| மின்காணல்: 
  அமெரிக்காவில் தமிழ் வளர்ப்போர் - 2! முனைவர், வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப்
 பல்கலைக்கழகம், அமெரிக்கா.!
 
 - ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா. -
 
  அறிமுகம்.....
  தமிழைத் 
  தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ 
  வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ளவர்கள் வரிசையில் இரண்டாவதாக வலம்வருகிறார், 
  அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார் 
  முனைவர் வாசு அரங்கநாதன்.  தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 
  மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு 
  ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த்தொண்டைத் 
  தொடர்ந்துவருபவர்.
 
 1989 முதல் 1992 வரை சியாட்டலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தமது 
  இரண்டாவது முதுகலைப் பட்டப் படிப்பைச்
 செய்துகொண்டு கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்டார்.
 
 பின்னர் இரண்டு ஆண்டுகள் மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும்அதற்குப் பிறகு 
  பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்திலும் தமது தமிழ்த்தொண்டைத் தொடர்கிறார். 
  கடந்த பத்து வருடங்களாக பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து 
  வருவதோடு, தமிழ்இலக்கியம் மற்றும் மொழியிலில் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து 
  வருகிறார்.
 
 சங்ககால இலக்கியங்களையும் பக்தி இலக்கியங் களையும் ஆய்ந்து வருவதோடு கணிப்பொறி 
  வழி தமிழ் மொழி கற்பிப்பது பற்றியும்
 தனது பணியைச் செய்துவருகிறார்.
 
 http://ccat.sas.upenn.edu/plc/tamilweb ,
 http://www.southasia.upenn.edu/tamil
 போன்ற இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி 
  கற்றுக்கொள்ளப் பாடங்களை வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின் மத்தியக் கல்வித்துறையின் உதவியோடு பக்கங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ் 
  மாணாக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 அமெரிக்காவில் உள்ள தமிழ் வம்சாவழி மாணவர்களுக்கும் இப்பங்கங்கள் பயன்பட்டு 
  வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழ்நாடு பற்றி படிக்கும் அமெரிக்க மாணாக் கர்களும் இவ்விணையப் பக்கங்களைப் 
  பயன்படுத்தி வருகின்றனர்.
 தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு பற்றிய விளக்கமான பாடங்கள் இவ்விணையப் 
  பக்கங்களில் உள்ளன. அன்பர்களே அறிமுகம்
 இங்கே நிறைவெய்துகிறது. இனி அவருடனான காணலில் உட்புகுவோமா?   -
  ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.
 _______________________________________________
 
 தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தமிழகத்தில் 
  இருக்கும்போது ஏற்பட்ட உணர்வா? இல்லை அமெரிக்க வந்த பின்
 தோன்றியதா?
 
 அண்ணாமலைப் பல்கலைக்க கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளனாக இருந்தபோதே தமிழ் 
  ஆராய்ச்சியில் ஆர்வம் தொடங்கியது. பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் 
  வாஷிங்டன் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிந்த போது அங்கிருந்த நல்ல ஆராய்ச்சிச் 
  சூழல் என்னுடைய தமிழ் ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தது.
 
 வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் 
  பணியில் ஈடுபட்ட தாங்கள் ஆய்வுப்பணி குறித்து கொஞ்சம் விபரமாகச் 
  சொல்லுங்களேன்?
 
 வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறையில் வகுப்புகள் எடுத்த போது 
  மொழியியல் துறையின் பல்வேறு ஆராய்ச்சிகள் என்னைக் கவர்ந்தன. கணிப்பொறி கொண்டு 
  தமிழை ஆய்வு செய்யும் புது உத்திகளை அங்கு கற்றுக்கொண்டேன்.
 1990ஆம் ஆண்டில் தொடங்கிய இணைய வளர்ச்சியோடு என்னுடைய மொழி ஆராய்ச்சியையும் 
  இணைத்துக்கொண்டேன்.
 இணையத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தமிழ் ஆராய்ச்சியாளர்களோடு எளிதாகத் 
  தொடர்பு கிடைத்தது.
 
 முக்கியமாக கணிப்பொறியில் தமிழ் மொழி அறிவை சேர்ப்பது என்ற ஆராய்ச்சியில் 
  தொடங்கி கணிப்பொறிக்கு மொழியறிவை புகட்டுவது
 என்பது வரையிலான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டேன். கணிப்பொறி கொண்டு மொழி 
  பெயர்ப்பு தகவல் தேடல் போன்ற ஆராய்ச்சியும்
 இதில் அடங்கும்.
 
 இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை 
  வடிவமைத்துள்ள தங்களுக்கு இதன் மூலம் பயன்பெற்ற வெளிநாடுவாழ் 
  தமிழ்மாணாக்கர்கள் தங்களைத் தொடர்புகொண்டு நன்றி பரிமாறிக் கொண்ட, உதவி 
  கோரிய நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்கள் தங்களுக்கு வாய்த்திருக்கும். 
  இதில் தங்கள் மனம் நெகிழ்ந்த சம்பவங்கள் கண்டிப்பாக இருக்கும். 
  அப்படிப்பட்ட மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இயலுமா?
 
