியை நிராகரித்துவிட்டு அவரை மொழியாக்கம் செய்வது என்பது
சாத்தியமில்லை. இயன்ற வரையில் மொழிவழியிலான வன்முறையை இந்த மொழியாக்கத்தில்
கடைப்பிடித்திருக்கிறேன். சில இடங்களில் இங்க்¢லாந்திற்கே உரியதான சில பிரதேச
வழக்குகளைப் பின்ட்டர் பாவிக்கிறார். அதற்குச் சமாந்தரமான பிரதேச வழக்குகள் ஒரு
மொழியில் அகப்படவில்லையெனில் பிரதி எழுப்பவிரும்பும் அர்த்தங்களை மட்டுமே பற்றிப்
பிடிப்பது சாத்தியம். ‘லேடி மக்டக்’ என்ற இலண்டன் ஹக்னி பிரதேச மொழிவழக்கு
அப்படியான சங்கடத்தை எனக்குத் தந்தது. ‘திமிர்பிடித்த காமாந்தகாரச் சீமாட்டி’ எனவே
அதனை என்னால் தமிழில் தரமுடிந்தது. ‘பேபிசாம்’ எனும் ஒரு வகை மதுவை பெண்ணிலைவாதம்
அரும்பிய பருவத்தில், 1953 ஆம் ஆண்டு பொதுமது விடுதிகளில் பெண்களைக் கவரவென
இங்கிலாந்தில் விநியோகித்தனர். பெண்தன்மை கொண்ட மது என இதனைச் சொல்வதுமுண்டு.
‘பெண்குடிசரக்கு’ என்ற நக்கலுடனேயே தமிழில் இதனை என்னால் கொண்டு வரமுடிந்தது.
விவாதங்களின் அடிப்படையில் நாடகத்தின் செழுமையான பிரதிகளை இதனூடேதான் எட்டமுடியும்
என நம்புகிறேன். பின்ட்டரது நாடகமொழி மொழிபெயர்ப்பவர்க்கு உண்மையில் ஒரு மிகப்
பெரிய சவால். ஆனால் பிரபஞ்சமயமான துயரத்தையும் அழிவிற்கெதிரான நம்பிக்கையின்
துளிர்ப்பையும் உணர்ந்துகொள்ளத் திறந்தமனம் மட்டுமே போதும்.
நாடக நுட்பம் சார்ந்து ஒரு விளக்கம் : மழை மொழி நாடகத்தின் காட்சி இரண்டிலும,
காட்சி மூன்றிலும் இருளில் கேட்கும் ‘மேலெழும் குரல்கள்’ முன் பதிவு செய்யப்பட்டு
இருளில் ஒலிப்பனவாகும். அந்தக் குரல்கள் காட்சியின் அந்தச் சந்தர்ப்பத்தில்
பாத்திரங்கள் (இளம்பெண்- முக்காடிடப்பட்ட மனிதன், முதிய மனுஷி - கைதி) பேசும்
உரையாடல்கள் அல்ல. சிறையதிகாரிகளின் சிந்தைக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட மனிதர்களின்
அந்தராத்மாக்கள் உரையாடுவதாகவே அந்தப் பகுதிகள் அமைகின்றன. அந்த உரையாடலின் கவிதைத்
தன்மையும் விடுதலைபெற்ற தன்னம்பிக்கை அளிக்கும் தன்மையும், நிகழ்ந்து
கொண்டிருக்கும் வன்முறைக்கு, பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வன்முறைக்கு
முற்றிலும் அன்னியமானது, ஒடுக்குமுறையின் கீழ்வாழும் மனிதரின் நம்பிக்கையை
வெளியிடுவது. நான்கு காட்சிகளே கொண்ட சின்னஞ்சிறு நாடகமான மலை மொழியின் விசேச
குணங்களில் இதுவும் ஒன்று.
