''காந்தி, எனது தந்தை''- சினிமா விமர்சனம்
('Gandhi, my father')
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
இம்மாத
நடுப்பகுதியில் ஆசியாவின் இரு முக்கியா நாடுகள் அறுபது வருடங்களுக்கு முன்,தாங்கள்
பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தினங்களைக் கொண்டாடினார்கள்.
14.08.07ல் பாகிஸ்தானும் 15.08.07 அன்று இந்தியாவும் மிகப்பிரமாண்டமான விதத்தில்
சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையில் 60
வருடங்களுக்கு முன் பிரிந்தபோது ஏற்பட்ட பகை இன்னும் அனலாக எரிந்து
கொண்டிருக்கிறது.
லண்டன் பி. பி. சி, இந்தியா,பாகிஸ்தான் சுதந்திரத்தின் பின்னணியிலான பலதரப்பட்ட
நிகழ்சிகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்திய-பாகிஸ்தான் நட்புறவு சங்கம் தங்களின்
பகையை மறந்து இரு நாடுகளுக்குமிடையில் சமாதானத்தைக்கொண்டுவரும் நிகழ்ச்சிகளையும்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவற்றுடன் சேர்ந்து இம்மாத ஆரம்பத்தில்(03.08.07) இந்திய சுதந்திரத்தின் தந்தையென
உலகத்தால் மதிக்கப்படும் மகாத்மா காந்தியை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம்
வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு படம் இதுவரையும் எடுக்கப்படாமல், இந்தியா
சுதந்திரமடைந்து 60 வருடங்களுக்குப்பின் ஏன் வெளிவந்திருக்கிறது என்பது சிலரின்
கேள்வியாயிருக்கலாம். இப்படம் காந்திக்கும் அவரின் மூத்தமகன் ஹரிலால் காந்திக்கும்
உள்ள உறவை வெளிப்படுத்தும் கதை. இக்கதை ஹரிலாலோ அல்லது அவரின் குடும்பத்தாலோ அல்லது
ஹரிலாலைத் தெரிந்தவர்களாலோ எழுதப்படவில்லை. படத்தின் இயக்குனரான திரு பெறோஸ்
அப்பாஸ் கான் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரையும் எத்தனையோ படங்களில்
நடித்த(மிஸ்டர் இந்தியா உட்பட) திரு அனில் கபூர் தயாரித்திருக்கிறார்.
காந்தியைப்பற்றி டேவிட் அட்டபறோ எடுத்த ''காந்தி'' (''Gandhi'')படத்துக்குபின்,
நீண்ட நாளைய இடைவெளி தாண்டி இப்படம் வந்திருக்கிறது. இப்படம் காந்தியின் இந்திய
சுதந்திரப்போராடம் பற்றிய சரித்திரப்படமல்ல. அவரை ' மஹாத்மா'வாகக் காட்ட எடுத்த
அரசியல் டாக்குமெண்டரியுமல்ல. இது அவருக்கும் அவரால் தள்ளி
வைக்கப்பட்டு,சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வறுமையில் வாடி பிச்சைக்காரனாய் இறந்து
விட்ட அவரது மூத்த மகன் ஹரிலாலுக்கும் உள்ள உறவை, பிரிவை, முரண்பாடுகளை
எடுத்துக்காட்டும் படம். ஹரிலால் சொல்வதுபோல்' நீ இந்தியாவின் தந்தையாக இருக்கலாம்,
ஆனால் எனது தந்தையாய் இருக்கவில்லை என்று துக்கப்படுகிறேன்' என்பதைப்பற்றிய படம்.
'' தகப்பனின் அன்புக்கு ஏங்கிய ஹரிலால்லுக்காகக் கண்ணீர் சிந்துக்கள்' என்று இரந்து
கேட்பதற்காக பெறோஸ் அப்பாஸ் கான்-அனில் கபூர் என்ற இரு மனிதர்களாலும் எடுக்கப்பட்ட
படம் என்பது படத்தைப்பார்கும் இரகசிர்களுக்குப் புரியும்
.
