| 
  நூலறிமுகம்: அங்கொடையின் அழகு!
 - 'டாகடர் ' எம்.கே.முருகானந்தன் -
 
 
  "அங்கொடைக்குத்தான் 
  உன்னை அனுப்ப வேணும் போலை கிடக்கு" என்ற வசனத்தை உங்களுக்கு ஒருவரும் முகத்திற்கு 
  முகம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அர்த்தம் இல்லாமல் பேசுபவரைப் பார்த்து 
  யாராவது இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. 
  பைத்தியக்கார்களினதும், லூஸ் பிடிச்சவர்களதும் இறுதி இடமாக அது அர்த்தப்படும் 
  என்பதை அங்கொடை பற்றிக் கேள்விப்படாத அயலவர்களுக்காகச் சொல்லி வைக்க 
  வேண்டியுள்ளது. சக மனிதனை அவமானப்படுத்துவது போலென்பதால் பைத்தியம், லூஸ் போன்ற 
  வார்த்தைகள் தவிர்த்து, மனநலம் குன்றியோர் என இப்பொழுது அழைக்கிறோம்.
 
 கருமையும், துயரமும், நம்பிக்கையீனமும், கொடூரமும் நிறைந்ததான பிம்பத்தைத்தான் 
  அங்கொடை என்ற சொல் எம் மீது
 படியவிட்டிருக்கிறது. அது எம்மில் விதைத்திருக்கும் கருமை படர்ந்த பிம்பங்களை 
  உடைத்தெறிந்து ஒரு புத்தம் புதிய எண்ணக்கருவை,
 வண்ணக் குழைவோடு நம்பிக்கை இளையோடும் வெளிச்சத்தைப் பாச்சுகின்ற அனுபவம் 
  அண்மையில் எனக்குக் கிட்டிற்று.
 
 அது ஒரு புகைப்படக் கண்காட்சி. வெள்ளவத்தை தழிழ்ச் சங்கத்தில் கடந்த டிசம்பர் 
  30ம் திகதி நடைபெற்றது.(மிகத் தாமதாமாக பதிவு
 செய்யும் எனது சோம்பேறித்தனத்தை மன்னிப்பீர்களாக). மனித வெள்ளத்தில் மிதக்கும் 
  வெள்ளவத்தையின் உருத்திரா மாவத்தையில் தழிழ்ச்சங்க இரண்டாவது மாடி மண்டபத்தில் 
  அங்கொருவர் இங்கொருவராக புகைப்படங்களை சிலர் அக்கறையோடு பார்த்துக் 
  கொண்டிருந்தனர். எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மதுசூதனன், கே.ஆர்.டேவிட், தாஸ் 
  போன்ற தேடல் நிறைந்த சில இலக்கியவாதிகளை அங்கே நான் நின்ற சொற்ப நேரத்தில் 
  காணக்கிடைத்தமை ஓவியம் பற்றிய எமது பிரக்ஞை வலுப்பெறுவதான நம்பிக்கைக்கு 
  வலுவூட்டுவதாக இருந்தது. புகைப்படம் பற்றிய கலைவறுமை மிக்க சூழலில் கலை உணர்வு 
  மிக்க சிலரையாவது சந்திக்கவும் அளவளாவவும் கிடைத்தது சந்தோசமே. அந்த ஞாயிறு 
  டொக்டர் சிவதாஸ் 'அங்கொடை எனது லென்ஸ்க்கு ஊடாக' என்ற தலைப்பில் ஒழுங்கு 
  செய்திருந்த அற்புதம் தான் அது. இவர் அங்கொடை என்ற அந்த வைத்தியசாலையின் மனநல 
  வைத்திய நிபுணரும் கூட.
 
 பல அற்புதமான வண்ணப் புகைப்படங்கள் என்னைக் கவர்ந்தன. இருளிலிருந்து ஓளியை 
  நோக்கிப் பாயும் கமராவின் பார்வை பல
 புகைப்படங்களில் எங்களை அசத்துகின்றன. அவை யாவும் அங்கொடை விடுதியின் கருமை 
  படர்ந்த உட்புறமிருந்து ஒளி மிக்க
 வெளியைத் தரிசிக்கும் புகைப்படங்கள். ஜன்னல்களூடாக, திறந்த கதவு ஊடாக, நீண்ட 
  விறாந்தையின் மங்கிக் கிடக்கும் பகுதியிலிருந்து ஒளி பாயும் பகுதியை நோக்கி எனப் 
  பல விதம். இவை ஒவ்வொன்றிலும் ஒளி, வெளி, வண்ணம், கருமை யாவும் ஒன்றோடு ஒன்று 
  கூடியும் மருவியும் ஜாலவித்தை காட்டுகின்றன. இவ்வாறான காட்சிகளைச் 
  சிறைப்பிடித்தமை, அக் கைதேர்ந்த கலைஞனின் கலைஞானத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.
 
