தமிழ் நாட்டில் ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ்
ஞானப் பணி! - முனைவர். செ. அ. வீரபாண்டியன் -
பாரதியாரின்
கவிதைகளில் அச்சில் வெளிவந்த முதல் கவிதை "தனிமை இரக்கம்'. அக்கவிதை வெளிவந்த இதழ்
"விவேக பானு'. 1842 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் வீரமாமுனிவரின் சதுரகராதி. 1850
ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் தமிழ் - இலத்தீன் - பிரெஞ்சு அகராதிகள் இவ்வாறு
தமிழில் அச்சில் முதலில் வெளிவந்த நூல்களைத் தேடிக்கொண்டு வந்து பாதுகாத்து,
ஆர்வமுள்ளவர்களுக்குப் படிக்க உதவும் இடமே தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் உள்ள
ஞானாலயா ஆகும். பாரதிதாசன், பெரியார், அண்ணா, உ.வெ.சா உள்ளிட்ட பலர்
சம்பந்தப்பட்டப் படைப்புகளில் முதல் பதிப்பில் இருந்தவை எவை, அவற்றுள் பிந்தைய
பதிப்புகளில் விடுபட்டவை எவை என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் இடம் ஞானாலயா. ஏன் அவை
விடுபட்டன, பெரியார் நடைமுறைப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அவருக்கு
முதலில் அறிமுகப்படுத்தியவர் யார், 1908 இல் வெளிவந்த பாரதியாரின் "ஸ்வதேச
கீதங்கள்' கவிதை நூலில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரபிள்ளையின் கவிதை ஏன் இடம் பெற்றது
உள்ளிட்ட அரிய விளக்கங்களை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தியிடம் பெறலாம்.
தமது
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு
பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள்
முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே
ஞானாலயா. ரூபாய் பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில்
அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத
பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சுமார் 500க்கும் அதிகமான மறுபதிப்புகளின்
மூலநூல்கள் ஞானாலயாவிடமிருந்தேப் பெறப்பட்டன. சக்தி கோவிந்தன் இலக்கியப் படைப்புகளை
நாட்டுடைமையாக்கி, வறுமையில் உழன்ற அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி
உதவக் காரணமாக இருந்தது ஞானாலயா. சுந்தர ராமசாமி தன் கதைத்தொகுப்பு முயற்சியின்போது
தன்னிடமில்லாத பல கதைகளை பெற்ற இடம் ஞானாலயா.
ஆராவாரமின்றி அமைதியாக இது போன்று பல தமிழ்ஞானப் பணிகளை பா.கிருஷ்ணமூர்த்திþ டோரதி
தம்பதியினர் ஆற்றி வருவதைக் கண்ணுற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல்
துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் கீழ்வரும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். ''
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கிருஷ்ணமூர்த்திþடோரதி தம்பதியருக்கு பத்மபூஷன்
விருது கிடைக்கச் செய்திருப்பேன்.''. பத்மபூஷன் விருது என்பது இந்திய அரசின்
உயர்ந்தபட்ச விருதாகும்
ஞானாலயாவுக்கு
வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தங்கும் இடமும் உணவு வசதியும் ஏற்பாடு செய்துதரப்
படுகின்றன. விரும்பித்தரும் நன்கொடைகளைக் கொண்டு ஞானாலயாவினை நவீனத் தொழில்நுட்ப
வசதிகளுடன் விரிவுபடுத்தும் முயற்சியிலும், தங்கள் காலத்திற்குப் பின்னும்
இத்தமிழ்ஞானப் பணிகள் தொடர ஞானாலயாவை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றும்
முயற்சிகளிலும் கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். ஞானாலயா
முகவரி: ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை, 622002 இந்தியா தொலைபேசி: 914322221059.
Gnanalaya Research Library, 6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam, Pudukkottai,
622002, India. Phone: 914322221059.
இணையத்தளம்:
www.gnanalayalibrary.com/subject.html
pannpandi@yahoo.co.in |