மகன்கள் பற்றிய கதைச்சுருக்கம்:
மஹாத்மா காந்திக்கும் (1869-1948) அவரின் மனைவி
கஸ்தூரிபாய்க்கும், காந்தியின் 13 வயதில் திருமணம் நடந்தது. ஹரிலால்(1888-1948)
மாம்லால்(1892-1956), இராமதாஸ் (1898-1969), தேவதாஸ் (1900-1957-இவர், தமிழ்
நாட்டில் இந்தியைத் திணிக்க முனைந்த முதல்வர் இராஜகோபாலாச்சாரியாரின் மருமகன்)
என்று நான்கு மகன்கள் பிறந்தார்கள். இப்படத்தில் ஹரிலாலுக்கும் காந்தியின் மற்ற
மகன்களுக்கும் உள்ள உறவு பற்றிக் கிட்டத்தட்ட எந்த விளக்கமுமில்லை.
1991ல் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பிய காந்திக்கு
தென்னாபிரிக்காவில் வேலை கிடைப்பதால் 1893ல் மனைவியுடனும் கைக்குழந்தை
மாம்லாலுடனும் தென்னாபிரிக்கா போகிறார். தனது மூத்த மகன் ஹரிலால்( 15 வயது),
இந்தியாவில் இருந்து தாய் மொழிக் கல்வி பெறவேண்டுமென்பதற்காக ஹரிலாலைத் தனது
உறவினர்களுடன் விட்டுச் செல்கிறார். அடுத்த இரு குழந்தைகளும் தென்னாபிரிக்காவிற்
பிறந்தவர்கள்.
மஹாத்மா காந்தியின் 18வது வயதில் ஹரிலால் பிறந்தார். ஹரிலால் பிறந்து சில
காலங்களில், காந்தியடிகள் அவரின் மேற்படிப்புக்காக லண்டன் சென்று விட்டார்.
ஹரிலாலின் வாழ்க்கையில் காந்தியின் அன்பு பெரிதாகக் கொடுக்கப்படவில்லை, அதன்
பிரதிபலிப்புத்தான் தகப்பனுக்கும் மகனுக்கும் வந்த முரண்பாடுகள் என்று இப்படம்
மறைமுகமாகச் சொல்கிறது. காந்தியின் குடும்ப வரலாற்றப் படித்தால் ஹரிலாலைவிட மற்ற
மூவரும் வாழ்க்கை முழுதும் காந்தியுடன் வாழ்ந்து அவரின் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றிவைத்தவர்கள் என்பது புரியும்.
மஹாத்மா காந்தி தன்னைச்சுற்றியுள்ள அத்தனைபேரும் தனக்குச் சரியானதையே
பின்வற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பவர் என்பதையும் பல இடங்களில்
சுட்டிக்காட்டுகிறது.
படக்கதை: 1948ம் ஆண்டு தைமாதம் முப்பதாம் திகதி
மஹாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான கோட்சேயாற் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவர்
இறந்து ஆறு மாதத்தின் பின் மும்பாய் வைத்தியசாலையில் தெருவில் மயங்கி விழுந்த ஒரு
பிச்சைக்காரன் அனுமதிக்கப்படுகிறான்.
'' உனது பெயரென்ன, தகப்பன் பெயெரென்ன, தாயின் பெயரென்ன' என்று வைத்தியர்
கேட்டபோது'' எனது தகப்பன் பாபுஜி'' என்கிறான் வைத்தியத்துக்கு அனுமதிக்கப்பட்ட
பிச்சைக்காரன்.
''பாபுஜி, இந்திய மக்கள் அத்தனை பேருக்கும் தகப்பன், உனது உண்மையான தகப்பன் யார்?''
என்று கேட்கிறார்கள்.
