தசாவதாரம்----சினிமா விமர்சனம்!
ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கியிருக்கிறார் கமல்!
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகப் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுக்கும்,
எதிர்ப்புக்களுக்குமிடையில் கமலஹாசனின் தசாவாதாரம் படம் திரையிடப்பட்டிருக்கிறது.
தமிழ்ப்பட அகராதியில் பத்து வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுதான்
முதற்தடவையாகும். அத்துடன் கிட்டத்தட்ட எழுபதுகோடி ரூபா பணச்செலவில், மிகவும்
பிரமிப்பான தயாரிப்பாகவெளிவந்திருக்கிறது இப்படம். தமிழ்ப்பட வரலாற்றைப்பொறுத்த
வரையில் பல சரித்திரமாற்றங்களைத் தங்கி வருகிறது இப்படம். இப்படத்திற்கு
ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில், தேங்காய்
உடைத்து, மங்கல தீபம் எரித்து கமலின் இரகசிகர்கள் படத் திரையீட்டை ஆரம்பித்து
வைத்திருக்கிறார்கள். சென்னையில் 12ம் திகதி திரைப்படப் பிரமுகர்களுக்காகத்
'தசாவாரம்' விசேடமாகத் திரையட்டுக் காட்டப்பட்டது. அதேநேரம், இந்தியா தவிர்ந்த
பலநாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. ஜூன் 12ம் திகதி அமெரிக்காவில்
வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படத்தை அமெரிக்க ஜனாதிபது ஜோர்ஜ் புஷ்
பார்க்கவேண்டும் என்ற ஏற்பாட்டையும் அமெரிக்காவாழ் கமலஹாசன் ஆதரவாளர்கள்
செய்கிறார்கள்.
பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் வரும் தசாவாதாரம் படத்தில் அப்படி என்ன புதுமை
இருக்கிறது என்பது பலரின் கேள்வியுமாகவிருக்கிறது. தமிழ் சினிமாவைப்
பொறுத்தவரையில் கமலஹாசன் உண்டாக்கிய மாற்றங்களும் திருப்பங்களும் எத்தனையோ.
அவையெல்லாம் ஒட்டுமொத்தமாக எல்லாராலும் போற்றப்படகூடியவைஅல்ல. 'நாயகன்' படமூலம்
தமிழ்த்திரைப்பம் கண்டிருக்காத வன்முறைக்காட்சிகளை உள்நுழைத்தவர்.
ஆபாசப்பாட்டுக்களையும் காட்சிகளையும் முத்திரைகளாகக் கொண்டிருக்கும்
தமிழ்ப்படங்களில் முத்தமிடுதல் போன்ற யதார்த்த உறவுகள் ஒதுக்கப்பட்டபோது,
முத்தக்காட்சிகளைத் தமிழ்ப்படங்களில் இடம்பெறவைத்தவர். ஊனமுற்ற பாத்திரங்களைக்
கதாநாயராகக் காட்டியவர். இந்தியச் சமுதாயத்தின் ஊறிப் போயிருக்கும் சாதிக்கெதிராக
அப்பட்டமான பிரசாரத்தை மேற்கொள்ளாவிட்டாலும் ' அன்பே சிவம்' மூலம் சமயத்தின்
அடிப்படை என்ன, அது ஏன் மனிதனுக்குத் தேவை என்று காட்டியவர்.
தனது ஒவ்வொரு படத்திலும் ஏதோவொரு புதுமையைச்செய்யும் கமல் எழுபது கோடி ரூபாச்
செலவில் ' தசாவாரத்தில் செய்த புதுமை என்ன என்பது பலரின் கேள்வியாகவிருந்தது.