 பல மாணவர்கள் அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொள்வார்கள். சில உதவிகளை மின்னஞ்சல் 
  மூலம் செய்வேன். போலந்திலிருந்து
 ஒரு மாணவர் விடாமல் இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார். எங்கள் இணையப்பக்கங்களில் 
  ஒன்று விடாமல் பயன்
 படுத்திவிட்டு அங்கு கொடுத்துள்ள பயிற்சிப் பக்கங்களைச் செய்து எனக்கு அனுப்பிக் 
  கொண்டே இருப்பார். முடிந்த போதெல்லாம் உதவி
 செய்வேன். ஒரு முறை கொஞ்ச காலம் அவருக்கு மின்னஞ்சல் கொடுக்கவில்லை. எனக்கு ஏதோ 
  ஆகிவிட்டது என்று என்னுடைய
 பேராசிரியர் ஷிப்மெனுக்கு அஞ்சல் எழுதி வாசுவுக்கு ஏதோ ஆகிவிட்டது போல் 
  இருக்கிறது! அவர் நன்றாக இருக்கிறாரா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது 
  தமிழ் இணையப்பக்கங்களுக்கு நான் இப்படியாக உயிர் கொடுக்கவேண்டியிருக்கிறது!
 
 இதுதான்....உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்! அமெரிக்காவில் உள்ள தமிழ் 
  குழந்தைகள் உங்கள் தமிழ்ப் பக்கங்களைப் பயன்படுத்துவது குறித்து ஏதும் 
  புள்ளிவிபரம் தர இயலுமா?
 
 புள்ளிவிவரம் ஒன்று எதுவும் இல்லை. எங்களின் விருந்தினர் பக்கத்தில் தமிழ்ப் 
  பக்கங்களைக் குறித்து பலர் எழுதியுள்ளனர். பார்க்க..
 http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/guest/tamilguest.html  உலகத்தின் 
  பல நாடுகளிலிருந்தும் எங்களைத் தொடர்புகொண்டு எப்படியெல்லாம்
 எங்கள் பக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று பலர் எங்களுக்கு எழுதியுள்ளனர். 
  எங்கள் இணையப்பக்கங்கள் மூலம் உலகம்
 முழுவதிலிருந்தும் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். இது மகிழத்தக்கது. 
  பல மாணவர்கள் நன்றி தெரிவித்து மடல்கள்
 எழுதியுள்ளனர்.
 
 இணையம் மூலம் தமிழ் கற்க நீங்கள் எடுக்கும் முயல்வுகளுக்குப் 
  பென்சில்வேனியா பல்கலை தகுந்த உதவிகளைச் செய்கிறதா?
 
 இதுவரை நான் கேட்ட எதற்கும் இவர்கள் இல்லை என்று சொன்னதில்லை. கேட்பதற்குத்தான் 
  நேரம் இல்லை.
 இது தவிர  தமிழுக்காக நீங்கள் ஆற்றும் பணிகள் 
  குறித்துச் சொல்லுங்களேன்?
 
  தமிழ் 
  வம்சாவழி குழந்தைகளும் மாணாக்கர்களும் தமிழைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் 
  குறித்தான பணிகள் பலவற்றை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன். நான் வாழும் தென் 
  ஜெர்சியில் ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவி இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத் 
  தமிழ்ப்பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன். இவர் களுக்காக ஒரு பாடப் பயிற்சி பக்கம் ஒன்று அமைத்துள்ளேன் (
  
  http://rewardzone.thetamillanguage.com/ )
 டெலவர் பெருநிலத் தமிழ்சங்கத்தின் http://www.tagdv.org/ ) 
  சங்கமம் என்ற தமிழ் மலரின் ஆசிரியராக இருக்கிறேன். தமிழகச் சூழலை இங்கு ஏற்படுத்துவதே இப்பணிகளின் நோக்கம்.
 
 எதிர்காலத் திட்டம் என்று உங்கள் எண்ண அதிர்வுகளில் இருக்கலாம். அது 
  குறித்துச் சொல்லுங்களேன்?
 
 தமிழைப் புது முறையில் கற்பதற்கான வழியில் அமைக்கப்பட்ட பக்கம்
  
  http://rewardzone.thetamillanguage.com/reward_images/screenshots.html
 . இதை எங்கள் சமூகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை 
  எங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ப்பக்கத்தோடு
 இணைத்து உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் பயன்படும்படி வடிவமைப்பதற்கான 
  முயற்சியில் ஈடுபடுவேன். சங்கம் முதல்
 இக்காலம் வரையிலான இலக்கியங்கள் மின்வடிவில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில் 
  இவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தி தமிழ் மொழி மற்றும்இலக்கிய வரலாறு, தமிழ்ப் 
  பண்பாட்டின் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறை முதலியன பற்றி 
  புதுக்கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்யவேண்டியது மிக முக்கியமான ஒன்று. இவ்வகையில்
  
  http://www.thetamillanguage.com/etext/ என்ற பக்கத்தில் தமிழ் இலக்கியங்களை 
  வெவ்வேறு கண்ணோட்டத்தில் காண ஒரு சொற்தேடலக்கான வசதியைச் செய்துள்ளேன். தமிழ் 
  மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சி
 குறித்தான ஆய்வுகளில் நான் என்னை மேன்மேலும் ஈடுபடுத்திக்கொள்வேன்.
 
 albertgi@gmail.com
 |