தாடியும் மீசையுமாய்க் கிழிந்த ஆடைகளுடன் காசநோய் வருத்தத்தில் இருமிக்கொண்டு, ''
எனது தகப்பன் பெயெர் பாபுஜி'' என்று திரும்பவும் அந்தப்பிச்சைக்காரன் சொல்கிறான்.
அந்த இடத்திலிருந்து பிளாஷ்பாக் முறையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹரிலால் தனது 18 வயதில் (1906), குஜராத்திலுள்ள ராஜ்கோட் என்ற இடத்தில் , இளம்
பெண்கள் (அவரின் மனம் கவர்ந்த குலாப் என்ற பெண்னும்) உட்படப் பலர் இரசிக்கும்
இடத்தில் பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான்.
அதன்பின் அவர் குலாப் என்ற அந்தப் பெண்னைத் தகப்பன் காந்தியின் அனுமதியின்றித்
திருமணம் செய்து கொள்கிறான்.
'' அவனின் விருப்பத்தின்படியே செய்யட்டுமே'' என்று தாய் மகனுக்காகப் பரிந்துரைக்க
'அவனுக்குக் கல்யாணம் செய்யும் வயதில்லை என்று காந்தி பொருமுகிறார்.
''அவன் இனி எனக்கு மகன் இல்லை'' என்று வெறுப்புடன் சொல்கிறார்.
''நாங்கள் திருமணம் செய்து கொண்டபோது உங்களுக்கு வயது பதின்மூன்றுதானே''
கஸ்தூரிபாய் வாதாடி, மகனைத் தென்னாபிரிக்கவுக்கு அழைக்கிறார். ஹரியைத்தொடர்ந்து
ஹரியின் மனைவியும் குழந்தையும் தென்னாபிரிக்காவுக்கு வருகிறார்கள். தென்னாபிரிக்க
அரசுக்கெதிராகக் காந்தியின் நிற எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு ஹரி பல தடவை
தென்னாபிரிக்கச் சிறையில் அடைக்கப்படிகிறான்.
தகப்பனைப்போல் தானும் ஒரு பாரிஸ்டராக வரவேண்டும் என்று ஹரி கேட்க, காந்தி ஹரிக்கு
உதவி செய்யாமல், அவர்களின் உறவினர் பையனுக்கு அந்த ஸ்காலர்ஷிப்பைக் கொடுக்கிறார்.
காந்தியின் போராட்டத்திற்கு ஹரியை விட அவரின் உறவுப்பையன் மிகவும் உதவிசெய்வான்
என்று வாதாடுகிறார். இவர்களின் முரண்பாடுகளால் ஹரியின் மனைவி இந்தியா திரும்ப,
அவளைத் தொடர்ந்து ஹரியும் இந்தியா திரும்புகிறான்.மேற்படிப்பை இந்தியாவில் தொடரும்
ஹரி குடும்ப சூழ்நிலையால் பரிட்சையில் சித்தியடையாமல் தோல்வியடைகிறான். காந்தி
தென்னாபிரிக்காவிலிருந்து ஹரியின் வாழ்க்கைச்செலவுக்குப்பணம் அனூபுகிறார்.
தென்னாபிரிக்காவில் 21 வருடங்கள் வாழ்ந்த காந்தியடிகள், 1914ல் இந்தியா
திரும்பிகிறார். இந்திய அரசியலில் முக்கிய தலைவராகிறார். 1920ம் அவர் அனைத்திந்திய
காங்கிரசுக்குத் தலைவரானார். மகனுக்கும் தகப்பனுக்கும் விரிசல் தொடர்கிறது.
இரண்டாவது மகன் தகப்பனின் சொல்லுக்கடங்கி தென்னாபிரிக்கவிலேயே வாழ்கிறான்.