கமலின் சில படங்கள் நல்ல பாடல்களைக்கொண்டிருக்கும், சில படங்கள் நல்ல கருத்துள்ள
கதையைக் கொண்டிருக்கும். சில படங்கள் மக்களுக்குப்பிடித்த நகைச்சுவையைக் கொட்டி
மகிழ்த்துபவையாயிருக்கும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக
எடுக்கப்பட்டதாகவிருக்கும். வர்த்தக ரீதியாக எடுக்கப்படும் எந்தப்படங்களாயினும்,
ஏதோ ஒரு விதத்தில் மக்களைக்கவர்க்கூடியதாக இருக்கவேண்டும், இல்லையென்றால் போட்ட
பணம் திரும்பிவராது. பெரிய நடிகர்களாலும் அந்தத் தோல்வியைத் தடுக்க முடியாது
என்பதற்கு ரஜனிகாந்த் நடித்த'' பாபா'' படம் உதாரணம். 'பாபா' படத்தின்
தோல்விக்குப்பின் படங்களில் நடிப்பதில்லை என்றிருந்த ரஜனி காந்த் அவர்களும்
திரும்பவும் நடிப்பு உலகுக்கு வர' சிவாஜி' படம் உறுதுணை செய்தது. ஏனென்றால் இது
'ஜனரஞ்சகமான' படமாகக் கருதப்பட்டது(!!). ஜனரஞ்சகமாகத்தான்
எடுக்கவேண்டுமென்றில்லாமல். தனது இலட்சியங்களை முன்வைத்துப் படங்கள் எடுத்து '
வருவாய்' ரீதியில் வெற்றிகள் என்ற பார்வைக்கு அப்பால் படங்கள் எடுத்தவர் கமல்
அவர்கள்.
கமல் அவர்கள் எழுபதுகோடி ரூபாவில் 'தசாவாதாரம்' படம் எடுத்திருக்கிறார்.
எழுபது கோடிரூபாவில் கமல் எடுத்த படத்தின் கதை என்ன, கதையில் புகுத்தி
வைத்திருக்கப் பட்டிருக்கும் கருத்துக்கள் எவை,? என்பன பலரின் கேள்விகளாகும்.
லண்டனில் ஒரு தமிழ்ப்படம் வெளியிட்டு , முதல் நாளே' ஹவுஸ் புல் என்ற அறிவிப்பைத்
''தசாவாரதம்'' படத்திற்குப் போனபோதுதான் முதற்தரம் தெரியக்கூடியதாகவிருந்தது.
இரண்டாம் நாள் படம்பார்க்கபோய், மூன்றாம் நாள் இந்த விமர்சனத்தை
எழுதிக்கொண்டிருக்கும்போது, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திரைப் படத்தைப்
பார்த்திருப்பார்கள். பல பத்திரிகைகள் விமர்சித்திக்கும். ஆனல்ல் இதுவரை நான்
கண்ட விமர்சனங்களின், படத்தில் நான் கிரகித்துக்கொண்ட அரசியல் , சமுதாயச்
சிந்தனைக் கருத்துக்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.
'தசாவாதாரம்' என்ற தமிழ்ப்படம், இந்தியத் திரைப்படவுலகு ' அகில உலகமயப்
பட்டுவிட்டது' என்பதை ஓங்கி ஒலிக்கவைக்கிறது. இப்போதெல்லாம் , ஹிந்திப்
படப்பிடிப்பாளர்களும் தமிழ்ப் படப்பிடிப்பாளர்களும் மேற்கு நாட்டுடன்
சமபந்தப்பட்ட கதைகளைத் தங்கள் தயாரிப்புக்களுக்குத் தேர்தெடுக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பல்லாயிரம் இந்திய, இலங்கை மக்கள் இருப்பதும் அவர்கள் இப்படங்களைப்
பார்ப்பதன் மூலம் அன்னிய செலவண்னி கிடைப்பதும் ஒரு காரணம்.
1951ம் ஆண்டு 'மதர் இந்தியா' உலகில் பலநாடுகளில் வெளியிட்டு வெற்றி கண்டபோது
அப்படத்தின் கதையமைப்பில் 'அன்னிய நாட்டுக்' கருத்துக்கள் மருந்துக்கும்
இருந்ததில்லை. ஆனாலும் 'இந்திய' வாழ்க்கை, கருத்துக்கள் என்பனதான் அப்படத்தின்
வெற்றிக்குக் காரணமாகவிருந்தது. இன்று, இந்தியாவில் பெண்கள் அழுதுகொட்டும்
அல்லது, ஒருத்தொருக்கொருத்தர் அழிவுகளைக்கொண்டுவரும் அல்லது ஒருத்தனுக்குபின்னால்
பல பெண்கள் ஓடித்திரிவது போன்ற சின்னத்திரை மசாலாக்கள் வீட்டுப்பெண்களை,
சின்னத்திரை பார்த்து இரசிக்கும்' வெற்றுப்பொம்மைகளாக்கி''விட்டிருக்கின்றன.
