(மூலம் - யாஹூ.காம்)
இலங்கையை எதிர்த்திட இந்திய துணை வேண்டும்: முதல்வர் கருணாநிதி!
"நம்முடைய இனத் தமிழர்களை ஒழிப்பதற்கு இலங்கை அரசு போரிலே ஈடுபடுமேயானால், அப்போது
எங்களுக்கு இந்திய அரசு துணையாக இருக்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை
கேட்டுக்கொள்கிறேன்," என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும்
எனும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான
கருணாநிதி பேசியது:
நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனை குறித்து பேச வேண்டிய, செயல்பட வேண்டிய
உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி, நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா
துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு விளக்கம்
அளித்து, இதற்கு தக்கதோர் வழிகாண வேண்டும். தமிழர்களை இலங்கைத் தீவிலே
காப்பாற்றியாக வேண்டும் என்ற அபயக்குரலை இங்கே எழுப்புவதற்காக கூடியிருக்கிறோம்.
இன்றைக்கு போராட்டத்தை அறிவிக்கப்போகிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நமது ஆசைகள்
நிராசைகளாகுமேயானால், நமது எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருமேயானால்,
அதைப்பற்றி நாம் ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை தவிர்த்திட நான்
விரும்பவில்லை.
இலங்கை அரசுக்கு ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு இந்தியப்
பேரரசு துணையாக மாறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த
கூட்டம்.
சிதம்பரத்தில் 29-1-1956-ல் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் "தாய் தமிழகத்தில்
உள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்"
என்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். பொன்னம்பலனார் வழிமொழிந்தார். இன்றைய
தீர்மானமும் அதுதான்.
தமிழகத்திலே வாழ்கின்ற தாய்தமிழகத்து தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களின்
இன்னலை போக்க நமது எல்லா ஆதரவையும் அளிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம் என்பதை
மறக்கக்கூடாது.
இதை, ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானமாகக்கி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும்,
இந்திய அரசை நடத்துகின்ற தலைவர்களுக்கும், சோனியாகாந்திக்கும் அனுப்பிவைத்தோம்.
அந்தத் தீர்மானத்திற்கு... பலன் இல்லாமல் போகவில்லை. எனது வேண்டுகோளுக்கு உடனடியாக
பதில் அளிக்கிறேன் என்று சொல்லி தொலைபேசி மூலமாக பிரதமர் என்னை தொடர்பு கொண்டு
பேசினார். இருக்கும் விவரங்களை எல்லாம் நான் விவரித்து சொன்னேன்.
எங்களால் தமிழகத்தில் தொடர்ந்து இனி வாழ முடியுமா? என்று எங்களுக்கு தெரியவில்லை.
நாள்தோறும் செத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் மன்மோகன்சிங்கிடம் சொன்னேன்.
'கவலைப்பட வேண்டாம். நான் உறுதியாக சொல்கிறேன், என்னை நம்புங்கள்' என்று இந்திய
பிரதமர் எனக்கு வாக்களித்தார்.
புதுடெல்லியிலே உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து நிராயுதபாணியாக
உள்ள இலங்கை தோழர்களை கொல்வது குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்;
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு
கொண்டுவரப்பட வேண்டும்; இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும்.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பத்திற்கும் இனி ஆளாகவே
கூடாது என எடுத்துக்கூறியபோது, மிகுந்த அக்கறையுடனும், கவலையுடனும் தழுதழுத்த
குரலில் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை
நம்புங்கள் என்று அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தன, எனக்கு நம்பிக்கை
ஊட்டியவைகளாகவும் இருந்தன.
நம்முடைய இனத் தமிழர்களை ஒழித்துத்தான் தீருவோம் என்ற இலங்கை கச்சைகட்டிக்கொண்டு
இந்த போரிலே ஈடுபடுமேயானால், தமிழர்கள் கைகட்டிக்கொண்டு இருக்கமுடியாது. அப்படி ஒரு
நிலை ஏற்படும்போது இந்திய அரசு எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இந்தக்
கூட்டத்தின் வாயிலாக பிரதமருக்கு எடுத்துக்கூறுகிறேன்.
