'பனியும் ,
பனையும்' தொகுப்பின் மீள்பதிப்பும், தொகுப்புகளின் அவசியமும்! எஸ்பொ.வின் மித்ர
பதிப்பகம் வெளியிடவுள்ள தொகுப்பு நூல்கள்!
- வ.ந.கிரிதரன் -
அண்மையில்
எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்
கனடா வந்திருந்த பொழுதுதான் முதன்முறையாகச் சந்தித்திருந்தேன். எஸ்.பொ.வின்
நேர்மை, இந்த வயதிலும் அவரிடம் விளங்கும் அந்தத் தளறாத ஆற்றல், குழுக்களாக
சிதறுண்டிருப்பவர்கள் மத்தியில் தரவுகளை, நிகழ்வுகளை, மற்றும் பங்களிப்புகளை
முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென்ற அவரது முனைப்பு இவையெல்லாம் அவரது மதிப்பை
உயர்த்துவன. இம்முறை அவருடனான உரையாடலின்போது அவர் தான் விரைவில்
கொண்டுவரவிருக்கும் நான்கு முக்கிய தொகுப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.
முறையான தேர்வுடன், முறையாகப் பிரதிநிதிப்படுத்தும் வகையிலான ஈழத்துச்
சிறுகதைகளின் தொகுப்பு. குறைந்தது இருபத்தைந்து குறுநாவல்களையாவது உள்ளடக்கிய
பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் தொகுப்பு. ஏற்கனவே
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் 39 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவநது பலரதும்
கவனிப்பையும் பெற்ற 'பனியும் பனையும்' தொகுப்பின் விரிவாக்கப்பட்ட இரண்டாவது
தொகுப்பு. இத்தொகுப்பு மேலதிகமான கதைகளுடன், இத்தொகுப்பிலுள்ள எழுத்தாளர்களைப்
பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். அடுத்தது ஈழத்துக்
கவிதைகளின் தொகுப்பு. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து இன்றைய ஈழத்துக் கவிஞர்
வரையிலான கவிதைகளின் தொகுப்பாக விளங்குமொரு கவிதைத்தொகுப்பு. இதற்கான முக்கிய
பங்களிப்பைக் கவிஞர் சிற்பி ஆற்றுவதாக எஸ்.பொ. குறிப்பிட்டார். மேலும்
சிறுகதைத் தொகுப்புக்கு ஈழத்தில் செங்கை ஆழியான் வெளியிட்ட ஈழத்துச் சிறுகதைத்
தொகுப்புகள் மிகவும் உதவியாகவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
'பனியும்
பனையும்' தொகுப்பிலுள்ள படைப்பாளிகளைப் பற்றிய விபரங்களை, அவர்களது
புகைப்ப்டங்களுடன் கூடிய குறிப்புகளுடன், எஸ்.பொ. அவர்களுக்கு அனுப்பி வைத்தால்
அது மிகவும் உதவிகரமாக அமையும். மேற்படி தொகுப்புகள் வழக்கமாக வெளிவரும்
பூரணத்துவமற்ற தொகுப்புகளாகவில்லாமல் முறையாக வெளிவருமென்ற நம்பிக்கை எமக்கு
நிச்சயமுண்டு. 'பனியும் பனையும்' எமக்கு அந்த நம்பிக்கையினைத் தருகின்றது.
ஆயினும் மேற்படி தொகுப்புகள் வெற்றிகரமாக அமைவதற்கு பல்வேறு நாடுகளிலும் பரந்து
வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பினை வழங்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் எஸ்.பொ.அவர்களுடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு
கொள்ள முடியும். 914424735314 / 914423723182 /914428173280. மேலும் 'பனியும்
பனையும்' தொகுப்பில் இடம்பெற்றுள்ள கனேடியத் தமிழ எழுத்தாளர்கள் தங்களைப்
பற்றிய குறிப்புகளை எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை நாம் எஸ்.பொ. அவர்களுக்கு
அனுப்பி வைப்போம். அல்லது தங்களைப் பற்றிய விபரங்களை எஸ்.பொ. அவர்களுடன்
மேலுள்ள தொலைபேசி இலக்கங்களில் ஏதாவதொன்றுடன் தொடர்புகொண்டு அனுப்பி வைக்கலாம்.
மேலும் 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பின் முதற்பதிப்பு மித்ர பதிப்பக
வெளியீடாக 1994இல் வெளிவந்ததால், 1994ற்கும் 2008ற்குமிடைப்பட்ட
காலகட்டத்தில் வெளிவந்த தரமான சிறுகதைகளையும், அவை பற்றிய விபரங்களையும்
மேலுள்ள வழிகளிலேதாவதொன்றில் எமக்கு
அல்லது எஸ்.பொ.வுக்கு அனுப்பி வைக்கலாம்.
