| எனக்குத் தெரிந்த முருகையன் 
  ~ டிசே தமிழன் -
 
 1.
 
 
  இன்று 
  முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு 
  நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த 
  படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி 
  முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, 
  சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் 
  தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் 
  முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய 
  முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக 
  அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை. 
 பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் 
  எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட 
  கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், 
  பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக 
  மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் 
  பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று 
  முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, 
  முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.
 
 பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் 
  காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் 
  பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் 
  வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது 
  திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் 
  வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் 
  போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் 
  மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் 
  நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான 
  ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.
 
 முருகையனின் படைப்புக்கள் முழுதையும் நான் வாசிக்கவில்லை என்பதை இங்கே 
  குற்றவுணர்ச்சியுடன் தான் கூறவேண்டியிருக்கின்றது. தொகுப்பாய் முருகையனை 
  வாசித்ததைவிட உதிரிகளாய் வாசித்ததே அதிகம். கவிதைத் தொகுப்புக்கள் என்று 
  பார்க்கும்போது அவரது 'ஆதி பகவன்' மற்றும் 'ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்' 
  ஆகிய இரு தொகுப்புக்களை மட்டுமே வாசித்திருக்கின்றேன். இந்த நிகழ்வில் 
  பேசுவதற்காய், முருகையனின் வேறு கவிதைத் தொகுப்புக்கள் இருக்கின்றனவா என்று சில 
  நண்பர்களிடம் வினாவியபோது முந்தைய காலங்களில் வெளியிட்டவை இப்போது அச்சில் இல்லை 
  என்றார்கள் அவர்கள். நான் தேடியவை, முருகையனின் 'நெடும்பகல்', 'நாங்கள் மனிதர்', 
  'அது அவர்கள்', 'மாடுகளும் கயிறுகள் அறுக்கும்' போன்ற கவிதைத் தொகுப்புக்களாகும்.
 
 2.
 முருகையனோடு உறவு என்பது எனக்கு அவரது படைப்புக்களினூடாக மட்டும் என்பதால் 
  முருகையனை முன்வைத்து ஈழம் மற்றும் புலம்பெயர் சூழலைப்பற்றி ஒரு சில அவதானங்களை 
  முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
 
 தமிழுக்கு தொடர்ச்சியான நீண்ட மரபு இருப்பதை சங்க காலத்திலிருந்து முறையாகப் 
  பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகத்தின் செழிப்பு என்பது, அது தனது 
  மரபிலிருந்து அகழ்ந்து, தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, தான் வாழும் 
  காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுப்பது என்பதுதான். அவ்வாறு, நிகழ்காலத்தின் 
  சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத ஒரு சமூகம், இறுதியில் முற்றுமுழுதாக அழிந்து 
  போகின்றது; அல்லது இன்னொரு சமூகத்தோடு தன்னை இரண்டறக் கலக்கச் செய்கின்றது. இது 
  மொழிக்கும் பொருந்தும், கலாசாரம் பண்பாடுகளுக்கும் பொருந்தும். இதைத்தான் 
  டார்வின் 'தக்கண தப்பிப் பிழைக்கும்' என்றார். மார்க்சும் வேறொரு விதமாக, 
  'மாற்றம் என்பதே மாறாதது' என்றார். முருகையனும், 'வேண்டாத குப்பை விலக்கி, மணி 
  பொறுக்கி/அப்பாலே செல்லும் அறிவோ குறைவு/ ஓ/ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை 
  எங்களுக்கு;/ பண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு' என்றொரு கவிதையில் 
  எச்சரிக்கவும் செய்கின்றார்.
 