அடுத்தபடியாகப் பெரும் திரையைச் சொல்லப்போனல், திரும்பத்திரும்ப, ஒரு .
'எதிர்மாற்றுத் தன்மை ஹீரோ' படங்களும் அவர்களில் மையல் கொள்ளும் அரைகுறை
உடுப்புக் கதா நாயகிகளுமாக நிறைந்து விட்டிருக்கின்றன. உலக ரீதியாக,
இந்தியச்சினிமாக்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவை உலகம் பரந்துவாழும்
இந்தியரர்களின் கதைகளாகத்தானிருக்கின்றன.
ஆனால் இன்று, அக்ஷன் நிறைந்த பல ஹாலிவுட் படங்கள், அன்னியநாடுகளில் வெற்றி
பெறுகின்றன. கம்பியூட்டர் மயமான இக்காலகட்டத்தில் அதி நுட்ப அடிப்படையில் ,
பிரமாண்டமாக எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள்தான் வெற்றி பெருகின்றன.' கிங் கொங்'
'ஸ்ரார் வோர்' போன்ற படங்கள் சில உதாரணங்கள். கதை ஒன்றும் பிரமாதமாக
இருக்கத்தேவையில்லை, பிமிப்பூட்டும் படப்பிடிப்பு, கமராவோர்க், லைட்டிங் என்பன
இருந்தாற்போதும் என்ற நிலை வந்திருக்கிறது.
அந்தத் தொழில் நுட்பங்களைப் பாவித்துப் பல அரசியல், பொருளாதார, சமுதாய, சமயக்
கருத்துக்களைச் சொல்ல வருகிறார் கமல். 9.11.2001க்குப்பின் அமெரிக்கா, ஏதோ ஒரு
விதத்தில்,'மிகவும் பிரமாண்டமான' சக்தியாக வரவேண்டும் என்று படாதபாடு படுகிறது.
இரண்டாம் உலக யுத்த கால கட்டத்தில் அணுகுண்டைப் பாவித்து ஜப்பானை மண்டியிட
வைத்ததுபோல், இன்றும் ஏதோ ஒரு சக்தியைப்படைக்கப் பாடுபடுகிறார்கள். ஆனால், அன்று
இருந்த நிலை இன்றில்லை, அதாவது, அன்று , அமெரிக்க அணுச்சாலைகளில் அமெரிக்க
வெள்ளையினத்தவர்கள் மட்டும் வேலை செய்தார்கள். இன்று , அமெரிக்காவில் பல்லின
மக்களும் பல உயர்ந்த நிலைகளில் படிக்கிறார்கள், பரிசோதனைக்கூடங்களில்
வேலைசெய்கிறார்கள். பெரும்பாலான நாடுகள் ஏதொ ஒரு விதத்தில் தொடர்வு
பட்டிணைந்திருக்கிறது, பிரிந்திருக்கிறது, சந்தேகத்துடன் ஒருத்தரை ஒருத்தர்
கண்காணித்துக்கொள்கிறது இன்று, எந்த ஒருநாடும் ' தனித்துவம்' தாண்டிய பொருளாதார,
அரசியல், விஞ்ஞான நிலைக்குள் தள்ளப்படாமல் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு விதத்தில்
மோதும் நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டிருக்கிறது. அதைத் தன் மூலக்கருத்தாக
எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.
தனித்துவமாகத் தங்கள் வேலைகளைப்பார்த்துக்கொண்டிருந்த நாடுகளுக்குள் ஏதோ
ஒருவிதத்தில் தண் மூக்கை நுழைத்துப் பிரச்சினைகளையுண்டாக்கி ' உலகின் மாஸ்டராக'
வரவேண்டும் என்றபேராசையுள்ள அமெரிக்காவை உலகின் 'வில்லனகத்'
தைரியமாகபடைத்திருக்கிறார் கமல்.