இத்தகைய
தொகுப்புகளின் அவசியம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சரியான முறையில்,
பாரபட்சமற்ற வகையில்
இத்தொகுப்புகளுக்கான ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும். எஸ்,பொ,வின் 'பனியும்,
பனையும்' இத்தகையதொரு நல்லதொரு
தொகுப்புக்கு உதாரணம். செங்கை ஆழியானின் தொகுப்புகள், செ,யோகநாதனின்
தொகுப்புகளெல்லாம் நன்கு வரவேற்பைப் பெற்ற தொகுப்புகள். அண்மையில் பூபாலசிங்கம்
வெளியீடாக வெளிவந்த ஈழத்துக் கவிதைத் தொகுப்பு, 'சிலோன்' விஜயேந்திரனின்
'ஈழத்துக் கவிதைக் கனிகள்' போன்றவை மோசமான தொகுப்புகளுக்கு உதாரணங்களாகக்
கூறலாம். மோசமான தொகுப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களிலொன்று:
முக்கியமான படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்படாத கெளரவத்தை மூன்றாந்தரப்
படைப்பாளிகளுக்கெல்லாம் கொடுப்பது. மிகவும் சாதாரணமானவர்களின்
படைப்புகளையெல்லாம் இத்தகைய தொகுப்புகளில் ஒன்றுக்கு மூன்றாகக் காணலாம். ஆனால்
, அதே சமயம் மிகவும் சாதனை படைத்த படைப்பாளிகளின் படைப்புகளை அரைகுறையாகப்
பிரசுரித்திருப்பார்கள். அல்லது அத்தகைய படைப்பாளிகளின் முக்கியமான
படைப்புகளையெல்லாம் விட்டுவிட்டு , மிகவும் சாதாரணமான படைப்புகளைப்
பிரசுரித்திருப்பார்கள். இன்னுமொருவகையான தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட குழு
மனப்பான்மையில் தொகுக்கப்படுபவை. பல்வேறு பதிப்பகங்களால் தொகுக்கப்படும்
இத்தகைய தொகுப்புகளைத் தொகுப்பவர்கள் தங்களது அறிவுக்கெட்டியவரை படைப்புகளைப்
பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் அடிப்படையில் படைப்பாளிகளைத்
தேர்ந்தெடுப்பவர்கள். அவர்களுக்கப்பாலும் இப்பிரபஞ்சம்
விரிந்து கிடக்கிறதென்பதை புரிந்து கொள்ளாததே இத்தகைய தொகுப்பாளர்கள் விடும்
முக்கிய தவறாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட
காலத்து இலக்கிய வரலாற்றின் ஆவணங்களாகவும் தொகுப்புகள் திகழ்வது அவசியம்.
அதற்கு அக்காலகட்டத்து இலக்கியப் போக்குகளை, படைப்புகளை, படைப்பாளிகளை
இயலுமானவரையில் பாரபட்சமற்ற வகையில் இனங்கண்டு, தொகுப்புகள்
தொகுக்கப்படவேண்டியதவசியம். வரவிருக்கும் எஸ்பொ.வின் தொகுப்புகள் இவ்விதமான
காத்திரமான தொகுப்புகளாக வெளிவரும்
பட்சத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏற்கனவே வெளிவந்த 'பனியும், பனையும்'
தொகுப்புப் போன்று இவையும் முக்கிய >
பங்களிப்பினை ஆற்றுபவையாகவிருக்கும். எஸ்.பொ.வின் முயற்சி வென்று சாதனை படைக்க
எமது வாழ்த்துகள். அவரது
ஆக்கபூர்வமான இந்தப் பணிக்கு பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் படைப்பாளிகளே,
இலக்கிய ஆர்வலர்களே உங்களால் முடிந்த
பங்களிப்பைச் செய்ய விரும்பின் அவருடன் மேற் குறிப்பிட்ட இலக்கங்களில் தொடர்பு
கொள்ளுங்கள். தங்களைச் சுற்றிக் குழுக்களை, துதிபாடிகளை வளர்த்தெடுப்பதற்காகத்
தொகுப்புகளைக் கொண்டுவந்து, ஒருவருக்கொருவர் குளிர்காய்ந்து கொண்டிருக்குமிச்
சமயத்தில், ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகளின் தொகுப்புகளைப் பாரபட்சமற்ற வகையில் கொண்டுவர
முயன்றுகொண்டிருக்கும் எஸ்.பொ.வின் பணி போற்றுதற்குரியது.
ngiri2704@rogers.com
கடந்தவை1 கடந்தவை2 |