| 
    காற்றின் தீராத பக்கங்கள்: கருமையத்தின் அழகிய 
    நிகழ்வு! 
    -தேவகாந்தன்-
 
   கருமையத்தின் 
    நான்காவது அரங்காடல் நிகழ்வு இம்மாதம் ( மே ) 24 ஆம் மற்றும் 25 ஆம் தேதிகளில் 
    யோர்க் வுட் தியேட்டரில் நடந்தேறியிருக்கிறது. ஒரு சூறைத்தனம் நிறைந்ததாய் 
    குளிர் கொட்டி முடிந்த பனிக்காலத்தின் பின் வழக்கமாய் அரங்கேறும் நாடக 
    அளிக்கைகளில் இவ்வாண்டு முதலாவதாக பார்வையாளர்களை ஒன்றுகூட வைத்தது இது. ‘வானவில்லின் விளிம்பில்’, ‘காற்றின் தீராத பக்கங்கள்’, ‘நத்தையும் ஆமையும்’ 
    ஆகிய மூன்று நிகழ்வுகள் இதே அளிக்கை முறையில்
    வழங்கப்பட்டன. முந்தைய மூன்று ஆண்டுகளில் மிகவும் வலுக் குறைந்த பிரதிகளுடனும், 
    பேசக்கூடிய விதமாக அமையாத தொழில்சார் திறமைகளுடனும் அரங்கம் வந்த பெண்கள் 
    பட்டறையினர், இவ்வாண்டு ஒரு நல்ல பிரதியுடனும் கூடுதலான அரங்க திறமைகளுடனும் 
    தம்மை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
 
 அமெரிக்க கறுப்பினப் பெண்களின் வாழ்வியல் நிலைமையை மிகத் துல்லியமாகப் 
    படம்பிடித்ததாகவும், எழுச்சி கொண்டதாகவும் 
    அமைந்த நாடகம்தான் ‘For Coloured Girls Who Have Considered Suicide When The 
    Rainbow Is Enuf’’. 1974 இல் இது அமெரிக்கா பிராட்வேயில் மேடையேற்றப்பட்டபொழுதே 
    மிகவும் பேசப்பட்ட அரங்காடலாக இருந்தது. வாழ்வின் கொடூரங்களுக்கும், பாலியல் 
    வன்செயல்களுக்கும் ஆளான கறுப்பினப் பெண்களின் உள உடல் வலிகளைப் பகிரங்கமாகக் 
    பேசிக்கொண்டு வந்திருந்தது வேழணயமந 
    Ntozake Shange இன் பா நாடகப் பிரதிவகை சார்ந்த இந்நாடகம்.
 
