| 
  தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ!(23.08.1919 -14.07.2008)!
 
  - 
  முனைவர் மு.இளங்கோவன் -
 
  தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதைப் பல்வேறு 
  சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 
  ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார். 
  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் 
  தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் 
  கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1930 
  ஆம் ஆண்டளவில் மொழியியல் துறையில் கவனம் செலுத்தினார்.இரண்டாம் உலகப் போரின் 
  பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர்.டோக்கியோ கக்கு சுயின் 
  பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட 
  பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 
  ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய 
  மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின. 
 தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் 
  பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் 
  தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் 
  செய்தனர்.1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் 
  அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் 
  வெளிப்படத் தொடங்கின.
 
 இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு 
  ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
 
 தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா 
  நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் 
  இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் 
  வெளிப்படுத்தியவர்.
 
 சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 
  1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
 
 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு 
  பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடை முறைகள் உள்ளிட்டவற்றில் 
  ஒற்றுமைத் தன்மைகளை அதிசயிக்கத்தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தன.
 
 தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் 
  தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு 
  அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்த அறிஞரை இழந்து 
  தமிழுலகம் வருந்துகிறது.
 
 Encyclopedia of Languages & Linguistics என்ற நூலில் சுசுமு ஓனோ பற்றிய 
  குறிப்பு:
 
 1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய 
  மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் 
  பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர 
  முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் 
  இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை 
  ஆராயத் தொடங்கினார்.
 
 இவருடைய பணியைப்பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் 
  திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. 
  மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த 
  ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.
 
 தொடர்புடைய தொடுப்புகள் :
 http://books.google.com/books?id=9PhwAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&pgis=1
 http://books.google.com/books?id=OkkgAAAAIAAJ&q=%22Susumu+Ohno%22+%2Btamil&dq=%22Susumu+Ohno%22+%2Btamil&source=gbs_book_other_versions_r&cad=2_0&pgis=1
 http://books.google.com/books?id=T7Wv4ncys88C&pg=PA45&dq=%22Susumu+Ohno%22+%2
 Btamil&ei=yWeBSOXbF42AsgOEwfDhDw&sig=ACfU3U2Fbk6OX66FEtWiz6Tk7eQiwoTTFg
 http://en.wikipedia.org/wiki/Susumu_%C5%8Cno
 http://www.xlweb.com/heritage/lj2.gif
 
 நனி நன்றி :தமிழ்நெட்.காம்
 முனைவர் பொற்கோ
 தூரிகா வெங்கடேசு
 தமிழ் ஓசை நாளிதழ்,சென்னை,தமிழ்நாடு
 
 muelangovan@gmail.com
 www.muelangovan.blogspot.com
 |