 மூத்தோர்களை மதிக்காத ஒரு சமூகம் வளமையுடைய ஒரு சமூகமாக இருப்பதில்லை. இதைத்தான், 
  ஒரு முதியவர் இறந்துபோகும்போது 'ஒரு வாசிக சாலையே அழிந்துபோகின்றது' என்றொரு 
  சீனப்பழமொழி கூறுகின்றது. முன்னே சென்ற மூத்தோர்களின் தோளில் நின்று ஏறிப் 
  பார்த்தாலே நாம் இன்னும் முன்னேற முடியும். ஆனால் நம் தமிழ்ச் சமூகத்தில், நாம் 
  நம் முன்னோர்களை எந்தளவுக்கு மதித்திருக்கின்றோம்? முருகையன் போன்ற 
  படைப்பாளிகளின் படைப்புக்களை எந்தளவுக்கு மறுவாசிப்புச் செய்திருக்கின்றோம்? 
  இவ்வளவு ஆளுமையுள்ள முருகையனை நாம் எந்தளவுக்கு பொதுவெளியில் 
  அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்?
 
 சிவத்தம்பி அவர்கள் முருகையன் பற்றிய நினைவுக்குறிப்பில், முருகையனினதும் 
  மஹாகவியினதும் இழப்பை பாரதி, பாரதிதாசனின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பதாகக் 
  கூறுகின்றார். முருகையன் முக்கியமான ஒரு புலமைத்துவ கவிஞர் (intellectual poet) 
  என்றும் குறிப்பிடுகின்றார். அத்தோடு தனது வாழ்க்கைக்காலத்தில் முருகையனின் 
  முழுத்தொகுப்பும் வெளிவந்து தமிழகத்திலும் அது பரவலாக அறிமுகப்படுத்தப்படுவதைப் 
  பார்க்கவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார்.
 
 3.
 இப்போது சற்று காலத்தைப் பின்னோக்கி நகர்த்துவோம். எங்களுக்கு கைலாசபதி, 
  சிவத்தம்பி, மு.தளையசிங்கம், சிவசேகரம், நுஃமான் போன்ற வலுவான விமர்சகர்களும், 
  தத்துவப் புலமை உள்ளவர்களும் கிடைத்திருக்கின்றார்கள். இன்று சிவத்தம்பியையோ, 
  கைலாசபதியையோ விமர்சித்து, கடந்துபோகின்ற எத்தனையோ தமிழகத்து அறிவுசார்துறையைச் 
  சேர்ந்தவர்கள், ஈழத்து அறிவுஜீவிகளை தங்கள் எழுத்துக்களில் எங்கோ ஓரிடத்தில் 
  அங்கீகரித்தே போகின்றார்கள். தங்களுக்கு இவ்வாறான கலை, இலக்கியங்களில் ஈடுபாடு 
  வந்ததற்கு ஈழத்துத் திறனாய்வாளர்களும் ஒருவிதத்தில் காரணம் என்றே சிலர் கூறியும் 
  இருக்கின்றார்கள். அந்த திறனாய்வு மரபு இப்போது எங்கே போயிற்று? ஈழத்தில் 
  தசாப்தங்களாய் நிகழ்ந்துகொண்டிருந்த போர் ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். 
  ஈழத்தில் இருப்பவர்களுக்கு அது ஒருவகையில் பொருந்தவும் கூடும். ஆனால் 
  புலம்பெயர்ந்து இருப்பவர்களிடையில் இருந்து கூட, இந்த மரபின் தொடர்ச்சி ஏன் 
  வளர்க்கப்படவில்லை?
 இந்தக் கேள்வியை ஏன் இங்கே எழுப்புகின்றேன் என்றால், அப்படியான ஒரு மரபு 
  தொடர்ச்சியாய் வளர்ச்சி பெற்றிருக்குமானால, சிவத்தம்பி அவர்கள் இன்று 
  கவலைப்படுவதைப் போல, முருகையனை இனியேனும் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற 
  கேள்வி வந்திருக்காது. எனெனில் இப்படியாய் வாசிக்கவும் விமர்சிக்கின்றச் 
  செய்கின்றதுமான ஒரு மரபு வந்திருந்தால், மூத்த தலைமுறையை அது ஆழமாக வாசித்து, 
  விரிவான தளத்தில் அறிமுகம் செய்திருக்கும். எங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன 
  செய்தார்கள், எத்தகைய தளங்களில் செயற்பட்டார்கள் போன்ற விபரங்கள் அறியாமலே அடுத்த 
  தலைமுறைகள் வரத்தொடங்கிவிட்டன இந்த அவல நிலைதான், இன்றைய ஈழத்து/புலம்பெயர் 
  கவிதைகள் தேங்கிப் போய் மேலே நகரமுடியாது மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்கும் 
  காரணம். இன்று கவிதை எழுதுகின்ற பெண்கள் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை 
  தரக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். நாம் நம்மிடையே நமது படைப்பாளிகள் பற்றி 
  விரிவான உரையாடல்களை நிகழ்த்தவே இல்லை. ஒரு குறுகிய வட்டத்தில் எமக்குப் பின்னால் 
  ஒளிர்வது மட்டுமே சூரியன் என்று நினைத்து பிறருக்குப் பின்னால் சுழன்றிருக்கக் 
  கூடிய பிரபஞ்சங்களைக் கைகழுவி விட்டுவிடோம் என்பதுதான் எங்களின் நிகழ்காலத்துச் 
  சோகம்.
 