 எடுத்துக்காட்டாக கருமையும் புதிரும் சூழ்ந்திருக்க முகம் புதைத்து குத்திட்டு 
  உட்கார்ந்திருக்கும் மனிதனின் பின்னணயாக பிரகாசமாக
 ஒளிரும் வெளி மண்டபம். படம் அருமையான கலைப்பதிவு எனபதற்கு மேலாக எதையாவது 
  உணர்த்துகிறதா? குடும்பத்தாலும்
 சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு மனநோய் விடுதிகளுக்குள் ஒடுங்கிக் கிடைக்கும் 
  மனிதத்திற்கான நம்பிக்கை ஒளியா அதுவெனச்
 சிந்திக்கிறோம்.
 
 சரிந்து விழவிடாது இரும்புச் சட்டங்களால் பிணைத்து வலிமையூட்டப்பட்ட பழமை வாய்ந்த 
  கட்டிடம். அதன் வர்ணம் பூசப்படாத கோபுரத்திலிருந்து சரிந்து விழும் இடிதாங்கிக் 
  கம்பியில் உல்லாசமாக அமர்ந்திருக்கும் கணவாய்க் குருவி. அதன் வண்ணம் நீலம், 
  பின்னணியில் ஒளிரும் வானம் மற்றொரு நீலம் என அற்புதமாக விரிந்தது. இதையொத்த 
  மற்றொரு புகைப்படத்தில் அன்ரனா கம்பியில் கூடுகட்டி வெளியே காத்திருக்கும் 
  பாசமிகு மற்றொரு உயிர், உள்ளே முட்டையா? குஞ்சா? எதுவானலும் கடமையுணர்வும் 
  பாசத்தின் ரேகைகளும் எம்மனத்துள் படர்கிறது.
 
 இன்னொரு புகைப்படம் பாசத்தின் நெகிழ்வை காட்சி மொழியில் சித்தரிக்க முயல்கிறது. 
  காரியமற்ற வெற்றுப் பார்வையும் உணர்வற்ற
 முகத்தசைகளுமான மனச்சிதைவு நோயாளி. அவன் முகத்தை ஒரு கையால் தாங்கி மறுகையால் 
  அணைக்கும் பாசமிகு தாயினை ஒத்த
 தாதி. மாறுபட்ட உணர்வுகளின் சங்கமம். இப்படி எத்தனை தாய்மார் எம்மிடையே என 
  எண்ணிக் கண்கலங்கத்தான் முடியும்.
 
 
  கவிதை என்றால் வானத்தை, நிலவை, மேகத்தை மற்றும் இயற்கைக் காட்சிகளையும் எதுகை 
  மோனை போன்ற கட்டுக்குள் நின்று 
  பாடும் காலம் ஒன்றிருந்தது. இன்று கவிதையானது கட்டுக்களை அறுத்து, பல திசைகளில் 
  கிளைகளை விரித்து புது மலர்ச்சி 
  கண்டுள்ளது. அது போலவே சிவதாசன் கமராவும் அகப்பட மறுத்து ஏய்புக் காட்டும் எல்லை 
  தாண்டும் பிம்பங்ளை, கமராக் கூண்டுக்குள் 
  ஆழ்த்தி அடக்க முயல்கிறது. ஒரு காட்சியின் புலப்பாடுகளை, நவீன கமராவின் உச்ச 
  செயற்பாட்டுத்திறனை தன்வசப்படுத்தி 
  வெளிப்படுத்தும் அவரது கலையுணர்வானது கமராவின் மொழியாக வசீகரமாக பல இடங்களில் 
  வெளிப்படுகிறது. 
 ஒரு சில இலைகள் அரசமரத்தின் கொப்பிலிருந்து தொங்குகின்றன. அவ் இலைகளில் சூரிய 
  ஒளியின் சில கீற்றுக்கள, நிழலும் ஒளியுமாக
 விழுந்து மாயத்தோற்றம் காட்டுவதை, மிகவும் அரிதான ஒரு கணத்தில் தனது கமராவில் 
  அடைத்துள்ளார். அந்த ஒரு அற்புதம் நிகழும் செகண்டில் படம் பிடிப்பதற்காக எத்தனை 
  மணித்துளிகளை செலவளித்திருப்பார் என எண்ணும்போது, உச்சங்களை எட்டுவதற்காகக் 
  காத்திருக்கும் கலைஞனின் பொறுமை வியக்க வைக்கிறது.
 