பின்ட்டரது பெரும்பாலான நாடகங்கள் சமீப எதிர்காலத்தில் நிகழ்பவை. நிகழ்காலத்தின்
மீது கடந்தகாலத்தின் சுமை குறித்துப் பேசுபவை. அவைகளின் நிகழிடம் ராணுவ
ஒடுக்குமுறைக்கு எதிரான தென் அமெரிக்க நாடாகவும் இருக்கலாம் அல்லது குர்திஸ்
மலைகளாகவும் இருக்கலாம் அல்லது குன்டனாமோ சிறைமுகாமாகவும் அல்லது ஈழத்தின்
நிலப்பரப்பு ஒன்றாகவும் இருக்கலாம். பின்ட்டரது நாடகங்கள்; எப்போதுமே மொழி
எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் தன்மை படைத்தவை என்பதற்கு ‘மலைமொழி’ நாடகமும் ஒரு
சான்றாக இருக்கிறது.
----------------------------------------------------
மலை மொழி : நாடகம்
----------------------------------------------------
பாத்திரங்கள்
இளம்பெண்
முதிய மனுஷி
சிறை மேலதிகாரி
இடைநிலைக் காவலதிகாரி (ஸார்ஜன்ட்)
சிறைக் காவலன்
சிறைக் கைதி
முக்காடிடப்பட்ட மனிதன்
இரண்டாம் சிறைக் காவலன்
----------------
காட்சி ஒன்று
சிறைச் சுவர்
----------------
வரிசையாகப் பெண்கள். ஒரு முதிய மனுஷி. அவள் தனது கைகளை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.
அவளது காலடியில் ஒரு கூடை. ஒரு இளம்பெண். முதிய மனுஷியின் தோளைச் சுற்றியபடி இளம்
பெண் அவளது கைகளைப் படரவிட்டிருக்கிறாள்.
இடைநிலை அதிகாரி காட்சியில் நுழைகிறான். அவனைத் தொடர்ந்து சிறை மேலதிகாரியும்
வருகிறான். இடைநிலையதிகாரி இளம்பெண்னை நோக்கிக் கைநீட்டிக் கேட்கிறான்.
-பெயரென்ன
-எங்கள் பெயரை நாங்கள் கொடுத்துவிட்டோம்
-பெயரென்ன?
-எங்கள் பெயரை நாங்கள் கொடுத்துவிட்டோம்.
-பெயரென்ன?
சிறை மேலதிகாரி இடைநிலையதிகாரியைப் பார்த்துச் கத்துகிறான்.
-இந்த மசிரை நிறுத்து
மேல்நிலை அதிகாரி இளம்பெண்ணை நோக்கிக் கேட்கிறார்
-ஏதேனும் முறைப்பாடு உண்டா?
-இந்த மனுஷி கடிபட்டிருக்கிறாள்.
-யார்?
மெளன இடைவெளி
-யார்? யார் கடிபட்டிருக்கிறார்?
-இதோ இவர்கள். இவர்கள் கடிபட்டிருக்கிறார்கள். இவர்களது கை கிழிபட்டிருக்கிறது.
பாருங்கள். இவர்களது கைதான் கடிபட்டிருக்கிறது. இரத்தத்தைப் பாருங்கள்.
இடைநிலையதிகாரி இளம்பெண்ணை நோக்கிக் கேட்கிறான்.
-உனது பெயரென்ன?
மேலதிகாரி : போதும் நிறுத்து
மேலதிகாரி முதிய மனுஷியை நோக்கி நடக்கிறான்.
-உன்னுடைய கைக்கு என்ன ஆயிற்று? யாராவது உனது கையைக் கடித்துவிட்டார்களா?
முதிய மனுஷி மெதுவாகத் தனது கையை உயர்த்துகிறாள். சிறை மேலதிகாரி அதனைக் கூர்ந்து
பார்க்கிறான்.
-யார் இதனைச் செய்தது? யார் உன்னைக் கடித்தார்கள்?
இளம் பெண் : ஒரு டாபர் மென் பின்ச்சர் வேட்டை நாய்தான் கடித்தது.
-எது?
மெளனநிறுத்தம்
-எது?
மெளன நிறுத்தம்.
-ஸார்ஜன்ட்
இடைநிலையதிகாரியை சிறை மேலதிகாரி அழைக்கிறான். இடைநிலையதிகாரி ஒரு அடி முன்னால்
வருகிறான்.
-ஸார்.
-இந்தப் பெண்ணின் கையைப் பார். அவளது கட்டைவிரல் துண்டாகி விழப்போகிறது.