 ஒரு காலத்தில் கவனித்தோம் என்றால், தமிழகத்தோடு எங்களுக்கு இருந்தது ஒருவகையான 
  கொடுத்தல் வாங்கல் முறை. எங்களிடமிருக்கும் நல்லதை நாங்கள் தருகின்றோம், 
  உங்களிடம் இருக்கும் அதி சிறந்தவைகளை நீங்களும் தாருங்கள் என்ற பரஸ்பரமான 
  நட்புடன் இந்தக் கொடுத்தல் வாங்கல்கள் இருவழிப்பாதைகளில் நிகழ்ந்தன. ஆனால் 
  எப்போது அவர்களிடமிருந்து பெறுவதை மட்டும் பெற்று அதை மட்டும் வைத்து 
  திருப்திப்பட்டுக்கொள்வோம் என்று சுருங்கிக்கொண்டோமோ அப்போதே நாம் தேங்கிப் 
  போனவர்களாய் ஆகிவிட்டோம். கொடுப்பதும் வாங்குவதும் சீராக நிகழ்ந்திருந்தால் நாம் 
  கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம், நுஃமான், தளையசிங்கம், என்றொரு வளமான மரபின் 
  தொடர்ச்சியாக தமிழ்ச்சூழலில் நின்று, இன்று முருகையனைப் பெருமிதமாக வழியனுப்பிக் 
  கொண்டிருந்திருப்போம். ஆனால் அவ்வாறு இல்லாததால்தான், இனியாவது முருகையன் பரவலாக 
  விரிந்த தளத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
 
 எங்களில் பலருக்கு ஒரு காலத்தில் 'கணையாழி'யில் எழுதுவது என்பது, 
  இலக்கியத்திற்கான சிம்மாசானம் கிடைத்துவிட்டதென்ற இறுமாப்பு இருந்திருக்கின்றது. 
  பின்னர் சு.ராவின் 'காலச்சுவடி'ல் எழுதுவது என்பது பெரும்பெறென நினைப்பு 
  இருந்தது. இப்போது எதில் எழுதினால் இலக்கிய அரண்மனையில் தாழ்ப்பாள்கள் திறக்கும் 
  என்று தெரியவில்லை. அதற்காய் முயற்சிப்பவர்களிடம்தான் நாம் கேட்கவேண்டும். இன்றைய 
  ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகளில் பெரும்பாலானோர் தமது தனித்துவங்களை இழந்து, 
  தமிழகத்துக் குழுக்களோடும் தனிநபர்களோடும் ஒட்டிக்கொள்கின்றார்கள். இந்நோய்தான் 
  எங்களவர்களை விரிவான தளத்தில் அறிமுகப்படுத்த முடியாத வீழ்ச்சிக்கு 
  வித்திட்டதெனக் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு தனிநபர்களையும், தமிழகத்துக் 
  குழுக்களோடும் தங்களை அய்க்கியப்படுத்திவர்களுக்கு, தங்கள் தங்கள் பிதாமகர்களைக் 
  காப்பாற்றவும், அவர்கள் சார்ந்திருக்கும் தத்துவச் சார்புகளை நியாயப்படுத்தவுமே 
  இரவும் பகலுமெனப் பொழுது போய்விடுகின்றது. இதற்கு அப்பால் எப்படி தமது 
  மூத்தோர்களையோ, சமகாலத்தவர்களையோ வாசிக்கவோ அறிமுகப்படுத்தவோ நேரம் 
  கிடைக்கப்போகின்றது?
 