 சிட்டுக் குருவிகளுக்கு, உணவிற்கான தன்வீட்டு அரிசியை அள்ளி எறிந்து, அவை உண்னும் 
  அழகில் நிறைவு கண்டவன் பாரதி. புறாக்கள்
 உணவு தேடி முற்றத்தில் குவியலாக சிறகடித்து இறங்கும் கணத்தில் மனம் நெகிழ்ந்தவர் 
  போலும் சிவதாஸ். இவை தவிர நோயுற்ற
 மனிதரும், அவர்கள் வாசம் செய்யும் கட்டிடங்களும், தாதியரும், ஏனைய ஊழியரும், 
  அங்குள்ள மரம்,செடி, பறவைகளும், அழகிய
 சுற்றாடலும் அவரது கமராவின் பார்வைக்குள் புகுந்து அழகிய வண்ணப் புகைப்படங்களாக 
  துளிர்த்துக் கொண்டு வருகின்றன.
 இயற்கையும் செயற்கையும் இணைந்த அங்கொடை வைத்தியசாலையின் இருப்பை, அதன் பல்வண்ணத் 
  தெறிப்பை காட்சி மொழிக்குள் வசப்படுத்தி எமது இதயத்தின் மொழியோடு 
  குழையவிடுகிறார்.
 
 இவற்றிற்கு மேலாக Angoda through my lens என்ற 110 பக்கங்கள் அடங்கிய அவரது 
  புகைப்படங்களின் நூல் அங்கு விற்பனைக்குக்
 கிடைத்தது. இந்நூலின் உள்ளடக்கம் அடங்கிய பக்கத்தில், எழுத்துகளின் வெளியாக 
  அமைவது இலையுதிர்ந்த மரத்தின் உச்சிக் கிளையில்
 தொங்கிக் கிடக்கும் கிழிந்த பட்டம். அதன் பின்னணியாக நீலவானத்தில் இரு வெண்மேகத் 
  துளிகள் கவிதையாக இனித்து, உள் நுழைய இசைவுடன் அழைக்கின்றன. அதேபோல ஆசிரியரின் 
  என்னுரைக்கு அழகு சேர்க்க அருகமைந்த ஓவியமானது திறந்த யன்னலூடாக ஊர் ஓடு போட்ட 
  கூரையை அண்மையில் துல்லியமாகவும், மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியை 
  தூரப்பார்வையாகவும் உள்வாங்கியுள்ளது.
 
 இந் நூலிலுள்ள புகைப்படங்கள் ஏழு வகைகளாகத் தொகுக்கப்படுள்ளன. மிருகங்களும் 
  பறவைகளும், இலைகளும் மலர்களும், சிகிச்சையும் கவனிப்பும், உணர்வுகளின் 
  வெளிப்பாடு, அசைவும் செயற்பாடும், வராந்தாக்களும் கட்டடற் கலையும், கலையும்
 ஓவியங்களும் ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
 
 மிருகங்களும் பறவைகளும் பகுதியில் நாய், பூனை, எருது, வண்ணாத்திப்பூச்சி, புறா, 
  குருவிகள் போன்றவை அற்புதமான கோணங்களில் சிறைப்பிடிக்கப்பட்டு எமது பார்வைக்குக் 
  கிடைக்கினறன. அங்கொடைக்கு செல்லும் பாதையின் அருகிலுள்ள புற்பத்தையினுள் தலை 
  மட்டும் வெளித்தெரியப் படுத்திருக்கும் எருதும் அதன் தலையில் ஊரும் பூச்சியைப் 
  கொத்துவதற்காகக் காத்திருப்பது போன்றமர்ந்திருக்கும் கொக்கும் என்னை மிகவும் 
  கவரந்த ஒவியங்களில் ஒன்று.
 
