பயனுள்ள மீள்பிரசுரம்; தினக்குரல் 09/29/2008!
இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அந்தஸ்து...?
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்த வாரம் கனடாவின் "நாஷனல் போஸ்ட்' பத்திரிகைக்கு
அளித்திருந்த பேட்டியொன்றை
இலங்கையின் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்ததைக்
காணக்கூடியதாக இருந்தது. வடக்கில் வன்னியில்
தீவிரமடைந்திருக்கும் போரின் தற்போதைய நிலைவரம் பற்றி அந்தப் பேட்டியில்
விளக்கமளித்திருந்த இராணுவத் தளபதி, இன்னும்
ஒருவருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடுமென்றும்
குறிப்பிட்டிருக்கிறார். எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன்
பதவிக்காலம் முடிவடையவிருக்கும் அவர் இவ்வருட ஆரம்பத்தில் தனது உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த
விருந்துபசாரத்தின் போது அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை விட்டுச் செல்லப்
போவதில்லை என்று தெரிவித்திருந்தார். கால்
நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின்
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது
தொடர்பில் முன்னைய தளபதிகளும் கால வரையறைகளை குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள்
என்றபோதிலும் தற்போதைய தளபதி
பொன்சேகாவே அடிக்கடி போர் முடிவுக்கான காலக்கெடு பற்றி கருத்துக்களைத்
தெரிவிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
போர் நிலைவரம் பற்றிய விளக்கங்களுக்கு அப்பால் கனடா பத்திரிகையில் இராணுவத் தளபதி
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு
இருக்கக் கூடிய "அந்தஸ்து' பற்றி தெரிவித்திருக்கும் கருத்தே எமது கவனத்தைப்
பெரிதும் தூண்டுவதாக அமைந்திருந்தது. "தமிழர்கள்
தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்க விரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு
செய்தமையினாலேயே போர் மூண்டது. தமிழ்ச்
சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான
சிங்களவர்கள் ஒருபோதுமே
அனுமதிக்கப்போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று நான்
உறுதியாக நம்புகிறேன். ஆனால், சிறுபான்மை
இனத்தவர்களும் இலங்கையில் வாழ்கிறார்கள். எமது மக்களைப் போன்று அவர்களையும் நாம்
நடத்துகிறோம். பெரும்பான்மை
இனத்தவர்களாக சிங்களவர்கள் நாட்டின் சனத்தொகையில் 75 சதவீதத்தினராக இருக்கிறார்கள்.
நாம் ஒருபோதும்
விட்டுக்கொடுக்கமாட்டோம். நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது. நாமும்
ஒரு பலம் வாய்ந்த தேசத்தவர்கள்.
சிறுபான்மை இனத்தவர்கள் எம்முடன் சேர்ந்து வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற
போர்வையில் அவர்கள் தகாத
கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக் கூடாது' என்று சரத் பொன்சேகா
தெரிவித்திருக்கிறார்.
இராணுவத் தளபதியின் இந்தக் கருத்துகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சில
கொழும்புப் பத்திரிகைகளில் குறிப்பாக, ஆங்கிலப்
பத்திரிகைகளில் விமர்சனங்கள் வெளியாகியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இலங்கையில் சிறுபான்மை இனங்களின்
அந்தஸ்து தொடர்பிலான சரத் பொன்சேகாவின் கருத்து அவரது தனிப்பட்ட ரீதியான
எண்ணப்போக்கை வெளிக்காட்டுவதாக
அமைந்திருப்பதாக ஒரு விமர்சகர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். உண்மையிலேயே
இராணுவத் தளபதி இலங்கை சிங்களவர்களுக்கே
சொந்தமானது என்று கூறியிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. காலாதிகாலமாக சிங்கள பௌத்த
பேரினவாத நிலைப்பாடாக அதுவே
இருந்து வருகிறது. அதையே அவர் இப்போது மீண்டும் அதுவும் ஒரு வெளிநாட்டுப்
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்
குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையில் வாழும் எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும்
நாட்டின் எந்தவொரு பகுதியுமே தங்களின் பாரம்பரிய
வாழ்விடம் என்று உரிமை கோர முடியாது என்பதே சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்
கோட்பாட்டின் அடிப்படையாக
அமைந்திருக்கிறது.
இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை நோக்கும் போது, கடந்த வாரம் காலஞ்சென்ற முன்னாள்
ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க
15 வருடங்களுக்கு முன்னர் சிறுபான்மை இன மக்கள் குறித்து தெரிவித்த கருத்துகள்
நினைவுக்கு வருகின்றன. பெரும்பான்மை
இனத்தவர்களான சிங்களவர்கள் பெரிய விருட்சத்துக்கு ஒப்பானவர்கள். சிறுபான்மை
இனத்தவர்கள் அந்த விருட்சத்தைப் பற்றிப்படரும்
செடி, கொடிகளுக்கு ஒப்பானவர்கள் என்று அவர் கூறியிருந்தார். விஜேதுங்க காலமான
அதேவாரத்தில் இராணுவத் தளபதியும்
சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பில் அவரின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமான கருத்தை
வெளியிட்டிருந்தமை ஒருவித விநோதமான
ஒப்புவமைதான். சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களை ஆதாரமாகக் கொண்டு
வாழ வேண்டும் என்பதே
விஜேதுங்கவின் நிலைப்பாடாக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித்துவம், சுய
உரிமை என்று எதுவுமே இருக்க முடியாது
என்பதே அந்த நிலைப்பாட்டின் அடிப்படை அர்த்தமாகும். சிறுபான்மை மக்களைப் பற்றி
இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களில்
அதிகப் பெரும்பான்மையானவர்கள் உலக ஒப்பாசாரத்துக்காக "நாகரிகமான' கருத்துகளை
அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறார்களே
தவிர, அடிப்படையில் அவர்கள் சகலரினதும் மனதில் சிங்கள பௌத்த மேலாதிக்க கோட்பாடுகளே
வேரூன்றியிருக்கின்றன. 1983 ஜூலை
இன வன்செயலுக்குப் பின்னரான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில
சஞ்சிகையொன்றுக்கு அளித்த பேட்டியில்
அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா, வடபகுதியைச் சேர்ந்த மக்கள் என்ன
நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குக் கவலையே இல்லை என்று கூட
குறிப்பிட்டிருந்தார். இவ்வாறாக சிறுபான்மை இனத்தவர்களைப் பற்றி சிங்களத்
தலைவர்களின் நிலைப்பாடுகள்
குறித்து பல மேற்கோள்களைக் காட்ட முடியும்.
இன்று போருக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்களும் அரசியல் சமுதாயமும் முற்றுமுழுதாக
அணிதிரட்டப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில்
சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தோ அல்லது அவர்களின் குறைந்தபட்ச நியாயபூர்வமான
அரசியல் அபிலாசைகள் குறித்தோ
பேசுவதற்கு யாருமே முன்வருவதில்லை. சகலருமே போர் என்ற மகுடிக்குக்
கட்டுப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். இலங்கையின்
இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்ற கோட்பாடுகளை சாதாரண சிங்கள மக்கள் சிங்கள
மேலாதிக்கத்தை உறுதி செய்யக்கூடிய
கருவிகளாகப் பார்க்கின்றார்களே தவிர, அதற்கு அப்பால் அந்தக் கோட்பாடுகளைப் பற்றிய
விளக்கப்பாடு எதுவுமே அவர்களுக்குக்
கிடையாது. இலங்கையில் இனப்பிரச்சினையே கிடையாது. இருப்பதெல்லாம் பயங்கரவாதப்
பிரச்சினை என்பதே அரசாங்கத்தின்
உத்தியோகபூர்வ நிலைப்பாடாக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழர்களின்
உரிமைப் போராட்டம் ஆயுதப்
போராட்டமாக மாறுவதற்கு முன்னரான காலகட்டத்தின் இலங்கை அரசியலைப் பற்றி இப்போது
தென்னிலங்கை அரசியல் சமுதாயம்
எதையுமே பேசுவதில்லை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை
நிறைவேற்றக்கூடிய இணக்கத் தீர்வொன்றைக்
காண்பதற்கு அரசாங்கங்கள் முன்வராத காரணத்தினாலேயே வேறுவழியின்றி தமிழ்த் தீவிரவாத
இயக்கங்கள் தோன்றின. இதற்குப் பிறகே இனநெருக்கடியில் வன்முறை உக்கிரமடைந்து
உள்நாட்டுப் போராக மாறியது. வன்முறைப் போராட்டம் தீவிரமடைந்ததற்கான அரசியல்
காரணிகளை மறந்துவிட்டு இன்று அந்த வன்முறைகளை மாத்திரமே பிரச்சினையாக தென்னிலங்கை
அரசியல் சமுதாயம் நோக்குகிறது. இத்தகைய சூழ்நிலை சிறுபான்மை இனங்களின்
நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அவமதிக்கவும் இலங்கையில் சிறுபான்மை
இனத்தவர்களின் அந்தஸ்து பற்றிய அவதூறான கருத்துக்களைப் பரப்பவும் வாய்ப்பானதாக
இருக்கிறது
நன்றி: தினக்குரல்.காம்
http://www.thinakkural.com/news/2008/9/29/editorial_page59066.htm |