காந்தி, இந்திய மக்களின் 'தகப்பனாக' மதிக்கப்படுகிறார். அவர்களின்
சுதந்திரதுக்காகப் பாடுபடுகிறார். ஆனால் தனது மகனின் ஆசைகளை மட்டும்
நிராகரிக்கிறார்.
பிரித்தானிய ஆட்சியின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து, சுதேசி உடைகளை
(கைத்தறியாடைகள்) இந்திய மக்கள் அனைவரும் அணிய வேண்டுமென்றும் பிரித்தானிய ஆடை
இறக்குமதியைப் பகிஸ்கரிக்கவேண்டும் என்று காந்தி பிரசாரம் செய்கிறார்.
அதேகாலகட்டத்தில், வெளிநாட்டுத் துணி வியாபாரத்தில் ஹரிலால் ஈடுபடுகிறார். மிகவும்
நட்டப்படுகிறார். வாழ்க்கையில் தோல்விக்குமேல் தோல்விகண்டதால் குடிக்கத்தொடங்கும்
ஹரியைப்பிரிந்து சென்ற குலாப் மரணமடைகிறார். தன்னுடைய ஆஸ்ரமத்தில் வந்து சேரும்படி
ஹரியைக்கேட்கிறார் காந்தி. '' எல்லோருக்கும் தகப்பனாக இருக்கும் நீங்கள் எனக்குச்
சரியான தகப்பனாக இருக்கவில்லை'' என்று சொல்லியழுகிறான் ஹரி.
தன்னைத்திருத்திக்கொள்ள கிறிஸ்தவனாக மாறுகிறான். அந்தக் கட்டத்தில் '' கடவுள்
ஒருவனே, நீ எந்தச் சமயத்துல் இருந்தாலும் நல்ல மனிதனாக இருந்தாற் சரி'' என்று
மகணுக்க்ச் சொல்கிறார்.
ஹரிலால், வாழ்கையில் மீண்டும் மீண்டும் பல தோல்விகளைக்கண்டு, கண்டபாட்டுக்குத்
திரிந்து இஸ்லாமியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவி அப்துல்லா
என்ற பெயருடன் வாழ்கிறான். இந்துவாகப் பிறந்த ஹரிலால், இஸ்லாத்தைதன் மார்க்கமாகக்
கொண்டதைக் கேள்விப்பட்ட ஹரியின் தாய் கஸ்தூரிபாய் அவனைத் தேடிவந்து '' நீ எனது மகன்
இல்லை என்று நினைத்துக் கொள்ளப் போ¢கிறேன்'' என்று கதறுகிறாள்.
ஹரிலால், மீண்டும் பல சமய சடங்குகளைச்செய்து இந்துவாக மாறுகிறான். தனது
ஆசிரமத்திற்கு வந்து வாழும்படி ஹரியைக்கேட்கிறார் காந்தி. காந்தியின் ஆஸ்ரமத்தில்,
மது, மங்கை, மாமிசம் என்பன தடைசெய்யப்பட்டிருப்பதால் ஹரி அவ்விடத்திற்குத் தான்
வரமுடியாது என்று சொல்லிவிட்டுப் பழையபடி கண்டபடி வாழ்கிறான்.
இந்தியா முழுதும் காந்தியின் பிரசாரம் தொடர்கிறது. ஒரு ரெயில் நிலையத்தில்
காந்தியைக்காண்வரும் ஹரி தனது தாய்க்கு ஒரு தோடம் பழத்துடன் வருகிறான். '' எனக்கு
என்ன கொண்டு வந்தாய்'' காந்தி கேட்க என்று' ''என்னிடமிருந்து உங்களுக்கொடுக்க நான்
ஒன்றும் கொண்டு வரவில்லை'' என்று ஹரி சொல்வதை மிகவும் வருத்தத்துடன் காந்தி
கேட்டுக்கொள்கிறார்.