 இலைகளும் மலர்களும் இயற்கைப் பிரியர்களுக்கு அரு விருந்து. கற்றாளை, தேமா, தாமரை, 
  ஓர்க்கிட், அன்தூரியம், மல்லிகை,
 சீனியாஸ், அரசம் இலை என்ற இயற்கையின் வெவ்வேறு வண்ணக் கோலங்களுடன், தூய வெண்மையான 
  காளானும் இப்பிரிவில்
 அடங்குகின்றன. மொட்டுக்குள் சிலிர்க்கும் ரோஜாவும், விரிந்து மலர்ந்து அழகூட்டிய 
  பின் இன்று வாடத் தொடங்கும் மலரும் ஒரே
 கிழையில் சேர்ந்திருப்பதானது வாழ்வின் தவிர்க்க முடியா எல்லைகளை எமக்கு 
  உணர்த்திச் சித்தனைக்கு விருந்தளிக்கினறன. பூச்சி அரித்து ஓட்டை விழுந்த இதழ் 
  கொண்ட பூவிலும் ஒருவித அழகிருக்கிறது என்பதை மற்றொரு புகைப்படம் எடுத்துக் 
  காட்டுகிறது.
 
 அங்கொடையில் வாழும் நோயாளிகளையும், இங்கு பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர், 
  சிற்றூழியர் போன்றோரின் நாளந்த வாழ்வியல்
 கோலங்கள், சிகிச்சையும் கவனிப்பும் என்ற வகைக்குள் அடங்குகின்றன. நோயளர்களின் 
  உடற்பயிற்சி, நோயாளியுடனான வைத்தியர் தாதியரின் ஊடாட்டம், பாராமரிப்பு, 
  ஊசிபோடுதல், உணவுண்ணல் என இன்னும் பல.
 
 உணர்வுகளின் வெளிப்பாடு பகுதியில் உள்ள புகைப்படங்கள், அங்குள்ளவர்களின் மன 
  மகிழ்வையும் நிறைவையும் காட்டும் மனித
 முகங்களின் அண்மைக் காட்சிகளாகும்.
 
 கலையும் ஓவியங்களும் என்ற பகுதியில் அந்நோயாளர்கள் கீறிய ஓவியங்களினதும், 
  கைவினைப் பொருட்களினதும் புகைப்படங்கள்
 அடங்குகின்றன. மனம்பேதலித்த அவர்களின் கலை உணர்வையும் ஆற்றலையும் 
  இப்புகைப்படங்கள் வெளிக்கொணர்கினறன. மனித
 மனத்தின் நோய்களை மாத்திரைகளும் ஊசிகளும் மாத்திரம் குணப்படுத்துவதில்லை. அவர்களை 
  ஆற்றுப்படுத்துவதும் முக்கியமானது. ஆற்றுப்படுத்துவதின் அங்கமாக ஆடல் பாடல் போன்ற 
  அரங்கச் செயற்பாடுகள் மட்டுமின்றி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் செய்தல் 
  போன்ற கலை வெளிப்பாடும் உதவும் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன.
 
 'நலமுடன்' என்பது டொக்டர் சிவதாஸ் அவர்கள் ஆழிப்பேரலையின் பின்னான உளவியல் 
  தாக்கங்களையும் இவற்றிலிருந்து விடு
 படுவதற்கான மார்க்கங்களையும் பற்றி முன்பு எழுதிய ஒரு நூலாகும். சித்திரை 2005ல் 
  வெளியான இந்நூல் 2006 ஐப்பசியில் மீள்
 பதிப்பும் கண்டதாகும். அவர் ஒரு கவிஞரும் கூட.
 
 நீளும் கரையெங்கும்
 அலைமீது குதித்தோடினர்
 எம் மழழைகள்
 
 வாழும் நிலமதில்
 புதையுண்டனர் சகதியில்
 
 மழழை மொழிச்சிறார்கள்
 பேச்சிழந்து முண்டமாகினர்
 நகையழகினை புதைத்துவிட்டு
 புலம்பியழுதோம்.
 
 இது நலமுடன் நூலில் எழுதப்பட்ட கவிதையாகும்.
 