 இப்படிக்கூறுவதால் தமிழகத்திலிருக்கும், ஈழத்து/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து 
  உண்மையான அக்கறையுடையவர்களை கீழே இறக்குவதாக எண்ணவேண்டாம். நான் மீண்டும் 
  வலியுறுத்திக் கூறுவது ஒருகாலத்தில் இரண்டு வகையான பாதையில் நடந்த கொடுத்தல் 
  வாங்கல் உறவு இன்று ஒற்றைப் பாதையாக உருவாகிய அவலத்தைத்தான் கவனப்படுத்த 
  விரும்புகின்றேன். பல தனிப்பட்ட உதாரணங்களை கூறி விரிவாக உரையாட 
  விரும்பமிருந்தாலும், இஃதொரு நினைவுப்பகிர்தலாய் இருப்பதால் தவிர்த்துக்கொள்ள 
  விரும்புகின்றேன். இன்றைய இணைய உலகம், தமிழை பல்வேறு தூர இடங்களிலிருந்து விரைவாக 
  எங்கள் வாசல்களுக்கு எடுத்துவருகின்றது. பல தமிழக படைப்பாளிகள்/செயற்பாட்டாளர்கள் 
  எங்களிடமிருந்து எங்கள் வாழ்வை அறிந்துகொள்ள தங்கள் மனங்களைத் திறந்தே 
  வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நமது படைப்பாளிகளையும், இன்னமும் வெளிச்சம் 
  பரவாத படைப்புக்களையும் விரிவாக நாம் தான் அறிமுகப்படுத்தவேண்டும். அதேபோன்று 
  அவர்களிடமிருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் நாம் ஏற்று, எங்களுக்கிடையில் 
  உரையாடல்களை நிகழ்த்திக்கொள்ளவேண்டும்.
 
 4.
 புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கு தமது படைப்புக்களை எவரேனும் விமர்சனம் செய்தால் 
  தலையிலிருந்து கால் வரை எரியத்தொடங்கிவிடுகின்றது. எத்தகைய ஒரு விமர்சனத்தை 
  எவரொருவர் செய்தாலும், அந்தப்படைப்பு ஏதோ ஒருவகையில் விமர்சிப்பவரையும் 
  பாதித்திருக்கின்றது என்ற மேலான எண்ணத்தைப் படைப்பாளிகள் 
  வளர்த்துக்கொள்ளவேண்டும். 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்று ரோலன் பார்த் 
  கூறியதுமாதிரி, வாசிப்பவருக்கும் அவர் தனக்குரிய முறையில் வாசிப்புச் செய்வதற்கு 
  முழுச் சுதந்திரம் உண்டு எனபதைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் எதைக் கொடுக்க 
  விரும்புகின்றேனோ அதை மட்டுமே கொடுப்பேன், கேட்பதற்கு நீ யார் என்று எதிர் வினாத் 
  தொடுக்கத் தொடங்கினால், கிணற்றுத்தவளையாக இருப்பதற்கான தகுதியை நாம் 
  வளர்த்துக்கொள்கின்றோம் என்றுதான் அர்த்தம்.
 