காந்தியும் கஸ்தூரிப்பயும் பிரிட்டிஷ் அரசால் ஒரு பெரிய மாளிகையில்
சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹரி குடிவெறியில் அங்கு போக கஸ்தூரிபாய்'' இனி
எங்களைப் பார்க்கவராதே'' என்று வெறுப்புடன் கூறுகிறாள். அதுதான் ஹரிலால் தாய்
தகப்பணக் கடைசியாக் கண்ட நேரம்.
அதன்பின்
1944ல் கஸ்தூரிபாய் இறந்தபோதும் ஹரிலால் வரவில்லை. தெருக்களில் பிச்சைக்காரனாக
வாழ்கிறான். .15.08. 1947 நடுநிசியில் நேரு இந்தியக்கொடியை ஏற்றி வைத்து இந்திய
சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த கொண்டாட்டம் நடக்கும்போது, காந்தியின் மகன் ஹரிலால்,
தெருவில் பிச்சைக்காரர்களுடன் படுத்திருக்கிறான். மூன்று மாதங்களின்பின் காந்தி
கொலை செய்யப்பட்டபோது காந்தியின் பிணத்தை வணங்க ஆயிரக்கணக்கானவர்களுடன்
இடித்துக்கொண்டு போயும் காந்தியின் பிணத்தைக்காண ஹரியால் முடியவில்லை. தகப்பன்
இறந்து ஆறு மாதங்களின்பின் ஹரிலால் பிச்சைக்காரனாக மும்பாய் வைத்தியசாலையில்
இறக்கிறான். அவனின் பிணத்தை மூடியிருந்த துணியை அகற்றியபோது அவனின் மனைவி
குலாப்பினதும் தாய் தகப்பன், காந்தி கஸ்தூரிபாயினதும் கசங்கிய புகைப்படங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன.
முடிவுரை: இந்தப்படம் , இன்று. அகில உலகமே மதிக்கும் ஒரு மஹாத்மா எப்படித்
தன் மகனுடன் நல்ல உறவை வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.மஹாத்மா
காந்தி, '' இரு மனிதர்களை என்னால் வெல்ல முடியவில்லை, அதில் ஒரு மனிதன்
பாகிஸ்தானின் தலைவர் ஜின்னா அலி, மற்றவர் எனது மூத்த மகன் ஹரிலால்'' என்று
சொன்னதாகச் சொல்லப்படுகிறது.
''என்னுடைய மிகவும் இளம் வயதில் (18), காம உணர்ச்சிகள் அதி உச்சத்தில் இருந்தபோது
ஹரி பிறந்ததும், அவனின் சிக்கலான வாழ்க்கை முறைக்கும் எங்களின் சிக்கலான உறவுக்கும்
ஒரு காரணமாக இருக்கலாம்'' என்று காந்தியடிகள் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இன்றைக்கும் பல மூன்றாம் நாடுகளில் தாய் தகப்பனின் இளம் வயதில் குழந்தைகள்
பிறக்கின்றன. அவர்கள் அத்தனைபேரும் ஹரிலால் மாதிரி வாழ்கிறார்கள் என்பதில்லை. மகன்
பிறந்த காலத்திலிருந்து, காந்தியடிகள் அவனுடன் பழகமுடியவில்லை. அன்பைக்காட்ட
முடியவில்லை. அவன் தன் பாட்டுக்கு வளர்கிறான். தன் பாட்டுக்குத் திருமணம் செய்து
கொள்கிறான். காந்தியடிகளுக்காக எத்தனைதடவை தென்னாபிரிக்கச் சிறையில் வாடினாலும் ,
காந்தியடிகள், ஹரிலால் கேட்டுக்கொண்டபடி அவனின் படிப்புக்கு உதவவில்லை.