உலகின் எதிரியான அமெரிக்கா, தனக்குத் தேவையென்றால் யாரையும் பாவிக்கும்,
தேவையென்றால் அழுத்துவிடும் என்பதை,அமெரிக்க 'fபிலெச்சர் என்ற வில்லன் பாத்திரம்
மூலம் படைத்திருக்கிறார். அமெரிக்கா,ஒருகாலத்தில், தாங்கள் உண்டாக்கிய இராசாயன
அழிவு (Chemical weopons) ஆயுதங்களைத் தங்கள் சினேகிதனாகவிருந்த சதாம்
ஹ¤சேய்னுக்குக் கொடுத்து, சதாமின் எதிரிகளான குர்டிஷ் மக்களை நூற்றுக்கணக்காகக்
கொன்று குவித்தார்கள். அப்போது உலகம் கண்டித்தும் அமெரிக்கா பொருட்படுத்தவில்லை.
கொஞ்சகாலத்தின் பின், தங்களுகுத் தேவையானபோது (ஈராக் நாட்டின் எண்ணெய்) சதாம்
ஹ¤சேய்னைத் தூக்கில் (2006)இட்டார்கள்.
அமெரிக்க அரசியலின் பயங்கரவாதம்,தங்களின் இரட்டைக்கோபுரத்தைத் தகர்த்த முஸ்லிம்
தீவிரவாதிகளிடமட்டுமன்றி, அன்பே தருமமெனக்காட்டும் பெரும்பாலான முஸ்லிம்களையும்
ஒட்டு மொத்தமாக் குறிவைக்கிறது என்பதை, ஒரு முஸ்லிம் குடும்பத்தைக்கதையில்
புகுத்தி ஒரு அருமையான தத்துவத்தை விளக்குகிறார். மற்றவர்களைப்பற்றி
அக்கறைப்படாமல், தனது தேவைகளுக்கு மட்டும் உலகைப்பாவிக்கும் அமெரிக்கா என்று
;தசாவாதாரம்''கதை போய்க்கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக உத்தத்தில் ,
ஜப்பானியர்கள் , அமெரிக்கரின்' பேர்ள் ஹார்பர்'' என்ற துறைமுகத்தை, ஜப்பானியத்
தற்கொலைதாரி விமானிகள் மூலம் நிர்மூலமாக்கியழித்தார்கள். அதில் மூவாயிரம்
அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்குப்பழிவாங்க, அமெரிக்கா அணு ஆயுதத்தைப்
பிரயோகித்துப் பல்லாயிரக்கணக்கான ஜப்பானியர்களைக்கொலை செய்தார்கள். ஜப்பானில்
இன்றும் அமெரிக்கப்படை காவல் செய்கிறது.
9.11.2001ல். அமெரிக்க இரட்டைக்கோபுரம் முஸ்லிம் தற்கொலைதாரிகளாற்
தாக்கப்பட்டபோது கிட்டத்தட்ட மூவாயிரம் அமெரிக்கர்கள் இறந்தார்கள். அதற்குப்பழி
வாங்க, இன்று அமெரிக்கா பல முஸ்லிம் நாடுகளுக்குள் புகுந்து ( ஈராக்,
ஆபுகானிஸ்தான்) பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களைக்கொலை செய்து
கொண்டிருக்கிறது.மற்றவகளிடமில்லாத பெரிய சக்தியைத் தான் உற்பத்தி செய்யவேண்டும்
என்று பல பரிசோதனைகளில் ஈடுபடுகிறது. தற்போது சீனாவுடனும் இந்தியாவுடனும்
வம்புக்கு வருகிறது. இந்தியர்கள் அதிகம் சோறு உண்பதால் உலகில் வறுமை வந்து
விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சொல்லியிருக்கிறார். அவருக்கு உலக நடப்பு
பற்றி சரியான உண்மைகள் தெரியாது என்பது பரவலான அபிப்பிராயம்.