 
  முடிந்தவரை 
    பிரதியை உணர்ந்து, மேடையில் பெண்கள் பட்டறையினர் கதாபாத்திரங்களாகவே அவதாரம் 
    எடுத்திருந்தனர் என்பது மிகையான கூற்றல்ல. துளசி மனோகரன், புஸ்பா திலீபன், 
    கீர்த்தனா, தனா பாபு, சத்தியா, நந்தினி ஆகியோர் கச்சிதம் என்கிற எல்லைவரை 
    வந்திருந்தனர். இருமொழி சார்ந்த வெளிப்பாட்டு உத்தி, தமிழ்ச் சமூகத்தை உணர்ந்து 
    அவர்கள் எடுத்த சரியான பயணம். தற்கொலைகள் மலிந்திருக்கும் தமிழ்ப் பெண் 
    சமூகத்தில் சமூக அக்கறையான இவ்வளிக்கை அவர்களுக்காகவே சமர்ப்பணமானது கூடுதல் 
    பொருத்தம். கருத்தின் இரு மொழி வெளிப்பாட்டினால் காலவிரயம் என்ற அம்சத்தினை 
    இந்த விடயத்தில் கணக்கிலெடுக்காது விடுதல் விவேகம். 
 ‘காற்றின் தீராத பக்கங்க'ளே அடுத்த நிகழ்வாக அளிக்கப்பட்டதெனினும், 
    மொழிபெயர்ப்புச் சார்ந்த பிரதியென்ற வகையில் ‘நத்தையும் ஆமையும்’ என்ற முழுநீள 
    நாடகத்தைச் சொல்லவேண்டும். Eugene Ionesco tpd; ‘Frenzy For Two or More என்ற 
    நாடகம் இதற்காக எடுக்கப்பட்டிருந்தது. இப் படைப்பு உண்மையில் மகா 
    பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இப் பிரதியின் முழுமுற்றுமான 
    தெளிவும், அரங்க வரலாறும், பிரான்சிய அல்லது ருமேனிய நாடகவாக்க முயற்சிகளும், 
    நவீனத்துவ நாடக உலகின் போக்குகளும், அவற்றின் விளைவுகளும் அறியாமல் இப் 
    பிரதியைத் தயாரிப்புக்காக எடுப்பது சறுக்கல்களை விளைவிக்கக் கூடியது. அதேவேளை 
    இதன் நெறியாள்கை அதேயளவுக்கு கைபறிந்துவிடக்கூடிய சிக்கல்தன்மை 
    கொண்டதாகவுமிருக்கும். அபத்த நாடக வகை சார்ந்த நாடகவாக்கத்துக்கு 
    பிரெக்டுடனும், சாமுவெல் பெக்கெற்றுடனும் ஒப்பவைத்து நோக்கப்படுபவர் இயூஜின் 
    அயனெஸ்கோ. அவ்வாறான ஒரு நாடகப் பிரதியாக்ககாரரின் பிரதியை எழுந்தமானத்தில் 
    மேடையேற்றத் துணிவது அறிவார்ந்த அம்சம் சேர்ந்ததாகாது. ஜோர்ஜ் சந்திரசேகரனின் 
    மொழியாக்கத்தில் 1993 இல் கொழும்பில் நடைபெற்ற நாடக விழாவில் இந்த நாடகம் 
    ஏற்கனவே 
    நடிக்கப்பெற்றுள்ளது. ஆணும் பெண்ணுமான மூன்று ஜோடிகளின் கதையாடலாக 
    மூலப்பிரதியில் விரியும் கதையமைப்பு, தமிழ் நாடகப் 
    பிரதியில் இரு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளியிடப்பெற்ற கதையாடலாக 
    முடிவடைந்தது.
 
 இந்த மூன்று ஜோடிகளின் அளிக்கையை ஒற்றை ஜோடியின் அளிக்கையாக மாற்றுவதிலுள்ள 
    சிக்கல், கொழும்பில் மேடையேறிய தமிழ் நாடகத்தில் நேரக் கட்டுப்பாட்டு உத்தியால் 
    சரிசெய்யப்பட்டிருந்தது. நாற்பத்தைந்து நிமிட நேரமே எடுத்திருந்தது. யோர்க் 
    வுட் தியேட்டரில் பார்வையாளரின் சோதனையாக அமைந்துவிட்டது நேரக் 
    கட்டுப்பாடின்மை. அளவுக்கு மீறிய மந்தகதியில் நகர்ந்து திரும்பத் திரும்ப ஒரே 
    காட்சிகளும் வார்த்தையாடல்களும் வருவதான மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நாடகம்.
 
 ஆயினும் ஒரு கனதியான பிரதியைத் தயாரிப்புக்காக எடுத்துக்கொண்டமைக்காக 
    கருமையத்தைப் பாராட்டலாம். நெறியாள்கையின்போது நேர இழுவையைக் குறைக்கும் முகமாக 
    நடனதும் நடிகையினதும் உணர்வுப் புலப்பாட்டு மய்யத்தில் கவனம் 
    செலுத்தியிருந்தால் கூடுதல் ரசனை கிட்டியிருக்க முடியும்.
 
 மேடையில் பாத்திரங்கள் இரண்டும் இருபக்க தூர எல்லைகளுக்கும் 
    சென்றுவிட்டிருந்தன. உரையாடல்களைப் பார்வையாளன் தலையைத்
 திருப்பித் திருப்பிப் பார்க்கும் அவஸ்தை இருந்தது. இவையெல்லாம் ஒரு 
    மேடையளிக்கையின்போது தீவிர கவனமெடுத்து 
    அமைவாக்கப்படவேண்டிய வி~யங்கள். மேலும் ஒரே சீரான நாடகப் போக்கினை 
    ஒளியமைப்பினால் மாற்றியமைக்கக் கூடிய உபாயம் 
    இருக்கிறது. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.
 