தன்னைக்கேட்காமல் ஹரிலால் திருமணம் செய்து கொண்டதை மன்னிக்காத காந்தியடிகள்
அவனைப்பல விதத்திலும் பழிவாங்கினாரா என்பது பற்றிப் பல கேள்விகள்
இந்தப்படத்தைப்பார்க்கும்போது எழுந்தது. அதேமாதிரி, ஹரிலாலும் , தனக்கு உதவி
செய்யாத தந்தையைப்பழிவாங்கப் பல விடயங்களைச்செய்தாரா என்பது போன்ற கேள்விகளும்
எழுகின்றன.
உதாரணமாக, காந்தியடிகள் இந்து சமயத்தின் அடிப்படையில் தனது அரசியலை வளர்த்தவர்.
அவரை வருத்துவதற்காக:
1. ஹரிலால் கிறிஸ்தவராகிறாரா?
2. 1930 ஆண்டுக்குப்பின் இந்து- முஸ்லிம் பிளவுகள் விரிகின்றன. ஜின்னா அலி
போன்றவர்கள் காந்தியை
முஸ்லிம்களின் எதிரியாக நினைத்தார்கள். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படும்
ஹரிலாலுக்கு முஸ்லிம்களின் உதவி கிடைக்கிறது. இது ஒரு அரசியல் சதியா அல்லது ஹரி
தகப்பனைப் பழிவாங்க அவரின் எதிரிகளுடன் சேர்ந்தாரா என்ற கேள்வி பிறக்கிறது.
3. காந்தி ,பிரிட்டிசாருக்கு எதிராகச் சுதேசியாடைகளை முன்னெடுத்துப் பிரசாரம்
செய்தபோது, ஹரி வெளிநாட்டுத்துணி வியாபாரம் தொடங்குகிறார், இது ஹரிலால் தனது
தகப்பனைஒ அவமானப்படுத்த எடுத்த விடயமா?.
4. காந்தி மது மாமிசம், மங்கை என்பனவற்றை வெறுத்தவர். ஹரிலால், அதே மூன்று
விடயங்களையே தொடர்ந்து செய்து வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்.இதுவும் ஹரிலால்
தகப்பனுக்கு எதிராக எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்று.
5. அஹிம்சா வழி, மிகவும் எளிய வாழ்க்கை முறைகளைப்பின் பற்றினாலும் காந்தியடிகள்
பிரிட்டிசாரால் சிறைப்படுத்தப்படும்போது மிகவும் வசதியான இடங்களில் வைக்கப்பட்டவர்.
''காந்தியை ஏழையாய் வைத்திருக்க எவ்வளவோ செலவளிக்க வேண்டியிருக்கிறது'' என்று
பிரிட்டிஷ் அதிகாரிகள் முணு முணுத்ததாகச் சரித்திரம் உண்டு.
6. கணவனுடன் நல்ல வாழ்க்கை வாழ்வேண்டுமென்று தென்னாபிரிக்க சென்ற ஹரியின் மனைவி,
கணவனுக்குக்காந்தியின் உதவி கிடைக்காததால் மனமுடைந்து தாய் நாடு திரும்புகிறாள்.
தனது மகனைத் திருமணம் செய்ய குலாப்பின் குடும்பம் காந்தியின் அங்கிகாரத்தைப்
பெறவில்லைனென்பதால், காந்தியடிகள் ஹரியின் மனைவியையும் புண்படுத்தினாரா?
சாதாரண மோஹன்லால் காந்தியை ஒரு ''மஹாத்மா'' வாக உலகறிய மாற்றியவர்கள் இந்திய
மக்கள். ஆனால் அவர்களுக்கு அவரும் ஒரு சாதாரணா மனிதர்தான், எல்லோருக்கும் இருப்பது
போல் கோபதாபங்கள், முரண்பாடுகளும் இருந்திருக்கும் என்பதை உணர்தல் முக்கியம்.
இந்தப்படம் தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவை வைத்து எடுக்கப்பட்ட படம்.
தகப்பனின் அன்பைத்தேடும் மகனைப்பற்றிய படம். தனது மூத்தமகன் தனது சொல்லை கேட்க
வேண்டும் என்ற ஒரு தகப்பனின் ஆசையப்பிரதி பலிக்கும் படம்.