முதிய மனுஷியைப் பார்த்து : யார் இதனைச் செய்தது?
முதிய மனுஷி சிறைமேலதிகாரியை வெறித்துப்; பார்க்கிறாள்.
-யார் இதனைச் செய்தது?
இளம்பெண் : ஒரு பெரிய நாய்
சிறைமேலதிகாரி: அந்த நாயின் பெயரென்ன?
மெளன இடைவெளி
-அதனது பெயரென்ன?
மெளன இடைவெளி
-ஒவ்வொரு நாய்க்கும் பெயருண்டு. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அதற்கு அது பதில்
சொல்லும். அதற்கு அதனது பெற்றோர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அது தான் அதனது
பெயர். கடிப்பதற்கு முன்னால் அவைகள் தமது பெயரைச் சொல்லும். அதுதான் இயல்பான நியதி.
முதலில் பெயரைச் சொல்லும். அப்புறமாகக் கடிக்கும். அதனது பெயரென்ன? தனது பெயரைச்
சொல்லாமல் எங்களுடைய ஒரு நாய் இந்த முதிய பெண்ணைக் கடித்தது என்று நீ சொல்வாயானால்
அந்த நாயை நான் சுட்டுக் கொல்லத்தான் வேண்டும்!
மெளனம்
-இப்போது கூர்¨மாகக் கேள். ஸப்தமில்லாமல் கூர்மையாகக் கேள்.
-ஸார்ஜன்ட்
இடைநிலைதிகாரி : ஸார்?
-ஏதேனும் முறைப்பாடுகள் பதிந்திருக்கிறீர்களா?
இடைநிலையதிகாரி : ஏதேனும் முறைப்பாடு இருக்கிறதா? யாருக்கேனும் ஏதேனும் முறைப்பாடு
இருக்கிறதா?
இளம்பெண்: நாங்கள் ஒன்பது மணிக்கு இங்கே இருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டோம்.
இடைநிலையதிகாரி: நீ¢ங்கள் சொல்வது சரி. மெத்தச் சரி. இன்று காலை ஒன்பது மணி..
ரொம்பவும் சரி.
உனது முறைப்பாடு என்ன?
இளம் பெண்: நாங்கள் ஒன்பதுமணிக்கு இங்கே இருந்தோம். இப்போது ஐந்து மணி. எட்டு மணி
நேரங்களாக நாங்கள் இங்கே நின்றிருக்கிறோம். பனியில் நின்றிருக்கிறோம். உங்கள்
ஆட்கள் டாபர்மென் பின்ச்சர் வேட்டை நாய்களை எங்கள்மீது ஏவி எங்களைப்
பீதியிலாழ்த்துகிறார்கள். அதிலொன்று இந்த முதிய மனுஷியின் கையைக் கடித்திருக்கிறது.
சிறைமேலதிகாரி : அந்த நாயின் பெயரென்ன என்றுதான் நான் கேட்கிறேன்?
இளம்பெண் அவனைப் பார்க்கிறாள்.
இளம்பெண் : அதனது பெயர் எனக்குத் தெரியாது.
இடைநிலையயதிகாரி: உங்களது அனுமதியுடன் இதனைக் கேட்க விரும்பகிறேன் ஸார்.
சிறைமேலதிகாரி : கேளுங்கள்
இடைநிலையதிகாரி : உங்கள் கணவன்மார்கள், உங்கள் மகன்கள், உங்கள் தகப்பன்மார்கள்,
நீ¢;ங்கள் பார்க்கக் காத்துக் கிடக்கும் இந்த ஆண்கள் எல்லோரும் எமக்கு மலக்
கிடங்குகள். இவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள். இவர்கள் எல்லோருமே எமக்கு மலக்
கிடங்குகள்.
சிறைமேலதிகாரி இளம்பெண்ணை நோக்கி நெருங்கி வந்து சொல்கிறான்.
-இப்போது இதனைக் கேட்டுக்கொள். நீங்கள் மலை மனிதர்கள். நான் சொல்வது கேட்கிறதா?