 நகைச்சுவை புலப்பட்ட அளவுக்கு அபத்த நாடகவகையான இதில், 
    காட்டப்பட்டிருக்கவேண்டிய உருவகம் காணாமல் போயிருந்தது. 
    போரின் வெறியும், மனித இனத்தின் அசமந்தத்தனமும் தூக்கலாக இன்னும் 
    தெரிந்திருக்கவேண்டும்.
 
 இங்கே சுட்டப்பெற்றவை ஒரு உன்னதமான அளிக்கையாக இது ஆகாமற்போனமைக்கான 
    காரணங்கள்தான். எனது கரிசனையும் அதுதான். மேலே இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளுமே 
    மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் சார்ந்தவை. தமிழில் நிலவும் பிரதி வறுமையை 
    இவை இன்னும் இன்னுமாய்ச் சுட்டிநிற்கின்றன.
 
 முழுநேரக் கலையாக கனடாத் தமிழ்நாடக உலகம் இன்னும் விரியவில்லை. அது இனிமேல் 
    எப்போதாவது விரியுமென்ற எந்த 
    எதிர்பார்ப்புக்கும்கூட எந்தச் சூசகமும் இல்லை. ஒரு சுழியில் அகப்பட்டு 
    கலைஞர்களும், இன்னும் பல கலா திறமையுள்ளவர்களும்
 தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவரை தீவிர நாடக உலகம், பிரதி வறுமைபோலவே 
    திறமை வறுமையடைந்தும்தான் 
    கிடக்கப்போகிறது. அப்படி ஆகக்கூடாதென்ற விருப்பம் இருந்தாலும், யதார்த்தம் வேறு 
    மாதிரி இங்கில்லை. ஊர்ந்து செல்லும்
    உயிரினமான கறையான், இறக்கை முளைத்துப் பறந்து செல்வதை மழைக்கால இரவுகளில் 
    கண்டதுபோல் அபூர்வமாய் எதுவும் 
    நடக்கக்கூடாதா என்று மனம் அவாவுகிறது.
 
 கனதியாகவும,; அதே நேரத்தில் ரசனையோடும் சிந்திப்புக்குரிய வி~யங்களோடும் 
    அளிக்கையானது ‘காற்றின் தீராத பக்கங்க’ளென்ற
    கவிதை நிகழ்வு. கவிதைகளின் தேர்வும், கவிதைப் புலப்பாட்டுக்கான 
    காட்சியமைப்பும், பாத்திரங்கள் கவிதையின் கருத்துக்களை 
    உள்வாங்கிச் செயற்பட்டதும் இந்நிகழ்வை முதன்மை நிகழ்வாக ஆக்கியிருந்தன. 
    குழந்தைகளின் உலகமும், அது சூறையாடப்படும் 
    தருணங்களில் எழும் அவலமும் மனத்தைப் பாதிக்கும்படி பதிவாக்கியிருந்தமை 
    குறிப்பிடப்படவேண்டும். ஆரண்யா பாபு இதில்
    பிரகாசித்தார் எனச் சொல்லுமளவுக்கு அவரது புலப்பாட்டுப் புரிகை இருந்தது.
 
 கவிதைகளை உச்சபட்ச உணர்வுகளின் வெளிப்பாட்டுத் திறமையுடன் காட்சிப்படுத்த 
    செழியனால் முடிந்தமை வியப்புக்குரியதல்ல. அவரது 
    கவிதைகளே ஆளுமை மிக்கவை. அறங்களின் சரிவில் துயரத்தின் இசைப்பு இவரது கவிதா 
    பொருள். பெரும்பாலான கவிதைகளிலும்.
    மொத்தத்தில் கருமையம் அதிகமாக ஏமாற்றிவிடவில்லை இம்முறையும்.
 
 bdevakanthan@yahoo.com
 
    கடந்தவை1 கடந்தவை2
 |