பிரதமர் என்னிடத்திலே உறுதியளித்தது மட்டுமல்லாமல், உடனடியாக இந்திய பாதுகாப்பு
ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் பேசச் சொன்னார்.
அவரை எச்சரித்து இப்படி தமிழகத்தில் இருந்து அபயகுரல் வந்திருக்கிறது, கண்டனக்குரல்
வந்திருக்கிறது, நீங்கள் எங்கள் துயரத்தை அறிந்து ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்
என்ற எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்கு செய்துள்ளது என்ற செய்தி
மகிழ்ச்சியானது.
இது மீறப்பட்டால், அதற்கு பிறகு நாங்கள் இந்த அரசு எங்களுக்கு தேவையா? என்கின்ற
அந்த கேள்விக்கு விடைகண்டாக வேண்டும் என்பதை பவ்வியமாக, அடக்கமாக, அமைதியாக
எடுத்துரைக்கிறேன்.
அதே நேரத்திலே நான் தமிழன், தமிழ்நாட்டுமக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு தமிழன்,
தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் காவலாக நியமிக்கப்பட்ட ஒரு காவலன். அந்த தமிழன்
இங்கே செத்தால் என்ன? இலங்கையிலே செத்தால் என்ன? எங்கே செத்தாலும் அவன் தமிழன்
தமிழன்தான். எனவே அந்த தமிழனை காப்பாற்ற நாங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் இந்திய
அரசே எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம், என்றார் முதல்வர்
கருணாநிதி.
(மூலம் - யாஹூ.காம்)
இலங்கை துணைத் தூதரிடம் எம்.கே.நாராயணன் கண்டனம்
சென்னை 7 அக்டோபர் 2008
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக டெல்லியிலுள்ள அந்நாட்டு துணைத் தூதரை நேரில்
சந்தித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கவலையும், கண்டனமும்
தெரிவித்தார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம்
தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து டெல்லியில்
உள்ள இலங்கை தூதரிடம் இந்தியாவின் நிலையை விளக்குமாறு பிரதமர் கூறினார்.
அதையடுத்து, டெல்லியில் உள்ள இலங்கை துணைத் தூதர் பலிதகனேகோடாவை தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரில் அழைத்தார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் குறித்தும், அப்பாவி
தமிழர்கள் கொல்லப்படுவது குறித்தும் இந்தியாவின் கவலையையும், கண்டனத்தையும் இலங்கை
துணை தூதரிடம் அவர் தெரிவித்தார்.
ராணுவ நடவடிக்கை காரணமாக, அப்பாவி தமிழர்கள் அதிக அளவில் உயிர் இழந்து வருவது பற்றி
அவர் அதிருப்தியும், கவலையும் தெரிவித்தார்.
இலங்கையின் வட பகுதியில் ராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பும், அதன் விளைவுகளும்,
இந்தியாவில் பெருத்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
எனவே, பெரிதும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு இலங்கையை அவர்
கேட்டுக்கொண்டார். தமிழர்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற மனநிலைக்கு தீர்வு
காணுமாறு வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை எந்த
வகையிலும் தடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைவை
தடுக்க, அரசியல் தீர்வு காணும் முயற்சியை புதுப்பிக்குமாறு நாராயணன்
கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் பற்றியும் அவர்,
இலங்கை துணைத் தூதரிடம் பெரிதும் கவலை தெரிவித்தார்.
கடந்த மாதம் 27 மற்றும் 28-ந் தேதி நடந்த தாக்குதல்கள் பற்றி சுட்டிக்காட்டிய அவர்,
சமீபத்தில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட புரிந்து கொள்ளலுக்கு விரோதமாக
இத்தாக்குதல் நடந்து வருவதாக அவர் கூறினார்.
இத்தகைய தாக்குதல்களை இலங்கை கடற்படை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீனவர்கள்
பிரச்சனையை மனிதாபிமானத்தோடும், வாழ்வாதார பிரச்சனை ஆகவும் அணுக வேண்டும் என்றும்
எம்.கே.நாராயணன் வலியுறுத்தினார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - யாஹூ.காம்) |