உங்களது மொழி செத்துப்; போய்விட்டது. அது தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில்
உங்களது மலை மொழியைப் பேசுவதற்கு அனுமதி இல்லை. உங்களது ஆண்களுடன் உங்களது மொழியில்
நீங்கள் பேசமுடியாது. அதற்கு அனுமதியில்லை. உனக்குப் புரிகிறதா? நீ பேசமுடியாது.
உனது மொழி பேசுவது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நீ தலைநகரத்தின்
மொழியைத்தான் பேசலாம். இங்கு அனுமதிக்கப்பட்ட ஒரேயொரு மொழி அதுதான். இந்த இடத்தில்
உனது மலை மொழியைப் பேச நீ முயன்றால் நீ மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படலாம். இது
ராணுவச் சட்டம். இது தான் இங்கு சட்டம். உனது மொழி தடைசெய்யப் பட்டிருக்கிறது. உனது
மொழி செத்துப் போய்விட்டது. உனது மொழியைப் பேச யாரும் இங்கே உன்னை அனுமதிக்க
மாட்டார்கள். உனது மொழி என்பது இனி இல்லை. ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?
இளம்பெண் : நான் மலை மொழியைப் பேசவில்லை.
மெளனம்.
சிறைமேலதிகாரியும் இடைநிலையதிகாரியும் அந்தப் பெண்ணைச் சுற்றி நெருங்குகிறார்கள்.
இடைநிலையதிகாரி இளம்பெண்ணின் குண்டியைப் பிடித்துப் பிசைகிறான்.
இடைநிலையதிகாரி : என்ன மொழியை நீ பேசுவாய்? உனது மலக்குழியைத் திறந்து நீ என்ன
மொழியைப் பேசுவாய்?
சிறைமேலதிகாரி : ஸார்ஜன்ட் இந்தப் பெண்கள் இன்னமும் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
இடைநிலையதிகாரி: ஸார். ஆனால் இவர்கள் பாவம் செய்யாதவர்கள் என்று நீங்கள்
சொல்லவில்லை.
சிறைமேலதிகாரி: இல்லை. இல்லையில்லை. நான் அப்படிச் சொல்லவேயில்லை.
இடைநிலையதிகாரி: முழுக்க பாவம் (குண்டியில் வைத்த கையுடன் சொல்கிறான்) இதில்
இருக்கிறது. அவள் துள்ளுகிறாள் பாருங்கள்.
சிறைமேலதிகாரி: அவளுக்கு மலை மொழி பேசத் தெரியாது.
இடைநிலையதிகாரியின் கையிலிருந்து விலகும் இளம் பெண் இரண்டு நபர்களதும் முகங்களையும்
நேரடியாகப் பார்க்கிறாள்.
இளம்பெண் : எனது பெயர் ஸாரா ஜான்சன். எனது கணவரைப் பார்க்க நான் வந்திருக்கிறேன்.
இது எனது உரிமை. எங்கே எனது கணவர்?
சிறைமேலதிகாரி : எங்கே உனது விண்ணப்பத் தாள்களைக் கொடு பார்ப்போம்.
இளம் பெண் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுக்கிறாள். அவற்றை மேல்நிலையதிகாரி
படிக்கிறான். அதனை
இடைநிலையதிகாரியிடம் தருகிறான்.
மேல்நிலையதிகாரி தொடர்கிறான்.
- இந்த ஆள் மலையைச் சேர்ந்தவன் அல்ல. தவறான கைதிகளின் கூட்டத்தில் இவனைச்
சேர்த்துவிட்டார்கள்.
இடைநிலையதிகாரி : இவளும் அப்படித்தான். இவள் ஓழ்த்த அறிவுஜீவிமாதிரி எனக்குத்
தென்படுகிறாள்.
சிறைமேலதிகாரி: ஆனால் அவள் குண்டி நடுங்குவதாக
நீ சொன்னாய்;?
இடைநிலையதிகாரி : அறிவுஜீவியின் குண்டிதான் ஜோராக நடுங்கும்.
மேடை இருள்கிறது.
----------------
காட்சி இரண்டு
பார்வையாளர் அறை
----------------
ஒரு கைதி உட்கார்ந்திருக்கிறார். தனது கூடையுடன் முதிய மனுஷி
உட்கார்ந்திருக்கிறார். ஒரு காவலன் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கிறான்.