''தசாவதாரம்'' படத்தில், அமெரிக்க ஜனாதிபதிக்கு வெறும் 'உப்பு' (NaCl) பற்றிய
செய்திகூட உருப்படத் தெரியாது என்பதைக் கிண்டலாக் கூறுமிடங்களில் லண்டன் திரையில்
கைதட்டல் விண்னையெட்டியது. அமெரிக்க எகாதிபத்தியம், மற்றைய
நாடுகளைச்சுரண்டுகிறது, அடிமைகொள்ள நினைக்கிறது, அதேவேலையைத்தான் அதிகாரமுள்ள
இந்திய அரசியல்வாதிகளும் செய்கிறார்கள் என்பதை வாழைப்பழத்தில் மருந்து வைத்துக்
கொடுப்பதுபோல் தனது 'அக்சனும்' அதிரடிகளும், விறு விறுப்புக்களும் நிறைந்த
''தசாவாரத்தில்'' புகுத்தி இருக்கிறார். இந்தியாவில் நடைமுறையிலிருக்கும்
சாதிக்கெதிரான தனது ஆத்திரதை, மக்களின் மண்ணை விற்றுப்பிழைக்கும்
அரசியல்வாதிகளுக்கெதிரான தார்மீகக்கோபத்தைப் பலவழிகளில் படைத்திருக்கிறார்.
அரசியற் தேவைகளுக்கு,மானமின்றி யார்காலிலும் இந்த அரசியல்வாதில் அடிபணிந்து
விழுவார்கள் என்பதை இறுக்கமாகச் சொல்கிறார். பூவராகன் ஒரு அற்புதப்படைப்பு. உலகம்
மாசு படுவதற்கு அரசியல்வாதிகளும் பெரிய அளவில் பொறுப்பெடுக்கவேண்டும் என்பதை,
ஆற்றுப்படுக்கைகளிலிருந்து மண்னெடுத்து விற்கும் அரசியல்வாதிகளின் கதைமூலம்
சொல்லவருகிறார்.''இந்தியன்' படத்தின் மூலம் இந்திய அரசியல்வாதிகளின் லஞ்சம்
வாங்கும் அரசியலைக் கிழித்துக் காட்டியவர் கமல். இந்தப்படத்தில் பூவராகன் மூலம்
ஏழைகளின் மண் எப்படிக்கொள்லையடிக்கிறது என்று கண்டு சீறுகிறார்,
பூவராகன் பாத்திரத்தின் மூலம், அரசியல்வாதிகளின் சதியில் தனது சகாக்கள்
விழுந்துபோவதிலிருந்து, மற்ற உயிரைக்காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் பாத்திரமாகி
இறப்பதிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் மனிதெ நேய உணர்வுகளைத்
தத்ரூபமாகப் படைத்திருக்கிறார். கஷ்டம்ஸ் ஆபிசர், பால்ராம் நாயுடு நகைச்சுவையை
அள்ளிக்கொட்டுகிறார். பாடற்கார சீக்கியர், தனக்குச் சுகமில்லை என்று தெரிந்து
கொண்டும், தன்னைப் பார்க்க வந்திருக்கும் இரகசிகர்களுக்கு அற்புதப்பாடலும் நடன
விருந்தும் கொடுப்பது கமலின் உள்கிடக்கையான பரிமாணம் அதாவது, எவ்விடர் வந்திலும்
அவ்விடர் கண்டு சோராமல் தான் நினைத்ததைச் செய்துமுடிக்கும் கமல் அந்தப்பாடகன்.
கிருஷ்னவேணிப்பாட்டியார், மனநிலை தடுமாறினாலும் மனிதநேயத்தைக் காட்டிவிடுகிறார்.
அன்புக்குச் சாதி கிடையாது, நிறம் கிடையாது என்பதை இறந்து விட்ட கீழ்சாதி
பூவராகனைத்தன் மேல்சாதி மகனாக நினைத்துத் தூக்கிவைத்தழும் காட்சி பிரமாதம்.
இக்கதை, விஞ்சானம், அஞ்ஞானம், அதிகார வெறி, அரசியல் கேவலங்கள் என்பது போன்ற பல
கருத்துக்களை முன்னெடுக்கும் கதை. மிகவும் பிரமாண்டமான விடயங்களை மிக, மிக, மிகப்
பெரிய விதத்தில் விறு விறுப்புடன் '' ஜனரஞ்சமான விதத்தில் படைதிருக்கிறார்.
வெற்றிகண்டிருக்கிறார். உலகதரமான முதல் இந்தியப் படமிது.
மேலதிகமாகக் குறிப்பிடக்கூடிய சில விடயங்கள்:
திரைக்கதையின் கதாநாயகியாக வரும் ஆசிந் நடிப்பில் மிகவும் சுட்டி ஆனால் கமல் தன்
வயதுக்கேற்ற ஜோடியைத் தேடுவது நல்லது.