 புகைப்படக்கலையில் தேர்ச்சியோ, தொழில் நுட்ப அறிவோ, அழகியல் நெழிவு சுளிவுகளோ 
  தெரியாத ஒரு சாமானியனின் பார்வை இது
 என்பதை புரிந்திருப்பீர்கள். வலைப்பின்னலில் உலாவும், இக்கலையில் நிபுணத்துவம் 
  கொண்ட, ஆர்வலர்கள் மேலும் தெளிந்த
 பார்வையை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
 
 சிறுகதைப் புனைவில் உச்சங்களை எட்டிய எழுத்தாளரான எஸ்.ரஞ்சகுமார் ஒரு கைதேர்ந்த 
  புத்தக வடிவமைப்பாளனும் கூட என்பதை பறைசாற்றுமாப் போல அமைந்துள்ளது இப் புகைப்பட 
  நூலின் கலைநயமிக்க வடிவமைப்பு. பூபாலசிங்கம் புத்தகசாலையினரது வெளியீடு இது. விலை 
  குறிப்பிடப்படவில்லை.
 
 'சிவதாசின் ஒளிப்படக்கருவி, ஒவ்வொன்றிலும் உயிர்ப்பைத் தேடுகிறது…. இந்த 
  ஒளிப்படங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை
 நோயாளிகளுக்கு மாத்திரமின்றி பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.' என 
  எஸ்.கே.விக்னேஸ்வரன் சரிநிகர் இதழில் எழுதியிருந்ததை இவ்விடத்தில் 
  ஞாபகப்படுத்தலாம். உண்மைதான். அங்கொடை எனது லென்ஸ்க்கு ஊடாக என்ற இந்த நூலிலும் 
  கண்காட்சியிலும் காணப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது அவை வெறுமனே 
  அங்கொடையை மட்டும் நோக்குபவையாகத் தெரியவில்லை. அதற்கு மேலாக மனிதனை, அவனது 
  வாழ்வை, ஊடாட்டத்தை, உணர்வுகளை, எதிர்பார்புக்களை, பூரணத்துவத்தை அவாவும் 
  அபிலாசைகளை எனப் பரந்த களத்தை எம்முன் வைக்கின்றன. உயிருள்ளவை மட்டுமின்றி 
  கட்டிடடம், தளபாடம் போன்ற சடப்பொருள்களும் கூட அவரது கமராவின் வில்லைகளுடாக 
  உயிர்ப்புற்று எம்முடன் கதையாடுகின்றன எனலாம்.
 
 மனநல வைத்திய பேராசிரியர் டியந் சமரசிங்க முன்னுரை வழங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் 
  மனநல வைத்திய பேராசிரியர் தயா
 சோமசுந்தரம் பின்னட்டையில் தன் கருத்துக்களை சுருக்கமாக வழங்கியுள்ளார். அதில் 
  அவர் டொக்டர்.சிவதாசின் வைத்தியத் திறமைக்கு மேலாக " மனித வாழ்வின் உறவு 
  முறைகளையும் அவற்றின் பல்வேறு மாதிரி உருக்களையும் கலைக் கண்ணோடு பாரக்கக் கூடிய 
  அரிய ஆற்றலையும் பெற்றுளார்" என விதந்து போற்றுவது வெற்று வார்ததைகள் அல்ல. 
  நெஞ்சில் இருந்து எழும் சத்திய வாக்கியம் என்றே நம்புகிறேன். வைத்தியர்களாகிய 
  எங்கள் உலகில் அத்தகைய அரிய கலையாற்றல் பெற்ற ஒருவராகவே அவரை நானும் கருதுகிறேன். 
  அவரது புகைப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது 
  என்றே எனக்குத் தோன்றுகிறது.
 
 பார்க்கவும் ரசிக்கவும், உள்ளத்தை கனியவைக்கவும் மட்டுமின்றி பாதுகாத்து வைக்க 
  வேண்டிய நூலும் கூட.
 
 எம்.கே.முருகானந்தன்
 வீரகேசரி 11.05.2008ல் வெளியான கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவம்
 
 Dr.M.K.Muruganandan
 Family Physician
 visit my blogs
 http://hainallama@blogspot.com
 http://www.geotamil.com/pathivukal/health.html
 http://suvaithacinema.blogspot.com/
 |