கைதியும் அந்த முதிய மனுஷியும் அழுத்தமான கிராமிய உச்சரிப்பில் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
மெளனம்
முதிய மனுஷி : :நான் ரொட்டி கொண்டு வந்திருக்கிறேன்.
காவலன் ஒரு கழியினால் அவளைக் குத்துகிறான்.
காவலன் : தடைசெய்யப்பட்டிருக்கிறது. உங்கள் மொழி தடைசெய்யப்பட்டிருக்கிறது.
முதிய மனுஷி அவனைப் பார்க்கிறாள். அவன் அவளைக் கழியினால் குத்துகிறான்.
உங்கள் மொழி தடைசெய்யப்பட்டிருக்கிறது (கைதியிடம் சொல்கிறான்) அவளிடம் தலைநகரத்தின்
மொழியைப் பேசச் சொல்.
கைதி : அவளுக்குப் பேசத் தெரியாது
மெளனம்
-அவளால் பேசமுடியாது
மெளனம்
முதிய மனுஷி : நான் ஆப்பிள் கொண்டு வந்திருக்கிறேன்ஸ
காவலன் அவளைக் கழியால் குத்துகிறான். சத்தம் போடுகிறான்.
காவலன் : தடைசெய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை
செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிறது! இயேசு கிறிஸ்துவே! (கைதியை
நோக்கி) நான் சொல்வது அவளுக்குப் புரியவில்லையா என்ன?
கைதி : இல்லை
காவலன்: அப்படியா விஷயம்?
முதிய மனுஷியை நோக்கி அவன் குனிகிறான்.
-உனக்குப் புரியாதா?
முதிய மனுஷி அவனை வெறித்துப் பார்க்கிறாள்.
கைதி : அவள் வயதானவள். அவளால் புரிந்து கொள்ள இயலாது.
காவலன் : அது யாருடைய குற்றம்?
அவன் சிரிக்கிறான்.
-என்னுடைய குற்றமல்ல. நான் இதனைச் சொல்ல வேண்டும். நான் இன்னொரு விஷயமும்
சொல்கிறேன் கேள். எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நீங்;கள்
எல்லோரும் சேர்ந்து பெரிய மலக்குவியல்.
மெளனம்
கைதி : எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
காவலன்: உனக்கு என்ன இருக்கிறது?
மெளனம்
-உனக்கு என்ன இருக்கிறது என்று சொன்னாய்?
மெளனம்
-என்னிடம் நீ என்ன சொன்னாய்? உனக்கு என்ன இருக்கிறது என்று சொன்னாய்?
மெளனம்
-உனக்கு என்ன இருக்கிறது?
அவன் தொலைபேசியை எடுத்து எண்களைச் சுழற்றுகிறான்.
- ஸார்ஜன்ட். நான் நீல அறையில் இருக்கிறேன்ஸ. ஆமாம். நான் இதனைச் சொல்ல வேண்டும்
என்று நினைக்கிறேன். ஸார்ஜன்ட். இங்கே ஒரு கோமாளி என்னிடம் இருக்கிறான்.
வெளிச்சம் பாதிக்கு மங்கலாகிறது. பாத்திரங்கள் உறைநிலையில் நிற்கின்றன.
குரல்கள் மேலெழுந்து கேட்கின்றன.
முதிய மனுஷியின் குரல் : குழந்தை உனக்காகக் காத்திருக்கிறது.
கைதியின் குரல் : உனது கையில் கடிபட்டிருக்கிறது.
முதிய மனுஷியின் குரல் : எல்லோரும் உனக்காகக் காத்திருக்கிறார்கள்.
கைதியின் குரல் : என்னுடைய தாயின் கையை நாய் கடித்துவிட்டது.
முதிய மனுஷியின் குரல் : நீ வீட்டுக்கு வரும்போது நாங்கள் எல்லோரும் உன்னை அப்படி
மகிழ்ச்சியுடன் வரவேற்போம். ஒவ்வொருத்தரும் உனக்காக் காத்திருக்கிறார்கள்.
எல்லோரும் உனக்காகக் காத்திருக்கிறார்கள். எல்லோரும் உன்னைப் பார்ப்பதற்;காகக்
காத்திருக்கிறார்கள்.