 முருகையன் ஒரு கவிஞ்ராகவும் நாடகப் பிரதியாளராகவும் இருந்திருக்கின்றார் என்பதை 
  நாம் அறிவோம். ஆனால் அவர் மொழிபெயர்ப்புச் செய்வது எப்படி என்பது குறித்து 
  நல்லதொரு நூலை எழுதியுள்ளார் என்பதை எவருமே அதிகம் கவன்படுத்தவில்லை. அதேபோன்று 
  இலக்கியம் குறித்து அவர் எழுதியது ஒரு நூலாக வந்துள்ளது. திறனாய்வாளர்கள் - 
  படைப்பாளிகள் குறித்து முருகையன் 'இன்றைய உலகில் இலக்கியம்' என்ற நூலில் 
  எழுதியுள்ளதைப் பாருங்கள்...
 
 "விமரிசனத்தைக் கண்டு கிடுகிடுத்து நடுங்கும் மனோபாவம் நமது பழம்பெரும் 
  எழுத்தாளர்களிடையும் உண்டு. தங்கள் படைப்பையிட்டு யாராவது, ஏதாவது குறைவாகச் 
  சொல்லிவிட்டால், மனம் நொந்து வாடிப்போய் விடுகிறார்கள், இவர்கள்.
 
 எழுதத் தொடங்கும் இளைய சிறுவர்களிடம் இந்த மனப்பான்மை இருந்தாலும் பரவாயில்லை. 
  அதனை நாம் விளங்கிக்கொள்ளலாம். அவர்களுடைய உணர்ச்சி நொய்ம்மையைக் கவுரவிக்கலாம்; 
  அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட, பேர் பெற்ற எழுத்தாளர்களே 
  விமரிசனத்தைக் கண்டு மிரள்வது நமது இலக்கிய உலகில் உள்ள ஒரு குறைபாடு என்றே 
  தோன்றுகிறது.
 
 “பிரேத பிரிசோதனை செய்வதுபோல இலக்கியத்தை ஏன் வெட்டிக் கிழிக்கிறீர்கள்? கீறிப் 
  பிளக்கிறீர்கள்? இப்படியெல்லாம் செய்தால் அதன் உயிராற்றலாகிய ஆன்மாவின் இராகங்களை 
  நீங்கள் கேட்க மாட்டீர்கள். கலைஞனின் சுயதருமமும் சுயேச்சையும் விகசிதமாவதைக் காண 
  இயலாத குருடர் ஆகிவிடுவீர்கள்;;’’ இப்படியெல்லாம் முறையிடுகிறார்கள், 
  விமரிசனத்துக்கு முகங்கொடுக்கத் தயங்கும் படைப்பாளிகள்.
 
 இன்னும் சொல்லுவார்கள். “பூத்துக் குலுக்கும் மலரின் வாசனையை மூக்கினால் மோந்து 
  சுகித்தல் வேண்டும். பல பல வண்ணக் காட்சியினை விழிகளால் அள்ளி விழுங்குதல் 
  வேண்டும். அப்படிச் செய்யாமல், பூவைப் பறித்துச் சாம்பலாக்கிச் சோதனைக் 
  குழாய்க்குள் இட்டு அமிலங்களை ஊற்றுகிறீர்களே! பூவின் அழகு உங்களுக்கு எப்படிப் 
  புலப்படும்? கலைப்படைப்பின் புனிதப் பூரிப்பு உங்களுக்கு எப்படிப் புரியும்?’’
 