காந்தியை ' மஹாத்மா''வாகக் காட்ட எடுத்த படமல்ல. மனிதனாகக் காட்ட எடுத்த படம்.
இந்தியாவின் சரிதிரத்துடன் இனைந்து விட்ட ஒரு பெரிய அரசியல் சக்தியை, ஒரு
தகப்பனாகக் காட்டுவதில் மிகவும் கவனமெடுத்திருக்கிறார்கள்.
ஹரிலாலாக நடித்திருக்கும் அக்ஷ்யா கன்னா, காந்தியின் அன்புக்கு ஏங்கும், அதே
நேரத்தில் தான் நினைத்தபடி வாழ்ந்து அழிந்த மூத்த 'மகனாக' மாறி எங்களைத் தன்னுடன்
இணைத்து விட்டார். அதே நடிப்பு குலாப்பின் (பூமிகா) கணவராக நடிக்கும்போது
பூரணப்படுத்தப்படவில்லை.
ஹரியின் மனைவி 'குலாப்'பாக நடித்த பூமிகா, கஸ்தூரிபாயாக நடித்த ஷெவாலி ஷா,
காந்தியடிகளாக நடித்த தர்ஷான் ஜாரிவால் என்போரின் நடிப்பு அபாரம். தாய்க்கு ஒரு
தோடம்பழம் கொடுத்த மகன் தகப்பனுக்குக் கொடுக்க ஒன்றும் கொண்டு வரவில்லை என்று ஹரி
சொன்னபோது காந்தியடிகளாக நடித்த தர்ஷான் காட்டிய சோகமான முகபாவம் மிக மிக அற்புதம்.
பழைய சரித்திர முக்கியமான காட்சிகளை இணைத்து இன்றைய
நடிகரை அவற்றில் தொடுத்துச் செய்திருக்கும் டேவிட் மக்டோனால்டின் கமராவின் வேலையை
படம் பார்த்து இரசித்தாற்தான் தெரியும். ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால், டேவிட்
அட்டம்பறோவின் '' காந்தி'' படத்தின் பின், ''காந்தி, எனது தந்தை'' என்ற படம்
வந்திருக்கிறது, மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்ட அற்புதமான படம். ஆங்கிலத்திலும்
இந்தியிலும் வந்திருக்கிறது. வெளி உலகத்திற்கு மிகவும் தெரியப்படாமலிருந்த
காந்தியின் பல முகங்களில் ஒரு முகம் இப்படம் மூலம் காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு தகப்பனின் பாசம், ஒரு மகனின் தேவைகளின் எதிர்பார்ப்பு என்பன நன்றாகச்
சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தந்திரங்களுக்குச் சாதாரண மக்களின் உணர்ச்சியை
ஆயுதமாகப்பாவித்தவர் காந்தி. ஆனால் தனது மகனிடம் அது பலிக்கவில்லை. இருவரும் இரு
துருவங்களாக, இரு உலகங்களாக, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காத பிடிவாதம்
பிடித்தவர்களாக வாழ்ந்த்திருக்கிறார்கள். இரு ஆண்களையும் அவர்களுக்காக வாழ்ந்து ,
அழுது, கதறிக் குமுறிய இரு இந்து, இந்தியப் பெண்களைத் தத்ரூபமாகக்
காட்டியிருக்கிறார்கள். மகனைச் சரியாக வளர்க்கத் தெரியாத தகப்பன் என்றோ அல்லது
தகப்பனுக்கு அடங்காத மக்ன் என்றோ காட்டாமல் இரு மனிதர்களின் உறவுப் பிரச்சினையாகப்
படமெடுக்கப்ப்ப்ட்டிருக்கிறது. தவற விடக்கூடாத நல்ல படங்களில் இதுவும் ஒன்று.
rajesmaniam@hotmail.com |