விளக்கு முழுக்க எரிகிறது.
இடைநிலையதிகாரி; உள்ளே வருகிறான்.
-யாரந்தக் கோமாளி ?
மேடை இருள்கிறது.
----------------
காட்சி மூன்று
இருளில் குரல்கள் கேட்கின்றன
----------------
இடைநிலையதிகாரியின் குரல் : யாரந்த ஓழ்த்த பெண்? அந்த ஓழ்த்தவள் இங்கே என்ன
செய்கிறாள். யாரந்த ஓழ்த்தவளை இந்த ஓழ்த்த கதவுக்குள்ளே விட்டது?
இரண்டாம் காவலனின் குரல்
-அவள் இவனது மன¨வி
விளக்குகள் எரிகின்றன.
தாழ்வாரம்
முகம் மூடப்பட்ட நிலையில் ஒரு மனிதனை காவலனும் இடைநிலையதிகாரியும் நிமிர்த்திப்
பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று
கொண்டிருக்கும் இளம் பெண் அவர்களை வெறித்துப் பார்க்கிறாள்.
இடைநிலையதிகாரி : என்ன இது. காமாந்தகார நாகரிகச் சீமாட்டிக்கு இங்கே வரவேற்பா
நடக்கிறது? வரவேற்புக்கு ஏதும் பெண்குடிச் சரக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த
நாகரீகச் சீமாட்டிக்காக இங்கே யார் பிரம்மாதமான குடிச்சரக்கு வைத்திருக்கிறீர்கள்?
இளம் பெண்ணை நோக்கி இடைநிலையதிகாரி போகிறான்.
-ஹலோ. மிஸ். மன்னிக்கவும். நிர்வாகத்தில் கொஞ்சம் கோளாறு என்று நான் பயப்படுகிறேன்.
தவறான கதவின் வழியே உங்களை அனுப்பி விட்டார்கள். என்னால் நம்பமுடியவில்லை. யாராவது
சீக்கிரமே வந்து உங்களை அழைத்துச் செல்வார்கள். அதுவரைக்கும், திரைப்படத்தில்
வழக்கமாக வருகிற மாதிரி நான் கேட்கிறேன். நான் உங்களுக்கு என்ன உதவி செய்யட்டும்?
விளக்குகள் பாதி மங்கலாகின்றன. பாத்திரங்கள் நிலைத்து உறைகிறார்கள்.
குரல்கள் மேலெழந்து கேட்கின்றன.
ஆணின் குரல் : நீ நித்திரை கொள்வதை நான் பார்க்கிறேன். உனது விழிகள் அசைகின்றன.
விழிகள் உயர்த்தி நீ என்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறாய்.
இளம் பெண்ணின் குரல் : நீ புன்னகை செய்கிறாய். நான் விழி திறக்கும்போது எனக்கு மேலே
உன்னைப் பார்க்கிறேன். நீ புன்னகை செய்கிறாய்.
ஆணின் குரல் : ஓரு ஏரியின் அருகில் நாமிருக்கிறோம்.
இளம் பெண்ணின் குரல் : அது வசந்த காலம்
ஆணின்; குரல் : நான் உன்னை அணைத்துக் கொண்டிருக்கிறேன். நான் உனக்கு
வெதுவெதுப்பூட்டுகிறேன்.
இளம் பெண்ணின் குரல் : எனது விழிகள் திறக்கும் போது எனக்கு மேலே உன்னைப்
பார்க்கிறேன். நீ புன்னகை செய்கிறாய்.
விளக்குகள் முழுக்க எரிகின்றன.
முகமூடியிட்ட மனிதன் சரிந்து வீழ்கிறான். இளம்பெண் கதறி அழுகிறாள்.
இளம்பெண் : சார்லி
இடைநிலையதிகாரி தன் விரலைச் சொடுக்குகிறான்.
காவலன் கைதியை இழுத்துச் செல்கிறான்.