கமலஹாசன். கடவுளில் நம்பிக்கையில்லாத பிராமணன் என்று அவரைத் தெரிந்த பிராமணர்கள்
சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். முழுக்க முழுக்கப் பிரமணிகளின் புழுகுகளை
எதிர்த்த ஈ.வெ.ராமசாமியைத் தன் தகப்பன் என்று ஏதோ ஒரு வகையிற் (கருத்துக்குத்
தந்தை?) சொல்ல வருகிறார், ஆனால்,எப்போதோ.கடலில் எறியப்பட்ட விஷ்ணு (பிராமணியக்
கதைகளின்படி,காக்கும் கடவுள்!) சுனாமியில் கடலிலிருந்து வெளிவந்து வில்லனை
அழிக்கிறார். இந்தக்கருத்து என்ன சொல்கிறது? கடவுள்தான் தங்களின் வாழ்வை
நிர்மாணிக்கிறார் என்பதை நம்பிக்கொண்டு, தங்களின் பொருளாதார மேம்பாட்டுக்குப்
போராடாமலிருக்கும் வறிய மக்களுக்கு இக்கருத்து எப்படிப்பதியும்?
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடந்த தர்க்கத்தில் ஒரு வைணவன்
இறப்பதாகக்காட்டியிருப்பவர், வைணவர்களாற் கழுவேற்றப்பட்டவர்கள் பற்றி ஏன்
வாய்திறக்கவில்லை? கழுவேற்றப்பட்ட நந்தனின் மனம் நலிந்துபோகும் கமல்!
மருத்துவக்கருத்துக்கள்: ஒரு பயங்கர வைரஸ் கடத்தப்பட்டு ஏதோ ஒரு சிறு பெட்டியில்
வைத்துப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து உயிரோடிருக்கமுடியாது.
விஞ்ஞானம் தெரியாதவர்கள் நம்பலாம், மற்றவர்கள்...........?
உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கும் அயிட்ஸ் வரைஸ் குரங்கிலிருந்து
வந்ததாக மேற்குலகம் கதை பரப்பிவிட்டது. மிகவும், பாதுகாப்பான லாபரோட்டரியில்
பரிசோதனைசெய்து, ஹோமோசெக்சுவல் ஆண்களில் பரிசித்துப்பார்க்கப்பட்டதாற்தான்
அயிட்ஸ் வைரஸ் பரவியது என்பதுதான் உண்மை 1980ம் ஆண்டுகளில் இறந்தவர்கள்தொகை
பெரும்பாலானவர்கள் மேற்குநாடுகளைச்செர்ந்த ஹோமோசெக்சுவல் ஆண்களே என்பதைக் கொஞ்சம்
ஆராய்ச்சி செய்து பார்த்தல் நல்லது.
இப்படியான, ஒரு சில குறிப்புக்களை ஒதுக்கிவிட்டுத் 'தசாவதாரம்'' பார்க்கப்போநால்,
அந்தப்படம் கண்ணுக்கு விருந்தும் கருத்துக்கு விருந்தும் வைக்கும் ஒரு அழகிய
கலைப்படைப்பு. எதிர்பார்ப்புக்கு பலன் நல்லபடியமைந்திருக்கிறது.
கமல் ஒரு சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, பன்முக அறிஞன், நவரச நாயகன், நல்லதொரு
சிறந்த படத்தைத் தந்திருக்கிறார். பார்ப்பது மட்டுமல்லாமல் அதில் பொதிந்து
கிடக்கும் சில நல்ல கருத்துக்களையும் உணர்ந்து கொண்டாற் பிரயோசனமாகவிருக்கும்.
கமல் என்ற ஒரு சிறந்த, படைப்பளி கிடைப்பது அரிதிலும் அரிது. இந்த அற்புத்
அறிஞனுக்குத் தமிழுலகம் என்ன கைமாறு செய்தாலும் பொருந்தாது. மேதையிலும் மேதை
இவர், இப்படி ஒரு தமிழன் எங்கள் காலத்தில் வாழ்வது தமிழினம் செய்த பிறவிப்பலன்.
rajesmaniam@hotmail.com |