 இவை விமரிசகனை நோக்கி விடுக்கப்படும் வினாக்கள், இவையெல்லாம் இந்த வினாக்களுக்கு 
  விமரிசகன் தரும் விடை என்ன? ஐயா எழுத்தாளரே, முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் 
  கொள்ளுங்கள். நான் உங்கள் எதிரி அல்லன் நண்பன்தான். உங்கள் படைப்புக்கும் உங்கள் 
  வாசகனுக்கும் ஒரு தொடர்பை உண்டாக்குவதற்குத்தான் முயலுகிறேன். உங்களுக்கு உதவி 
  செய்வதுதான் என் நோக்கம். இரண்டாவதாக, பிரேத பரிசோதனையிற் கீறிக் கிழிக்கப்படும் 
  பிணம், பின்னர் உயிர் பெற்று எழுவதில்லை. எரிந்து சாம்பலாகிறது அல்லது மக்கிச் 
  சிதைகிறது மண்புழுவுக்கு உணவாகிறது. இரசாயனச் சாலையிலே சோதனைக்கு உள்ளாகும் 
  பூவும், பழையபடி திரும்பப் போய் மலர்ச் செடியில் உட்காரமுடியாது; உல்லாசமாக அசைய 
  இயலாது; ஒயிலாக வீற்றிருக்க ஏலாது. ஆனால், என்னுடைய பரீசீலனைக்கு உட்படும் 
  உங்களுக்கு படைப்பை நான் பகுத்தாலும் சிதைத்தாலும், அட்டவணைப்படுத்தினாலும், 
  வரைவு கீறினாலும், கம்பியீற்றருள் ஊட்டினாலும், ஒப்புநோக்கினாலும், வேற்றுமை 
  கண்டாலும், இவை எல்லாவற்றுக்கும் பிறகுகூட, உங்கள் படைப்பு உங்கள் படைப்பாக, 
  அப்படியே, அலுங்காமல் நலுங்காமல், முழு உயிரோடு இருக்கிறது. எல்லா வாசகர்களும் 
  அணுகக்கூடிய நிலையில் ஊறுபடாமல் பூரணமாக மிஞ்சியிருக்கிறது. ஆகவே உங்களுடைய 
  படைப்பு அழிந்து விட்டதே என்று நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை; கிடு நடுக்கம் கொள்ள 
  வேண்டியதில்லை' எனத் தெளிவாகவும் சற்று நகைச்சுவையாகவும் முருகையன் 
  எழுதியிருக்கின்றார்.
 
 ஈழத்தில் ஏஜே கனகரட்னா, சு.வில்வரத்தினம், சோ.கிருஷ்ணராஜா, முருகையன் என்ற ஒரு 
  தலைமுறை, முற்றுமுழுதான சரியான ஆவணப்படுத்தல்கள் இல்லாது, நினைவில் மட்டுமே எஞ்சி 
  நிற்கக்கூடியதாக மறைந்து கொண்டிருக்கின்றது. வாழ்வுப் பெரும் 
  நெருக்கடிகளிலிருந்து, இவ்வாறு படைப்புச் சூழலுக்கு இவர்கள் வந்தற்கும், 
  விருப்புடன் இயங்கியதற்கும், இவர்களுக்கு சக மனிதர்கள் மீதிருந்த பரிவும் 
  பேரன்பும் போலத்தான் தோன்றுகின்றது. முருகையன் போன்றவர்களை நாங்கள் 
  இந்தப்பொழுதில் நினைவு கொள்வது என்பது கூட நடந்துவந்த பாதையில் நம்மை நாமே 
  மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து நினைவுகளின் கதகதப்பான சிறகுகளின் உள்ளே 
  சற்று நேரம் ஓய்வெடுப்பது போன்றதுதான்.
 
 இக்கட்டுரைக்கு உதவியவை:
 (1) பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் - தொகுப்பாசிரியர்கள்: எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா
 (2) இன்றைய உலகில் இலக்கியம் - முருகையன்
 (3) கவிஞர் இ.முருகையன் நினைவில் - கானா. பிரபாவின் பதிவு
 
 - முருகையனின் வாழ்வும் நினைவும்' 
  நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை -
 elanko@rogers.com
 |