இடைநிலையதிகாரி : ஆமாம். நீ தவறான கதவில் வந்திருக்கிறாய். கம்ப்யூட்டரில்தான்
பிரச்சினையிருக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு இரட்டை முறிவு வந்திருக்கிறது. ஆனால்
உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக உனக்கு
ஏதேனும் விவரம் வேண்டுமானால், மழை பெய்யாத வாரங்களில் செவ்வாய்க் கிழமை மட்டும் ஒரு
ஆள் இங்கு வருகிறான். அவன் உனக்கு உதவி செய்வான். அவன் விஷயத்தில் அவன் ரொம்பக்
கெட்டிக்காரன். இந்த நாள் ஏதேனுமொன்றில் அவனுக்கு ஒரு சமிக்ஞை கொடு. அப்புறம் அவன்
பார்த்துக் கொள்வான். அவன் பெயர் டோக்ஸ், ஜோஸப் டோக்ஸ்.
இளம்பெண் : நான் அவனோடு படுக்க வேண்டுமா? நான் அவனோடு படுத்தால், எல்லாம் சரியாகப்
போய்விடுமா?
இடைநிலையதிகாரி : நிச்சயமாக. பிரச்சினையே இல்லை.
இளம்பெண் : மிக்க நன்றி
மேடை இருள்கிறது.
----------------
காட்சி நான்கு
பார்வையாளர் அறை
----------------
காவலன். முதிய மனுஷி. கைதி
மெளனம்
கைதியின் முகத்தில் இரத்தம் வழிகிறது. அவன் நடுங்கியபடி அமர்ந்திருக்கிறான். முதிய
மனுஷி உறைந்து போயிருக்கிறாள். காவலன் ஜன்னலுக்கு வெளியே
பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் திரும்பி இருவரையும் பார்க்கிறான்.
காவலன் : அட. நான் சொல்ல மறந்துபோய்விட்டேன். அவர்கள் விதிகளை மாற்றிவிட்டார்கள்.
அவள் பேசலாம். சொந்த மொழியிலேயே அவள் பேசலாம். மறுஅறிவிப்பு வரும் வரை பேசலாம்.
கைதி : அவள் பேசலாமா?
காவலன்: ஆமாம். மறுஅறிவித்தல் வரும்வரை பேசலாம். புதிய விதிகள்.
மெளன இடைவெளி.
கைதி: அம்மா, நீ பேசலாம்.
மெளன இடைவெளி
-அம்மா, நான் உன்னிடம்தான் பேசுகிறேன். என்னைப் பார் அம்மா. நீ பேசலாம். உன்னுடைய
சொந்த மொழியில் நீ என்னிடம் பேசலாம்.
அவள் அசையாதிருக்கிறாள்.
-நீ பேசலாம் அம்மா.
மெளன இடைவெளி
-அம்மா. நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா? நம்முடைய சொந்த மொழியில் நான் உன்னிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன்.
மெளன இடைவெளி
-அம்மா நான் சொல்வது கேட்கிறதா?
மெளன இடைவெளி
-நம்முடைய சொந்த மொழி
மெளன இடைவெளி
-நான் பேசுவதைக் கேட்கமுடியவில்லையா? அம்மா நான் சொல்வது கேட்கிறதா?
அவள் மறுமொழி சொல்லவில்லை
-அம்மா?
காவலன் : அவளது சொந்த மொழியில் பேசலாம் என்று அவளிடம் சொல். புதிய விதிகள். மறு
அறிவித்தல் வரும் வரையில்.
கைதி : அம்மா
அவள் மறுமொழி சொல்வதில்லை. அவள் அசையாது அமர்ந்திருக்கிறாள்.
கைதியின் நடுக்கம் அதிகமாகிறது. நாற்காலியிலிருந்து அவன் மண்டியிட்டு கீழே தரையில்
வீழ்கிறான். மூச்சுத் திணறுகிறது. பயங்கரமாக அவன் உடல் உதறுகிறது. இடைநிலையதிகாரி
அந்த அறைக்குள் வருகிறான். உதறிக்கொண்டிருக்கும் கைதியின் உடலை உற்றுப்
பார்க்கிறான்.
-இங்கே பார். நீ அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பதற்காக உன் தகுதிக்கும் மீறி
நடந்திருக்கிறாய். அவர்கள் எப்படி ஓழ்த்திருக்கிறார்கள் என்று பார்.
மேடை இருள்கிறது.
rajrosa@gmail.com |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|