இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
'கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்!

 -டிசே தமிழன் -

தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல்!நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக் கடந்தபடியும் போய்க் கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச் சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.
ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக் கொள்கின்றான். ஆனால் அதே சமயம் பாடத் திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக் கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).

நாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப் படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.

இந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

(2)
-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம்.

சாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.

ஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்கும் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக் குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.


dj_tamilan25@yahoo.ca
(Oct, 2006)


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner